குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

சமூகத் தொண்டர் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு: அமித்ஷா பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லா

Loading

பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராடியவரும் பீமா கோரேகான் வழக்கில் சிறைவைக்கப்பட்டவருமான அருட்தந்தை ஸ்டேன் சுவாமி (84) இன்று மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார். நீண்ட நாட்களாக அவரின் உடல்நிலையையும் கொரோனா பரவலையும் கருத்தில் கொண்டு அவருக்குப் பிணை வழங்குமாறு கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார். இதையொரு நிறுவனக் கொலை என்கின்றனர் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள்.

இது தொடர்பாக மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சமூகத் தொண்டர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் இன்று மும்பை மருத்துவமனை ஒன்றில் மரணித்த செய்தி ஆறாத் துயரத்தை அளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு வந்தவர் ஸ்டேன் சுவாமி. ஆதிவாசி மக்களின் நிலத்தைச் சூறையாடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நீதிமன்றம் உள்ளிட்ட உரிமைப் போராட்டங்களை நடத்திக் காட்டியவர். ஆதிவாசிகளை நக்சல்கள் என்று முத்திரைக் குத்திக் கண்மூடித்தனமாகக் கைது செய்ததை எதிர்த்தவர். அம்மக்களின் விடுதலைக்காகச் சட்டப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவர். பழங்குடி மக்களின் உரிமைகளை உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டியவர் ஸ்டேன் சுவாமி அவர்கள்.

தள்ளாத வயதில் முதியவர் என்றும் பாராமல் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பீமா கோரேகான் வழக்கில் ஒன்றிய அரசின் என்ஐஏ ஸ்டேன் சுவாமி அவர்களைக் கைது செய்து சிறையிலடைத்தது. ஒரு குவளை தண்ணீரைக்கூட தனது கரங்களால் பிடித்துக் குடிக்க இயலாத நிலையில் இருந்த இந்த உன்னத மக்கள் தொண்டர் மீது கொடிய உபா சட்டம் பாய்ச்சப்பட்டது. ஸ்டேன் சாமி அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் கருத்தரங்குகளில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நானும் பங்கேற்று குரல் எழுப்பினேன். உழைப்பாளி மக்களுக்காக குரல் கொடுத்த சுயநலமில்லாத போராளி அருட்தந்தை ஸ்டன்ஸ் சுவாமி.

இந்தியாவின் ஜனநாயகத்திற்காகப் போராடும் போராளிகளுக்கு இவர் ஒரு சிறந்த முன்னோடி. இத்தகைய உன்னத மனிதரை சிறையில் அடைத்து கொலைதான் செய்துள்ளார்கள். இதற்கு முழுப் பொறுப்பு மனிதாபிமானமில்லாத மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான். இந்தக் கொடிய மரணத்திற்குக் காரணமாக இருக்கும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட சமூக தொண்டர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோருகின்றேன்.

Related posts

Leave a Comment