கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா

மதரீதியான ஒற்றுமை பிழையானது என்ற அடிப்படையில் முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமையை எதிர்ப்பவர்களைக் காண வியப்பே மிஞ்சுகிறது. கம்யூனிசத்தின் பெயரால் கை கோர்ப்பது அறிவார்ந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும் போது, நிறத்தின் அடிப்படையில் மக்களைத் திரட்டுவது நியாயமாக கருதப்படும் பொழுது, இறைவனின் பெயர் மற்றும் அவன் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றிணைவது மட்டும் தவறு எனக் கூறப்படுவதைக் கேட்டால் ஆச்சரியம் பெருகுகிறது. (பக்: 33)

முஸ்லிம்கள் தங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் உரிமையை மீள்பெற்றுவிட்ட இந்நிலையில், எதிரிகள் தேசியவாதத்தை –முஸ்லிம்கள் உறுதியாக ஒன்றுபடுவதை அது தடுக்கும் என்ற நம்பிக்கையில்- பிரச்சாரம் செய்வதில் மும்முரமாகிவிட்டனர். இஸ்லாத்தின் புத்துயிர்ப்பும், முஸ்லிம்களின் ஒற்றுமையும் அச்சுறுத்துவது போல, உலக வல்லரசுகளையும் ஸியோனிசத்தையும், முளைவிடும் ஹிந்து ஏகாதிபத்தியத்தையும் அச்சுறுத்துவது வேறெதுவும் இல்லை. 600 மில்லியனிற்கும் அதிகமாக உள்ள முஸ்லிம்களின் ஒற்றுமை, அவர்களின் வளர்ச்சியையும் முஸ்லிம் நாடுகள் சுரண்டப்படுவதையும் தடுக்கும். முஸ்லிம்கள் எப்போது ஒன்றுபடுகிறார்களோ, அப்போது இஸ்ரேல் முடிவுக்கு வந்துவிடும் என்பதை ஸியோனிஸ்டுகள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். பெரும்பான்மை ஹிந்து ஆதிக்கத்தையும், ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா மீது செல்வாக்கு செலுத்துவதைக் கனவு காண்பவர்களும் இந்த அச்சத்தை பகிர்ந்து கொள்கின்றனர். இத்தகைய ஒற்றுமையின் காரணமாக இங்கொன்றும் அங்கொன்றுமாக தங்கள் கைக்கூலிகளை அதிகாரத்தில் அமர்த்தி முஸ்லிம் நாடுகளின் விதியோடு விளையாடியது போல இனிமேலும் விளையாடுவது சாத்தியமாகாது என்பதை உலக ஏகாதிபத்திய சக்திகள் அறிந்தே உள்ளனர். (பக்: 43)

இன்று முஸ்லிம் உலகை குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமிய மாநாட்டிற்கான இவ்வழைப்பு புதிய நம்பிகைகளை ஊட்டுகிறது. எனவே நட்பு மற்றும் கூட்டுறவுக்கான அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தாலும், முஸ்லிம்கள் அதை வரவேற்க வேண்டும்; அதே சமயம் நமது பின்தங்கிய நிலையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்றென்றும் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சக்திகள் குறித்து எச்சரிகையாக இருக்க வேண்டும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமையை வேண்டி நிற்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரின் தனித்தனிச் சக்தியும் ஒரே கூட்டுச் சக்தியாக மாறிவிடும். இது மட்டுமே, முஸ்லிம்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்து, உலக விவகாரங்களில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்காற்றி, தாங்கள் பெரிதும் விரும்பும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருவதற்கான பாதையாகும்.” (பக்: 44-45) (17)

முஸ்லிம் உலகின் பின்தங்கிய நிலைமைக்கான உண்மைக் காரணம் என்ன? 1963 டிசம்பர் 10 அன்று கராச்சியில் ‘ஜமியதுத் தலபா’ மாணவர் அமைப்பில் ஆற்றிய உரையில் மௌலானா மௌதூதி இவ்வாறு பறைசாற்றினார்:

“அந்நியக் கொள்கைகளை தங்கள் மீது திணிக்க ஆட்சியாளர்கள் செய்த முயற்சியால் ஏற்பட்ட முடிவற்ற முரண்பாடுகளுக்கு முஸ்லிம் நாடுகள் எவ்வளவு பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை அவர்களின் பரிதாபகரமான வளர்ச்சி விகிதம் காட்டுகிறது. எந்தத் துறையிலும் முஸ்லிம் நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையவில்லை. உதாரணமாக, துர்க்கி 1924 முதல் சுதந்திர நாடாக இருக்கிறது; ஆனால் தொழில்துறையிலும் வணிகத்திலும் பெரிய முன்னேற்றத்தை அடைந்துவிட்டோம் என்று அவர்களால் கூற முடியுமா? அதேவேளை ஜப்பானும் சீனாவும் எல்லாத்துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்றன.

துருக்கி முன்னேறாததற்கான காரணம், அதன் மதச்சார்பற்ற ஆட்சியாளர்களால் அது உட்படுத்தப்பட்ட உள்ளார்ந்த முரண்பாடுகளில் காணக் கிடைக்கிறது. மக்கள் இஸ்லாமிய ஒழுங்கை விரும்பிய நிலையில் அதிகாரத்தில் உள்ளவர்களோ, அதன் மீது மேற்கத்திய நாகரிகத்தை சுமத்துவதில் பெரும் முயற்சி எடுத்தனர். இதே கதைதான் ஏரத்தாள எல்லா முஸ்லிம் நாடுகளிலும் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பட்டுள்ளது. மக்களின் விழைவங்களுக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் இடையில் இணக்கம் இருந்தால்தான் ஒரு தேசம் வளர்ச்சியடைந்து முன்னேற முடியும். முஸ்லிம் நாடுகளில் தற்போதுள்ள போராட்டம் என்னவெனில், ஆட்சியாளர்கள் காட்டும் திசையில் மக்கள் செல்லத் தயாராக இல்லை; ஆட்சியாளர்களும் மக்கள் விரும்பும் திசையில் அவர்களை வழிநடத்திச் செல்லத் தயாராக இல்லை. இதுவே எல்லா முஸ்லிம் நாடுகளிலும் முடிவற்ற முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது. இதுதான் ‘இன்றைய இஸ்லாம்’” (18)

தேசியவாதம், சமயச்சார்பிலாக் கொள்கை, இறை மறுப்புக் கொள்கை, பொருள்முதல்வாதம் மற்றும் பிராந்திய முக்கியத்துவம் ஆகியவற்றின் கடுந்தாக்குதல்களுக்கு எதிராக மௌலானா மௌதூதியும் அவரது இயக்கமும் தகர்க்க முடியாத ஒரு அரணை வழங்குகின்றனர். ஷரியத்தை (குறிப்பாக தனி மற்றும் குடும்பவியல் சட்டங்களை) மாற்றி மேற்கத்திய சட்ட அமைப்புகளோடு இணக்கமாக்க முயலும் நவீனத்துவவாதிகளின் அனைத்து முயற்சிகளுக்கும் அவரே ஆக்ரோஷமான எதிரியாக விளங்குகிறார்.

இஸ்லாமியக் கொள்கைகளுக்கு நேர்மாறான கருக்கலைப்பு, குடும்பக்கட்டுப்பாடு மற்றும் கருவளக்கேடு ஆகிய வழிமுறைகளால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் தேசிய மற்றும் சர்வதேச கொள்கைகளின் உக்கிரமான எதிர்ப்பாளராகவும் அவர் விளங்குகிறார். 1962 இல் “இஸ்லாமும் குடும்பக் கட்டுப்பாடும்” என்ற தனது கட்டுரையை பதிப்பித்தார். அதில் செயற்கை முறைகளால் மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கைகளின் பாரதூர விளைவுகளை தனி, சமூக, தேசிய, சர்வதேச, பொருளாதார மற்றும் ஒழுக்க அடிப்படைகளில் மறுக்கமுடியாத சான்றுகளோடு விளக்கினார். அந்நூல், தேசிய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை பயனற்றதாக்கிவிடும் என்று அஞ்சிய அதிகாரிகள் அதை 1966 ஆகஸ்டு, 19, முதல் 1967 மார்ச் 10 வரை தடை செய்தனர்.

குலாம் அஹ்மது பர்வேஸ் வழிநடத்தும் ஹதீஸ் மறுப்பாளர்கள், ரப்வா ஊரின் காதியானிப் பிரிவு, தன்னை “மஹ்தி” என்றும் “நபி” என்றும் கூறிக்கொண்ட மிர்ஸா குலாம் அஹ்மதை அடிப்படையாகக் கொண்ட லாஹுரின் அஹ்மதியா இயக்கம் போன்ற முரண் சமயவாதிகளுக்கு எதிராக மௌலானா மௌதூதி கடந்த மூன்று தசாப்தங்களாக தளர்ச்சியற்ற போராட்டத்தை தொடுத்துள்ளார். 1965 இல் வெளியான ‘நபித்துவத்தின் முடிவு’ என்னும் தன் குறுநூலில் காதியானி முரண் சமயக் கருத்து பற்றி விரிவாக விவாதிக்கிறார். அதில் தஜ்ஜால் பற்றியும், ஈசா நபி (ஸல்) அவர்களின் மீள் வருகை, இமாம் அல்-மஹ்தி ஆகியவற்றைப் பற்றியும் கூறியுள்ளார். மேலும் இஸ்ரேலின் விரிவாக்கக் கொள்கைகள் மற்றும் முஸ்லிம் உலகிற்கெதிரான ஸியோனிச சதிகளையும் அம்பலப்படுத்துகிறார்.

இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் உள்ள முஸ்லிம் மாணவர் அமைப்புகள், மௌலானா மௌதூதியை தங்கள் மத்தியில் உரை நிகழ்த்தவும் தங்களுக்கு அறிவுரை வழங்கவும் வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தனர். எனினும் சர்வதேச அளவில் வளரும் அவரது செல்வாக்கைக் கண்டு அஞ்சிய அரசாங்கம், அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தகர்த்தது. எனினும் 1968 ஆகஸ்டில் ஒரு பிரத்யேக மருத்துவக் குழு, அவரது கிட்னி மற்றும் சிறுநீர்ப்பையில் உருவான கல்லின் காரணமாக நீண்ட நாட்களாக அவர் அனுபவித்த வேதனையை கருத்தில் கொண்டு, அறுவை சிகிச்சைக்காக உடனடியாக லண்டன் செல்ல அவரை அனுமதிப்பதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இந்த இரட்டை அறுவை சிகிச்சையால் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடியாத அளவு அவர் பலவீனம் அடைந்த போதிலும், பல முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் அவரை சந்தித்து உரையாட வந்தனர்.

பாகிஸ்தான் திரும்புவதற்கு சற்று முன்னர் –டிசம்பர் 15 அன்று மாலையில்- லண்டனின் ஹில்டன் ஹோட்டலில் அவருக்கு பிரத்யேக வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் லண்டனிலுள்ள பாகிஸ்தானிய சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள் மட்டுமின்றி பல்வேறு முஸ்லிம் நாட்டு தூதரக அதிகாரிகளும் ஆங்கில உருது பத்திரிக்கையாளர்களும், அறிஞர்களும் கீழைத்தேயவாதிகளும் கலந்து கொண்டனர். அங்கு அவர் ஆற்றிய உரையில் பிரிட்டனின் பாகிஸ்தானிய குடியேற்றவாதிகள் மீது தனி அக்கரையை வெளிப்படுத்தினார். பிரிட்டனின் முஸ்லிம்கள், இஸ்லாமிய கொள்கைகளுக்கும் பெறுமதிகளுக்கும் இணக்கமாக தங்கள் வாழ்வை வழிநடத்த இயன்ற அளவு முயற்சித்தால் மேற்கில் இஸ்லாத்தின் வளர்ச்சியும் விரிவாக்கமும் மிகப்பெறும் ஊக்கத்தைப் பெறும் என உறுதியளித்தார்.

எனினும் அவர்கள் தாழ்வு மனப்பான்மையால் தங்களைத் தாங்களே நசுக்கிக் கொண்டு மேற்கத்திய முறைகளை கண்மூடிப் பின்பற்றினால், தங்கள் அடையாளத்தை இழந்து ஒரு அந்நியக் கலாச்சாரத்தில் இரண்டரக் கலப்பதற்கே அது வழிவகுக்கும். வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் முஸ்லிம் குழந்தைகளுக்கு இஸ்லாமியக் கல்விக்கான முறையான திட்டம் ஏதும் இல்லாவிட்டால், முஸ்லிம் சமூகம் புதிய தலைமுறையினரை முற்றிலும் தொலைத்துவிடும் என பிரிட்டனின் பாகிஸ்தானிய சமூகத் தலைவர்களை எச்சரித்தார். “ஒருமைப்பாடு” என்ற முழக்கத்தின் பெயரால் முஸ்லிம்களை மேற்கத்தியக் கலாச்சாரத்தோடு ஒன்றுபட்டு கலந்து நிற்க பிரிட்டிஷார்கள் வற்புறுத்துவது தவறு எனக் கூறினார். ஒரு பல்லின பன்மைக் கலாச்சார சமூகம், ‘கிரேட் பிரிட்டனுக்கு’ பிரிவுவாத சக்தியாக அல்லாமல், அநீதி மற்றும் உட்பூசல்களை நீக்கி நாட்டின் கலாச்சார வாழ்வை பெரிதும் செழிப்பாக்கும்.

அதே ஆண்டு இத்தாலிய மற்றும் ஜெர்மானிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் சடவாதப் பொருள்களைக் கட்டுப்படுத்தி பயனடைவதில் நவீன மனிதன் கண்டுள்ள விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக, இறைத் தூதர்களுக்கு வழங்கப்பட்ட புனித வேதங்களின் ஒழுக்க மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல்கள் தனக்குத் தேவையில்லை என்ற போலிவாதமே அவனது முக்கியத் தவறு எனப் பிரகடனம் செய்தார். இதன் விளைவாக மேற்கத்திய வாழ்வு அமைதியை இழந்துவிட்டது. வாழ்க்கை அதன் அர்த்தத்தையும் நோக்கத்தையும் இழந்துவிட்டது, குடும்ப வாழ்வு சீர்குலைந்து வருகிறது, குற்றங்கள் பெருகுகின்றன; மேலும் கட்டுக்கடங்காத வன்முறை உலகின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மேற்கத்திய மனிதனின் இரண்டாவது பெருந்தவறு, அவனது குறுகிய மனப்போக்கு. இன ஏற்றத் தாழ்வுகள் போன்ற பிரச்சனைகளுக்கு மேற்கத்திய நாகரிகம் தீர்வு காண முடியாது எனில் இஸ்லாம் எவ்வாறு அதற்கு வெற்றிகரமாக தீர்வு கண்டு, இன மற்றும் தேசம் கடந்த மனித சகோதரத்துவத்தை அடைந்தது என்பதை மக்கள் கற்க வேண்டும். மேற்கின் மனிதன், தன் வரம்பிற்குட்பட்ட உலகத்தை தாண்டிப் பார்கக இப்போது கடமைப்பட்டுள்ளான். ஜிஹாது எவ்வாறு மிக மோசமான தீங்குகளையும், காட்டுமிராண்டித்தனமான போர் முறைகளையும் களைந்தது; இஸ்லாமிய போதனைகள் எவ்வாறு குடும்ப பந்தத்தை உறுதியாக்கி பரவலான மனநோயையும் சமூகச் சிதைவையும் விளைவித்த தனிமனிதனின் மனிதத்தன்மையிழப்பைத் தடுத்தது என்பதையும் அவன் காண வேண்டும். இஸ்லாமியப் பாரம்பரியம், முஸ்லிம்களாகப் பிறந்தவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. மாறாக, அது முழு மனித இனத்திற்கும் உரியது எனப் பிரகடனம் செய்தார்.

1969, செப்டம்பரில் மொராக்கோ மன்னர் ஹஸன் அவர்களின் ஆதரவின் கீழ் மௌலானா மௌதூதி, ரபாத்தில் நடந்த இஸ்லாமிய உச்சிமாநாட்டிலும், கராவியான் பல்கலைக் கழக மசூதி (ஃபெஸ்) இல் நடந்த கல்வி மாநாட்டிலும் கலந்து கொண்டார். அங்கு, அல்லால் அல் ஃபஸ்ஸி, தவுதனின் முன்னாள் ஆளுநர் அப்துல்லாஹ் குனூம், சினீகல் நாட்டின் ஷேக் இப்ராஹீம் நியாஸ் மற்றும் எகிப்திய எழுத்தாளர் டாக்டர் ஆயிஷா பின்து ஷதாய் போன்ற முக்கியப் பிரமுகர்களை சந்தித்தார். மேலும் உச்சிமாநாட்டின் பொது, அல்-இக்வானுல் முஸ்லிமூனுடன் தொடர்பு கொண்டுள்ள அல்-ஃபத்தாஹ்வின் பிரதிநிதி காலித் அப்துல் காதிபை தனியாகச் சந்தித்தார். அப்போது அவர் பாலஸ்தீனின் எதிர்ப்பு இயக்கத்திற்கு மௌலானாவின் ஆதரவை வேண்டியதோடு, அதன் வெற்றிக்காக பிரார்த்திக்குமாறும் வேண்டினார்.

குறிப்புகள்

(17) முஸ்லிம் உலகின் ஒற்றுமை, செய்யது அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிக் பப்ளிகேஷன்ஸ், லாஹுர், 1967

(18) இன்றைய இஸ்லாம், செய்யது அபுல் அஃலா மௌதூதி, மாணவர் பதிப்பக அரங்கம், கராச்சி, 1968, பக் 57-58

Related posts

Leave a Comment