கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் முஸ்லிம்கள்

Loading

SIR எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் முற்றிலும் குளறுபடிகள் நிறைந்தவையாகவும், முறையான திட்டமிடலின்றி மேற்கொள்ளப்படுபவையாகவும், சட்டப்பூர்வ நியாயங்கள் அற்றவையாகவும் உள்ளன என்பது தெளிவாகிறது. முக்கியமான அரசியலமைப்பு விவகாரங்களில் நீதியை வழங்குவதைத் தவிர்க்கும் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையைப் புரிந்துகொள்வதற்கு இந்த SIR நடவடிக்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. நடைமுறையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், “இந்திய அரசியலமைப்புக் கட்டமைப்பில் நாடாளுமன்றம் முழுமையாகவே நிர்வாகத் துறைக்கு கீழ்ப்பட்டுள்ளது” என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளன.

2026 மே 27 அன்று Association for Democratic Reforms v. Election Commission of India வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் நிர்வாகத் துறையிடமிருந்து கொண்டிருந்த சுதந்திரம் குறைந்துவிட்டதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தீர்ப்பின் மொழிநடை வேறுவிதமாக இருந்தாலும், அது ‘வாக்காளர்’ என்பதையும் ‘குடிமகன்’ என்பதையும் ஒன்றாகக் கருதும் நிலைக்குச் செல்கிறது. இது, Lal Babu Hussein v. Electoral Registration Officer (1995) வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்னர் எடுத்திருந்த நிலைப்பாட்டிலிருந்து விலகுவதாகும். அந்தத் தீர்ப்பில், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை மொத்தமாக நீக்குவதை நியாயப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களைக் கையாள்வதில் உச்ச நீதிமன்றம் காட்டும் அணுகுமுறையும், அரசாங்கத்தின் அதிகார அத்துமீறலான எதிர்வினையும் இந்தப் பிரச்சினைக்கு மேலும் ஒரு பரிமாணத்தைச் சேர்க்கின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையரை அரசாங்கம் பாதுகாக்கிறது என்றும், உச்ச நீதிமன்றம் அதற்கு ஆதரவாக நிற்கிறது என்றும் அரசியல் ரீதியான வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தின் முழுப் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள இந்த வாதம் மட்டும் போதுமானதல்ல. SIR நடவடிக்கையில் மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்குப் பின்னால் உள்ள தர்க்கம் என்ன, அதன் மூலம் எத்தகைய நோக்கங்கள் உத்தேசிக்கப்படுகின்றன, உச்ச நீதிமன்றம் தொடர்ந்து பின்பற்றிவரும் ‘தேர்ந்தெடுத்த நீதி’ (Strategic Justice) அணுகுமுறை எத்தகையது என்பவற்றை விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

குடியுரிமையுடன் கொண்டுள்ள தொடர்பு

வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் சில முரண்பாடுகளுக்கு நிர்வாக அமைப்பின் தோல்விகள், முறையற்ற திட்டமிடல், பொறுப்புக்கூறலில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றை காரணமாகக் கூறலாம். ஆனால், இவற்றில் பெரும்பாலானவை வேறொரு நோக்கத்திலிருந்து உருவாகியிருப்பதாகத் தெரிகிறது. அதாவது, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படும் சட்டவிரோதக் குடியேறிகளிடமிருந்து நாட்டின் மக்கள்தொகையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற பெயரில் மக்களை விலக்குவதே அந்த நோக்கமாகும்.

குடியுரிமைக்கும் வாக்காளர் பட்டியல்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைப் புரிந்துகொள்ள, வரலாற்றை நிகழ்காலத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இதன் தீவிரத்தை உணர்த்தும் இரண்டு நிகழ்வுகள் உள்ளன.

முதலாவதாக, 1957ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் பாகிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்த இந்துக்கள் இந்தியக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்களை வாக்காளர் பட்டியலில் விரைவாகச் சேர்க்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதே சலுகை முஸ்லிம் குடியேறிகளுக்கு வழங்கப்படவில்லை.

இரண்டாவதாக, 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் 2003, 2019ஆம் ஆண்டுகளில் முறையே வாஜ்பாய் மற்றும் மோடி அரசுகளின் ஆட்சிக்காலங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இத்திருத்தங்கள், “முஸ்லிம் குடிமக்களை இழிவுபடுத்தி விலக்குகின்றன. அனைவருக்கும் சமமான குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பின் இலட்சியத்தைக் கைவிட்டு, இந்து ராஷ்டிரத்தில் குடியுரிமையைப் படிநிலைகளாகப் பிரிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இலட்சியத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றன” என்று நிரஜா ஜெயல் சுட்டிக்காட்டுகிறார்.

SIR நடவடிக்கை என்பது, 2003ஆம் ஆண்டு திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) மற்றும் குடிமக்களின் தேசியப் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்குப் பதிலாக முன்னெடுக்கப்படும் மறைமுக நடவடிக்கையே தவிர வேறொன்றுமல்ல. SIR தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், NRC தயாரிக்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு 2026 செப்டம்பர் 29 அன்று மீண்டும் வலியுறுத்தியிருப்பது, ஜெயலின் கருத்துகளுக்கு மேலும் வலுசேர்க்கிறது.

மூன்றாவது கவலைக்குரிய அம்சமும் உள்ளது. அது, வாக்காளர் பட்டியல்களையும் குடிமக்களுக்கான உரிமைகளை அனுபவிப்பதையும் ஒன்றுடன் ஒன்று இணைப்பதாகும். வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட நபர்களுக்கு கடவுச்சீட்டு வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. SIR நடவடிக்கை வாக்காளர் பட்டியல் தொடர்பான நோக்கங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது என்றும், “குடியுரிமை குறித்த கேள்வியில் இறுதியான முடிவாக இதைக் கருத முடியாது” என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தபோதிலும் இத்தகைய மறுப்புகள் நிகழ்ந்துள்ளன.

கடவுச்சீட்டு என்பது பயண ஆவணம் மட்டுமே என்று வகைப்படுத்துவது சரியல்ல. அவ்வாறே கருதினாலும், அதை வழங்க மறுப்பதோ, பெறுவதற்கான அணுகலைத் தடுப்பதோ குடியுரிமை உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும்.

முஸ்லிம்களை அச்சுறுத்தலாகச் சித்தரித்தல்

முஸ்லிம்கள் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்ற வாதம், கோல்வால்கரின் Bunch of Thoughts நூல் முதன்முதலில் வெளியிடப்பட்ட 1966ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் இவ்வாறு வாதிட்டார்:

“உலகின் பல நாடுகளின் வரலாறு நமக்குக் கற்றுத்தரும் துயரமான பாடம் என்னவென்றால், நாட்டுக்குள் இருக்கும் பகைமை சக்திகள், வெளிநாடுகளிலிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களைவிடத் தேசியப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றன.” (1996 பதிப்பு, பக். 177)

2025 ஜூன் 24 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பீகாரில் SIR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகச் சட்டவிரோதக் குடியேற்றத்தை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது. 2025 அக்டோபர் 30 அன்று நாலந்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதே வாதத்தை முன்வைத்தார். ஆனால், பீகாரில் SIR நடவடிக்கை 2025 செப்டம்பர் 30 அன்று நிறைவடைந்தபோது, சட்டவிரோதக் குடியேறிகள் குறித்த எந்தப் புள்ளிவிவரத்தையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இன்றுவரையிலும் சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனுடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வாக, பிரதமர் 2025 ஆகஸ்ட் 15 அன்று வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, ‘உயர்நிலை மக்கள்தொகையியல் ஆய்வு இயக்கம்’ (High Powered Demographic Mission) அமைப்பதற்கு ஒன்றிய அமைச்சரவை 2025 செப்டம்பர் 11 அன்று ஒப்புதல் வழங்கியது. இதற்கான அறிவிப்பு 2026 மே 26 அன்று வெளியிடப்பட்டது.

இன்னும் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்காத இந்த உயர்நிலைக் குழுவுக்கு, “சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் பிற அசாதாரணக் காரணங்களால் ஏற்படும் மக்கள்தொகை மாற்றங்களை ஆய்வு செய்து, அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது” என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து உறுப்பினர்களில் டாக்டர் ஷமிகா ரவி மட்டுமே கல்வித்துறையை சார்ந்தவர். இவர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், இந்தக் குழுவில் மக்கள்தொகையியல் ஆய்வாளர் (Demographer) எவரும் இடம்பெறவில்லை.

டாக்டர் ரவி முன்னர் மேற்கொண்ட ஓர் ஆய்வில், 1950 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இந்துக்களின் மக்கள்தொகைப் பங்கு குறைந்ததாகவும், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் ஆகியோரின் மக்கள்தொகைப் பங்கு அதிகரித்ததாகவும் வாதிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின்படி, இந்துக்களின் மக்கள்தொகைப் பங்கு 84.68 சதவீதத்திலிருந்து 78.06 சதவீதமாக, அதாவது, 7.82 சதவீதம் குறைந்துள்ளது. அதேவேளையில், முஸ்லிம்களின் மக்கள்தொகைப் பங்கு 43.15 சதவீதம் அதிகரித்து, 9.84 சதவீதத்திலிருந்து 14.09 சதவீதமாக உயர்ந்துள்ளது (பக். 37).

“இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், சிறப்பாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றனர்” என்ற வாதத்துக்கு இந்த ஆய்வு வலுசேர்ப்பதாகக் கூறப்படுகிறது. இது முன்னேற்றத்தை உள்ளடக்கிய சமூக அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது (பக். 41).

ஆனால், டாக்டர் ரவியின் இந்தக் கூற்றுகள் அவர் பயன்படுத்திய ஆய்வுமுறையின் அடிப்படையிலும், அதிலிருந்து பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.

1950 அல்லது 2015ஆம் ஆண்டுகளில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மொத்த மக்கள்தொகை எவ்வளவு என்பதை இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இதுபோன்ற அடிப்படைத் தரவுகள் இல்லாமல் சரியான முடிவுகளைப் பெற முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

இந்துக்களின் மக்கள்தொகைப் பங்கு 7.82 சதவீதம் குறைந்ததாகக் கூறப்படும் வாதமும் 1951 முதல் 2011 வரையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளுடன் முரண்படுகிறது. அந்தத் தரவுகளின்படி, இந்துக்களின் மக்கள்தொகைப் பங்கு 4.3 சதவீதமே குறைந்துள்ளது.

அதேபோல், முஸ்லிம்கள் போன்ற நீண்டகாலமாக நாட்டில் வாழ்ந்துவரும் மக்களின் சமூகப் பொருளாதார நிலையே சிறுபான்மையினரின் உரிமைகள் எந்த அளவுக்கு நாட்டில் பாதுகாக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் அளவுகோலாக இருக்க வேண்டும். அவர்களின் மக்கள்தொகை வளர்ச்சியை மட்டும் அதற்கான அளவுகோலாகக் கொள்ள முடியாது.

அண்மையில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகின்றன.

மக்கள்தொகையியல் குழு, SIR தரவுகளை அணுகுவதற்கு அரசு நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பாக, “நாட்டில் ஏற்கெனவே வசித்துவரும் சட்டவிரோதக் குடியேறிகளைச் சட்டப்படி, நியாயமான முறையில், காலக்கெடுவுக்குள் அடையாளம் காணுதல், தடுப்புக் காவலில் வைத்தல், நாடு கடத்துதல் ஆகியவற்றுக்கான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நிரந்தரச் செயல்முறையைப் பரிந்துரைப்பது” இந்தக் குழுவின் பொறுப்பாகும்.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்திருந்த நிலையில், மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வது தொடர்பாக டாக்டர் ரவி 2026 ஜூன் மாதத்தில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

‘மத அடிப்படையிலான மக்கள்தொகையியல் ஆய்வு’ என்பதற்கும் ‘தொகுதி மறுவரையறை முன்மொழிவு’ என்பதற்கும் இடையிலான தொடர்பு, குறிப்பாக இந்த இரு நடவடிக்கைகளிலும் ஒரே நபர் செல்வாக்குச் செலுத்துவதாகத் தோன்றுவது, மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லிம்கள் விலக்கப்படுதல்

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முந்தைய பல நிகழ்வுகளிலும், வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான காரணமாகச் “சட்டவிரோதக் குடியேறிகளின், குறிப்பாக முஸ்லிம்களின் இருப்பு” சுட்டிக்காட்டப்பட்டதாக அனுபமா ராய் குறிப்பிடுகிறார்.

உண்மையில், லால் பாபு ஹுசைன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, “குடியுரிமை தொடர்பான அளவுக்கு மீறிய விசாரணைகளிலிருந்து, குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக அமைந்த விசாரணைகளிலிருந்து, முறையான வாக்காளர்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறை உத்தரவாதங்களை” வகுத்தளிக்க வேண்டிய கட்டாயம் நீதிமன்றத்துக்கு ஏற்பட்டதன் விளைவாகும் (பக். 179).

மேற்கு வங்கத்தின் பாலிகஞ்சில் முஸ்லிம்கள் மக்கள்தொகையில் 50 சதவீதமாக உள்ளனர். அங்கு ‘தர்க்கரீதியான முரண்பாடுகள்’ என வகைப்படுத்தப்பட்ட வழக்குகளில் முஸ்லிம்களின் பங்கு 77.5 சதவீதமாக இருப்பதாக சபார் நிறுவனம் (Sabar Institute) தெரிவிக்கிறது.

மேற்கு வங்கத்தின் பபானிபூரில் முஸ்லிம்கள் மக்கள்தொகையில் 20 சதவீதமாக உள்ளனர். ஆனால், தர்க்கரீதியான முரண்பாடுகள் கொண்ட வழக்குகளில் அவர்களின் பங்கு 51.8 சதவீதமாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் விசாரணை மற்றும் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ள 27 லட்சம் வழக்குகளில் 70 சதவீத வழக்குகள் முஸ்லிம்களைச் சார்ந்தவை. ஆனால், மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் அவர்களின் பங்கு 27 சதவீதம் மட்டுமே.

ஹைதராபாத்தில் மொத்தம் 19.41 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் முஸ்லிம்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள விகிதம் 40.67 சதவீதமாக உள்ளது.

அதேபோல், தெலுங்கானாவில் தர்க்கரீதியான முரண்பாடுகள் தொடர்பாக வழங்கப்பட்ட அறிவிப்புகளில், காரணங்கள் குறிப்பிடப்படாத பிரிவில் 25.1 சதவீதம் முஸ்லிம்களின் பெயர்களைக் கொண்டிருந்தன. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தெலுங்கானாவின் மக்கள்தொகையில் முஸ்லிம்களின் பங்கு 12.7 சதவீதம் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தி இந்து நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, டெல்லியின் வரைவு வாக்காளர் பட்டியலில் முஸ்லிம்கள் 13.6 சதவீதமாக உள்ளனர். ஆனால், ‘தர்க்கரீதியான முரண்பாடுகள்’ இருப்பதாகக் குறிக்கப்பட்ட வாக்காளர்களில் அவர்களின் பங்கு 20.3 சதவீதமாக உள்ளது.

படிவம் 7 மூலம் முஸ்லிம்கள் விலக்கப்படுதல்

தற்போது நடைபெற்று வரும் SIR நடவடிக்கை தொடர்பான செய்திகள், முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரும் படிவம் 7 (Form 7) ஆட்சேபனைகள், SIR நடைபெறும் குறைந்தது 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. அஸ்ஸாமில் தனியாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போதும் இத்தகைய ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான நிகழ்வுகளில், படிவம் 7-ஐத் தாக்கல் செய்தவர்கள் பாஜக உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள் அல்லது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆவர். குறிப்பிடத்தக்க வகையில், சில படிவங்கள் முன்கூட்டியே அச்சிடப்பட்டிருந்தன. அவற்றில் கையொப்பமிட்டதாகக் குறிப்பிடப்பட்ட நபர்கள் தாங்கள் கையொப்பமிடவே இல்லை என்று மறுத்த நிலையிலும் அவர்களது பெயரில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அஸ்ஸாம்

அஸ்ஸாமில் பெறப்பட்ட ஏறத்தாழ 13 லட்சம் படிவம் 7 விண்ணப்பங்களில் சுமார் 82 சதவீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இறந்துவிட்ட அல்லது வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை வழக்கமான நடைமுறையின்படி நீக்கியதும் இந்த எண்ணிக்கையில் அடங்கும்.

2026 ஜனவரி 27 அன்று முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, நான்கு முதல் ஐந்து லட்சம் ‘மியா’ வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்றும், அவர்களைத் துன்புறுத்துவதே தனது வேலை என்றும் கூறினார். “எங்கு முடியுமோ அங்கெல்லாம் படிவம் 7-ஐ நிரப்புங்கள்” என்று பாஜக உறுப்பினர்களிடம் தாம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது வெளிநாட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான புகார்களைத் தாக்கல் செய்ததாகவும் அவர் கூறினார். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, கட்சியினர் அளித்த புகார்களின் அடிப்படையிலேயே பெயர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பீகார்

ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில், அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களிடமிருந்து பெறப்பட்ட 2.5 லட்சம் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளில் வெறும் 144 விண்ணப்பங்களை மட்டுமே முறையாகத் தாக்கல் செய்திருந்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அவற்றில் 16 விண்ணப்பங்களை பாஜக முகவர்கள் தாக்கல் செய்திருந்தனர். அனைத்தும் வாக்காளர் பெயர்களை நீக்கக் கோரியவையாகும்.

இந்த முறையான ஆட்சேபனைகளுக்கு அப்பால், 2025 ஆகஸ்ட் மாதத்தில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் டாக்கா தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட உதவியாளரும், பாஜக வாக்குச்சாவடி நிலை முகவருமான ஒருவர், தொகுதியின் வாக்காளர் பட்டியலிலிருந்து 78,000க்கும் அதிகமான பெயர்களை நீக்குமாறு தேர்தல் பதிவு அதிகாரியிடம் மனு அளித்தார்.

இது அந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்களில் சுமார் 40 சதவீதமாகும். செய்தியாளர்களின் ஆய்வில், அந்தப் பெயர்களில் கிட்டத்தட்ட அனைத்தும் முஸ்லிம்களுடையவை என்பது தெரியவந்தது. பாஜக மாநிலத் தலைமையகத்தின் கடிதத் தாளில் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும், அதே வாக்காளர்கள் குடிமக்கள் அல்லாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தனர்.

சத்தீஸ்கர்

2026 ஜனவரியில் கபீர்தாம் மாவட்டத்தில், ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரின் பெயர்களை நீக்கக் கோரி ஒரே விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன. விண்ணப்பதாரராகக் குறிப்பிடப்பட்ட நபர், தாம் அந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யவில்லை என்று மறுத்ததை தொடர்ந்து, துணை வட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

பிப்ரவரியில், கரியாபந்த் மாவட்டத்திலும் அம்பிகாபூரிலும் பல நூறு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வாக்காளர்களுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் போலியான படிவம் 7 ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதுகுறித்து அதிகாரபூர்வமான பதில் எதுவும் வெளியிடப்பட்டதாகத் தகவல் இல்லை.

டெல்லி

2026 செப்டம்பரில், அதிகாரபூர்வ ஆட்சேபனைப் பட்டியல்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாஜக வாக்குச்சாவடி நிலை முகவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேந்தர் சந்தோலியாவின் மகனுமான சித்ரேஷ் சந்தோலியா, இரண்டு நாட்களில் 35 ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்திருந்தது தெரியவந்தது.

வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஒரு நாளில் அதிகபட்சம் பத்து ஆட்சேபனைகளை மட்டுமே தாக்கல் செய்யலாம் என்ற வரம்பை இது மீறிய போதும், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் அந்த வரம்பை நடைமுறைப்படுத்தாமல், விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டது.

குஜராத்

முஸ்லிம் வாக்காளர்களுக்கு எதிராகப் பெருமளவில் படிவம் 7 சோம்நாத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டது. 2022 தேர்தலில் காங்கிரஸ் வெறும் 922 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது.

2026 ஜனவரியில், ஏறத்தாழ 300 நபர்கள், ஒவ்வொருவரும் குறைந்தது 50 படிவங்களைத் தாக்கல் செய்து, 15,000க்கும் அதிகமான வாக்காளர்களுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.

ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்தவர்களில் உள்ளூர் பாஜக மகளிர் அணித் தலைவரும், வெராவல் மற்றும் படான் பகுதிகளைச் சேர்ந்த பாஜக நகர்மன்ற உறுப்பினர்களும் அடங்குவர். இவர்களில் ஆறு பேர் பின்னர் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்து, தங்களுக்குத் தெரியாமலேயே தங்களது பெயர்கள், தொலைபேசி எண்கள், வாக்காளர் அடையாள அட்டை எண்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட்

2026 செப்டம்பர் 3 அன்று, கோத்தா மாவட்டத்தில் ஒரே வாக்குச்சாவடியைச் சேர்ந்த, பெரும்பாலும் முஸ்லிம், வாக்காளர்களுக்கு எதிராகப் பெருமளவில் படிவம் 7 ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்த பாஜக வாக்குச்சாவடி நிலை முகவர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோத்தா மாவட்டத்தின் பிற வாக்குச்சாவடிகளில், பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த முன்கூட்டியே நிரப்பப்பட்ட படிவங்களை அதிகாரிகள் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவை பாஜக அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டதாக முகவர்கள் கூறினர்.

அனைத்துப் பத்திகளும் ஏற்கெனவே நிரப்பப்பட்ட படிவங்களை கட்சி தன்னிடம் வழங்கியதாக ஒரு பாஜக முகவர் தெரிவித்தார். இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. முகவர்கள் பெருமளவில் படிவங்களைத் தாக்கல் செய்யலாம் என்றும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அவற்றை நிராகரிக்க முடியாது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி முன்னர் கூறியிருந்தார்.

கர்வா மாவட்டத்தில், ஒரே நபரிடமிருந்து முன்கூட்டியே நிரப்பப்பட்ட படிவம் 7 விண்ணப்பங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா

விஜயபுரா மாவட்டத்தில் மட்டும் சுமார் 13,000 முஸ்லிம் வாக்காளர்கள் குறிவைக்கப்பட்டதாக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் குற்றஞ்சாட்டினார்.

செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை, பெருமளவில் படிவம் 7 தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக வாக்காளர்கள் மற்றும் கட்சி முகவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் ஆறு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்தனர்.

அவற்றில் நான்கு புகார்களில் பாஜக உறுப்பினர்கள் பெயரிடப்பட்டிருந்தனர். அவர்களில் பெலகாவி வடக்குத் தொகுதியில் 2023ஆம் ஆண்டு பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவரும் ஒருவர். அந்தத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்களைக் குறிவைத்து ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

பல்லாரியில், குறிவைக்கப்பட்ட வாக்காளர்களில் கிட்டத்தட்ட அனைவரும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று புகார்தாரர் குற்றஞ்சாட்டினார்.

பாபலேஷ்வர் பகுதியில் ஒரே நாளில் பெறப்பட்ட ஆட்சேபனைகளில் பெரும்பாலானவற்றை பத்து பேர் தாக்கல் செய்திருந்தனர் என்பதும், அவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம் வாக்காளர்களுக்கு எதிரானவை என்பதும் ஆய்வில் தெரியவந்தது.

கொப்பா பகுதியில், குறிவைக்கப்பட்ட வாக்காளர்கள் அனைவரும் முஸ்லிம்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த ஆட்சேபனைகள் பொதுவெளிக்கு வந்த பிறகு பாஜக தாலுகா நிர்வாகி ஒருவர் அவற்றைத் திரும்பப் பெற்றார்.

கேரளா

காசர்கோடு மாவட்டத்தின் மஞ்சேஸ்வரத்தில், பாஜக மாவட்டச் செயலாளர் எஸ். லோகேஷ் நோண்டா, முஸ்லிம் தினக்கூலித் தொழிலாளியான கே. முகமதுவை “இந்தியக் குடிமகன் அல்ல” என்று குறிப்பிட்டு படிவம் 7 ஒன்றைத் தாக்கல் செய்தார்.

மேலும், ஆறு முஸ்லிம் பெண்கள் நிரந்தரமாக வேறு இடத்துக்கு குடிபெயர்ந்துவிட்டதாகக் கூறி அவர்களுக்கு எதிராகவும் அவர் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்தார். பிப்ரவரி 13 அன்று நடைபெற்ற விசாரணையில் தேர்தல் பதிவு அதிகாரி அவை அனைத்தையும் நிராகரித்தார்.

மஞ்சேஸ்வரத்தில் சுமார் 5,000 ‘குடியிருப்பில் இல்லாத’ வாக்காளர்களை பாஜக அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராகப் படிவம் 7 தாக்கல் செய்யுமாறு வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் நோண்டா கூறினார்.

குடியுரிமை குறித்த பதிவு, இணையவழிப் பதிவேற்றத்தின்போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழை என்று பாஜக மாவட்டத் தலைவர் விளக்கமளித்தார். அதேவேளையில், படிவம் 7-ஐ “விரிவான அளவில்” தொடர்ந்து பயன்படுத்தப்போவதாகவும் அவர் கூறினார்.

மத்திய பிரதேசம்

2026 பிப்ரவரிக்குள், இந்தூரின் எட்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் 11,000க்கும் அதிகமான படிவம் 7 ஆட்சேபனைகள் இணையவழியில் பதிவேற்றப்பட்டிருந்தன. நேரடியாகத் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அப்போது இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. அவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம் வாக்காளர்களுக்கு எதிரானவை என்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் உள்ளூர் நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

போபாலில் சுமார் 9,000 ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் சில, விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று மறுத்த குடியிருப்பாளர்களின் பெயர்களில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டத் தேர்தல் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ரேவாவில் பல கிராமங்களில் முஸ்லிம் வாக்காளர்களுக்கு எதிராகப் படிவம் 7 ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டதாகக் குடியிருப்பாளர்கள் குற்றஞ்சாட்டினர். தங்களது பெயர்களில் படிவங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று இரண்டு பேர் மறுத்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சிங்ரௌலியில், SIR, வங்கிக் கணக்கு அல்லது அரசின் வீட்டுவசதித் திட்டம் தொடர்பான படிவங்கள் என்று கூறி, பாஜக வாக்குச்சாவடி நிலை முகவர் ஒருவர் முஸ்லிம் வாக்காளர்களிடமிருந்து படிவம் 7-இல் கைரேகைகளைப் பெற்றதாகத் துணை வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

ஒடிசா

பத்ரக் மாவட்டத்தின் தாம்நகரில், பத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செப்டம்பர் 4 அன்று காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

உள்ளூர் உதவித் தேர்தல் பதிவு அதிகாரி தங்களது உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான படிவம் 7 விண்ணப்பங்களைப் பதிவேற்றியதாகவும், கள ஆய்வு செய்து அவற்றைச் சரிபார்க்க விரும்பிய அலுவலர்களை மிரட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். குறிவைக்கப்பட்ட பெயர்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையவை என்று கூறப்பட்டது.

பத்ரக் நகரில் குறைந்தது பத்து வாக்குச்சாவடிகளில் முஸ்லிம்களின் பெயர்களுக்கு எதிராக மட்டுமே முன்கூட்டியே அச்சிடப்பட்ட படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றைத் தாக்கல் செய்தவர்களில் இருவர் பாஜக முகவர்கள். குறிவைக்கப்பட்ட வாக்காளர்கள் உண்மையானவர்கள் என்று ஒரு வாக்குச்சாவடி நிலை அலுவலர் நடத்திய சரிபார்ப்பில் தெரியவந்தது.

மாநிலம் முழுவதும் முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த வாக்காளர்களுக்கு எதிராகப் படிவம் 7 தவறாகப் பயன்படுத்தப்படுவதாக பிஜு ஜனதா தளம் குற்றஞ்சாட்டியது.

ராஜஸ்தான்

2023 தேர்தலில் பாஜக வெறும் 974 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெய்ப்பூரின் ஹவா மஹால் தொகுதியில், தனது வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களில் சுமார் 40 சதவீதத்தினருக்கு எதிரான ஆட்சேபனைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனவரி மாதத்தில் தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக ஒரு வாக்குச்சாவடி நிலை அலுவலர் தெரிவித்தார்.

குறைந்தது 200 வாக்காளர்களுக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்ததை ஒரு பாஜக முகவர் ஒப்புக்கொண்டார். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்று பாஜக நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அந்த அலுவலர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்று உள்ளூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டினார்.

ஊரக அல்வார் பகுதியில், பெரும்பாலும் முஸ்லிம் வாக்காளர்களுக்கு எதிராக, பாஜக வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பெயர்களில் ஆயிரக்கணக்கான படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் பலவற்றில் தங்களது கையொப்பங்கள் போலியாக இடப்பட்டதாக முகவர்கள் கூறினர்.

தெலங்கானா

அக்டோபர் 7 அன்று, முஷீராபாத்தில் பாஜக வாக்குச்சாவடி முகவர் ஒருவருக்கு எதிராக ஹைதராபாத் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். அந்த முகவர், ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக முன்கூட்டியே அச்சிடப்பட்ட 30 படிவம் 7 விண்ணப்பங்களைத் தாக்கல் செய்திருந்தார். கள ஆய்வில், அனைவரும் தங்களது பதிவு செய்யப்பட்ட முகவரிகளிலேயே வசித்து வருவது உறுதி செய்யப்பட்டது.

கோஷாமஹாலில், ஒரே வாக்குச்சாவடியில் முஸ்லிம் வாக்காளர்களுக்கு எதிராக பாஜக ஆதரவாளர் ஒருவர் நூற்றுக்கும் அதிகமான முன்கூட்டியே அச்சிடப்பட்ட ஆட்சேபனைப் படிவங்களைத் தாக்கல் செய்ததாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அஸாதுதீன் ஒவைசி குற்றஞ்சாட்டினார்.

முஷீராபாத், பகதூர்புரா, கோஷாமஹால் ஆகிய பகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களுக்கு எதிராகப் பெருமளவில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, போலியான அறிவிப்புகளை அளித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அக்டோபர் 5 அன்று தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்யவும், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கவும் ஹைதராபாத் காவல் ஆணையரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

உத்தர பிரதேசம்

பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, அதுவரை தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனைகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு, சம்பந்தப்பட்ட வாக்காளர்களைத் தவிர வேறு நபர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2025 டிசம்பர் 14 அன்று, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள போலியான பெயர்களுக்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்புமாறு பாஜக தொண்டர்களிடம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

2026 பிப்ரவரியில், ஷாம்லி மாவட்டத்தின் லௌஹாரிபூர் கிராமத்தில் உள்ள வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு எதிராக முன்கூட்டியே அச்சிடப்பட்ட படிவம் 7 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த வாக்காளர்கள் அனைவரும் முஸ்லிம்கள். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பதாரரால் தாக்கல் செய்யப்பட்டவை என்பது தெரியவந்தது. அந்தப் படிவங்கள் “அனைத்தும் போலியானவை” என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆனால், விண்ணப்பதாரரிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

சந்தௌலி மாவட்டத்தில் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. விண்ணப்பதாரர்களாகக் குறிப்பிடப்பட்டவர்கள், தாங்கள் அவற்றைத் தாக்கல் செய்யவில்லை என்று மறுத்தனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் அந்தப் படிவங்களை நிராகரித்தனர்.

மீரட் மாவட்டத்தில், பெரும்பாலும் முஸ்லிம் வாக்காளர்களுக்கு எதிராக ஒரே நபர் தாக்கல் செய்திருந்த ஆட்சேபனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

சோன்பத்ராவில், முஸ்லிம் குடியிருப்பாளர்களுக்கு எதிரான ஆட்சேபனைகளை பாஜக முகவர் ஒருவர் தன்னிடம் வழங்கியதாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் தெரிவித்தார். அவர் மேற்கொண்ட சரிபார்ப்பில், சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதும், தங்களது முகவரிகளில் வசிப்பதும் தெரியவந்தது.

அமேதியில், ஒரே வாக்குச்சாவடியில் 150க்கும் அதிகமான வாக்காளர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பல ஆட்சேபனைகளில் கையொப்பமிட்டதை ஒரு பாஜக தொண்டர் ஒப்புக்கொண்டார். அந்த வாக்காளர்கள் அனைவரும் முஸ்லிம்கள்.

உத்தர்கண்ட்

உத்தர்கண்ட் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் தகவலின்படி, சுமார் 1.7 லட்சம் படிவம் 7 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து, 95,000க்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதியற்றவர்கள் எனக் குறிக்கப்பட்டனர். அவற்றில் சுமார் 20,000 ஆட்சேபனைகள் போலியானவை என்று கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

உதம் சிங் நகர் மாவட்டத்தில், பாஜகவுடன் தொடர்புடைய ஐந்து பேர் ஐந்து தொகுதிகளில் சுமார் 6,500 ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்தனர். இங்கும் முஸ்லிம்களை குறிவைத்தே ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தின் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களில் சுமார் 5.5 லட்சம் பெயர்கள் படிவம் 7 ஆட்சேபனைகள் மூலம் நீக்கப்பட்டதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இந்த எண்ணிக்கையில் வழக்கமான நடைமுறையின்படி மேற்கொள்ளப்பட்ட நீக்கங்களும் அடங்கும்.

மாநிலத்தில் பெருமளவிலான ஆட்சேபனைகள் தொடர்பாகத் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், ஒரே நபர் எத்தனை படிவம் 7 விண்ணப்பங்களை வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் ஜனவரி மாதத்தில் தெளிவுபடுத்தியது.

பிப்ரவரியில் செய்தியாளர்கள் நடத்திய ஆய்வில், ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்தவர்களாகக் குறிப்பிடப்பட்ட பலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதும், சிலர் தாங்கள் அந்தப் படிவங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று மறுத்ததும் தெரியவந்தது.

அலிபுர்துவாரில் ஆய்வு செய்யப்பட்ட ஒரு பட்டியலில், கிட்டத்தட்ட பாதி வாக்காளர்களுக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றமும் முஸ்லிம்களுக்கான சட்ட விதிவிலக்கும்

SIR நடவடிக்கையிலிருந்து முஸ்லிம்கள் விலக்கப்படுவது, உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத் தர்க்கத்தின் மூலம் நியாயப்படுத்தப்படுகிறது. 1995ஆம் ஆண்டின் லால் பாபு ஹுசைன் வழக்கில், சிறுபான்மையினரைக் குறிப்பாக முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகப் பெருமளவில் பெயர்களை நீக்குவது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், 2026ஆம் ஆண்டின் Association for Democratic Reforms வழக்கில், முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் SIR நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது.

சட்ட முன்னுதாரணக் கோட்பாட்டை (Doctrine of Precedent) புறக்கணித்ததன் மூலம், நீதித்துறையின் அணுகுமுறையில் முற்றிலும் தலைகீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு தீர்ப்புகளையும் சட்டக் கோட்பாட்டு அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது தெளிவாகிறது.

எனினும், தீர்ப்புகளை ஆழமாக வாசிக்கும்போது, எந்தத் தீர்ப்பைத் தனக்குக் கட்டுப்படுத்தும் முன்னுதாரணமாகக் கருத வேண்டும், எதைப் புறக்கணிக்கலாம் என்பதைத் தேர்ந்தெடுத்தே நீதிமன்றம் தான் விரும்பிய முடிவை எட்டியுள்ளது என்பது புலப்படுகிறது.

அரசியலமைப்பு சார்ந்த விவகாரங்களில் சட்ட முன்னுதாரணங்கள் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுவதும் சட்டத்தின் தர்க்கத்தையே மாற்றுவதற்காக முஸ்லிம் அடையாளம் பயன்படுத்தப்படுவதும்  கவலைக்குரியதாகும்.

சிறுபான்மையினருக்குப் பொருந்தும்போது சட்டத்தை வேறுவிதமாகப் பொருள்கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதையும் இது வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக, சட்டத்தின் பொதுவிதிக்கு விதிவிலக்காகக் கருதப்பட வேண்டியது எது, அவ்வாறு கருதப்படக் கூடாதது எது என்ற புரிதலும் மேலும் நீர்த்துப்போகிறது.

தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள், நாட்டின் அரசியல் சூழலையே மறுசீரமைக்க வல்லவை. உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையையும் அவை மாற்றியமைக்கக்கூடும்.

ஆனால், இவற்றில் எதுவுமே தற்போது வெளிப்படையாக அரங்கேறிவரும் சட்டரீதியான ‘முஸ்லிம் விதிவிலக்கு’ நிலையைச் சரிசெய்யாது. இந்தக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு, முஸ்லிம்கள் பொதுவெளியில் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் ஈடுபடுவது மட்டுமே ஒருவேளை உதவக்கூடும்.

ஆனால், அதற்கு நாட்டின் பெரும்பான்மையான குடிமக்களும் முஸ்லிம்களைப் பொதுவெளிக்கு வரவேற்கும் திறந்த மனப்பான்மையை வெளிப்படுத்த வேண்டும். அதேவேளையில், முஸ்லிம்களும் பொதுவிவாதங்களிலும் அரசியல் பங்கேற்பிலும் ஈடுபட விரும்ப வேண்டும்.

அத்தகைய நிலை உருவாகும் வரை, அயோத்தி விவகாரத்தில் உருவாக்கப்பட்ட சட்டத் தர்க்கத்தைப் போலவே, SIR விவகாரத்திலும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆதரவுடன் நியாயப்படுத்தல்கள் தொடர்ந்து முன்வைக்கப்படும் என்றே தோன்றுகிறது.

நிஜாமுதீன் அஹமது சித்தீக்கி

தமிழில்: அ. செய்யது அலீ

Reference: https://maktoobmedia.com/post?id=116719&slug=sir-and-forms-of-muslim-exclusion

Related posts

Leave a Comment