கட்டுரைகள் காணொளிகள் மொழிபெயர்ப்பு 

“போபால் மோதல் கொலைகளை” ஊத்தி மூடுவதற்கான விசாரணை நாடகம் அம்பலம்! பகுதி 1

தொடர்கதையாகி வரும் மோதல் கொலைகளில் மிகப் பெரும்பாலானவை நன்கு திட்டமிட்டு நடத்தப்படும் பச்சைப் படுகொலைகள் என்பது பல்வேறு வழக்குகளிலும் ஐயமற நிரூபணமாகி வந்துள்ளன. என்றாலும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டதாக உதாரணங்கள் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள நெறிமுறைகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு எல்லாம்  தம்மிடத்தில் கால் மயிரளவு கூட மதிப்பில்லை என்பதையே இக்கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் தம்முடைய தொடர் நடத்தை மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு போலி மோதல் கொலைகளில் கொல்லப்படுவோர் எல்லாம் “சமூகத்திலிருந்து துடைத்தகற்றப்பட வேண்டிய தீயவர்கள்” என்றே நடுத்தர வர்க்கம் புரிந்து வைத்திருப்பது இக்கொலையாளிகளின் காரியங்களை எளிதாக்குகின்றது. திரைப்படங்களும் ஊடகங்களும் அவ்வாறு மோதல் கொலைகளை  நிகழ்த்தும் சீருடையணிந்த கொலையாளிகளை, தேசத்தை காப்பாற்ற வந்த நாயகர்கள் போல் கொண்டாடி மகிழ்வது ஆபாசத்தின் உச்சம். அரசியல் கட்சித் தலைவர்களும் இவை குறித்து கள்ள மௌனம் காப்பது வெட்கக்கேடு.

மாவோயிஸ்டுகள் என்று கூறி ஓடிசாவிலும், முஸ்லிம் பயங்கரவாதிகள் என்று கூறி மத்திய பிரதேசத்திலும் சென்ற மாதம் மோதல் கொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் பற்றி காவல்துறை கூறும் திரைக்கதைகள் சகிக்க முடியாதளவு மொக்கையானவையாகவும், ஓட்டைகளால் மட்டுமே ஆனவையாகவும் இருப்பது பற்றி அவர்கள் கொஞ்சம் கூட வெட்கப்படுவதாகத் தெரியவில்லை. காவல்துறைக் கூற்றுக்களின் அபத்தங்கள் பற்றி கேள்வி எழுப்புவதே கூட ‘தேசவிரோதம்’ என்று ஓலமிடுகிறது தேசப்பற்றை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் பா.ஜ.க. கும்பல்.

இந்நிலையில், போபால் மோதல் கொலைகள் பற்றி விசாரணை செய்வதற்கென அமைக்கப்பட்டுள்ள புலனாய்வுக் குழுக்கள் எந்தத் தடத்தில் பயணிக்கின்றன என்பது பற்றி ஆராய்வதற்காக The Quint வலைத்தளம் ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியுள்ளது. அது பற்றி அதன் தளத்தில் பிரசுரம் செய்யப்பட்டுள்ள முதல் அறிக்கையை கீழே மொழிபெயர்த்துத் தருகிறோம். அடுத்த அறிக்கை விரைவில்…

**************

தப்பியோடியதாகக் கூறப்படும் சிமி விசாரணைக் கைதிகள் எட்டு பேரைத் தேடி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் படலம், எந்தக் கட்டத்தில் மோதல் கொலைகளாக மாற்றம் பெற்றது? உண்மையிலேயே அது சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையாக இருந்திருந்தால், மூன்று முக்கிய படிமுறைகளை போலீஸ் பின்பற்றியிருக்க வேண்டுமென முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி விக்ரம் சிங் கூறுகிறார். அந்த மூன்று படிமுறைகள் பின்வருமாரு:

1. தகவல்

போலீஸுக்கு தகவல் கிடைத்ததுமே, முதலில் அவர்கள் தகவல் தெரிவித்தவர் நம்பத்தகுந்தவர்தானா என்பதையும், அவர் அளிக்கும் தகவலின் உண்மைத் தன்மையையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். அவை துல்லியமானவை என்று தெரியவரும் பட்சத்தில் தேவையான அளவு போலீஸ் படையுடன் விரைய வேண்டும். போதுமான போலீஸ் படை இல்லாத பட்சத்தில்,  இயன்ற அளவு படையுடன் செல்ல வேண்டும்.

2. உளவு பார்த்தலும் மதிப்பிடுதலும்

போலீஸ் முதலில் ஒற்றர்களை அனுப்பி தப்பியோடியதில் எத்தனை பேர் அங்குள்ளனர் என்றும், அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எவ்வளவு இருக்கின்றன என்றும் கண்டுபிடித்து வரச் சொல்ல வேண்டும். அதனைச் செய்த பிறகு, அவர்களை சுற்றி வளைத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும். சரணடைவதற்கான வாய்ப்பை வழங்குவதே இப்படி எச்சரிக்கை விடுப்பதற்கான நோக்கம்.

3. பலப் பிரயோகம்

அவர்கள் சரணடைய மறுக்கும் பட்சத்தில், அவர்கள் மீது குறைந்தபட்ச பலப் பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு போலீஸுக்கு உரிமையுண்டு. அவர்களை சரணடைய வைப்பதற்கான முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், எதிரிகள் தாக்குதலில் இறங்க முயல்வார்களேயானால் போலீஸும் பதிலுக்கு திருப்பிச் சுடலாம். என்றாலும், உயிர்நிலையான பாகங்களில் சுடாமல், இடுப்புக்குக் கீழ் மட்டும்தான் அவர்கள் சுட வேண்டும். இந்த மோதலில் போலீஸ் ஒருவேளை எதிரியை கொல்ல நேர்ந்துவிட்டால், புலனாய்வின் போது அதற்கான முறையான காரணத்தைக் கூறி தனது செயலுக்கான நியாயத்தை போலீஸ் விளக்க வேண்டும்.

“புலனாய்வுத் தகவல்களை வேண்டுமென்றே கசிய விடுதல்”

மாநில அரசின் புலனாய்வு, சிறையுடைப்பு பற்றி மட்டுமே கவனம் செலுத்தும் நோக்கத்தை கொண்டிருக்கிறது; மோதல் கொலைகள் பற்றி அது கண்டுகொள்ளப் போவதில்லை என்பதை The Quint-ன் ஸ்டிங் ஆபரேஷன் அம்பலப்படுத்துகிறது.

(The Quint பத்திரிக்கையாளர் அஷுதோஷ் சிங்கிடம் புலனாய்வுத் துறை அதிகாரி பேசிய உரையாடலின் சில பகுதிகளை கீழே தருகிறோம்)

அன்றிரவு இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்தனர். ஒருவரை அவர்கள் கட்டிப்போட்டு விட்டனர். ஆனால் மற்றவர் எதிர்த்துப் போராடியிருக்கிறார். எதிர்ப்பதை நிறுத்துமாறு அவரை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்கள். ஆனால் நேர்மையான அந்த காவலர் தொடர்ந்து போராடியதால் அவர்கள் அவரை கொலை செய்துவிட்டனர். தீபாவளி என்பதால் சுற்றிலும் வேறு யாருமே இல்லை.

அவர்கள் சிறையில் அராஜகம் செய்து வந்தார்கள். சிறைக் காவலர்களும் கூட அவர்களைப் பார்த்து அஞ்சினார்கள். அவர்களுடைய அறை பூட்டப்படுவது கூட இல்லை. உயர் அதிகாரிகள் அதனைக் கண்டுகொள்ளவே இல்லை. அப்படியிருக்க, கீழ்நிலைக் காவலர் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்?!

அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது; அதனைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார்கள். போதுமான அளவு பாதுகாப்பு இல்லாதது தான் ஆகப் பெரிய ஓட்டை. உண்மையைச் சொல்வதானால், சுத்தமாகவே பாதுகாப்பு பேணப்படவில்லை. சிறையதிகாரிகளைத் தான் இதற்கு பொறுப்பாக்க வேண்டும்.

அவர்கள் சிறைக்காவலரை கொலை செய்திருக்கிறார்கள். இருவர் மட்டும்தான் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. சிறையில் அவர்கள் நீண்ட காலமாக இருந்திருக்கிறார்கள். அனைத்தையும் கவனித்து வந்திருக்கிறார்கள். தப்பிச் செல்வதற்கான வழியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

நான் சொல்கிறேன், நான் எல்லா இடத்துக்கும் சென்று பார்வையிட்டேன். அவர்கள் எட்டு பேரும் மிகவும் எளிதாக தப்பிச் சென்றிருக்கிறார்கள். அதற்கு முற்றிலும் சாத்தியமிருக்கிறது. அவர்கள் நன்கு திட்டமிட்டிருக்கிறார்கள். சிறையில் அவர்கள் காலப்போக்கில் சிறைக்காவலர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். சிறை ஊழியர்கள் அவர்களுக்கு உணவு போன்றவற்றை எடுத்துக் கொண்டுபோய் தருவது வழக்கமாக இருந்திருக்கிறது. எனவே அவர்களுக்கு இடையில் ஒருவித பரஸ்பர நம்பிக்கை உருவாகியிருக்கிறது. எப்படியிருந்தாலும், அறைக்கதவு பூட்டப்பட்டிருக்கத்தான் வேண்டும்.

நாங்கள் சுவர் மீது ஏறி ஒத்திகை பார்த்தோம். நாங்கள் எட்டு பேர் வெறும் ஏழு நிமிடத்திற்குள் ஏறிவிட்டோம். ஒரேயொரு சுவர்தான உள்ளே இருந்திருக்கிறது. எனவே அவர்கள் எளிதாக ஏறிவிட்டார்கள். கொய்யா மரங்களிலிருந்து அவர்கள் தொடர்ந்து கட்டைகளை சேகரித்து வந்திருக்கிறார்கள். இது சிறைத்துறையினரின் அலட்சியம் என்றுதான் சொல்ல வேண்டும். இவை அனைத்தும் புலனாய்வு விசாரணையில் வெளிவந்துவிடும்.

அவர்கள் சுவரின் மீது ஏறிக் கொண்டிருந்ததை ஒரு சிறைக்காவலர் பார்த்திருக்கிறார். உடனே அவர் மற்றெல்லோரையும் எச்சரித்திருக்கிறார். அவர் மட்டும் அப்படி செய்திருக்கவில்லை என்றால், அவர்கள் யாரும் அறியாமலேயே தப்பிச் சென்றிருந்திருப்பார்கள். புலனாய்வு விசாரணை முடியும்போது இதே உண்மைகள்தான் வெளிவரும். பாதுகாப்பில் ஓட்டை இருந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

நாங்கள் அவர்களை எச்சரிக்காமல் இல்லை. “லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சிறையுடைப்பு நடக்கப் போகிறது” என்று நாங்கள் ஏற்கனவே அவர்களிடம் சொல்லியிருந்தோம். நீங்கள் ISO சான்றிதழ் பெற்றிருக்கிறீர்கள் என்பதால் அவர்களால் தப்பியோட முடியாது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். பயங்கரவாதத்தை விட ஊழல்தான் மோசமான பிரச்சினை.

தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு இல்லாமலில்லை என்று நான் அவர்களிடம் கூறினேன். அவர்கள் போன அதே தடத்தில் நாங்களும் சென்று பார்த்தோம்.  ஏழு அல்லது எட்டு நிமிடங்களுக்குள் அவர்கள் தப்பியிருக்கிறார்கள். பூட்டுகள் எதுவும் இருக்கவில்லை.

போலீஸுடனான மோதலின் போதும் கூட அவர்கள் மிகவும் வன்முறையான நடத்தையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டதற்கான நோக்கம், வீரமரணம் அடைய வேண்டும் என்பதே. எனவே, அவர்களை உயிரோடு விட்டுவைப்பது பாதுகாப்பில்லை என்ற சூழ்நிலை நிலவியது.

இந்தப் புலனாய்வு விசாரணையில் புதிதாக ஒன்றுமில்லை.

“சிறைத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு விடயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள் என்பதை மட்டுமே நாங்கள் நிரூபிக்க வேண்டியுள்ளது; போபால் மோதல் கொலைகளின் உண்மைத் தன்மையை அல்ல” என்று அந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறார். சிறையுடைப்பு பற்றி மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தனக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு என்பதாக அவர் கூறியிருக்கிறார்.

“The Quint-இடம் இவ்வாறு புலனாய்வு தொடர்பான தகவல்களை கசிய விட்டிருப்பதற்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்க வாய்ப்புள்ளது” என்கிறார் உத்தரபிரதேச முன்னாள் டி.ஜி.பி. விக்ரம் சிங்.

“உங்களிடம் ஒரு குறிப்பிட்ட விதமான மனப்பதிவை எற்படுத்துவதையோ, அல்லது புலனாய்வு விசாரணை பற்றியும் காவல்துறை பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சந்தேக மனப்பான்மையை அகற்றுவதையோ அவை நோக்கமாகக் கொண்டிருந்திருக்கலாம்.”

போபால் மோதல் கொலைகள் பற்றியும், அது குறித்த விசாரணையை தடம்புரள வைக்க முயற்சி செய்யும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பற்றியும் The Quint தொடர்ந்து புலனாய்வு செய்துகொண்டிருக்கிறது.

எமது இரண்டாவது அறிக்கைக்காக காத்திருங்கள்.

Related posts

Leave a Comment