கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நெருக்கடி நிலையும் சுப்பிரமணிய சாமியும்

Loading

“நெருக்கடிநிலையில் சிறையில் இருந்தபோது வாஜ்பேயியும், தியோரசும் மன்னிப்புக் கடிதம் எழுதினார்கள்” – சுப்பிரமணிய சாமி

ஜூன் 13, 2000 அன்று The Hindu நாளிதழில் சுப்பிரமணிய சாமி எழுதியுள்ள ஒரு கட்டுரை பலவகைகளில் முக்கியமான ஒன்று. அது பாஜக ஆட்சியிலிருந்த காலம். வாஜ்பேயி பிரதமர். இந்திரா காந்தியின் நெருக்கடிநிலை (1975 -77) அறிவிப்பின் 25 ம் ஆண்டு நினைவைப் பெரிய அளவில் கொண்டாடுவது என பாஜக அறிவித்திருந்த பின்னணியில் சு.சாமி இக்கட்டுரையை எழுதுகிறார்.

நெருக்கடிநிலையின்போது மண்டியிட்டு மன்னிப்புக் கேட்ட பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு, வீரஞ்செறிந்த நெருக்கடிநிலை எதிர்ப்புப் போராட்டத்தை நினைவுகூற எந்த யோக்கியதையும் கிடையாது என்பதை சுருக்கெனத் தைக்குமாறு சுப்பிரமணியசாமி அக்கட்டுரையில் வலியுறுத்துகிறார்.

என்ன சு.சாமி யா அப்படிச் சொன்னார் என இன்றைய இளைஞர்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் பல்வேறுவிதமான பழைய வரலாறுகள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதோடு ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் போன்ற சோஷலிஸ்டுகள், மொரார்ஜி தேசாய், காமராஜர் போன்ற பழைய காங்கிரஸ்காரர்கள், கலைஞர் கருணாநிதி போன்ற திமுகவினர், மார்க்சிஸ்ட் கட்சியினர் எனப் பலதரப்பட்டவர்களோடு ஆர்.எஸ்.எஸ்ஸும் பாஜகவும் (அன்றைய பாரதிய ஜனசங்கமும்) கூட  அன்று நெருக்கடிநிலையை எதிர்த்தன. அப்படி எதிர்த்தவர்களில் அப்போது ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு நெருக்கமாக இருந்த சு.சாமியும் ஒருவர். ஜே.பியின் அறிவுரையின்படி வெளிநாட்டுக்குத் தப்பி ஓடி அங்கிருந்து கொண்டு நெருக்கடி நிலைக்கு எதிராகச் செயல்பட்டதாக சு.சாமி இக்கட்டுரையில் சொல்கிறார்.

இது குறித்து அவர் சொல்வதில் ஒரு சில நாம் ஏற்க முடியாததாக இருந்த போதும், அவற்றை முற்றிலும் பொய் என நிராகரிக்க இயலாது. ஜே.பிக்கு சு.சாமி நெருக்கமாக இருந்தார் என்பதும், ஜெ.பி அவரை அளவுக்கு அதிகமாகவே நம்பினார் என்பதும், சு.சாமி அந்த வயதில் மனதார நெருக்கடிநிலையை எதிர்த்தார் என்பதும் உண்மை. (நெருக்கடிநிலை குறித்து அது அறிவிக்கப்பட்ட நாற்பதாம் ஆண்டு எழுதப்பட்ட என் விரிவான கட்டுரையை இணையத்தில் வாசிக்கலாம்.)

இக்கட்டுரையில் சு.சாமி எவ்வாறு ஆர்.எஸ்.எஸ்., பாஜக இரண்டும் இந்திராகாந்திக்கு முன் மண்டியிட்டு, நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தன எனவும், அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாலாசாகேப் தியோரசும், பாஜகவின் முக்கியத் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பேயியும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தனர் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

“It is on the record in the Maharashtra Assembly proceedings that the then RSS chief, Balasaheb Deoras, wrote several apology letters to Indira Gandhi from inside the Yerawada jail in Pune disassociating the RSS from the JP-led movement and offering to work for the infamous 20-point programme. She did not reply to any of his letters. Mr. Atal Behari Vajpayee also wrote apology letters to Indira Gandhi, and she had obliged him.”

என்பன சாமியின் வார்த்தைகள். ஒன்றல்ல பல மன்னிப்புக் கடிதங்களை தியோரஸ் எழுதினார் எனவும், இனி நெருக்கடிநிலையைத் தாங்கள் எதிர்க்க மாட்டோம் எனவும், இந்திரா காந்தியுடன் சேர்ந்து அவரது 20 அம்சத் திட்டத்தை (அதாவது நெருக்கடிநிலையை) ஆதரித்துப் பிரச்சாரம் செய்வோம் எனவும் தியோரஸ் கெஞ்சியுள்ளதற்கான ஆதாரங்கள் மகாராஷ்டிர மாநில சட்டமன்றப் பதிவேட்டில் உள்ளன எனவும் கூறுகிறார் சாமி. அப்போது தியோரஸ் எரவாடா சிறையில் இருந்தார். இந்திரா அந்த வேண்டுகோள்களைக் கண்டு கொள்ளவில்லை. மன்னிப்புக் கடிதம் எழுதி இந்திராவிடம் கெஞ்சிய இன்னொருவர் வாஜ்பேயி எனவும், அவரது மன்னிப்பு வேண்டுகோளை இந்திரா ஏற்றுக் கொண்டார் எனவும் கூறுகிறார் சு.சாமி.

சாமி இந்தக் கட்டுரையை The Hindu வில் எழுதியபோது மத்தியில் பாஜக ஆட்சி செய்து கொண்டிருந்தது என்பதையும் வாஜ்பேயி பிரதமர் என்பதையும் மறக்க வேண்டாம். வாஜ்பேயி ஏற்கனவே 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போதும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் என்பதையும், ஆர்.எஸ்.எஸ்ஸைப் பொருத்தமட்டில் இப்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பது அதற்கு வாடிக்கை என்பதையும் அவர்களின் வரலாற்றில் பரிச்சயமுள்ளவர்கள் அறிவர்.

அப்போது யாரெல்லாம் கடைசிவரை நெருக்கடிநிலையை எதிர்த்து, இந்திராகாந்திக்குப் பணியாமல் நின்றார்கள்?

தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 78 வயது மொரார்ஜி தேசாய், ஜெஸ்லோக் மருத்துவமனையில் காவலில் வைக்கப்பட்டு மர்மமான முறையில் மூத்திரக்காய் பழுதாக்கப்பட்ட (Kidney Failure) ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோரை சாமி குறிப்பிடுகிறார். நெருக்கடிநிலையைத் தொடர இயலாமல் போன நிலையில் அதைக் கைவிட முடிவெடுத்தபோது எப்படியாவது மொரார்ஜியை வழிக்குக் கொணர இந்திரா முயன்று அவருக்குப் பலமுறை தூதனிப்பியதையும், மொரார்ஜி அதை ஏற்கவில்லை என்பதையும் சாமி இக்கட்டுரையில் பதிவு செய்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்ஸிலும் எல்லோரும் வாஜ்பேயி மற்றும் தியோரஸ் போல இல்லை எனவும் ஒரு சிலர் உறுதியாக இருக்கத்தான் செய்தனர் எனவும் சாமி குறிப்பிடுகிறார். மாதவராவ் முலே, தாதோபந்த் தென்காடி, மொரோபந்த் பிங்லே ஆகியோர் மன்னிப்புக் கேட்கத் தயாராக இல்லை என்கிறார். அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

இந்திய அளவில் அன்று வேறு பலரும் அன்று உறுதியாக நெருக்கடி நிலையை எதிர்க்கத்தான் செய்தனர். குறிப்பாக தமிழகத்தில் திமுகவைச் சொல்ல வேண்டும். கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது. சிட்டிபாபு, ஸ்டாலின் முதலான தலைவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் சித்திரவதைக்கும் ஆளாகினர். சிட்டிபாபு சிறைக் கொடுமைகளின் விளைவாக மரணத்தைத் தழுவ நேரிட்டது. ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் தலைமறைவாகத் திரிய நேரிட்டது. அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட நடிகை சினேகலதா ரெட்டி சித்திரவதைகளுக்குப் பலியானார். நெருக்கடி நிலையை மிக உறுதியாக எதிர்த்த இன்னொரு அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி. அதன் 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நெருக்கடி நிலையைக் கண்டித்து ஜூலை 27, 1975 அன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஏ.கே. கோபாலன் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை முக்கியமான ஒன்று.  நெருக்கடிநிலையை ஆதரித்துத் தீராப்பழியைத் தேடிக் கொண்ட கட்சிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) முக்கியமானது. இவ்வளவுக்கும் மத்தியில்தான் வாஜ்பேயியும், ஆர்.எஸ்.எஸ்ஸினரும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து இந்திரா முன் மண்டியிட்டனர்.

இந்திரா காந்தி நெருக்கடிநிலையைக் கைவிட்டமைக்குக் காரணமாக சு.சாமி குறிப்பிடும் இதர சில சர்ச்சைக்குரிய செய்திகள்.

  1. தான் வெளிநாடுகளில் இருந்து கொண்டு நெருக்கடி நிலைக்கு எதிராகச் செய்த பிரச்சாரத்தை அப்படி ஒரு காரணமாக அவர் குறிப்பிடுகிறார். குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த கார்ட்டர், தான் பதவி ஏற்கும் முன்பாகவே இந்திய நெருக்கடிநிலை அறிவிப்பைக் கண்டித்தது ஒரு முக்கிய காரணம் என்கிறார்.
  2. தத்துவச் சிந்தனையாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இந்திராகாந்திக்குக் கொடுத்த அழுத்தம் நெருக்கடிநிலை நீக்கப்பட்டதற்கான இன்னொரு முக்கிய காரணம் என்கிறார்.
  3. காஞ்சி பீடாதிபதி சந்திரசேகரேந்திரர் முன் இந்திரா ஒரு மணி நேரம் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து கிடந்தபோதும் அவர் கடைசிவரை இந்திராவைக் கண்டு கொள்ளவில்லை எனவும் அதுவும் இந்திரா தன் முடிவை மாற்றிக் கொள்வதில் முக்கிய பங்கு வகித்தது எனவும் சாமி கூறுகிறார்.

நெருக்கடி நிலைக்கு இங்கு பல முனைகளில் இருந்தும் பெரிய அளவில் எதிர்ப்புகள் இருந்ததும், இந்திராவால் அவற்றைச் சமாளிக்க இயலாமற் போனமையும் அவர் நெருக்கடிநிலையைத் திரும்பப் பெறுவதற்கு முக்கியக் காரணங்களாக இருந்தன. மற்றபடி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற சிந்தனையாளர்கள் நெருக்கடி நிலையை எதிர்த்திருப்பதற்கு எல்லா நியாயங்களும் உண்டு. ஆனால் அதற்காக இந்திரா தன் கருத்தை மாற்றிக் கொண்டார் எனச் சொல்ல இயலாது. கார்ட்டர் இந்திய நெருக்கடிநிலையைக் கண்டித்ததில் சு.சாமியின் லாபியிங் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் மகாபெரியவாள் என அழைக்கப்படும் சந்திரசேகரேந்திரர் இந்திரா காந்தியைக் கண்டு கொள்ளாததும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது என சு.சாமி சொல்வதை ஏற்க இயலவில்லை. சந்திரசேகரேந்திரர் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரி அல்ல. அதற்கும் முந்தியவர். அவர்மீது இப்படியான கிரிமினல் குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை. எனினும் மிகத் தீவிரமான வருணாசிரம ஆதரவாளர்தான் அவர். எந்த அளவிற்கு அவர் நெருக்கடி நிலையை எதிர்க்கும் அளவு ஜனநாயக உணர்வு உடையவராக இருந்திருப்பார் என்பது குறித்து எனக்குச் சொல்ல ஏதுமில்லை.

இந்திராவைப் பொருத்த மட்டில் அவரது அரசியல் வரலாற்றின் இறுதிக்கட்டமாக மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தபோது ஒரு அரை ஆர்.எஸ்.எஸ்காரராகவே அவர் செயல்பட்டார். வெளிப்படையாக முஸ்லிம் வெறுப்பைக் காட்டிக் கொண்டார். விசுவ இந்து பரிஷத்தின் நிகழ்ச்சி ஒன்றிலும் கூடக் கலந்து கொண்டார். இந்தப் பின்னணியில் அவர் சந்திரசேகரரை வணங்கச் சென்றிருக்கலாம். ஆனால் சந்திரசேகரேந்திரர் எந்த அளவிற்கு இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதில் அக்கறை கொண்டிருந்தார் என்பதெல்லாம் மிகவும் சர்ச்சைக்குரியது. தவிரவும் காஞ்சி மட விதிகளின்படி இப்படியான ஒரு ஜெகத்குரு ஒரு “விதவைக்கு” தரிசனம் கொடுப்பதற்குச் சாத்திரத்தில் இடமுண்டா என்பதும் தெரியவில்லை. (விதவை எனும் சொல்லை நான் பயன்படுத்துவதில்லை. இங்கே பயன்படுத்த நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.)

சுப்பிரமணிய சாமி முத்தாய்ப்பாகச் சொல்லும் ஒரு செய்தியுடன் இதை முடித்துக் கொள்கிறேன்.

“(நெருக்கடிநிலை) எதேச்சாதிகாரத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ நேர்ந்ததற்கு இந்தியச் சமூகத்தின் பன்மைத் தன்மையும் பல்லினச் சமூக அமைப்புமே (plurality and heterogeneity) காரணம். இந்திய ஜனநாயக அமைப்பின் ஆதாரப் புள்ளியாக இந்தப் பன்மைத் தன்மையே அமைகிறது. இந்தியா எனும் முழுமைக்குள் அமைந்துள்ள பல்வேறு கூறுகளுக்கும் இடையே நிலவும் இழுவிசையே இந்தியா ஒரு ஜனநாயக அமைப்பாக உருப்பெற்றிருப்பதன் அடிப்படையாக உள்ளது.  இந்தியச் சமூக அமைப்பின் இந்தப் பன்மைத்துவம் காப்பாற்றப்படும் வரைதான் இந்திய ஜனநாயகமும் காப்பாற்றப்படும் என்பதே நாம் நெருக்கடிநிலை அனுபவத்தின் ஊடாகக் கற்றுக் கொள்ளும் பாடம். எனவே இந்தியாவின் இந்தப் பன்மைத்தன்மையை அழித்து அதை ஒருபடித்தன்மையாக மாற்றும் முயற்சிகள் எல்லை மீறினால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்து. தம் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் துணிவு பெறும் அளவிற்கு, மக்கள் கல்வி நிலையை எட்டும் வரையிலேனும் இம்மாதிரியான பன்மைத்தன்மையை அழிக்கும் முயற்சி ஜனநாயகத்திற்குக் கேடு என்பதை நாம் உணர வேண்டும்.”

சுப்பிரமணிய சாமி அன்று கூறியுள்ள இக்கருத்தை இன்றும் நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் சுப்பிரமணியசாமி இந்தக் கருத்தை இப்போது ஏற்றுக் கொள்வாரா?

The Hindu வில் அப்போது அவர் எழுதிய கட்டுரையை இப்போது அவர் மீள்பிரசுரம் செய்யத் துணிவாரா?

Related posts

Leave a Comment