கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விவகாரம்: சட்ட வல்லுநர்கள் சொல்வதென்ன?

Loading

தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கிற குரல்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைக்கவும், முன்கூட்டியே விடுதலை செய்யவும் மத்திய – மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவு மாநில அரசுக்கு கைதிகளை முன்விடுதலை செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது. அதனடிப்படையில், தலைவர்களின் பிறந்தநாள்கள், சுதந்திர தினம் அல்லது குடியரசு தினம் போன்ற நாட்களில் கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையின் விடுதலை செய்வது வழக்கம்.

தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணாவின் நூற்றாண்டின்போதும், 2017ம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டின்போதும் சிறைவாசிகள் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டனர். கடந்த செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை 15.11.2021 அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையின் சில விதிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு எதிராக உள்ளதாகக் குரல்கள் எழுந்துள்ளன. பொது மன்னிப்பின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படும்போது, முன்விடுதலைக்கான முழு தகுதியும் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளின் மீது மட்டும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. தற்போதும் அதே புகார் மேலெழுந்துள்ளது.

இந்தப் பின்னணியில், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை திமுக அரசு விடுதலை செய்ய வேண்டும் எனப் பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை வைக்கப்படுகிறது. திமுகவின் கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இதே கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் “20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தொடர்ந்து பாரபட்சம் நிலவி வருகிறது என்கிறார் வழக்கறிஞரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நிஜாமுதீன். மேலும் அவர் கூறுகையில், “2008ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டையொட்டி சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டபோதும், தகுதியுள்ள பல முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படவில்லை. இதே நிலைதான் 2018ம் ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டின்போதும் தொடர்ந்தது. பல முஸ்லிம் சிறைவாசிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றிருந்தனர். ஆனால், தமிழக அரசு அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றது.

2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் இல்லாத ‘Violence on Communal/Religious basis’ என்ற பிரிவு தற்போதைய அரசாணையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதைக் காரணம் காட்டிதான் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை மறுக்கப்படுகிறது. சட்ட ரீதியாக அவர்களை விடுதலை செய்ய எந்தத் தடையும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது ஏமாற்றமே எஞ்சியுள்ளது. திமுக அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என நம்புகிறோம். ஆயுதம் மற்றும் வெடிபொருள் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படாத 21 ஆயுள் தண்டனை முஸ்லிம் சிறைவாசிகள் தற்போதும் சிறையில் இருந்து வருகின்றனர். முதல்கட்டமாக அவர்களையாவது விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்” என்றார்.

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில், “சட்டப்படி ஒரு ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவிட்டால் அவரை விடுதலை செய்வதில் எந்தத் தடையும் இல்லை. ஒருவர் தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்ட பிறகு அவர் என்ன குற்றம் செய்தார் என்பதைப் பார்க்க வேண்டிய தேவையில்லை. தண்டனைக் காலம் முடியும் முன்னரேகூட ஒருவரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அரசியலமைப்பின் 161வது விதியின் கீழ் அதிகாரம் உள்ளது. ஒரு சிறைவாசியின் நடத்தைக்கான நற்சான்று இருப்பதே விடுதலை செய்வதற்கு போதுமானது. இவ்வாறு விதிகள் தெளிவாக இருந்தாலும் சிறைவாசிகள் விடுதலை என்பது பாரபட்சமாக, தன்னிச்சையாகத்தான் இதுவரை கையாளப்பட்டு வந்திருக்கிறது.

இதில் திமுக – அதிமுக, பாஜக – காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே பெரிய வேறுபாடு இருப்பதில்லை. எல்லாக் கட்சிகளும் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுக்கு வேண்டியவர்களை விடுதலை செய்துள்ளன. திமுக அரசு லீலாவதி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட திமுகவினரை முன்கூட்டியே விடுதலை செய்தது. அதைப் போலவே அதிமுக அரசு தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுகவினரை விடுதலை செய்தது.

ஒருவரை விடுதலை செய்ய சம்பந்தப்பட்ட சிறைவாசி மனம்திருந்தி சமூகத்தில் மீண்டும் வாழத் தயாராக உள்ளாரா என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, வேறெந்தக் காரணமும் தேவையில்லை. ஆனால், இங்கு நடப்பது ஒரு முழுமையான அரசியல் முடிவு. தமிழக அரசு யாரை விடுதலை செய்ய நினைத்தாலும் அதற்குச் சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லை. இதற்கான விதிகளை மாநில அரசுதான் வகுக்கின்றது. இதுபோன்ற விவகாரங்களில் மத்திய அரசின் நிலைப்பாட்டையே மாநில அரசுகள் கடைப்பிடிக்கின்றன. இந்த முடிவுகளை பெரும்பாலும் அரசியல் காரணங்களே தீர்மானிக்கின்றன.

தன்னிச்சையான விதிகளைக் காரணம் காட்டி தகுதியுள்ளவர்களை விடுதலை செய்ய மறுப்பது சட்டவிரோதமானது. குறைந்தபட்சம், ஒருவரை விடுதலை செய்ய மறுப்பதற்குரிய காரணங்களையாவது அரசாங்கம் சொல்ல வேண்டும். ஆனால், விடுதலை மறுக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே அதற்கான காரணத்தை அரசாங்கம் தெரிவிக்கிறது. அவையும் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருப்பதில்லை. நீதிமன்றம் சில வழக்குகளில் தலையிட்டு சிறைவாசிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. முன்விடுதலை செய்வதை உரிமையாகக் கோர முடியாது என அரசாங்கம் கூறுவது சட்டப்படி சரி என்றாலும், அந்த நடைமுறை பாரபட்சமின்றி கையாளப்பட வேண்டும்.”

2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உமர் ஃபாரூக் என்ற முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசி ஒருவர் தன்னை விடுதலை செய்யக்கோரி வழக்கு தொடுத்தார். அமைதிக்குக் குந்தகம் ஏற்படுதல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகிய காரணங்களாலேயே அவரை விடுவிக்க மறுத்ததாக அரசாங்கம் வாதிட்டதை அப்போது நீதிமன்றம் ஏற்கவில்லை. சட்டம் ஒழுங்கையும் பொது அமைதியையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அதைக் காரணம் காட்டி இவரை விடுதலை செய்வதைத் தடுத்து நிறுத்த முடியாது எனக்கூறி உமர் ஃபாரூக்கை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகளை அரசு விடுதலை செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்திருக்கும் இச்சூழலில், தமிழக அரசு இதற்கு விரைந்து ஒரு தீர்வு காண வேண்டும்.

Related posts

Leave a Comment