இந்தியாவில் இஸ்லாமிசமும் ஜனநாயகமும்
‘இந்தியாவில் இஸ்லாமிசமும் ஜனநாயகமும்’ என்ற புத்தகத்தை எழுதிய இர்ஃபான் அஹ்மது பீகாரைச் சேர்ந்தவர். தற்போது ஜெர்மனியின் மாக்ஸ் ப்ளான்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் இவர் இஸ்லாம், நவீனத்துவம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, தீவிரவாதம் உள்ளிட்ட தற்காலத்தில் பரவலாக விவாதிக்கபடும் விவாதப்பொருள்கள் குறித்து ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். சமீபத்தில் இவரது புத்தகமான ‘Religion as Critique: Islamic Critical Thinking from Mecca to the Marketplace’ டெல்லியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியால் வெளியிடப்பட்டது. இவரது முனைவர் பட்ட ஆய்வு இந்தியாவில் ஜமாத்தே இஸ்லாமியின் உருவாக்கம், அதில் நிகழ்ந்த மாற்றங்கள் ஆகியவை குறித்ததாகும். இவரது முனைவர் பட்ட ஆய்வே இப்புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகமாகும்.
இப்புத்தகம் உலகளவில் கல்விப்புல வட்டாரங்களில் இன்று வளர்ச்சியடைந்திருக்கும் சமூகவியல் கோட்பாடுகள் மற்றும் விவாதங்களின் ஒளியில் இயற்றப்பட்டிருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பம்சம். வழக்கமாக இஸ்லாமிசம் (Islamism), தீவிர இஸ்லாம் (Radical Islam) போன்ற தலைப்புகளில் மேற்கத்திய உலகில் வெளியிடப்படும் எண்ணிறந்த புத்தகங்கள் எல்லாம் ஒரே மாதிரியான சட்டகத்தின் வழியாகவே அதைப் பேசுகின்றன. மத்திய காலங்களில் இமாம் இப்னு தைமிய்யா, காலனித்துவ காலகட்டத்தில் இப்னு அப்துல் வஹ்ஹாப், நவீனத்துவ காலகட்டத்தில் மௌதூதி மற்றும் ஹசன் அல்பன்னா ஆகியோரும்; இவர்களின் சிந்தனைகளை அல்காயிதா போன்ற இராணுவவாத இயக்கங்களுக்குக் கைமாற்றிய இணைப்புப் புள்ளியாக சையித் குதுபும் பேசப்படுவார்கள். அதாவது, நவீன இஸ்லாமிஸ்டு இயக்கங்கள் எல்லாமே ஒரே தன்மையைக் கொண்டதாகவும் அவர்களுக்கு இடையில் இருக்கும் கூர்மையான பண்பு ரீதியான வேறுபாடுகளை மழுப்பி ஒரே சாராம்சத்தைக் கொண்டவையாகவும் விளக்கப்படும். இவற்றில் சிற்சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த பார்வைச் சட்டகத்தில் வேறுபாடு இருக்காது.
இந்நிலையில், இஸ்லாமிஸ்டு இயக்கங்கள் பற்றிய மேற்கத்திய கல்விப்புல வட்டாரங்களின் பொதுப்புத்தியையும் ஓர்படிவார்ப்புகளையும் (stereotypes) பிரச்சினைக்குள்ளாக்கி, அவற்றை வரலாற்றுரீதியில் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியாக இந்நூலைப் படைத்திருக்கிறார் இதன் ஆசிரியர். பொதுவாக இஸ்லாமிஸ்டு இயக்கங்களைப் பற்றி ஆய்வு செய்ய முற்படுவோர் அவர்களது சிந்தனைகளையும் சொல்லாடல்களையும் பற்றி ஆய்வு செய்வதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்நூல் ஒரு மானுடவியல் பார்வையில் எழுதப்பட்டிருப்பதால், ஜமாத்தே இஸ்லாமியை ஒரு முழுமைத்துவ நோக்கில் வாசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. இனவரைவியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியை தனது ஆய்வுக்கான பரப்பாக எடுத்துக்கொள்ளும். மானுடவியல் ஆய்வுகள் சமூக, அரசியல், பொருளாதார, சிந்தனை வரலாறு ஆகிய அனைத்துத் துறைகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டாலும், அவற்றை ஒரு குறிப்பிட்ட கால, வெளி வரையறைக்குள் வைத்து ஆராயும். இந்தக் கால, வெளி அடிப்படையிலான குறிப்பான தன்மைதான் மானுடவியலை ஏனைய சமூக விஞ்ஞானங்களிலிருந்து ஆராயும். பிரித்துக்காட்டுகிறது.
இப்புத்தகமும் ஒரு மானுடவியல் பதிவு எனும் வகையில் தனது ஆய்வுப்பரப்பாக டெல்லியிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அலிகரை எடுத்துக்கொண்டிருக்கிறது. இக்குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணமாக இர்ஃபான் அஹ்மது அங்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் (AMU) இருப்பதை முக்கியமாகக் குறிப்பிடுகிறார். பாராளுமன்ற விவாதமொன்றில் கே.பி. சின்ஹா என்ற உறுப்பினர் கூறியதுபோல, ‘அலிகர் பல்கலைக்கழகம் இந்திய முஸ்லிம் கலாச்சாரத்தின் நுணுக்கப்படிவமாக (microcosm)’ பார்க்கப்படுவதாலும், பின்காலனிய இந்தியாவின் முஸ்லிம் அடையாளத்தின் முக்கியக் குறியீடாக மாறியிருப்பதாலுமே தான் தனது ஆய்வுப்பரப்பின் முக்கிய வெளியாக அதைக் கண்டடைந்திருப்பதாக கூறுகிறார் இர்ஃபான் அஹ்மத். மேலும் இது குறித்துக் கூறும்போது AMUவில் படித்த தனது உறவுக்கார மாணவர்கள் பீகாரின் அரசுப் பள்ளியில் படித்த தன்னை தாழ்வாக நோக்கினார்கள் என்பதை நினைவுகூறும் இர்ஃபான் அஹ்மது, முஸ்லிம் சிந்தையில் AMUவில் படிப்பது வெறுமனே பட்டம் பெறுவது மட்டுமின்றி, ‘முஸ்லிம் கலாச்சாரத்தை’ தன்னகப்படுத்திக் கொள்வதாகவும் பார்க்கப்பட்டது என்கிறார். இங்கு AMU என்பது முஸ்லிம் கலாச்சார மூலதனத்தை உருவாக்கும் நிறுவனமாக எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான குறிப்புகள் வழங்கப்படுகின்றன. AMUவில் செயல்பட்ட எஸ்.ஐ.ஓ (Students Islamic Organisation – இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு), சிமி (SIMI – Students Islamic Movement of India) ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றி இந்நூல் நெடுக விவாதிக்கிறார் ஆசிரியர்.
மதச்சார்பின்மை குறித்த விவாதத்தில், தான் ‘மதச்சார்பின்மையின் மீதான விமர்சனத்தில்’ வேறுபடும் புள்ளியையும் சுட்டிக்காட்டுகிறார். டி.என். மதன், ஆஷிஷ் நந்தி தொடங்கி தலால் அசத் வரை மதச்சார்பின்மையை அவர்கள் அதிகமகம் சொல்லாடல் ரீதியானதாகவே அணுகியிருப்பதாகக் கூறும் இர்ஃபான் அஹ்மத், மதச்சிறுபான்மையினரின் பார்வையில் மதச்சார்பின்மையைப் பார்க்கும் அணுகுமுறையை வலியுறுத்துகிறார். காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் தன்னை மதச்சார்பற்றதாகவே கருதியது, ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தை இந்தியர்கள் “அடிப்படையிலேயே ஓர் கிறித்தவ அரசாக” கண்டார்கள் என்கிறார். ஒரு அரசு தன்னைப் பற்றி கொண்டிருக்கும் தன்னபிப்பிராயம் (self-perception) மட்டுமே அது பற்றி முடிவுக்கு வரப் போதுமானதாக இருக்காது. மாறாக, அதிகாரத்தில் பங்கில்லாத மதச்சிறுபான்மையினரின் பார்வையில் மதச்சார்பின்மையை தடம்பற்றிச் செல்வதன் மூலம் அதன் வேறொரு மரபுவழியை (genealogy) கண்டறியலாம் எனும் கோணம் இங்கு முன்வைக்கப்படுகிறது.
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் மதத்திலிருந்து அரசைப் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை பாப்டிஸ்ட்கள், மெத்தாடிஸ்ட்கள் உள்ளிட்ட மதச்சிறுபான்மையினரால்தான் முன்னெடுக்கப்பட்டது. அதேபோன்று, ஐரோப்பாவின் யூத சிறுபான்மையினரும் கூட மதத்தையும் அரசையும் பிரிப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தார்கள். ஹாலந்து நாட்டில் உள்ள யூதர்களும் கத்தோலிக்க சிறுபான்மையினரும் இணைந்தே அங்கு இதுபோன்றவொரு கோரிக்கையை முன்வைத்தார்கள். ஆக, மதச்சிறுபான்மையினர் மதமும் அரசும் இணைக்கப்படுவதை எதிர்த்ததற்கான காரணம் அவர்களுக்கு மதம் முக்கியமற்றதாக இருந்தது என்பதால் அல்ல; மாறாக, மதம் அவர்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தது என்பதனால்தான் என்று கூறுகிறார் இர்ஃபான். இந்த மதச்சிறுபான்மையினர் தங்கள் மதம்சார்ந்த வாழ்க்கையையும் அடையாளத்தையும் காப்பாற்றிக்கொள்ள பெரும்பான்மை மதத்திலிருந்து அரசு பிரிக்கப்பட வேண்டியது அவசியம் என நினைத்தார்கள். இந்தப் பின்னணியிலேயே பிரிவினைக்குப் பின்னான இந்திய முஸ்லிம்கள் தங்களது மத, சமூக, அரசியல் உரிமைகளை காத்துக்கொள்வதற்கான வழியாக இந்திய மதச்சார்பின்மையைக் கண்டார்கள் என்கிறார்.
வகுப்புவாதத்திற்கும் இஸ்லாமிசத்துக்கும் வேறுபாடு இருக்கிறது என்றும், எல்லா இஸ்லாமிஸ்டு உருவாக்கங்களுமே வலதுசாரியாகதான் இருக்கவேண்டும் என்பதில்லை என்றும் கூறுகிறார். மாறாக, இஸ்லாமிஸ்டு அமைப்புகள் அடிப்படையில் அரசியல்-இறையியல் (political theology) உருவாக்கங்களாக அணுகப்பட வேண்டியவை. அதுபோல், இஸ்லாமிஸ்டு உருவாக்கங்கள் எல்லாமுமே இராணுவவாத அமைப்புகளாக இருக்கவேண்டும் என்கிற அவசியமுமில்லை எனக் கூறுகிறார். தொடக்க கால ஜமாத்தே இஸ்லாமி குறித்து கூறும் ஆசிரியர், அது எப்படி மரபு இஸ்லாத்திலிருந்து வேறுபட்டு இருந்தது என்பதை விவரிப்பது இந்நூலின் ஒரு முக்கியமான பகுதியாகும். நவீனத்துக்கு முந்தைய சமூகங்களில் அரசின் பாத்திரம் என்பது அன்றாட வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாத, விளிம்பைச் சேர்ந்ததாக இருந்தது. ஆனால் இன்று அரசு ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் மையமான இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில்தான் அரசு-மையவாத (state-centric) இறையியலின் தோற்றமும் மௌலானா மௌதூதி போன்ற இஸ்லாமிய அறிஞர்களும் உருவாகக் காரணமாக இருந்தது என்கிறார் இர்ஃபான். அவரது சொந்த வார்த்தைகளில் கூறவேண்டுமானால், “இஸ்லாத்தின் மையமாக அரசை ஆக்கியது இறையியல் அல்ல; மாறாக, தொடக்ககால பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்க்கையின் எல்லாத் தளங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்த, வழக்கத்துக்கு மாறான அரசின் விரிவாக்கம்தான் மௌதூதி போன்ற அரசு-மையவாத இஸ்லாமிஸ்டுகளை உருவாக்கியது” என்று கூறுகிறார்.
இப்புத்தகத்தின் மையமான ‘இஸ்லாமிசத்திலிருந்து ஜனநாயகத்துக்கு’ என்ற பகுதி ஜமாத்தே இஸ்லாமி தீவிரத்தன்மையிலிருந்து மிதவாதத்தன்மைக்கு மாற்றம்பெற்ற நிகழ்வுப்போக்கு பற்றி விவாதிக்கிறது. குஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் தடைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மை கொண்ட புறக்கணிப்புவாதக் கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது.
இங்கு ஜமாத்தே இஸ்லாமியிலிருந்து பிரிந்த சிமி என்ற அமைப்பைக் குறித்தும் விவாதிக்கிறார் இர்ஃபான் அஹ்மத். ஒப்பீட்டளவிலான ஜனநாயக வாய்ப்பு ஜமாத்தே இஸ்லாமியை மிதவாதப்படுத்தியது என்றால், முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை சிமியைத் தீவிரப்படுத்தியது. இர்ஃபான் அஹ்மது, சிமி தடைசெய்யப்பட்ட காலகட்டத்தில் அதன் உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடுகிறார். அவர்கள் அவரிடம் கூறிய அடிப்படையான வாதம் ‘மௌதூதியின் ஜமாத்தே இஸ்லாமியின் உண்மையான வாரிசுகள் தாங்கள்தான் என்பதும், தற்போதைய ஜமாத் தனது நோக்கங்களிலிருந்து பிறழ்ந்துவிட்டது’ என்பதும்தான். மேலும் இக்கருத்தை அவரது புத்தகத்திலும் அவர் குறிப்பிடவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் இக்கருத்திலிருந்து மாறுபடும் இர்ஃபான் அஹ்மத், மௌதூதியின் மதச்சார்பற்ற அரசை மறுக்கும் கருத்தியலை ‘புறக்கணிப்புவாதம்’ என்றும், சிமியின் கருத்தியலை இந்துத்துவப் பெரும்பான்மைவாதத்துக்கு எதிரான எதிர்வினையாக உருவான ஒன்றெனவும் விளக்குகிறார்.
சிமிக்கும் ஜமாத்தின் மாணவர் அமைப்பான எஸ்.ஐ.ஓவுக்கும் இடையில் நடந்த கருத்துவிவாதங்கள் இஸ்லாமிசத்துக்குள் தீவிரத்தன்மைக்கும் மிதவாதத்துக்கும் இடையில் நடந்த முரணியக்கம் என்றும்; இஸ்லாமிசத்தையும் —பரந்த அளவில் இஸ்லாமிய மரபையும்— பல்வேறு குரல்கள் ஒலிப்பதற்கான வெளியாக மாற்றி ஜனநாயகப்படுத்தியுள்ளது என்றும் கூறுகிறார்.
முஸ்லிம் அமைப்புகளை எப்போதும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கும் பிற மேற்கத்திய அறிஞர்கள் போன்றல்லாது இர்ஃபான் இஸ்லாமிச அமைப்புகளின் மாற்றத்தை அவர்கள் கைக்கொள்ளும் வெறும் உத்தியாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக ஜமாத் நடத்தும் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் அதனது மத-அரசியல் சொல்லாடல்களில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் என அனைத்தின் மீதும் கவனம் குவிக்கும் இர்ஃபான் அஹ்மது, அது வெறுமனே மேற்பூச்சு மாற்றம் அல்ல என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறார். இஸ்லாமியவாத அமைப்புகளை ஓர்படித்தான அமைப்புகளாகக் குறுக்கும் போக்குக்கு மாறாக, அவற்றை அவை உருவான அரசியல், சமூக, கால சூழலில் வைத்து ஆய்வு செய்யும் இந்நூல், கண்மூடித்தனமாக இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைப் பரப்பும் இஸ்லாமோ ஃபோபியாவை எதிர்கொள்ள நாம் ஏந்த வேண்டிய கருத்தாயுதங்களில் ஒன்று என்றால் அது மிகையல்ல.
(நன்றி: சமூக உயிரோட்டம்)