குறும்பதிவுகள் 

நோன்பின் நோக்கம்

Loading

“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது கடமையாக்கப்பட்டது போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் தக்வா உடையவர்களாகலாம்” (2:183)

இந்த வசனமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளும் நோன்பின் நோக்கத்தைக் கச்சிதமாகத் தெளிவுபடுத்திவிடுகின்றன. நோன்பு என்பதற்கு அறபு மொழியில் ‘ஸவ்ம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஏதேனும் ஒன்றிலிருந்து விலகிக்கொள்ளுதல், அதை விட்டுவிடுதல் என்று பொருள். இந்த வார்த்தையின் பயன்பாடு தொடர்பாக மௌலானா ஹமீதுத்தீன் ஃபராஹீ இப்படிக் கூறுகிறார்: “அறபுகள் தங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் பட்டினி போட்டுப் பழக்கப்படுத்துபவர்களாக இருந்தார்கள், அவை கஷ்ட காலங்களில் கஷ்டங்களைச் சகித்துக்கொள்பவையாக இருக்க வேண்டும் என்பதற்காக. அவர்கள் ஸவ்ம் என்ற வார்த்தையை இதற்குத்தான் பயன்படுத்தினார்கள்.”

நாமும் அப்படித்தான். நோன்புக் காலங்களில் நாம் உண்பதிலிருந்தும் பருகுவதிலிருந்தும் உறவு கொள்வதிலிருந்தும் விலகி இருக்கின்றோம். அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு வழங்கப்படும் அற்புதமான பயிற்சி. அது பொறுத்திருப்பதற்கு, மனக்கட்டுப்பாட்டுடன் திகழ்வதற்கு, அல்லாஹ் அளித்த மார்க்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு வாழ்வதற்கு நமக்கு வழங்கப்படும் பயிற்சி.

பொறுமையும் மனக்கட்டுப்பாடும் மனிதர்களிடம் இயல்பாகவே இருக்கும் பண்புகள் அல்ல. அவை சம்பாதிக்கப்பட வேண்டிய, ஊட்டி வளர்க்கப்பட வேண்டிய பண்புகள். ஒரு மனிதன் பொறுத்திருந்து பொறுத்திருந்து பொறுத்திருப்பதற்குப் பழக வேண்டும். மனம் எந்தவொன்றையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளாது. அது எந்தவொன்றையும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற்றுக்கொள்ளும். அது இச்சைகளின் பக்கம் விரைந்து செல்லும். அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இஸ்லாம் மனிதனின் இச்சைகளை ஒரேயடியாக நசுக்கிவிடுவதில்லை. அது அவற்றை ஒழுங்குபடுத்தி, அவற்றுக்கான சரியான வடிகால்களை அளிக்கிறது.

தக்வா என்பது அல்லாஹ்வின் சட்டங்களுக்கு, அவன் அமைத்த ஒழுங்குகளுக்கு உட்பட்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்வது. தக்வா என்பது அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுவது. தக்வா என்பது அவன் செய்ய வேண்டும் என்று கூறியவற்றைச் செய்வதும், அவன் விலகியிருக்க வேண்டும் என்று கூறியவற்றிருந்து விலகியிருப்பதும் ஆகும். நோன்பு அப்படியான, நேர்த்தியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு பயிற்சி ஆகும். நோன்பின் வழியாக மனிதர்கள் அந்த உயர்நிலையை அடைய முடியும்.

நோன்பு காலங்காலமாக மனிதர்களிடம் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு வழிபாடுதான். முந்தைய சமூகங்களின் மீது கடமையாக்கப்பட்டதைப் போல இந்தச் சமூகத்தின் மீதும் அது கடமையாக்கப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்கு அவன் அளித்த வழிமுறை. தன் தூதர்கள் வழியாக அவன் அளித்த வழிமுறைகளின்வழியாகவே நாம் அவனை நெருங்கிச் செல்ல வேண்டும். அவன் அளித்த வழிமுறைகளைக் கொண்டு அல்லாமல் வேறு வழிமுறைகளைக் கொண்டு அவனை நெருங்க முயல்பவர்கள் தோல்வியடைகிறார்கள்.

Related posts

Leave a Comment