கவிதைகள் முக்கியப் பதிவுகள் 

காற்றில் தளரும் சுமை

இலகுவில் தலைகோதிவிடும்
காற்றுக்கு கேசம் கலைக்கவும்
மழையில் நனைந்த பின்
உலரவைக்கவும் தெரிகிறது

அறிதலின்றிய
கிளையை முறித்து
முறுவலித்து
அதே தலையில்
வீழச் செய்யவும் முடிகிறது

சிரித்துக்கொண்டிருக்கும் விழிகளுள்
தூசியைத் தூற்றி
கண்களைக் குளமாக்கி
அதில் தாமரை வளர்க்கும்
கைங்கரியம் அறிகிறது

இன்னும் ஜாடையாகத்
தரையில் விழுந்துகிடக்கும்
இலைகளின் மேல் புரண்டு
உரசலின் சங்கேத மொழி இசைக்கவும்
அதே தொனியில் சீற்றப்பெருமூச்சு விட்டு
பட்சிக்கூடு கலைத்து
எள்ளிநகைக்கவும் தெரிகிறது

உடல் சுமக்கும் மென்பை கனத்த காற்று
தந்தியில் அதிரும் விரல் தொடுகையில்
சுருதி அடங்கும் தருணம் வரை
என்னில் நுழைந்து என்னையே விடுவிக்கும்
இறுதிக் காற்றும் அதுவேதான்!

Related posts

Leave a Comment