தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 1)

Loading

[ஹதீஸ்கள் என்றால் என்ன? அவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கையளிக்கப்பட்ட பாங்கு என்ன? அவை நூற்கள் வடிவில் எழுதித் தொகுக்கப்பட்ட வரலாறு என்ன? என்னென்ன கட்டங்களில் அச்செயல்முறை நிகழ்ந்தேறியது? ஒவ்வொரு கட்டத்திலும் உருவான தொகுப்புகளின் இயல்புகள் என்ன? ஹதீஸ்களின் ஆதாரபூர்வ தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள பிரயோகிக்கப்பட்ட முறைகள் என்ன? அவற்றின் அளவுகோல்கள் அடைந்த பரிணாம வளர்ச்சி என்ன?

இஸ்லாமிய உட்பிரிவுகள் சிலவற்றில் ஹதீஸ்களுக்குள்ள அந்தஸ்து என்ன? அவை என்னென்ன அம்சங்களில் மைய நீரோட்ட அணுகுமுறைகளிலிருந்து வேறுபடுகின்றன? இஸ்லாமிய சட்டவியலிலும், சட்ட முறையியலிலும் ஹதீஸ்களுக்குள்ள இடம் என்ன? இறையியல் கோட்பாடுகளில் (அகீதா) அவற்றின் வகிபாகம் என்ன? சூஃபியிசத்தில் ஹதீஸ்கள் ஆற்றும் பாத்திரம் என்ன? ஹதீஸ் கலையின் நம்பகத்தன்மை பற்றி எழுப்பப்பட்டுள்ள விமர்சனக் கணைகள் என்னென்ன? அவற்றுக்கு அளிக்கப்பட பதில் விளக்கங்கள் என்ன? இன்றைய நவீன முஸ்லிம் உலகில் ஹதீஸ்கள் குறித்து நடக்கும் விவாதங்கள் என்ன? நிறைவாக, நாம் மனதிலிருத்த வேண்டிய விடயங்கள் என்ன?

இவை பற்றியெல்லாம் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் கதை சொல்லும் பாணியில் விளக்கிச் செல்கிறது ஜோனத்தன் A.C. பிரௌன் எழுதியிருக்கும் Hadith  Muhammad’s Legacy in the Medieval and Modern World என்ற புத்தகம். ஹதீஸ்கள் விடயத்தில் பொதுவாக நிலவும் பல்வேறு தப்பபிப்பிராயங்களை ஓரளவுக்கு அகற்றுவதிலும், நிலைபெற்றிருக்கும் இறுக்கத்தை தளர்த்துவதிலும் இது நல்லதொரு பங்காற்றக் கூடும் என்று பெரிதும் நம்புகிறோம்.

இந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பை மெய்ப்பொருள் தளத்தில் தொடர்ந்து வெளியிட எண்ணியிருக்கிறோம். அதில் முதலாவது பகுதி கீழே]

‘ஒரு கேள்வி கேட்க வேண்டும்’ என்றார் அந்த மனிதர். அவருடைய பேச்சில் தெரிந்த கிராமத்து வாடை, அவர் ஏதோவொரு மாகாண குக்கிராமத்திலிருந்து நெடுந்தொலைவு பயணித்து கெய்ரோ மாநகருக்கு வந்திருக்கிறார் என்பதை அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது. தனக்கு முன்னால் உறுதியான மரநாற்காலியில் அமர்ந்திருந்த அறிஞரை நோக்கி மரியாதையுடன் பார்வையைக் குவித்தவாறு, கால்களை மடித்து கம்பளத்தின் மீதமர்ந்திருந்த அந்த மனிதர் தொடர்ந்து பேசினார், ‘ஆண்-பெண் இருபாலருக்காகவும் நாங்கள் ஒரு பள்ளிக்கூடம் கட்டியுள்ளோம். ஆனால், எங்கள் சமுதாயத்தில் சிலர் பெண்பிள்ளைகளை அதில் அனுமதிக்கக் கூடாது என்கிறார்கள். அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில், பள்ளிக்கூட வராந்தாக்களில் ஆண்பிள்ளைகளோடு கலக்க நேரிடும் என்கிறார்கள். இந்நிலையில் பள்ளிக்கூடத்தை திறக்க அனுமதியுண்டா?’ அறிஞரை சுற்றி ஆங்காங்கு அமர்ந்திருந்த மாணவர்களைப் போலவே அந்த மனிதரும் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தார். நானும் அவர்கள் நடுவில் அமர்ந்திருந்தேன். 2003-ம் ஆண்டு இலையுதிர்க்காலம் வழக்கத்தை மீறிய வெம்மையுடன் இருந்தது. மரத் தடுப்பரணை ஊடுருவிக் கொண்டு தயங்கித் தவழ்ந்துவந்த இதமான காற்றை எல்லோரும் வரவேற்பது போல் தெரிந்தது.

அந்த மத்திம வயதுகொண்ட அறிஞர், சுன்னி முஸ்லிம் உலகில் பெரும் செல்வாக்குமிக்க பதவியான எகிப்தின் தலைமை சட்ட வல்லுநராக (முஃப்தி) விரைவில் பதவி உயர்வு பெறவிருந்தார். கிராமவாசி நீண்ட பயணத்தில் தன்னோடு எடுத்து வந்திருந்த ஒலிநாடா பதிவுக் கருவியை நோக்கி தலையைச் சாய்த்த வண்ணம்  அந்தஅறிஞர் இவ்வாறு கேட்டார், ‘நீங்கள் வசிக்கும் பகுதியில் நைல் நதி ஓடுகின்றதா?’ அதற்கு அம்மனிதர் ‘ஆம்’ என்று பதிலளித்தார். அதற்கு அந்த அறிஞர், ‘கேளுங்கள். அப்படியென்றால் பெண்பிள்ளைகளை பள்ளிக் கூடத்தில் அனுமதிப்பதை ஆட்சேபிக்கும் நீங்கள் எல்லோரும் நைல் நதியில் குதித்து செத்துத் தொலையுங்கள்! அல்லாஹ்வின் பெண்ணடியார்களை அல்லாஹ்வின் பள்ளியை விட்டும் தடுக்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அவர் மீது நிலவட்டுமாக) நவின்றுள்ளார்கள்தானே?!’1 என்றார்.

அறிஞர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக முஸ்லிம் விவசாயிகளும், வியாபாரிகளும், ஏன் இளவரசர்களும் கூட கெய்ரோவின் அல்-அஸ்ஹர் பள்ளியின் முற்றத்தில் வரிசையாக அமைந்திருந்த கவிகைமாட அறைகளுக்கு கூட்டங்கூட்டமாக வந்துபோவது ஆயிரமாண்டுகளாகத் தொடருமொரு வழக்கம். இஸ்லாமிய நம்பிக்கையை, மார்க்கச் சட்டத்தை வரைவிலக்கணம் செய்வது அந்த அறிஞர்கள்தான். அந்த முற்றத்தில் அமர்ந்திருந்த எகிப்தின் வருங்கால தலைமை முஃப்தி, 2003-ம் ஆண்டின் இலையுதிர்க் காலத்தில் இருந்துகொண்டு திரும்பிப் பார்ப்பதற்கு கடந்துசென்ற சுமார் பதினான்கு நூற்றாண்டுகால இஸ்லாமிய சமய மரபு இருந்தது. முஹம்மது நபி கொண்டுவந்த தூதுச்செய்திக்கு வழங்கப்பட்ட வியாக்கியானங்களை எல்லாம் உள்ளடக்கிய பெரும் புலமைத்துவக் களஞ்சியம் அது. உலகின் மிக விரிவானதும் வளமானதுமான ஒரு புலமைத்துவ மாளிகை. முஃப்தி அந்த எளிய மனிதரின் கேள்விக்குரிய பதிலை இஸ்லாமிய சட்டவியலின் விசாலமான மரபிலிருந்து எடுத்துக் கூறியிருக்க முடியும். நாற்பெரும் சுன்னி சட்டவியல் பள்ளிகளின் சட்டத் தொகுப்புகள், காலத்தால் மங்கிவிட்ட மத்தியகால அறிஞர்களின் பிரபலமற்ற சட்ட அபிப்பிராயங்கள், இஸ்லாமிய சட்டத்தையும் சட்ட வருவிப்பையும் நெறிப்படுத்தும் பொதுக் கோட்பாடுகள் எனப் பலவற்றையும் உள்ளடக்கியவோர் மரபு அது.

அந்த மனிதரின் கேள்வியை அசைபோடும் சமயத்தில் முஃப்தியின் மனது பரந்து விரிந்த இந்தச் சட்டப் பாரம்பரியத்தை தன்னுளே வேகமாக ஓட்டிப் பார்த்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முஃப்தி அக்கேள்விக்கு ஒரு உயர்தர சட்டத்துறை மொழியில், வறட்டுத்தனமான ஒரு சட்டத் தீர்ப்பைக் கொண்டு பதிலளிக்கவில்லை. மாறாக, ஓர் மனிதரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி பதிலளித்தார். எந்தவொரு மனிதரை நேசிக்கும் படியும், நற்குண முன்மாதிரியாக மதித்துப் போற்றும் படியும், மதிப்பச்சத்தோடு பார்க்கும் படியும், ‘தம்முடைய சொந்தக் குழந்தைகளையும் பெற்றோரையும்விட அதிக பாசத்திற்குரியவராக’ கருதும் படியும் முஸ்லிம்களுக்கு சிறு பிராயம் முதலே கற்பிக்கப்பட்டுள்ளதோ அம்மனிதர், முஹம்மது நபிகளன்றி யாருமில்லை. எனவே முஃப்தி பல நூற்றாண்டு காலம் பின்னோக்கிச் சென்று முஹம்மது நபியின் வார்த்தைகளைத் தெரிவுசெய்து அந்தக் கேள்விக்கு பதில் வழங்கினார். அந்த வார்த்தைகள் முதன்முறை பேசப்பட்டதைப் போன்று அவ்வெளிய மனிதரின் உள்ளத்தில் எதிரொலிப்பதோடு, அவருடைய கிராமச் சமுதாயத்தின் தயக்கங்கள் அனைத்தையும் அவை போக்கிவிடும் என்பதை அவ்வறிஞர் அறிந்துவைத்திருந்தார். நவீன உலகின் குழப்பங்களுக்கு மத்தியில் கூட -முன்பைப் போலவே இன்றும்- ‘அல்லாஹ்வின் தூதர்தான் பின்பற்றுவதற்கு அதிகத் தகுதியானவராக இருக்கிறார்.’2

முஹம்மது நபியின் முன்னுதாரணம், நைல் பள்ளத்தாக்கிலிருந்து தொலைதூரத்தில் அமைந்த வேறு பகுதிகளிலும் (வேறு காலப்பிரிவுகளிலும்) கூட இதே போன்றுதான் மேற்கோள் காட்டப்படுகின்றது. அவருடைய வார்த்தைகள் மொழியப்படும் போதெல்லாம் முஸ்லிம் உலகு நெடுகிலும் -சுன்னிகள்-ஷீஆக்கள் இரு சாரார் மத்தியிலும்- அவற்றுக்கு ஒரு கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. நான் எகிப்தின் ‘வருங்கால தலைமை முஃப்தியின்’ சட்ட அபிப்பிராயத்தை செவியேற்று ஓராண்டு காலம் கழிந்துவிட்டிருந்த நிலையில், பழம்பெருமை வாய்ந்த பாரசீக நகரான ஷீராஸில் அமைந்திருக்கும் ஃகான் மதரசாவின் பசுமைநிறைந்த முற்றத்தில் இமாமி ஷீஆ மார்க்க அறிஞர் ஒருவருடன் அமர்ந்து இஸ்லாமிய சிந்தனை தொடர்பான விவகாரங்களை கலந்துரையாடிக் கொண்டிருந்தேன். பள்ளிவாசலின் கவிகை மாடங்களால் சூழப்பட்டு நுட்பமான வேலைப்பாடுகளை கொண்டிருந்த தரை ஓடுகளெல்லாம் காலைக் கதிரவனின் வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தன.

நபிகளாரின் மருமகனும் ஷீஆ மரபின் மூலவருமான அலீக்கு வருங்கால நிகழ்வுகள் பற்றி இறைவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட அறிவு இருந்ததா இல்லையா என்பது பற்றி நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம். ‘இந்தப் பிரதேசங்களில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்படும் என்றும், ‘உலோகப் பறவைகள் பறக்கும்’ என்றும் நம்பிக்கையாளர்களின் தலைவர் அலீக்குத் தெரிந்திருந்தது’ என்று அந்த ஷீஆ மார்க்க அறிஞர் உற்சாகமாக விளக்கிக் கொண்டிருந்தார். ‘அலீ தனது ஆசிரியராக இருந்த அல்லாஹ்வின் தூதரிடத்திலிருந்தே இவ்வறிவைப் பெற்றார்’ என்றும், நான் அறிவின் பட்டணம், அலீ அதன் தலைவாசல். எனவே, அறிவை தேடும் எவரும் அதனை அதன் தலைவாசல் வழியாக அணுகவும்” என்று அல்லாஹ்வின் தூதர் கூறியிருக்கிறார்கள் அல்லவா!’3 என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார்.

மேற்குலக வாசகர்களைப் பொறுத்தவரை ஏதேனுமொரு விவகாரம் பற்றி ‘இஸ்லாம் என்ன கூறுகிறது?’ என்ற கேள்வியை அடுத்து வழமையாக வருவது திருக்குர்ஆனிலிருந்தான மேற்கோள்களே. எகிப்திய பெண்களின் ஆடை வழக்கங்கள் பற்றி எழுதும் எந்தவொரு மேற்குலகப் பத்திரிக்கையாளரும், தலை முக்காடு அணிவதென்பது குர்ஆனியக் கட்டளையின்படி அமைந்த ஒன்றல்ல என்று எழுதுவார்.4 அதே போல் ஜிஹாது பற்றி கலந்துரையாடும் மேற்குலகப் பண்டிதர்கள், ‘நிராகரிப்பாளர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள் (9:5)’ என்று திருக்குர்ஆன் கூறியுள்ளதாக குறிப்பிடுவார்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை திருக்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் நேரடி வாக்கு என்பதில் ஐயமில்லை. அது எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறது என்றால், ஏராளமான முஸ்லிம்கள் தமது சிறு பிராயத்திலேயே முழுமையாக அதனை மனனம் செய்துவிடுகிறார்கள். தவிரவும், அதனைத் தொடுவதற்கே கூட ‘உளூ’ எனும் சடங்குமுறை உடற்தூய்மை அவசியம் என்று முஸ்லிம்களில் பலர் கருதுகின்றனர்.

ஆனால் ஏதேனுமொரு விவகாரம் பற்றி ‘இஸ்லாம் என்ன கூறுகிறது? என்ற கேள்விக்கு பதில்தேட முனைகிற அறிவார்வமிக்க வாசகர் எவருக்கும் திருக்குர்ஆன் முதன்மை ஆதாரமாக இருப்பதில்லை. தவிரவும், திருக்குர்ஆன் ஒரு சட்டப் புத்தகம் அல்ல. திருக்குர்ஆனில் ஓரிடத்தில் கூட குறிப்பிடப்படாத இஸ்லாமிய இறையியல் நெறிகள் ஏராளம் உள்ளன. திருக்குர்ஆனை அணுகுவது மூலம் பகுதியளவு சித்திரம் மட்டுமே கிடைக்கிறது. இஸ்லாமிய சட்டவியல், இறையியல், வெகுஜன சமய மரபுகள் ஆகியவற்றின் பெரும்பகுதி இறைவனின் வாக்கு என்பதாக முஸ்லிம்களால் நம்பப்படும் வேத நூலிலிருந்து வருபவையல்ல. மாறாக இறைவனின் தூதுச் செய்தியை தன்னுடைய வாக்கின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் விளக்கி உரைப்பதற்காகவும் தெளிவுபடுத்துவதற்காகவும் இறைவனால் தெரிவுசெய்யப்பட்டவர் என்பதாக முஸ்லிம்கள் நம்பும் முஹம்மது நபியின் மரபிலிருந்தே அவை வருகின்றன. அவருடைய போதனைகளில்தான் முஸ்லிம் ஆடையொழுங்கு பற்றியும், புனிதப் போருக்கான விதிமுறைகள்-கட்டுப்பாடுகள் பற்றியும் நம்மால் காணமுடிகின்றது.

நபிகளாரின் முன்மாதிரி நடத்தை மரபு, சுன்னாஹ் என்று அறியப்படுகிறது. கண்ணிய மதிப்பை பொறுத்தவரை அது திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில்தான் வருகிறது என்றாலும், வேதப் புத்தகமே கூட அதன் கண்ணாடி வழியாகத்தான் பொருள்கொள்ளப்படுகிறது, புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த வகையில் இஸ்லாமிய நாகரிகத்தைப் பொறுத்தவரை நபிகளாரின் சுன்னாஹ்வானது வேதப் புத்தகத்தின் மீது செல்வாக்கு செலுத்தி, அதனை வடிவமைத்து, அதற்கு குறிப்பான பொருள் வழங்கி, அதனுடன் கூடுதல் விவரங்களைச் சேர்க்கும் பணியைச் செய்து வந்துள்ளது. எனவே, இஸ்லாத்தின் தூதுச் செய்தி எப்படி ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவுக்கு வெளியே பரவியது என்பதையும்; எப்படி அது பல்வேறு சட்டவியல், இறையியல், மறைஞான மரபுகளை உருவாக்கி வளர்த்தெடுத்தது என்பதையும்; இஸ்லாமிய நாகரிகத்தின் கலாச்சார பரிமாணங்களையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் முஹம்மது நபி விட்டுச்சென்ற மரபுத் தொடர்ச்சியை படிப்பதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

இஸ்லாமிய வரலாற்றில் நபிகளாரின் சுன்னாஹ் பெரும்பாலும் ஹதீஸ் (பன்மை: அஹாதீஸ்) என்ற அலகின் ஊடாகவே பாதுகாக்கப்பட்டு, வழிவழியாக பரப்பப்பட்டு, புரிந்துகொள்ளப்பட்டு வந்திருக்கிறது. நபிகளாரின் வாக்குகள், செயல்கள் அல்லது நடத்தைகள் பற்றிய செய்தியே ஹதீஸ் என்று அறியப்படுகிறது. திருக்குர்ஆனைப் போலன்றி, ஹதீஸ்கள் முஹம்மது நபியின் வாழ்க்கைக்குப் பிறகு விரைவாகவும் சுருக்கமாகவும் தொகுக்கப்படவில்லை. ஹதீஸ்கள் பல தசாப்த அல்லது சதாப்த காலங்களாக பதிவு செய்யப்பட்டு பரப்பப்பட்டு வந்தவை என்பதால், முஹம்மது நபி சொன்னவை மற்றும் செய்தவை பற்றிய சமகால வரலாற்று ஆவணங்களல்ல அவை. நபிகளாரின் தூதுத்துவப் பணிக்கு ஒரு நூற்றாண்டு காலத்திற்குள்ளாகவே முஸ்லிம் சமுதாயம் மூன்றுக்கு குறையாத உள்நாட்டுப் போர்களுக்கும் ஏராளமான உட்பிரிவுவாதப் பிரிவினைகளுக்கும் முகம்கொடுக்க நேர்ந்தது. இதன் காரணமாக பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களும் ஹதீஸ்களை புனைந்துரைப்பதன் மூலம் சுன்னாஹ்வின் அதிகாரத்தை துஷ்பிரயோகிக்க முயற்சி செய்தனர். எனவே, இஸ்லாமிய மரபினை விரித்துரைப்பதற்காக சுன்னாஹ்வை நாடிய முஸ்லிம் அறிஞர்களும், அதனை ஆய்வு செய்ய விரும்பிய மேற்குலக அறிஞர்களும் ஹதீஸ்களின் நம்பகத்தன்மை பற்றியும், உண்மையானவற்றிலிருந்து மோசடியானவற்றை எப்படி பிரித்தறிவது என்பது பற்றியும் நிலவும் பல்லாண்டுகாலப் பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டி வந்தது.

ஹதீஸ்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கு முஸ்லிம் அறிஞர்கள் வடித்துருவாக்கிய கருவிக்குப் பெயர்தான் இஸ்னாத் (அரபி: ‘சார்ந்திருத்தல்’) அல்லது அறிவிப்பாளர் தொடர். இதன் வழியாகவே ஒரு ஹதீஸின் மத்ன் அல்லது வாசகத்தை ஒரு அறிஞர் நபிகளார் வரை தடமறிந்து செல்கிறார். ஒரு ஹதீஸ் உண்மையிலேயே முஹம்மது நபியிடமிருந்துதான் வந்துள்ளதா என்பதை ஆவணப்படுத்துமொரு முயற்சியே இஸ்னாத் ஆகும். முஸ்லிம் அறிஞர்கள் எட்டாம் நூற்றாண்டு முதல் இன்று வரை ஓயாமல் முழங்கிவருகின்ற மந்திர வாக்கியம் ஒன்றுள்ளது:

‘இஸ்னாத் என்பது மார்க்கத்தின் ஒரு பகுதியாகும். இஸ்னாத் மட்டும் இல்லையென்றால், யார் வேண்டுமானாலும் தாம் விரும்பியதை கூறியிருக்க முடியும்.’

நபிகளாரின் வாக்குகள் என்பவை இஸ்லாமிய சட்டவியல், நம்பிக்கைக் கோட்பாடு ஆகியவை தொடர்பான கலந்துரையாடல்களில் எடுத்தாளப்படும் ஒரு வகை சான்று என்பதையும் தாண்டி அதிக முக்கியத்துவ பாத்திரம் கொண்டவையாகவே எப்போதும் இருந்து வந்துள்ளன. நம்பகத்தன்மை தொடர்பான விவாதங்களுக்கும், அதனை நிறுவுவதற்கான வழிமுறைகளுக்கும் ஊட்டப்பொருட்களாக இருந்ததையும் தாண்டிய முக்கியத்துவம் இஸ்னாதுக்கும் அதன் மூலம் கடத்தப்படும் ஹதீஸுக்கும் இருந்து வந்துள்ளது. முஸ்லிம் அறிஞர் குழாமைப் பொறுத்தவரை, ஒரு ஹதீஸின் இஸ்னாதை பின்பற்றி முஹம்மது நபி வரை தடமறிந்து செல்வதானது, ஒருவர் தனது புனித அறிவின் வம்சாவளியினை பின்தொடர்ந்து சென்று மூலஊற்றினை அடையுமொரு செயல்முறையாகும். ‘அல்லாஹ்வின் நேசத்திற்குரிய’ நபிகளாருடன் இணைப்பை ஏற்படுத்துமொரு ஊடகம் அது. அதேபோல், ஒருவரை கடந்தகால அறிவுத்துறை ஜாம்பவான்களுடன் இணைக்கும் இணைப்புக் கண்ணியும் அதுவே.

இன்றும் கூட ஒருவரின் இஸ்னாதை ஓதிக் காட்டுவதென்பது, தம்முடைய உழைப்பின் மூலம் இஸ்லாமிய மரபை கட்டியெழுப்பிய மாபெரும் அறிஞர்களின் நினைவோடையின் வழியாக ஞாபகத்தால் பின்னோக்கி நடைபோடுவதற்கு ஒப்பாகவுள்ளது. இலையுதிர்க் காலத்தின் வெம்மையான அந்நாளில் கெய்ரோவில் எகிப்தின் வருங்கால முஃப்தியைச் சூழ்ந்த வண்ணம் அமர்ந்திருந்த அந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் தம் கைகளிலிருந்த துண்டுக் காகிதத்தில் அவ்வறிஞரின் இஸ்னாதை குறிப்பெடுத்துக் கொண்டார்கள். அது மிக ஆரம்பகால ஹதீஸ் திரட்டான மாலிக் இப்னு அனஸின் (இ. 179/796) முவத்தா வரை சென்று, பிறகு எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவ்வறிஞரின் இஸ்னாதின் வழியாக நபிகளார் வரை செல்வதாக இருந்தது. அத்திரட்டிலுள்ள ஹதீஸ்களை தனது இஸ்னாதின் வழியாக அம்மாணவர்கள் பரப்பலாம் என்று முஃப்தி அனுமதி வழங்கியுள்ளதாக அக்காகிதங்கள் ஒவ்வொன்றிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஹதீஸ் கிரந்தத்தை முஃப்தியின் அறிவிப்பாளர் தொடரின் வழியாகச் செவியுற்றபடியால், அம்மாணவர்களும் தலைமுறை தலைமுறையாக அறிவைக் கடத்தும் காலவரம்பற்றதொரு மரபுத் தொடர்ச்சியின் ஒரு அங்கமாக மாறினார்கள்.

முஸ்லிம் மாணவர்களும் ‘அறிவைத் தேடுபவர்களும்’ மாபெரும் அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களை கேட்பதற்காகவும் அவற்றைப் பரப்புவதற்கான அனுமதியை அவர்களிடமிருந்து பெறுவதற்காகவும் முஸ்லிம் உலகில் நகரம் நகரமாகப் பயணம் செய்து, உயிர்வாழும் இஸ்னாது மரபுக்குள் தம்மை ஒன்றிணைத்துக் கொள்வது ஆயிரமாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருமொரு பாரம்பரியமாகும். நான் 2007-ம் ஆண்டு வேனிற்காலத்தில் எகிப்திலிருந்து செங்கடலைக் கடந்து, மூர்ச்சையாக்கும் வெப்பம் நிறைந்த கடற்கரையோர மணற்சமவெளியான யமனின் திஹாமாவுக்குப் பயணமானேன். அங்கு பண்டைய வணிக நகரமான ஸபீதுக்குள் நுழைந்தேன். அதன் வெள்ளையடிக்கப்பட்ட செங்கற் சுவர்களும் வளைந்து வளைந்து செல்லும் தெருக்களும் காலத்தின் ஓட்டத்தால் பாதிக்கப்படாமல் எஞ்சியிருப்பது போல் தோன்றின. பல நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், முஸ்லிம் உலகின் மற்றெந்த நகரைக் காட்டிலும் அதிகமாக, முஹம்மது நபிவரை செல்லும் முழுமையான இஸ்னாதுகளுடன் ஹதீஸ்களை அறிவிக்கும் மரபினை இன்றும் பாதுகாத்துப் பேணிவருகின்றவொரு நகரமாக ஸபீத் திகழ்கிறது.

ஒரு பழமையான மதரஸாவில் அந்த நகரின் முஃப்தி, அப்பகுதியில் மிகப் பொதுவாகக் காணப்படும் உயரமான மெத்தையொன்றில் தனது மாணவர்கள் புடைசூழ அமர்ந்திருப்பதைக் கண்டேன். தாம் விளக்கிக் கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்த முஃப்தி, நான் யார்? எதற்காக வந்துள்ளேன்? என்று வினவியதை அவரின் மாணவர்கள் மிகவும் ஆவலுடன் வைத்த கண் மாறாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் அதற்கு, ‘சான்றாண்மைமிகு ஆசிரியரே! உங்களுடைய இஸ்னாதின் வழியாக, ஸபீதுடைய மக்களின் இஸ்னாதின் வழியாக ஒரு ஹதீஸை கேட்கலாம் என்று வந்துள்ளேன்’ என்று மறுமொழியளித்தேன். என்னுடைய வேண்டுகோளைக் கேட்டதும் முஃப்தி அதற்கு ஒப்புக்கொண்டதுடன், எந்தவொரு அறிஞரும் தனது மாணவர்களுக்கு முதலாவதாகச் சொல்லிக் கொடுக்கும் கீழ்வருகின்ற ஹதீஸை எனக்கு ஓதிக்காட்டிய பிறகு, ‘எழுதிக் கொள்ளுங்கள், உங்களின் உளத்தூய்மையான பிரார்த்தனைகளில் எம்மை மறந்துவிட வேண்டாம்’ என்று அறிவுறுத்தினார்.

அஹ்தல் கோத்திரத்தைச் சேர்ந்த முஹம்மது அலீ அல்-பத்தாஹ்வாகிய நான் எனது ஆசிரியர் அஹ்மது இப்னு தாவூது அல்-பத்தாஹ்விடமிருந்து இந்த ஹதீஸை செவியுற்றேன்; அவர் தனது ஆசிரியராகிய முஃப்தி சுலைமான் இப்னு முஹம்மது அல்-அஹ்தலிடமிருந்தும், அவர் முஹம்மது இப்னு அப்துல் பகீ அல்-அஹ்தலிடமிருந்தும், அவர் முஹம்மது இப்னு அப்துர் ரஹ்மான் அல்-அஹ்தலிடமிருந்தும், அவர் முஃப்தி அப்துர் ரஹ்மான் இப்னு சுலைமான் அல்-அஹ்தலிடமிருந்தும், அவர் தனது தந்தை சுலைமான் இப்னு யஹ்யா அல்-அஹ்தலிடமிருந்தும், அவர் அபூ பக்ரு அல்-அஹ்தலிடமிருந்தும், அவர் அஹ்மது அல்-அஹ்தலிடமிருந்தும், அவர் ‘இஸ்லாத்தின் தூணாக’ இருந்த யஹ்யா இப்னு உமர் அல்-அஹ்தலிடமிருந்தும், அவர் அபூ பக்ரு அல்-பத்தாஹ்விடமிருந்தும், அவர் யூசுஃப் இப்னு முஹம்மது அல்-பத்தாஹ்விடமிருந்தும், அவர் தாஹிர் இப்னு ஹுசைன் அல்-அஹ்தலிடமிருந்தும், அவர் ஹதீஸ் ஆசான் இப்னு தய்பாவிடமிருந்தும், அவர் ஸபீதைச் சேர்ந்த ஸைனுத்தீன் அல்-ஷரீஜியிடமிருந்தும், அவர் நஃபீசுத்தீன் சுலைமான் அல்-அலவியிடமிருந்தும், அவர் அலீ இப்னு ஷத்தாதிடமிருந்தும், அவர் மெழுகு உற்பத்தியாளரான இமாம் அஹ்மதிடமிருந்தும், அவர் மெழுகு உற்பத்தியாளரான தனது தந்தை ஷரஃபுத்தீனிடமிருந்தும், அவர் இஸ்ஃபஹானைச் சேர்ந்த ஸாஹிர் இப்னு ருஸ்தமிடமிருந்தும், அவர் கரூஃகைச் சேர்ந்த அப்துல் மலிக்கிடமிருந்தும், அவர் ஹீரத்தைச் சேர்ந்த அபூ நஸ்ரு இப்னு முஹம்மதிடமிருந்தும், அவர் மெர்வைச் சேர்ந்த அபூ முஹம்மது அப்துல் ஜப்பார் அல்-ஜர்ராஹ்விடமிருந்தும், அவர் மெர்வைச் சேர்ந்த அபுல் அப்பாஸ் முஹம்மது இப்னு அஹ்மதிடமிருந்தும், அவர் திர்மிஸைச் சேர்ந்த தீர்க்கமான ஹதீஸ் ஆசான் முஹம்மது இப்னு ஈசாவிடமிருந்தும், அவர் இப்னு அபீ உமரிடமிருந்தும், அவர் இப்னு உயைனாவிடமிருந்தும், அவர் அம்ரு இப்னு தீனாரிடமிருந்தும், அவர் அபூ கபூஸிடமிருந்தும், அவர் அப்துல்லாஹ் இப்னு அம்ரிடமிருந்தும், அவர் அல்லாஹ்வின் தூதரிடமிருந்தும் இதனைச் செவியேற்றார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘கருணையாளர்களின் மீது அளவற்ற கருணையாளனான அல்லாஹ் கருணை செலுத்துகிறான். இவ்வுலக வாழ்வில் கருணையோடிருப்பீர்களாயின், வானிலுள்ள இறைவன் உங்கள் மீது கருணை செலுத்துவான்.’5

நூலின் பொருளடக்கம்

ஹதீஸ் மரபு, திரட்டு, விமர்சனம், இஸ்லாமிய நாகரிகத்தில் அதன் செயற்பாத்திரம், அதனைச் சுற்றி இன்றுவரை நிலவும் சர்ச்சைகள் ஆகியன பற்றியவோர் அறிமுகமே இந்நூல். ஹதீஸ் ஆய்வு தொடர்பான முக்கியமான சில சொற்பிரயோகங்களை முதல் அத்தியாயம் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சுன்னி இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஹதீஸ் திரட்டு மற்றும் பரவல் பற்றியும், ஆரம்ப இஸ்லாமிய காலம் முதல் நவீன காலங்கள் வரை ஹதீஸ் இலக்கியத்தில் உருவாகி வந்துள்ள பல்வேறு வகையினங்கள் பற்றியும் இரண்டாவது அத்தியாயத்தில் கலந்துரையாடுவோம். சுன்னி அறிஞர்கள் வளர்த்துருவாக்கிய ஹதீஸ் விமர்சன அறிவுத்துறை பற்றியும், இஸ்லாமிய வரலாறு நெடுக அதனைப் பாதித்து வந்துள்ள பல்வேறு விவாதங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றியும் மூன்றாவது அத்தியாயம் விளக்கியுரைக்கும்.

இமாமி மற்றும் ஸைதி ஷியாயிசத்தின் ஹதீஸ் மரபுகள் பற்றியும், சுன்னி இஸ்லாத்துடன் அவற்றுக்கிருந்த தொடர்பாடல் பற்றியும் நான்காவது அத்தியாயம் ஒரு பார்வை செலுத்தும். இஸ்லாமிய சட்டவியலிலும் சட்டவியல் கோட்பாடுகளிலும் ஹதீஸ்களின் செயல்பாடு பற்றி ஐந்தாவது அத்தியாயமும், இஸ்லாமிய இறையியலை விரிவுபடுத்துவதில் ஹதீஸ்களுக்குள்ள பாத்திரம் பற்றி ஆறாவது அத்தியாயமும் ஆய்வு செய்யும். சூஃபியிசம் என்று பொதுவாக அறியப்படும் இஸ்லாமிய மறைஞான மரபில் ஹதீஸ்களின் முக்கியத்துவ பாத்திரம் பற்றிய பிரச்சினையை ஏழாவது அத்தியாயம் கையாள்கிறது. எட்டாவது அத்தியாயம் தனது கவனத்தை ஹதீஸ்கள் பற்றிய முஸ்லிம் உரையாடலை விட்டுத் திருப்பி, ஹதீஸ்கள் தொடர்பான மேற்குலக கல்வியியல் ஆய்வுகள் பற்றியும் அவற்றின் வரலாற்றியல் நம்பகத்தன்மை தொடர்பான விவாதங்கள் பற்றியும் கவனத்தைக் குவிக்க முயன்றுள்ளது. இறுதியாக ஹதீஸ்களின் நம்பகத்தன்மை பற்றியும், இன்று இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதில் ஹதீஸ்களுக்குள்ள முறையான பாத்திரம் பற்றியும் நவீன முஸ்லிம்கள் மத்தியில் நடைபெற்றுவரும் விவாதங்களை ஒன்பதாவது அத்தியாயம் ஆய்வு செய்கிறது.

குறிப்புகள்

  1. ஜே. பிரௌன், களஆய்வுக் குறிப்புகள், செப்டம்பர் 2003.
  2. இக்கூற்று ஒன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல அறிஞர் அஷ்-ஷாஃபியுடையது என்று கூறப்படுகிறது.
  3. ஜே. பிரௌன், களஆய்வுக் குறிப்புகள், செப்டம்பர் 2004.
  4. மேக்ஸ் ரோடன்பெக்கின் அற்புதமான நூலைப் பார்க்கவும், கெய்ரோ: வெற்றிகரமான நகரம், பக். 111
  5. ஜே. பிரௌன், களஆய்வுக் குறிப்புகள், ஜூலை 2007. இந்த ஹதீஸை முஹம்மது இப்னு ஈசா அத்-திர்மிதியின் ஜாமிஉத் திர்மிதி: கிதாப் அல்-பிர் வ அல்-சிலா, பாப் மாள ஜாஅ ஃபீ றஹ்மத் அல்-முஸ்லிமீன் எனும் நூலில் பார்க்கலாம்.

Related posts

Leave a Comment