கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பழவேற்காடு அறபு வம்சாவளிகளும் பழங்காலப் பள்ளிவாசலும்

Loading

கிரிகோரியன் நாள்காட்டி சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் எப்பொழுதும் கிறிஸ்துமஸ் பனிக்காலத்தில் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இஸ்லாமிய நாள்காட்டியோ நிலவின் இடப்பெயர்ச்சியைச் சார்ந்திருப்பதால் வெவ்வேறு பருவகாலங்களில் மாறிமாறி வரக்கூடிய வாய்ப்பை இயல்பிலேயே கொண்டிருக்கிறது.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது பழையபடியே திரும்பச் சுழலும் என்கிற கணக்கின்படி, என் பள்ளிப் பருவத்தில் பார்த்த கோடைக்கால ரம்ஜான் மீண்டும் இப்பொழுது வரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் விழாவை அதிகாலையில், உச்சி வெயிலில், மாலையில், இரவில் என மாறிமாறிப் பார்த்ததும் ஓர் இனிய அனுபவமாக இருந்தது.

மீலாது எனப்படும் இந்த ஆண்டுக்கான நபிகள் பிறந்த நாள் விழா 18-10-21 அன்று வந்திருந்தது. ஆம்பூரிலிருந்து இரவு 8 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸில் புறப்பட்டுச் சற்று தாமதமாக சென்னை வந்துசேர்ந்தேன். எங்கள் ஊரிலுள்ளதையும் சேர்த்து ரயில் பாதையின் இரு புறங்களிலும், சென்னையில் முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கக்கூடிய இடங்களைக் கடந்து அறைக்கு வந்துசேர நள்ளிரவாகி விட்டது. 180 கி.மீ. கொண்ட இந்தப் பயண வழியிலுள்ள ஏறக்குறைய 75-100 பகுதிகள் மின்விளக்குகளால், இளம் பச்சைப் பின்னணியில் வெண்ணிறப் பிறையும், நட்சத்திரமும் கொண்ட பல்வேறு வகைக் கொடித் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

சென்னையிலுள்ள தோழர்களான சாளை பஷீர், ஐஸ் ஹவுஸ் இஸ்மாயில் பாய், சீர்மை உவைஸ் ஆகியோருடன் இளம் தம்பி காயல்பட்டணம் அனீஸ் ஆகியோருடன் மீலாது விடுமுறை நாளில் சென்னை சுற்றுபுறம் ஒன்றுக்குப் போகலாம் என்று ஏற்கனவே முடிவாகியிருந்தது. அதன்படி, திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசலில் ஃபஜ்ரு தொழுதுவிட்டுத் தயாராக இருந்தேன். தோழர்கள் உவைஸும் இஸ்மாயில் பாயும் சரியான நேரத்துக்கு வந்தவுடன் ஒரு டீ குடித்துவிட்டு 6 மணிக்கு காரில் புறப்பட்டோம். சென்னை தினத்தின் மரபு நடையில் (Heritage Walk) கலந்துகொண்ட அனுபவத்தில் பழவேற்காடு போன்ற சென்னையின் புறநகருக்கு மட்டும் ஒரு நாளை ஒதுக்கி முழுமையாகப் பார்க்கும் ஆவல் வெகுநாளாக என்னுள் இருந்தது.

சென்னை கடற்கரை பீச் (ரயில்) நிலையம் எதிரிலுள்ள பெரிய அஞ்சல் நிலையம் அருகே சாளையார் அமர்ந்திருந்தார். திடீரெனக் குணங்குடி மஸ்தான் வலியுல்லா தர்கா நினைவு வரவே அங்கு போகலாமென நண்பர்கள் கூறினர். ராமநாதபுரம் தொண்டியில் பிறந்த மஸ்தானப்பாவின் (1792–1838) இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர். இன்றிலிருந்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோராயமாக 1815ல் அவர் ராயபுரம் வந்ததாகத் தெரிகிறது. வட சென்னைக்கேயுரிய குறுகலான எலி வளை போன்ற சந்துகளில் புகுந்து தேடிக் கண்டுபிடிக்கும் அவலத்தில் எங்கோ ஒரு மூலையில் மறைவாகக் கிடக்கிறது மஸ்தானப்பாவின் தைக்கா. 7 மணிக்குத் திறக்கப்படும் என்று தகவல் பலகையில் போட்டிருந்தாலும் யாரும் வருகிற மாதிரி தெரியவில்லை. வெளியிலிருந்தே என் சப்தநாடி முழுவதும் பணிந்து வெளி கேட்டிலிருந்தே ஒரு சலாம் சொன்னேன்.

குணங்குடி மஸ்தான் சாஹிபு தைக்கா

முந்தைய இரவு வீட்டிலிருந்து வந்துசேர நேரமெடுத்ததால் சரியான தூக்கமில்லை. எனவே கார் காசிமேட்டைத் தாண்டியபோது அப்படியே கண்ணயர்ந்தேன். பல்வேறு எண்ணங்களும் என்னுள் அலைமோதிக் கொண்டிருந்தன. தைக்கா என்பது அறபியா, ஃபார்சியா, உருதுவா எனத் தெரியவில்லை; ஆஸ்ரமம் என்ற பொருளில் அது வழங்கப்பட்டிருக்கும். ஷீஆக்களும் தம்முடைய வழிபாட்டுத் தலத்தை இமாம்பரா என்றே தனிச்சுட்டில் அழைக்கின்றனர்.

ஒரு மணிக்கும் சற்று கூடுதல் நேரமெடுத்த பயணம் முடிந்தபோது வண்டி பழவேற்காடு மருத்துவமனை அருகே நின்றிருந்தது. அருகிலிருந்த சிறு உணவகமொன்றில் பசியாறிவிட்டு நேராக ரியாதுல் ஹுதா அறபிப் பாடசாலைக்குச் சென்று அங்கிருந்த முதல்வர் அலீ ஆலிமைப் பார்க்க அமர்ந்திருந்தோம். சிலருக்கு நேரடியாக குறிப்பிட்ட துறையுடன் பெரியளவில் நிபுணத்துவம் இருக்காது. ஆனால், ஒவ்வொரு பிரச்னைகளின்போதும் உரிய நபர்களைக் கண்டறிந்து தீர்வுகளைத் தேடக்கூடிய புத்திக்கூர்மை இருக்கும். அவ்வாறான ஒருவர் அலீ ஆலிம் சாஹிப்.

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’ என்பார் திருவள்ளுர்.

அதாவது இந்தச் செயலை இப்படி இவர் முடித்துக் கொடுப்பர் என்று ஆராய்ந்து அந்தச் செயலை அவனிடம் விட்டுவிட வேண்டும் என்பதற்கேற்ப அலீ ஆலிம் நடந்துகொண்டார். நாம் போகும்போதே ஊரில் மீலாதுந்நபி கொண்டாட்டத்துக்கான மௌலூது ஓத ஊரிலுள்ள வீடுகளில் திரட்சியான கூட்டங்கள் ஆங்காங்கே களைகட்டியிருந்தன.

அதற்கும் முன்பாக மதரசா அலுவலகத்தில் வெளியூர் ஒன்றிலிருந்து வந்திருந்த குழு பஞ்சாயத்துப் பேசக் காத்துக்கொண்டிருந்தது. எங்களை தமது ஓய்வறையில் அமர்த்தி பேசிக்கொண்டிருந்தபோதே வேறொரு குழுவும் அங்கு வந்தது. அதையும் இவர்தான் சமாதானம் செய்துவைக்க வேண்டும். இடையிடையே எல்லோரையும் சிற்றுண்டி கழித்தீர்களா, அவருக்கு ஷுகர், சர்க்கரை போடாமல் டீ கொடுங்க என்று யாரையோ ஒருவரை சரியாக இனங்கண்டு பேசிக்கொண்டார். உற்சாகமான மனிதர்.

தலைமைப் பண்புள்ள ஆளுமை. அனேகமாக இவருடைய பேச்சுக்கு ஒரு ஏற்பு இருக்கும்போல் தோன்றியது. எங்களின் தேவையறிந்து மிகச் சரியான ஆள்களைச் சந்திக்க வைக்க ஏழெட்டு ஃபோன் செய்தார். எங்களை வழிகாட்டி அழைத்துச் செல்லக்கூடியவர் அலைபேசி அழைப்பை ஏற்காததால் உடனடியாக உள்ளூர்ப் பெண் ஒருவருக்கும் ஃபோன் செய்தார்.

பொதுவாக, கிராமங்களில் இன்றைக்கும் அந்த ஊரிலுள்ள பெரியவர்கள், சிறியவர்களென அத்தனை பேர்களும் தலைகட்டு அறிந்து வைத்திருப்பார். இவர் மதரசா முதல்வர் மட்டுமல்ல, அங்குள்ள மக்களின் அத்தனை நல்லது–கெட்டது, சுக–துக்கம் என அனைத்திலும் பங்கெடுக்கும் மாமனிதர்.

சிறிது நேரத்தில் பெரியவர் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் வந்தார். அவர் இப்பொழுது தன் மகன்கள், பேரப் பிள்ளைகளுக்கென பதினாறு அறைகளுடன் கூடிய ஒரேயொரு வாசலுள்ள கூட்டுக் குடும்பத்துக்கான வீட்டை கட்டிக்கொண்டுள்ளார். இரண்டு மக்களுள்ள வீடே நமக்கு இடைஞ்சல் என்று கருதும் இந்தக் காலத்தில் இவ்வாறாக 50 – 60 நபர்கள் தங்கும் வீடு என்பதை ஒருங்கிணைக்க அங்கு எவ்வளவு ஒத்திசைவு, இணக்கம், அன்பு, பரஸ்பர நம்பிக்கை இருக்கும் என்பது சொல்லாமலேயே விளங்கியது.

கூடாரமடித்துத் தங்கும் நாடோடி வாழ்க்கை கொண்ட அறபுப் பழங்குடியிடம் இருக்கும் பொதுப் பண்பாக நான் கண்டது சமமானவர்களில் முதன்மையானவராக இருப்பவரே ஷேக்காக வரமுடியுமென்பது. பேசிக்கொண்டிருக்கும்போதே அவரைப் போலவே (அறபு சாயலுடன்) இருந்த சலீமுத்தீன் சாஹிப் வந்தார். கூர்மையான நகைச்சுவையுணர்வு கொண்ட விவரமான நபர்.

மனிதர்களின் ஒரு தலைமுறைக் காலம் என்பது ஏறக்குறைய 30 – 40 ஆண்டுகளைக் கொண்டது. அறபுகளில் பெரும்பாலோர் தன் சமூகப் பின்னணி, தொழில், வர்க்க வேறுபாடுகளைக் கடந்து சர்வ சாதாரணமாக பத்து தலைமுறையின் பெயர்களை வெறும் மனக்கணக்கிலேயே சொல்லக் கூடியவர்கள். எழுத்தில் வைத்துள்ள குடும்பக் கொடிமரப் பிரதி ஒன்றை இவர் நமக்காக வெளியே எடுத்து படித்துக் காட்டினார். பத்து, பதினைந்து பக்கங்களில் நீளும் அந்த மனிதச் சங்கிலி நிச்சயம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றிருக்கிறது.

இந்த விவரங்கள் எழுத்தில் ஆவணமாக இருந்ததைக் கண்டு வியப்படைவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. மனித வரலாறு என்பதே புலப்பெயர்வின் வரலாறு என்பார்கள். மண்ணின் மைந்தர் கதையெல்லாம் வெறும் பாவ்லா.

அதன்படி இந்த அறபுக் குடும்பம் ஹிஜ்ரி 235ல் (கி.பி.852) மக்காவை விட்டு புறப்பட்டதாகவும் 500 ஆண்டுகள் கடலிலும், கடற்கரையோரங்களில் இடைநிறுத்தம் செய்து கடைசியாக ஹிஜ்ரி 750 (கி.பி.1350) வாக்கில் இங்கு பழவேற்காடு வந்து சேர்ந்ததாகவும் கூறினார். இது மிகச் சரியாக இப்னு பதூதா (1304 -1368) தென்னிந்தியாவுக்கு வந்து சேர்ந்த காலத்தோடு கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. மதுரை வரை வந்த இப்னு பதூதா இங்கு ஏற்கனவே அறபுக் குடியேற்றங்களைக் கண்டு திகைத்துப் போய் எழுதி வைத்ததும் வரலாறு.

ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் ஆட்சியின் ஒடுக்குமுறையால் தம் மூதாதையர் மதீனாவிலிருந்து வெளியேறியதாகக் கூறினார். அப்படியானால் அறபியாவிலிருந்து புறப்பட்டதாகக் கூறப்படும் ஆண்டு ஹிஜ்ரி 235 என்பதாக இருக்காது. அதற்கும் இன்னும் 170 – 180 ஆண்டுகள் முன்பாக இருக்கக்கூடும். ஹிஜ்ரி (40-95) அதாவது, 661 – 714 கி.பி.யில் ஹஜ்ஜாஜ் ஆட்சிக் காலத்தில் அக்குடும்பத்தின் புலப்பெயர்வு நிகழ்ந்திருக்கலாம். வரலாற்றில் இந்தவொரு விஷயம் மட்டும் பொருந்திப் போகவில்லை. மற்றபடி இத்தனை தலைமுறை கடந்து அதன் மூலத்தை நாம் சந்தேகிப்பதில் பயனேதுமில்லை. வரலாறு என்பதே கிடைக்காத தரவுகளில் புனைவை இட்டு நிரப்புவதுதானே!

சாதாரணமாகவே தமிழ் / இந்திய முஸ்லிம்களில் அறபுப் பின்னணியுள்ள மக்கள் சையதுகள், தங்கள்மார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் ஏதொவொரு விதத்தில் உருது அல்லது ஃபார்சி பண்பாட்டுப் பின்னணி கொண்டிருப்பர். ஆனால், பழவேற்காட்டிலுள்ள இந்தக் குடும்பத்திற்கு உருதுவின் வாடையே தெரியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இயன்றவரை தமிழ்மயமாகியுள்ள அதேநேரம் உணவு, உடை, உறையுள், வணிகம், சமயம் என சமூக இயக்கத்தின் அத்தனை விசையிலும் தம் தனித்தன்மையைப் பேணிவந்துள்ளனர்.

முன்பொரு காலத்தில் தாய்லாந்திலுள்ள பட்டாயாவுக்கு கடல் வாணிபமாக லுங்கி, ஆடைகள் என ஏற்றுமதி செய்த ஸ்டிக்கரின் மாதிரிப் படிகள் சிலவற்றை வைத்துள்ளார். இது முதல் உலகப் போர் வரைகூட ஐநூறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்திருக்கிறது. பிறகு உலகெங்கும் உருவான தேசம் என்கிற புதிய கருத்தாக்கம் வலுப்பெற்று நம் நாடு என்கிற கனவு எழுந்தது. இது உலகை பங்கு போட்டு ஆண்டுகொண்டிருந்த காலனியவாதிகளால் திரும்பத் திரும்பக் கலைத்துப்போட்டு மறுவரையறை செய்யப்பட்டன.

அதன்பிறகு செயற்கையாக எல்லைக்கோடுகள் வகுக்கப்பட்டபோது கடவுச்சீட்டு, விசா போன்ற கட்டுப்பாடுகள் அதிகரித்தன. அந்தப் பொறிமுறையைச் சட்டென உள்வாங்க முடியாத பழவேற்காடு முஸ்லிம் சமூகம் வணிகத்தில் தம் பிடியை இழந்தது.

இவர்களின் கதை இந்த திசையில் போக, ஊரின் முகவாயென உள்ள பகுதியிலிருந்த பழைய கல்லறைத் தோட்டங்கள் ஆர்வத்தைத் தூண்டின. இவற்றை கிறிஸ்தவக் கல்லறைகளென்று பொத்தம் பொதுவாகக் கூறிவிட முடியாது. இவை டச்சு, அதாவது இன்றைய டென்மார்க் நாட்டவர்களுடையது. டச்சு வணிகர்கள் இந்தப் பழவேற்காட்டிற்கு 1600களில் வந்தபோது அறபுக் குடியிருப்பைக் கண்டனர்.

டச்சு கல்லறைத் தோட்டம்

இந்த டச்சுக்கார கப்பல் மாலுமிகள், வணிகர்களென்று 60 -70 கல்லறைகள் இங்குள்ளன. ஏசுவின் சிலுவைக்குறி அரிதாகவும், மண்டையோடு, தேவதைகளெனப் புறசமய எச்சங்கள் அதிகமாகவும் கொண்டு கல்பாறைகளில் குடையப்பட்டுள்ளன. பிற வரலாற்றுக் குறிப்புகளிலுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் 50,000 தமிழர்கள் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.

பழவேற்காட்டின் இயற்கைத் துறைமுகத்திலிருந்து தூரக் கிழக்கு நாடுகளின் கரும்புத் தோட்டங்களுக்கு உடலுழைப்பாளிகளாகக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதை அறிந்து உடல் ஒரு கணம் நடுங்கிற்று. மனித வரலாறுதான் எத்தனை கொடூரங்களைக் கடந்து வந்திருக்கிறது. சென்னையில் ஒரு நானூறு ஆண்டுகளுக்கு முன்புவரைகூட இந்தக் கொத்தடிமை முறை இருந்திருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா என்று மாலையில் அந்தக் கடற்கரையில் அமர்ந்திருந்தபோது பேசிக்கொண்டோம்.

ஐரோப்பாவிலிருந்து கொலம்பஸ்சும் வாஸ்கோடகாமாவும் வரலாற்றின் இடைக்காலத்தில் புறப்பட்டபோது அவர்கள் போய்ச் சேர்ந்த ஊர்களிலெல்லாம் முஸ்லிம்களைப் பொதுவாகவும், அறபுகளைக் குறிப்பாகவும் பார்த்ததையும்; தென்னமெரிக்கப் பூர்வகுடிகளின் தலைவர்களை எப்படி அவர்கள் ‘சுல்தான்’ என்ற சுட்டுப்பெயரைக் கொண்டு அழைத்தனர் என்பதையும் நண்பர் உவைஸ் தரவுகளிலிருந்து சுட்டிக்காட்டிக் கூறினார்.

பழவேற்காடு கடற்கோபுரத்திலிருந்து ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் 80 கி.மீ. மட்டுமே என்று கேள்விப்பட்டு, அதன்பொருட்டு மீளகுடியமர்த்தப்பட்ட ஜமீலாபாத் என்கிற மீனவக் கிராமத்திற்குச் சென்றோம். 36 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1985 வாக்கில் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலத்தைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுத்துக்கொண்டு மாற்று ஏற்பாடாக அரசு இவர்களுக்கு இந்தப் பகுதியை வழங்கியுள்ளது. மத ரீதியாக முஸ்லிம்களாகவும், கடலைச் சார்ந்து மீன்பிடித் தொழிலுமாக இவர்களின் வாழ்க்கை ஒருவிதத்தில் போய்க்கொண்டிருக்கிறது.

பெரிய பள்ளிவாசல்
சின்ன பள்ளிவாசல்

பழவேற்காட்டில் பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல் என்று இரண்டு உள்ளன. அதிலொரு கல்வெட்டில் 1040 ஹிஜ்ரி – அதாவது பொது ஆண்டு 1630 என்று தெளிவாக உள்ளது. அதைவிட முக்கியமாக, இந்த ஜமீலாபாத் மையவாடியில் கைவிடப்பட்ட, பாழடைந்த பள்ளிவாசல் ஒன்று உள்ளது. பாம்பு, பூச்சியென புதர்கள் மண்டிய இடத்தில் உள்ளே நுழைய வாய்ப்பே இல்லாதவாறு கொடிகளும், முட்செடிகளும் தடுக்கின்ற கட்டடம். அதற்குத் தொட்டடுத்துள்ள இடத்தில் புதிய பள்ளிவாசல் பிரமாண்டமாக இருந்தது. அங்கு அமர்ந்து இருந்தவர்களிடம் பேசியபோது அவர்களிடம் போதிய தகவல்கள் இல்லை.

ஆனால், எங்களைப் போலவே வேறொரு குழு சில ஆண்டுகளுக்கு முன்னர் வரலாற்றுத் தொன்மங்களை ஆய்வுசெய்ய வந்துசென்றிருக்கிறது. அவர்கள் பழவேற்காடு அறபுகளை, அங்குள்ள மூன்று பள்ளிவாசல்களை, கல்லறைத் தோட்டங்களில் எஞ்சியுள்ள தொன்மங்களின் நதிமூலம், ரிஷிமூலத்தைப் பார்த்துச் சென்றுள்ளனர். அவர்கள் தம் முதற்கட்ட விசாரணையில் இந்த ஜமீலாபாத் பள்ளிவாசல் தமிழகத்தின் மிகப் பழமையான சில பள்ளிவாசலில் ஒன்றாக இருக்கக்கூடுமென்று பதிவு செய்திருக்கின்றனர். அந்தப் பள்ளிவாசல் கிட்டத்தட்ட கல்குவியலாகச் சரிந்து கிடக்கிறது.

மாலையில் மக்ரிப் தொழுகையின்போது மீஞ்சூர் பள்ளிவாசலில் இடைநிறுத்தம் செய்து டீ குடித்தோம். ரெயில் நிலையச் சந்திப்பில் பயங்கரப் போக்குவரத்து நெருக்கடி. ஒரு அவசர ஊர்தி பத்து நிமிடங்களாக கத்திக்கொண்டிருந்தது. தொழுகை முடித்து வந்த சில இளைஞர்கள் உடனடியாக எந்தவொரு தயக்கமுமின்றி நெரிசலை சீர்செய்யத் தற்காலிகமாக ட்ராபிக் போலிஸ்காரர்களாக மாறிமாறி ஐந்தே நிமிடங்களில் நோயாளியோ, பிரசவ கர்ப்பிணியோ இருந்த அந்த வேன் போகுமளவுக்குப் பாதையை ஏற்படுத்தித் தந்தனர்.

அதேபோன்று உள்ளூரிலுள்ள இளைஞர்களின் துணையுடன் முதல்கட்டமாக ஜமீலாபாதில் கைவிடப்பட்டிருக்கும் பழைய பள்ளிவாசலின் புதர்களை அகற்ற வேண்டும் என்று தோன்றியது. அதற்கு அந்தப் பகுதியிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களின் துணையும், உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் பணி முடிந்துவிடும். பிறகு வெளியில், சென்னையிலுள்ளவர்கள் முதல்கட்டமாக இதுபோன்ற தொன்மங்களை, வரலாற்றின் எச்சங்களைப் பராமரிக்கும் தன்னார்வலர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று அவர்களைக் கொண்டு முதல்கட்ட ஆய்வுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யலாம்.

அதன்பிறகு தொல்லியல் துறை அதிகாரிகள், கல்வெட்டாய்வாளர்கள் என நெடுகப் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால்தான் திருக்குர்ஆன் உலகைச் சுற்றிப் பார்க்கும்படி அடிக்கடி கூறுகிறதோ என்னவோ…? பழவேற்காடு துறைமுகத்திலிருந்து கப்பலேறி சொந்த நாட்டிற்கு ஒருநாளும் திரும்பி வரமுடியாமல் எங்கோ தொலைதூர பூமிக்குச் சென்றுவிட்ட அந்த மக்களை எண்ணிக்கொண்டேன். அன்றிரவும் சரியாகத் தூங்கவில்லை,

மேலதிக வாசிப்புக்கு:
1. Pulicat and Sadras
2. பழவேற்காடு — மரபு நடை

Related posts

4 Thoughts to “பழவேற்காடு அறபு வம்சாவளிகளும் பழங்காலப் பள்ளிவாசலும்”

 1. Muhammed Sulthan Baqavi

  அருமை
  ஒன்றாக பயணித்ததை போன்ற ஓர் உணர்வு

 2. salai basheer

  நதீமின் எழுத்து மின்னுகின்றன. இனி மெல்ல எழுதுவதற்குள் நழுவ வேண்டியதுதான் நதீம். எழுதியே ஆக வேண்டும்

 3. அன்வர்

  பழவேற்க்காடு நடை இனிக்கிறது நதிம் பாய் எழுத்துகளில் வாழ்த்துகள்

 4. மஹ்மூது ரஜ்வி

  ஒன்றாக பயணித்த உணர்வு எளிய தமிழில் இனிய நடை. வாழ்த்துகள்.

Leave a Comment