கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

உ.பி.யில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் பெயரால் வேட்டையாடப்படும் முஸ்லிம்கள்

Loading

ஒருவாரகாலமாக வடநாட்டு செய்தி ஊடகங்களில் படுதீவிரமாக ஒளிபரப்பப்படும் செய்தி என்னவென்றால், சுமார் ஆயிரம் பேரை ஏமாற்றி மதமாற்றம் செய்தற்காக முஹம்மது உமர் கவுதம் (57), முஃப்தி ஜஹாங்கிர் (52) ஆகியோரை உத்தரப் பிரதேச மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் (ஏடிஎஸ்) டெல்லி ஜாமியா நகரில் கைது செய்திருக்கிறது என்பதும், விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன என்பதும்தான். பிடிபட்டவர்கள் பின்தங்கிய சமூகத்தவர்களையும் பெண்களையும் மாற்றுத் திறனாளிகளையும் குறிவைத்து அவர்களை மூளைச்சலவை செய்திருப்பதாகவும், அவர்களுக்குப் பணம் கொடுத்து அல்லது வேலை வாங்கித்தந்து அல்லது திருமணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதன் மூலம் மதமாற்றம் செய்ததாகவும் யோகி ஆதித்யநாத் அரசின் காவல்துறை வாதிடுகிறது.

உமர் கவுதம், முஃப்தி ஜஹாங்கிர் (வலப்பக்கம்)

அது மட்டுமல்லாமல், கைது செய்யப்பட்டவர்கள் இஸ்லாமிய தஅவா மையம் (ஐடிசி) என்பதை நிறுவி மதமாற்றத்தில் ஈடுபட்டதோடு, இந்தியாவின் மக்கள் தொகையையே மாற்றியமைக்கச் சதி செய்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உள்ளிட்ட வெளிநாட்டுத் தொடர்புகளும் அவர்களுக்கு இருந்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர் காவல்துறையினர். இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல், தேச ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்படுதல், மத நம்பிக்கையை அவமதித்தல், குற்றமிழைக்கத் தூண்டுதல், குற்றச் சதி வழக்கு, மோசடி முதலான பிரிவுகளில் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிந்து நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, உபி அரசு கடந்த நவம்பர் மாதம் இயற்றிய மதமாற்றத் தடைச் சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது.

ஜூன் 21 லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் பிரஷாந்த் குமார், காஸியாபாத் மசூரி காவல் நிலையத்தில் பதிவான ஒரு வழக்கை விசாரிக்கையில் இந்த விவகாரம் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். தஸ்னா தேவி கோவிலின் தலைமை பூசாரியும் தீவிர இந்துத்துவவாதியுமான யதி நரசிங்கானந்தை இரு முஸ்லிம்கள் கொல்ல முயன்றார்கள் என்பதுதான் அந்த வழக்கு.

யதி நரசிங்கானந்த்

நரசிங்கானந்த் முஸ்லிம் வெறுப்புப் பிராச்சாரத்தில் ஈடுபடுவதையே வாடிக்கையாகக் கொண்டவர். 2020 டெல்லி கலவரத்துக்குத் தூண்டுகோலாக இருந்த கபில் மிஷ்ராவுக்கு நெருக்கமானவர். கடந்த ஏப்ரல் மாதம் புது டெல்லியிலுள்ள இந்தியப் பத்திரிகையாளர் மன்றத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியதோடு, தாருல் உலூம் தேவ்பந்த் மதரசாவையும் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி ஜமா மஸ்ஜிதையும் தகர்க்குமாறு வெறிக்கூச்சலிட்டார். முஸ்லிம்கள் துடைத்தெறியப்படாதவரை உலகில் அமைதி நிலவாது என்றும் விஷத்தைக் கக்கினார். மார்ச் மாதம் அவரின் பின்பற்றாளர்கள் 14 வயது முஸ்லிம் சிறுவன் கோவிலுக்குள் தண்ணீர் அருந்த வந்தான் என்று அவனை சரமாரியாகத் தாக்கினர். அதைத் தொடர்ந்து அந்தக் கோவில் வளாகத்துக்குள் முஸ்லிம்கள் நுழையக் கூடாது என்று அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது.

தற்போது நரசிங்கானந்தைக் கொல்ல முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள முஹம்மது ரிஸ்வான், முஹம்மது காஷிஃப் ஆகியோர் தங்கள் முஸ்லிம் அடையாளங்களை மறைத்துக்கொண்டு கோவிலுக்குள்ளே சென்று அவரைத் தீர்த்துக்கட்ட நினைத்தனர் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. அவர்கள் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவியோர் என்பதும், இருவரும் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை உறுதியாக மறுப்பதோடு, இஸ்லாம் பற்றியும் நபிகள் நாயகம் பற்றியும் நரசிங்கானந்த் கொண்டுள்ள கருத்து சம்பந்தமாக விவாதிக்கவே நாங்கள் அங்கே சென்றோம் என்கின்றனர்.

ரிஸ்வான் என்பவர் மதம் மாறுவதற்கு உதவியது சமியுத்தீன் என்றும், அவர் வழியாகவே மதமாற்றச் ’சதியில்’ ஈடுபட்ட உமர் கவுதமைச் சென்றடைந்ததாகவும் கூறுகின்றனர் காவல்துறையினர். மேலும், மன்னு யாதவ் எனும் காது கேளாதவரை அவரின் தந்தை ராஜீவ் யாதவுக்குத் தெரியாமல் மதம் மாற்றியதாகவும் மாற்றுத் திறனாளிகளைக் குறிவைத்து இப்படிச் செய்து வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

காலங்காலமாக இந்திய காவல்துறை தங்கள் சாதிய, பெரும்பான்மைவாத சார்பு நிலையைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்திருப்பதை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கவனித்திருக்கிறோம். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஊடகங்களும் ஒட்டுமொத்த அரசு நிறுவனங்களும் நடந்துகொள்ளும் விதமானது இந்நாட்டில் இஸ்லாமோ ஃபோபியா நிறுவனமயப்பட்டுள்ளதையே நமக்கு மறுஉறுதி செய்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் ஸாகிர் நாயக், பிலால் பிலிப்ஸ் தொட்டு ஐஎஸ்ஐஎஸ் வரை தொடர்பிருப்பதாக ஊளையிடுகிறது ரிபப்ளிக் டீவி. உபி தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் மதமாற்றச் சதித்திட்டம், முஸ்லிம் மக்கள் தொகையை உயர்த்த சர்வதேச பயங்கரவாதிகள் சதி போன்ற பூச்சாண்டிகளையெல்லாம் அவிழ்த்துவிடுகின்றன வடமாநில ஊடகங்களும் அரசும். உபி அரசு கொரோனா பரவலை முறையாகக் கையாளாதது, அதன் பொருளாதாரத் தோல்வி போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டு, முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரம் மையமான இடத்தைப் பிடித்திருக்கிறது. பொதுபுத்தியும் இந்த இந்துத்துவ விஷமத்தனங்களுக்குத் தோதாகச் செயல்படுவது பிரச்னையை இன்னும் தீவிரமாக்குகிறது.

இப்போது மாபெரும் சதிகாரராக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் உமர் கவுதம் பற்றி அவரின் குடும்பத்தினர் சொல்லும் விஷயங்கள் காவல்துறை இவ்விவகாரத்துக்குக் கொடுக்கும் சித்திரத்துக்கு முற்றிலும் வேறானதொரு சித்திரத்தையே தருகின்றன. உமர் கவுதம் இளம் வயதில் இஸ்லாத்தை ஏற்றவர். சமூகச் சேவையிலும் இஸ்லாமிய அழைப்புப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். வேறு மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு வருவோருக்கு சட்ட ரீதியான ஆவணங்களை எடுத்துத்தருவது போன்ற உதவிகளையே செய்து வந்துள்ளார். இதற்காக இஸ்லாமிய தஅவா மையத்தை நிறுவி, அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பொருளாதார உதவியும் பெற்றுள்ளார்; அவர்கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள். சமூகத்தில் பின்தங்கியோருக்கு மட்டுமல்லாமல் உயர்குடி மக்களுக்கும் அவர் சட்ட உதவிகளைச் செய்து வந்திருக்கிறார்.

நன்கொடை வேண்டி ஐடிசி வெளியிட்ட துண்டுப் பிரசுரம்

கட்டாயப்படுத்தி சுமார் 1000 பேர் மதமாற்றப்பட்டிருப்பதாக காவல்துறை சொல்கிறது. அவர்களுள் பலர் தாங்கள் தம் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாத்தை ஏற்றதாகவும் சட்ட ஆவணங்களுக்காகவே உமர் கவுதமை அணுகியதாகவும் கூறி வருகின்றனர். பொருளாதார நலன், வேலை வாய்ப்பு முதலானவற்றுக்காக அவர்கள் மதம் மாறியிருக்கிறார்கள் என்று ’காவி’த்துறையும் சங் பரிவார்களும் கட்டமைக்கும் வெர்ஷனை மதம் மாறியோரின் கூற்றுகள் தவிடுபொடியாக்குகின்றன. நிறைய பேர் மதம் மாறியதன் விளைவால் பல இழப்புகளையும் சந்திக்கின்றனர். பிராமணக் குடும்பத்தில் பிறந்த 33 வயதான அரசு ஊழியர் ஒருவர் இஸ்லாத்துக்கு மாறி, அவர் ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு முறையான ஆவணங்கள் தேவைப்படும்போது உமர் கவுதமிடம் வந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளிகூட சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

https://twitter.com/pindropviolence/status/1409110111507779589

உமர் கவுதமின் வழக்கறிஞர் அஸ்மா இஸ்ஸத், இந்திய அரசியல் சாசனத்தின் 25வது சட்டப்பிரிவு குடிமக்கள் மதத்தை ஏற்கவும் பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமையளிக்கிறது. இவ்விவகாரத்தில் மதமாற்றம் கட்டாயத்தின் பேரிலோ ஏமாற்றியோ நடந்திருப்பதாக காவல்துறை வாதிட்டால் அதற்கான ஆதாரங்களை அவர்கள்தான் கொடுக்க வேண்டும். ஆனால், நீதிமன்றத்தில் காவல்துறை எந்த ஆதாரத்தையும் தராமல் உமரை காவலில் எடுத்துள்ளது என்கிறார். மேலும், ஏமாற்றி மதமாற்றம் செய்யப்படுவதாகத் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கொன்றில், கடந்த ஏப்ரல் மாதம் நீதியரசர் ஆர்.எஃப். நரீமான் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, 18 வயதுக்கு மேற்பட்டோர் தங்கள் மதத்தைத் தெரிவு செய்ய முடியும் என்று கூறியதை வழக்கறிஞர் அஸ்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

உமர் கவுதம், முஃப்தி ஜஹாங்கிர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள மதமாற்றத் தடைச் சட்டமானது குடிமக்களின் அடிப்படை உரிமைக்கே உலை வைக்கும் ஆள்தூக்கிச் சட்டமாகவும், முஸ்லிம்களைத் தண்டிக்கும் நோக்கிலும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மதப் பிரச்சாரம் செய்வோரையும் மதம் மாறுவோரையும் கிரிமினல் குற்றவாளிகளாக்கி, அவர்களுக்கு அபராதம் விதிப்பதும் அவர்களைச் சிறையிலடைப்பதுமே அதன் நோக்கம் என்பதை அதனுடைய ஷரத்துகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இச்சட்டத்தின் மூலம் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை உபி போலீஸார் கைது செய்துள்ளனர். இதே மாதிரியான சட்டம் ”மதச் சுதந்திரத்துக்கான” சட்டம் என்கிற பெயரில் சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய ஆறு மாநிலங்களில் இயற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment