கட்டுரைகள் 

உலக வாழ்வின் செல்வங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

Loading

மனிதனுக்கு வழங்கப்படும் செல்வம், அறிவு, அதிகாரம் மற்றும் இன்னபிற அருட்கொடைகள் யாவும் சோதனையே என்று இஸ்லாம் கூறுகிறது. அவற்றின்மூலம் மனிதன் சோதிக்கப்படுகிறான். அவற்றைக் கொண்டு அவன் கர்வம்கொள்கிறானா? வரம்பு மீறுகிறானா? அல்லது அவற்றின் மூலம் அவன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக நடந்துகொள்கிறானா? மறுமையின் நிலையான வீட்டைத் தேடுகிறானா? என்று இறைவன் அவனைச் சோதிக்கிறான்.

செல்வம், அறிவு, அதிகாரம் என ஒவ்வொரு அருட்கொடையும் மனிதனுக்குச் செருக்கை ஏற்படுத்தவே செய்யும். நம்பிக்கையாளன் அதன் மூலத்தை நினைவுகூர்வதன்மூலம் அது தன்னுடைய திறமையின் விளைச்சல் அல்ல என்பதை உணர்ந்துகொண்டு செருக்கிலிருந்து விடுபடுகிறான். நன்றியுணர்ச்சியால் நிரம்பும் அவனது மனம் அவனை அருட்கொடையாளனின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கிறது.  இறைவன் தனக்கு வழங்கிய அருட்கொடையில் மற்றவர்களுக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து அவர்களுக்குரியதை அளிக்கவும் செய்கிறான்.

‘அவர்களின் செல்வங்களில் யாசிப்போருக்கும் வெட்கத்தின் காரணமாக யாசிக்காமல் இருப்போருக்கும் பங்கு உண்டு’ என்ற திருக்குர்ஆனின் வசனம் நம்பிக்கையாளர்களின் இந்தப் பண்பையே உணர்த்துகிறது. இது அவர்களுடைய நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடு.

சிலருக்கு இறைவன் அதிகமாக வழங்குகிறான். சிலருக்கு அளவாக வழங்குகிறான். சிலருக்குக் குறைவாக வழங்குகிறான். அனைத்து நிலைகளும் மனிதனுக்கான சோதனைகளாகவே இருக்கின்றன.  மனிதர்களின் விசயத்தில் செயல்படும் இறைவனின் இந்த நியதியை திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது:

“தான் நாடியோருக்கு அல்லாஹ் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகிறான், தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்வைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். மறுமைக்கு முன்னால் இவ்வுலக வாழ்வு அற்ப இன்பமேயாகும்.” (13:26)

கர்வம்கொள்வதற்கோ நிராசையடைவதற்கோ நம்மிடம் எதுவுமில்லை. எதுவும் நம்முடைய திறமையின் விளைச்சலும் இல்லை. எந்த நிலையும் நிரந்தரமானதும் இல்லை. இரு நிலைகளும் நமக்குச் சோதனைகளாகவே இருக்கின்றன.

தன்னிடம் இருப்பவற்றைக்கொண்டு கர்வம்கொள்ளும் மனிதன் அவற்றை இழக்கும்போது பதற்றமடைகிறான், நிராசையடைகிறான், தன்னிரக்கம் தேடத் தொடங்குகிறான். கிட்டத்தட்ட இரண்டுமே ஒரே வகையான மனநிலையின் வெளிப்பாடுகள்தாம். தன்னிடம் இருப்பவற்றைக்கொண்டு கர்வம்கொள்ளாத மனிதன் அவற்றை இழக்கும்போது பதற்றமடையவோ நிராசையடையவோ தன்னிரக்கம் தேடவோ மாட்டான்.

இந்த உண்மையை நம்பிக்கையாளன் சந்தேகமின்றி தெளிவாக உணர்ந்து கொள்கிறான். அதற்கேற்பவே தன்னுடைய செயல்பாடுகளை அவன் அமைத்துக் கொள்கிறான். தன்னிடம் இருப்பற்றைக் கொண்டு அவன் கர்வம்கொள்வதுமில்லை, தான் இழந்தவற்றை எண்ணி நிராசையடைவதுமில்லை. நன்றியுள்ள அடியானாகவும் பொறுமையாளனாகவுமே அவன் வெளிப்படுகிறான். நம்பிக்கையாளனின் இந்த நிலையை எண்ணி நபியவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்கள் அவனது நிலையைக் குறித்து பின்வருமாறு சிலாகித்துக் கூறுகிறார்கள்:

“நம்பிக்கையாளனின் நிலை ஆச்சரியமானது. அவனது அனைத்து விவாகரங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைந்துவிடுகின்றன. நம்பிக்கையாளனைத் தவிர வேறு யாருக்கும் இவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு ஏதேனும் நன்மை ஏற்படுமாயின் அவன் நன்றிசெலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படுமாயின் பொறுமையை மேற்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.” (முஸ்லிம்)

நம்பிக்கையாளன் தனக்கு வழங்கப்பட்டவற்றை  நன்மையான வழிகளில் பயன்படுத்துகிறான். அதனால் அவை இன்னும் அதிகரிக்கின்றன. தனக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு அவன் நிராசையடையாமல் அவற்றால் தம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் தம்முடைய பொறுமைக்குப் பகரமாக நற்கூலி கிடைக்கும் என்றும் நம்புகிறான். இந்த எண்ணம் நிராசையடையாமல் அவனைக் காப்பதோடு அவனுக்கு இறைவனிடத்தில் நற்கூலியையும் பெற்றுத் தருகிறது

தன்னிடம் இருப்பவற்றை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைகள் என்பதை உணராதவன் அவற்றை தன் திறமையின் விளைச்சலாகக் கருதி கர்வம்கொள்வான். அவற்றைப் பெற்றிராத மற்றவர்களை இழிவாகக் கருதுவான்.

பணத்திமிர், அறிவுத் திமிர், அதிகாரத் திமிர் என எல்லா வகையான திமிரையும் இஸ்லாம் வெறுக்கத்தக்க பண்பாகக் கருதுகிறது.     மனிதனைச் சோதிப்பதற்காகவே இறைவன் அவனைப் படைத்துள்ளான். சோதனையே மனித வாழ்க்கையின் நோக்கம். இறைவன் சிலருக்கு அதிகமாக வழங்கிச் சோதிக்கிறான். சிலருக்குக் குறைவாக வழங்கிச் சோதிக்கிறான். அதிகம் வழங்கப்பட்டோரிடம் நன்றியையும் குறைவாக வழங்கப்பட்டோரிடம் பொறுமையையும் அவன் எதிர்பார்க்கிறான்.

மனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடை அவனை ஆணவத்தில் ஆழ்த்திவிடக்கூடாது. அதன்மூலம் அவன் மறுமையின் நிலையான வீட்டைப் பெறும் முயற்சியில் ஈடுபடுபவனாக, இறைவனுக்கு நன்றி செலுத்தும் அடியானாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.

சோதனையாக வழங்கப்பட்ட அருட்கொடையை தனது அறிவால், திறமையால் கிடைத்தது எனக்கருதி ஒருவன் கர்வம் கொள்வானென்றால் அதுவே அவனது அழிவுக்கும் காரணமாகி விடும் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது. அது மூசாவின் சமூகத்தைச் சேர்ந்த காரூனின் சம்பவத்தைப் படிப்பினைக்காக எடுத்துரைப்பதைப் பாருங்கள்:

“காரூன் மூசாவின் சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அவன் அவர்களிடம் வரம்புமீறி நடந்தான். நாம் அவனுக்குப் பெரும் பொக்கிஷங்களை அளித்திருந்தோம். பலம் பொருந்திய மக்கள் கூட்டம்கூட அவற்றின் சாவிகளைச் சிரமத்துடன்தான் சுமக்கும்.

அவனது சமூகத்தினர் அவனிடம் கூறினார்கள்: “ஆணவம் கொள்ளாதே. நிச்சயமாக அல்லாஹ் ஆணவம் கொள்வோரை நேசிக்க மாட்டான். அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ளதைக்கொண்டு மறுமையின் வீட்டைத் தேடிக்கொள். உலகில் உனது பங்கையும் மறந்து விடாதே. அல்லாஹ் உனக்கு நன்மை செய்தவாறே நீயும் மக்களுக்கு நன்மை செய். பூமியில் குழப்பத்தை நாடாதே. நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்வோரை நேசிக்க மாட்டான்.” அதற்கு அவன் கூறினான்: “இச்செல்வங்கள் அனைத்தும் என் அறிவால்தான் எனக்குக் கிடைத்துள்ளன.”

இதற்கு முன்னர் அவனைவிட அதிக பலமும், எண்ணிக்கையும் கொண்ட எத்தனையோ சமூகங்களை அல்லாஹ் அழித்துள்ளான் என்பதை அவன் அறியவில்லையா? குற்றவாளிகள் தாம் புரிந்த குற்றங்கள் குறித்து (உடனுக்குடன்) விசாரிக்கப்பட மாட்டார்கள்.

ஒருநாள் அவன் முழு அலங்காரத்துடன் தன் மக்களுக்கு முன்னால் வெளிப்பட்டான். இவ்வுலக வாழ்க்கையைப் பெரிதும் விரும்பியவர்கள், “காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா! நிச்சயமாக அவன் பெரும் பாக்கியசாலி!” என்று கூறினார்கள். ஆயினும் ஞானம் வழங்கப்பட்டவர்கள், “உங்களுக்கு கேடுதான். நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் கூலியே சிறந்ததாகும். அது பொறுமையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்” என்று கூறினார்கள்.

பின்னர் நாம் அவனையும் அவனது வீட்டையும் பூமியில் புதையச் செய்து விட்டோம். அல்லாஹ்வுக்கு எதிராக அவனுக்கு உதவி செய்யும் எந்தக் கூட்டமும் அவனுக்கு இருக்கவில்லை. அவனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.

நேற்று, அவனைப் போன்று ஆகிவிட வேண்டும் என்று ஆசை கொண்டவர்கள் கூறலானார்கள்: “அந்தோ! அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடுவோருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான். தான் நாடுவோருக்கு அதனைச் சுருக்கி விடுகிறான். அல்லாஹ் நம்மீது கிருபை செய்திருக்காவிட்டால் நம்மையும் அவன் பூமியில் புதையச் செய்திருப்பான். அந்தோ! நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள்”. (28 :76-82)

காரூன்களின் பண்புகள் எல்லாக் காலகட்டங்களிலும், இடங்களிலும் ஒன்றுபோலவே இருக்கின்றன. கர்வமே அவர்களே வழிநடத்திச் செல்கிறது. அதுவே அவர்களின் அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. ஆனால் அந்தோ பரிதாபம்! அவர்கள் அதனை தங்கள் திறமையின் விளைச்சலாக எண்ணிக்கொள்கிறார்கள்.

Related posts

Leave a Comment