இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 3) – சையித் குதுப்
[சையித் குதுப் எழுதிய ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ (‘கசாயிஸ் அத்-தசவ்வுர் அல்-இஸ்லாமி’) நூலுக்கான முன்னுரையின் மூன்றாவதும் இறுதியானதுமான பகுதியை இந்தப் பதிவில் தருகிறோம். முன்னுரையின் முந்தைய பகுதிகளைப் பார்க்க: பதிவு 1, பதிவு 2. இனி வரும் பதிவுகளில் நூலின் அத்தியாயங்களை பொருத்தமான பகுதிகளாகப் பிரித்து தொடராக வெளியிட இருக்கிறோம்.]
இந்தப் புத்தகத்தில் நான் பின்பற்றிய மற்றுமொரு வழிமுறை
இஸ்லாமியச் சிந்தனையின் பிழைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தவொன்றையும் இதில் குறிப்பிட்டு நான் பதிலளிக்கவில்லை. அவ்வாறு செய்தால் அது என் முழு முயற்சியையும் வேண்டி நிற்கும், இந்தப் புத்தகத்தின் பேசுபொருளைவிட்டு என்னைத் திசைமாறச் செய்துவிடும். திருக்குர்ஆனில் வந்துள்ளவாறு முழுமையான, அனைத்தையும் உள்ளடக்கிய, ஒத்திசைவான இந்தக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளையும் அடிப்படைகளையுமே நான் எடுத்துரைக்க முயற்சித்துள்ளேன்.
பிழைகளைக் குறிப்பிட்டு அவற்றிற்கு இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளைக் கொண்டு மறுப்புரை வழங்குவது சிக்கல்கள் மிகுந்த ஒன்றாகும். அது இன்னும் பல புதிய பிழைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இஸ்லாம் குறித்த ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள நூல்களில் இதற்கான உதாணரங்களை நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். அதேபோன்று ஒரு குறிப்பிட்ட சூழலில் நிகழ்ந்த ஒரு பிழையை விமர்சித்து எழுதப்பட்டுள்ள ஆய்வுகளிலும் இத்தகைய உதாரணங்களைக் காண்கிறோம்.
‘இஸ்லாம் வாளால் பரவிய மார்க்கம்’ என்ற தீவிர கிருஸ்தவர்கள் மற்றும் சியோனிஸ்டுகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக நம்மவர்கள் ‘ஜிஹாத் என்பதே ஒரு தற்காப்பு யுத்தம்தான்’ என்றாக்கி விட்டார்கள். இஸ்லாமிய உலகில் நடைபெற்ற போர்களெல்லாம் தம்மைக் காத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தற்காப்பு யுத்தங்கள்தாம் என்று வலிந்து நிரூபிக்க முனைந்தார்கள். இஸ்லாம்தான் மனித சமூகத்திற்கு அருளப்பட்ட இறுதியான மார்க்கம், அதை உலகில் நிலைநாட்டுவதில்தான் மனித சமூகத்திற்கு நன்மை அடங்கியுள்ளது என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
‘மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை’ என்பது கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும், இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டுவதன் அடிப்படையில் அல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் என முழு மனித சமூகமும் இஸ்லாமிய ஆட்சியின் நிழலில்தான் அமைதியாக வாழ முடியும். ஜிஹாது என்பது இத்தகைய ஓர் ஆட்சியை நிறுவுவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்குமான ஒரு வழிமுறையேயாகும். இஸ்லாமிய அமைப்பின் நிழலில், இஸ்லாமியச் சட்டத்தின் பாதுகாப்பில் முஸ்லிம்கள் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் தாம் விரும்பும் கொள்கைகளோடு, கண்ணோட்டங்களோடு வாழ முடியும்.
மேலும் ஒரு குறிப்பிட்ட சீர்கேட்டிற்கு மறுப்புரை கொடுக்கும்விதமாக எழுதப்பட்டுள்ள நூல்களிலும் இத்தகைய போக்கையே காண்கிறோம். அது வேறொருவகையான சீர்கேட்டிற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஷெய்க் முஹம்மது அப்துஹு மற்றும் ‘இஸ்லாமிய மார்க்க சிந்தனையைப் புதுப்பித்தல்’ தலைப்பில் எழுதிய இக்பால் ஆகிய இருவருமே இத்தகைய ஒரு பிழைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இமாம் முஹம்மது அப்துஹு அறிவுச் செயல்பாடு முடங்கியிருந்த ஒரு சூழலை எதிர்கொண்டார். அவர் வாழ்ந்த சூழலில் இஜ்திஹாதின் வாயில்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. இறைச்சட்டங்களைப் புரிந்துகொள்வதற்கு அறிவைப் பயன்படுத்தக்கூடாது என்ற சிந்தனை பரவியிருந்தது. அறிவுச் செயல்பாடற்ற பிற்காலத்தில் எழுதப்பட்ட நூல்களே போதுமானவையாகக் கொள்ளப்பட்டன. மற்றொரு புறம் அவர், அறிவையே கடவுளாக வழிபடும் ஐரோப்பாவைக் கண்டார். அறிவுத்தளத்தில் அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றி அவர்களை இந்நிலைக்குக் கொண்டு சென்றது. இத்தோடு இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் மீது ஓரியண்டலிஸ்டுகளின் தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருந்தது.
இத்தகைய குறிப்பிட்ட ஒரு சூழலில்தான் அடைக்கப்பட்ட இஜ்திஹாதின் வாயில்களைத் திறக்கவும் முடக்கப்பட்ட அறிவின் செயல்பாட்டைத் தொடங்கி இஸ்லாமிய சிந்தனையில் புகுந்துவிட்ட அறியாமைக்கும் வழிகேட்டிற்கும் எதிரான போரைத் தொடங்கவும் அவர் ‘மனித அறிவை’ குர்ஆன் வசனத்திற்கு இணையான ஒன்றாக ஆக்கினார்.
அறிவுச் செயல்பாட்டை முடக்கியவர்களுக்கும் அறிவைக் கடவுளாக வழிபடுபவர்களுக்குமிடையே வாழ்ந்த அவர் மனிதனுக்கு வழிகாட்டுவதில் அறிவுக்கு ‘வஹி’க்கு (இறைவேத வெளிப்பாடு) இணையான பங்கு உள்ளது என்றார். மனித அறிவின் எல்லையை உணராமல் இறை ‘வஹி’க்கும் மனித அறிவுக்குமிடையே முரண்பாடு தோன்ற வாய்ப்பில்லை என்றார்.
மனித அறிவு தான் வாழும் காலத்தையும் தன்னைச் சுற்றியுள்ள சூழலையுமே எல்லையாகக் கொண்டது. அதற்கு அப்பாலுள்ள விசயங்களை அதனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. திருக்குர்ஆனின்மூலம் வெளிப்பட்ட சில அடிப்படை உண்மைகளை குறுகிய எல்லையுடைய மனித அறிவால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
ஷெய்க் முஹம்மது அப்துஹு தம்முடைய ‘ரிஸாலத்துத் தஹ்ஹீத்’ என்ற நூலில் கூறுகிறார், “இறைச் செய்தியைக் கொண்டுவரக்கூடிய ‘வஹி’ அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். மனித அறிவும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். அல்லாஹ்வின் சான்றுகள் ஒன்றையொன்று வலுப்படுத்தவே செய்யும். ஒன்று மற்றொன்றிற்கு முரணாக அமையாது.”
பொதுவான கருத்தில் இது சரியான ஒன்றுதான். ஆனால் இறை வஹியும் மனித அறிவும் ஒருபோதும் சமமாகிவிட முடியாது. ஒன்று மற்றொன்றைவிட பெரியது, அனைத்தையும் உள்ளடக்கியது. வஹிதான் அசலானது. மனித அறிவு அதன்பால் அடைக்கலம் தேடக்கூடியது. வஹியை உரைகல்லாகக் கொண்டே அறிவின் செயல்பாடு ஆராயப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பிழைகள், சீர்கேடுகள் சரிசெய்யப்படுகிறது. நிச்சயமாக அவை ஒன்று மற்றொன்றிற்கு முரணமாக அமையாது. ஆனால் ஒன்று மற்றொன்றின் உரைகல், அடிப்படை. இரண்டும் சம்மானவை அல்ல. குறைபாடுகள் மற்றும் இச்சைகளால் பாதிக்கப்படாத ‘அறிவு’ என்று இந்த உலகில் இல்லவே இல்லை.
திருக்குர்ஆனின் இறுதிப் பாகமான ‘அம்ம’விற்கு ஷெய்க் அளித்த விளக்கவுரையில் அவரது இந்த நிலைப்பாடு தெளிவாகவே வெளிப்படுகிறது. அவரது மாணவர் ஷெய்க் ரஷீத் ரிழா மற்றும் அவரது மாணவர் ஷெய்க் மஃரிபி ஆகியோர் எழுதிய விளக்கவுரைகளிலும் இந்தச் சாய்வு தெளிவாகவே புலப்படுகிறது. அறிவுக்கு முரணாக அமையக்கூடாது என்பதற்காக குர்ஆனின் வசனங்களுக்கு வலிந்து விளக்கங்களைக் கூறியுள்ளார்கள். இதுதான் இந்த நிலைப்பாட்டினால் ஏற்பட்ட மிகப் பெரிய ஆபத்து.
எல்லோருடைய அறிவையும் சமமாகக் கருத முடியாது. எனது அறிவு சரியெனக் காண்பதை உங்களின் அறிவு தவறெனக் காணலாம். நீங்கள் சரியெனக் காண்பதை வேறு ஒருவர் தவறெனக் காணலாம். குறைபாடுகள், இச்சை மற்றும் அறியாமையைவிட்டும் தூய்மையான அறிவு என்று எதுவும் இல்லை. திருக்குர்ஆனைக் கொண்டே மனித அறிவை மதிப்பிட வேண்டுமே அன்றி இரண்டும் ஒன்றெனக் கூறினால் அது பெரிய அளவில் சீர்குலைவை ஏற்படுத்திவிடும்.
இவையனைத்தும் குறிப்பிட்டதொரு வழிகேட்டை எதிர்கொண்டபோது ஏற்பட்ட விளைவுகளே. விசயம் சரியான முறையில் அணுகப்பட்டிருந்தால் மனித அறிவும் இறை வஹியும் கூடுதல் குறைவின்றி தமக்கான களத்தையும் செயல்பாட்டையும் பெற்றிருக்கும்.
வஹியின் தளத்தில் அறிவின் செயல்பாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. வஹியைப் புரிந்துகொள்வதில் அறிவின் செயல்பாடு மிகவும் இன்றியமையாதது. ஆனால் அது வஹியை உரசிப் பார்க்கும் உரைகல் அல்ல. வஹியே அனைத்திற்குமான உரைகல். அதனைக் கொண்டு அனைத்தையும் உரசிப்பார்ப்பதே அறிவின் பணி.
கிழக்குலகில் கவிஞர் இக்பால் தடுமாற்றமுடைய சிந்தனைச் சூழலை எதிர்கொண்டார். அச்சிந்தனை கிழக்கில் காணப்பட்ட சூஃபித்துவத்தில் தம்மைத் தொலைத்துக் கொண்டிருந்தது. அது ஏற்படுத்திய எதிர்மறையான எண்ணங்கள் மனிதனைச் செயல்பாடற்றவனாக ஆக்கிக் கொண்டிருந்தது. உண்மையில் அது இஸ்லாத்தின் இயல்பு அல்ல. மற்றொருபுறம் மேற்குலகில் புலனறிவாதத்தையும் அனுபவ வாதத்தையும் எதிர்கொண்டார். அதேபோன்று ‘ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்’ என்ற நூலின் மூலம் ’அதிமனிதன் பிறந்துவிட்டான். கடவுள் இறந்துவிட்டார்’ என்று பிரகடனம் செய்த நீட்சேவின் பிரச்சாரத்தையும் எதிர்கொண்டார்.
அவர், இஸ்லாமியச் சிந்தனையில் புகுத்தப்பட்ட எதிர்மறை அம்சத்தையும் அழிவையும் நீக்க விரும்பினார். அனுபவவாத சிந்தனைப் பள்ளிகளைப்போல இஸ்லாமியச் சிந்தனையையும் அனுபவவாத எதார்த்தமாக நிருபிக்க விரும்பினார். ஆனால் அதன் விளைவாக மனிதனின் சுயத்தை வெளிப்படுத்துவதில் மீறலாகவே ஆனது. குர்ஆனிய வசனங்களுக்கு அவற்றின் இயல்புக்கெதிரான விளக்கம் அளிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். அனுபவத்திற்கு மரணமோ மறுமை நாளோ எல்லையில்லை என்று நிரூபிக்கும் நிலைக்கு உள்ளானார். இக்பாலின் கூற்றுப்படி, அனுபவமும் வளர்ச்சியும் மனித வாழ்வில் நிரந்தரமானவை. மனிதன் சுவனம் அல்லது நரகத்திற்குச் சென்ற பின்னரும் அவற்றைப் பெற்றுக் கொண்டேயிருக்கிறான்.
‘இவ்வுலகம் சோதனைக்களமும் செயற்களமுமாகும். மறுவுலகமே விசாரணை செய்யப்படும், கூலி வழங்கப்படும் இடமாகும்’ இதுதான் இஸ்லாத்தின் கண்ணோட்டமாகும். இந்த உலகத்தில் தவிர மறுவுலகில் மனிதனுக்கு செயல்பட அவகாசம் அளிக்கப்படாது. விசாரணை செய்யப்பட்டு கூலி வழங்கப்பட்ட பிறகு அங்கு புதிதாக செயல்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. ஆயினும் இவை, மனிதனின் சுயத்தையும் அதன் அழியாத்தன்மையையும் நிரூபிக்க முயலும் மெய்யியலாளர் ‘ஹெகல்’ இடமிருந்து மெய்யியல் சொல்லாடல்களை இக்பால் இரவலாகப் பெற்றதன் விளைவேயாகும்.
மற்றொருபுறம் அவர், ‘அனுபவவாதம்’ என்பதற்கு மேற்குலகம் கொடுக்கும் வரையறையைவிட விசாலமான வரையறையை வழங்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். அது அவர், முஸ்லிம்களின் ஆன்ம அனுபவத்தையும் இணைத்ததன் விளைவேயாகும். அனுபவத்திற்கு மேற்குலகம் வழங்கும் வரையறையில் ஆன்மாவின் பகுதிகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் அது புலனறிவாதத்தை அடிப்படையாகக் கொண்டே வளர்ச்சியடந்தது.
மேற்குலகின் சொல்லாடல்களை இரவலாகப் பெற்றதன் விளைவுதான் அவரை இந்த முயற்சியின் பக்கம் கொண்டு சென்றது. இதன்மூலம் உயிரோட்டமிக்க, உத்வேகமிக்க இக்பாலின் கவிதைகளை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. இஸ்லாமியச் சிந்தனையை புத்துயிர்ப்பு பெறச் செய்ததிலும் எழுச்சியடையச் செய்ததிலும் ஷெய்க் முஹம்மது அப்துஹு அவரது மாணவர்கள் மற்றும் கவிஞர் இக்பாலின் பங்கு மகத்தானது. (அல்லாஹ் இவர்கள் அனைவரின் மீதும் கருணை காட்டுவானாக) நான் கூறவிரும்புவது, குறிப்பிட்ட ஒரு வழிகேட்டிற்கு பதிலளிக்க வேண்டும் என்ற உணர்வு வேறு ஒரு வழிகேடு உருவாவதற்குக் காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதைத்தான். நாம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தை அதனுடைய பரிபூரணமான, அனைத்தையும் உள்ளடக்கிய, அதன் தனிப்பட்ட இயல்புக்கேற்ப, அதன் தனித்துவமான முறையில் எடுத்துரைப்பதே சிறந்ததாகும்.
இது மெய்யியல் குறித்தோ இறையியல் குறித்தோ பௌதீகவாதம் குறித்தோ எழுதப்பட்ட நூல் அல்ல. இது நிதர்சனத்தால் எழுதப்பட்ட, நிதர்சனத்தோடு உரையாடக்கூடிய ஒரு நூல்.
மனித சமூகத்தை அப்பியிருந்த காரிருளிலிருந்து அதனை விடுவிக்கவே இஸ்லாம் வந்தது. அந்தக் காரிருளில் அகப்பட்டு மனித சமூகம் வழிதெரியாமல் தடுமாறித் திரிந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சமூகத்திற்கு தனித்துவமிக்க ஒரு கண்ணோட்டத்தையும் இறைச்சட்டங்களின் ஒளியில் சீரான ஒரு வாழ்க்கையையும் அளிக்கவே இஸ்லாம் வந்தது. அன்று மனித சமூகத்தை அப்பியிருந்த காரிருள் இன்றும் மனித சமூகத்தை அப்பியிருக்கிறது.
வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் மனித சமூகத்தை வழிநடத்துவதற்காக ஒரு சமூகத்தை உருவாக்கவே இஸ்லாம் வந்தது. ஆனால் அந்தச் சமூகம் வழிகாட்டும் பொறுப்பையும் வழிகாட்டலையும் விட்டுவிட்டு மற்ற சமூகங்களைப்போல காரிருளில் தடுமாறிக் கொண்டிருக்கிறது!
இந்தப் புத்தகம் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிதர்சனமான வாழ்க்கை வழிமுறையை உருவாக்கும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளையும் அடிப்படைகளையும் – அல்லாஹ் விரும்பியவாறு – வரையறுப்பதற்காக செய்யப்படும் முயற்சியாகும்.
இந்தச் சிந்தனையைத் தெளிவுபடுத்துவது மனித அறிவுக்கும் உள்ளத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் முழு மனித சமூகத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் ‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளையும், இரண்டாவது பாகத்தில்* இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படைகளையும் விளக்கியுள்ளேன்.
குறிப்பு
* இந்த இரண்டாவது பாகத்தை எழுதி நிறைவு செய்யுமுன்னரே சையித் குதுப் வீரமரணம் எய்திவிட்டார். பிறகு பல்லாண்டுகள் கடந்த நிலையில் அவர் எழுதி முடித்திருந்த ஐந்து அத்தியாயங்களோடு கடைசி இரண்டு அத்தியாயங்களுக்கான குறிப்புகளையும் நீண்டதொரு முன்னுரையையும் எழுதி அவருடைய தம்பி முஹம்மது குதுப் அதனை 1986-ல் பிரசுரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.