கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

குர்பானி கொடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

Loading

ஹஜ் பெருநாள் நெருங்கிவிட்டது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஹஜ் செல்லும் வாய்ப்பு உலகெங்குமுள்ள பெரும்பாலான முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை. கொரோனா இரண்டாவது அலை தணிந்து, தற்போது தமிழகம் முழுக்க ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த நோன்புப் பெருநாளைப் போலன்றி இப்போது பெருநாள் தொழுகைக்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. அதேபோல், குர்பானி கொடுப்பதற்கு ஏதுவான சூழலும் அமைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

நபி இப்றாஹீம் (அலை) தன் மகன் இஸ்மாயீலை (அலை) அல்லாஹ்வுக்காகத் தியாகம் செய்ய முன்வந்த சரித்திரத்தை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரும் விதமாக நாம் குர்பானி கொடுக்கிறோம். இறைவனுக்கு நாம் முற்றிலும் அடிபணியவும் அவனின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என்பதை இப்றாஹீம் நபியின் செயல்பாடுகள் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. அதுபோலவே, இஸ்மாயீல் (அலை) அவர்களின் பொறுமையும் (சப்ர்) நமக்கொரு பாடமாக விளங்குகிறது. அவருக்கும் அவரின் தந்தைக்கும் இடையே நடந்த அழகிய உரையாடலை குர்ஆன் இப்படிக் கூறுகிறது: “…அவர் (தன் மகனை நோக்கி) ’என் அருமை மைந்தனே! நான் உன்னை (என்னுடைய கைகொண்டு) அறுத்துப் பலியிடுவதாக மெய்யாகவே நான் என் கனவில் கண்டேன். (இதைப் பற்றி) நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்?’ என்று கேட்டார். அதற்கவர், ’என்(னருமைத்) தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் அருள்புரிந்தால் (அதனைச் சகித்துக்கொண்டு) உறுதியாயிருப்பவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்’ என்று கூறினார்.” (திருக்குர்ஆன் 37:102)

இன்னொரு வசனம் இப்படிச் சொல்கிறது: “அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்தியபோது, நாம் அவரை ’இப்றாஹீமே!’ என்றழைத்தோம். திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.” (திருக்குர்ஆன் 37:103-107)

திருமறை கூறும் இந்தச் சரித்திரம் நமக்கு உணர்த்தும் மற்றொரு அம்சம் அல்லாஹ்வின் கருணை. ஆம், இறைவனின் கருணையே இஸ்மாயீல் நபியின் உயிரைக் காப்பாற்றியது. தந்தை, மகன் ஆகிய இருவரும் அந்தக் கருணைக்கு இறுதிவரை மிக்க நன்றியுடன் நடந்துகொண்டனர். நாமும் அந்த இறைக் கருணையால்தான் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற அடிப்படையில், அதற்கு நிச்சயம் நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

ஹஜ் பெருநாள் தொழுகைக்குப் பிறகு இறைவனின் பெயரால் பிராணிகளை குர்பானி கொடுப்பவர் மனத்தில் இந்த வரலாற்றுச் சம்பவங்கள் சஞ்சரிக்க வேண்டும். மேலும், குர்பானி கொடுக்கும்போது அதற்கே உரிய இஸ்லாமிய ஒழுங்குகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். அவற்றுள் சிலவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

குர்பானி கொடுக்கும் முன்:

 1. கூர்மையான கத்தியைப் பயன்படுத்த வேண்டும்.
 2. கத்தியைக் கூர் தீட்டுவதை பிராணிகள் பார்க்கக் கூடாது.
 3. அறுக்கும் முன்பு பிராணிக்குத் தண்ணீர் வழங்க வேண்டும்.
 4. குர்பானி கொடுக்கப்படும் பிராணியை மற்ற பிராணிகள் பார்க்காத விதத்தில் இடத்தை அமைத்துக்கொள்ள வேண்டும்.
 5. பிராணியை வதை ஏதும் செய்யாமல் குர்பானி தரும் இடத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
 6. பிராணியை இடப்பக்கமாகக் கிடத்த வேண்டும்.
 7. குர்பானி கொடுப்பவர் கிப்லாவை முன்னோக்கி இருக்க வேண்டும்.

குர்பானி கொடுக்கும்போது:

 1. பிராணியை அறுப்பதில் தாமதம் கூடாது.
 2. பிஸ்மில்லாஹ் கூறி, மூன்றுமுறை அல்லாஹு அக்பர் என்று சொல்லிவிட்டு அறுக்க வேண்டும்.
 3. தொண்டைக் குழிக்கு இடையே உள்ள இரு ரத்தக் குழாய், மூச்சுக்குழாய், உணவுக்குழாய் ஆகியவற்றைத் துண்டிக்க வேண்டும்.

குர்பானிக்குப் பிறகு:

 1. பெருநாள் தொழுகைக்குப் பின்னர் சாப்பிடும்போது, முதலில் குர்பானி மாமிசத்தை உண்பது பரிந்துரைக்கப்படுகிறது.

இறையச்சம் பெறுவதே குர்பானியின் நோக்கம் என்று திருமறையின் ஓரிடத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துவான். குர்பானி தருவோருக்கும், முஸ்லிம்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் தக்வாவை மேன்மேலும் அதிகப்படுத்தட்டும்!

Related posts

Leave a Comment