நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

வெறும் சாப்பாட்டுக்கு இவ்ளோ அக்கப்போரா?!

Loading

[எழுத்தாளர் ஷா நவாஸின் ‘ருசிபேதம்’ எனும் நூல் விரைவில் சீர்மை வெளியீடாக வரவுள்ளது. அவருடைய முந்தைய நூலான ‘அயல் பசி’ பற்றி முகம்மது ரியாஸ் நகைச்சுவை நடையில் எழுதியுள்ள அறிமுகக் குறிப்பு இது.]

பல வருடங்களுக்கு முன், என் தூரத்து உறவினர் அவர் இறப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன் தன் மனைவியை அழைத்துத் தனது ஆசையை வெளிப்படுத்தினார். ’சீனியடை சாப்பிடணும்போல இருக்கு’ என்றிருக்கிறார். அப்பவே அவருக்கு ஷுகர், பிபி என எல்லா இத்யாதிகளும் கன்னாபின்னாவென இருந்திருக்கிறது. சீனியடை என்பது முட்டை, நெய், முந்திரி, தேங்காய்ப்பால் விட்டு அவித்து எடுக்கப்படும் பண்டத்தை தாழியில் நெய் இட்டு இளஞ்சூட்டில் பொரித்து எடுக்கும் அட்டகாசமானதொரு டெசர்ட் வகை உணவு. இன்றளவும் எங்கள் ஊரில் மணவறை மாப்பிள்ளைக்குக் கொடுக்கப்படும் ஸ்பெஷல் டிஷ் இது.

இறந்தவர் தீர்க்கதரிசி போலும். தனது இறுதி நேரத்தைக் குறிப்பால் உணர்ந்துகொண்டு அருகிலிருந்த மனைவியை வறுத்தெடுத்து ஆசைஆசையாய்ச் சீனியடை செய்துதரச் சொல்லி சாப்பிட்டுவிட்டே சொர்க்கம் போயிருக்கிறார். தான் வாழ்ந்த காலத்திலும் அவர் டயட், உடல் நலம் பற்றியெல்லாம் கவலைப்படாதவர். ’விரும்பியதைச் சாப்பிடணும்’ என்று எப்போதும் சொல்வார்.

உணவோடு பின்னிப்பிணைந்தவன் மனிதன். ஆதி நெருப்பின் வெளிச்சம் அவனைச் சமையற்கூடத்தில் நிறுத்தியது. வள்ளலாரின் நெருப்பு பல ஏழைகளின் வயிற்று நெருப்பை அணைத்தது தெரியும்தானே?! பசியையும் காமத்தையும் அடக்கியாள்பவன் ஞானி; அதனைக் கலையுணர்வோடு எதிர்கொள்பவன் கலைஞானி. அட, கமலஹாசன் ட்விட்டர் பன்ச் மாதிரி இருக்குல்ல?!

அவ்வப்போது நாம் எல்லை தாண்டி முறுக்கிக்கொள்ளும் பட்டியலில் இப்போதுவரைக்கும் நோன்புக் கஞ்சி, வட்லப்பம், தொதல் ஆகியவை இடம்பெறுகின்றன. பண்டிகைக் காலங்களில் ‘வட்லப்பத்திற்கான பேட்டன்ட் ரைட்ஸ் இலங்கைக்குரியதா, தாய்த் தமிழகத்திற்குரியதா’ என்று பெரிய பட்டிமன்றமே நடக்கும். இம்மாதிரியான உணவுப் பண்பாட்டு விவாதங்கள் மெத்தப் படித்த ஆஸ்திரேலியா-நியூசிலாந்துக்கு நடுவேகூட நடக்கிறது என்கிறார் சிங்கப்பூர் எழுத்தாளர் ஷா நவாஸ். உபயம் அவருடைய நூல், ’அயல் பசி’. நாசி லீமா எனும் தென்கிழக்கு ஆசியாவைக் கலக்கும் தேங்காய்ச் சோறு யாருக்கானது என்ற பரபரப்பான விவாதங்கள் சிங்கப்பூரர்களுக்கும் மலேசியர்களுக்கும் இடையே அவ்வப்போது நடக்கும். இப்படி ஒருவகைச் சண்டைதான் ’Pine Apple Lumps’ எனும் சாக்லேட் யாருடையது? ஆஸ்திரேலியா எங்க ஊர் ஐட்டம்னு பந்து எறிய, நியூசிலாந்து ஆட்கள் அந்தப் பக்கம் ‘ஆங்! அது எங்க ஊரு சாக்லேட்’ என முஷ்டியை முறுக்குவார்கள். ’எங்க ஊர் இனிப்புகளை எல்லாம் இப்படித்தான் சார் ஆஸ்திரேலியா லேபிள் குத்துறாங்க’ எனச் செல்லமாகக் கடிந்துக்கொள்கிறார்கள் நியூசிலாந்துக்காரர்கள்.

எழுத்தாளர் ஷாநவாஸ் சிங்கப்பூரில் பிரபல உணவகத்தின் உரிமையாளரும்கூட. இவரின் முந்தைய படைப்புகள்: ஒரு முட்டைபரோட்டாவும் சாதா பரோட்டாவும் , துண்டு மீனும் வன்முறைக் கலாச்சாரமும், மூன்றாவது கை.

எதையாவது சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சியில் பொழுதைக் கழிப்பவர்களை Couch Potatoes என்றழைப்பார்கள். லாக்டவுனில் தூங்குவது, உறங்குவது, மிஞ்சினால் ஃபேஸ்புக்கில் கழிப்பது என பெரிய சைஸ் உருளைக் கிழங்குகளாக மாறிப்போயிருக்கின்றன நம் தொப்பைகள். இதற்குத் தீர்வாக முன்வைக்கப்படும் பல டயட்கள் பற்றிய குறிப்புகள் அயல்பசியில் இருக்கின்றன. ஒரு கவள உணவை 32 முறை மென்று சாப்பிடுவதால் உடனே ஜீரணிக்கும் Chewing Diet முறை (கற்பனையில் நாட்டாமை படத்தின் மிக்சர் மாமா வருகிறார்), நாடாப்புழுவை வயிற்றுக்குள் அனுப்பி அதன் மூலம் நாம் சாப்பிடும் எக்ஸ்ட்ரா உணவை நாடாப்புழு சாப்பிடுவதால் (தொப்பை நாடாப்புழுவுக்குத் தான் வருமாம்) உடல் மெலியும் Tap Worm Diet , ஊதாக் கண்ணாடியை மாட்டிக்கொண்டே சாப்பிடும் Blue Vision Diet (அவ்வாறு கண்ணாடி அணிவதால் நா ஊறாமல் அளவாகச் சாப்பிடும் வாய்ப்புள்ளதாம்), Cave Diet எனும் பேலியோ, தூங்கிக்கொண்டே உடலைக் குறைக்கும் உத்தி The Sleeping Beauty Diet , ஒரு நாளைக்கு ஐந்து முறை குளித்து உடல் பருமனைக் குறைக்கும் டயட் (விஷேசமான சோப்பு உண்டு) என அடுக்கிக்கொண்டே போகலாம்.

‘அயல் பசி’யில் ஷா நவாஸ் நிறைய சாப்பாடு ஐட்டங்களை மேஜையில் அடுக்கியிருக்கிறார், இந்தோனேசியக் கியுசீன், சீன உணவுமுறைகள், இந்திய மசாலா கம் முகல் ஸ்பைசி/இனிப்பு மெனுக்கள், ஜப்பானியப் பாரம்பரிய சுஸி கியுசீன், ஆங்காங்கே பிரபலங்கள் விரும்பிச் சாப்பிட்ட உணவு வகைகள் முதல் பிதாகரஸ், கிம் ஜோங் 2, வின்ஸ்டன் சர்ச்சில், மண்டேலா போன்றோர் நேசித்த பிரியாணி பண்டாரிவரை குறிப்பிடும் அவர், மோடி சாப்பிட்ட காளான் சூப் பற்றி குறிப்பிடவில்லை என்பது பெரிய வருத்தம்தான்! நாக்குக்கு ருசியான உணவு வகைகள், டயட் முறைகள் மட்டுமின்றி Cannibalism எனும் மனித மாமிசத்தைப் புசிப்பவர்கள், தேமென நிற்கும் கழுதையின் மீது சுடுதண்ணீர் ஊற்றி அதன் மூலம் வெந்துப்போன தோலை மிட்டாய்போலத் தின்னும் சீனர்கள், ஒட்டகத்தின் வயிற்றைச் சுத்தம் செய்துவிட்டு அதனுள் ஒரு முழு ஆட்டைத் திணித்து, அந்த ஆட்டின் வயிற்றுக்குள் சில பல கோழிகளைத் திணித்து, அந்தக் கோழி வயிற்றுக்குள் சில பல முட்டைகளையும் அரிசியையும் திணித்து (என்ன, இன்செப்ஷன் கதை மாதிரி போயிட்டே இருக்கா?) படையல் போடும் கிளாசிக்கல் Stuffed Camel, சோசியல் அட்டையருக்காக ஜப்பானியர்கள் விரும்பிச் சாப்பிடும் விஷம் பொருந்திய Fugu மீன் (உலகில் பத்து மீன்கள் பிடிப்பட்டால் அதில் ஒன்றை ஜப்பானியர்கள் சாப்பிடுகிறார்களாம்) என்று தகவல்களை அடுக்கி நம்மை மிரட்டியிருக்கிறார் ஷா நவாஸ்.

நம்மூரில் ‘கோழியடித்தல்’ என்றொரு சொல்லுண்டு. கோழியைக் கட்டையை எறிந்து அடித்து அதன் ஆன்மா போய்ச் சேருவதற்குள் அதனை அப்படியே பத்திரமாகப் பிடித்து குழம்புச் சட்டிக்குக் கொண்டுபோய் சமைப்பதுதான் அது. கல்லூரிக் காலத்தில் ’குட்டி குடித்தல் திருவிழா’ என்பது உறையூரில் பிரபலம். பூசாரி ஆட்டுக்குட்டிகளைக் கழுத்தில் பாய்ந்து குதறி இரத்தத்தைக் குடித்துவிட்டு கிடாயைத் தூக்கி எறியும் சாகசம் அது. அதே ஸ்டைலில் துடிக்கத்துடிக்கச் சேவல் கொண்டைகளை வெட்டி சில்லி போட்டு இத்தாலியக் கியுசீன், குரங்கு கையைக் கட்டிவைத்துத் தலையை சீவி மூளையைப் பச்சையாகச் சாப்பிடுவதால் ஏற்படும் கிக், கூனி இறாலைத் துடிக்கத்துடிக்க சில்லி, பெப்பர், ஆரஞ்சுத் துண்டுகளை ஒயினில் கலந்து அடிக்கும் Zhixia Drunken Shrimp (‘காதலும் கடந்து போகும்’ படத்தில் விஜய் சேதுபதி குறிப்பிடும் ஒயின் இதுதான்), வவ்வாலைப் பறக்கவிட்டு ஒரே அடியாய் அடித்துப் பாலில் கொதிக்க வைத்து எடுக்கும் Bat Paste, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என ஆக்டோபஸைத் துடிக்கத்துடிக்க வெட்டி ஒயினில் போட்டுக் குடித்தல் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

வயாக்ரா டைப் மெனுக்களைக் குறிப்பிடும்போது மலேசிய-இந்தோனேசியப் பிரபல தாவரவகையான தொங்கத் அலி மற்றும் Ubi Jaga எனும் கிழங்கு பற்றியும் ஷா நவாஸ் குறிப்பிடுகிறார். இந்தோனேசியாவில் இந்த தொங்கத் அலி மிகப் பிரபலம். இந்தோனேசியர்கள் கை கால் ஆடினாலே ‘சூட்டைக் கிளப்ப’ தொங்கத் அலியை மினோமில் (தேநீரில்) கலந்து அடித்து விடுவார்கள்.

இந்தோனேசிய கியுசீனைப் பற்றி அவர் குறிப்பிடும்போது மேடான் (நாசி பாடாங்) மெனுக்களை மட்டும் குறிப்பிடுவது ஏமாற்றமே. ஜாவானீஷ் கியுசீன் இன்னும் நிறைய வெரைட்டியான பதார்த்தங்களைக் கொண்டது. Warung எனும் நம்மூர் கையேந்திபவன் வகையறாக்கள் அங்கே பிரபலம். இந்த வகையறாக்களில் Warung Jamu கை மருந்துகள் அடங்கிய பெட்டிக் கடைகள் சிறப்பு. அங்கே தேக அழகைப் பராமரிக்கும் பானங்கள் முதல் வயாகரா டைப் சிரப்புகள்வரை கிடைக்கும். சூலித்தாய்மார்கள் இழந்த பொழிவை மீண்டும் திரும்பப் பெறக் குடிக்கும் தேவ பானம், தொங்கத் அலி, உபி ஜகா என நீளும் நம்மூர் டைப் ’உணவே மருந்தாகும்’ முறையிலான கையேந்தி பவன்கள் அவை.

உடன் வேலைப்பார்க்கும் இந்தோனேசிய நண்பர் கூறினார்: ”நாட்டுக்கோழி முட்டைக்குள் பச்சைப் பூண்டுகளைத் தட்டிப்போட்டு, தேனை ஊற்றி ‘ஒரே கல்பில்’ இறக்கிவிடு. உன்னை அது தூங்கவிடாது.” இந்தக் குறிப்பு எல்லாம் இந்த Warung Jamu அனுசரணைகள்தான். கோவிட் 19க்கான மருந்தை அங்கேதான் நிறைய பேர் தேடுவதாக நண்பர் கூறினார். நம்ம ஊர் கபசுரக் குடிநீர் போல.

என்னய்யா இது வெறும் சாப்பாட்டுக்கு இவ்ளோ அக்கப்போரான்னு நீங்க கேட்கிறது தெரியுது. ஆனா நமக்குச் சோறு முக்கியம்ல. உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கு. ஊரா இருந்தா குப்பை மேட்டுல கண்டது கழியதத் தின்னுட்டு நிக்கும் நம்ம வீட்டு கடக்நாத் நாட்டுக் கோழியை அடிச்சு தேங்காச்சோறு சாப்பிட்டா எல்லாம் சரியாயிடும். எங்க, இந்த லாக்டவுன் பீரியட்ல அதெல்லாம் முடியுமா?! ’கடக்நாத் கோழி சூப்’னு எழுதிப் பார்த்துட்டு படுத்துத் தூங்க வேண்டியதுதான்.

அப்புறம் வட்லப்பம் எங்கேருந்து வந்ததுன்னு அடிச்சுங்காதீங்கய்யா. டெசர்ட் என்பதே மிஞ்சிப்போன உணவை அடுத்த நாளைக்கு ரீசைக்கிள் பண்ண தென் ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடிச்ச ஒரு சமையல் ஐடியாதானாம். பெருநாளைக்கி வட்லப்பம் சாப்பிட்டுவிட்டு, தெற்குப் பக்கம் கேப்டவுன் இருக்குற திசையாப் பார்த்து ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு வேலையப் பாக்கப் போங்கய்யா!

Related posts

Leave a Comment