நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்

Loading

சையித் ஹுசைன் நஸ்ரு: 1933ஆம் ஆண்டு ஈரானில் பிறந்த இவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வாளராக இருந்தபோது —அதாவது 1955ஆம் ஆண்டு— ஆசிரியர் பணியைத் தொடங்கினார். தற்போது ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இஸ்லாமியச் சிந்தனை மரபில் மிக முக்கியமான ஆளுமையாக விளங்குகிறார். இவரது படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் கண்டுள்ளன. இவர் சூஃபி மரபைச் சேர்ந்தவர். தத்துவம், மதம், ஆன்மிகம், இசை, அறிவியல், இலக்கியம் என்று பல்வேறு துறைகளில் பங்காற்றியுள்ளார். இவை எதையுமே தனித்த சிந்தனைமுறைகளாகப் பார்க்காமல் இவை எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதாகப் பார்க்கிறார். இது நவீனத்திற்கு முந்தைய சிந்தனை மரபின் நீட்சி.

மரபான இஸ்லாமியப் பள்ளியில் படித்துப் பிறகு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். இயற்பியல் மாணவராக எம்.ஐ.டியில் சேர்ந்த இவர், புறவுலகு பற்றிய அர்த்தத்தை உருவாக்குவதற்கு உண்மையிலேயே நவீன இயற்பியல் உதவுமா என்று சந்தேகப்படத் தொடங்கினார். இது இவரைப் பிற துறைகள் நோக்கி நகர்த்தியது. பேராசிரியர் டி சாண்டில்லனாவின் (இத்தாலியத் தத்துவவாதி, அறிவியல் வரலாற்றாசிரியர்) வழிகாட்டலில் தத்துவம் படிக்கத் தொடங்கினார். இதன் விளைவாக மேற்கத்திய விஞ்ஞானம் முன்வைக்கும் ‘உண்மைகளுக்கு’ வெளியே வேறுவிதமான உண்மைகள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தார். செவ்வியல் அறபு ஆக்கங்களைப் படிக்கத் தொடங்கினார். இஸ்லாமிய மறைஞானத்திற்குட்பட்ட விஞ்ஞானம், தத்துவம், இசை, கட்டடக்கலை என்று மிகப் பரந்த தளத்தில் இவர் செயல்பட்டு வருகிறார். இவர் எழுதிய முக்கியமான புத்தகங்கள்:

An Introduction to Islamic Cosmological Doctrines: Conceptions of Nature and Methods Used for Its Study by Ikhwan al-Safa, al-Biruni, and Ibn Sina (1964),

Three Muslim Sages: Avicenna-Suhrawardi-Ibn Arabi (1964),

Science and Civilization in Islam (1968),

Islamic Studies: Essays on Law and Society, the Sciences, and Philosophy and Sufism (1967),

The Need for a Sacred Science (1993),

Islamic Philosophy from its Origin to the Present: Philosophy in the Land of Prophecy (2006),

The Pilgrimage of Life and the Wisdom of Rumi: Poems and Translations (2007),

The Garden of Truth: The Vision and Promise of Sufism, Islams Mystical Tradition (2007).

சையித் ஹுசைன் நஸ்ருடன் கனடாவிலுள்ள இஸ்லாமிய அறிவியல்களுக்கான மையத்தின் (The Center for Islamic Sciences – CIS) தலைவர் முஸஃப்பர் இக்பால் நடத்திய உரையாடலின் தமிழாக்கத்தைக் கீழே தருகிறோம்.

*************

இக்பால்: அஸ்ஸலாமு அலைக்கும்.

நஸ்ரு: வ அலைக்கும் சலாம், டாக்டர் இக்பால். எப்படியிருக்கிறீர்கள்?

இக்பால்: புகழனைத்தும் இறைவனுக்கே! இறுதியாக இளவேனிற் காலம் தொடங்கிவிட்டது, பறவைகள் பாடத் தொடங்கிவிட்டன.

நஸ்ரு: சுற்றிலும் பரந்த பனிபடர்ந்த நிலப்பரப்பு சூழ்ந்திருக்க, நீங்கள் குளிரில் உட்கார்ந்திருப்பது போல்தான் நான் எப்போதும் உங்களை நினைத்துப் பார்ப்பேன்.

இக்பால்: உண்மைதான், பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இப்போது மரங்கள் எல்லாம் புதிய இலைகளைக் கொண்டிருக்கின்றன. இந்த உருமாற்றத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதே அற்புதமான அனுபவமாகத்தான் இருக்கிறது.

நஸ்ரு: புகழனைத்தும் இறைவனுக்கே! நீங்கள் இஸ்லாமிய விஞ்ஞானங்கள் குறித்துப் பேசவேண்டும் என்று சொன்னீர்கள். அடுத்த ஒரு மணி நேரம் உங்களுக்கானது. உங்கள் விருப்பம் போல் என்னைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இக்பால்: இறைவன் உங்களுக்குக் கிருபை செய்யட்டும். இஸ்லாமிய விஞ்ஞானங்கள் குறித்து நிறைய பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ‘Islam & Science’ என்ற எங்கள் ஆய்விதழின் பெயரை வளரறிஞர்கள் குழுவோடு முறையாக விவாதித்து ‘Islamic Sciences‘ என்று நாங்கள் மாற்றியுள்ளதை நீங்கள் அறிவீர்கள். நான் இஸ்லாமிய விஞ்ஞானத்தின் சாத்தியப்பாடு குறித்து —அதாவது வரலாற்று ரீதியாகவும் அவற்றின் இன்றைய நிலை குறித்தும் இஸ்லாமிய நிலப்பரப்பிற்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள சாத்தியப்பாடு குறித்தும்— உங்களோடு உரையாட விரும்புகிறேன். இந்த உரையாடலில், இஸ்லாமிய விஞ்ஞானத்திற்கான வரையறையிலிருந்து தொடங்கி மேற்கத்தியக் கல்விப்புலத்தில் இத்துறை பற்றிக் காணப்படும் போக்குகள் வரை நாம் கவனம் செலுத்த முடியும் என்று நம்புகிறேன். ஆனால் இந்த உரையாடலை அதன் போக்கில் விட்டுவிடுவோம். ஒருவேளை இந்தச் சொற்களுக்கு வரையறைகள் கொடுப்பதன் மூலம் நீங்கள் தொடங்கலாம்.

நஸ்ரு: இந்தத் துறையை ‘Islamic Science’ என்று ஆங்கிலத்தில் பிரயோகித்து, இஸ்லாமியப் புரிதலுக்கு உண்மையாக இருப்பதென்பது பிரச்சனைக்குரியதாக மட்டுமல்லாமல் மிகச் சிரமமான ஒன்றாகவும் இருக்கிறது. ஏனெனில், ‘இல்ம்’ என்ற வார்த்தை அறபு மொழியிலும் பிற இஸ்லாமிய மொழிகளிலும் எத்தகைய அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறதோ அதே அர்த்தத்தில் ஆங்கிலத்தில் ‘Science’ என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுவதில்லை. ஐரோப்பிய மொழிகளுக்குள்ளாக ஒப்பிட்டாலும் கூட, இவ்வார்த்தை ஆங்கிலத்தில் மிகக் குறுகிய அர்த்தத்தில்தான் பிரயோகிக்கப்படுகிறது. பிரெஞ்சு மொழியில் எழுதப்படும் முறையில்தான் ஆங்கிலத்திலும் எழுதப்படுகிறது என்றாலும், பிரெஞ்சு மொழியில் ‘La science’ என்பது (லத்தீன் மொழியில் Scientia) விரிந்த அர்த்தத்தைக் கொண்டதாக இருக்கிறது.

உதாரணத்திற்கு, அமெரிக்காவில் யாரோ ஒருவரைப் பார்த்து, ‘நீங்கள் என்ன படிக்கிறீர்கள்?’ என்று கேட்டால், அவர் ‘நான் Science படித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னால் அது வேதியியல், இயற்பியல் அல்லது உயிரியல் அல்லது பிற இயற்கை விஞ்ஞானம் என்றுதான் புரிந்துகொள்ளப்படும். ஆனால் அவரே சோர்போனிலோ (Sorbonne) பாரிஸ் பல்கலைக்கழகத்திலோ படித்துக் கொண்டிருந்தால், ‘La science’ என்ற வார்த்தையைப் பதிலாகச் சொல்கிறார் என்றால், அது யூம் (David Hume) அவரது An Enquiry Concerning the Principles of Morals என்ற புத்தகத்தில் முதல் முறையாக உபயோகப்படுத்தியதுபோல் ‘அற விஞ்ஞானம்’ என்பதாகத்தான் இருக்கும். அதாவது, மனிதப் பண்பு மற்றும் உறவுமுறைகளை ஒரு முறைமையோடு படிப்பதைத்தான் குறிக்கும். பிரெஞ்சு மொழியில் காணப்படும் இத்தகைய விரிந்த தளத்திலான உபயோகம் ஆங்கிலத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இப்போது நாம் மனிதனைப் பற்றிய புரிதலுக்கான துறையாக பிரெஞ்சில் ‘Les Sciences Humanies’ என்று பிரயோகிக்கப்படுவதற்கு ஒத்த முறையில் ஆங்கிலத்தில் ‘Human Science’ என்ற பதத்தை பிரயோகிக்கலாம். பரந்துபட்ட தளத்தில் தத்துவார்த்த ரீதியாகச் சொல்வதென்றால், ஒழுங்கமைக்கப்பட்ட அறிவுதான் விஞ்ஞானத்திற்கான வரையறையாக இருக்க முடியும்.

இக்பால்: இதற்கு ஒத்த முறையில்தான் ‘இல்ம்’ என்ற வார்த்தையும் மரபாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் முறைமையோடு ஒழுங்கமைக்கப்பட்ட துறையாகக் குர்ஆனைக் கற்பதை நாம் ‘உலூம் அல்குர்ஆன்’ என்று சொல்கிறோம். அதாவது தஃப்சீர் (விளக்கவுரை), லுகா (மொழி), பலாகா (சொல்லணி) அல்லது வேறு எந்த விஞ்ஞானமாக இருந்தாலும் இதையெல்லாம் குர்ஆன் குறித்த விஞ்ஞானத்தின் கிளைகளாகப் பார்க்கிறோம். இதுபோலவேதான் ‘உலூம் அல்ஹதீஸ்’ மற்றும் ‘உலூம் அல்ஃபிக்ஹு’ போன்ற வார்த்தைகளையும் அர்த்தப்படுத்துகிறோம்.

நஸ்ரு: ஆமாம், உண்மைதான். நான் என்னுடைய பல புத்தகங்களில் எழுதியிருப்பது போன்று, இஸ்லாத்தில் ஞானத்தின் துறைகள் எல்லாம் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. இவை எதுவுமே மதத்திலிருந்து துண்டிக்கப்பட்டவை அல்ல. இவை வேர் (உசூல்) என்றும், கிளைகள் (ஃபுரூ) என்றும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இதனால்தான் மரபான இஸ்லாமிய நாகரிகத்தில் இப்னு சினாவின் ‘கானூன்‘ என்ற மருத்துவ நூல் ஒன்றைப் படித்தாலும், அது கடவுளின் பெயரைச் சொல்லித் தொடங்குவதுடன், அனைத்திற்கும் முன்னால் நபியவர்களைப் புகழ்கிறது (அவர் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்). அதாவது, நாம் வாசிக்கும் துறையை இப்பிரபஞ்சத்தைப் படைத்தவனோடு —அதாவது இறைவனோடு— இணைத்துக் கொள்கிறோம். கணிதவியல், வானியல் மற்றும் இன்னபிறவற்றிலும் இதேதான் நடக்கிறது. மனிதகுல வரலாற்றில் மாபெரும் விஞ்ஞானிகளாகத் திகழ்ந்த கடந்தகால இஸ்லாமிய அறிஞர்கள் எல்லோரும், இறை எதார்த்தத்தை (Divine Reality) அவர்களுடைய ஆய்வுகளுக்கான ஆணிவேராகப் பார்த்தார்கள்.

இந்த உண்மையையும் ஞானம் என்ற மரத்தின் கிளைகளுக்கு இடையேயான பரஸ்பர உறவையும் நாம் மறந்துவிட்டோம். அதனால்தான் நவீன விஞ்ஞானத்தில் காணப்படும் Sclerosis நோய் மனித அறிவை ஒரு விதமான அலமாரிப் பெட்டிகள்போல் சுருக்கிவிட்டது. ஒரு அலமாரிப் பெட்டியில் நீங்கள் காலுறைகளை வைக்கிறீர்கள். மற்றொன்றில் சட்டை. ஆனால் ஒரு பெட்டிக்கும் மற்றொன்றுக்கும் இடையே எத்தகைய உறவும் கிடையாது. நம்முடைய நவீன கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பாடம் படிப்பது போன்று. அதாவது, ஒன்பது மணியிலிருந்து பத்து மணி வரை உயிரியல் பாடம் படிக்கிறார்கள். அடுத்த ஒரு மணி நேரம் தென்னமெரிக்க வரலாறு படிக்கிறார்கள். அடுத்த ஒரு மணி நேரம் மொழி வகுப்பில்… ஆனால் இவற்றுக்கிடையே அறிவுசார் உறவுகள் ஏதும் இருப்பதில்லை. இவை எல்லாம் துண்டுதுண்டுகளாகக் கிடக்கின்றன. வகுப்பறையில் மாணவர்கள் ஷேக்ஸ்பியர் பற்றி விவாதிப்பது என்பது, அடுத்த ஒரு மணி நேரம் அவர்கள் படிக்கப் போகிற கணிதத்தோடு எத்தகைய தொடர்பும் இல்லாமல் இருக்கிறது. இத்தகைய முறையில் பொதுவாக அடிப்படைகள் என்று ஏதுமில்லாமல், துண்டுதுண்டாகக் கிடப்பதுதான் நவீனக் கல்வி முறையின் குணாம்சமாக இருக்கிறது.

இஸ்லாமியக் கல்விமுறை மிகச் சரியாக இதற்கு நேரெதிரானது. அறிவின் ஒவ்வொரு கிளையும் அதற்கென்று தனித்துவமான முறைமைகளைக் கொண்டிருந்தாலும், இந்த முறைமைகள் கறாராகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டாலும், இவற்றைத் துண்டுதுண்டாகப் பார்ப்பது ஓர் அறிவுசார் பாவமாகப் பார்க்கப்பட்டது. அதாவது தர்க்கவியலைப் பயில்வதற்கான முறைமையும் இலக்கணத்தைப் பயில்வதற்கான முறைமையும் ஒன்றல்ல. இவ்விரண்டையும் ஒன்றாகக் கலக்க முடியாது. அல்லது, சூஃபி சிந்தனைகளைப் படிப்பதற்கான முறைமையை வேதியியல் படிப்பதற்குப் பயன்படுத்த முடியாது. இதைத் தலைகீழாக மாற்றிச் சொன்னாலும் அதே அளவிற்கு உண்மைதான். ஆனால் இவற்றின் முறைமைகள் எல்லாம் ஒரு உலகப்பார்வையிலும் அறிதலின் படிநிலையிலும் வேர்கொண்டுள்ளதால் இவை ஒன்றோடொன்று உறவு கொண்டதாக இருக்கின்றன.

இஸ்லாமிய நாகரிகத்தின் உலகளாவிய ஆளுமைகளான அல்ஃபராபி, இப்னு சினா, உமர் கய்யாம் போன்றவர்கள் எல்லாம் பல்துறை அறிஞர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பல்துறை மேதைகளாக மட்டுமில்லாமல் அறிவுபற்றி முழுமையான பார்வைகொண்ட, முற்றிலுமாக ஒன்றிணைக்கப்பட்ட ஆளுமைகளாகவும் இருந்திருக்கிறார்கள். இவையெல்லாமே தவ்ஹீதை (ஒருமைத்துவம்) சார்ந்தவை. அது இறைவனின் இருப்பு சார்ந்த ஒருமைத்துவத்தை மட்டும் குறிக்கவில்லை. அவனது படைப்பின் ஒருமைத்துவத்தையும் சேர்த்தே குறிக்கிறது. அதேபோல் அது ஜீவராசிகள் தமது இருப்புக்காக ஒன்றையொன்று சார்ந்திருப்பதை மட்டும் குறிக்கவில்லை. அறிவின் ஒருமைத்துவத்தையும் சேர்த்தே குறிக்கிறது. இது பற்றி நேரடியாக இல்லையென்றாலும், ‘அறிவும் புனிதமும்’ (Knowledge and the Sacred, Sunny Press, 1989) என்ற என்னுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். இது மீமெய்யியல் (metaphysics) பற்றிச் சிந்தித்துப் பழகியவர்களுக்காக எழுதப்பட்ட சற்று கனமான புத்தகமாகும்.

ஆக, ஒரு புறத்தில் இஸ்லாமிய நாகரிகத்தில் காணப்படும் பல்வேறு வகைப்பட்ட அறிவுசார்ந்த, பகுத்தவுறிவாத, மரபுவழித் துறைகள் என எல்லாவற்றையும் ‘இஸ்லாமிய விஞ்ஞானங்கள்’ என்ற வார்த்தைக்குள் வகைப்படுத்த வேண்டும். அது குர்ஆன் மீதான விளக்கவுரையாக இருந்தாலும், இலக்கணம் அல்லது தர்க்கவியலாக இருந்தாலும் கூட. மறுபுறத்தில், ‘இஸ்லாமிய விஞ்ஞானம்’ என்ற வார்த்தையை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இது பொதுவாக இயற்கை மற்றும் கணித அறிவியலைத்தான் குறிக்கிறது. என்னுடைய எழுத்துகளில் தேவைக்கேற்றவாறு நான் ஒருமையிலும் பன்மையிலும் பிரயோகித்துள்ளேன். ‘இஸ்லாமிய விஞ்ஞானம்’ என்று நான் பிரயோகிக்கும்போது, உதாரணத்திற்குச் சொல்வதென்றால் ‘இஸ்லாத்தில் விஞ்ஞானமும் நாகரிகமும்’ (Science and Civilization in Islam, Harward University Press, 1968) என்ற என்னுடைய புத்தகத்தில், இயற்கை மற்றும் கணித அறிவியலைத்தான் குறிக்கின்றேனே தவிர மத, மொழி, இலக்கிய ரீதியான அறிவியல்களை அல்ல. இருந்தாலும் இஸ்லாமியக் கல்விமுறை பற்றிப் பேசும்போது ‘ஒழுங்கமைக்கப்பட்ட ஞானம்’ என்ற அர்த்தத்தில் ‘இஸ்லாமிய விஞ்ஞானங்கள்’ என்று பிரயோகித்துள்ளேன்.

விஞ்ஞானம் என்பதே ஒழுங்கமைக்கப்பட்ட ஞானம்தான். அதுபோலவே, இஸ்லாமிய மறைஞான அடிப்படையில் இஸ்லாமிய நாகரிகத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட அறிவின் கிளைகள்தான் ‘இஸ்லாமிய விஞ்ஞானங்கள்’. எப்படியிருந்தாலும், என்னுடைய புரிதல் (பிற மரபார்ந்த அறிஞர்களின் புரிதலும் கூட) இதுவாகத்தான் இருக்கிறது. இப்போது ஆங்கில மொழியைப் பிரயோகித்து இத்தகைய விவாதங்களில் பங்கேற்கும் இஸ்லாமியர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டியுள்ளது. அதாவது, இருபதாம் நூற்றாண்டில்கூட ஆங்கிலம் பேசும் பகுதிகளில் ‘விஞ்ஞானம்’ என்பது மிகச் சரியாக எதைக் குறிக்கிறது என்று விஞ்ஞானத் தத்துவவாதிகளிடம் பெரும் விவாதங்கள் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணத்திற்குச் சொல்வதென்றால், ஐம்பது வருடங்களுக்கு முன் நான் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்தபோது இது மிக முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. சில மேற்கத்திய விஞ்ஞானத் தத்துவவாதிகள் ‘விஞ்ஞானம்’ என்பதற்குச் சாத்தியப்படக்கூடிய ஒரே விளக்கம் ‘ஒழுங்கமைக்கப்பட்ட அறிவு’ தான் என்றார்கள். வேறு சிலர் விஞ்ஞானம் என்பது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் என்ன சொல்கிறதோ அதுதான் என்றார்கள். ‘விஞ்ஞானிகள் எதைச் செய்கிறார்களோ அதுதான் விஞ்ஞானம்’ என்ற வரையறையை மேற்கத்திய நிபுணர்கள் சொல்லவும் நான் கேட்டிருக்கிறேன்.

இவ்வாறு நுட்பமான வேறுபாடுகளைக் கொண்ட எல்லாவற்றையும், அதாவது ‘விஞ்ஞானம்’ என்ற வார்த்தைக்கான வெவ்வேறு அர்த்தங்களையும் உட்பொருள்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இவ்விஷயம் குறித்து நான் மேலும் ஒன்றைச் சேர்த்துச் சொல்ல விரும்புகிறேன். இஸ்லாமிய விஞ்ஞானம் என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதற்கே சிலர் தயக்கம் காட்டுகிறார்கள். இவர்கள், பொதுவாக மதச்சார்பற்ற விஞ்ஞான வரலாற்றாசிரியர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சிலர் இஸ்லாமியப் பெயரைக் கொண்டிருந்தாலும், விஞ்ஞானம் என்பது முழுமையாகத் தன்னியக்கத் தன்மைகொண்டது என்ற மேற்கத்தியப் புரிதலை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இதற்கு மாறாக, நவீனத்துவக் காலத்திற்கு முன்பு, ஒவ்வொரு நாகரிகத்தின் விஞ்ஞானங்களும் அதன் அறிவுசார் பார்வையோடு மிக நெருக்கமாக உறவுகொண்டிருந்தன. அதாவது ஒரு நாகரிகத்தின் உலகப்பார்வையோடும் அதன் பிரதான சிந்தனைகளோடும் என்று சொல்லலாம். இத்தகைய புரிதலுக்கு இஸ்லாமிய விஞ்ஞானங்களும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால், இதற்கான மிகச் சிறந்த உதாரணமாக அதுவே விளங்குகிறது.

(மீமெய்யியல் பார்வையிலிருந்து சொல்வதென்றால்) இஸ்லாத்தின் அடிப்படையான பண்பு ‘ஒன்றிணைப்பது’ தான். இதனால்தான் அரசையும் மதத்தையும் பிரித்துவைக்க வேண்டும் என்று சொல்வதைக் கேட்கும்போதும், லௌகிகத்தையும் புனிதத்தையும் பிரித்துவைக்க வேண்டும் என்று சொல்வதைக் கேட்கும்போதும் சிரிப்புத்தான் வருகிறது. அறபு மொழியில் ‘Secular’ என்பதற்கு வார்த்தையே கிடையாது. நாம் ‘அலமானிய்யா’ போன்ற வார்த்தைகளைக் கண்டுபிடிக்க நம்மை நாமே கட்டாயப்படுத்திக் கொள்கிறோம். இவ்வார்த்தை செவ்வியல் அறபு மொழியில் இல்லாமல் போனதற்குக் காரணம், யதார்த்தத்தை வகைப்படுத்தும் ‘செக்குலர்’ என்ற சிந்தனைமுறையின் அடிப்படைக்கு இஸ்லாமிய உலகப்பார்வையில் எத்தகைய அங்கீகாரமும் கிடையாது. உங்களுடைய தாய்மொழியான உருதுவிலும் என்னுடைய பாரசீகத்திலும் இதே நிலைதான்.

இந்த வார்த்தைகள் எப்படி வந்தன என்றும், இவை கண்டுபிடிக்கப்பட்டதற்கான காரணத்தின் மீதும் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும். இஸ்லாத்தின் ஒன்றிணைந்த பார்வையின் சக்திதான் ‘செக்குலர்’ என்ற வார்த்தைக்கு ஒத்த ஏதும் இல்லாததற்குக் காரணமாகிறது. மேலும், இத்தகைய ‘ஒன்றிணைக்கும் பண்பின்’ அடிப்படையில் யதார்த்தத்தைப் பார்ப்பது என்ற புரிதலின் வடிவம்தான், பரந்த தளத்தில் சொல்வதென்றால், ஒரு குறிப்பிட்ட பார்வையிலான மதமாகிறது. அதனால்தான் மதம் என்பது வெறுமனே வழிபாட்டோடு மட்டுப்படுத்தப்பட்டதாக அல்லாமல் ‘தீன்’ (வாழ்க்கை நெறி) என்பதற்கு உட்பட்டு பரந்த தளத்திலானதாக இருக்கிறது. அறிவை ஒன்றிணைப்பதற்குப் பின்னால் நின்று செயல்படுவது இஸ்லாத்தில் காணப்படும் இத்தகைய ஒன்றிணைக்கும் சக்திதான். நான் ‘இஸ்லாமிய விஞ்ஞானம்’ என்று பிரயோகிக்கத் தொடங்கியபோது பலர் என்னை விமர்சனம் செய்தார்கள். இன்னமும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இது வெறுமனே, நான் இஸ்லாமியன் என்பதால் கோட்பாட்டுரீதியான பயன்பாட்டிற்கான அடிப்படைவாத வார்த்தையாக மட்டுமே பார்க்கத் தகுந்ததல்ல என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது இயற்கையின் பண்பு குறித்து மிக முக்கியமான அறிவுசார் வேர்களைக் கொண்டுள்ளது.

ஐம்பது வருடங்களுக்கு முன் நான் இத்துறையில் வேலை செய்யத் தொடங்கியபோது நான் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஜார்ஜ் சர்டானின் (George Sarton) மாணவனானேன். அவர் மேற்கில் இஸ்லாமிய விஞ்ஞானத்தின் மிகப்பெரிய ஆளுமையாக இருந்ததுதான் நான் அவரிடம் பயிலச் சென்றதற்குக் காரணம். ஆனால் இவர் ‘அறபு விஞ்ஞானம்’ என்ற வார்த்தையைத்தான் பிரயோகித்தார். பல்வேறு காரணங்களுக்காக என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லாவற்றையும்விட முக்கியமான காரணம் என்னவென்றால், நவீன அறபு தேசியவாதிகளால் இது பிரயோகிக்கப்பட்டது (இன்னமும் பிரயோகிக்கப்படுகிறது). இந்தக் கதையையும் இதற்குப் பின்னால் இருக்கிற கோட்பாட்டு ரீதியான காரணங்களையும் நீங்கள் அறிவீர்கள். நான் இவ்விஷயத்திற்குள் இப்போது போக விரும்பவில்லை. இரண்டாவது காரணம், இதற்குப் பொருந்திப்போகக்கூடியது என்று இஸ்லாத்திலேயே ஏதுமில்லாததுதான். ‘அல்உலூம் அல்அறபிய்யா’ என்ற அறபுச் சொற்றொடரை பிரயோகிக்கும்போது, அதைக் கேட்பவர் அறபு மொழி குறித்துப் பேசுவதாக எடுத்துக்கொள்ளக் கூடும். நான் சொல்ல வருவது என்னவென்றால், நவீன காலத்திற்கு முந்தி உமர் கய்யாமின் கணிதவியல் ஆய்வுகளை எவரும் ‘அல்ரியாதியாத் அல்அறபிய்யா’ என்று அழைத்திருக்க மாட்டார்கள். இவ்வார்த்தைகள் செயற்கையானவை. இவையெல்லாம் நவீன கண்டுபிடிப்புகள்.

மேலும் ‘அறபு விஞ்ஞானம்’ என்ற சொல் மத்தியகால மேற்கத்தியப் பாரம்பரியத்தைச் சார்ந்தது. இது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஏனெனில் மத்தியகால மேற்கு, மொழியை ஒரு குறிப்பிட்ட இனத்தின் வட்டார உலகப்பார்வையின் குறியீடாகப் பார்க்காமல் மிகச் சாதாரணமாக விஞ்ஞான உரையாடல்களில் பிரயோகிக்கப்பட்ட மொழியாக மட்டுமே பார்த்தது. இதனால்தான் மத்திய காலத்திலும் அதற்குப் பிறகும் மேற்கத்திய விஞ்ஞானம், ‘லத்தீன் விஞ்ஞானம்’ என்றும் அழைக்கப்பட்டது. இது தேசியவாதத்தோடோ அல்லது இனவாதத்தோடோ எத்தகைய தொடர்பும் கொண்டதல்ல. மத்திய காலத்தில் நீங்கள் ஆங்கிலேயராகவோ ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவராகவோ இருந்தால் உங்களை ‘லத்தீன் விஞ்ஞானி’ அல்லது ‘லத்தீன் தத்துவவாதி’ என்றுதான் அழைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு ரோஜர் பேகன் (Roger Bacon) இவ்வாறுதான் அழைக்கப்பட்டார். மத்தியகாலப் பின்னணியில் வைத்துப் பார்த்தால் இதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் இப்போது, எந்த ஆங்கிலேயரும் ரோஜர் பேகனை ‘லத்தீன் விஞ்ஞானி’ என்றோ ‘லத்தீன் தத்துவவாதி’ என்றோ அழைப்பதை ஏற்கமாட்டார். இப்போது இவ்வார்த்தைகள் மத்திய காலத்தில் இல்லாத அர்த்தங்களைக் கொண்டுள்ளன. இவ்வாறு மத்திய காலப் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்ட முறை நம்மை வேறொரு விஷயத்திற்குக் கொண்டு சேர்க்கிறது. மேற்கு, அப்போதும் இஸ்லாம் சார்ந்த எல்லாவற்றையும், அது தத்துவமாக இருந்தாலும் விஞ்ஞானமாக இருந்தாலும் அல்லது வேறெதுவாக இருந்தாலும் அதையெல்லாம் ‘அறபு’ என்று அழைத்ததற்குக் காரணம், பாரசீகத்துடனோ அல்லது அறபு அல்லாத பிற இஸ்லாமியப் பிரதேசங்களுடனோ அவர்களுக்கு எத்தகைய பரிச்சயமும் இருக்கவில்லை. (பாரசீகப் பனுவல்கள் கிழக்கு நோக்கி மிக ஆழமாகச் சென்றனவே தவிர மேற்கு நோக்கிச் செல்லவில்லை. எனவே, ஐரோப்பியர்கள் ‘அறபு விஞ்ஞானம்’ —Scienta Arabes— என்று அழைத்தது வரலாற்று ரீதியான தர்க்கங்களுக்கு உட்பட்டதுதான்).

இன்று, அறபு விஞ்ஞானம் என்பதற்குப் பதிலாக இஸ்லாமிய விஞ்ஞானம் என்று பிரயோகிப்பதற்கான முக்கியக் காரணம் அறபு விஞ்ஞானம் என்ற வார்த்தைகள் விஞ்ஞானத்தின் உலகப்பார்வையையும், அதன் அர்த்தத்தையும், அதன் சட்டகத்தையும் இஸ்லாத்திலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துவிடுகிறது. இது முழுக்க முழுக்கத் தவறானதாகும். இப்னு சினாவும் அல்பிரூனியும் குர்ஆனிய மறைஞானத்திற்கு உட்பட்டு இஸ்லாமியப் பிரபஞ்சத்திற்குள்ளாக இயங்கியவர்கள்தான். இது பலவிதமான தன்மைகளையும் அர்த்தங்களையும் கொண்டிருக்கிறது என்றாலும், இவர்கள் எல்லோரும் இந்த உலகத்தைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்றும், இதற்கெல்லாம் ஒரு தோற்றமுதல் இருக்கிறது என்றும், யதார்த்தம் என்பது பருப்பொருள் தளத்திலானது மட்டுமல்ல என்றும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதேபோல் ஒவ்வொரு இஸ்லாமிய விஞ்ஞானியும் —அவர் சுன்னியாக இருந்தாலும் ஷியாவாக இருந்தாலும், ஷாஃபியாக இருந்தாலும் ஹனஃபியாக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் பள்ளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், மொராக்கோவில் அல்லது பஞ்சாபில் வாழ்பவராக இருந்தாலும், இவர்கள் எல்லோரும்— குர்ஆனிய மறைஞானத்திலிருந்து பெற்ற உலகப்பார்வையைப் பகிர்ந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த ஐம்பது வருடங்களாகத் தன்னடக்கத்தோடு நான் செய்த வேலை என்னவென்றால், இஸ்லாமியர்களால் வளர்க்கப்பட்ட விஞ்ஞானம் இஸ்லாமியத் தன்மை கொண்டது என்றும், அவை இஸ்லாமிய மறைஞானத்தோடு தொடர்புகொண்டவை என்றும் மிகத் தீர்க்கமாகக் காட்டுவதைத்தான். நவீன அறிஞர்கள் பலர் ‘இஸ்லாமிய விஞ்ஞானம்’ என்ற வகைப்பாட்டையே பெருமளவு எதிர்த்தார்கள். மதச்சார்பற்ற பலரால் இது என்னவென்று புரிந்துகொள்ளவே முடியவில்லை. இவர்களில் பலர் பரந்துபட்ட தளத்தில் இஸ்லாமிய விஞ்ஞானங்களை இஸ்லாமியப் பார்வையிலிருந்து ஒருபோதும் படித்தவர்கள் இல்லை என்பதனால்தான் விஞ்ஞானம் இஸ்லாத்தோடு ஒன்றிணைக்கப்படுவதை இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால்தான் இவர்கள் இந்த வார்த்தையில் ஒரு அசௌகரியத்தை உணர்கிறார்கள்.

இக்பால்: ‘அல்உலூம் அல்இஸ்லாமிய்யா’ (இஸ்லாமிய விஞ்ஞானங்கள்) என்ற வார்த்தை மரபாக எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது என்பதை நோக்கி நம்முடைய உரையாடலைத் திருப்பலாம் என்று நினைக்கிறேன். அதாவது, அல்உலூம் அல்இஸ்லாமிய்யா என்ற வார்த்தை அறிவின் எல்லாக் கிளைகளும் —தஃப்சீர், லுகா, ஹதீஸ், ஃபிக்ஹு, தாவரவியல், வேதியியல், முக்கோணவியல் என்று எல்லாமும், சுருக்கமாகச் சொல்வதென்றால் எல்லா அறிவியல்களும்— இஸ்லாமிய மறைஞானத்தில் வேர்கொண்டு கிளைத்தெழுகின்றன; அதாவது இவை எல்லாமும் அஸ்திவாரமாகவோ கிளைகளாகவோ, ஒரு தொகுப்பாக Islamic Science என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதைத்தான் குறிக்கிறது. குறிப்பாக, ஒன்றிணைக்கப்பட்ட அறிவு என்ற அடிப்படையில் இதைப் பயில்வது என்று எடுத்துக்கொண்டால், இன்று நாம் எங்கு நிற்கிறோம்?

நஸ்ரு: இது மிகப்பெரிய கேள்வி. எங்கு சொல்லியிருக்கிறேன் என்று என்னால் நினைவில் கொண்டுவர முடியவில்லை என்றாலும், வேறொரு இடத்தில் நான் சொல்லியிருப்பதை மீண்டும் இங்கு சொல்ல விரும்புகிறேன். உங்களுடைய வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் நீங்கள் இருக்கும்போது, அதுவும் அதிக அளவில் கட்டுரைகள் எழுதியிருக்கும்போது, எங்கு எதை எழுதியிருக்கிறீர்கள் என்று நினைவில் வைத்திருப்பது எப்போதும் சாத்தியம் இல்லை. அதாவது, இஸ்லாமிய விஞ்ஞானம் / இஸ்லாமிய விஞ்ஞானங்கள் ஆகிய இரண்டு வார்த்தைகளின் தனித்துவமான பயன்பாடு குறித்து மீண்டும் இங்கு சொல்ல விரும்புகிறேன். ஆங்கிலத்தில் —பொதுவாகக் கல்விப்புலத்தில்— நாம் ‘இஸ்லாமிய விஞ்ஞானம்’ என்று ஒருமையில் சொல்வோமானால் அது இயற்கை மற்றும் கணிதவியல் விஞ்ஞானங்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், ‘இஸ்லாமிய விஞ்ஞானங்கள்’ என்று பன்மையில் சொல்வோமானால், அதற்கு இரண்டு அர்த்தங்கள் சாத்தியமுண்டு. இயற்கை மற்றும் கணிதவியல் விஞ்ஞானத்தின் பல்வேறு கிளைகளான முக்கோணவியல், வடிவயியல், அல்ஜீப்ரா, கணிதம், இயற்பியல் போன்றவற்றையும் அது குறிக்கலாம். அல்லது அது ‘பகுத்தறிவுசார் விஞ்ஞானங்கள்’ (அல்உலூம் அல்அக்லிய்யா) அல்லது ‘மரபுவழி விஞ்ஞானங்கள்’ (அல்உலூம் அல்நக்லிய்யா) என்று இஸ்லாமிய விஞ்ஞானங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றையும் குறிக்கலாம்.

ஏற்கனவே ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அதாவது என் இருபதாவது வயதில் நான் எழுதிய ‘இஸ்லாத்தில் விஞ்ஞானமும் நாகரிகமும்’ (Science and Civilization in Islam, Harward University Press, 1968) என்ற புத்தகத்தின் தொடக்கத்தில் நேரடியாக இல்லையென்றாலும் இது குறித்து நான் எழுதியுள்ளேன். என்னுடைய சக ஆய்வாளர்கள் வேறு சிலரும் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்வதென்றால், இஸ்லாத்தில் விஞ்ஞான வகைப்பாடுகள் குறித்து என்னுடன் முனைவர் பட்ட ஆய்வுசெய்த உஸ்மான் பக்ரு (Osman Bakar) இது குறித்து எழுதியுள்ளார். தற்போதைய உலகத்தின் வரலாற்றுத் தருணத்தில் —இன்னும் சொல்லப்போனால் உலகளாவிய கல்விப்புலத்தில்— இரண்டாவது அர்த்தத்தை வெளிக்கொணர்வது மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதாவது, இயற்கை விஞ்ஞானங்களை ஒன்றிணைக்கும் அர்த்தத்தில் மட்டுமல்லாமல் மரபுவழி விஞ்ஞானங்களான மொழியியல் விஞ்ஞானம் (இல்ம் அல்லுகா), குர்ஆனிய விஞ்ஞானம் (இல்ம் அல்குர்ஆன்), ஹதீஸ் விஞ்ஞானம் (இல்ம் அல்ஹதீஸ்) ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் அது இருக்க வேண்டும். சொல்லப்போனால், இஸ்லாத்தில் இது எவ்வாறு பிரயோகிக்கப்படுகிறது என்று அறபு மொழியில் புரிந்துகொள்ளப்படுகிறதோ அதே அர்த்தத்தில் ஆங்கிலத்திலும் இது புரிந்துகொள்ளப்பட வேண்டும். இஸ்லாமியர்கள் விஞ்ஞானங்களை எல்லாம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதாக வகைப்படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல், இவையெல்லாம் அறிவு என்ற மரத்தின் மையத் தண்டோடும் இணைக்கப்பட்டிருக்கின்றன என்றும், இந்த மரத்தின் வேர்கள் எல்லாம் குர்ஆனில் உள்ளதாகவும் வகைப்படுத்தியிருப்பதுதான் மிக முக்கியமானதாகும். வகைப்படுத்தல் பயில்வதற்குத் துணைசெய்வதோடு மட்டுமல்லாமல், பல்துறையோடு உறவுகொள்வதற்கானதாகவும் அமைகிறது.

இக்பால்: சில குறிப்பிட்ட கீழைத்தேயவாத மரபுகள், துறைகளை எதிரிணைப்படுத்துகின்றன. இக்னாஸ் கோல்ட்ஸியரின் (Ignac Goldziher) மிகப் பிரபலமான கோட்பாடான ‘இயற்கை விஞ்ஞானத்திற்கு எதிராக இஸ்லாமியப் பழமைவாதம்’ என்பதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

நஸ்ரு: இங்கு கோல்ட்ஸியர் மிகப்பெரிய தவறைச் செய்துள்ளார். மேற்கில் இஸ்லாமிய ஆய்வுகள் துறைக்கு இவர்தான் தலைவர்!

இக்பால்: ஆம், மிகவும் செல்வாக்கு மிக்கவர்.

நஸ்ரு: ஹங்கேரி அறிஞரான கோல்ட்ஸியர் பெரிய அறிஞர்தான். ஆனால், இஸ்லாமியப் பழமைவாதம் அறிவியலுக்கு எதிரானது என்று ஒரு தவறான கருத்தைக் கொண்டிருந்தார். இது உண்மையல்ல. நிச்சயம் உண்மையல்ல.  இறையியல் மற்றும் சட்டப் பள்ளிகளைச் சேர்ந்த சிலர் தத்துவவாதிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் எதிராக எழுதியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் மத அறிஞராகவும் விஞ்ஞானியாகவும் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது எப்படி இருக்கிறது என்றால், இப்னு தைமியாவின் ஆய்வுகளுக்கு எதிராக யாரோ ஒருவர் எழுதியிருக்கிறார் என்பதாலேயே இஸ்லாம், இப்னு தைமியாவுக்கு ‘எதிராக’ இருக்கிறது என்று சொல்வது போன்றதாகும். இது இஸ்லாமிய உலகத்தின்மீது மேற்கத்தியக் கீழைத்தேயவாதம் திணித்த இஸ்லாமிய நாகரிகத்தைத்தான் உருவாக்குகிறது. நான் இதை ஒரு கணப்பொழுது கூட நம்புவதற்குத் தயாராக இல்லை.

சொல்லப்போனால், பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு என்று எடுத்துக்கொண்டால், எகிப்திலோ வட ஆப்பிரிக்காவிலோ பெரிய அளவிற்கு விஞ்ஞானரீதியான செயற்பாடுகள் இல்லாததற்குக் காரணம் இஸ்லாமியப் பழமைவாதத்தின் மேலாதிக்கமல்ல. இதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குச் சற்றுப் பிந்தி, கணிதவியல் மற்றும் வானவியலில் இஸ்லாமிய மறுமலர்ச்சியைப் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு மராகா பள்ளி, நஸீருத்தீன் அல்தூசி மற்றும் பிற மரபுகளைச் சொல்லலாம். இருந்தாலும், கோல்ட்ஸியர் அவருடைய கோட்பாடைக் கொண்டு என்ன செய்ய முயன்றாரோ அது, இஸ்லாமிய உலகத்தோடான மேற்கத்திய அறிவுசார் தொடர்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்தபோது —அதாவது பதிமூன்றாம் நூற்றாண்டில்— இஸ்லாமிய விஞ்ஞானமும் மிக மர்மமான முறையில் முடிவுக்கு வந்தது என்று இஸ்லாமிய விஞ்ஞானம் குறித்த மேற்கத்திய வரலாற்றியல் பார்வையோடு மிகச் சரியாகப் பொருந்துகிறது. (இத்தகைய விளக்கங்களுக்கு விதிவிலக்காகப் பின்னர் வந்த இப்னு கல்தூனை சேர்த்துக் கொள்கிறார்கள்). ஆக, பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகான இஸ்லாமிய உலகத்தின் மொத்த அறிவு மரபையும் மேற்கு முழுமையாக நிராகரிப்பதாகத்தான் அர்த்தமாகிறது. முழுமையாக ஏழு நூற்றாண்டுகள்! தத்துவம் மற்றும் விஞ்ஞானம் இரண்டுமே முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. இப்படிச் சொல்வதனால், பதினேழாம் நூற்றாண்டில் லாகூர் தெருக்களில் அல்பிரூனி போன்ற ஆளுமைகள் சுற்றிக்கொண்டிருந்தார்கள் என்று நான் சொல்கிறேன் என்று அர்த்தமல்ல.

ஆனால், எந்தவொரு நாகரிகமும் அதன் அறிவுசார் சக்திகள் அனைத்தையும் எல்லாச் சமயங்களிலும் ஒரு துறை சார்ந்து அல்லது முறை சார்ந்து மட்டுமே செலவிட வேண்டும் என்ற அவசியமேதுமில்லை. நான் பலமுறை சொல்லியிருப்பதுபோல், இப்போதிலிருந்து அடுத்த நூறாண்டுகள் கழித்து மேற்கு அதன் பிரதான அக்கறையாக இயற்கை விஞ்ஞானத்தைத் தொடரும் என்பதற்கு நம்மிடம் எந்த உத்தரவாதமும் இல்லை. ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுகளுக்கு இயற்கை அறிவியல் மற்றும் கணிதவியல் என்று மட்டுமில்லாமல் மற்ற பிற அறிவுத் துறைகளிலும் இஸ்லாமிய நாகரிகம் முன்னணியில் இருந்தது. உலக வரலாற்றில் இத்தனை நூற்றாண்டுகள் தொடர்ந்து நிலைத்திருந்த நாகரிகம் இஸ்லாம் மட்டுமே. பல்வேறு அறிவுத் துறைகளில் இஸ்லாமியர்கள் படைத்திருக்கும் படைப்புகளின் அளவு உணமையிலேயே பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது.

இன்னும் படிக்கப்படாத மூலப்பிரதிகள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவியல் மற்றும் தர்க்கவியல் ஆகிய துறைகளோடு மிக நெருக்கமாக உறவுகொண்டிருக்கும் தத்துவத் துறையில் மட்டுமே, 1962ஆம் ஆண்டு இந்தியாவில் நான் பல மூலப்பிரதிகளைக் கண்டெடுத்தேன். இவை எதுவுமே நவீன அறிஞர்களால் இன்னும் வாசிக்கப்படவில்லை. இந்தியாவில் மட்டுமே மூவாயிரத்திற்கும் மேலாக அல்உலூம் அல்அக்லிய்யா மூலப்பிரதிகள் இருக்கின்றன. இவற்றை வாசிப்பதற்குச் சிறு முயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லை. இதற்குக் காரணம் என்னவென்றால், இஸ்லாமியர்களான நாம் நம்முடைய சொந்த மரபு பற்றி ஏதேனும் கொஞ்சம் படித்திருப்போம் என்றால், அவையும்கூட மேற்கத்திய அறிஞர்களால் சொல்லப்பட்டதுதான்.

துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய அறிவுசார் உலகம் துண்டுதுண்டாகக் கிடக்கிறது. உதாரணத்திற்கு, நாம் பஞ்சாப் அல்லது தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். (நான் பல வருடங்கள் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் இருந்திருக்கிறேன்). இருந்தாலும் தெற்கு ஈராக்கில் உள்ள அற்புதமான பாலங்களை, பள்ளிவாசல்களை, பொதுச் சேவைக்கான கட்டுமானங்களைக் கட்டியவர்கள் பற்றியோ அல்லது அவற்றுக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானம் பற்றியோ அக்கறையற்றவர்களாக இருக்கிறோம். காரணம், பதிமூன்றாம் நூற்றாண்டோடு இஸ்லாமிய அறிவியல் செத்துவிட்டது என்று மேற்கத்திய அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதுதான். ஆக, நம் முன் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. நம்முடைய மொத்த மரபையும் மறுவாசிப்புச் செய்வது (அதுவும் இஸ்லாமியப் பார்வையிலிருந்து வாசிப்பது), இஸ்லாமிய விஞ்ஞானம் வளர்த்த மொத்த கருத்தேற்ற முறைமையையும் மாற்றி வடிவமைப்பது என. இந்த விஞ்ஞானங்கள் ஒன்றோடொன்று கொண்டிருக்கும் உறவுமுறைகளையும் இவற்றுக்குப் பின்னால் இருக்கும் பிரபஞ்சவாதத்தையும் நாம் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

மேலும், ஏன் ஒரு சில துறைகள் ஓரிடத்தில் தொடராமல் போயின என்றும், வேறொரு இடத்தில் மிகச் சிறப்பாக வளர முடிந்தது என்றும் நாம் கேட்டுக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. உதாரணத்திற்கு, இப்னு சினாவின் தத்துவம் அல்அஸ்ஹரில் மம்லூக் காலத்தில் தொடரமுடியாமல் போனது. ஆனால், அவரது மருத்துவ நூலான ‘அல்கானூன்’ தொடர்ச்சியைக் கண்டுள்ளது —இவ்விரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை என்றபோதும். டமாஸ்கஸில் எழுதப்பட்ட, நடைமுறைப்படுத்தப்பட்ட மருத்துவத்தைப் பாருங்கள். இதை எழுதியவர்களும் பழகியவர்களும் ‘ஹக்கீம்கள்’ என்றழைக்கப்பட்டார்கள். இவர்கள் எல்லோரும் விஞ்ஞானிகள் என்றாலும் இஸ்லாமியத் தத்துவத்தை அறிந்தவர்களாக இருந்தார்கள். விஷயங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன என்றாலும், இஸ்லாமிய விஞ்ஞானம் பற்றிச் சிறப்பாக எழுதப்பட்ட வரலாறு நம்மிடம் இல்லை. இதையெல்லாம் மீறி, இத்தகைய பார்வையை விரிவாக்குவதில் உங்களுடைய எழுத்துகள் பெரும் பங்காற்றியுள்ளன. புதிய தலைமுறையைச் சேர்ந்த பல அறிஞர்கள் இத்தகைய விஷயங்களைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

இக்பால்: நாம் தாருல் இஸ்லாமிற்குள்ளாக (இஸ்லாமிய நிலப்பரப்பிற்குள்ளாக) தற்போதைய இஸ்லாமிய விஞ்ஞானங்களின் நிலை குறித்து கவனம் செலுத்துவோம். நவீனத்துவத்திற்கு முந்தைய காலத்தில், உதாரணத்திற்குச் சொல்வதென்றால் தஃப்சீர் படித்த அறிஞர்கள் ஹதீஸ், ஃபிக்ஹு, இல்ம் அர்ரிஜால் போன்றவற்றையும் படித்தார்கள். இவர்களில் பலர் மருத்துவம், தத்துவம், மற்றும் பிற துறை தொடர்பாகவும் படித்தார்கள். இஸ்லாமிய விஞ்ஞானங்கள்ஒருங்கிணைந்து காணப்பட்டன. இருந்தாலும், மேற்கத்தியமயமாதலின் தாக்கத்தில் —குறிப்பாகக் காலனிய காலத்தில்— மரபான கற்றல் முறைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இதன் விளைவு என்னவாக இருக்கிறது என்றால், இப்போது அரசாங்கப் பொது விஷயங்கள் பற்றி ஏதும் சொல்லாத ஹோஜாக்கள் (Hodja – இஸ்லாமிய ஆசிரியர்) மற்றும் முல்லாக்களைத்தான் (Mullah – இறையியல், சட்டவியல் அறிஞர்) நாம் பெற்றிருக்கிறோம். இதே சமயத்தில் சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்கள் யாவும் மேற்கத்தியக் கல்வி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் மேலாதிக்கத்தில் உள்ளன. இப்படியாக, மரபான இஸ்லாமிய நிலப்பரப்பிற்குள்ளாகவேகூட மதத்திற்கும் பௌதிக அறிவியல் (worldly sciences) என்று அழைக்கப்படுவதற்கும் இடையே காணப்படும் எதிரிணை நிலைதான் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

நஸ்ரு: இது மிக முக்கியமான பிரச்சினைதான். இதுபற்றிச் சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததில் நான் மகிழ்கிறேன். நான் இவ்வாறு தொடங்க விரும்புகிறேன். நாம் இப்போது இருக்கும் இந்த நிலைக்கு நம்மைக் கொண்டுவிட்டிருப்பது பல்வேறு நிலைகளில் செயல்பட்ட காரணிகளின் விளைவுதான். முதலாவதாக, இஸ்லாமிய உலகத்தின் பல பகுதிகளில் உள்ள மதரசாக்களில் கற்பிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் (அதாவது, ஒன்பதாவது இஸ்லாமிய நூற்றாண்டில்) மிகவும் சுருங்கிப் போயின. இதற்கான காரணத்தை ஏற்ற்றுக்கொள்ளக்கூடிய முறையில் இதுவரை எந்த வரலாற்றாசிரியர்களாலும் முன்வைக்க முடியவில்லை. இது பத்தொன்பதாம் அல்லது இருபதாம் நூற்றாண்டுகளில் நடக்கவில்லை. காலனியத்திற்கு முன்னரே இது தொடங்கிவிட்டது. அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் ஃபாத்திமியாக்கள் (Fatimids) காலத்திலும், அதற்குப் பிறகு அய்யூபியர்கள் (Ayyubids) காலத்திலும், பிறகு மம்லூக்குகள் (Mamluks) காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வித்திட்டத்தைப் பார்ப்போமானால் நம்மால் இதைப் புரிந்துகொள்ள முடியும். பாடத்திட்டத்தில் தொடர்ந்து இருந்த ஒரே பகுத்தறிவுசார் அறிவியல், தர்க்கவியல் மட்டும்தான். மற்ற தத்துவார்த்த, அறிவியல் ரீதியான துறைகள் மிகக் குறைவாகவே கற்பிக்கப்பட்டன. இப்படி ஏன் நடந்தது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு பாடத்திட்டங்கள் சுருங்கிப்போன சூழ்நிலையில்தான் நவீனத்துவம் நுழைந்தது.

நான் சொல்லப்போகும் மூன்று விஷயங்கள் அதனதன் அளவில் குறிப்பிடத்தக்கவை என்பதோடு, தீவிரமான ஆய்வையும் வேண்டுகின்றன. 1) மரபான பாடத்திட்டம், 2) கற்றல், கற்பிக்கப்பட்ட பாடங்கள், துறைகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிய போக்கு, 3) மேற்கத்தியக் கல்விமுறையின் நுழைவு. மேலும், மங்கோலியர்களின் படையெடுப்பு பல பல்கலைக்கழகங்களையும் அறிவுசார் மையங்களையும் சின்னாப்பின்னமாக்கி விட்டது. இந்தப் படையெடுப்பு கற்பிக்கப்பட்ட பாடங்களும் துறைகளும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிப் போனதற்கு முந்தி நடந்திருந்தாலும், இதற்கு இணையாகப் பார்க்க முடியும். ஐரோப்பா மீது மட்டும் மங்கோலியர்களின் படையெடுப்பு நடந்திருக்குமானால் ஐரோப்பிய நாகரிகம் என்றே ஒன்று இருந்திருக்காது என்கிறார் சர் ஹாமில்டன் கிப் (Sir Hamilton Gibb). இந்தப் படையெடுப்பிற்குத் தாக்குப்பிடித்து இஸ்லாம் மீண்டெழுந்ததே அபூர்வமான நிகழ்வாகத்தான் இருக்கிறது. மங்கோலியர்களின் படையெடுப்புக்குப் பின்னரும் கூட, மதரசாக்கள் தவிர வேறுபல மையங்கள் பல்வேறு விஞ்ஞானங்களைக் கற்றுக் கொடுத்தன. ஆய்வுக்கூடங்களில் வானவியல் கற்றுக் கொடுக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் தத்துவம் மற்றும் கணிதம் கற்பிக்கும் மையங்களும் இருந்தன. ஈரானில் இத்தகைய மையங்கள் உயிர்ப்போடு இருந்ததை நானே என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். இத்தகைய மையங்களோடு எனக்கு நேரடியான, தனிப்பட்ட முறையிலான அனுபவங்களே உண்டு. ஆக, மதரசாக்களின்பாடத்திட்டங்களோடு, அடுத்த தலைமுறையினருக்கும் அறிவைக் கொடுத்த இத்தகைய முறைசாரா வட்டங்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இக்பால்: ‘இஸ்லாமிய விஞ்ஞானங்கள்’ என்ற வார்த்தையை அதன் சரியான அர்த்தத்தில் புரிந்துகொண்டோம். அதை வரலாற்றுப் பின்னணியில் வைத்துப் பார்த்தோம். அடுத்தக் கட்டமாக, இத்தகைய அறிவை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றித்தான் பேச வேண்டும். நான் சொல்ல வருவது என்னவென்றால், இத்தகைய முறையிலான வரலாற்று ஆய்வுகள் செய்வதும் கருத்தியல் ரீதியாக ஒன்றிணைப்பதும் சிறப்பானதாகத்தான் இருக்கிறது. ஆனால், யதார்த்த நிலை என்ன? சில பத்தாண்டுகளுக்கு முன் அறிவை ஒன்றிணைத்து அணுகுவதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்கான வரைவுத்திட்டத்தை ஹக்கீம் முஹம்மது சயீது என்பவருக்காகத் தயாரித்துக் கொடுத்தீர்கள். ஆனால், இந்த நிறுவனத்தின் செயல்பாடு வரைவுத்திட்டத்தோடு நின்றுபோனது. பிறகு, ஈரான் பல்கலைக்கழகத்தில் என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறதோ, அவற்றையெல்லாம் மரபான இறையியல் பள்ளிகளில் (Howza) கற்றுக் கொடுக்கப்படுவதோடு ஒன்றிணைப்பதற்கும் ஒன்றாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் இத்தகைய பார்வையை உண்மையிலேயே நடைமுறைப்படுத்தும் பள்ளிகளோ கல்விக்கூடங்களோ இன்னமும் உருவாக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

நஸ்ரு: நீங்கள் எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவை. நான் தீர்வு என்று கருதியதை, பல சமயங்களில் நேரடியாக இல்லையென்றாலும் முன்வைத்திருக்கிறேன். சொல்லப்போனால், இத்தகைய முயற்சிகள்தான் 1970களில் இஸ்லாமியப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படுவதற்குக் காரணமாக அமைந்தன. ஆனாலும் அவை சரியான தீர்வாக அமையவில்லை. நானும் சையித் அலி அஷ்ரஃபும் (அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்!) வேறு சிலரும் முழுமையாக இஸ்லாமிய உலகப்பார்வையிலிருந்து பெறப்படும் தத்துவத்தின் அடிப்படையிலான கல்விக்காகப் புதிய இஸ்லாமிய நிறுவனங்களை நிறுவ முயன்றோம். இஸ்லாமிய அறிவுஜீவிகளை எல்லாம் ஒன்றுகூட்டுவதற்குப் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு, இஸ்லாமியக் கல்வி குறித்து மக்காவில் பிரம்மாண்டமான கருத்தரங்கு ஒன்றை நடத்தினோம். இக்கருத்தரங்கில் நான் தலைமை உரையாற்றி, இதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தையும் முன்வைத்தேன். ஆனால் இத்தகைய கல்விக்கூடங்களை யார் உருவாக்க வேண்டுமோ அவர்கள் எங்கள் பார்வையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாங்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை. அதனால் இது எங்கு கொண்டுபோய்விட்டது என்றால், கோலாலம்பூர் மற்றும் இஸ்லாமாபாத் போன்ற இடங்களில் ஷரீஆ மற்றும் பிற இஸ்லாமிய விஞ்ஞானங்களைக் கற்றுக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் மற்ற அறிவுத்துறைகளில் இவை மதச்சார்பற்ற அணுகுமுறையைத்தான் கொண்டிருந்தன. உதாரணத்திற்கு, அவர்கள் வேதியியல் கற்றுக் கொடுக்கிறார்கள் என்றால், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எவ்வாறு கற்றுக் கொடுக்கப்படுமோ அவ்வாறுதான் கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமியக் கோட்பாடுகள் ஒவ்வொரு அறிவியல் வடிவத்திற்கும் பொருத்தப்பட வேண்டும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நான் இப்போது உங்களுடைய கேள்விக்கு வருகிறேன். நாம் நடைமுறையில் என்ன செய்ய வேண்டும்? நான் ஐம்பது வருடங்களாக என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேனோ அதையேதான் இப்போதும் சொல்லப் போகிறேன். பாரசீகத்தில் மிகவும் பிரபலமான பழமொழி ஒன்று உண்டு. ‘சங்கீ புஸூர்க் அலாமத்தி நியாததனஸ்த்’ (Sang i-buzurg alamat i-nyatadanast) என்று சொல்வார்கள். அதாவது, நீங்கள் பெரிய கல் ஒன்றை எடுத்தால் அதை வீசியெறியப் போகிறீர்கள் என்று அர்த்தம். நான் சொல்ல வருவது என்னவென்றால், மிகப் பிரம்மாண்டமான கல்விக்கூடம் ஒன்றை உருவாக்கி அதில், ஒரு பேச்சுக்குச் சொல்வதென்றால் ஐம்பதாயிரம் மாணவர்களுக்கு இஸ்லாமியப் பார்வையின் அடிப்படையில் கற்றுத் தருவது என்பது இக்காலத்தில் சாத்தியமில்லாதது. மானுட வரலாற்றில் ஒவ்வொரு முக்கியமான அறிவுசார் மாற்றங்களும் சிறிய எண்ணிக்கையிலான வட்டத்திலிருந்துதான் தொடங்கியுள்ளன. ஏன், மேற்கத்திய நாகரிகத்தின் முகத்தையும் பின்னர் பிற நாகரிகங்களையும் பெருமளவு மாற்றியமைத்த நவீன விஞ்ஞானப் புரட்சிகூட ஒரு சிலரின் சாதனைகளால்தான் சாத்தியப்பட்டன. எல்லோரும் அவர்களுடைய உலகப்பார்வையை ஒரே சமயத்தில் மாற்றிக்கொண்டார்கள் என்று இல்லை. கலீலியோ வாழ்ந்த காலத்தில் ரோம் அல்லது ஃபிலோரன்ஸ் (Florence) நகரங்களில் நீங்கள் நடந்திருப்பீர்கள் என்றால், பெரும்பாலான மக்கள் கலீலியோவிற்கு முந்தைய இயற்பியல் மற்றும் வானவியலின் உலகப்பார்வையில் இயங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்க முடியும். பிறகுதான் மாற்றும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவியது.

இப்போது, நாம் இன்றைய இஸ்லாமிய உலகத்திலும் இதையேதான் செய்ய வேண்டியுள்ளது. இவ்விஷயம் குறித்து நான் எழுதத் தொடங்கியதிலிருந்து, அதாவது 1950களில் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை முடிக்கும் தருவாயிலிருந்து, நான் சாதித்தது என்னவென்றால், முதலாவதாக (Ijmalis போன்ற) பல்வேறு குழுமங்களுக்கு இடையே பெரும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இந்த விவாதங்கள் எல்லாம் தரத்தில் ஒன்றுபோல் இருந்தன என்று சொல்ல முடியாது என்றாலும், பல தவறான அடிப்படைகளைக் களைந்தெடுக்க முடிந்த காரணத்தினால் இவை முக்கியமானதாகின்றன. இரண்டாவது முக்கியமான விஷயம் என்னவென்றால், பதினைந்து அல்லது இருபது அறிவுஜீவிகளுக்கு மேலாக இல்லையென்றாலும், ஒன்றிணைக்கப்பட்ட இஸ்லாமியக் கல்வி முறைமை மற்றும் விஞ்ஞானத்திற்கான தத்துவார்த்தப் பார்வை ஏறக்குறைய முழுமையாக முன்வைக்கப்பட்டது. இவர்கள், அவரவரின் குறுக்கீடுகளைத் தொடங்கியபோது இத்துறைகளில் இதுபோல் எழுதப்பட்டிருந்த விஷயங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால் இப்போது நம்மிடையே காத்திரமான எழுத்துகள் உருவாகியிருக்கின்றன. மூன்றாவதாக, உணமையான இஸ்லாமிய விஞ்ஞானங்கள் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இப்போது போதுமான அளவுக்கு இருக்கிறார்கள். இவர்களால் இவ்விஷயங்களைப் பயில்வதற்கும் கற்பிப்பதற்கும் ஒன்றிரண்டு சிறிய மையங்களைத் தோற்றுவிக்க முடியும் (இதற்கு மேல் அவசியமும் இல்லை). இவையெல்லாம் அடுத்த அறுவடைக்கான விதைகளாகப் பயன்படும்.

நாம் எல்லோரும் பசியில் இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நம்மிடம் ஒரு மூட்டை நெல்தான் இருக்கிறது. அதைக் கொண்டுதான் மொத்த கிராமத்திற்கும் உணவளிக்க வேண்டும் என்ற பட்சத்தில், ஒரு மூட்டை நெல்லைக் கொண்டு கையளவு ரொட்டித் துண்டுகள் செய்வதைக் காட்டிலும், பசியைச் சற்று பொறுத்துக் கொண்டு அடுத்த விளைச்சலுக்காகக் கொஞ்சம் சேமித்து வைத்தால் அடுத்த அறுவடையில் மொத்த கிராமத்தின் தேவையைப் பூர்த்தி செய்யுமளவிற்கு நம்மால் அறுவடை செய்ய முடியும். நாம் இப்போது இதைத்தான் செய்ய வேண்டும். நானும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். நீங்களும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். மிகப் பெரிய அளவு நிறுவனப்படுத்துவதற்குத் தேவையான பொருளாதார வசதியோ, அரசியல் அதிகாரமோ ஏன், அறிவுசார் முறைகளோகூட நம்மிடம் இல்லை. இருந்தாலும் நம்முடைய புரிதலை நாம் வெளிப்படுத்தத்தான் வேண்டும். யதார்த்த நிலையைச் சொல்லி நம்மால் முடிந்தமட்டும் மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.

இதையெல்லாம் மீறி, ஈரான் உட்பட சில நாடுகளில் மிகவும் செல்வாக்கு படைத்தவர்கள் சிலர் இத்தகைய விஷயங்களைப் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஈரானின் முன்னணி அறிவியல் நிறுவனத்தில் —இப்போது ஷரீஃப்  பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுவதில்— நான் தலைவராக இருந்தபோது நவீன அறிவியலை இஸ்லாமிய உலகப்பார்வையோடு ஒன்றிணைப்பதற்கும், அறிவியலின் தத்துவத்தை மேற்கத்திய நிலைப்பாட்டிலிருந்து அல்லாமல் இஸ்லாமியப் பார்வையிலிருந்து படிப்பதற்கும் நான் அறிமுகப்படுத்திய திட்டம் இத்தகைய முயற்சிகளுக்கான முன்னுதாரணமாகும். நாங்கள் இதில் ஓரளவு வெற்றியும் பெற்றோம். இத்தகைய முயற்சிகளை நாம் இன்னும் தீவிரப்படுத்துவதோடு பன்மடங்காகப் பெருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. ஸ்தூலமாகச் சொல்வதென்றால், ஒரு மையம் தேவைப்படுகிறது. அது மேற்கில் அல்லது இஸ்லாமிய உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த மையத்தில் குறைந்த அளவிலான மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பதோடு இத்தகைய பார்வையின் அடிப்படையில் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுதான், என்னைப் பொறுத்தமட்டில் இஸ்லாமிய விஞ்ஞானங்களை மீட்டெடுப்பதற்கான ஒரே வழியாகப் படுகிறது. ஒருவேளை, இதுபோன்ற மையத்தை மேற்கில் ஒன்றும் இஸ்லாமிய உலகத்தில் ஒன்றும் தொடங்கலாம். மிகக் காத்திரமாகச் செயல்படக்கூடிய இவ்விரண்டு நிறுவனங்கள் மட்டுமே போதுமானவை. இதுவே போதும், பல அற்புதங்களைச் செய்து காட்டுவதற்கு.

ஒரு சமயம், இஸ்லாமியக் கலை மற்றும் கட்டடக்கலையை மீட்டெடுப்பதற்கு நான் இதே போன்று ஒரு திட்டத்தைப் பரிந்துரைத்தேன், இஸ்லாமியக் கலையின் தத்துவத்தை மீட்டெடுக்க வேண்டும் என்கிற நோக்கில். பிறகு, லண்டனின் ‘இளவரசர் வேல்ஸ் இஸ்லாமியக் கலைக்கான பயிற்சிக்கூடம்’ என்று ஒன்று நிறுவப்பட்டது. இதுபோன்ற நிறுவனங்கள்தான் நமக்குத் தேவைப்படுகின்றன. கட்டடக்கலையிலும் வடிவமைப்பதிலும் சிறந்துவிளங்கிய பல இஸ்லாமிய மாணவர்கள் இந்தப் பயிற்சிக்கூடத்தில் சேர்ந்தார்கள். இவ்வாறு சேர்ந்த ஒருவர்தான் காலித் அஸ்ஸாம். இதே குடும்பப் பெயரைக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான எகிப்துக் குடும்பத்திலிருந்து வந்த இவர்தான் இப்போது இந்தப் பயிற்சிக்கூடத்தின் தலைவராக இருக்கிறார். பிறகு, ஜோர்தான் நாட்டில் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் இதில் ஆர்வம் காட்டினார்கள். இதன் விளைவாக, இஸ்லாமியக் கலை மற்றும் கட்டடக்கலை குறித்து மிகக் காத்திரமான புரிதலைக் கொண்டவரான மின்வர் அல்மஹீத் தலைமையில் இஸ்லாமியக் கலைக்காகப் பள்ளி ஒன்று (ஜோர்தானிலுள்ள) அம்மான் நகரில் நிறுவப்பட்டு மிக அற்புதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதற்கு நம்மிடையே உதாரணங்கள் இருக்கின்றன. இப்போது இந்தோனேஷியாவில் இதுபோல் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

ஆனால், நாம் இஸ்லாமிய விஞ்ஞானங்களுக்குத் திரும்புவோம். இந்த முயற்சியில் நீங்கள் முக்கியப் பங்காற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். நான் என் வாழ்க்கையில், என்னைப் படைத்தவனைச் சந்திக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். கடந்த காலங்களில் நான் செய்ததுபோல் புதிய நிறுவனங்களை உருவாக்கவோ அல்லது நிர்வகிக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவோ இனியும் என்னால் முடியாது. நீங்கள் என்னைக்காட்டிலும் இளையவர். இப்பொழுது இது உங்களது முறை. ஆனால், என்னால் முடிந்த விதத்தில் உங்களுக்கு என்னவெல்லாம் உதவி செய்ய முடியுமோ அவற்றைச் செய்துகொடுக்கத் தயாராக இருக்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

இக்பால்: இத்தகைய பார்வையை நடைமுறைப்படுத்துவது நிதியாதாரங்களைச் சார்ந்துள்ளது. மரபாக எப்போதுமே, இஸ்லாமிய விஞ்ஞானங்கள் பொது நிதியிலிருந்துதான் ஊக்குவிக்கப்பட்டன. இது, சில சமயங்களில் வக்ஃப் மூலமாக இருக்கலாம். சில சமயங்களில் அரசர்கள், வஸீர்கள், ஆலிம்கள் அல்லது வியாபாரிகள் மூலமாக இருக்கலாம். ஆனால் இன்று இத்தகைய பெருமைக்குரிய நிறுவனங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. இன்று செல்வந்தர்கள் தீவிரமான ஆய்வுகளுக்கு நிதியுதவி செய்வதைக் காட்டிலும் உயரமான கட்டடங்கள் கட்டுவதற்கும் மிகப் பெரிய பிளாஸாக்கள் கட்டுவதற்கும்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரேயொரு பயிற்சிக்கூடத்தை நிறுவுவது என்றாலும் கண்ணுக்கெட்டிய தொலைவில் இது நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொது நிதியை (பெரும்பாலும் பெட்ரோல் பணத்தை) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் இஸ்லாமிய விஞ்ஞானங்களை மீட்டுருவாக்கம் செய்வதில் எத்தகைய ஆர்வமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இப்படியிருக்க மேற்கிலோ அல்லது இஸ்லாமிய நிலப்பரப்பிலோ இப்படிப்பட்ட கல்விக்கூடம் ஒன்றை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை எங்கிருந்து பெறுவது?

நஸ்ரு: இஸ்லாமிய உலகத்தில் கல்வி நிறுவனங்களின் நிலை குறித்து நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். நான் நம்பிக்கை எங்கு இருக்கிறது என்று சொல்கிறேன். ஒரு முன்னுரையாகச் சொல்வதென்றால், நீங்கள் சொன்னதுபோல், இஸ்லாமிய வரலாற்றில் கல்வி நிறுவனங்கள் பொதுவாக நன்கொடைகள் மூலமாக ஆதரிக்கப்பட்டதை அடிக்கோடிட்டுச் சொல்லத்தான் வேண்டும். அதாவது அல்கஸ்ஸாலி கற்றுக் கொடுத்த நிஸாமிய்யா போன்று. இந்த நன்கொடைகள் எல்லாம் தனிநபர்களால் கொடுக்கப்பட்டவை. அது அரசர்களாக இருக்கலாம், வஸீர்களாக இருக்கலாம், அல்லது பணக்கார வியாபாரிகளாக இருக்கலாம். இதற்கு ஒத்த நிறுவனங்கள் பல இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, வஸீர்கான் பள்ளிவாசல் அல்லது உங்கள் இடமான லாகூரில் உள்ள மதரசாக்களைச் சொல்லலாம்.

மரபான சூழ்நிலையில் இருந்ததுபோல் இல்லாமல் இப்போது பல விஷயங்கள் மாறிவிட்டன. முதலாவதாக, ஒரு நிறுவனமாக வக்ஃப் இன்று ஆலிம்களிடம் இல்லை. மிக முக்கியமான இந்த இஸ்லாமிய நிறுவனம் ஓரளவிற்கு மதச்சார்பற்றதாக மாற்றப்பட்டுவிட்டது. எகிப்து, பாகிஸ்தான், துருக்கி, ஈரான் மற்றும் பல நாடுகளில் ‘வக்ஃப் அமைச்சகம்’ என்று ஒன்று உருவாக்கப்பட்டு நன்கொடைகள் அந்த அமைச்சகத்திற்குள் கொண்டுவரப்பட்டன. இன்று, இந்த வக்ஃபுக்கு நிதியுதவி செய்பவர்கள் அறிவுசார் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் மையங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் பொதுவாக வழிபாட்டுத் தலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாம் இங்கு எதிர்கொள்ளும் பெரும் சங்கடம் என்னவென்றால், வக்ஃபை எடுத்துக்கொண்ட அரசாங்கங்கள் பெருமளவு மதச்சார்பற்றவையாக இருக்கின்றன என்பதனால் அறிவுசார் செயல்பாடுகள் என்றாலே, இவர்கள் நவீன மேற்கத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் என்றுதான் சிந்திக்கிறார்கள்.

இதற்கு விதிவிலக்குகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு இதைச் சொல்லலாம். இன்று பாரசீக மாதக் கணக்கில் மூன்றாவது மாதம். அதாவது குர்தத் மாதத்தின் முதல் நாள். ஈரானில் முல்லா ஸத்ராவிற்காக பெரும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் சில அரசாங்க நிதியுதவியோடு நடக்கின்றன. இரண்டாவது பிரச்சினை என்னவென்றால், —இதுதான் முக்கியமான பிரச்சினை— இஸ்லாமிய உலகத்தில் காணப்படும் செல்வந்தர்கள் புதிய பணக்காரர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பழைய மேட்டுக்குடிகள் போல் இஸ்லாமியக் கலாச்சாரத்திலும் அறிவுசார் மரபிலும் வேர்கொண்டிருக்கவில்லை. இஸ்லாமியச் சமூகங்கள் பெருமளவு நிலையுறுதியற்ற தன்மையைக் கொண்டிருந்தாலும், இந்தப் புதிய வியாபார வர்க்கம் பெருமளவு மேற்கத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதோடு, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இது போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது என்று இருக்கிறார்கள். நான் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன். ஒரு நூற்றாண்டிற்கோ அல்லது அதற்கு முந்தியோ இவர்களுடைய முன்னோர்கள் சுவாசித்த அதே கலாச்சாரத்தை இவர்கள் சுவாசிக்கவில்லை. மூன்றாவதாக, பல்கலைக் கழகங்கள் போன்ற புதிய நிறுவனங்களை நாம் பெற்றிருக்கிறோம். இந்தப் புதிய நிறுவனங்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தனியார் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இவற்றுக்கென்று தனித்த பொருளாதாரத் திட்டங்களும் பொருள்திரட்டும் முறைகளும் இருக்கின்றன. இவை வக்ஃப் சார்ந்து இயங்குவதில்லை. (அல்கஸ்ஸாலி பாடம் நடத்திய நிஸாமிய்யா போன்று இயங்குவதில்லை). இத்தகைய பின்னணியில் நீங்கள் சொன்னதுபோல் என்ன செய்வது? எங்கிருந்து நம்பிக்கையைப் பெறுவது?

நான் உங்களுக்கு ஒரு உதாரணம் கொடுக்கிறேன். அறிவியல், மரபு முக்கோணவியல் மற்றும் இது போன்றவற்றை உள்ளடக்கி மரபான இஸ்லாமியக் கலையை மீட்டுருவாக்கம் செய்வதற்காக இளவரசர் சார்லஸ் உதவியோடு லண்டனில் தொடங்கப்பட்ட இளவரசர் வேல்ஸ் கல்விக்கூடம் பற்றிக் குறிப்பிட்டேன். இது இருபது வருடங்களாக மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அத்தோடு, இஸ்லாமிய உலகிலேயே இதற்கு ஒத்தவொரு கல்விக்கூடம், அதுவும் மிகத் தனித்துவமானது, அம்மானில் நிறுவப்பட்டுள்ளது. இப்போது கேள்வி என்னவென்றால், இது எப்படிச் சாத்தியப்பட்டது? ஜோர்தான் மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரரும் அறபு இளவரசர்களில் மிக அற்புதமான மனிதரும் என்னுடைய நெருங்கிய நண்பரும் பிரின்ஸ்டன் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்றவரும் மிகச் சிறப்பாக எழுதக்கூடியவர் என்பதோடு, இஸ்லாமியக் கலாச்சாரத்தை (குறிப்பாக அதன் மரபார்ந்த கலைகளை) முழுமையாகப் புரிந்துகொள்ளக் கூடியவருமான இளவரசர் காஸி பின் முஹம்மது அவர்களால் சாத்தியப்பட்டது என்று சொல்லலாம். இது நமக்கு மிகச் சிறந்த பாடமாக அமைகிறது என்பதோடு, நம்மால் செய்ய முடிந்ததும் இதுதான். அதாவது பயனுறுதியுள்ள ஓரிரு புரவலர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். மரபான விஞ்ஞானங்களுக்காக ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்தின் ஜனாதிபதி முன்வருவார் என்று காத்திருப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இது நடக்கப் போவதுமில்லை. ஆனால் இரண்டாவதாக நான் சொன்னது எப்போதும் சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான்.

நான் இரண்டாவது உதாரணத்தைக் கொடுக்கிறேன். மொராக்கோவின்மறைந்த அரசர் ஹசன். இவர் இளவரசராக இருந்தபோதே அவரை நன்கறிவேன். இவர் எப்போதும் ஒரு நவீனத்துவவாதியாகவே இருந்தவர். இவர் அரசராவதற்கு முன்னால் உடையணியும் முறையைப் பார்த்தால், பிரெஞ்சு சீமான் மாதிரியே இருப்பார். இவர் அணியும் டை மட்டுமே நூற்றுக்கணக்கான டாலர்கள் தேறும். இதையெல்லாம் மீறி அவர் இஸ்லாமியக் கலை மற்றும் கட்டடக்கலை மீது பெரும் காதல் கொண்டிருந்தார். இது ஒருவிதமான ஆன்மிகக் காதல்தான். இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமியக் கலைகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கு மற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களைக் காட்டிலும் இவர் அதிகம் செய்துள்ளார். இவர் மோராக்கோவில் செய்துகாட்டியது நம்ப முடியாததாக இருக்கிறது. இஸ்லாமியக் கட்டடக்கலை, வடிவமைப்பு, வடிவ கணிதம், அறபு மற்றும் பிற மரபான விஞ்ஞானங்களை மீட்டுருவாக்குவதற்கென்று ஒரு பள்ளியை நிறுவினார். இவையெல்லாம் இஸ்லாமியக் கலைமரபிற்கு (அதன் மூலம் அதன் அறிவுசார் மரபிற்கு) மிக அற்புதமான பங்களிப்புச் செய்துள்ளன. இவர் தத்துவவாதியும் இல்லை, கணிதவியலாளரும் இல்லை. நீங்களோ நானோ இஸ்லாமிய விஞ்ஞானங்களைப் புரிந்துகொண்டிருப்பதுபோல் புரிந்துகொண்டவருமில்லை. ஆனால், விஞ்ஞானத்தைக் கலைத்துறைக்கு உபயோகப்படுத்துவது என்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆக, நமக்கு அறபு உலகத்திலிருந்து இரண்டு உதாரணங்கள் கிடைக்கின்றன. ஜோர்தானில் ஒன்று, மொராக்கோவில் ஒன்று. இவ்விரண்டுமே ஏதோ விபத்துபோல்தான் தோன்றுகின்றன. இதுபோன்ற விஷயங்களில் அக்கறை காட்டும்படி அரசர் ஹசனுக்கோ இளவரசர் காஸிக்கோ எவரும் பாடமேதும் எடுக்கவில்லை. இதனால் நாம் நம்பிக்கை இழக்காமல் இருப்பதோடு, இது போன்றவை தொடர்ந்து இஸ்லாமிய விஞ்ஞானங்களுக்கு நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

நூற்று ஐம்பது கோடி இஸ்லாமியர்களில் ஓரளவிற்குப் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் பல லட்சம் பேர் இருக்கலாம். நிச்சயமாக, இவர்களில் ஐந்து அல்லது பத்துப்பேர், சிலர் இஸ்லாமியக் கலை மற்றும் கட்டடக்கலைக்குச் செய்ததுபோல், பரந்துபட்ட தளத்தில் இஸ்லாமிய விஞ்ஞானங்களுக்குச் செய்யப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, துருக்கியில் புதிய வியாபார வர்க்கம் மிகச் செழிப்பாக இருப்பதை நானறிவேன். இவர்கள், நான் முன்னர் சொன்ன புதிய பணக்காரர்கள்போல் அல்லாமல் இறைப்பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். புத்தகங்கள் எழுத நிதியுதவி செய்கிறார்கள். பதிப்பகங்கள் நடத்துகிறார்கள். பிற அறிவுசார் நடவடிக்கைகளுக்கு உதவிசெய்கிறார்கள். மேலும், பல்கலைக்கழகச் செயற்பாடுகளில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாம் பேசிக் கொண்டிருப்பதற்கு ஒத்த கல்விக்கூடம் ஒன்று நிறுவப்பட வேண்டிய நியாயத்தைக் கற்பனை செய்துபார்ப்பது இவர்களுக்கு ஒன்றும் கடினமாக இருக்கப் போவதில்லை. மரபான இஸ்லாமிய விஞ்ஞானத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கு, அதாவது நக்லி மற்றும் அக்லி ஆகிய இரண்டு விஞ்ஞானங்களையும் ஒன்றிணைத்துப் பயில்வதற்கான ஒரு சிறிய மையத்தைத் தொடங்குவதற்கு, நாம் இவர்களில் ஓரிருவரோடு மட்டும் இணைந்து வேலைபார்த்தாலே போதுமானது.

இத்தகைய சாத்தியப்பாடுகள் உள்ள மற்றொரு நாடு, இந்தோனேசியா. இங்கு இஸ்லாமிய விஞ்ஞானங்கள்மீது பெரும் ஈடுபாட்டைப் பார்க்க முடிகிறது. ஏன் செல்வந்தர்களிடமும்கூட இத்தகைய ஈடுபாட்டைப் பார்க்க முடிகிறது. ஜகார்த்தாவில் ஏற்கனவே Perennial Studiesக்கு என்றே ஒரு கல்விக்கூடத்தை நிறுவியிருக்கிறார்கள். இது மிக சுவாரஸ்யமான மாற்றம்தான். ஏனெனில், சில பத்தாண்டுகளுக்கு முன் நாம் இதுபோல் ஒன்றை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டோம். அபார வாய்ப்புவளம் கொண்ட நாடுகள் என்று நாம் துருக்கி, ஈரான், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சொல்லலாம். துரதிர்ஷ்டவசமாக அறபு உலகம் பிரம்மாண்டமான நூலகங்களையும் மூலப்பிரதிகளையும் கொண்டிருந்தாலும், அறபு வசந்தத்தைத் தோற்றுவித்த களமாக இருந்தாலும், உங்களுடைய ஆய்விதழில் —கடைசியாக வந்த இதழில்— மக்கா பற்றி மிகத்தெளிவாக எழுதியிருப்பது போல் மிக உயரமான கட்டடங்களைக் கொண்டிருப்பதையெல்லாம் மீறி, அறபு உலகத்திலிருந்து ஒரு நாட்டைக்கூட என்னால் சொல்ல முடியவில்லை. நாம் விரும்புவது போன்ற அறிவுசார் நடவடிக்கைகளுக்கு ஏற்ற அரசியல் கலாச்சாரமோ சூழ்நிலையோ அங்கு இல்லை. நீங்கள் பிறந்த நாடான பாகிஸ்தானையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. எவ்வளவோ சாத்தியக்கூறுகள் இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக உங்கள் நாடு இப்போது அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. போஸ்னியா போன்ற நாட்டையும் ஒருவர் இங்கு சேர்த்துக் கொள்ளலாம். நாம் சிந்திப்பதற்கு ஒத்த முறையில் சிந்திக்கக்கூடிய திடமான அறிவுஜீவிகள் இங்கு இருக்கிறார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை, இவர்கள் மற்ற இஸ்லாமிய உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இக்பால்: நல்லது. வேலையைத் தொடங்குவதற்கு ஏதோ ஒரு இடத்தில் ஒரேயொரு மையத்தை உருவாக்க முடியுமென்றாலும் அதுவே போதுமானது. இப்போதைய தேவையும் அது மட்டும்தான். பிறகு, மக்கள் அதன் பலனைப் பார்க்கத் தொடங்கினால்…

நஸ்ரு: நீங்கள் சொல்வது சரிதான். தரம் பற்றிய கேள்வியையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. இது நான் முன்பு சொன்ன விஷயத்திற்கு என்னைக் கொண்டுவிடுகிறது. நாம் தொடக்கத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்க வேண்டியுள்ளது. சிறந்த அறிஞர்களையும் சிந்தனையாளர்களையும் இயந்திரம் உற்பத்தி செய்வதுபோல் நம்மால் உற்பத்தி செய்ய முடியாது.

இக்பால்: நிச்சயமாக. மிகக் குறைவான எண்ணிக்கையின் தாக்கம் என்று வரும்போது, வேறொரு விஷயத்தையும் சொல்ல வேண்டியுள்ளது. அதாவது, மேற்கில் இஸ்லாம் பற்றியான ஆய்வு என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இது பல நிலைகளைக் கடந்து வந்துள்ளது. இப்போதைய புதிய கீழைத்தேயவாதம், கல்விப்புல உரையாடல்கள் மட்டுமல்லாமல், இத்துறைகளுக்குள் புதிய இஸ்லாமியர்களின் நுழைவு என்று எல்லாமும் கலந்ததாக இருக்கிறது. இந்தப் புதிய இஸ்லாமியர்களில் சிலர் உங்களுடைய மாணவர்கள். மற்றவர்கள் பிற அறிஞர்களிடம் படித்தவர்கள். இவர்கள் எல்லோரும் இப்போது ஒரு நிலைப்பாட்டை எடுக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இப்போது கேள்வி என்னவென்றால், இந்தப் புதிய தலைமுறையினர் கல்விப்புல உரையாடல்களை எவ்வாறு வடிவமைக்கப் போகிறார்கள்? நான் சொல்ல வருவது இதுதான்: உங்களுடைய எழுத்துகளை ஒருவர் படித்தால், உடனடியாக அதில் காணப்படும் ஈமானின் தாக்கத்தை உணர முடியும். நீங்கள் கல்விப்புல பாணியில்தான் எழுதுகிறீர்கள் என்றாலும், கல்விப்புல வழக்குச் சொற்களைக் கொண்டு நிரப்புவதையோ, கல்விப்புல எழுத்துகளில் அடிக்கடி நாம் எதிர்கொள்ளும் தயக்கத்தையோ (‘இருக்கலாம்’, ‘ஒருவேளை’, ‘சாத்தியப்படலாம்’ போன்றவற்றை) உங்கள் எழுத்துகளில் காண முடியாது. மாறாக, இந்த எழுத்துகள் இஸ்லாமிய மரபில் மிக ஆழமாக வேர்கொண்ட ஒருவரின் எழுத்துகள் என்று ஒருவரால் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும்.

நான் எப்போதும் உங்களிடம் கேட்க விரும்பிய கேள்வியை இங்கு நுழைத்துவிட விரும்புகிறேன்: கல்விப்புலம்  அதற்கென்று கறார் தன்மைகளைக் கொண்டிருக்கும்போது, அதில் சமரசம் செய்துகொள்ளாமல் உங்களுக்கென்று ஒரு தனித்துவமான பாணியை எவ்வாறு சாத்தியப்படுத்திக் கொண்டீர்கள்? 1970களில் உங்களுடைய எழுத்துகளை நான் முதன் முதலில் படித்தபோது பிரமித்துப் போனேன். இன்னும் சற்றுப் பரந்த தளத்திலிருந்து சொல்வதென்றால், இஸ்லாம் பற்றிய கல்விப்புல உரையாடல் அதற்கென்ற வரலாற்றைக் கொண்டுள்ளது. பழைய காலனிய நாடுகளிலிருந்து மேற்குக்கு வந்திருக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் பெரும் காலனியச் சுமையோடு வந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கல்விப்புலக் கட்டாயங்களுக்குப் பணிந்து போனார்கள். இதனாலேயே இஸ்லாமியர்களாக இல்லாத இவர்களுடைய ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் போலவே இவர்களும் எழுதினார்கள். ஆனால், இப்போது நம்மிடையே புதிய தலைமுறை ஒன்று உருவாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மேற்கில் பிறந்து அங்கேயே வளர்ந்து கல்விப்புலத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். இவர்கள் இஸ்லாம் குறித்த அக்கறையுடன் உண்மையான உரையாடலை வடிவமைப்பதற்கு என்ன ஆலோசனைகள் கொடுக்க விரும்புகிறீர்கள்?

நஸ்ரு: இது மிக முக்கியமான கேள்வி. இதற்கு என்னால் முடிந்தமட்டும் பதில் அளிக்க முயல்கிறேன். நான் என்னைப் பற்றிப் பேச விரும்பவில்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக நான் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால் என்னைப்பற்றிப் பேச வேண்டியுள்ளது. நான் அறிவியல் துறையிலிருந்து மானுடப்புலம் (humanities) சார்ந்த கல்வித் துறைக்கு மாறிய பிறகு, அதாவது எம்.ஐ.டியில் இயற்பியலும் கணிதமும் படிப்பதிலிருந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய அறிவியலும் தத்துவமும் படிப்பதற்கு மாறிய பிறகு, நான் மிக முக்கியமான மேற்கத்திய அறிஞர்களிடம் பாடம் பயின்றேன். அதில் ஆங்கில மொழியில் மிகப் பெரிய கீழைத்தேய அறிஞரான சர் ஹாமில்டன் கிப் அவர்களும் ஒருவராவர். இவர் நம்முடைய மதத்தின் மீது சாதகமான மதிப்பீட்டைக் கொண்டவராக இருந்தார்.

அப்போது, இஸ்லாம் குறித்து மூன்று வகையான எழுத்துகள் காணப்பட்டன: முதலாவதாக, இஸ்லாமியரல்லாத மேற்கத்தியர்களின் எழுத்துகள். இவர்கள் மார்க்சியப் பார்வையிலிருந்து அல்லது மதச்சார்பற்ற மனிதத்துவப் பார்வையிலிருந்து அல்லது வேறு ஏதோ ஒரு உலகப்பார்வையிலிருந்து  இஸ்லாத்தை ஆய்வுசெய்தார்கள். இரண்டாவதாக, அறபு மொழி அல்லது பாரசீக மொழியில் எழுதப்பட்டு, பிறகு ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் மூல எழுத்துகள். உதாரணத்திற்கு, மறைந்த சையித் குதுபின் எழுத்துகளைச் சொல்லலாம். மூன்றாவதாக, மேற்கத்தியமயமான இஸ்லாமியர்களின் எழுத்துகள். இவர்கள் இஸ்லாமியப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஒரு மதமாக இஸ்லாமியச் சிந்தனைகளோடு எத்தகைய தொடர்பும் இல்லாதவர்கள்.

இத்தகைய பின்னணியில்தான் நான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை முடித்தேன். மேற்கிலுள்ள மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் படித்திருந்தாலும், இஸ்லாம் குறித்த நவீனத்துவ மற்றும் கீழைத்தேயப் பார்வைகளை முற்றிலுமாக நிராகரித்த முதல் இஸ்லாமியன் நான்தான் (அஸ்தக்ஃபிருல்லாஹ் – அல்லாஹ் என்னை மன்னிப்பானாக). இந்தச் சூழ்நிலையில்தான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டை (இது பின்னர் An Introduction to Islamic Cosmological Doctrines, Sunny Press, 1963 நூலாக வெளியானது) சமர்ப்பிப்பதற்கு முன்னரே நான் என்னுடைய முதல் புத்தகத்தை எழுதி முடித்தேன். நான் இஸ்லாமிய அறிவியல் மற்றும் தத்துவம் மீது கவனம் குவித்தேன். உதாரணத்திற்குச் சொல்வதென்றால், தத்துவத் துறையில் நானும் கோர்பின்னும் (Henry Corbin) சேர்ந்து, இஸ்லாமியப் பார்வையிலிருந்து முதல்தரமான எழுத்துகளைக் கொடுத்து மொத்த அறிவுச் சூழ்நிலையையும் மாற்றியமைத்தோம். இதற்கு மேற்கத்திய அறிஞர்களிடமிருந்து மட்டுமல்லாமல், மதச்சார்பற்ற இஸ்லாமியர்களிடமிருந்தும், இன்னும் குறிப்பாக அறபு தேசியவாதிகளிடமிருந்தும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியபோது, தனியொரு ஆளாக நின்று இவர்களை எதிர்கொண்டேன். இதன் விளைவாக, இஸ்லாமிய விஞ்ஞானம் என்ற கருத்தாக்கம் திடமாக நிலைத்து நிற்குமளவிற்குப் போதுமான கட்டுரைகளும் புத்தகங்களும் படைக்கப்பட்டன.

இதனோடு தொடர்புடைய ஒரு விஷயத்தை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். எழுதும்போது ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் ஒரு புதிய பாதையை வடிவமைக்க முயல்கிறீர்கள் என்றால் மேலும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒலிக்குறியீட்டைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று விமர்சித்து உங்களை மற்றவர்கள் ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது.

இக்பால்: சரிதான். சகல விஷயத்திலும் கவனம் செலுத்தி…

நஸ்ரு: ஆம். ஒருவர் அவருடைய எழுத்தை மிகக் கவனமாகப் பிழைதிருத்தம் செய்ய வேண்டும். எவ்வளவோ விஷயங்கள் அறிந்திருக்கும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் பலரை நானறிவேன். இவர்களிடம் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்றாலும் எந்த மேற்கத்திய அறிஞரும் இவர்களுடைய எழுத்துகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. இதற்குக் காரணம் இவை முன்வைக்கப்படும் முறை ‘பலவீனமாக’ இருக்கிறது. என்னுடைய முதல் மூன்று புத்தகங்கள் ஹார்வர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்பட்டன என்பதே பெரிய சாதனைதான், அல்ஹம்துலில்லாஹ். ஒரு இஸ்லாமியராக மட்டுமல்ல, அதன் தரத்திலும் இது பெரிய சாதனைதான். இந்தப் புத்தகங்கள் அமெரிக்காவிற்கு வெளியேயும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்போது இவை மிகத் தொலைவில் உள்ள பாகிஸ்தான், நைஜீரியா, மலேசியா போன்ற நாடுகளிலும் படிக்கப்படுகின்றன. அக்காலத்தில், மேற்கில் வாழ்ந்துகொண்டு இத்தகைய கண்ணோட்டத்தில் எழுதுவதற்கு துணிச்சல் கொண்ட ஒரே இஸ்லாமிய அறிஞர் நானாகத்தான் இருந்தேன். ஆனால், இறைவனுக்குத்தான் நன்றிசொல்ல வேண்டும், இப்போது உலக அரங்கில் பல இஸ்லாமிய அறிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள்.

இக்பால்: இறுதியாக, மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய ஆய்வுகளின் வளர்ச்சியை நீங்கள் கோடிட்டுக் காட்டுவதென்றால், அதன் சாதனைகளாக எவற்றையெல்லாம் சொல்வீர்கள்?

நஸ்ரு: முதலாவதாக, இஸ்லாம் என்பது அறேபியாவில் எதேச்சையாக நடந்த வரலாற்று விபத்து என்று மைக்கேல் குக் கருதியது போன்று அல்லாமல், வகுப்பறைகளிலும் வெளியீடுகளிலும் இஸ்லாமியர்கள் நம்புவதுபோல் இஸ்லாத்தை ஒரு மறைஞான மதமாக வெளிப்படுத்த முடிந்ததே மிகப் பெரிய சாதனைதான். நான் ஒரு உதாரணம் கூறுகிறேன். யூத மதத்தையும் கிறித்தவ மதத்தையும் அர்த்தப்படுத்திக் கொள்வதில் யூதர்களுக்கும் பிராட்டஸ்டன்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், யூத மதத்தில் உண்மையாக வேர்கொண்ட ஒரு யூத அறிஞரால், இம்மதத்தை வெளியிலிருந்து  ஆய்வு செய்பவரை வேறுபடுத்தி அடையாளம் காண முடியும். கிறித்தவம் குறித்தும் இதே நிலைதான். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஒருவரால் பிரச்சாரம் செய்ய முடியாது என்பது உண்மைதான். அதே சமயத்தில், அதை உண்மையாக வெளிப்படுத்துவதற்கு ஒருவர் அந்த மதத்திற்குள் தன்னை இருத்திக்கொள்ள வேண்டும். இது மத ஆய்வுகள் துறைகளுக்குள்ளும் வெளியேயும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விவாதம்தான். நான் இதற்குள் இப்போது போக முடியாது. ஆனால் என்னைப் பொறுத்த மட்டில், மதத்தைக் கற்பிப்பதற்கு நான் மதச்சார்பற்ற வழிமுறைகளை எதிர்க்கிறேன். இது எப்படி இருக்கிறது என்றால், இசையைக் கற்றுக்கொடுப்பவர் அதைக் கேட்கும் திறன் அற்றவராக இருக்கவேண்டும் என்பது போல் இருக்கிறது. நிச்சயமாக ஒருவர் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் பாடம் எடுப்பதுபோல், அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ உள்ள பல்கலைக்கழகங்களில் பாடம் எடுக்க முடியாதுதான். இருந்தாலும், ஒருவரால் இஸ்லாத்தை மறைஞான மதமாக முன்வைக்க முடியும். இஸ்லாம் முன்வைக்கும் மறைஞானத்தை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால், அது முற்றிலும் வேறான விஷயம். ஒரு குறிப்பிட்ட முறையில் அர்த்தப்படுத்துவதை நாம் மாணவர்கள் மீது திணிக்க முடியாது.

இரண்டாவதாக, கீழைத்தேயவாத மற்றும் சமூக விஞ்ஞான அறிவுசார் ஆய்வுகள் முன்வைக்கும் இஸ்லாத்தை மிகத் தீவிரமாக விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும். கடந்த ஐம்பது வருடங்களாக இதில் என்னுடைய பங்களிப்பை நான் செய்துகொண்டிருக்கிறேன். இவ்விஷயத்தில், எட்வர்டு சைதின் ‘கீழைத்தேயவாதம்’ நேரடியாக இஸ்லாம் குறித்த வாய்ப்பைக் கொண்டிருக்காவிட்டாலும், அது ஆற்றிய பங்களிப்பும் ஏற்படுத்திய தாக்கமும் உண்மையிலேயே மிகப் பிரம்மாண்டமானது.

மூன்றாவதாக, இஸ்லாமிய அறிஞர்கள் அவர்களுடைய மரபை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் இன்ன பிற மொழிகளில் உள்ள அறிவுசார் ஆய்வுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய கல்விப்புல ஆய்வுகள் மீது அறிவை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கல்விப்புலம் சார்ந்த போதாமைகள் இருக்குமானால் அவர்களின் எழுத்துகளை எவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இதற்கு மொழியாளுமையும் தேவைப்படுகிறது. அறபு, பாரசீகம், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. மேலும் ஒரு இஸ்லாமிய மொழியையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு அறிஞர் உஸ்மானிய அறிஞர்கள் பற்றியோ, இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் பற்றியோ அக்கறை கொண்டிருப்பாரானால், அவர் துருக்கி அல்லது உருது மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் முக்கியமான மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட மரியாதையை உண்டாக்கக்கூடிய உரையை நிகழ்த்தக்கூடிய திறன்படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.

மேற்கத்திய கல்விப்புலம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த ஓரிரு வருடங்களிலேயே மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் புதிய தலைமுறை இஸ்லாமிய அறிஞர்கள் உருவாகியுள்ளார்கள். இந்த இளம் அறிஞர்கள் —இவர்களில் சிலரை நான் அறிந்திருக்கிறேன் என்பதோடு சிலருக்குப் பாடம் எடுத்த பெருமையும் எனக்கு உண்டு— வேலை உத்தரவாதம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மொத்த கல்விப்புலச் சூழ்நிலையையும் மாற்றத்தான் போகிறார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்புகூட முக்கியமான அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் யூத மதத்தைப் பயிற்றுவித்த யூத அறிஞர்கள் சொற்பமாகத்தான் இருந்தார்கள். ஆனால், இப்போது கல்விப்புலத்தில் எல்லா உயர்ந்த பதவிகளையும் பெற்றிருப்பதோடு, யூத மத ஆய்வுகள் துறைகளில் பெரும்பாலும் யூத அறிஞர்களே இருக்கிறார்கள். இது மிகவும் போற்றத்தக்க மாற்றமாகும். இஸ்லாமியப் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை மருத்துவர்களாக, பொறியாளராக, வழக்கறிஞராக ஆக்குவதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் இஸ்லாமிய ஆய்வுகளுக்குள் நுழைவதற்கும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நன்றி.

(இவ்வுரையாடல் Islamic Sciences, Vol.II, No.1 – Summer 2013 ஆய்விதழில், The Meaning, Scope and Future of Islamic Sciences: Seyyed Hossein Nasr in conversation with Muzaffar Iqbal என்ற தலைப்பில் வெளிவந்தது.)

தமிழில்: ராமாநுஜம்

(நன்றி: அகம் புறம்: கலை இலக்கியப் பண்பாட்டு அரசியல் ஆய்விதழ், ஏப்ரல்-செப்டம்பர் 2015)

Related posts

Leave a Comment