குறும்பதிவுகள் 

முஸ்லிம் வெறுப்புக் குற்றத்தை பூசி மெழுகும் உ.பி. போலிஸ்

Loading

உத்தரப்பிரதேச அரசின் காவல்துறை தற்போது ட்விட்டர் நிறுவனம் மீதும், புகழ்பெற்ற பத்திரிகையாளர்களான ராணா அயூப், சபா நக்வி, Alt News இணை நிறுவனர் முஹம்மது ஸுபைர் மற்றும் தி வயர் இணையதளம் மீதும் முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவுசெய்து நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மூன்று காங்கிரஸ் பிரமுகர்கள் மீதும் வழக்குகள் பதிவாகியுள்ளன. 153, 153 ஏ, 295 ஏ, 505, 120 பி மற்றும் இ.பி.கோ 354 ஆகிய பிரிவுகள் இவர்கள் அனைவர் மீதும் பாய்ந்துள்ளன.

அப்படி இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

காஸியாபாத்தைச் சேர்ந்த 72 வயதான முஸ்லிம் முதியவர் அப்துல் சமது சைஃபி தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. “ஜெய் ஸ்ரீராம்” என முழங்குவதற்கு அவர் கட்டாயப்படுத்தப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதோடு, அவரது தாடியையும் நறுக்கி அவமானப்படுத்தியது ஒரு கும்பல்.

இந்த வன்முறை குறித்துச் செய்தி  வெளியிட்டதற்காகவே மேற்குறிப்பிட்ட புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ட்விட்டர் நிறுவனம் மீது ஆதித்யநாத் அரசு நடவடிக்கை எடுக்கின்றது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், ட்விட்டர், தி வயர் தவிர்த்து உ.பி. காவல்துறை வழக்குப் பதிந்துள்ள அனைத்து நபர்களும் முஸ்லிம்கள் என்பதும், சமூக வலைதளங்களில் ட்விட்டர் மட்டுமே இலக்காக்கப்படுவதும் தற்செயல் அல்ல என்பதே. மேலும், காஸியாபாத் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் கூறியதை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தது பெரும் கிரிமினல் குற்றமாக ஆக்கப்பட்டிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

தனது நடவடிக்கையை நியாயப்படுத்த ஆதித்யநாத் அரசு என்ன சொல்கிறது என்றால், அந்த முஸ்லிம் பெரியவர் தாக்கப்பட்டது மதப் பிரச்னையால் அல்லவாம். தாக்கியவர்களுள் இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்களும் இருந்தனர் எனத் தனது போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்த பின்னும் எப்படி இதை ஒரு மதப் பிரச்னையாக்கலாம் என்கிறது அரசு. மேலும், ஒரு தாயத்தை அந்தப் பெரியவர் கொடுத்ததன் அடிப்படையில் உருவான தகராறுதான் இந்த வன்முறை என்கிறது.

தனது காவல்துறை இப்படி  “உண்மையை” வெளிப்படுத்திய பின்னரும் ராகுல் காந்தி இதை வைத்து “சமூகத்தில் விஷத்தைப் பரப்புக்கிறார்” என அவரை ஆதித்யநாத் சாடியுள்ளார். நல்லவேளையாக இதுவரை ராகுல் மீது வழக்கு ஏதும் பதியப்படவில்லை!

பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜாருக்கு நெருக்கமானவராக அறியப்படும் பர்வேஷ் குஜ்ஜார் என்பவரே அப்துல் சமது மீதான தாக்குதலில் முக்கியமானவர். அவர் மீதும் அவரின் உறவினர் கல்லு, போலி, ஆதில், முஷாஹிது உள்ளிட்டோர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குற்றமிழைத்தவர்களுள் முஸ்லிம்களும் இருக்கும்போது, எவ்வாறு இதையொரு மத அடிப்படையிலான தாக்குதல் எனலாம், ட்விட்டர் எப்படி இதுகுறித்த பதிவை வெளியிடலாம் என்பன ஆதித்யநாத் தரப்புக் குற்றச்சாட்டுகள்.

தன்னை ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி அடித்ததாகவும் நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அந்த முதியவர் அப்துல் சமது சொல்கிறார். தற்போது உ.பி. காவல்துறை சொல்லி வருவது முற்றிலும் பொய் என்பதாக ஆதங்கப்படுகிறார் அவர். அவரைக் காப்பாற்றச் சென்ற முஸ்லிம்கள் மீதும் வழக்குப் பதிவுசெய்ததன் மூலம் ஒரு முஸ்லிம் வெறுப்புக் குற்றத்தை தனிப்பட்ட தகராறாக காவல்துறை திசை திருப்புகிறது என்பது பாதிக்கப்பட்ட தரப்பினரின் வாதமாக உள்ளது.

இதுபோன்ற பல மத வெறுப்புக் குற்றச் சம்பவங்கள் தனிப்பட்ட விவகாரங்களாக மடைமாற்றப்படுவது தொடர் கதையாகியுள்ளது. காவல்துறையின் செயல்பாடுகளும் அதற்குத் தோதாக அமைகின்றன. இது ஒருபுறமிருக்க, தேசிய குற்றப் பதிவுகள் முகமை (NCRB) இப்படியான கும்பல் தாக்குதல்களை/ கொலைகளை தனியாக வகைப்படுத்துவதில்லை என்பதும் இதற்கென சிறப்புச் சட்டமும் இங்கில்லை என்பதும் கவனிக்கத்தக்க விஷயங்களாகும்.

Related posts

Leave a Comment