கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை

Loading

நாத்திகம் என்பது ஒரு மனநிலை. அது எதையும் எதிர்க்கத் துணிந்த கர்வமும் பிடிவாதமும் கொண்ட ஒரு மனநிலை. மற்றபடி ஒவ்வொருவரும் தம்மை இயக்கும் சக்தியை, தம் மீது ஆதிக்கம் செலுத்தும் இறைவனை உணரத்தான் செய்கிறார்கள். இதில் விதிவிலக்கானவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. மனிதன் யாரை ஏமாற்றினாலும் அவனால் தன் சுயத்தை ஏமாற்ற முடியாது. அவனுக்குள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் அவனது இயல்பின் குரல் இறைவனின் இருப்பை அவனுக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கும். அந்தக் குரலுடன் அவனது கர்வம் மோத ஆரம்பிக்கும்போது அவன் நாத்திகம் பேசத் தொடங்குகிறான்.

தேடல்கொண்டவன் தன்னை ஒருபோதும் நாத்திகன் என்று கூறமாட்டான். தேடல் கொண்டவன் நிச்சயம் இறைவனைக் கண்டடைவான். கர்வம் கொண்டவன் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான். கர்வம் அவனைப் பாவத்தில் நிலைநிறுத்தி விடும். இறைவனைக்குறித்தும் அவனது ஆற்றல்கள் குறித்தும் ஷைத்தானும் நன்கறிவான். ஆயினும் கர்வம்தான் அவனைப் பாவத்தில் நிலைத்திருக்கச் செய்தது

நாத்திகம் இந்த நூற்றாண்டில் உருவான ஒன்றல்ல. அது மிகவும் பழமையானது. எல்லா காலகட்டங்களிலும் இத்தகைய மனநிலை கொண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்து வரவே செய்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் மதவெறுப்பாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் போன்றோரால் அது மிகப் பெரிய அளவில் ஒரு கொள்கையாக மக்களைச் சென்றடைந்துள்ளது என்று கூறலாம்.

முஹம்மது குதுப் கூறுவதுபோல, கடந்த நூற்றாண்டுகளில் கத்தோலிக்க திருச்சபைகள் அறிவியலாளர்களுக்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கைகளும் அறிவியலுடன் அவை மேற்கொண்ட மோதலும் மதத்திற்கும் அறிவியலுக்குமான மோதலாக சித்தரிக்கப்பட்டது. திருச்சபைகளின் மீதுள்ள வெறுப்பு பொதுவான மதவெறுப்பாக மடைமாற்றம் செய்யப்பட்டது. வாய்ப்புக்கேடாக அந்தச் சூழல் கடந்த நூற்றாண்டில்  மதவெறுப்பாளர்களுக்குச் சாதகமான ஒன்றாக அமைந்துவிட்டது.

திருக்குர்ஆன் நாத்திகர்களிடம் மிக எளிமையான கேள்விகளையே முன்வைக்கிறது: “அவர்கள் படைப்பாளன் யாருமின்றி தாமாகவே வந்து விட்டார்களா? அல்லது அவர்கள்தாம் படைப்பாளர்களா? அல்லது வானங்களையும் பூமியையும் அவர்கள்தாம் படைத்தார்களா?”  (52:35,36)

படைப்பாளனின் இருப்பை யாரும் மறுக்க முடியாது. படைப்புகளைக் கொண்டு படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதை மனிதனால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் நாத்திகர்கள் மனித அறிவின் எல்லையை உணராமல் கேட்கப்படும் எதிர்க்கேள்விகளின்மூலமே தங்களின் கொள்கையை முன்வைக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு சரியான, நேர்மறையான எந்த ஆதாரமும் கிடையாது.

“பிரபஞ்சத்திற்கு ஒரு படைப்பாளன் உண்டென்றால் அந்தப் படைப்பாளனைப் படைத்தது யார்?”

அன்றிலிருந்து இன்றுவரை நாத்திகர்கள் முன்வைக்கும் எதிர்க்கேள்வி இதுதான். அன்றைய நாத்திகர்கள் ‘படைப்பாளனின் படைப்பாளன் யார்?’ என்று கேட்டார்களே தவிர அவர்களால் படைப்பாளனின் இருப்பை மறுக்க முடியவில்லை . இன்றைய நாத்திகர்கள் படைப்பாளனின் இருப்பை நிராகரித்துவிட்டு படைப்பாளனின் இடத்தில் ‘இயற்கையை’ வைக்கிறார்கள்.  இந்தப் பிரபஞ்சம் இயற்கையின் மாபெரும் கொடை என்கிறார்கள்.

மதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான் மாற்ற முடிந்ததே தவிர அது உருவாக்கும் எந்தக் கேள்விகளுக்கும் அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

நாத்திகர்களின் பார்வையில் இயற்கை என்பது புரியாத புதிர், மூடுமந்திரம். இயற்கை என்றால் என்ன? அதன் தன்மைகள் என்னென்ன? அதன் செயல்கள் திட்டமிட்டவையா? அல்லது குருட்டுத்தனமானவையா? அதற்கும் நமக்கும் என்ன தொடர்பு? நாம் இயற்கையாகவே உருவானோம் என்றால் எப்படி உருவானோம்? இயற்கைக்கு சுய நாட்டம் உண்டா? படைப்பாற்றல் உண்டா? இவ்வாறான ‘இயற்கை’ குறித்த எந்தக் கேள்விக்கும் அவர்களிடம் சரியான, தெளிவான பதில்கள் இல்லை. உண்மையில் இயற்கை என்று அவர்கள் கூறுவது அவர்களுக்கே புரியாத ஒன்றை. இறைவனை ஏற்றுக்கொள்ள மறுத்ததினால் வேறு வழியின்றி பதில் கூறியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தினால் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட ஒன்று அது.

‘படைப்பாளன்’ என்ற வார்த்தை இலகுவாக அத்தனை கேள்விகளுக்கும் விடையளித்துவிடுகிறது. ‘இயற்கை’ என்னும் வார்த்தை மூடுமந்திரங்களின் இருப்பிடமாக ஆகிவிடுகிறது. விடைதெரியாத அத்தனை கேள்விகளையும் ‘இயற்கை’ என்னும் மூடுமந்திரத்திற்குள் அவர்கள் அடைக்கப் பார்க்கிறார்கள்.  இதன்மூலம் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதோடு மற்றவர்களையும் ஏமாற்றிவிடலாம் என்று எண்ணுகிறார்கள்.

மனித அறிவு எல்லைக்குட்பட்டது. அதனால் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் செல்ல முடியாது. மனித அறிவால் அனைத்தையும் அறிந்துவிட முடியும் என்று நம்புவது மாபெரும் மூடநம்பிக்கை. ஆனாலும் மனிதனால் தன் படைப்பாளனை, தான் வீணாகப் படைக்கப்படவில்லை என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இஸ்லாம் சிலவற்றை மனிதனால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத மறைவான விஷயங்கள் என்கிறது. அவனுடைய அறிவுக்கு அவற்றைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் வழங்கப்படவில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள எதிர்க்கேள்வியும் அந்த வகையைச் சார்ந்ததுதான்.  அவனால் தன் அறிவைக் கொண்டு படைப்பாளன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆனால் அவன் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்துகொள்ள முடியாது. தான் வீணாகப் படைக்கப்படவில்லை என்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் படைப்பின் நோக்கத்தை உணர்ந்துகொள்ள முடியாது. இது அவனது அறிவின் குறைபாடாக கருதப்பட வேண்டுமேயன்றி படைப்பாளனின் இருப்பை மறுப்பதற்குச் சொல்லப்படும் ஆதாரமாக கருதப்படக்கூடாது.

இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கத்தால்தான் இவற்றையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்க முடியும். ஆனாலும் மனிதனால் தன் அறிவைக் கொண்டு அது இறைமார்க்கமா அல்லது தன்னைப் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட மார்க்கமா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இஸ்லாம் வெறுமனே தன்னை நம்புங்கள் என்று கூறவில்லை. தன்னை முழுமையாக ஆய்வு செய்துவிட்டு நம்பும்படி அது அழைப்பு விடுக்கிறது. அது தான் கொண்டிருக்கும் வேதத்தை இறைவேதம் என்கிறது. அதனை நீங்கள் பொய்யெனக் கூறினால் அதைப்போன்று நீங்களும் ஒன்றைக் கொண்டுவந்து காட்டுங்கள் என்று சவால் விடுகிறது. நிச்சயமாக தன்னிடம் இருக்கும் குர்ஆனைப் போல எந்தவொன்றையும் யாரும் கொண்டுவந்துவிட முடியாது என்று அது அறுதியிட்டுக் கூறுகிறது. அது விடுத்த அறைகூவல் இன்றுவரை அறைகூவலாகவே நிலைத்திருக்கிறது:

“நாம் நம் அடியாருக்கு அருளிய இந்த வேதத்தின் மீது நீங்கள் சந்தேகம் கொண்டால், நீங்கள் உண்மையாளர்களாயின் இதைப்போன்ற ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டுவாருங்கள். அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் –  உங்களால் ஒருபோதும் அவ்வாறு செய்ய முடியாது – மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரகநெருப்பை அஞ்சிக்கொள்ளுங்கள். அது நிராகரிப்பாளர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது.” (2:23,24)

அறிதலுக்கான உங்களின் வழிமுறைகளைக் கொண்டு இன்றுவரை மனிதனிடம் தோன்றும் எந்த அடிப்படையான கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளிக்க முடியவில்லை. இன்றுவரை மனிதன் புரியாத புதிராகவே இருந்துகொண்டிருக்கிறான். அவனைப் படைத்தது யார்? அவன் வாழ்வின் நோக்கம் என்ன? ஆன்மா என்பது என்ன? மரணம் என்பது என்ன? இன்னும் ஏராளமான கேள்விகள் அப்படியேதான் உங்களிடம் இருக்கின்றன.

இறைவேதம் அத்தனை கேள்விகளுக்கும் அற்புதமான முறையில் பதிலளிக்கிறது. சத்தியத்தை அறிந்துகொள்ள விரும்பும் மனம் அவற்றைக் கொண்டு திருப்தியடைகிறது. அது தொலைத்துவிட்ட தன் பொருளைக் கண்டுகொண்ட மகிழ்ச்சியை அடைகிறது.

இறைவன் இருக்கின்றான் என்பதை யாரும் கற்பிக்க வேண்டியதில்லை. இறைநம்பிக்கை இயல்பானது. ஒவ்வொரு மனிதனும் இறைவனின் இருப்பை உணர முடியும். திருக்குர்ஆன் அறிஞர், பாமரர் என அனைவரையும் விளித்து இயல்பாகக் கேட்கிறது, “வானங்களையும் பூமியையும் முன்மாதியின்றி படைத்த அல்லாஹ்வின்மீதா நீங்கள் சந்தேகம் கொள்கிறீர்கள்? (14:10)

மனிதன் இயல்பாகவே இறைவனை உணர்கிறான். அவனுக்கு வேறு ஆதாரம் தேவையில்லை. நாத்திகம் பேசுவது மனித இயல்புக்கு மாறான ஒன்று. கர்வம் கொண்டவர்கள், வெறுப்பில் வீங்கியவர்கள் ஆகியோரைத் தவிர வேறு யாராலும் இறைவனின் இருப்பை உளமார மறுக்க முடியாது.

நாத்திகம் இன்று ஒரு மோஸ்தராக அடையாளப்படுத்தப்பட்டுவிட்டதால்தான் பலர் தங்களை நாத்திகர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். வெளிப்படையில் அவர்கள் நாத்திகம் பேசினாலும் அவர்களில் பலர் கடவுள் நம்பிக்கையாளர்கள். உண்மையில் நாத்திகர்கள் மிகக் குறைவுதான். அதிலும் கடைசிவரை நாத்திகத்தில் நிலைத்திருந்து நாத்திகர்களாகவே மரணமடைவோர் மிக மிகக் குறைவு. அவர்களில் பலர் தங்களின் இறுதிக் காலத்தில் தங்களையும் காலத்தையும் பழித்துக் கொண்டிருக்கும் மனநோயாளிகளாக, மனப்பிறழ்வு கொண்டவர்களாக ஆகிவிடுவதைக் காண முடிகிறது.

மனித இயல்புக்கு மாறான எதுவும் நீண்ட காலம் நீடிப்பதில்லை. மனித இயல்புக்கு மாறான எதையும் உள்ளம் ஏற்றுக்கொள்வதில்லை. நாத்திகன் தீவிர மன அவஸ்தைக்கு உள்ளாகிறான். தான் உருவாக்கிய கற்பிதங்களுக்கும் தன் இயல்புக்குமிடையே தடுமாறித் திரிகிறான். ஒரு கட்டத்தில் அவன் மன நோயாளியாகவே ஆகிவிடுகிறான்.

நாத்திக வாதம் ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலாக, மனிதம் தழைப்பதற்கான கோஷமாக ஒலித்தாலும் உண்மையில் அது சீர்குலைவின், பேரழிவின் தொடக்கப் புள்ளி. அது மனிதனை அவனது இச்சைக்கு அடிமையாக்கிவிடுகிறது. அவன் செய்யக்கூடிய எல்லா தீய செயல்களுக்கும் நியாயவாதம் கற்பிக்கிறது. அறவிழுமியங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி, அவற்றைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இல்லாமலாக்கி மனித வாழ்வில் பெரும் நாசத்தை, சீர்குலைவை ஏற்படுத்துகிறது.

தங்களை நாத்திகர்கள் என்று சொல்லிக்கொள்வோரிலும் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. நாத்திகத்தை ஒரு கொள்கையாக முன்வைத்து அதனை நோக்கி மக்களை அழைப்பவர்களுக்கும் மதத்தை மக்களை அடிமைப்படுத்துவதற்கான, சுரண்டுவதற்கான கருவியாக ஆக்கியவர்களுக்கு எதிராக நாத்திகத்தை முன்வைப்பவர்களுக்கும் மத்தியில் நிச்சயம் வேறுபாடுகள் இருக்கின்றன. இருவரையும் ஒரே தராசில் வைத்து எடைபோட முடியாது. எனினும் சாராம்சத்தில் நாத்திகத்தின் மீது மேலே வைக்கப்பட்ட விமர்சனங்களை அது எந்த வகையிலும் மாற்றிவிடாது. நாத்திகத்தின் வெவ்வேறு பரிமாணங்களை, வெளிப்பாடுகளைக்குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் தொடர்ந்து உரையாடுவோம்.

(படத்திலிருக்கும் புது நாத்திகர்கள் இடமிருந்து வலமாக: ரிச்சர்டு டாக்கின்ஸ், சாம் ஹாரிஸ், கிரிஸ்டோஃபர் ஹிட்சன்ஸ்)

Related posts

Leave a Comment