கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழகத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு: தேவைகள், சிக்கல்கள், தீர்வுகள் – அ.மார்க்ஸ்

Loading

முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காக கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 30% இடஒதுக்கீட்டில் முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3.5% உள்ஒதுக்கீட்டை 2008ம் ஆண்டு தமிழக அரசு வழங்கியது. இந்த இடஒதுக்கீட்டின் பலாபலன்கள் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தமிழகக் கிளை ஆய்வரங்கு ஒன்றை சென்ற செப்டம்பர் 4ம் தேதி ஏற்பாடு செய்தது. அதில் பேராசிரியர் அ.மார்க்ஸ் முன்வைத்த விரிவான அறிக்கையே இது.

சச்சார் குழு அறிக்கையும் தமிழக அரசின் முஸ்லிம் உள்ஒதுக்கீடும்

சச்சார் குழு அறிக்கை என்பது ஏதோ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டைப் பரிந்துரைக்கும் ஓர் ஆவணம் என்று பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். உண்மையில், அதில் இடஒதுக்கீடு பற்றி வெளிப்படையான பரிந்துரை ஏதும் கிடையாது. இத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றெல்லாம் நேரடியாக அது எதையும் சொல்லவில்லை. மாறிவரும் உலகில் இந்திய முஸ்லிம்களுக்கு எல்லா மட்டங்களிலும் உரிய இடம் கிடைத்துள்ளதா, அதற்கு என்ன வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன குறித்த ஓர் ஆய்வு மற்றும் பரிந்துரைப்பு அறிக்கைதான் அது. இதை மனதில் கொண்டு மேலே செல்வோம்.

சச்சார் அறிக்கை கவனம் குவிக்கும் புள்ளிகள்

பிரிட்டனிலுள்ள 1976ம் ஆண்டு இன உறவுச் சட்டத்தின் (The Race Relations Act, 1976) அடிப்படையில் இங்கும் உரிய சட்டங்கள் ஏற்படுத்துதல், சமவாய்ப்பு ஆணையம் (Equal Opportunity Commission) அமைத்தல், முஸ்லிம்களின் நிலை குறித்த தரவு வங்கி (Data Bank) ஒன்றை உருவாக்குதல் முதலானவற்றையே சச்சார் குழு வலியுறுத்துகிறது.

இத்தகைய சம வாய்ப்பு ஆணையம் தனியார் துறை உள்ளிட்ட அனைத்து நிலையிலும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் உரிய இடம் பெற வழிவகுக்கும்.

அறிக்கையை எழுதிய சச்சார் குழுவின் உறுப்பினரான டாக்டர் அபூ சாலிஹ் ஷரீஃப் மனித வளநிலை குறியீட்டு எண் முதலியவற்றை உருவாக்குவதில் வல்லவர். அவர், ”அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு என்பதெல்லாம்  அரசியல்வாதிகளின் பம்மாத்து; எங்கே இருக்கிறது வேலை? உண்மையில் இந்த அறிக்கையின் நோக்கம் என்னவெனில் இன்று ஏற்பட்டுவரும் அதிவேகப் பொருளாதார மாற்றங்களிலும், வளர்ச்சிகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய இடத்தைப் பெறுவதே” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதன் முதற்படி, முஸ்லிம்களுக்கான தரவு வங்கியை ஏற்படுத்துவது. ஒவ்வொரு துறைகளில், பல்வேறு நிலைகளில் முஸ்லிம்களின் பங்கு என்னவாக இருக்கிறது என்பதில் தொடங்கி, அரசு நலத்திட்டங்கள், அரசு அளிக்கும் கடன் வசதிகள், வீட்டு வசதி போன்ற விஷயங்கள் எந்த அளவிற்கு முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்றன என்பது பற்றி விரிவான தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் கண்காணிக்க மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (Supervision and Evaluation Committee) உருவாக்கப்பட வேண்டும் என்கிறது சச்சார் அறிக்கை.

மேலும், தனியார் உட்பட எல்லாவிதமான தேர்வுக் குழுக்களிலும் முஸ்லிம்களுக்கு இடமளித்தல், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட தொகுதிகளாக (Reserved Constituencies) இருக்கும் பட்சத்தில் அந்நிலையை மாற்றுதல், முஸ்லிம்களில் தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களை (அர்சல்) இனங்கண்டு அவர்களுக்கு முன்னுரிமை அளித்தல், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் கல்வி வசதியை மேம்படுத்துதல், முஸ்லிம்கள் பெரும்பாலும் கைவினைஞர்களாக இருப்பதால் அவர்களுக்குத் தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு அளித்தல், மதரசாக்களை நவீனப்படுத்துதல், மதரசாக் கல்வியை முடித்தவர்கள் பொதுக்கல்வியில் இணைவதற்கு வழிவகுத்தல், உருது மொழியில் பயில வசதி செய்தல், தனியார்களாலும், அரசுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துக்களை மீட்டு அவற்றின் பயன்களை ஏழை எளிய முஸ்லிம்கள் பெறச் செய்தல், கூட்டுறவு வங்கி முதலியனவற்றில் இடஒதுக்கீடு அளித்தல் என்பதாக சச்சார் அறிக்கையின் பரிந்துரைகள் அமைகின்றன.

சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு அம்சங்களிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மை. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மே.வ., பிஹார், உ.பி. போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை தலித்களைக்காட்டிலும் சில அம்சங்களில் கீழாக உள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எதற்கு இவ்வளவு விலாவாரியாக இதைச் சொல்கிறேன் என்றால், அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு எனும் கோரிக்கையோடு நாம் நிறுத்திக்கொள்வது போதாது என்பதைச் சுட்டிக்காட்டத்தான். மாறிவரும் சூழல்களைக் கணக்கில் கொண்டு நமது கோரிக்கைகளை வடிவமைக்க வேண்டிய அவசியமிருக்கிறது.

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளித்த தமிழக அரசின் சட்டம் (2007)

2008ல் தமிழக அரசு சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளித்து அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்தங்கிய நிலையினரை மத ரீதியாக அடையாளம் கண்டு ஒதுக்கீடு வழங்குவதற்கு நமது அரசியல் சாசனத்தில் சில இடையூறுகள் உள்ளதால் அவ்வாறு அடையாளம் காணும்போதும்கூட அவர்களின் பிற்படுத்தப்பட்ட நிலையின் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. கேரள, கர்நாடக, ஆந்திர மாநில அனுபவங்கள், ஆந்திராவில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தடைகள் போன்ற அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, கருணாநிதி தலைமையில் அமைந்த அப்போதைய திமுக அரசு சாத்தியமான அளவிலும், எளிதில் நீதிமன்றத் தடையைப் பெற இயலாத வகையிலும் சட்டம் இயற்றியது. இதன் மூலம் முஸ்லிம்களில் 94.61 சதமும், கிறிஸ்தவர்களில் 74 சதமும் பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டது.

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழகத்தில் 5.6% உள்ள முஸ்லிம்களுக்கு 3.5% மற்றும் 6.01% உள்ள கிறிஸ்தவர்களுக்கு 3.5% ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 69 விழுக்காடு உச்ச வரம்பைக் கணக்கில் கொண்டு இந்தச் சதவீதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த உச்ச வரம்பு ஒரு பக்கம் இருக்க, எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது என்பதற்கு ஒரு கணக்கு உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினரின் பிற்படுத்தப்பட்ட நிலையைக் குறிக்கும் குறியெண் 100 எனக் கொள்ளப்படும். அவர்களுடன் ஒப்பிடும்போது ஒரு பிரிவினர் எவ்வளவு பின்தங்கியுள்ளனர் எனப் பார்த்து, அவர்களின் பிற்படுத்தப்பட்ட நிலைக் குறியெண் கணக்கிடப்படும்.

அதாவது, அப்பிரிவுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டிய சதவீதம் = (குறியெண் X மக்கள்தொகை) / 100

இந்த அடிப்படையில் பார்த்தால் இன்று வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு ஆணையின்படி பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைக் குறியெண் சுமார் 63 என்றாகிறது. பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் குறியெண் 58.2 ஆகும்.

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு என்பதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியவை

இன்றைய சூழலில் ஒரு மாநில அரசு ஒட்டுமொத்தமாக மத ரீதியில் ஒதுக்கீடு வழங்க இயலாததாக உள்ளது. மதத்தின் பெயரால் எந்த மதத்திற்கும் சலுகைகள் அளிக்கபடக்கூடாது என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்று. எனவே பிற்படுத்தப்பட்ட நிலையினர் என்ற வகையில், பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் தரும் பரிந்துரையின் அடிப்படையில் அந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் அது செல்லுபடியாகும். இல்லாவிட்டால் சிறுபான்மையினரின் துன்பத்தில் இன்பம் காணும் மதவாத சக்திகள் நீதிமன்றத்தை அணுகி தடை வாங்கிவிடும். ஆந்திராவில் இதுதான் நடந்தது. ஆனால், தமிழக அரசின் 2008ம் ஆண்டு அவசரச் சட்டத்தின் மீது அப்படி ஒரு தடையை வாங்கிவிட இயலாது.

பிற்படுத்தப்பட்ட நிலையை ஆய்வதற்கான ஜனார்த்தனன் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையிலேயே அன்று அந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்பது உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ள ஓர் அநீதியான தடை. ஆந்திராவில் ஒதுக்கீடு வழங்கும்போது மொத்த ஒதுக்கீடு 51 சதவீதமாக ஆனபோது, அதுவே இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தடை வாங்குவதற்குக் காரணமானது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், 69 சதவீத ஒதுக்கீட்டை 9வது பட்டியலில் சேர்த்து பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளதால் இந்த உச்ச வரம்பு அப்படியே உள்ளது. கலைஞர் அரசு வழங்கிய இந்த ஆணை 69 சதவீதத்தைத் தாண்டாது உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த அடிப்படையில் மதவாத சக்திகள் இதன் மீது தடை வாங்க இயலாது.

இப்படி ஒதுக்கப்பட்ட 69 சதவீதத்திற்குள், பிற்படுத்தப்பட்ட சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 30 சதவீதத்தில் 3.5 + 3.5 = 7% ஒதுக்கீடு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அப்போது வழங்கப்பட்டது. ஏற்கனவே முஸ்லிம்களிலும், கிறிஸ்தவர்களிலும் யாரெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள் என ஒதுக்கீட்டிற்குத் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தார்களோ அவர்களுக்கு அன்று வழங்கப்பட்ட தனி ஒதுக்கீடு செல்லுபடியாகும் என்பதால் மதவாத சக்திகள் இதை மத அடிப்படையிலான ஒதுக்கீடு என விதண்டா வாதம் செய்வதற்கும் வழியில்லாமல் போனது.

அப்படி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால்தான் என்ன என்பது வேறு விஷயம். இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு மத அடிப்படையில்தானே வழங்கப்படுகிறது. கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள், அவர்கள் தலித்தாக இருந்தபோதும் அதில் இடமில்லையே!

இப்போது கிறிஸ்தவர்கள் தங்களுக்கு இந்த 3.5% ஒதுக்கீடு வேண்டாமெனச் சொல்லிவிட்டார்கள். அது சரியா, தவறா என வாதிப்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. முஸ்லிம் இடஒதுக்கீடு சந்திக்கும் பிரச்னைகளைத் தொடர்வோம். முஸ்லிம்களுக்கு வெறும் 3.5% ஒதுக்கீடு போதாது. இதை 6 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. ஆனால், இதை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சில சிக்கல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இப்போது இங்கே வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு பெரியாரிஸ்டுகள் கேட்பது போன்ற வகுப்புவாரி ஒதுக்கீடு அல்ல. ஒவ்வொரு சாதிக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீட்டை வழங்கிவிடு, பார்ப்பானுக்குக்கூட 2 சதவீதத்தைக் கொடுத்துவிடு என்றார் பெரியார். ஆனைமுத்து போன்றோரும் இன்றளவும் இந்தக் கோரிக்கையைத்தான் வைக்கின்றனர்.  இதுதான் உண்மையான வகுப்புவாரி ஒதுக்கீடு. இது நம்முடைய சாதியச் சமூகத்தில் நியாயமான கோரிக்கைதான். அப்படியாகும்போது தானாகவே முஸ்லிம்களுக்கு அந்த ஒதுக்கீடு வந்துவிடும். ஆனால், இன்று நிலைமை அதுவல்ல. இன்றைக்கு எந்தச் சமூகமாக இருந்தாலும் அவர்களின் மொத்த தொகையைக்காட்டிலும் குறைவாகவே அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஒதுக்கீடு இல்லாமல் ‘மெரிட்’ அடிப்படையில் தேர்வு என்பதற்கு இன்று மற்ற மாநிலங்களில் 50 விழுக்காடு வரை ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் இது 31 சதவீதமாக இருப்பதால், அதை 50 சதவீதமாக மாற்ற வேண்டும் என்பது இன்றைய மத்திய ஆட்சியாளர்களின் நோக்கம்.

இதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 30% ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது என்றால், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை வெறும் 30% தானா? முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் மொத்த தொகையே சுமார் 12%. இன்னும் பிற பிற்படுத்தப்பட்ட இந்துச் சமூகங்கள் அதிகம் உண்டு.

கேரளாவை எடுத்துக்கொண்டால், மொத்த மக்கள் தொகையில் 22% உள்ள முஸ்லிம்களுக்கு 12% ஒதுக்கீடுதான் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 12% உள்ள கர்நாடக மாநில முஸ்லிம்களுக்கு 1994 முதல் 4% ஒதுக்கீடுதான் வழங்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் 8% உள்ள முஸ்லிம்களுக்கு முதல் ஆணையில் வழங்கப்பட்ட ஒதுக்கீடு 5%. மொத்த ஜனத்தொகையில் 5.6% உள்ள தமிழக முஸ்லிம்களுக்கு 3.5% ஒதுக்கீடு இன்றைக்கு வழங்கப்படுகிறது. (5.6% என்பது 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான கணக்கு. கலைஞர் ஆட்சி 3.5% ஒதுக்கீடு தந்தபோது இந்த அடிப்படையே கணக்கில் கொள்ளப்பட்டது.)

முஸ்லிம்களுக்கு 3.5% ஒதுக்கீடே போதும் என நான் சொல்வதாகக் கருத வேண்டாம். நிலவும் சூழலில் என்ன சாத்தியம் என்பது பற்றியே இங்கு விளக்கினேன். எனவே, இன்றைய நடைமுறைச் சட்டங்களின்படி ஆக அதிகபட்சமாக மொத்தத்தில் 61.9% தான் ஒதுக்கீடு தர முடியும். இதைக் கூட்ட வேண்டும் என்றால் வேறு சாதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டிலிருந்தே அதை எடுக்க முடியும். இது இன்றைய நிலையில் சாத்தியமா என்று நாம் யோசிக்க வேண்டும்.

அதேபோல, பிற்படுத்தப்பட்ட நிலையின் அடிப்படையிலேயே ஒதுக்கீடு அளிக்க வேண்டும், மத அடிப்படையில் கூடாது என்பதால்தான் அருகிலுள்ள மாநிலங்களில் முஸ்லிம்களில் சில பிரிவுகள் (உதாரணத்திற்கு: கச்சி மேமோன், ஷேக், பதான், போரா, நவாயத் முதலியன) இடஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆந்திர அரசு தொடக்கத்தில் இத்தகைய விலக்குகள் இல்லாமல் ஒட்டுமொத்தமாய் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அறிவித்ததே அந்த ஒதுக்கீட்டின் மீது தடை வாங்குவதற்குக் காரணமாயிற்று.

இப்படியெல்லாம் சொல்வது முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கூடாது என்பதற்காக அல்ல. அப்படியான கோரிக்கை சந்திக்க உள்ள சிக்கல்கள் இவை. இந்தியச் சூழலில் பெரியார், ஆனைமுத்து ஆகியோர் சொன்னபடி ஒட்டுமொத்தமாக அவரவர் சாதி எண்ணிக்கைக்குச் சமமாக ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை ஒரு பொதுக் கோரிக்கையாக வைக்காதபோது சந்திக்கும் சிக்கல்கள் இவை.

அஷ்ரஃப், அர்சல், அன்சார் என முஸ்லிம்களை மூன்றாக வகைப்படுத்தும் சச்சார் குழு, இவர்களுள் மேலாக உள்ள அஷ்ரஃப் பிரிவினர்கூட இந்து பிற்படுத்தப்பட்டவர்களைக்காட்டிலும் கீழாகவே உள்ளனர் எனச் சொல்வது குறிப்பிடத்தக்கது. எனவே அஷ்ரஃப் பிரிவினருக்கும் அவர்களுக்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்பதில் நியாயம் இருக்கிறது. நிற்க.

கலைஞர் அரசு இந்தப் பிரச்னையைக் கணக்கில் கொள்ளாமல் எல்லா முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு என அறிவித்திருந்தால் இந்துத்துவ சக்திகள் தடை வாங்குவதற்கு வழி செய்ததாக அமைந்திருக்கும். இந்த ஆணைப்படியே தமிழகத்தில் லெப்பை, தக்கினி, அன்சார், ஷேக், சையது என்கிற இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள பிரிவுகள் மொத்தமுள்ள முஸ்லிம்களில் 94.61 சதவீதத்தினரை உள்ளடக்குவதாக உள்ளது.

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்கள் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் ‘கிரீமி லேயரை’ இனங்கண்டு ஒதுக்கியுள்ளன. கேரளத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாயைத் தாண்டக்கூடாது. கர்நாடகத்திலும் இந்த வருமான உச்ச வரம்பு உண்டு. ஆந்திராவில் கிடையாது. தமிழக மரபிற்கேற்ப கலைஞர் அரசு வழங்கியுள்ள இந்த ஆணையில் இத்தகைய வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. எனினும், இந்த 3.5% எவ்வாறு கணக்கிட்டார்கள் எனத் தெரியவில்லை.

இடஒதுக்கீட்டுச் சதவீதத்தைக் கணக்கிடுவதற்கு ஒரு கணக்கு உண்டு என்பதாக முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி, எந்தப் பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமோ அந்தப் பிரிவு மக்களின் பிற்படுத்தப்பட்ட நிலை குறியீட்டு எண்ணை முதலில் கணக்கிட வேண்டும். அம்மாநிலத்தில் ஆகக் கீழான சமூகப் பொருளாதார நிலையில் உள்ள எஸ்.சி/எஸ்.டி பிரிவினரின் பிற்படுத்தப்பட்ட நிலைக் குறியீட்டு எண்ணை 100 என வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட பிரிவினர் எஸ்.சி/எஸ்.டி மக்களுடன் ஒப்பிடும்போது எந்த அளவிற்குக் கல்வி பொருளாதாரம், வீட்டு வசதி முதலான அம்சங்களில் உள்ளனர் என்கிற அடிப்படையில் இந்தக் குறியெண் நிர்ணயிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, X எனும் ஒரு பிரிவு மக்களின் பிற்படுத்தப்பட்ட நிலைக் குறியெண் 80 எனக் கொள்வோம் (அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினரைக் காட்டிலும் இந்த பிரிவினரின் நிலை 20% அளவு மேலாக உள்ளது). இவர்களின் மக்கள் தொகை 5% எனக் கொண்டால், இவர்களுக்கு அளிக்க வேண்டிய ஒதுக்கீடு (80/100)X 5 = 4%. இப்படியான ஒரு பிற்படுத்தப்பட்ட நிலைக் குறியெண் எதையும் முஸ்லிம்களுக்கு உருவாக்கியுள்ளதாகத் தெரியவில்லை. கொடுத்துள்ள 3.5% ஒதுக்கீட்டிலிருந்து பின்னோக்கிச் சென்று இந்தக் குறியெண்ணைக் கணக்கிட்டுப் பார்த்தால் அது 62.95 என்றாகிறது. இது சரிதானா என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

ஒன்றை இங்கு சொல்வது அவசியம். இடஒதுக்கீட்டிற்கான இந்தப் போராட்டம் இன்றுள்ள நிலையில் நமது உரிமையை நிலைநாட்டுவதற்கான ஒரு குறியீடுதான். சச்சார் ஆணைய அறிக்கையை எழுதிய டாக்டர் அபூ சாலிஹ் ஷரீப் கூறிய ஒரு கருத்தை மீண்டும் நினைவூட்டுகிறேன். இன்றைய சூழலில் அரசுத்துறையில் இடஒதுக்கீடு என்பதெல்லாம் பெரிய அளவில் முஸ்லிம்களின் பிரச்னையைத் தீர்த்துவிடாது என்கிறார் அவர். அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு மொத்தத்தில் குறைந்துகொண்டே போதல், கல்வி நிலையங்களிலும் அரசுக் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைதல் என்பதை எல்லாம் கணக்கில் கொண்டு நமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்கிறார் அவர்.

முஸ்லிம்களின் பிரச்னைகள் இன்றும் பல தளங்களில் உள்ளன. அரசு நலத்திட்டங்களின் பங்கு, கடன் வசதி பெறுதல், தனியார் துறைகளில் ஒதுக்கீடு, மதரசாக் கல்விக்கு உரிய ஏற்பு, வக்ஃப் சொத்துகளை மீட்டு முஸ்லிம்களுக்குப் பயனுடையதாக ஆக்குதல், தொகுதிச் சீரமைப்பு, முனிசிபாலிடி மற்றும் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு என எத்தனையோ விவகாரங்கள் இருக்கின்றன. இடஒதுக்கீட்டில்கூட 2008 ஆணை இனிவரும் காலியிடங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா, ‘பேக் லாக்’ (முன்தேதியிட்டு) முறையிலும் உரிய பங்களிப்பு சிறுபான்மையினருக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுமா என்றெல்லாம் அப்போதே கேள்வி எழுப்பினோம்.

ஆக, இந்த 3.5% இடஒதுக்கீடு ஆணையைப் பெற்றதோடு முஸ்லிம் இயக்கங்களின் பணி ஓய்ந்துவிடவில்லை என்பதை மட்டும் நாம் நினைவூட்டிக்கொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமை கோரலை வெறும் இடஒதுக்கீடு என்பதோடு நிறுத்திக்கொண்டால் அதில் பெரும் பயனில்லை என்பதே நான் சொல்ல வருவது.

புதிய சூழலில் முஸ்லிம்கள் எல்லா மட்டங்களிலும் உரிய பங்களிப்பு பெற இப்போது நாம் செய்ய வேண்டியவை என்ன?

முஸ்லிம்களுக்கு உரிய பங்களிப்பு கிடைக்க வேண்டும் எனும்போது அதை வெறுமனே இடஒதுக்கீட்டோடு சுருக்கிவிடக்கூடாது. அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என்பதெல்லாம் அருகிக் கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் நாம் வேறு வடிவில் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். சச்சார் அறிக்கை அதனால்தான் இடஒதுக்கீடு என்பதைப் பற்றிப் பேசாமல் வேறு அம்சங்களின் மீது கவனத்தை ஈர்த்தது. உலகளாவிய அனுபவங்களின் அடிப்படையில் அவ்வாறு முன்வைக்கப்பட்ட சிலவற்றைக் காணலாம்.

நானூற்றுச் சொச்சம் பக்கமுள்ள சச்சார் குழு அறிக்கையுடன் ஒரு குறுந்தகடும் இணைத்துத் தரப்பட்டது. அதில் அறிக்கையின் முழு வடிவம் தவிர, சுருக்கப்பட்ட வடிவமொன்றும் உள்ளது. இதைத் தயாரித்தவர் சஅதத் ஹுசைனி. இந்தச் சுருக்க வடிவத்தின் இறுதி அத்தியாயத் தலைப்பு, ”முஸ்லிம் அமைப்புகள் செய்ய வேண்டியதென்ன?” என்பது. அதிலிருந்து சில இங்கே:

1. செய்ய வேண்டியவை

 • எல்லாப் பரிந்துரைகளையும் ஆழமாக ஆய்வு செய்தல்.
 • இவற்றுடன் தொடர்புடைய சட்டங்கள், அரசுத் திட்டங்கள், முடிவுகள் முதலியன குறித்த விரிவான ஆவணங்களைத் தயாரித்தல்.
 • மேற்கண்ட ஆவணங்களை உள்ளடக்கிய ‘தேவையான நடவடிக்கைகளுக்கான வரைவு’ ஒன்றை விரிவாகத் தயாரித்தல்.
 • அரசிடம் வாதாடி உரிய அழுத்தம் அளித்து தேவையான சட்டங்களை இயற்றுவதுடன், தேவையான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

2. சட்டபூர்வமாகச் செய்ய வேண்டியவை

பிரிட்டிஷ் அரசு இயற்றியுள்ள 1976ம் ஆண்டு இன உறவுகள் சட்டத்தின் வழியில் ‘சமவாய்ப்பு ஆணையச் சட்டம்’ ஒன்று இயற்றப்பட வேண்டும். நாம் அதற்கான வரைவைத் தயாரித்து அவற்றுக்கு ஒப்புதல் அளிக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். அந்தச் சட்டம் கீழ்க்கண்ட சச்சார் குழு பரிந்துரைத்த அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

 • பிரத்யேகமாக முஸ்லிம்களுக்குக் கடன் அளித்தல்.
 • எல்லாத்துறைகளிலும் – குறிப்பாக அன்றாடம் மக்கள் தொடர்புடைய துறைகளில், முக்கியப் பணிகளை நிறைவேற்றும் நிலையிலுள்ளவற்றில் முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க அளவு இருப்பதை உறுதி செய்தல்.
 • பன்மைத்துவக் குறியெண் உருவாக்குதல்.
 • நேர்முகத் தேர்வுகள் குழுக்களிலும், வேலைத் தேர்வு வாரியங்களிலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நிபுணர்களை உரிய அளவில் உள்ளடக்குதல்.
 • நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில், தேவையான தகவல்களை 3 மாதத்திற்கு ஒருமுறை திரட்டி வெளியிடுதல். அந்தந்தத் துறைகளுக்கான இணையதளங்களில், மாநில அரசுகளின் இணையதளங்களில் அவற்றை பதிவேற்றுதல்.
 • ஆளுகையில் முஸ்லிம்களை உள்ளடங்கும் வகையில் நியமனங்களைச் செய்தல்.
 • சமவாய்ப்பு நிறுவனங்கள் என்கிற கருத்துரு.
 • தேசியத் தரவு வங்கி, மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு ஆணையச் சட்டம் – 2006
 • பொருத்தமான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ‘ஒதுக்கீட்டிற்குள் ஒதுக்கீடு’ அளித்தல்; தாழ்த்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு அளித்தல்.
 • சச்சார் பரிந்துரைகளை உள்ளடக்கி வக்ஃப் சட்டத்தைத் திருத்துதல்.
 • வக்ஃப் சொத்துக்களுக்கு விலக்களிக்கும் வகையில் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஆகியவற்றைத் திருத்துதல்.

3. திட்டங்களை அறிவித்தல் மற்றும் உரிய நிதி ஒதுக்கீட்டைச் செய்தல்

கீழ்க்கண்ட திட்டங்களை வரைவு செய்வதோடு, அவற்றுக்குரிய நிதி ஒதுக்கீட்டையும் கோருதல்.

 • சுய வேலைகளிலுள்ள முஸ்லிம்களுக்கு திறன் மேம்பாட்டு பயற்சிகள்.
 • நகர்ப்புற ஏழ்மையை நீக்குவதற்கு உடனடியாகத் தேவைப்படும் கொள்கைத் தலையீடுகள்.
 • உள்ளூர் அளவிலான சமுதாயக் கல்வி மையங்கள் அமைத்தல்.
 • பெண்களுக்கான பள்ளிகள்.
 • சிறுபான்மையோர் கல்லூரிகளில் உதவித் தொகைகள் வழங்குவதற்கும் கல்விக் கட்டணத்தைக் குறைப்பதற்கும் அரசு நிதி நல்குதல்.
 • நியாயமான கட்டணத்தில் சிறுபான்மை மாணவர்களுக்கு விடுதி வசதிகளைச் செய்து தருதல்.
 • முஸ்லிம்கள் வசிக்கின்ற மாவட்டங்கள், தாலுக்காக்கள், வட்டாரங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான சிறப்பு உதவித் திட்டங்கள்.
 • முஸ்லிம்கள் அதிகம் குவிந்துள்ள தொழில்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் வளர்ச்சி முனைப்புகளுக்கு நிதி மற்றும் இதர ஆதரவுகள்.
 • முறை சாராத் துறைகளில் சுய வேலைகளிலுள்ள முஸ்லிம்களுக்குக் கட்டாயமான சமூகப் பாதுகாப்பு அமைப்பு.

4. நிறுவனம்/துறை சார்ந்த நிர்வாக முடிவுகள்

 • வங்கிகள் அனைத்தும் தமது வாடிக்கையாளர்கள் மற்றும் பயனாளிகளின் சமூக, மதப் பின்னணி குறித்த தகவல்களை வைத்திருப்பதோடு, ரிசர்வ் வங்கியிடம் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
 • வங்கிகளை முஸ்லிம்களுக்குக் கடனளிக்க வலியுறுத்துதல்.
 • இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி வழங்கும் நுண்கடன் திட்டங்களில் சிறுபான்மையினர் பங்கேற்பை மேம்படுத்தும் வகையில் கொள்கை ஒன்றை உருவாக்குதல். இதைச் சாத்தியப்படுத்தும் வகையில் ஒரு கிராமத்திலுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலக்கு நோக்கிய மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் மூலம் தலையீடு செய்யும் வழிவகைகளைச் சொல்லுதல்.

5. தொகுதிச் சீர்திருத்தம்

தொகுதிச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் SC/ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தொகுதிகளை விடுவிக்கும் நோக்கில் மறுபரிசீலனைச் செய்தல்.

6. கல்வித்துறை மற்றும் தொழில்துறைகளுக்கான வழிகாட்டு நெறிகள்

 • உருதுமொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஆரம்பக் கல்வி உருது மொழியில் அமைத்தல்.
 • மதரசாக்களில் கல்வி முடித்த மாணவர்களும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேரும் வகையில் அடிப்படைத் தகுதியை விரிவாக்குதல்.
 • முஸ்லிம்கள் அதிகமுள்ள தொழில்களில் பயிற்சியளிக்க புதிய பாடத் திட்டங்களை உருவாக்குதல்.
 • பல்கலைக்கழக மானியக் குழு (UGC), தொழில் கல்விக்கான அகில இந்தியக் குழு, இந்திய மருத்துவக் குழு முதலியனவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிப்பு அளித்தல்.
 • மதரசாக்களில் வழங்கப்படும் சான்றிதழ்கள்/பட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் மதரசாச் சான்றிதழ்களையும் பட்டங்களையும் தகுதி உடையதாக ஆக்குதல்.
 • சிவில் சர்வீஸ், வங்கிகள், பாதுகாப்புச் சேவைகள் மற்றும் பிற துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கான தகுதிக்குரியனவாக மதரசாப் பட்டங்களுக்கு ஏற்பு வழங்குதல்.

7. மேற்கொள்ளப்பட்ட வேண்டிய குறிப்பான ஆய்வுகள்

 • SC/ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமுள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு தொகுதிச் சீர்திருத்தத்திற்குப் பரிந்துரைத்தல்.
 • உருது மொழி பேசும் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உருது மொழியில் தொடக்கக் கல்வியை வழங்குவதற்கு ஏற்ப இப்பகுதிகளை அடையாளம் காணுதல்.
 • முஸ்லிம்கள் அதிகம் குவிந்துள்ள தொழில்களிலும், வளர்ச்சி வாய்ப்பு அதிகமுள்ளவற்றிலும் பயிற்சி அளிக்க வேண்டிய கல்வித் துறைகளை இனங்காணுதல்.

இவை சச்சார் குழு முஸ்லிம் இயக்கங்களுக்குக் கொடுத்துள்ள சுருக்க வழிகாட்டு நெறிகள்.

வெறுமனே இடஒதுக்கீடு எனச் சுருக்கிக்கொள்ளாமல், உலகளவில் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளையும் கோர வேண்டியுள்ளது.  இவை மீது நாம் கவனம் கொள்ளுதல் மாறிவரும் உலகச் சூழலில் மிகமிக அவசியம் என்றே சொல்வேன்.

Related posts

Leave a Comment