ஆலி முஸ்லியார்: மலபார் புரட்சியின் தலைமகன்
![]()
1922 பிப்ரவரி 17, சனிக்கிழமை அதிகாலை 5 மணி.
கோவை மத்தியச் சிறையின் 11ஆவது பிளாக்கில் உள்ள அந்தச் சிறையறையில், ஸுபுஹ் தொழுகையை முடித்துவிட்டு அமர்ந்திருந்தார் ஆலி முஸ்லியார். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதை நிறைவேற்றுவதற்காக அவர் கோவைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு சிறை அதிகாரி அங்கு வந்து, “உங்களைத் தூக்கிலிட அழைத்துச்செல்கிறோம், உங்களுக்குக் கடைசி ஆசை ஏதேனும் உண்டா?” என்று கேட்டார்.
ஒரு ஸூஃபியாகவும் சிறந்த மார்க்க அறிஞராகவும் திகழ்ந்த அவருக்கு அதிகம் யோசிக்க எதுவுமில்லை. புன்னகையுடன் அவர் இவ்வாறு பதிலளித்தார்: “சிறிது தண்ணீர் கிடைத்தால், மீண்டும் ஒருமுறை வுளூ செய்துவிட்டு, இரண்டு றகஅத்துகள் சுன்னத் தொழுகையை நிறைவேற்ற விரும்புகிறேன்.”
வுளூச் செய்துவிட்டுத் தொழுகையைத் தொடங்கிய அவர், இறைவனின் முன்னால் பிரார்த்தனையோடு சுஜூதில் (சிரவணக்கம்) வீழ்ந்தார். தொழுது முடித்த பின் இவ்வாறு பிரார்த்தித்தார்:
“அரசர்களுக்கு எல்லாம் அரசனே… இந்த நயவஞ்சகர்களின் முன்னால் என்னை நீ அவமானப்படுத்திவிடாதே…”
கோயம்புத்தூர் சிறையில் நடந்த காட்சி இது. இரு கரங்களையும் ஏந்தி, பக்திப் பெருக்குடன் பிரார்த்தனையில் மூழ்கியிருந்தவர் அறிஞர்களில் சிறந்தவரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஆலி முஸ்லியார். ஸூஃபி ஞானியான அந்தச் சுதந்திரப் போராட்ட நாயகனின் மனதிலிருந்து பொங்கிய அந்த உருக்கமான இறுதிப் பிரார்த்தனையை எல்லாம் வல்ல இறைவன் ஏற்றுக்கொண்டான். அந்தத் தொழுகைப் பாயிலேயே அவர் இவ்வுலகை விட்டு நிரந்தரமாக விடைபெற்றார்.
இருப்பினும், கோழிக்கோடு இராணுவ நீதிமன்றத்தின் (Martial Law Court) தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்க சிறை அதிகாரிகளால் முடியவில்லை. உயிர் பிரிந்த அந்த உடலைத் தூக்கிலிட்டு, ஆலி முஸ்லியார் தூக்கிலிடப்பட்டதாகத் தீர்ப்பெழுதி சிறை ஆவணங்களில் பதிவுசெய்தனர்.
அன்று ஆலி முஸ்லியார் மீதும் அவருடைய 37 சீடர்கள் மீதும் இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அவர்களுக்காக வாதாட ஏ.வி. பாலகிருஷ்ண மேனன் என்ற வழக்குரைஞரை அரசாங்கம் நியமித்திருந்தது. ஆனால், “எனக்காக வாதாட வேண்டிய அவசியமில்லை” என்றே ஆலி முஸ்லியார் அந்த வழக்குரைஞரிடம் கூறினார். ஜே.டபிள்யூ. ஹியூக்ஸ் தலைமையில் எடிங்டன் மற்றும் ஆர். ராமையர் அடங்கிய நீதிமன்றம் தனது விசாரணையை முடித்து வெளியிட்ட தீர்ப்பு இதோ:
“ஆலி முஸ்லியார் உட்பட 13 பேரைத் தூக்கிலிடவும், மூன்று பேரை நாடு கடத்தவும், எட்டு பேரை ஆயுள் தண்டனையுடன் நாடு கடத்தவும், 14 பேரை ஆயுள் தண்டனையுடன் சிறையில் அடைக்கவும் உத்தரவிடுகிறோம். அத்துடன், இவர்கள் அனைவரின் சொத்துகளையும் அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும்.”
எதிர்பார்த்தபடியே, பிரதிதிகளின் மேல்முறையீடு ஏற்கப்படவில்லை. தண்டனையை நிறைவேற்ற அவர்களை உடனடியாகக் கோயம்புத்தூர் சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. வெறும் மூன்றே நாள்களில் விசாரணையும் தீர்ப்பும் முடிந்துவிட்டன.
சில ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த நெல்லிக்குத்து முஹம்மது முஸ்லியார் கோயம்புத்தூர் சுகிரான்பேட்டையில் அடங்கியிருக்கும் தன் பாட்டனாரின் (உப்பாப்பா) கபரிடத்திற்குச் சென்றபோதுதான், வரலாற்றில் பதியப்படாத பல தகவல்கள் கிடைத்தன. வரலாற்று ஆசிரியர்கள் கூடத் தவறவிட்ட அந்த உண்மையை, ஆலி முஸ்லியாரின் பேரனும் வரலாற்று ஆய்வாளர்களின் வழிகாட்டியுமான நெல்லிக்குத்து ஏ.பி. முஹம்மது முஸ்லியார் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
“தன் பாட்டனாரின் மரணம் தூக்கிலிடப்பட்டதால் நிகழவில்லை, அது ஓர் இயற்கை மரணம்; பிரிட்டிஷார் புனைந்த கதைகளே வரலாறாகப் பதியப்பட்டுள்ளன” என்கிறார் முஹம்மது முஸ்லியார். நாம் இப்போது ‘நினைவுச் சின்னம்’ என்று சொல்வதற்கு முன்பே, சையிது அப்துர் ரஹ்மான் பாஃபகி தங்ஙள் அவர்களின் முயற்சியால் ஆலி முஸ்லியாருக்கு அங்கே நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுவிட்டது. அதனை மத்திய அமைச்சர் ஹுமாயூன் கபீர் திறந்துவைத்தார்.
ஆலி முஸ்லியாரின் உடலைக் குளிப்பாட்டி, இறுதிச் சடங்குகளைச் செய்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களிடம் சிறை அதிகாரிகள் கூறிய தகவல்களைச் சேகரித்த பிறகே, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்ற உண்மையை அவருடைய பேரன் முஹம்மது முஸ்லியார் கண்டறிந்தார். அப்போது அவருக்கு 58 வயதுதான். பிரிட்டிஷ் ஆவணங்களில் அவர் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்புகள் இருந்தாலும், அவர் இறைவணக்கத்திலேயே உயிர்நீத்ததை மக்கள் அறியக்கூடாது என்பதற்காக, அதிகாரிகள் அவரது உடலைத் தூக்கில் தொங்கவிட்டனர் என்று வரலாறு நமக்கு உணர்த்துகிறது. (இது தொடர்பான செய்தி ‘சுப்ரபாதம்’ மலையாள நாளிதழில் வெளியானது.)
வரலாறு சிதைக்கப்படும் இக்காலத்தில், ஏரிக்குன்னம்பாலத்துமூலையில் குஞ்ஞி மொய்தீன் என்பவரின் மகனான ஆலி முஸ்லியார் எனும் அந்த வீரமகு ஆளுமையின் நினைவுகளை நாம் என்றும் நினைவில் பாதுகாப்போம்!
பிறப்பும் பின்னணியும்
கிழக்கு ஏரநாட்டின் நெல்லிக்குத்தில் உள்ள ஏரிக்குன்னம்பாலத்துமூலையில், குஞ்ஞி மொய்தீன் ஸாஹிபுக்கும், முடிக்கோடு காழீயாக (நீதிபதி) இருந்த ஒற்றகத்து மம்மது குட்டி முஸ்லியாரின் மகள் ஆமினாவுக்கும் மகனாக (1853-54) ஆலி முஸ்லியார் பிறந்தார். கண்ணியமான, உறுதியான மார்க்கப்பற்று கொண்ட இக்குடும்பம், பாரம்பரியமாகவே பிரிட்டிஷாரின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தது. ஆலி முஸ்லியாரின் குடும்பத்தைச் சேர்ந்த பய்யநாட்டு குரிக்கள், மஞ்சேரி ஹசன் (அத்தன்) குரிக்கள், இளம்புரளிச்சேரி உன்னிமூப்பன் போன்றோர் பிரிட்டிஷாரை நேருக்கு நேர் எதிர்த்துப் போரிட்டவர்கள்.
ஆலி முஸ்லியாரின் தாய் ஆமினா, பொன்னானியின் புகழ்பெற்ற மஃக்தூம் குடும்பத்தின் வழித்தோன்றல் ஆவார். காழீயாகப் பணியாற்றிய மம்மது குட்டி முஸ்லியார் முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவரது தாய் வழி உறவினர்கள் அனைவரும் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களாகவும், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் காழீகளாகப் பணியாற்றியவர்களாகவும் இருந்தனர். சிறுவயதிலேயே ஆலி முஸ்லியார் தைரியமும், உண்மையும், கூர்மையும் கொண்டவராக விளங்கினார். வள்ளுவங்காட்டின் குஞ்ஞிக்கம்மு முல்லா அவருக்கு குர்ஆன், அறபு இலக்கணம், அறநெறிகள் ஆகியவற்றைக் கற்பித்தார். சிறுவயதிலேயே மலையாள அரிச்சுவடிகளையும் அவர் கற்றுக்கொண்டார். கிதாபுகள் (மார்க்க நூல்கள்), சர்ஃப், நஹ்வு (அறபு இலக்கண நூல்கள்) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பிறகு, பெற்றோரின் விருப்பப்படி மேல்படிப்பிற்காக பொன்னானிக்குச் சென்றார். தந்தையிடமிருந்து வீரத்தையும், தாயின் குடும்பத்திடமிருந்து மார்க்க அறிவையும் ஒருசேரப் பெற்ற ஆலி முஸ்லியார் ஒரு தனித்துவமான ஆளுமையாக வளர்ந்ததில் ஆச்சரியமில்லை.
பொன்னானியும் மக்கா பயணமும்
அக்காலத்தில் பொன்னானி ‘சின்ன மக்கா’ என்று அழைக்கப்படும் அளவிற்குச் சிறந்த கல்வி மையமாகத் திகழ்ந்தது. இந்தியா மட்டுமின்றி மலாயா, இந்தோனேசியா, ஜாவா, லட்சத்தீவு போன்ற இடங்களிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்வி கற்க வருவார்கள். முஸ்லியார் அங்கு தஃப்சீர் (குர்ஆன் விளக்கம்), ஹதீஸ் (நபிமொழி), ஃபிக்ஹு (சட்டவியல்), தஸவ்வுஃப் (ஆன்மீகம்) போன்ற பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற்றார். ஷைஃகு ஸைனுத்தீன் மஃக்தூமின் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்தவரும், ‘ஃபத்ஹுல் முஈன்’ நூலின் ஆசிரியருமான ஷைஃகு ஸைனுத்தீன் முஸ்லியார் இவருக்குக் கற்பித்தார். அங்கு சுமார் பத்து ஆண்டுகள் தங்கிப் பயின்ற அவர், 700 ஹதீஸ்களையும் அதன் அறிவிப்பாளர் வரிசையையும் (இஸ்னாது) மனப்பாடம் செய்து ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றார்.
அதன்பிறகு ஆலி முஸ்லியார் கப்பல் மூலம் மக்காவிற்குச் சென்றார். அங்கு ஏழு ஆண்டுகள் தங்கியிருந்து இஸ்லாமியக் கலைகளிலும் அறிவியலிலும் ஆழ்ந்த புலமை பெற்றார். புனித ஹறம் (கஅபதுல்லாஹ்) வளாகத்தில் வைத்து குர்ஆனை முழுமையாக மனப்பாடம் செய்தார்.
ஃகிலாஃபத் இயக்கத்தில் பங்களிப்பு
மம்புரம் தங்ஙளின் பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்த முஸ்லியார், ஃகிலாஃபத் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றது இயல்பான ஒன்றாக இருந்தது. அவருடைய உறவினர்கள் இருவர் 1894இல் நடந்த போராட்டங்களில் கொல்லப்பட்டனர்.
மக்காவிலிருந்து வந்த பிறகு இலட்சத்தீவு கவரட்டி பெரிய பள்ளிவாசலில் ஒன்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பிரிட்டிஷ் இராணுவம் தன்னுடைய உறவினர்களை வேட்டையாடியதை அறிந்து நாடு திரும்பினார். வண்டூர், ஆலத்தூர் படி, நெல்லிக்குத்து போன்ற பகுதிகளில் பாரம்பரிய முறையில் (பள்ளி தர்ஸ்) கல்வி கற்பித்தார். பின்னர் திரூரங்காடிப் பகுதியிலுள்ள சில பள்ளிவாசல்களிலும் கற்பித்தார். இறுதியாக திரூரங்காடி கிழக்குப் பள்ளிவாசலில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆலி முஸ்லியார் ஆசிரியராக இருந்து ஏராளமான மாணவர்களை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக வார்த்தெடுத்தார். குறிப்பாக அவர் திரூரங்காடியில் தங்கியிருந்த காலம் முக்கியமானது.
மலபார் முஸ்லிம்கள் எப்போதும் பிரிட்டிஷாரை எதிர்த்து நின்றனர். 1894இல் மண்ணார்க்காட்டில் நடந்த மோதலில் ஆலி முஸ்லியாரின் மூத்த சகோதரர் வீரமரணம் அடைந்தார். தன்னுடைய அண்ணனின் மரணமும், அந்த ஆண்டு மாப்பிளாக் கிளர்ச்சியில் கொல்லப்பட்ட உறவினர்களின் செய்தியும் அவரை நிலைகுலையச் செய்தன. பிரிட்டிஷாரை இப்படி விட்டுவிடக் கூடாது என்று முடிவுசெய்த அவர், தன்னுடைய தம்பி முஹம்மது குட்டி முஸ்லியாரிடம் தன் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மலபாருக்குத் திரும்பினார். 1896இல் மஞ்சேரி விவசாயிகள் போராட்டத்தில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் பலர் கொல்லப்பட்டனர்; பலர் நாடு கடத்தப்பட்டனர். சிறந்த மார்க்க அறிஞராகவும் பேச்சாளராகவும் இருந்த முஸ்லியார், பிற சமூகத்தினரின் மரியாதையையும் பெற்றிருந்தார். ஏரநாடு, வள்ளுவநாடு வட்டங்களில் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை அவர் தட்டியெழுப்பினார். 1907இல் திரூரங்காடி பெரிய ஜும்மா பள்ளிவாசலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
துருக்கி மீதும் பிற முஸ்லிம் நாடுகள் மீதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நடத்திய தாக்குதல்களால் அவர் கோபமடைந்தார். இறுதியில் அவர் ஃகிலாஃபத் மற்றும் காங்கிரஸ் இயக்கங்களால் ஈர்க்கப்பட்டார். 1920இன் இறுதியில் திரூரங்காடியில் ஃகிலாஃபத் கமிட்டியை உருவாக்கினார். அவரது தலைமையின் கீழ் திரூரங்காடியிலும் தானூரிலும் ஒத்துழையாமை இயக்கம் பெருவெற்றியடைந்தது. இதைக் கண்டு மலப்புரம் குஞ்ஞி தங்ஙள், வாரியம் குன்னத்து குஞ்ஞஹமது ஹாஜி, செம்பரச்சேரி குஞ்ஞி சீதி தங்ஙள் போன்ற தலைவர்கள் முஸ்லியாரின் பின்னால் அணிவகுத்தனர்.
1921 கிளர்ச்சியும் திரூரங்காடிச் சம்பவமும்
1921இல் கிளர்ச்சி தீவிரமடைந்தபோது ஆலி முஸ்லியாருக்கு வயது 65. பிப்ரவரி 26 அன்று நான்கு ஃகிலாஃபத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டபோது திரூரங்காடியின் அமைதி குலைந்தது. ஆகஸ்ட் 20 அதிகாலை, கலெக்டரும் ராணுவமும் பரப்பனங்காடிக்கு வந்தனர். “பள்ளிவாசல் தகர்க்கப்படப் போகிறது” என்ற வதந்தி பரவியது. ஆலி முஸ்லியார் தலைமையில் காதி (Khadi) உடையணிந்த 300-400 தொண்டர்கள் கிழக்குப் பள்ளிவாசலிலிருந்து தியாகிகளின் நினைவிடத்திற்கு ஊர்வலமாகச் சென்று பிரார்த்தனை செய்தனர். இது கிளர்ச்சிக்கான முன்னேற்பாடு என்று அரசு கருதியது.
ஆகஸ்ட் 19 அன்று கலெக்டர் தாமஸ் தலைமையில் ராணுவம் திரூரங்காடிக்குள் புகுந்து பலரைச் சோதனையிட்டுக் கைது செய்தது. ஆகஸ்ட் 20 அன்று, கைது செய்யப்பட்ட நிரபராதிகளை விடுவிக்கக் கோரி முஸ்லியார் தலைமையில் ஒரு குழு காவல் நிலையம் சென்றது. அங்கு பேச்சுவார்த்தையின் போது ராணுவம் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மக்கள் கத்திகளுடனும் தடிகளுடனும் ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டனர். இந்த மோதலில் அரசு தரப்பில் ஆறு பேரும், மக்கள் தரப்பில் 17 பேரும் கொல்லப்பட்டனர். இதுவே மலபார் கிளர்ச்சி முழுமையாகப் பரவக் காரணமாக அமைந்தது.
அக்கால மலையாளப் பத்திரிகைகள் இந்தச் சம்பவத்தையிட்டு பிரிட்டிஷ் அதிகாரிகளைக் கடுமையாக விமர்சித்தன. கலெக்டர் தாமஸை ‘மலபாரின் டயர்’ (Dyer of Malabar) என்று அழைத்தன. மம்புரம் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதாகப் பரவிய செய்தி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது.
மாற்று நிர்வாகமும் இறுதிக் கட்டமும்
அரசு இயந்திரம் முடங்கிய நிலையில், ஆலி முஸ்லியார் ஒரு வார காலம் அப்பகுதியின் ஆட்சியாளராகச் செயற்பட்டார். அவர் ஃகிலாஃபத் அரசாங்கத்தை அமைத்தார். இது காங்கிரஸ் இயக்கத்தின் விலகலுக்குப் பிறகு உருவான ஒரு தற்காலிக நிர்வாகமாகும். பிரிட்டிஷார் வெளியேறினால் காங்கிரஸ் தங்களுக்கு உதவும் என்று அவர் நம்பினார்.
ஆகஸ்ட் 30 அன்று பிரிட்டிஷ் இராணுவம் திரூரங்காடியைச் சுற்றியுள்ள எல்லா வழிகளிலும் இராணுவ முன்னேற்பாடுகளை மேற்கொண்டது. இரவு நேரத்தில் பெரும் இராணுவப் படை திரூரங்காடி பெரிய பள்ளிவாசலைச் சுற்றிவளைத்து ஆலி முஸ்லியாரையும் உடன் இருந்தவர்களையும் சரணடைய உத்தரவிட்டது. இதுகுறித்து ஆலோசனை செய்து காலையில் அறிவிப்போம் என்று ஆலி முஸ்லியார் தரப்பினர் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 31ஆம் நாள் காலையில் பள்ளிவாசலிலிருந்து பிரிட்டிஷ் இராணுவத்தை நோக்கிச் சுட்டனர். இருதரப்பிலிருந்தும் கடும்போராட்டம் தொடர்ந்தது. பல போராளிகள் இரத்த சாட்சிகளாயாயினர். பிரிட்டிஷ் தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். இறுதியாக இராணுவம் பள்ளிவாசலை வெடிவைத்துத் தகர்க்கப்போவதாக அறிவித்தது.
ஆலி முஸ்லியாரும் 37 தொண்டர்களும் ஒரு மணி நேரத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, பள்ளிவாசல் சேதமடைவதைத் தவிர்க்க வெள்ளைக் கொடி ஏந்திச் சரணடைந்தனர்.
தண்டனையும் தியாகமும்
ஆலி முஸ்லியார் மீது பிரிட்டிஷ் மன்னருக்கு எதிராகப் போர் தொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. நவம்பர் 2 அன்று அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் அவரின் தளபதிகளான லவக்குட்டியும் குஞ்ஞலவியும் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர். வாரியம் குன்னத்து குஞ்ஞஹமது ஹாஜியும் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் புரட்சியின் விளைவாக 12,000க்கும் மேற்பட்ட மாப்பிளாக்கள் கொல்லப்பட்டனர்; பலர் அந்தமானுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
சிறப்புத் தீர்ப்பாயம் ஆலி முஸ்லியார் உட்பட 13 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1921 டிசம்பரில் வெளியான ‘கேரள பத்ரிகா’ செய்தியின்படி, இந்தியத் தண்டனைச் சட்டம் 121, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. தூக்கிலிடப்பட வேண்டியவர்களில் முக்கியமானவர்கள்:
பாலத்துமூலையில் ஏரிக்குன்னன் ஆலி முஸ்லியார்; கொக்கப்பறம்பன் ராயின்; சேருபாடத்து குஞ்ஞிச்சேக்கு; … மற்றும் பலர்.
ஆலி முஸ்லியாரை பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் ‘மதவெறியர்’ என்று சித்தரித்தனர். ஆனால், உண்மையில் அவர் மத நல்லிணக்கத்தின் காவலராக இருந்தார். கிளர்ச்சியின் போது இந்துக்களும் அவர்களின் சொத்துகளும் அவரது பாதுகாப்பில் இருந்தன என்று அவரின் சீடர் கே.எம். மௌலவி குறிப்பிட்டுள்ளார்.
1922 பிப்ரவரி 17ஆம் தேதி கோயம்புத்தூர் சிறையில் ஆலி முஸ்லியார் தூக்கிலிடப்பட்டார் (தூக்கிலிடுவதற்கு முன்பே தொழுகையில் அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது). அவரது 12 தோழர்களும் புன்னகையுடன் தூக்குமேடையை முத்தமிட்டனர். அவர்களின் உடல்கள் கோயம்புத்தூர் சுல்தான்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. 1958இல் அங்கு அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. கோயம்புத்தூர் நத்வா ஹக்கீம் சாலையில் உள்ள அந்த நினைவிடத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ”அர்ப்பணிக்கப்பட்ட அமீர் (தலைவர்)”
மலபார் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆலி முஸ்லியார், பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்படுவதற்குச் சற்று முன் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க நேர்காணல் பிற்காலத்தில் வெளியானது(இது தொடர்பான செய்தியை மீடியாஒன் ஊடகம் வெளியிட்டது). கோவை சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தபோது, ஊடகவியலாளர் சி.கே. முஹம்மது யாக்கூப் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த நேர்காணல், ஒரு மாவீரனின் இறுதித் தருணங்களை உலகிற்குப் பறைசாற்றுகிறது.
சென்னை ஆவணக்காப்பகத்திலிருந்து (Chennai Archives) கோழிக்கோடு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட இந்த ஆவணங்கள், 1921ஆம் ஆண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவை. ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் பிரதிநிதியாகச் சென்ற யாக்கூப், 1921 டிசம்பர் 7 அன்று சிறைக் கண்காணிப்பாளரின் அனுமதியோடு ஆலி முஸ்லியாரைச் சந்தித்துப் பேசினார். இதுகுறித்த கட்டுரை டிசம்பர் 10இல் வெளியானது. இந்த நேர்காணலை ஒரு ‘தீவிரமான பாதுகாப்பு அத்துமீறல்’ எனக் கருதிய பிரிட்டிஷ் அரசு, இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கும் உத்தரவிட்டது.
நேர்காணலின் போது ஆலி முஸ்லியார் வெளிப்படுத்திய வார்த்தைகள், மரணத்தைக் கண்டு அஞ்சாத அவரது தீரத்தைக் காட்டுகின்றன:
“நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். விரைவில் நாங்கள் எதிர்கொள்ளப் போகும் மரண தண்டனையைப் பற்றிய எண்ணம் எங்களைச் சிதைக்கவில்லை. எங்களைப் போன்ற நிரபராதிகள் அனுபவிக்கும் இந்த வலியும் துயரமும் ஒருபோதும் வீண் போகாது என்ற சிந்தனையே எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன.”
ஏழைகள் மீதான அக்கறை
மரணத்தின் விளிம்பிலும் அவர் தன் உடைமைகளைப் பற்றிக் கவலைப்படாமல், ஏழைகளின் நலனையே முன்னிறுத்தினார்:
“திரூரங்காடி பள்ளிவாசலில் நான் ஒரு பெட்டியில் திருக்குர்ஆன் உள்ளிட்ட புனித நூல்களையும், சுமார் 350 ரூபாயையும் வைத்திருந்தேன். பள்ளிவாசலுக்குள் புகுந்த போலீஸார் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டனர். விசாரணையின் போது 17 ரூபாய் மட்டுமே உள்ள ஒரு பொட்டலத்தைக் காட்டினர். மீதிப் பணம் கிடைத்தால், அதை ஏழைகளுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.”
இறுதி வேண்டுகோள்கள்
தன்னலமற்ற அந்தத் தலைவர் சிறை அதிகாரிகளிடமும், நாட்டு மக்களிடமும் முன்வைத்த கோரிக்கைகள் நெஞ்சை உருக்குபவை:
- தோழர்களுக்கான உதவி: மத்தியச் சிறையில் தன்னுடன் வாடும் கைதிகளுக்குத் தேவையான துணிகளை வழங்க காங்கிரஸ் மற்றும் ஃகிலாஃபத் இயக்கத்தினர் முன்வர வேண்டும்.
- தகவல் பகிர்தல்: தன்னுடன் மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்ற வீரர்களின் பெயர்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும். இது அவர்களின் நிலை தெரியாமல் தவிக்கும் உறவினர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
- ஆன்மீகத் தேடல்: நபி (ஸல்) அவர்களைப் போற்றும் புகழ்பெற்ற நூலான ‘தலாயிலுல் ஃகைறாத்’ (Dala’il al-Khayrat) பிரதியைத் தமக்குத் தந்துததவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
வரலாற்றுத் திரிபுகள் மலிந்துவிட்ட காலத்தில், ஆலி முஸ்லியாரின் இந்தச் சிறைப்பக்கங்கள் அவரது தியாகத்தையும் கொள்கை உறுதியையும் பறைசாற்றும் காலக்கண்ணாடியாக அமைகின்றன.

