மாநாடு திரைப்படமும் முஸ்லிம்களும்
சுரேஷ் காமாட்சி தயாரித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. கடந்த நவம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் மூன்றே வாரங்களில் 53 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
படம் வெளியானது முதலே ஏராளமான நேர்மறை விமர்சனங்கள் இதற்கு வந்தன. பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்திருக்கிறது ‘மாநாடு’. குறிப்பாக, முஸ்லிம்கள் இதைத் தம் வலிகளைப் பேசும் படமாக உணர்கிறார்கள். முஸ்லிம்களின் உள்ளக்குமுறல்களைப் பிரதிபலித்த சிறப்பான திரைப்படம் என்று பாராட்டி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் படக்குழுவினருக்கு கேடயம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதை பலருக்குத் தெரிந்திருக்கக்கூடும் என்றாலும், கதைச் சுருக்கத்தை ஒருமுறை பார்த்துவிடுவோம். ஸெரீனா பேகம் எனும் மணப்பெண்ணைக் கடத்திச் சென்று தன் நண்பன் மூர்த்திக்கு திருமணம் செய்துவைப்பதற்காக கதாநாயகனான அப்துல் ஹாலிக் துபாயிலிருந்து கோவைக்கு வருகிறார். எதிர்பாராத விதமாக அவர் காவல்துறையினரிடம் சிக்குகிறார். அவர்கள் ஹாலிக்கை வைத்து முதலமைச்சரைக் கொன்றுவிட்டு இவர்மீது தீவிரவாதப் பழிசுமத்தியதுடன் அவரைச் சுட்டுக் கொலைசெய்து விடுகிறார்கள்.
ஆனால், கதாநாயகனுக்கு அதே நாள் திரும்பவும் ஆரம்பிக்கிறது. நடந்தவற்றை இம்முறை சரிசெய்ய அவர் முயற்சிக்கிறார். ஆனாலும் மறுபடியும் அவர் கொல்லப்பட்டுவிடுவதுடன், அந்த நாள் ஆரம்பித்த இடத்துக்கே மீண்டும் வந்துசேர்கிறார். பின்னர், தனக்கு இந்த நாள் ரிப்பீட் ஆவதை அவர் புரிந்துகொள்கிறார். அதன் பிறகே கதை சூடுபிடிக்கிறது. மாநாட்டில் முதலமைச்சர் கொல்லப்படுவதை கதாநாயகன் தடுப்பாரா, காவல்துறையின் சதித் திட்டம் எத்தகையது, அதை அவர் முறியடிப்பாரா என்பனவே படத்தின் மீதிக்கதை.
தமிழ்ச்சூழலுக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத கால வளையம் (டைம் லூப்) முறையைக் கொண்டு நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஒரு வணிக திரைப்படம் மாநாடு. முஸ்லிம் கதாநாயகனைக் கொண்டிருப்பதுடன், முஸ்லிம் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக தீவிரவாதப் பழி சுமத்தப்படுவது குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசியிருப்பதுதான் படத்தின் தனிச்சிறப்பு. இதை வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினரின் துணிச்சலான முயற்சி என்றே சொல்லத் தோன்றுகிறது.
இந்திய சினிமாவில் முஸ்லிம்கள் குறித்த பதிவு எப்படியிருந்திருக்கிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முஸ்லிம்கள் வலதுசாரிகளாலும் லிபரல்களாலும் எப்போதும் வன்முறையாளர்களாக, பெண் வெறுப்பாளர்களாக, மத வெறியர்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்த சூழலில், மாநாடு திரைப்படம் இந்தப் போக்கிற்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
முஸ்லிம்களை மையப்படுத்தியே இன்றைக்கு இந்திய அரசியல் சுற்றிச்சுழல்வதை நாம் அறிவோம். அவர்கள்மீது அச்சத்தையும் துவேசத்தையும் ஏற்படுத்துவதன் வழியாகவே இந்துத்துவமும் பெரும்பான்மைவாதமும் தம் இருப்பை வலுப்படுத்தியிருக்கும் நிலையில், இஸ்லாமிய வெறுப்புக்கு எதிரான படமாகவும் மாநாடு வெளிவந்திருக்கிறது. முஸ்லிம்கள்மீது காவல்துறை பொய் வழக்கு புனைவது, அரசியல் லாபங்களுக்காக மதக் கலவரம் தூண்டப்படுவது முதலான விஷயங்களை அது அழுத்தமாகப் பலமுறை பதிவு செய்கிறது.
இந்தப் படம் சிவன், அல்லாஹ், ஏசு என எல்லாக் கடவுள்களையும் சமதளத்தில் வைத்து அணுகுகிறது. அதேபோல், நாயகன் அப்துல் ஹாலிக் ஒரு முஸ்லிம் பெண்ணை தன் நண்பன் மூர்த்திக்கு திருமணம் செய்து வைக்கிறான். இதுபோன்ற காட்சிகளில் இஸ்லாமியப் பார்வையாளனுக்கு நிச்சயம் மாற்றுக் கருத்துகள் இருக்கும். ஆனாலும், யாரும் அவற்றை விவாதமாக்கவில்லை. கதையின் மையமாக முஸ்லிம்கள் பலிகடாவாக்கப்படுவதும், அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியும்தான் இடம்பெறுவதால் முஸ்லிம்கள் படத்தை வெகுவாகக் கொண்டாடினர்.
“அமெரிக்காவுல ஒருத்தன் நூறு பேரைக் கொன்னா அவன் சைக்கோ, அதுவே ஒரு இஸ்லாமியன் கொன்னான்னா அவன் டெரரிஸ்டா” போன்ற வசனங்கள் முஸ்லிம்களின் அன்றாடப் பேச்சுகளிலும் இடம்பெறுபவை. இப்படி சாமானிய முஸ்லிம்களின் குரல் படத்தின் முக்கியக் காட்சிகளில் ஒலிக்கின்றன. அதுபோல, பாபர் மசூதி தகர்ப்பு, கோவைக் கலவரம் போன்ற சம்பவங்கள் நினைவுகூரப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய விஷயம் என்று படுகிறது. ஆனால், முஸ்லிம்கள்மீது பொய் வழக்கு புனையப்படுதல், சிறைவாசிகள் விவகாரம், குண்டு வெடிப்பு வழக்குகளில் அவர்கள் சிக்கவைக்கப்படுதல் போன்றவை செய்தி ஊடங்களிலோ பிற தளங்களிலோ போதிய அளவு கவனம் பெறாதது ஏன் என்று தெரியவில்லை.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் படம் பழங்குடியினர் மீது காவல்துறை மேற்கொள்ளும் அட்டூழியங்களை ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தது. மாநாடு படத்தைப் பார்க்கும்போது, ‘தற்காலச் சூழலில் பழங்குடி பிரச்னைகளைப் படமாக்குவதை விட முஸ்லிம் பிரச்னைகளைப் படமாக்குவதில் சவால்கள் அதிகம்; அதற்குக் கூடுதல் துணிச்சல் வேண்டும்’ என்று தோன்றியது. மாநாடு திரைக்கு வரும் முன்பு, ஒரு போஸ்டரில் ‘Stand up for what is right even if it means standing alone’ என்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். நாங்கள் எதற்கும் தயார் என்பதைத்தான் இதன்மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறார்களோ என்னவோ!
தற்காலச் சூழலில் மாநாடு போல இன்னும் பல படங்கள் வெளியாக வேண்டிய தேவை இருக்கிறது. இன்றைக்கு தலித் இயக்குநர்கள் எடுக்கும் திரைப்படங்களையும், ஜெய்பீம் போன்றவற்றையும் அநேக முஸ்லிம்கள் வரவேற்று மகிழ்கின்றனர். தங்களைப் போன்றே ஒடுக்கப்படும் இன்னொரு சமூகம் குறித்த பதிவு அந்தத் திரைப்படங்களில் இடம்பெறுவது அவர்களுக்கு ஒருவகையில் கிளர்ச்சியூட்டுகிறது. எதிர்காலத்தில் தங்களைப் பற்றிய பதிவும் சினிமாவில் இடம்பெறும் என்ற அழுத்தமான நம்பிக்கையையும் அது கொடுக்கிறது.
இறுதியாக, சினிமாவுக்கு முஸ்லிம்கள் எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்படுவது குறித்தும் இங்கு சொல்லியாக வேண்டும். இது யதார்த்தத்துக்குப் புறம்பான ஒரு குற்றச்சாட்டு என்றாலும், முஸ்லிம்களுள் பலரும் இதை வலியுறுத்திச் சொல்லி வருகின்றனர். இஸ்லாமிய நோக்கிலிருந்து பார்த்தால், திரைப்படங்களில் விரவிக் கிடக்கும் ஆபாசமும் வன்முறையுமே முஸ்லிம்களை சினிமாவிலிருந்து அந்நியப்படுத்தும் காரணிகளாக விளங்க முடியும். சினிமா எனும் கலை வடிவத்தை அவர்கள் புறக்கணிக்கவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள் திரைப்படம் பார்ப்பார்கள். அதிலும் முஸ்லிம், இஸ்லாம் சார்ந்த படங்களை உற்சாகத்துடன் வரவேற்கவும் கொண்டாடவும் செய்வார்கள். சினிமாவை ஹறாம் என்று அவர்கள் ஒதுக்குவதாகச் சொல்வது ஒரு வழமையான stereotypical குற்றச்சாட்டு மட்டுமே.