மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 7) – மரியம் ஜமீலா
மௌலானா மௌதூதி, இஸ்லாமும் சோஷலிசமும் ஒத்திணைந்து வராது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாக தெளிவுபடுத்தியுள்ளார். இத்தலைப்பில் இன்றுவரை அவர் இயற்றியுள்ள முக்கியமான ஆவணம், லாஹுரின் வீக்லி சதான் இதழின் ஆசிரியர் ஷோரீஷ் கஷ்மீரியின் 31 கேள்விகளுக்கு அளித்த பதிலே ஆகும். அது 1969 ஏப்ரல் 14 இல் சிறப்பு இதழில் பிரசுரமானது. அச்சகத்திலிருந்து வெளிவந்த மூன்று மணி நேரத்தில் அதன் பிரதிகள் அனைத்தும் விற்றுத் தீரும் அளவிற்கு அது உற்சாகத்தை உருவாக்கியிருந்தது:
“இஸ்லாமும் சோஷலிசமும் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணானவை. நாம் அனைவரும் ஓர் இறைவனுக்கு உரியவர்கள் என்ற நம்பிக்கையே இஸ்லாத்தின் அடிப்படை. நம் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இறைவன் தன் தூதர்(ஸல்) மற்றும் வேதத்தின் வழியாக நமக்களித்த வழிகாட்டுதல் என்ற தனிமுதல் உண்மையை நாம் முழுமையாக நம்பியுள்ளோம்; முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் அவ்வழிகாட்டுதலை பின்பற்றக் கடமைப்பட்டுள்ளோம். மறுஉலக வாழ்வின் தேவைகளோடு ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்வின் தேவைகள் நமக்கு அற்பமானது. இறைப்பொறுத்தத்தைப் பெறுவதே நம் வாழ்வின் குறிக்கோள்.
இறைவன் மற்றும் அவனது தூதரின் வழிகாட்டுதலை பின்பற்றுவதன் மூலமே இது சாத்தியமாகும். இதன்படி, நடைமுறை வாழ்க்கை முழுவதும் நம் அடிப்படை நம்பிக்கைக்கு இசைவாக அமையும் பொருட்டு இஸ்லாம் நமக்கு ஒரு முழுமையான ஒழுக்க அமைப்பையும் வழிபாட்டு முறையையும் வழங்கியுள்ளது. இத்தோடு, இஸ்லாம் நமக்கு நம் குடும்பம் மற்றும் தனி வாழ்வில் துவங்கி கல்வி, சட்டம், பாராளுமன்றம், வணிகம் மற்றும் சர்வதேசத் தொடர்புகள் வரையிலான நம் இருப்பின் முழுமையையும் உள்ளடக்கிய அனைத்துத் துறைகளுக்குமான விரிவான சட்டதிட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் வழங்கியுள்ளது.
இதற்கு நேர்மாறாக, இறைவனையும் இறைத்தூதர்களின் இருப்பையும் முற்றிலும் நிராகரிப்பதிலேயே சோஷலிசம் பிறப்பெடுக்கிறது. மனித வாழ்வின் ஒவ்வொரு விஷயமும் அதன் பொருளாதார அமைப்பைச் சார்ந்தே அமையும் என்ற உலகாயத தத்துவத்தை முன்வைக்கிறது. அறிவெல்லை கடந்த தனிமுதல் ஒழுக்கம் என்னும் கருதுகோளை முற்றிலும் நிராகரிக்கிறது. சோஷலிசத்தின் வெற்றியில், இலக்கு வழிமுறையை –அது பொய் சொல்வது, சத்தியத்தை மீறுவது, வெளிப்படையான வன்முறை மற்றும் இரத்தம் சிந்துதலையும் உள்ளடக்கியிருக்கலாம்- நியாயப்படுத்துகிறது.
இஸ்லாத்தின் சமூக அமைப்போ, மனித சுதந்திரத்திற்கு அடிப்படை முக்கியத்துவம் அளிக்கும் அதேவேளை, அதுவே முழு உரிமமாக மாறிவிடாதபடி சில வரம்புகளையும் விதித்துள்ளது. இதனால் தனித்திறமைகள் வளரும் வாய்ப்பைப் பெறுகின்றன. கம்யூனிச கொள்கைள் ஆதரிக்கும் வர்க்க மோதல்கள் மற்றும் வெறுப்புகளுக்குப் பகரமாக கூட்டுணர்வும் ஒத்துணர்வும் அங்கே நிலவுகிறது. மேலும் அத்தகைய முழுச் சமூக அமைப்பும் தீமையைத் தானாகவே ஒடுக்கி நன்மையான காரியங்களை ஊக்குவிக்கும்.
மார்க்சிய கொள்கையின்படி தனிச் சொத்துரிமையும் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் சுதந்திரமுமே தீமைகளனைத்திற்கும் ஆணிவேர் ஆகும். எனவே அனைத்து பொருளாதார மூலங்களையும் ஒரு கூட்டு இயந்திரமாக மாற்றி அதை இயக்க சில தனிமனிதர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற அமைப்பை அது முன்வைத்தது. ஆனால் இது விநோதமான முரணான சிந்தனை ஆகும். தனி மனிதர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல எனக் கூறும் ஒரு கொள்கை, அக் கூட்டு இயந்திரத்தை இயக்கும் தனிநபர்கள் மட்டும் கள்ளங்கபடமற்றவர்களாக இருப்பார்கள் என்றும் தவறிழைக்காத தேவதைகளாக இருப்பார்கள் என்றும், அவர்களின் கட்டுப்பாட்டிலும் நிர்வாகத்திலும் நாட்டின் மொத்த பொருளாதாரமும் திறனாக பயன்படுத்தப்பட்டு நியாயமாக பகிர்ந்தளிக்கப்படும் என்றும் கூறுவது முரணான கொள்கையே ஆகும்.
கம்யூனிசக் கொள்கையின் ஆரம்பமே, பாட்டாளிகளுக்கு ஆதரவு, அவர்கள் தவிர்த்த பிற தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் எதிரான உட்சபட்ச வெறுப்பு என்ற ஓரவஞ்சனைக் கோட்பாட்டிலேயே உள்ளது. இந்நிலையில் முழுச் சமூகத்திற்கும் நியாயமான நடுநிலையான பங்கீட்டை இவர்களிடம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மேலும் சிந்தித்தால் நடைமுறையில் ஒரு சில தனிநபர்கள் அல்லது ஒரு குழுவிடம்தான் முழுச் செல்வத்தையும் பங்கீடு செய்யும் அதிகாரம் குவிந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
இது முடியாட்சியில் அரசர்களிடமும், பொருள்முதல்வாத அல்லது நிலப்பிரபுத்துவ ஆட்சியில் முதலாளிகளிடமும் பிரபுக்களுக்களிடமும் இருந்த அதிகாரக் குவியலைவிட அதிகமானது. இங்கு, கம்யூனிசக் கட்சி எல்லாவித உற்பத்தி முறைகள் மீதும் அரசியல் அதிகாரத்தின் மீதும் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் பிறகு அவர்கள் மக்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது என்பது கைதிகளுக்கு ரொட்டி, துணி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்குவதை தன் மீது கடமையாக்கிக் கொண்ட ஒரு சிறையதிகாரியைப் போன்றதே.
இஸ்லாத்தின் போதனைகளின்படி, நீதமான வழியில் ஒருவன் சம்பாதித்த அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அல்லாஹ்வின் அருட்கொடைக்கு வரம்பு ஏதும் இல்லை. முறைகேடான சொத்து எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது முறைகேடானதே. முறையாக சம்பாதித்த சொத்து எவ்வளவு பெரியதாக இருப்பினும் அது முறையானதே. தனிச் சொத்துக்களை பலப்பிரயோகம் செய்து அரசாங்கம் கைப்பற்றுவதைவிட –சிறிய நோய்க்கு பெரிய நோய் கொண்டு சிசிச்சை அளிப்பதை விட- அநீதமாக செல்வம் குவிவதற்கு வழிவகுக்கும் முறைகேடான வழிகளனைத்தையும் தடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவ தேவைகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
பாகிஸ்தானின் தற்போதைய கொள்கைக் குழப்பத்திற்கான மூலம் சோஷலிஸ்டுகளே. அவர்கள் இஸ்லாம் கூறும் எல்லாவற்றிற்கும் நேர் எதிரான பொருள்முதல்வாதக் கொள்கையை ஏற்றுள்ள நிலையில், மக்களை ஏமாற்றி தங்கள் திட்டங்களை அவர்கள் ஏற்கும்படிச் செய்து, அறியாமையிலிருப்பவர்களைக் கவரும் பொருட்டு, இஸ்லாமல்லாத விஷயங்களை இஸ்லாம் எனக் கூறுகின்றனர். ‘இஸ்லாமிய சோஷலிசம்’ என்ற பதம், இன்னும் ஒரு புதிய சிந்தனைப்பள்ளியையே குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், இஸ்லாத்தின் குறைகள் மற்றும் போதாமைகள் என்று கூறப்படுபவற்றை நிவர்த்தி செய்வதற்காக மார்க்சிய கொள்கைகள் சேர்க்கப்பட்ட இஸ்லாத்தின் ஒரு புதிய வடிவம் என்றே அது கொள்ளப்பட வேண்டும். அப்படியெனில் வழுவானது எனக் கருதப்படும் ஒரு மதத்தை ஏன் நம்ப வேண்டும். “இஸ்லாமிய சோஷலிசம்” என்ற பதம் இஸ்லாத்திற்கும் அது வலியுறுத்தும் அனைத்து விஷயங்களுக்கும் அவமானகரமானது மட்டுமின்றி முற்றிலும் முரணான பதம் ஆகும்.”
டமஸ்கஸின் அரபி மாத இதழான அல் இக்வானுல் அல் முஸ்லிமூனின் பத்திரிக்கையாளருடன் நடந்த பேட்டியில், கம்யூனிசத்தை எதிர்ப்பது ஏன் என்று மௌலானா மௌதூதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
“கடவுளின் இறைமை, அறிவெல்லை கடந்த ஒழுக்கம் ஆகியவற்றை தீர்க்கமாக நிராகரித்தல், கடவுள் மறுப்பையும் பொருள்முதல்வாதத்தையும் தீவிரமாக பரப்புதல் போன்ற காரணங்களுக்காக மட்டும் நாம் கம்யூனிசத்தை எதிர்க்கவில்லை. மாறாக கம்யூனிச ஒழுங்கை நிறுவுதல் என்பது கொடூரம், முரட்டுத்தன்மை, வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் பயங்கரவாதம் கலந்த ஒரு ஆட்சி ஆகியவற்றோடு பிரிக்க முடியாதது என்ற காரணத்தாலும், அதை நிலைத்திருக்கச் செய்வதற்கு அதிகாரப்பூர்வ கொடுங்கோன்மை இன்றியமையாதது என்ற காரணத்தாலும் நாம் அதை எதிரக்கிறோம்.
கம்யூனிசம் விமர்சனத்திற்கான சுதந்திரத்தையும், அமைதியான எதிர்ப்பையும் சகித்துக் கொள்வதில்லை; மறுமல்ர்ச்சிக்கான எந்த வாய்ப்பையும் வழங்குவதில்லை; அரசியல் சாசன முறைப்படி அரசாங்கத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதில்லை போன்ற காரணங்களாலும் நாம் அதை எதிர்க்கிறோம். ஏனெனில், எமது பார்வையில் மதம் என்ற கண்ணோட்டத்தில் இவ்விஷயங்கள் ஜீவமுக்கியமானவை. மதத்தை, அதன் விரிவான பொருளில் நீங்கள் கருதினால், கம்யூனிசத்தை முழுக்க முழுக்க மதத்தின் அடிப்படையிலேயே நாம் எதிர்க்கிறோம் என்றும் எம்மால் உறுதியாகக் கூற முடியும்.
கம்யூனிசத்தை நாம் எந்த அளவு வெறுக்கிறோமோ, அதே அளவு மேற்குலகையும் அதன் சர்வாதிகாரக் கொள்கைகளையும் நாம் எதிர்க்கிறோம். கம்யூனிசத்திற்கான எமது எதிர்ப்பை மேற்கின் சர்வாதிகாரிகளுக்கான ஆதரவு எனக் கருதுவது முற்றிலும் தவறானது. ஒருவர், ஒன்றையொன்று எதிர்க்கும் இரு குழுக்களையும் ஏக காலத்தில் எதிர்க்கும் நிலையில், அவர் ஒன்றை எதிர்த்துப் போராடுவதால் மற்றொன்றை ஆதரிக்கின்றார் என்று நாம் கொள்ள முடியுமா? இது சீரான சிந்தனை அல்ல.” (19)
குறிப்புகள்
(19) மௌலானா மௌதூதி ‘கேள்வி பதில்கள்’, தி கிரைடீரியன், கராச்சி, மார்ச்-ஏப்ரல் 1969, பக் 36