நபிவரலாற்றை அதிகாரக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளல் – அறிமுகம் (பகுதி 1)
[நபிகள் நாயகத்தின் கடிதங்களையும் உடன்படிக்கை ஆவணங்களையும் அரசியல் அதிகார கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்து ஸஃபர் பங்காஷ் எழுதியுள்ள விரிவான புத்தகத்தின் (Power Manifestations of the Sirah) மொழிபெயர்ப்பை மெய்ப்பொருள் தளத்தில் தொடராக வெளியிட எண்ணியிருக்கிறோம். அதில் முதல் பகுதி கீழே.]
அல்லாஹ் சங்கைமிகு திருக்குர்ஆனில் ஒளிவீசும் வார்த்தைகளைக் கொண்டு அண்ணல் நபிகளாரை வருணிக்கிறான். திருக்குர்ஆனின் சில வசனங்கள் நபிகளாரின் இவ்வுலக இலட்சியப் பணிகுறித்து, குறிப்பாக நபிவரலாற்றின் அதிகாரப் பரிமாணம்குறித்துப் பேசுகின்றன. அவற்றுள் சில பின்வருமாறு:
1. பின்பற்றுவதற்கு மிகச் சிறந்தவோர் முன்மாதிரி:
எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் (நம்பிக்கையுடனும் மதிப்பச்சத்துடனும்) எதிர்நோக்கியவர்களாக, அல்லாஹ்வின் நினைவில் தோய்ந்தவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் மிகச்சிறந்தவோர் முன்மாதிரி இருக்கின்றது. (33:21)
2. அல்லாஹ்வின் கடைசியும் இறுதியுமான தூதராக, முத்திரை நபியாக இருக்கின்றார்:
(முஸ்லிம்களே! அறிந்து கொள்ளுங்கள்) முஹம்மது உங்களில் எந்தவொரு ஆண்மகனுக்கும் தந்தையில்லை. எனினும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் முத்திரை நபியாகவும் இருக்கின்றார். மேலும் நிச்சயமாக அல்லாஹ் அனைத்தைக் குறித்தும் பரிபூரணமாக அறிந்தவன். (33:40)
3. முழு மனித இனத்திற்காகவும் அனுப்பப்பட்டிருக்கும் நபி:
(முஹம்மதே!) கூறுவீராக. “மனிதர்களே! நிச்சயமாக நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களின் பால் அனுப்பப்பட்ட தூதராக இருக்கின்றேன். வானங்கள் மற்றும் பூமியின் மீதான மேலாண்மை அவனிடமே இருக்கின்றது. அவனைத் தவிர இறைமை அல்லது அதிகாரம் வேறில்லை. அவனே வாழ்வளிக்கிறான். மரணிக்கச் செய்கிறான்.” எனவே, அல்லாஹ்வின் மீதும் உம்மியாகிய அவனது தூதரின் மீதும் பரிபூரணப் பற்றுறுதியுடன் கூடிய விசுவாசம் கொள்ளுங்கள். அவர் அல்லாஹ்வின் மீதும் அவனது வார்த்தைகளின் மீதும் பரிபூரணப் பற்றுறுதியுடன் கூடிய விசுவாசம் கொண்டவராக இருக்கிறார். நீங்கள் அவரைப் பின்பற்றுங்கள், வழிகாட்டப்படுவீர்கள். (7:158)
4. முழு மனித சமுதாயத்திற்கும் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பப்பட்டிருக்கிறார்:
(முஹம்மதே!) இப்போது நாம் உம்மை முழு மனித சமுதாயத்திற்கும் நற்செய்தி குறித்து கட்டியம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால், பெரும்பாலான மக்கள் (இதனை) புரிந்து கொள்வதில்லை. (34:28)
5. அகிலங்கள் அனைத்துக்கும் ஒரு பேரருளாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்:
மேலும், (நபியே!) நாம் உம்மை அகிலங்கள் அனைத்துக்கும் ஒரு பேரருளாகவே (எமது பேரருளின் ஒரு சான்றாகவே) அனுப்பி வைத்துள்ளோம். (21:107)
6. மனிதகுலத்திற்கு நேர்வழி காட்டும் வேதவசனங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்:
அவன்தான் எழுத்தறிவற்ற மக்களுக்கு அவர்கள் மத்தியிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி வைத்துள்ளான். அவனுடைய வேதவசனங்களை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும், அவர்களின் ஒழுக்கத் தரங்களை மேம்படுத்துவதற்காகவும், வேதப் புத்தகத்தைக் கொண்டும் ஞானத்தைக் கொண்டும் அவர்களைப் பயிற்றுவிப்பதற்காகவும் (அவரை அனுப்பி வைத்துள்ளான்). உண்மையில், அவர்கள் அதற்கு முன்பு தெள்ளத் தெளிவான வழிகேட்டில் தம்மை இழந்திருந்ததார்கள். (62:02)
7. மனிதகுலத்தை இருளிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்:
(அவன் அனுப்பி வைத்துள்ள) தூதர் உங்களுக்கு அல்லாஹ்வின் வேதவசனங்களை விளக்கிச் சொல்கிறார். (அல்லாஹ்வின் மீது) பற்றுறுதியுடன் கூடிய விசுவாசம் கொண்டு நல்லறங்கள் புரிபவர்களை இருளின் ஆழத்திலிருந்து வெளிச்சத்தின் பக்கம் மீட்டுக் கொண்டு வருவதற்காக… (65:11)
8. அல்லாஹ் தன்னுடைய மார்க்கத்தை (தீன்), மனிதன் உருவாக்கியுள்ள சகல அமைப்பு முறைகளையும் மேலோங்கும்படி செய்வான்:
அவனே தனது தூதரை வழிகாட்டுதலுடனும் சத்திய தீனுடனும் (அவற்றைப் பரப்பும் பணித்திட்டத்துடன்) அனுப்பி வைத்துள்ளான்; அறுதியில் அது (மற்ற) எல்லா தீன்களையும் (சமூக ஒழுங்குகளையும்) மேலோங்கும்படி செய்வதற்காக. அது (அல்லாஹ் அல்லாத வேறொன்றுக்கு) இறைமை அல்லது அதிகாரம் இருப்பதாகக் கற்பிதம் செய்வோருக்கு (முஷ்ரிக்குகளுக்கு) எத்துணை வெறுப்பாக இருந்த போதிலும் சரியே. (9:33, 61:9)
மிகப் பலவற்றின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சில வசனங்கள் மட்டுமே இவை. அல்லாஹ் தன்னுடைய சங்கைமிகு தூதரிடம் ஒப்படைத்திருந்த உலகியல் பணியை எடுத்துக் காட்டுபவையாக இந்த வசனங்கள் அமைந்திருக்கின்றன. அவர் அல்லாஹ்வின் தூதராக இருந்ததுடன், பூமியில் ஆட்சியாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். பூமியில் அல்லாஹ்வின் ஆட்சியை நிலைநாட்டும்படி இறைவனால் வழிநடத்தப்பட்டார் அவர். மிகச் சிறந்தவோர் முன்மாதிரி என்ற வகையில் அவரின் பொறுப்பு மற்றும் போதனை மண்டலத்திற்குள், மனித முயற்சியின் எல்லாத் துறைகளுமே அடங்கியிருந்தன. அரசியல் உட்பட.
அண்ணலாருக்கு முன்பு யூசுஃப், தாவூது, சுலைமான் ஆகிய மூன்று நபிமார்கள் ஆட்சியாளர்களாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் திருக்குர்ஆன் வழியாக அறிகிறோம். ஆனால், அவர்கள் மூவருமே தம்முடைய ஆளுகையையும் ஆட்சியையும் தமக்கு முந்தைய மன்னர்களிடமிருந்து மரபுரிமையாகவே பெற்றிருந்தனர்.1 அல்லாஹ்வின் கடைசியும் இறுதியுமான தூதர் மட்டுமே, அதற்கு முன் அப்படியொரு அமைப்பு இல்லாதிருந்த நிலையில், புதியவொரு அரசை தாமாக உருவாக்கினார்கள். இஸ்லாத்தைப் பொறுத்தவரை பூமியின் மீதான ஆட்சி-அதிகாரம் என்பதற்கு, ஒரு புவியியல் சமூக ஒழுங்கின் மீது ஆளுகை செலுத்தி அதில் இறைச் சட்டங்களை முழுமையாக அமலாக்கம் செய்தல் என்று பொருள்.
எனவே, குறித்தவொரு ஆட்சிப்பரப்பின் ஆட்சியாளர் என்ற வகையில் நபிகளார், அரேபியத் தீபகற்பத்தின் உள்ளும் புறமும் அமைந்திருந்த மற்ற ஆட்சியாளர்களுடன் தொடர்பாடினார்கள். சமூகத்தில் நபிகளார் ஆற்றிய இந்தப் பாத்திரம் பற்றி நாம் இன்னுமதிகம் ஆழமாகக் கலந்துரையாடவும் புலனாய்வு செய்யவும் வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அவர்கள் மேற்கொண்ட உடன்படிக்கைகள் பற்றியும்; பல்வேறு ஆட்சியாளர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதுடன், சமூகத்தில் அமைதியையும் நீதியையும் நிலைநாட்டும் நோக்கத்தோடு அவர்களுக்கு அனுப்பிவைத்த கடிதங்கள் பற்றியும் திறனாய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
பெருமானார் எவ்வாறு அதிகாரத்தை வென்றெடுத்தார்கள்? அவர்கள் செய்துகொண்ட எண்ணற்ற உடன்படிக்கைள், அந்த அதிகாரத்தை வலுவூட்டுவதில் எத்தகைய பாத்திரம் வகித்தன? நபிவரலாறு பற்றிய ஆய்வாளர்கள் நபிகளாருடைய கடிதங்கள், உடன்படிக்கைகள், ஆவணங்கள் என இதுநாள்வரை 250 முதல் 300 வரையானவற்றை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அசல் கடிதங்களில் சில இன்றும் பாதுகாப்பாக பேணப்பட்டு வருகின்றன.2 எழுத்துத் திறன்கள் முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காத அந்தக் காலத்திலேயே, நபிகளாரின் கடிதங்களும் உடன்படிக்கை ஆவணங்களும், அதேபோல குர்ஆனின் அனைத்து வேதவெளிப்பாடுகளும் மிகவும் கவன சிரத்தையுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதை பார்க்கும்போது வெகுசுவாரஸ்யமாக இருக்கிறது. இத்தனைக்கும் அப்போது மக்காவில் வெறும் 17 பேருக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது.3
நபிகள் நாயகத்தின் கடிதங்கள், உடன்படிக்கைகள் பற்றி எண்ணற்ற நபிவரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் ஓர் ஒழுங்கு முறையில் அவற்றைத் தொகுத்தளித்ததில் டாக்டர் முஹம்மது ஹமீதுல்லாஹ்வை விடச் சிறப்பானவர் அநேகமாக யாருமில்லை என்று சொல்லலாம். ‘அல்-வதாயிக் அல்-சியாஸிய்யா ஃபீ அல்-அஹ்து அல்-நபவீ வ அல்-கிலாஃபா அல்-ராஷிதா’4 என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்ட அவருடைய புத்தகம், இந்தப் பாடப்பொருள் பற்றி இணையற்றதொரு ஆய்வு விவாதத்தை முன்வைக்கிறது. நபிகளாரின் அறிவுறுத்தல்களின் பேரில் தயார்செய்யப்பட்ட கடிதங்கள், உடன்படிக்கைகள், ஆவணங்கள் ஆகியவற்றுள் பெரும்பாலனவற்றை டாக்டர் ஹமீதுல்லாஹ் இதில் மிகக் கவனமாக ஆவணப்படுத்தியிருக்கிறார். நபிவரலாற்றின் இந்த அம்சம் பற்றி ஆய்வுசெய்யும் ஆய்வாளர்களுக்கு மாபெரும் ஒரு தகவல் கருவூலத்தையே அவர் இதில் தொகுத்துத் தந்திருக்கிறார்.
எனது இந்தப் புத்தகம், இத்திசையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சிகளில் எளியதொரு பங்களிப்பு மட்டுமே. அந்த ஆவணங்களை இங்கு மறுபிரதி செய்வதோடு நாம் நிற்கப் போவதில்லை. பல்வேறு கோத்திரங்கள், குழுக்கள் அல்லது தனிநபர்களோடு செய்துகொள்ளப்பட்ட கூட்டணி உடன்படிக்கைகள் நபிகளார் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கும், அதனை தக்கவைத்துப் பேணுவதற்கும் எந்த வகையில் உதவிகரமாக இருந்தன என்பதை ஆய்வு செய்வதே நம் நோக்கம். நபிகள் நாயகம் நடைமுறைப்படுத்திய நீதமிக்க அதிகார பரிபாலனமானது, அரேபியத் தீபகற்பத்திலும் அதற்கு அப்பாலும் முனைப்பாகக் குவிந்திருந்த ஊழல் மயப்பட்ட அதிகாரங்களின் அடித்தளத்தை -குறிப்பாக மக்காவிலிருந்த குறைஷியர்களின் அதிகார மையத்தின் அடித்தளத்தை- இயல்பாகவே அசைத்துப்பார்க்க ஆரம்பித்தது.
இதுநாள்வரை அலட்சியம் செய்யப்பட்டு வந்துள்ள ஒரு கண்ணோட்டத்திலிருந்து -நபிவரலாற்றின் அதிகாரப் பரிமாணம் என்ற கண்ணோட்டத்திலிருந்து- இவ்வனைத்து அம்சங்களும் கலந்துரையாடப்பட வேண்டியிருக்கிறது. அதாவது இருபத்து மூன்று ஆண்டுகளை மட்டுமே கொண்ட தன்னுடைய தூதுத்துவத்தின் மிகக் குறுகிய காலஇடைவெளிக்குள், எதிர்ப்பார் எவருமற்றவொரு அதிகாரத்தை நபிகளார் எப்படி வென்றெடுத்தார்கள்? மக்காவிலிருந்த காலத்தில் சொற்ப எண்ணிக்கையில் பின்பற்றாளர்களை தயார்செய்த பிறகு, மதீனாவில் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவியது மட்டுமின்றி, பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள்ளேயே அவ்வரசின் செல்வாக்கை முழு அரேபியத் தீபகற்பத்திற்கும் அவர்கள் பரவச் செய்தார்கள் என்பதை நாமறிவோம்.
கவனமாகத் திட்டமிடல் மற்றும் உத்திநோக்குடன் கூடிய கூட்டணிகள் மூலமாகவும்; ஒட்டுமொத்த அழிவுநாசத்திலோ கூட்டுப் படுகொலைகளிலோ ஈடுபடுவதைத் தவிர்ந்து கொண்டு, முன்னெச்சரிக்கையுடன் கூடிய அறிவார்ந்த முறையில் சக்தியைப் பிரயோகித்து எதிரிகளின் வலிமையை வினைகுன்றச் செய்ததன் மூலமாகவுமே தனிச்சிறப்பான இந்த நிலைமாற்றம் சாதிக்கப்பட்டது. தீர்மானகரமான அந்தப் பத்தாண்டு காலப்பிரிவில் 270 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். எதிரிகள் தரப்பில் 150 பேர், முஸ்லிம்கள் தரப்பில் 120 பேர்.5 ஒரு நாளைக்கு 274 சதுர கி.மீ. பரப்பு என்ற அளவில் அசாத்திய வேகத்தில் அமைந்தவொரு விரிவாக்கம், மனிதகுல வரலாற்றில் அதற்கு முன்னெப்போதும் நடந்தது கிடையாது. நபிவரலாற்றின் அதிகாரப் பரிமாணம் என்ற விசயத்தில் தெளிவைப் பெற்றுக்கொள்ளும்போது, அது நபிகளாரின் அரசியல் சாதனைகளை புதியதொரு ஒளியில் வாசித்துப் புரிந்துகொள்வதற்கு உதவும்.
குறிப்புகளும் மேற்கோள் நூல்களும்
- குர்ஆன், 12:54-56, 2:251, 27:16, 27:36; மேலும் பார்க்க. முஹம்மது அல்-ஆஸி, ஸஃபர் பங்காஷ், நபிவரலாறு: ஒரு அதிகாரக் கண்ணோட்டம். (லண்டன், ஐக்கிய ராச்சியம் மற்றும் டொரண்டோ, கனடா: இன்ஸ்டிட்யூட் ஆஃப் கன்டம்பரரி இஸ்லாமிக் தாட், 2000), பக். 28.
- இந்தக் கடிதங்களில் ஒன்று இஸ்தான்புல் நகரில் டோப்காபி அருங்காட்சியகத்தில் பாதுகாத்துப் பேணப்பட்டு வருகின்றது. மற்றவை தனிநபர்களின் வசமோ, பல்வேறு நூலகங்கள்-அருங்காட்சியகங்களின் வசமோ இருக்கின்றன. விவரங்களுக்குப் பின்வரும் பார்வை நூல்களைக் பார்க்கவும்: டாக்டர் முஹம்மது ஹமீதுல்லாஹ், ரசூலே அக்ரம் கி சியாசி ஸின்தகி (உருது). (கராச்சி, பாகிஸ்தான்: தாருல் அஷாஅத், 2003), பக். 140-87. டாக்டர் முஹம்மது ஹமீதுல்லாஹ், அல்-வதாயிக் அல்-சியாஸிய்யா ஃபீ அல்-அஹ்து அல்-நபவீ வ அல்-கிலாஃபா அல்-ராஷிதா, ஏழாம் பதிப்பு. (பெய்ரூத், லெபனான்: தார் அந்-நஃபாயிஸ், 2001).
- அஹ்மது இப்னு யஹ்யா இப்னு ஜாபிர் அல்-பலதூரி, ஃபுதூஹ் அல்-புல்தான், பக். 471-72; மேற்கோள்காட்டப்பட்டுள்ள நூல்,
டாக்டர் முஹம்மது ஹமீதுல்லாஹ் (மொழிபெயர்ப்பு முஹம்மது ரஹீமுத்தீன்), ஹம்மாம் இப்னு முனப்பிஹின் சஹீஃபாவின் ஒளியில் ஹதீஸ் பாதுகாப்பு பற்றி ஓர் அறிமுகம். (கோலாலம்பூர், மலேசியா: இஸ்லாமிக் புக் டிரஸ்ட், 2003), பக். 4. - ஹமீதுல்லாஹ், அல்-வதாயிக் அல்-சியாஸிய்யா.