குறும்பதிவுகள் 

கர்நாடகா: PFI, SDPI-க்குத் தடை கோரியதா காங்கிரஸ்?

Loading

முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தி, மசாலா தூவித் தந்துகொண்டிருக்கின்றன செய்தி ஊடகங்கள். பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி குளிர்காய்வதே அவற்றின் வாடிக்கையாகிவிட்டது. அதிலும் டிஜிட்டல் ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அந்தச் செய்திகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியோ, முஸ்லிம்களின் உணர்வுகள் பற்றியோ அவை அலட்டிக்கொள்வதே இல்லை.

அல்காயிதா இயக்கத் தலைவர் ஹிஜாப் தடை பற்றி பேசியிருப்பதாக வந்துள்ள செய்தியை தற்போது எல்லா ஊடகங்களும் மிதமிஞ்சி கவனப்படுத்தி வருகின்றன. அதைப் பல கோணங்களில் போஸ்ட் மார்ட்டமும் செய்துகொண்டிருக்கின்றன. அறம் என்ன விலை என்று கேட்கும் ஊடகத்திடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.

சில தினங்களுக்கு முன் வெளியான இரு செய்திகள் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

செய்தி 1 – ஹிஜாப் தடை: பொதுத் தேர்வைப் புறக்கணித்த மாணவர்கள் (29.03.22)

இருபதாயிரம் முஸ்லிம் மாணவிகள் SSLC தேர்வைப் புறக்கணித்ததாக பரவிய செய்தி சில நாட்களுக்கு முன்பு பெரும் விவாதப்பொருளானது. எண்ணிக்கை அந்த அளவுக்கு இருக்காது என்று முதல் பார்வையிலேயே தெரிந்தாலும் சில ஆயிரம் மாணவிகளாவது தேர்வெழுதாமல் திரும்பிப் போயிருப்பார்கள் போலும் என்றே நினைத்தேன். சில மாணவிகள் திரும்பிச் செல்வது போன்ற காட்சிகளையும் நாம் பார்த்தோம். அவர்களை மதவாதிகள், முட்டாள்கள் என்றெல்லாம் தூற்றினர் இங்குள்ள கோழைகள். அது பாதிக்கப்பட்டோரின் மீது நிகழ்த்தப்பட்ட இன்னொரு தாக்குதலாக அமைந்தது.

இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடக அரசின் சங்கி அமைச்சர் நாகேஷ் தந்த தகவல்படி, நூற்றுக்கு 98.2 சதவீத முஸ்லிம் மாணவர்களும், 97.8 சதவீத மற்ற மாணவர்களும் தேர்வுக்கு வந்திருக்கிறார்கள். தேர்வு தொடங்கிய நாளில் மட்டும் சில சிக்கல்கள் இருந்ததாகவும், பிறகு எல்லோரும் அரசாணையைப் பின்பற்றிவிட்டது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் நாகேஷ் கூறியிருந்தார்.

முஸ்லிம் மாணவிகள் தேர்வெழுதிவிட்டார்கள் என்று நாமும் மகிழ்வதா அல்லது அவர்களின் தலைத்துணி உருவப்பட்டிருப்பதை நினைத்து வருந்துவதா என்று தெரியவில்லை.

செய்தி 2 – கர்நாடகா: முதலமைச்சர் பொம்மையைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்; PFI, SDPIக்குத் தடை விதிக்கக் கோரிக்கை (01.04.22)

முதலமைச்சர் பொம்மையிடம் PFI, SDPI-க்கு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தடை கோரியதாக தி பிரிண்ட் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அது சர்ச்சையானதைத் தொடர்ந்து, காங்கிரஸின் முஸ்லிம் எம்எல்ஏக்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். முதலமைச்சருடனான சந்திப்பில், கர்நாடக மாநிலத்தில் நிலவும் பல பிரச்னைகள் குறித்தும், ஹிஜாப் தடை குறித்தும் பேசியிருப்பதாகக் கூறிய அவர்கள், PFI, SDPI-க்குத் தடை கோரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். ஹிஜாப், ஹலால் சர்ச்சை போன்றவற்றை ஏற்படுத்தி இப்போது அம்மாநிலத்தில் நிலவும் அசாதாரணச் சூழலுக்குக் காரணமாக இருப்பது ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள வகையறாக்கள்தாம் என்றும், அப்படி தடை செய்வதென்றால் அவற்றைத்தான் தடை செய்ய வேண்டும் என்றும் ஜமீர் அஹ்மது கான் என்ற எம்எல்ஏ தெரிவித்தார். ‘யார் கலவரம் செய்கிறார்களோ அவர்களின் அமைப்புகளைத் தடை செய்யுங்கள், PFI அல்லது RSS என எந்த அமைப்பாக இருந்தாலும்’ என்று சலீம் அஹ்மது என்ற காங்கிரஸ் தலைவர் பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியினர் PFI-க்குத் தடை கோரினாலும் ஆச்சரியமில்லை என்பதால் ஊடகம் வெளியிட்ட செய்தியைக் கொண்டு நான் காங்கிரஸைக் கண்டித்து என் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன். சமீபத்தில்கூட கேரளாவில் தீயணைப்புத் துறையினர் PFI கூட்டத்தில் பயிற்சியளித்ததை பாஜகவும் காங்கிரஸும் ஒரே குரலில் கண்டித்து, சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளை சஸ்பண்ட் செய்ய வைத்திருக்கின்றன. முஸ்லிம்கள் அமைப்பாவதற்கு எதிரான காங்கிரஸின் பழைய கண்ணோட்டம் மாறியாக வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

Related posts

Leave a Comment