திரை
சின்னஞ்சிறு பொய்களையெல்லாம்
சிறு பொய்கை ஒன்று வளர்த்தது
ஊதா வெள்ளை என்று இரவு பகலாய் பூத்து
அத்தனைக்கும் மேலால் திரையிட்டிருந்தது
சத்தியத்தின் நீர்வெளியில் அசாத்தியம்
தலைகீழ் விம்பமாய்த் தெரிகிறது
பழுப்பு நிறத்தில் மாறியிருந்த
முந்தைய வாக்குறுதி தோய்ந்த வெண்சட்டை
பெட்டியில் காலங்காலமாக மஞ்சள் கனவில் உறங்கியிருக்கிறது
ஒவ்வொரு அசத்தியமும்
தன்னையொத்த மற்றுமொரு அசத்தியத்தின்
சலசலப்புக்கு இரையாகிறது
ஒவ்வொன்றாய் குறைந்து குறைந்து
மெய்மையின் வேலியில்
கைகளைக் கிழித்து சொட்டும் குருதியை
பொய்கையில் கலந்து காலத்தின்
ரணமென நொந்துகொண்டது
சுழற்சியில் பலியாகிறது
பித்தம் தெளிந்த பின்
ஒற்றிக்கொள்ளும் வாய்மையின் வழித்தடம்