நேர்காணல்கள் 

எந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது

Loading

கேரளாவைச் சேர்ந்த உமா, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருபவர். சிறுவயது முதலே பரதநாட்டியம், கர்நாடகச் சங்கீதம், கதகளி சங்கீதம் ஆகிய செவ்வியல் கலைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர். மலையாள சினிமா, விளம்பரங்கள் போன்றவற்றில் பாடியிருக்கிறார். 2010ல் மலையாளத்தில் வெளியான அன்வர் படத்தில் இவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அவர் எமக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

1. செவ்வியல் கலைகளின் மீது உங்களுக்கு ஈடுபாடு எப்படி உருவானது?

நான் தொன்னூறுகளில் பிறந்து வளர்ந்த தலைமுறை. சிறு பிராயத்திலிருந்தே கலையோடு வளர்ந்துதான் வந்திருக்கிறேன். கேரளா மலப்புரம் எனது சொந்த ஊர். முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதி அது. நான் முதலில் கேட்ட பாட்டு என்னவென்று கேட்டால் பாங்கு சத்தத்தையும் குர்ஆன் ஓதுவதையுமே சொல்லத் தோன்றுகிறது.

எனது அம்மாவின் குடும்பம் கர்நாடக இசை மரபுப் பின்னணி கொண்டது. அம்மாவுக்கு அவரது தந்தையிடம் இருந்து கிடைத்த கலை, எனக்கு என் அம்மாவின் வழியே கிடைத்தது.

மலப்புரத்துக்கு அண்மையில் கோழிக்கோடு பல்கலைக்கழகம் போன்றவை இருந்ததால் கலைகளைப் பயில்வதற்கு ஏதுவான சூழல் எங்கள் பகுதியைச் சுற்றிலும் காணப்பட்டது. கலைகளை ஊக்குவிக்கக்கூடிய சமூகநல அமைப்புகள் பல அங்கே இருந்தன. அதில் ஒன்றில் எங்களையும் ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டிருக்கிறோம். நாங்கள் இருந்தது தலித் பின்புலமுள்ள அமைப்பாக இருந்தது. நாட்டார் கலைகள், செவ்வியல் கலைகள் பல அங்கே அரங்கேற்றம் செய்யப்படும். போராட்ட இசை, நாடக இசை முதலானவற்றில் அனுபவங்களும் எனக்கு அங்குதான் வாய்த்தன.

2. நாட்டார் கலைகள் – செவ்வியல் கலைகள் இவ்விரண்டில் ஒன்று உயர்வானது, மற்றொன்று தாழ்ந்தது என்ற கண்ணோட்டத்தை நீங்கள் எப்படி அணுகுவீர்கள்?

நாட்டார் கலைகள் உயர்வானதா அல்லது செவ்வியல் கலைகள் உயர்வானதா என்கிற கேள்விகளெல்லாம் மிகத் தவறானது என்பது என் உறுதியான நிலைப்பாடு. எல்லாக் கலைகளையும் மதிக்கவேண்டும், சம அளவு மதிப்புடையதாய் பார்க்கவேண்டும் என்பதற்கு சிறு வயது முதலே எனக்கு ஒருவகையான பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவே உணர்கிறேன்.

எந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரோ, சமூகத்தினரோ ஒரு கலையின் மீது ஆதிக்கம் செலுத்தும்போது, அவர்கள் மற்ற கலைகளை அசுத்தமானதாகக் கருதும் தவறான போக்கு உருவாகிவிடுகிறது. பறை இசை முதலானவை தரம் குறைந்ததாகவும், மிருதங்கம் போன்றவை உயர் தரமுடையவையாகவும் பார்க்கும் சூழலையெல்லாம் நாம் கண்டுவருகிறோம்.

இறுக்கமான கர்நாடகச் சங்கீதப் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்த ஒரு முக்கிய பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். அவர் எனக்கு மிகவும் பிடித்த கலைஞர். அவரின் நேர்காணல் ஒன்றில் அவருக்குப் பிடித்தமான இசை வகை என்னவென்று கேட்கும்போது, நாட்டார் மரபு என்கிறார். இப்படிக் கூறியதை சமூக மாற்றத்திற்கான ஒரு கூற்றாகவே எனக்குப் பட்டது.

இன்றைக்கு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது என்றே நினைக்கிறேன். அதற்குத் தோதாக டி.எம். கிருஷ்ணா “கர்நாடகச் சங்கீதத்தின் கதை” என்றொரு நூல் எழுதியிருக்கிறார். புது வகையான இசை இலக்கணத்தைக்கூட அவர் கொண்டுவர எத்தனிக்கிறார். இப்படியான மாற்றங்களுக்கான முயற்சிகளில் என்னையும் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்பது என் விருப்பம்.

3. கர்நாடகச் சங்கீதத்தில் இசைக்கு முக்கியத்துவமா அல்லது ராகத்துக்கா?

அரபு இசையைப் போலவே இதிலும் ராகம்தான் முதன்மை பெறுகிறது. பக்க வாத்தியங்கள் இல்லாமலும் இதைப் பாட முடியும். அவை அலங்காரத்துக்கானவைதான். இன்றைக்கு ஹார்மோனியம் இருக்கும் இடத்தில் முன்பு தம்புரா இருந்தது. கச்சேரி மேடையில் தாளத்துக்காக ஒன்றும் ராகத்துக்காக ஒன்றும் அவசியம் இருக்கும். கடம், மிருதங்கத்துக்குத் துணைக் கருவி. கடம் இல்லையென்றால் கஞ்சிரா. மேடை அமைப்பை பார்த்தால் உங்களுக்குப் புரியும். நடுவில் பாடுபவர்கள் இருப்பார்கள்; இரு பக்கங்களிலும் முக்கிய இசைக் கருவிகள். அதற்குப் பின்னால் இடப்பக்கம் மோர்சிங், வலப்பக்கம் கடம் ஆகிய துணைக் கருவிகள்.

4. கர்நாடகச் சங்கீதத்தை அரங்கேற்றுவதில் பாலினப் பாகுபாடு மாதிரி ஏதேனும் இருக்கிறதா?

உண்மைதான். முழுக்க முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கலையாகவே கர்நாடகச் சங்கீதம் இருந்திருக்கிறது. பெண்களுக்கு அங்கே இடமில்லை. பட்டம்மாள், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, நாகரத்தினம்மாள் மாதிரியான பெண் பாடகிகள் பின்னாளில்தான் வருகிறார்கள். தொடக்கத்தில் அவர்கள் பாடும் மேடைகளில் இசைக் கருவிகள் வாசிப்பதற்கு யாரும் முன்வராத நிலைகூட இருந்திருக்கிறது. இப்போது சூழ்நிலை மாறியுள்ளது.

இன்னொன்று, பெண்களின் குரல் கனமாக இருந்தால் பாடும் வாய்ப்பு குறைவாகவே கிடைக்கும். கர்நாடகச் சங்கீதத்தை விடவும் சினிமாவில் இந்தப் போக்கு அதிகம். உஷா உதுப், பாம்பே ஜெயஸ்ரீ, சுபா முட்கல் போன்றோர் கொஞ்சம் கனமான குரலுடையவர்களே. பெரிய அளவுக்கு இவர்களெல்லாம் சாதனை புரிந்திருந்தாலும் குரலின் தன்மைக்காக இவர்களைக் குறைத்து மதிப்பிடும் போக்கும் இங்கு நிலவவே செய்கிறது.

5. பரதநாட்டியம், கர்நாடகச் சங்கீதம் என்பன பிராமணர்களுடையது எனும் கருத்து நிலவுகிறதே!

முற்றிலும் தவறான கண்ணோட்டம் இது. நான் கற்ற கர்நாடக இசைக்கும் இங்கு சென்னையில் நான் பார்க்கும் கர்நாடக இசைக்கும்கூட நிறைய வேறுபாடுகள் உள்ளன. இங்கு அது ரொம்பவும் பிராமணமயப்பட்டதாக உள்ளது. முற்றிலும் பிராமணர்களின் கலை வடிவமாகவே அது பார்க்கப்படுகிறது. சடங்குகளிலும், பிராமணியத்திலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள் அதைத் தங்களுக்கானதாகக் கட்டமைத்திருக்கிறார்கள்.

மார்கழி மாதம் மைலாப்பூரில் என்ன நடக்கும் என்பது இங்குள்ள என் தோழிகளுக்குத் தெரியவில்லை. ஏனெனில் அங்கே உள்ளவர்களுக்கும் பிறருக்கும் அந்த அளவுக்கு இடைவெளி இருக்கிறது. இந்தச் சிக்கலை சீர்திருத்தி, எல்லாருக்குமானதாக அதை மாற்றவேண்டியிருக்கிறது.

கேரள சூழலில் இந்த அளவுக்கு இதில் பாகுபாடு இருக்காது. ஓரளவு மக்கள்மயப்பட்டிருக்கும். நான் இருந்த சூழல் அப்படித்தான் இருந்திருக்கிறது. சாதி, பொருளாதாரப் பின்புலம் போன்றவை கலைகளைக் கற்பதற்கு பெரிய அளவுக்குத் தடையாக அங்கே இல்லை. கலைகளில் இதுபோன்ற எதிர்மறை அம்சங்கள் குறிக்கிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.

வரலாற்று ரீதியில் பார்த்தால், கர்நாடகச் சங்கீதமும் பரதநாட்டியமும் தேவதாசிப் பின்புலமுள்ளவையே. பின்னாளில்தான் இது பிரமணமயம் ஆனது. கர்நாடகச் சங்கீதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது எம்.எஸ். சுப்பு லக்ஷ்மி. அவர்கூட தேவதாசிப் பின்புலமுள்ளவரே.

6. ஹிந்துஸ்தானி இசை பற்றி சொல்லுங்களேன்.

கர்நாடகச் சங்கீதத்தைக் காட்டிலும் சற்று மக்கள்மயப்பட்டதாய் ஹிந்துஸ்தானி இசையை நான் பார்க்கிறேன். கொல்கத்தாவிலுள்ள ஒரு ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் ஒருமுறை சொன்னார், அவரின் வீட்டின் அருகே குருபூர்ணிமா மாதிரி இந்துக்கள் முக்கியமானதாகக் கருதும் விழாவை முஸ்லிம் ஒருவரின் வீட்டில் கொண்டாடுகிறார்களாம். ஹிந்துஸ்தானி இசை, பாட்டு, பூஜை எல்லாம் அங்கே நடக்குமாம். இதை அதிசயமான ஒன்றாக அங்கு யாரும் பார்க்காமல், இயல்பான ஒன்றாய் நடத்துகிறார்களாம். இங்கு அப்படி நம்மால் கற்பனை செய்தும் பார்க்க முடியுமா!

ஹிந்துஸ்தானியில் கரானா வகைகளை ஒரு குடும்பச் சொத்தாக அணுகும் போக்குகூட வடஇந்தியாவில் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். வரதட்சிணையாக ராகத்தை அளிக்கும் விசித்திர வழக்கமும் அங்குள்ள குடும்பங்களில் இருக்கிறது என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எப்படியென்று தெரியவில்லை. கேரளா மலபாரில் ஹிந்துஸ்தானி இசைக் கலாச்சாரம் சற்று பரவலாக உள்ளது. அதைக் கற்றுத்தர அங்கே ஆசான்கள் இருக்கிறார்கள். திருவனந்தபுரம் முதலான பிற பகுதிகளில் இந்நிலை இல்லை. அதனால்தான் வட்டார ரீதியிலும் இசையின் பாணி மாறுபடும் சூழல் இருந்துவருகிறது. ஹிந்துஸ்தானி பாட்டு, கஸல் போன்றவற்றுக்கு மலபாரில் ரசிகர்கள் அதிகம். மலையாள சினிமாவில்கூட ஹிந்துஸ்தானியின் தாக்கத்தை நம்மால் காண முடியும்.

மலபாரில் மாப்ளா பாட்டு மரபு வளமான ஒன்றாக இருந்து வருகிறது. ஹிந்துஸ்தானி, சூஃபி இசையான கஸல், மாப்ளா ஆகிய மூன்று கலை மரபுகளும் சேர்ந்து இயங்கும் இசைப் பாணியையும் அங்கே பார்க்க முடியும். அதற்கு நல்ல உதாரணம், 60-70களில் மிகப் பிரபலமான பாடகராக அறியப்பட்ட பாபுராஜ். அவர் ஒரு முஸ்லிம். கோழிக்கோட்டைச் சார்ந்தவர். அவரின் பெயரில் இன்றும் அங்கே இசைக் கல்லூரி உள்ளது. மேற்சொன்ன இசை வடிவங்களை மக்கள்மயப் படுத்தியதில் அவருக்கும் முக்கிய பங்கிருக்கிறது.

7. கதகளியை எல்லாராலும் உள்வாங்கிக் கொண்டு ரசிக்க முடியுமா?

புராணக் கதைகளை அரங்கேற்றுவதை கதகளி என்கிறோம். அதற்கென்று வளமான இசைப் பாரம்பரியமும் உள்ளது. கதகளி சங்கீதம் என்று சொல்வார்கள். என் மாமாவிடம் இருந்து நான் அதைக் கற்றுள்ளேன். பெண்கள் மிகச் சமீப காலமாகவே இதில் பங்கெடுக்கிறார்கள். அதிகம் பக்தி சார்ந்து பாடப்படும் கர்நாடகச் சங்கீதத்தை விடவும் இதற்கு ‘Bhavam’ (Expression) அதிகம் தேவைப்படும். கோபம், காதல், பயம் என கதைவோட்டம் எப்படியிருக்கிறதோ அதுபோலவே நாம் பாடவேண்டியிருக்கும்.

கதகளி என்பது பல்வேறு கலை வடிவங்களை உட்கிரகித்து உருவான ஒரு கலை. மிகப் பழமையான சமஸ்கிருத மரபான கூடியாட்டத்தின் செல்வாக்கு இதில் அதிகம். குறிப்பிட்ட வகையிலான முத்திரைகள், ஆடை அணிகலன்கள் என இறுக்கமான விதிகளுக்கு உட்பட்டே அது நிகழ்த்தப்படுகிறது. அதைப் பார்த்துப் பழகினால் தவிர, எளிதில் அந்தக் கலையை உள்வாங்கிக் கொள்ள முடியாது. பொதுவாக எந்தவொரு கலையையும் ரசிப்பதற்கும் நமக்குப் பயிற்சி அவசியம். எல்லாராலும் எல்லாக் கலைகளையும் உள்வாங்க முடியாது.

கோவிலில் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வந்த ஒரு கலை கதகளி. ராஜ குடும்பங்களுக்கானதாக முன்பு அது இருந்துள்ளது. அதை வள்ளத்தோள் எனும் பெரும் கவிஞர் ஒருவர் தொடங்கி வைத்த கலாமண்டலம் எனும் கலைக் கல்லூரி மக்களிடம் கொண்டு சென்றதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. கதகளி கலையில் புரட்சிகர மாற்றத்தை அந்தக் கல்லூரி ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். இப்போதும் அது இயங்குகிறது. அங்கே ஓட்டந்துள்ளல், மிருதங்கம், பரதநாட்டியம், மோனியாட்டம் போன்ற அனைத்தும் கற்றுத்தரப்படுகின்றன.

இன்று கதகளி யாருக்கும் உரியதாய் இல்லாமல், எல்லாரும் கற்பதற்கு உகந்ததாக மாறியுள்ளது. திரைப்பட விழாக்கள் நடப்பது போல கதகளி விழாக்களும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. கதகளி அரங்கேற்றம் என்றாலே முழு இரவும் நடக்ககூடியது. இப்போது அந்த வழக்கம் அருகிவிட்டது.

8. தமிழ், மலையாள சினிமாவுக்கு இடையிலுள்ள வேறுபாடுகளாக எவற்றைக் காண்கிறீர்கள்?

அருகருகே இருக்கும் மாநிலங்களாக தமிழ்நாடும் கேரளாவும் இருந்தாலும் இந்தப் பகுதிகளில் வெளியாகும் திரைப்படங்கள் ஒரே பாணியிலானவை அல்ல. நிறைய வேறுபாடுகள் இவற்றுக்கு மத்தியில் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் மலையாள சினிமாவில் ஓரளவு எதார்த்தத்துக்கு நெருக்கமான படங்கள் எடுக்கப்படுகின்றன. அங்கு வெளியாவதெல்லாம் கலைப்படங்கள் என நான் சொல்ல வரவில்லை. தமிழில் சற்றும் எதார்த்தத்துக்குப் பொருந்தாத வகையில் எல்லாவற்றையும் மிகைப்படுத்தும் போக்கு அதிகம். மலையாளத்தில் அப்படியில்லை. எனவே ஒரு பரிசோதனை முயற்சியாகக்கூட வணிக சினிமாவுக்கு மாற்றமான ஒன்றை தமிழ்நாட்டில் எடுப்பதற்கு இயக்குநர்கள் தயங்குகிறார்கள். ஆனால் அதுபோன்ற முயற்சிகளுக்கான இடம் கேரளாவில் இருக்கிறது.

இன்னொரு வேறுபாடு, மலையாள சினிமாவின் நகைச்சுவை உணர்வு வெளிப்படும் விதமும் தமிழ் சினிமாவில் அது வெளிப்படும் விதமும் வித்தியாசமானது. ஏனெனில், மொழி, சூழல், கலாச்சாரப் பின்னணி ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு நகைச்சுவை காட்சிகள் வடிவமைக்கப்படுவதால் அது பிற மாநிலத்தவருக்கு ரசிக்கும்படியாக இல்லாமல் போகக்கூடும். உண்மையில், என்னால் வடிவேலு நகைச்சுவையை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.

மற்றொரு விஷயம், மலையாளிகளை விட தமிழ்நாட்டு மக்கள் சினிமா கலாச்சாரத்தில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. சமீபகாலம் வரை, மலையாள சினிமா தொழில் நிறுவனங்கள்கூட இங்குதான் இருந்து செயல்பட்டன. பிறகு அவையெல்லாம் கொச்சிக்கு இடம்பெயர்ந்தன.

9. அன்வர் படத்தில் பாடியிருப்பதால் இதைக் கேட்கிறோம். அந்தப் படத்தின் கதைக் கரு குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துண்டா?

அன்வர் படத்துக்காகப் பாடியது தவிர அதற்கு என் பங்களிப்பு எதுவும் இல்லை. பாடும்போதுகூட படத்தின் கதை பற்றியெல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. திரையரங்கு சென்றுதான் நானும் படத்தைப் பார்த்தேன். கோவை குண்டு வெடிப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அது. அன்வர் எனும் முஸ்லிம் இளைஞனை ஒரு தீவிரவாதியாக, ஒரு வில்லனாகக் காட்டி, கடைசியில் அதை உடைத்து கதாநாயகனின் பாத்திரத்தை வெளிக்கொணர்வார்கள். வெகுமக்களைத் திருப்திபடுத்துவதற்கான அத்தனை அம்சங்களும் அதில் இருக்கும்.

அதே சமயம் வேறு சில விஷயங்களையும் நாம் கவனிக்கவேண்டியிருகிறது. ஒரு கதாபாத்திரம் தாடி, தொப்பி, சுருமாவுடன் வந்தால் பார்வையாளர்கள் அந்த அடையாளத்தை “மற்றமையாக” (Others) காண்பார்கள். இந்தக் கண்ணோட்டத்துக்கு படத்தின் உள்ளேயே ஒரு எதிர்ப்புக் கருத்தும் இருப்பதாகவே நினைக்கிறேன். அன்வர் எனும் முஸ்லிம் கதாநாயகப் பாத்திரம் அப்படியானதுதான். இப்படியொரு கருத்துகளைக் கொண்ட படத்தைக்கூட மறுபடி கேரளாவில் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில், சங்கப் பரிவார் இயக்கங்களெல்லாம் பெரிய அளவுக்கு அங்கே வளர்ந்துள்ளன. அன்வர் படத்தின் இயக்குநர் பிலால் என்றுகூட படமெடுத்து வருவதாக கேள்விப்பட்டேன். அது எப்படியான படமென்று தெரியவில்லை.

10. உங்களின் முனைவர் பட்ட ஆய்வு எதைப் பற்றியது?

எனது ஆய்வு லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் பற்றியது. மலையாள இலக்கியங்களில் அதன் தாக்கம் என்ன என்பதையே ஆய்ந்தறிந்து வருகிறேன். ­எனவே மலையாள இலக்கியங்களை அதிகம் வாசிக்கிறேன். கேரளாவின் கம்யூனிசம், கால்பந்து விளையாட்டு, பயன்பாட்டிலுள்ள பெயர்கள் என பலவற்றிலும் லத்தீன் அமெரிக்கத் தாக்கம் இருப்பதைக் காண்கிறேன். ரொம்பவும் பிரபலமாகாத, பிராந்திய நிலைப்பட்ட இதுபோன்ற விஷயங்களை ஆய்வுக்காக எடுப்பது பெரிய அளவுக்கு மதிப்புரியதாகக் கொள்ளப்படாது. எனினும், தற்போது உள்ளூர் இலக்கியங்கள் குறித்த தேடலின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம் என்றே படுகிறது.

11. கலை எதற்காக என்று கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

மனித வாழ்வுக்கு கலை அவசியமானது என்பேன். கலைகள் எல்லாம் உயர் மனிதப் பண்புகளை நம்முள் விதைக்கக்கூடியவை. எதிர்மறை மனிதப் பண்புகளை நம்மிடமிருந்து அகற்றுவதற்கு கலை, இலக்கியங்கள் அவசியத் தேவை. உண்மையில், கலைகளின் செயல்பாடும் நல்ல மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

நேர்கண்டவர்கள்: நாகூர் ரிஸ்வான், சாரங்கி சுரேஷ்.

Related posts

Leave a Comment