கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘ஆன்டி இண்டியன்’ படத்தின் அரசியல் என்ன?

Loading

திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை இளமாறனின் ஆன்டி இண்டியன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. ஒரு சினிமா விமர்சகராக அவர் தனக்கென ஒரு பாணியையும், ரசிகர் வட்டத்தையும் கொண்டவர். அவர் இயக்கிய முதல் படம் என்பதாலும், படத்தின் பெயர் இங்குள்ள சங்கிகளை கலாய்க்கும் தொனியில் இருப்பதாலும் பல தரப்பினரிடமும் அதிக எதிர்பார்ப்பை அது ஏற்படுத்தியது. குறிப்பாக, சங்கி எதிர்ப்பு வட்டாரங்களில்.

ஆனால், திரைப்படத்தின் தலைப்புக்கும், படத்தின் கதைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. படம் சுவாரஸ்யம் அளிக்காததுடன், அரசியல் தெளிவுடனும் அது எடுக்கப்படவில்லை என்பதை பார்வையாளர்கள் எளிதில் உணர முடியும். யூடியூப்பில் சினிமா விமர்சகர்கள் பலர் அதைக் கொண்டாடும் தொனியில் பேசியது உள்ளபடியே வியப்பளிக்கிறது. ஆன்டி இண்டியனின் தொடக்க காட்சியில் ஒரு புறாக் கதை சொல்லப்படும். கோவில், மசூதி, சர்ச் என எங்கு புறாக்கள் சென்று வந்தாலும் அது புறாவாகவே அறியப்படுகிறது. ஆனால், மனிதன் இவற்றுக்குள் போய் வரும்போது மதம் எனும் அம்சம் அவனைப் பீடித்துவிடுகிறது என்கிற ரீதியில் அந்தக் கதையைச் சொல்வார் மாறன். அதன்மூலம் மதம் கடந்த மனிதநேயம் என்ற மேம்போக்கான வாதத்தை அவர் முன்வைப்பார்.

ஆன்டி இண்டியனின் ஆரம்பக் காட்சிகளைப் பார்க்கும்போது, நாத்திகர்களைத் தவிர அனைத்து மதத்தினரையும் சம அளவில் பகடி செய்யும் விதமாகப் படமெடுத்திருக்கிறார்கள் போலும் என்றுதான் எண்ணத் தோன்றியது. எனினும், கதை நகர ஆரம்பித்த மாத்திரத்தில் இந்த எண்ணம் வேகவேகமாகக் குறையத் தொடங்கிவிட்டது. சாமானிய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுடன் சங்கிகள் சமப்படுத்தப்படுகிறார்கள்; படத்தில் இந்துச் சமூகத்துக்கு எந்தப் பாத்திரமும் இல்லை.

சுவர் ஓவியரான பாட்சாவைக் (இளமாறன்) கொன்றுவிடுகிறார்கள். அவரை இஸ்லாமிய முறைப்படி குளிப்பாட்டி அடக்கம் செய்ய பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்கிறார்கள். அங்கே அவரைப் புதைக்க இடம் தர மறுக்கிறார்கள் முஸ்லிம்கள். காரணம், இப்றாஹீம் எனும் முஸ்லிம் தந்தையின் மகனாக பாட்சா இருந்தாலும், அவரின் அம்மா சரோஜா ஓர் இந்துவாக இருக்கிறார். அது மட்டுமின்றி பாட்சா கத்னா (circumcision) கூட செய்யவில்லை என்பது காரணமாகச் சொல்லப்படுகிறது. இதுவே பிரச்னையின் தொடக்கம். சரோஜாவின் தம்பியான ஏழுமலை ஒரு சங்கி. படத்தில் அவனொரு அப்பாவியாகவும் முரடனாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். பாட்சாவை பள்ளிவாசலில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும்போது அவனும் பிரச்னை ஏதும் செய்யாமல் அங்கே போகிறான். அங்கே முஸ்லிம்கள் தகராறு செய்யவே அவன் தன் மாமா பாட்சாவை இந்து மயானத்துக்குக் கொண்டு செல்கிறான். அங்கே பாட்சாவை முஸ்லிம் என்று கூறி அடக்கம் செய்ய மறுக்கிறார்கள். அதில் சட்ட சிக்கல் இருப்பதாக விளக்கம் சொல்லப்படுகிறது. இங்கே இந்துக்களோ சங்கிகளோ அவரை அடக்கம் செய்ய எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது மனங்கொள்ளத்தக்கது.

இந்து, முஸ்லிம் என்றெல்லாம் ஏசு பாகுபடுத்திப் பார்க்க மாட்டார் என்று கூறி பாட்சாவை நாங்கள் அடக்கம் செய்கிறோம் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள். ஏழுமலை ஆட்சேபிக்கிறான். அவனை ராஜா எனும் சங்கி உசுப்பேற்றிவிடவே அது கைகலப்புக்கு இட்டுச் செல்கிறது. ஒருகட்டத்தில் பிணத்தை யார் அடக்கம் செய்வது என்பதில் போட்டி ஏற்படுகிறது. இந்த விவகாரத்தை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலனுக்காகக் கையிலெடுத்து, ஒரு கலவரத்தையும் ஏற்படுத்திவிடுகிறார்கள். அதில் 13 அப்பாவிகள் உயிரிழக்கிறார்கள். படத்தில் மு.க. ஸ்டாலின் போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரால்தான் அந்தக் கலவரம் நடப்பதாக நினைவு. படத்தின் க்ளைமேக்ஸ் என்னவென்றால், பாட்சா எனும் அந்தப் பிணத்துக்கு கத்னா செய்துவிட்டு மசூதியில் அடக்கம் செய்வதுதான்! இப்படி கத்னாவிலிருந்து தொடங்கிய கதை கத்னாவிலேயே முடிகிறது. கடைசிக் காட்சியில் ஒரு பெண் இப்படிப் புலம்புவார், “இதை முன்னாடியே பண்ணியிருந்தா 13 உசுரு பிழைத்திருக்குமே” என்று.

திரைப்படத்தில் இன்னும் பல அபத்தங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆன்டி இண்டியன் படத்துக்கு ஆன்டி முஸ்லிம் என்ற டைட்டில் பொருத்தமானது. ஏன் இந்த யோசனை படக்குழுவினருக்கு வரவே இல்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது.

முஸ்லிம்கள் – சங்கிகள் – கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இடையிலான சிக்கலும் முறுகலும்தான் ஆன்டி இண்டியன் படத்தின் மையக்கரு. படத்தின் தொடக்கம் முதலே முஸ்லிம்கள் பிரச்னைக்குரியவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். பாட்சாவுக்கு கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்யப் போகும்போது முஸ்லிம்கள் எழுந்து செல்லும் காட்சி தொட்டு, முஸ்லிம் இளைஞர்கள் சிலர் வன்முறையை எதிர்பார்த்துச் சுற்றிக்கொண்டிருக்கும் காட்சி வரை அவர்களை ஒரு பிரச்னையாகவே படம் நெடுகக் காட்டியிருக்கிறது ஆன்டி இண்டியன்.

இதற்கு மாறாக, சங்கிகளை மீம் கண்டெண்ட் பாணியில் சில இடங்களில் பகடி செய்கிறது. முட்டாள்களாக, நகைப்புக்குரியவர்களாக அவர்களைச் சித்தரிக்கிறது. ஒரு காட்சியில் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் பாட்சாவின் மருமகனான ஏழுமலை மீது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை காவல்துறையிடம் முன்வைக்கிறார்கள். அதற்கான சதித் திட்டத்தை ஒரு முஸ்லிம் வழக்கறிஞரின் யோசனையின் அடிப்படையில் பள்ளிவாசலில் வைத்தே தீட்டுகிறார்கள். இப்படியொரு சீரியஸான காட்சி எதையும் இந்துக்களைச் சார்ந்தோ அல்லது சங்கிகளைச் சார்ந்தோ கூட இயக்குநர் வைக்கவில்லை. ராஜா எனும் சங்கி சட்டம், நீதிமன்றம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கிறான். ஆனால், முஸ்லிம்களோ ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கலகம் செய்வதாக அரசை மிரட்டுகிறார்கள்.

அதுபோல, கிறிஸ்தவர்களுக்கு கதையில் மையமான, வலுவான இடம் இருப்பதாகத் தோன்றவில்லை. கதையில் அவர்கள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது சற்று கூர்ந்து பார்த்தால் புலப்படுகிறது. சரோஜா (லூர்து மேரி) கிறிஸ்தவராக மதம் மாறியவர் என்று அடையாளப்படுத்தப்படுகிறார். அவருக்கு மதம் ஒரு பொருட்டல்ல; ஒன்றுமறியாத அவரிடம் கிறிஸ்தவம் திணிக்கப்பட்டிருக்கிறது. இப்படி எவ்வித அரசியல் தெளிவும் இல்லாமல் பொதுப்புத்தியிலிருந்தே எடுக்கப்பட்டிருக்கும் படுமோசமான படம் ஆன்டி இண்டியன்.

இந்தப் படம் மதவாதிகளுக்கு மட்டும்தான் உறுத்தலைத் தரும் என்று பொறுப்பற்ற முறையில் சில செக்யூலர் மேதாவிகள் கொக்கரிக்கிறார்கள். இதை எப்படி எடுத்துக்கொள்வது? அவர்களின் அறியாமை என்றா அல்லது இஸ்லாமிய/ கிறிஸ்தவ வெறுப்பு என்றா?

Related posts

Leave a Comment