கட்டுறுதி கொண்டவராக இருப்பதன் முக்கியத்துவம்
![]()
“கட்டுறுதியுடன் இருங்கள்; ஏனெனில், சௌகரியம் நிலையானது அல்ல.” — உமர் இப்னுல் ஃகத்தாபு (றளி)
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள், அமெரிக்க அதிபர் தேர்தல், உலகளாவிய நிதி நெருக்கடி எனப் பல முக்கிய நிகழ்வுகளைக் கண்டது 2008ஆம் ஆண்டு. ஆனால், அதே ஆண்டில் மனித வரலாற்றில் மிக முக்கியமான, அதேசமயம் அதிகம் கவனிக்கப்படாத ஒரு மாற்றமும் நடந்தேறியிருந்தது: அதாவது, வரலாற்றிலேயே முதன்முறையாக உலக மக்கள் தொகையில் 50%க்கும் அதிகமானோர் நகரங்களில் வசிப்பவர்களாக மாறியிருந்தனர். ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான காலத்தில் ஏற்பட்ட இத்தகைய விரைவான மாற்றம் சமூகங்களுக்கு மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தியது.
குறிப்பாக, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு இது பெரியதோர் இழப்பு. ஏனெனில், அவர்கள் தங்கள் பாரம்பரிய வாழ்க்கைமுறைகளைக் கைவிட்டு நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கைமுறைக்கு மாறுவதால் அவர்களது நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றிய பண்டைய மரபுகள் பலவற்றை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.
மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்களிடையே — குறிப்பாக, பட்டம் பெற்று உயர் பதவிகளில் இருக்கும் வர்க்கத்தினரிடையே — ஆண்மை சார்ந்த மரபுகளும் வெளிப்புற நடவடிக்கைகளும் வெகுவாகக் குறைந்துவிட்டன.
மேற்கத்திய நாடுகளில் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களுக்குக் கிடைக்கும் தேவையற்ற கவனத்தால் பெண்மை, இஸ்லாத்தில் பெண்களின் நிலை ஆகியவைகுறித்த ஆங்கில இலக்கியங்கள் ஏராளமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இஸ்லாமியப் பார்வையில் ஆண்மை, ஆண்களுக்குரிய பொருத்தமான செயற்பாடுகள் ஆகியவைகுறித்த ஆக்கங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இன்ஷா அல்லாஹ், இந்தக் கட்டுரை அந்த முரண்பாட்டைச் சமன்செய்து அந்த இடைவெளியை நிரப்பவும், மறக்கப்பட்டு நெடுங்காலமாகிவிட்ட நம்முடைய வீர மரபுகளை மேற்கத்திய முஸ்லிம் பிரக்ஞையில் மீள் அறிமுகம் செய்வதற்குமான ஓர் முயற்சியாகும்.
விளையாட்டும் ஆன்மீகமும்
நாம் வாழும் இந்தச் சமூகத்தில், விளையாட்டைப் போல இவ்வளவு பரவலாக, அதே சமயம் இவ்வளவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வேறொரு நடைமுறை இருக்க முடியாது. ஏனெனில் இன்றைய சமூகத்தில், விளையாட்டு என்பது ஒழுக்க முன்னேற்றத்திற்கான ஒரு நடைமுறை என்பதிலிருந்து விலகி, வெறும் லாப நோக்கிலான தொழிலாக மாற்றப்பட்டுச் சீரழிந்துள்ளது.
உருவ வழிபாட்டின் புதிய அடையாளங்களாகத் திகழும் தற்கால விளையாட்டு வீரர்கள், தங்களை ஆராதிக்கும் ரசிகர்களின் ஆன்மாவிற்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை விளம்பரப்படுத்தி விற்பவர்களாக இருக்கிறார்கள். உடல் உழைப்பற்ற, சிற்றின்பங்களில் திளைக்கும் அந்தக் கூட்டமோ விளையாட்டு உடைகளைப் பெருமையுடன் அணிந்துகொண்டு, மைதானங்களை ரௌடித்தனத்தாலும் கீழ்த்தரமான செயல்களாலும் நிரப்புகின்றது.
இதற்கு நேர்மாறாக, இஸ்லாத்தின் உன்னத விளையாட்டு மரபுகளோ மனம், உடல், ஆன்மா அனைத்தையும் ஒருசேர வலுப்படுத்துகின்றன. இஸ்லாத்தில் விளையாட்டிற்கு உடல் ரீதியான பயனையும் தாண்டி ஓர் உயர்ந்த நோக்கம் உள்ளது. அதுதான் ‘ஃபனா’ (fana) — அதாவது மனிதன் தனது ஈகோவை அல்லது சுயத்தைப் பூஜ்யமாக்கி, தன் நாட்டங்களை அல்லாஹ்வின் நாட்டத்தோடு இணைப்பதாகும்.
நபி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட விளையாட்டுகள் ஒவ்வொன்றும் இந்த ‘ஃபனா’ நிலையை அடைய ஒரு தனித்துவமான வழியைக் கொண்டுள்ளன. திர்மிதீயில் பதிவாகியுள்ள ஒரு நபிமொழியில், “ஒரு மனிதன் தன் குதிரையைப் பழக்குவது, தன் குடும்பத்துடன் விளையாடுவது, வில் வித்தையில் ஈடுபடுவது ஆகிய மூன்றைத் தவிர மற்ற விளையாட்டுகள் வீணானவை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கால்பந்து போன்ற விளையாட்டுகள் ஏன் வன்முறைக்கும் சீரழிவிற்கும் இட்டுச் செல்கின்றன என்பதும், சுன்னத்தான விளையாட்டுகள் ஏன் இன்றும் உலகெங்கிலும் உள்ள மேன்மக்களின் விருப்பங்களாகத் திகழ்கின்றன என்பதும் தற்செயலானவையல்ல.
சுன்னத்தான விளையாட்டுகளும் அவற்றின் ஆன்மாவும்
கிறிஸ்தவம் அல்லது பௌத்தம் போன்ற துறவற மதங்களைப் போலன்றி, இஸ்லாத்தில் உடல் பலவீனத்திற்கு எந்தப் பெருமையும் இல்லை. “பலவீனமான விசுவாசியைவிடப் பலமான விசுவாசியே அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானவர், சிறந்தவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்க்கையில் பல சோதனைகளைச் சந்தித்தபோதும் நல்ல உடல் வலிமையுடன்தான் இருந்தார்கள். நவீன காலத்தில் கடின உழைப்பு இல்லாத சூழலில், உடற்பயிற்சி மூலம் உடலை வலுப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிம் ஆடவருக்கும் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
- பளு தூக்குதல்
ஜப்பானியப் புரட்சிகர மரபுவாத எழுத்தாளர் யுக்கியோ மிஷிமா, தனது ‘சூரியனும் இரும்பும்’ (Sun and Steel) என்னும் கட்டுரையில் பளு தூக்குதல் எவ்வாறு ஆன்மீக ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி எழுதியுள்ளார். உடற்பயிற்சியின்போது ஏற்படும் வலி ஒரு கட்டத்தில் ஒருவித ‘இல்லாமை’ (non-existence) (தான் என்பதை மறக்கச் செய்யும்) உணர்வாக, மாறி நம் உடல் எங்கே முடிகிறது – இரும்பு எங்கே தொடங்குகிறது என்ற எல்லையையே மங்கச் செய்து, உடலும் இரும்பும் ஒன்றாகிவிடுகின்றன என்று குறிப்பிடுகிறார். அவர் விவரித்த இந்த நிலை உண்மையில் ‘ஃபனா’ நிலைதான்; ஆனால் அதை ஒரு முறையான கருத்தாக்கமாகப் புரிந்துகொள்வதற்குத் தேவையான ‘அகீதா’ (கோட்பாடு) அவரிடம் இல்லை.
- நீச்சல்
இன்றுவரை தகுந்த மதிப்பைப் பெறாத சுன்னத்தான உடலியல் செயற்பாடுகளில் ஒன்றுதான் நீச்சல். நபி (ஸல்) அவர்கள் நீச்சலிலும், குறிப்பாக நீரில் மூச்சடக்கி மூழ்குவதிலும் (Free-diving) தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இந்தக் கலையை சிறுவயதிலேயே நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கிணறுகளில் கற்றுத் தேர்ந்திருந்தார்கள். நீருக்கடியில் நிலவும் அமைதி, புவிஈர்ப்பு விசையற்ற உணர்வு ஆகியவை மனிதனை ஒரு சூன்யநிலைக்குக் கொண்டுசென்று, ஒருவிதப் பாரமற்ற நிலையை உணரச் செய்கிறது. மேற்பரப்பின் புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு, நீருக்கடியில் நிலவும் அந்த அமைதியான தனிமை, ஒருவித ‘எடையற்ற’ உணர்வை வழங்குகிறது. இது மனிதனின் அகந்தையைப் பூஜ்ஜியமாக்கி அவனைப் பண்படுத்த உதவுகிறது.
இன்று Static Apnea (ஒரே இடத்தில் மூச்சடக்கி இருத்தல்) துறையில் மனித உடலின் திறனை அதன் எல்லைவரை கொண்டுசெல்லும் விளையாட்டு வீரர்கள், இதன் பயன்கள் குறித்த இதேபோன்றதொரு உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.
- மல்யுத்தம் (Wrestling):
ஒவ்வொரு பாவமும் ஒரு காலத்தில் இயற்கையாகவும் தூய்மையாகவும் இருந்த ஒன்றிலிருந்தே உருவாகின்றன. அதுபோலவே இயல்பான ஆசைகளுக்கும் அனுமதிக்கப்பட்ட, போற்றத்தக்கப் பயன்பாடுகள் உள்ளன. நவீனத் தொழில்நுட்பம் மனிதனின் உழைப்பை இயந்திரமயமாக்கியதால், ஆண்களுக்கே உரிய ஆக்ரோஷ உணர்வு இன்று மழுங்கடிக்கப்பட்டுள்ளது (இன்றைய காலகட்டத்தில் சில நேரங்களில் அது தவறான முறையிலும் வெளிப்படுத்தப்படுகிறது).
இத்தகைய ஆக்ரோஷ உணர்வை மல்யுத்தம், தற்காப்புக் கலைகள் (Combat sports) ஆகியவற்றின் மூலம் நல்லமுறையில் கட்டுக்கோப்புடன் மேம்படுத்த முடியும். பண்டைய நாகரிகங்கள் சந்தித்த உடனடிப் போர் அச்சுறுத்தல்கள் இல்லாத இன்றைய சூழலில், ஒருவிதப் போர்த் தயார்நிலையைப் (Martial preparedness) பேணும் வகையில் தற்காப்புக் கலைகள் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய அங்கங்களாக மாற வேண்டும்.
வீர விளையாட்டுகளில் மல்யுத்தம் (Wrestling) முதன்மையானதாக இருக்க வேண்டும், ஏனெனில் நபி (ஸல்) அவர்களே மல்யுத்தம் புரியக்கூடியவர்களாக அறியப்பட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இணைவைப்பாளர்களில் நிகரற்ற மல்யுத்த வீரரான ருகானா இப்னு அப்தி யஸீது, நபித்துவத்திற்கான சான்றுகளைக் கோரினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ருகானாவை மல்யுத்தப் போட்டிக்கு அழைத்தார்.
பிரம்மாண்டமான உடலமைப்பைக் கொண்ட ருகானா அதற்கு ஒப்புக்கொண்டார், ஆனால், அடுத்த கணமே அவர் தரையில் வீழ்த்தப்பட்டார். இப்போட்டி மேலும் இருமுறை தொடர்ந்தது; தன்னைக் காட்டிலும் அதிக எடையுள்ள எதிராளியை நபி (ஸல்) அவர்கள் மீண்டும் எளிதாகத் தோற்கடித்தார்கள். இது ருகானாவை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிரேக்கத் தீவுகள் முதல் கொரியத் தீபகற்பம்வரை, உலகெங்கிலும் உள்ள தற்காப்புக் கலைகளின் ஒட்டுமொத்த ஒழுக்கமும் தவிர்க்க முடியாமல் ஏதோவொரு தத்துவத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.
சீன-அமெரிக்கத் தற்காப்புக் கலை நட்சத்திரம் புரூஸ் லீ, தற்காப்புக் கலை பயில்பவர்களுக்கு “நீரைப் போல இருங்கள்” (Be like water) என்று அறிவுறுத்தினார். அதன் அர்த்தத்தை அவர் பின்னர் விளக்குகையில், “உணர்ச்சிகள் அல்லது உணர்வுகள் அற்றவராக இருப்பதல்ல; மாறாக, உணர்வுகள் எதிலும் ஒட்டிக்கொள்ளாமலும் அல்லது முடங்கிவிடாமலும் இருப்பதே அதன் பொருள்” என்றார். உலக விவகாரங்களில் முற்றிலும் துறவறம் பூண்டு ஈடுபாடற்று இருப்பதற்குப் பதிலாக, துன்யாவிலிருந்து (இவ்வுலகம்) ஓர் அளவான பற்றற்ற நிலையைக் கொண்டிருப்பது என்னும் கோட்பாடு இஸ்லாமியப் பாரம்பரியத்துடன் மிக நெருங்கி ஒத்துப்போகிறது.
நபி (ஸல்) அவர்கள் சொகுசற்ற பாய் ஒன்றின் மீது படுத்திருந்தார்கள். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்துவிட்டது. அதுகுறித்து ஸஹாபாக்களிடம், “எனக்கும் இந்த உலகிற்கும் என்ன தொடர்பு? நானும் இந்த உலகமும் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுக்கத் தங்கிவிட்டு, பின்னர் அதைக் கடந்துசெல்லும் ஒரு பயணியைப் போன்றவர்கள்” என்று கூறினார்கள்.
தாவோயிசம் அல்லது புத்த மதத்தால் ஈர்க்கப்பட்ட தற்காப்புக் கலைகளில் அந்நிய மதக் கூறுகள் இருப்பதால், அவற்றுக்குப் பதிலாக இந்தோனேசியாவின் ‘சிலாட்’ (Silat) போன்ற இஸ்லாமிய நிலங்களிலிருந்து உருவான தற்காப்புக் கலைகளுக்கு முஸ்லிம்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏனெனில் அவை இஸ்லாமியத் தத்துவங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளன. அதேபோல, குத்துச்சண்டை (Boxing) போன்ற உடலுக்குத் தீங்கிழைக்கும் விளையாட்டுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் மற்போரில் முகத்தில் அடிப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
- குதிரையேற்றம்:
குதிரையேற்றக் கலையில் தேர்ச்சிபெறுவது தீனில் (மார்க்கத்தில்) மிகவும் போற்றப்படும் அம்சங்களில் ஒன்றாகும். குதிரைகள் அல்லாஹ்வின் படைப்புகளில் ஓர் உன்னதமான முன்மாதிரிகளாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாள்வரை குதிரைகளின் நெற்றியில் நன்மைகள் பிணைக்கப்பட்டுள்ளன.”
அனைத்து சுன்னத்தான விளையாட்டுகளைப் போலவே, குதிரையேற்றக் கலையிலும் வெளிப்படையாகத் தெரிவதைவிட ஆழமான அர்த்தங்கள் உள்ளன. ஒரு குதிரையைச் செலுத்த, அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றான அந்த விலங்குடன் அசைக்க முடியாத ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். குதிரையேற்றத்தின்போது, குதிரையும் அதில் பயணிப்பவரும் ஓர் பொதுவான நோக்கத்திற்காக ஒன்றிணைந்த ஒரே சக்தியாகச் செயற்பட வேண்டும். இத்தகைய தேர்ச்சிக்குப் பொறுமை, சலனமற்ற தன்மை, அமைதி ஆகிய பண்புகள் அவசியம்.
கடந்த நூற்றாண்டின் எந்தத் தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும் கொரில்லாப் போர்முறையில் குதிரையின் தேவையை இன்னும் ஒழிக்க முடியவில்லை என்பதால், ராணுவத் தயார்நிலையை மேம்படுத்துவதற்கும் குதிரையேற்றப் பயிற்சி அவசியமாகிறது. இதனால்தான், குதிரையேற்றம் என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், பயனுள்ள மூன்று செயற்பாடுகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களே குதிரைப் பந்தயங்களை ஏற்பாடுசெய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்தை குதிரையேற்றத்தையும் வில்வித்தையையும் மேற்கொள்ளுமாறு ஆர்வமூட்டினார்கள். இருப்பினும், குதிரையேற்றத்தைவிட அம்பு எய்வதே அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
- வில்வித்தை
திருக்குர்ஆனிலும் சுன்னாவிலும் வில்வித்தையைப் போலப் புகழப்பட்ட உடலியல் செயற்பாடு அல்லது விளையாட்டு வேறொன்றுமில்லை. மார்க்கத்தில் வில்வித்தை பெற்றுள்ள உன்னதமான இடத்தை விவரிப்பது கடினம். திருக்குர்ஆனின் வசனமான, “அவர்களுக்கு (எதிரிகளுக்கு) எதிராக உங்களால் முடிந்த அளவு வலிமையைத் திரட்டித் தயாராகுங்கள்” என்பதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, நபி (ஸல்) அவர்கள் “வலிமை என்பது வில்வித்தையில்தான் உள்ளது” என்று மூன்று முறை கூறினார்கள்.
ஓர் அம்பின் மூலம் அல்லாஹ் மூன்று பேரைச் சொர்க்கத்தில் நுழைவிக்கிறான்:
- நன்மையை நாடி அந்த அம்பை உருவாக்கியவர்;
- அதை எய்பவர்;
- அம்புகளை எடுத்து வீரரிடம் கொடுப்பவர்.
போர்க்கருவி என்ற அதன் அவசியத்தைத் தாண்டி, வில்வித்தை என்பது மற்ற சுன்னத்தான விளையாட்டுகளின் நற்பண்புகளை ஒன்றிணைத்து, ‘ஃபனா’ (தன்னிலை அழிந்த நிலை) என்னும் ஆன்மீக நிலையை அடைவதற்கான மிகச்சிறந்த வழியாகத் திகழ்கிறது. ஸஹாபாக்கள் வில்வித்தைப் பயிற்சியில் அயராது ஈடுபட்டார்கள்; பல மணிநேரம் அம்புகளை எய்து தங்கள் இலக்குகளைத் துல்லியமாக்கினார்கள். இந்தத் தொடர்ச்சியான இயக்கம் அவர்களின் உடலையும் மனதையும் ஒருவித ஆத்மார்த்தமான நிலைக்குக் கொண்டுசென்றது.
ஸஹாபாக்கள் ஒரு மைதானத்தின் இரு முனைகளிலும் இலக்குகளை வைத்திருப்பார்கள், ஒரு முனையிலிருந்து அம்பு எய்த பிறகு, அந்த அம்பைச் சேகரிக்கச் செல்லும்போதே அடுத்த அம்பை எய்வார்கள். அந்த இரண்டு இலக்குகளுக்கு இடைப்பட்ட பகுதி சக்திவாய்ந்த ஆன்மீகத் தன்மை கொண்டதாகக் கருதப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் இரண்டு இலக்குகளுக்கு இடையே நடக்கிறாரோ, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவருக்கு நன்மை உண்டு.” இரண்டு இலக்குகளுக்கு இடையே நடப்பது என்பது சொர்க்கத்தின் நடுவில் இருப்பதைப் போன்றது; இது ஒரு பள்ளிவாசலுக்குச் செல்வதைவிடவும் மேலான நன்மையாகக் கருதப்படுகிறது.
நமது நவீன யுகத்தில், இன்பங்கள் மலிந்துகிடக்கின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் இடைவிடாத வேடிக்கைகளாலும் கேளிக்கைகளாலும் நிரப்பப்பட வேண்டும் என்ற அவலநிலை உள்ளது. மின்னணுச் சாதனங்களின் ஒருவித ஒளியால் நம் இரவுகள் எப்போதும் வெளிச்சமாகவே இருக்கின்றன. நாம் அனைவரும் ஒருவித ‘டோபமைன்’ (dopamine) அடிமைகளாக மாற்றப்பட்டுள்ளோம். அடுத்தடுத்த கவனச்சிதறல்களுக்காக நாம் ஓயாமல் செயற்படுகிறோம். இதன் விளைவாக, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம்மை உள்ளுக்குள் ஒருவித வெறுமை உணர்வோடு விட்டுவிடுகின்றன; எங்கும் துயரமும் ஏமாற்றமுமே மிஞ்சுகிறது.
நம்மை வாட்டும் இந்த ‘மின்னணு மன அழுத்தத்திற்கு’ (e-depression) ஒரு சிறந்த மருந்து, மீண்டும் உடல் வலிமைக்கும் சுன்னத்தான வீரச் செயற்பாடுகளுக்கும் திரும்புவதே ஆகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் யாருக்கேனும் மன அழுத்தம் ஏற்பட்டால், அவர் தனது வில்லை ஏந்தட்டும்; அதன் மூலம் அவரது மன அழுத்தம் குறையும்.” நவீன காலத்தின் நச்சுகளுக்கு மருந்து தேடுபவர்கள், இந்த வழியைப் பின்பற்றி வில்வித்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம்
தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வது அல்லது சட்டத்திற்கு உட்பட்டு ஆயுதங்களை வைத்திருப்பது என்பது எந்தவொரு முஸ்லிமுக்கும் மிகவும் போற்றத்தக்க ஒரு செயலாகும். நபி (ஸல்) அவர்கள் மரணப்படுக்கையில் இருந்தபோது, ஒரு கழுதை, தர்மத்திற்காக (ஸதகா) ஒதுக்கப்பட்ட ஒரு நிலம், தன்னுடைய ஆயுதங்கள் ஆகியவற்றைத் தவிர வேறெதையும் விட்டுச் செல்லவில்லை. ஆரம்பக்கால ஃகிலாஃபத்தில் வாள்களும் வில்களும் ஆயுதங்களாக இருந்தன; இன்று தனிநபர் ஆயுதங்களின் நவீன வடிவம் துப்பாக்கிகளாகும். வில்வித்தையில் சொல்லப்பட்ட சில பலன்களை துப்பாக்கிச் சுடும் பயிற்சியிலும் (Gun range) பெற முடியும்; குறிப்பாக, குறிதவறாமல் சுடும் திறனை (Marksmanship) இதில் வளர்த்துக்கொள்ளலாம். உமர் இப்னுல் ஃகத்தாபு (றளி) அவர்கள், முஸ்லிம்கள் தங்கள் மகன்களுக்கு குறிபார்த்து அம்பு எய்வதைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
போருக்காகத் தயாராக இருப்பதற்கு ஆயுதங்களைக் கையாளும் அறிவு ஒட்டுமொத்த உம்மத்திற்கும் அவசியமானது. தற்போது முறையான ஜிஹாதை அறிவிக்கக்கூடிய ஒரு ஃகிலாஃபத் இல்லாதபோதிலும், முஸ்லிம்கள் தாங்கள் எங்கிருந்தாலும் தற்காப்புக் கலைகளை தலைமுறை தலைமுறையாகக் கடத்த வேண்டும்; இல்லையெனில் நமது பாரம்பரியத்திலிருந்து அவை மறைந்துவிடும். மேலும், தமது உயிரையும், குடும்பத்தையும், சமூகத்தையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு ஆயுதங்கள் வைத்திருப்பது அவசியமாகிறது. வன்முறை எந்த நேரத்திலும் வெடிக்கலாம்; ஓர் ஆண் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். ஆயுதம் ஏந்தும் உரிமையின் முக்கியத்துவத்தைக் கருதி, ஃகிலாஃபத் காலத்தில் அந்த உரிமை விசுவாசிகளுக்கு (முஃமின்களுக்கு) மட்டுமே வழங்கப்பட்டது. அமெரிக்கா போன்ற துப்பாக்கி உரிமம் தாராளமாக வழங்கப்படக்கூடிய நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள், தங்களையும் தங்கள் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- வேட்டையாடுதல்: ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் கலை
கலாச்சாரங்கள், மதங்கள், காலங்கள் அனைத்தையும் கடந்து உலகளவில் மதிக்கப்படும் ஒரு செயல் வேட்டையாடுதல். வேட்டையாடுதல் என்பது உணவிற்காக மட்டுமல்லாமல், ஒருவரின் ஆன்மாவின் ஆழத்தைத் தொடும் ஒரு விஷயமாகும். நன்னோக்கமுள்ள வேட்டையாடுதலைக் குர்ஆன் அங்கீகரிக்கிறது: “…ஹலாலானவை, நல்ல பொருட்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேட்டையாடும் மிருகங்களையும் பறவைகளையும் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக்கொடுத்ததைக் கொண்டு நீங்கள் பழக்கியிருந்தால், அவை உங்களுக்காகப் பிடிப்பதிலிருந்து உண்ணுங்கள்; அதன்மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.” (திருக்குர்ஆன் 5:4).
இறைச்சி என்பது அமைதி நிறைந்த காட்டிலிருந்து பெறப்படாமல், சூப்பர் மார்க்கெட்களின் குளிர்சாதனப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பொட்டலமாக விற்கப்படும் இந்த நவீன காலத்தில், ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேட்டையாடுதல் இன்னும் அவசியமாகிறது. ஒரு விவசாயியைப் போலவே ஒரு வேட்டைக்காரனும் ‘ரிஸ்க்’ (Rizq – இறைவனின் புறத்திலிருந்து வரும் வாழ்வாதாரம்), ‘தவக்குல்’ (Tawakkul – இறைவனைச் சார்ந்திருத்தல்) ஆகியவற்றின் தத்துவத்தை நன்கு உணர்ந்திருப்பான். ஒரு மனிதனின் வாழ்வாதாரம் என்பது ஒருபோதும் உறுதியானது அல்ல. அல்லாஹ்வின் ஆணை மட்டுமே வெற்றிகரமான வேட்டையைத் தீர்மானிக்கிறது. அதனால்தான், எவ்வளவு திறமையான வேட்டைக்காரராக இருந்தாலும் சில நேரங்களில் குறி தப்புகிறது; அதேபோல், எவ்வளவு திறமையற்றவராக இருந்தாலும் சில நேரங்களில் வேட்டை வெற்றிகரமாக அமைகிறது.
ஸ்பானிய மெய்யியலாளர் ஹோசே ஒர்டேகா யிகாசே, ‘வேட்டையாடுதல் குறித்த சிந்தனைகள்’ (Meditations on Hunting) என்ற தனது ஆய்வுக் கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்: “வேட்டையாடுதல் என்பது மனிதனின் மேலாதிக்க உணர்வைக் கட்டுப்படுத்தும் ஓர் உணர்வுப்பூர்வமான, ஏறக்குறைய ஒரு மத ரீதியான பணிவினைக் கோருகிறது… மேலும், அது மனிதனைத் திட்டமிட்டு அச்சுறுத்தக்கூடிய ஒரு மர்மத்தில் மூழ்கடிக்கிறது. எனவே இது இயற்கையின் விதிகளில் உள்ள தெய்வீகமான, இயல்கடந்த (Transcendent) விஷயங்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு மதச் சடங்கு போன்ற உணர்வைக் கொண்டுள்ளது.”
வேட்டையாடுதல் என்பது இயல்பாகவே ஒரு தனிமையான செயற்பாடு. வனாந்தரத்தில் தனது வேட்டை நாய் அல்லது வேட்டைப் பறவையுடன் மட்டும் தனியாக இருக்கும் ஒரு வேட்டைக்காரன், அந்தச் சூழலால் இயல்பாகவே ‘ஸப்ரு’ (பொறுமை), சகிப்புத்தன்மையைப் பெறுகிறான். தனது இரையின் எல்லைக்குள் நுழையும்போது, அவன் நவீன நாகரிகத்தின் போலித்தனமான உலகை விட்டுவிட்டு, தனது இருப்பு என்பது முற்றிலும் அல்லாஹ்வின் கருணையில் மட்டுமே தங்கியுள்ளது என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்கிறான். அங்கு ஒரு சிறு குச்சி உடையும் சத்தம்கூட அவனுடைய அனைத்து நம்பிக்கைகளையும் கனவுகளையும் தகர்த்துவிடும். இஸ்லாமிய வேட்டை முறையில், ஒரு வேட்டைக்காரன் ‘பிஸ்மில்லாஹ்’ (இறைவனின் திருப்பெயரால்…) என்று கூறித் தனது வில்லையோ துப்பாக்கியையோ இயக்கும்போது, அந்த இலக்கை அடைய அல்லாஹ்வின்மீது அவன் வைக்கும் நம்பிக்கை (தவக்குல்) ஒரு முழுமையைப் பெறுகிறது.
வேட்டை வெற்றியடையும் பட்சத்தில், வீழ்ந்துகிடக்கும் தனது இரையின் உடலை நேருக்கு நேர் சந்தித்து, ஓர் உயிரின் இழப்பிற்காக வேட்டைக்காரன் அடையும் அந்தச் சோகமான வருத்தத்தை ஒர்டேகா, “மனசாட்சியின் ஆழத்தில் ஏற்படும் ஒருவித அமைதியற்ற நிலை“ என்று குறிப்பிடுகிறார். இந்த உணர்வு இறுதியாக மனிதனை வலுப்படுத்துவதோடு அவனது அனுபவத்தையும் விரிவுபடுத்துகிறது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை, இது அல்லாஹ்வுடைய விதியின் (Decree) தவிர்க்க முடியாத தன்மையையும், நமது இந்த உலக வாழ்வின் முடிவையும் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. மலடான, உயிரற்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் உணவிற்கும் அதன் மூலத்திற்கும் இடையிலான தொடர்பை நவீன உலகம் துண்டித்துவிட்டது. இதன் மூலம் அது மரணம்குறித்த நினைவிலிருந்து நம்மைத் திசைதிருப்பிவிடுகிறது. வேட்டையாடுதலின் போது என்ன நடக்கும், என்ன உணவு கிடைக்கும் என்பது தெரியாத ஒரு நிச்சயமற்ற நிலையை ஏற்றுக்கொள்வதில் தொடங்கி, வெற்றி அல்லது தோல்வி என்னும் இறுதி உண்மையை (Final certainty) ஏற்றுக்கொள்வதில் முடிகிறது.
நவீனத்துவமும் கைத்தொழில்களின் வீழ்ச்சியும்
நமது வாழ்வின் யதார்த்தங்களிலிருந்து நம்மைப் பிரிப்பதற்கான நவீனத்துவத்தின் தீவிரமான விருப்பம், இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் கைத்தொழில்கள் நலிவடைந்து கிடப்பதில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு நூற்றாண்டுக் காலத்திற்கு முன்புவரை, மனிதன் தனது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்துப் பொதுவான உபகரணங்களில் ஏற்படும் சிறிய பழுதுகளின் பின்னணியையும் விளக்கத் தெரிந்தவனாக இருந்தான். அவற்றை அவனே உருவாக்கவில்லை என்றாலும், அவற்றை உருவாக்கிய உள்ளூர்க் கைவினைஞருடன் அவன் நல்லுறவில் இருந்திருப்பான்; மேலும் அவற்றைப் பழுதுபார்க்கும் அடிப்படைத் திறனையும் அவன் பெற்றிருப்பான்.
ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்தும் மனிதனை அவனுடைய வாழ்வாதாரக் கருவிகளிலிருந்து அந்நியப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகின்றன. நம் அன்றாட வாழ்வின் பல தேவைகளை எங்கோ பல மைல்கள் தொலைவில் உள்ள முகம் தெரியாத இயந்திரங்களிடம் ஒப்படைத்துவிட்டோம். நம் கார்களை ஓடச் செய்வது எது, குளிரூட்டிகளை வேலை செய்ய வைப்பது எது என்பது நமக்கே தெரிவதில்லை. இன்று வசதி படைத்த இளம் முஸ்லிம்களுக்குப் பரிந்துரைக்கப்படும் முக்கிய வேலைவாய்ப்புகள் அனைத்தும் பட்டம் தேவைப்படும் ‘அறிவுசார் வேலைகளாகவே’ (White-collar jobs) உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது கைத்தொழில்கள் ஏதோ அற்பமானவையாகவும் தாழ்ந்தவையாகவும் பார்க்கப்படுகின்றன. ஆனால் ஏன்?
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உடலுழைப்பைப் போற்றி இவ்வாறு கூறினார்கள்: “ஒரு மனிதன் தனது உடல் உழைப்பால் உழைத்து உண்ணும் உணவைவிடச் சிறந்த உணவு வேறெதுவும் இல்லை.” நபி தாவூது (அலை) அவர்கள் தனது உடலுழைப்பின் மூலம் கிடைத்த வருமானத்திலிருந்து மட்டுமே உண்டார்கள். ஒரு கைவினைஞருக்கு அவரது வேலையில் உதவுவது என்பது, ஓர் அடிமையை விடுவிப்பதற்கு அடுத்தபடியாக ஒரு முஸ்லிம் செய்யக்கூடிய மிகச்சிறந்த நற்செயல்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
தன்னை ஒரு ‘மெய்யியலாளர்-மெக்கானிக்’ என்று அழைத்துக்கொள்ளும் மேத்யூ பி. கிராஃபோர்டு, தனது Shop Class as Soulcraft என்ற புத்தகத்தில், நவீனக் கல்வி கற்ற மனிதன் கைத்தொழில்களின்மீது காட்டும் வெறுப்பிற்கு அவனது தாழ்வு மனப்பான்மையே காரணம் என்று விளக்குகிறார்: “அந்தத் தொழிலாளி அழுக்கானவராகவோ நாகரிகமற்றவராகவோ இருப்பது அல்ல பிரச்சினை; மாறாக, அவர் நமது சுயபுரிதலுக்கு ஓர் சவாலாக இருக்கிறார். நாம் நினைப்பதுபோல நாம் சுதந்திரமானவர்களோ அல்லது யாரையும் சாராதவர்களோ அல்லர் என்பதை அவர் நினைவூட்டுகிறார்.”
இன்று அறிவுசார் சிந்தனை கொண்ட பல முஸ்லிம்களும், மேற்கத்திய நாகரிகம் உருவாக்கியுள்ள தனிமனிதவாதத்தையும் (Individualism) அதனால் ஏற்பட்ட சமூகச் சீரழிவையும் சரியாகவே கண்டிக்கிறார்கள். ஆனால், அதே வேளையில் தனிமனிதத் தற்சார்பையும் (Self-reliance) அவர்கள் தவறுதலாகப் புறக்கணித்துவிடுகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களோ அரசோ தரும் வசதிகளைச் சார்ந்து வாழ்வதைவிட, தன் சொந்தக் கைகளால் வேலை செய்வது, அதாவது கிராஃபோர்டின் மொழியில் சொல்வதானால், “உங்கள் பொருட்களுக்கு நீங்களே எஜமானராக இருப்பது” என்பது மிகவும் போற்றத்தக்கத் திறமையாகும். நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில், முஸ்லிம்கள் கைத்தொழில்களைச் சமூகத்தில் உயர்ந்த இடத்திற்குத் தூக்கிநிறுத்த வேண்டும். குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் வேலை செய்பவர்களாக இருந்தாலும், பழுது பார்க்கும் கருவிகளைக் கையாள்வதிலும், ‘சுயமாகச் செய்தல்’ (Do-it-yourself) என்னும் வாழ்க்கைமுறையிலும் ஆர்வம் காட்டுவது அவசியம்.
மனித வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இன்றைய நவீன மேற்கத்திய உலகில் வசதிகள் மலிந்துகிடக்கின்றன. நம் முன்னோர்கள் கனவில்கூடக் கண்டிருக்க முடியாத ஆடம்பரங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. தங்கம் பூசப்பட்ட கார்கள் அல்லது வைரம் பதிக்கப்பட்ட கடிகாரங்களை மட்டுமே நாம் ஆடம்பரம் என்று நினைக்கிறோம். ஆனால், உண்மையில் இவை நம் அனைவரையும் தொற்றியுள்ள ஒரு பொதுவான நோயின் உச்சகட்டங்கள் மட்டுமே.
மெத்தென்ற தலையணைகள், பளபளக்கும் தரைத்தளங்கள், விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் தட்பவெப்பநிலை கொண்ட வீடுகள் என இந்த வசதிகளின் கொடுங்கோன்மைக்கு நாம் ஏன் அடிபணிய வேண்டும்? இன்றைய நவீன முஸ்லிம்களின் லட்சியங்கள் ‘டெத் வேலி’ (Death Valley – கரடுமுரடான நிலம்) போன்ற சவால்களை வெல்வதைவிட, ‘சிலிக்கான் வேலி’ (Silicon Valley – தொழில்நுட்ப உலகம்) போன்ற சொகுசு உலகைக் கைப்பற்றுவதிலேயே உள்ளன. இது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சொகுசு வாழ்க்கை உடலைக் கொழுக்க செய்யலாம், ஆனால் அது ஆன்மாவை வாடச் செய்கிறது. அன்றாட வாழ்விலிருந்து அனைத்துச் சிரமங்களையும் நீக்க வேண்டும் என்ற நவீன மோகம் ஆன்மாவிற்கு எதிரானது. உண்மையான உணர்ச்சிகள் இங்கு வாடிப் போகின்றன. அதற்குப் பதிலாக, மிகைப்படுத்தப்பட்ட போலி உணர்ச்சிகளே மிஞ்சுகின்றன. நாம் இப்போது உண்மையான மகிழ்ச்சியை உணர்வதில்லை, மாறாக ஒருவிதப் போதையை உணர்கிறோம். சோகத்திற்குப் பதில் பெரும் துயரத்தையும், கோபத்திற்குப் பதில் கண்மூடித்தனமான ஆத்திரத்தையும், தனிமைக்குப் பதில் அலுப்பையும் உணர்கிறோம்.
ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘ஜான் தி சாவேஜ்’ என்ற கதாபாத்திரம் ஆவேசமாகக் கூறியதுபோல: “எனக்கு சொகுசு வேண்டாம். எனக்கு இறைவன் வேண்டும், கவிதை வேண்டும், உண்மையான ஆபத்து வேண்டும், சுதந்திரம் வேண்டும், நற்குணங்கள் வேண்டும்.”
கட்டுறுதியானவராக இருங்கள்!
இயற்கையைத் தழுவிக்கொள்ளுங்கள்; அல்லாஹ் படைத்தவற்றின் ஊடே பயணம் செய்து அவனது மகத்துவத்தைக் கண்டு வியப்படையுங்கள்; நவீன உலகின் அர்த்தமற்ற வேடிக்கைகளிலிருந்து விலகியிருங்கள். நாம் வலியைத் தேட வேண்டியதில்லை; ஆனால், இந்தத் தற்காலிக உலக வாழ்வின் அற்பத்தன்மையை உணர்த்தும் ஒரு நினைவூட்டலாக ‘சிரமங்களை’ (Discomforts) ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்.
உமர் இப்னுல் ஃகத்தாபு (றளி) கூறினார்கள்: “…குதிரைக் கடிவாளத்தின் காலடிகளைத் தூக்கியெறிந்துவிட்டு உங்கள் குதிரைகள் மீது தாவி ஏறுங்கள். கரடுமுரடான ஆடைகளை அணியுங்கள், வில்வித்தை பழகுங்கள், ஆடம்பரங்களையும் அந்நியர்களின் உடைகளையும் தவிருங்கள், பட்டுத் துணிகளை எச்சரிக்கையுடன் அணுகுங்கள்.”
சுருக்கமாகச் சொன்னால்: “கட்டுறுதியானவராக இருங்கள். சவால்கள் நிறைந்த துணிச்சலான வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்.”
— லுக்மான் குல்லியம் (தமிழில்: ரியாஸ் மொய்தீன்)
(மூலம்: The Importance of Being Rugged)
பின்குறிப்பு:
இந்தக் கட்டுரை மேற்கத்திய அமெரிக்கச் சூழலைத் தழுவி எழுதப்பட்டிருந்தாலும் உலகமயமாக்கப்பட்ட காலத்தில் இந்தியா போன்ற நாடுகளில் மேற்கத்தியக் கலாசாரத்தைப் பின்பற்றும் போக்கு தீவிரமடைந்திருக்கும் நிலையில், இக்கட்டுரை கூறும் கருத்துகள் இங்கும் பொருந்தக் கூடியவையே. நம் தமிழகச் சூழலில் பெரும்பாலானவர்கள் ‘அறிவுசார்’ (White-collar) வேலைகளையே தேர்வுசெய்யும் நிலையில், உடல் உழைப்பைக் கோரும் ‘Blue-collar’ வேலைகளுக்கான ஆள்-பற்றாக்குறை காரணமாக வடக்கிலிருந்து வரும் பணியாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இக்கட்டுரை கைத்தொழில்களை ஊக்குவித்தாலும், அறிவுசார் தொழில்களைச் செய்யக்கூடாது எனக் கூறவில்லை. மாறாக, அத்துறைகளால் மனிதத் தன்மையிலும் ஆண்மைக் குணத்திலும் ஏற்பட்டுள்ள ஆன்ம ரீதியான வீழ்ச்சிகளை அடையாளப்படுத்துகிறது.

