தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 2)

Loading

ஹதீஸ் என்றால் என்ன? முக்கிய துறைச்சொற்களும் ஹதீஸ்களுக்குச் சில எடுத்துக்காட்டுகளும்

முஹம்மது நபியின் தூதுத்துவ பணி இருபத்தி மூன்றாண்டுகள் நீடித்தது. மக்காவுக்கு வெளியில் அமைந்திருந்த ஒரு குகையில் வைத்து வானவர் ஜிப்ரீல் வழியாக இறைவனின் வேதவெளிப்பாட்டை பெற்றதாக முஹம்மது நபி தன்னுடைய மனைவியிடம் கூறிய கி.பி. 610-இலிருந்து, அவர் மதீனாவில் அமைந்த இஸ்லாமிய அரசின் சக்தி வாய்ந்தவோர் தலைவராக இருந்த நிலையில் மரணமெய்திய கி.பி. 632 வரையான காலப்பிரிவு அது. ஒரு இறைத்தூதர் மற்றும் ஆட்சித் தலைவர் என்ற வகையில் நீடித்த அவருடைய பணிக்காலத்தின் போது, அரசவை எழுத்தரென்று ஒருவர் இருந்துகொண்டு அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த சிரத்தையுடன் பதிவு செய்து கொண்டிருக்கவில்லை. அதேபோல் அவருடைய ஆணைகளையும் மார்க்கத் தீர்ப்புகளையும் அன்றாடப் பேச்சுகளையும் அப்படியொருவர் எழுத்து வடிவத்தில் பதிவுசெய்து கொண்டிருக்கவும் இல்லை. ஆனால், நபித்தோழர்கள் என்றறியப்படும் இறைத்தூதரோடு வாழ்ந்த முஸ்லிம்கள்தான் அவற்றைத் தங்கள் நினைவில் ஞாபகங்களாகவோ, அல்லது ஏதோவொரு வகையில் எழுத்து வடிவிலோ பாதுகாத்து வந்ததுடன் அடுத்தவர்களுக்கும் பரப்பினார்கள். இந்த அறிவிப்புகள் வாய்மொழியாகவோ, அல்லது எழுத்து வடிவிலோ தொடர்ச்சியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட்டுக் கொண்டே வந்தன. அறிஞர்கள் அவற்றை நிரந்தரமான திரட்டுகளில் தொகுக்கும்வரை இந்நிலை தொடர்ந்தது.

ஒவ்வொரு ஹதீஸும் இரண்டு பகுதிகளால் ஆனது. முதலாவது, நபிகளாரின் வார்த்தைகளை அல்லது செயல்களை விவரிக்கும் வாசகம் (மத்ன்). அடுத்தது, அச்செய்தி எந்தெந்த அறிவிப்பாளர்களின் வழியாகக் கடந்து வந்துள்ளது என்பதைக் குறிக்கும் அறிவிப்பாளர் தொடர் (இஸ்னாத்). ஏதேனுமொரு விசயத்தை நபியவர்கள் சொன்னதாகவோ செய்ததாகவோ ஒன்றுக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவித்திருப்பதற்கும்; அல்லது, ஒரு நபித்தோழர் அதனை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் அறிவித்திருப்பதற்கும் வாய்ப்புள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால், அச்செய்திக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அறிவிப்பாளர் தொடர்கள் உருவாகின்றன. எனவே நாம் இங்கு இரண்டு விசயங்களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். முதலாவது, நபியவர்கள் எதையேனும் பேசிய அல்லது செய்த நிகழ்வு. இதனை நாம் ‘ஹதீஸ்’ எனும் அறபுச் சொல்லின் மூலமோ, அல்லது ‘நபிமொழி’ எனும் சொல்லின் மூலமோ குறிப்பிடுகிறோம். அடுத்தது, அந்த நபிமொழிக்குள்ள பல்வேறு அறிவிப்பாளர் தொடர்கள்.

‘தொலைபேசி’ விளையாட்டில் நிகழ்வதுபோல், ஒரு செய்தி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கடந்து செல்லும்போது மாற்றமுறுவதற்கு சாத்தியம் பிறக்கிறது. நமது அன்றாட வாழ்வின் மூலம் நாம் அறிந்து வைத்துள்ளதுபோல், ஒரு செய்தியானது சூழமைவைப் பொறுத்து விரிவான அல்லது சுருக்கமான வடிவங்களில் எடுத்துரைக்கப்பட முடியும். இவ்வாறு வேறுபடுகின்ற எடுத்துரைப்புகள் ஒவ்வொன்றையும் நாம் குறிப்பிட்ட அந்த ஹதீஸின் ஒரு ‘அறிவிப்பு’ என்று அழைக்கிறோம். எடுத்துக்காட்டாக, நபியவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அறிவிக்கிறார்கள், ‘என்னைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்பவர் எவராயினும் அவர் நரக நெருப்பில் தனக்கொரு இருப்பிடத்தை தயார்செய்து கொள்ளட்டும்’. ஆனால் இந்த ஹதீஸ் குறித்து அனஸ் இப்னு மாலிக், இப்னு மஸ்ஊது, அபூ ஹுறைறா போன்ற பல நபித்தோழர்களிடமிருந்து வந்துள்ள பெரும்பான்மை அறிவிப்புகள், ‘என்னை வேண்டுமென்றே தவறாகப் பிரதிநிதித்துவம் செய்பவர் எவராயினும் அவர் நரக நெருப்பில் தனக்கொரு இருப்பிடத்தை தயார்செய்து கொள்ளட்டும்’ என்பதாகவே குறிப்பிடுகின்றன. ஒரு நபிமொழி தொடர்பான இருவேறு அறிவிப்புகள் எவ்வாறு குறிப்பிடத்தக்க விதத்தில் வேறுபடுகின்றன என்பதை நாம் இங்கு காண்கிறோம்.

இஸ்லாத்தின் பெரிய உட்பிரிவுகள் சிலவற்றின் பார்வையில் சட்டவியல், வணக்க வழிபாடுகள், இறையியல், ஒழுக்கவியல் போன்ற தலைப்புகளில் அமைந்த விவகாரங்கள் தொடர்பாக வரும் ஹதீஸ்களுக்குச் சில எடுத்துக்காட்டுகளை கீழே தருகிறோம்.

விசுவாசிகள் நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனைப் பார்க்க முடியுமா என்பது தொடர்பான இஸ்லாமிய இறையியல் விவாதங்களில் சான்றாதாரமாக எடுத்தாளப்படுமொரு ஹதீஸை நாம் புஃகாரியின் (இ. 256/870) சஹீஹில் பார்க்க முடிகின்றது. சுன்னி ஹதீஸ் கிரந்தங்கள் மத்தியில் உள்ளதிலேயே மிகவும் மதிக்கப்படுமொரு ஆக்கம்தான் சஹீஹ் அல்-புஃகாரி என்பது இங்கு நோக்கத்தக்கது:

அல்-புஃகாரி இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்: இது யூசுஃப் இப்னு மூசா வழியாகவும், அபூ உசாமா வழியாகவும் நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: நபித்தோழர் அதீ இப்னு ஹாதிம் கூறியதாக ஃகைதமா வழியாக அல்-அஃமாஷ் என்னிடம் இவ்வாறு கூறினார்:

அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!) கூறினார்கள், உங்களின் இரட்சகன் மொழிபெயர்ப்பாளரோ திரையோ இல்லாத நிலையில் உங்கள் ஒவ்வொருவருடனும் நேரடியாக உரையாடுவான்.”7

சுன்னி அறிஞர் அபூ தாவூது அல்-சிஜிஸ்தானியின் (இ. 275/889) சுனனில் இடம்பெற்றறுள்ள கீழ்வரும் ஹதீஸ் வரிவிதிப்பு தொடர்பான இஸ்லாமியச் சட்டவாக்க செயல்முறையில் பயன்படுத்தப்படுகிறது:

அபூ தாவூது இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்: இது முஹம்மது இப்னு தாவூது இப்னு சுஃப்யான் வழியாகவும், யஹ்யா இப்னு ஹஸ்ஸான் வழியாகவும், சுலைமான் இப்னு மூசா வழியாகவும், ஜஅஃபர் இப்னு சஅது வழியாகவும் நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: நபித்தோழர் சமுறா இப்னு ஜுன்துப் (ஒரு உரையில்) கூறியதாக ஃகுபைப் இப்னு சுலைமான் தனது தந்தையிடமிருந்து செவியேற்றதை என்னிடம் இவ்வாறு கூறினார்,

நிச்சயமாக, நாங்கள் விற்பனைக்கென்று ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் பொருட்களுக்காகவும் ஸகாத் வரியை செலுத்தி விடுமாறு அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!) எங்களுக்கு ஆணையிடுவார்கள்.”8

சுன்னி அறிஞர் அத்-தபறானியின் முஃஜம் அல்-சகீரில் இடம்பெற்றுள்ள கீழ்வரும் ஹதீஸ் முஹம்மது நபியின் குணநலனைப் பற்றியும், பொருட்களை கடனாக வழங்குவது அனுமதிக்கப்பட்டவொரு நடைமுறை என்பது பற்றியும் சுட்டுகிறது:

அத்-தபறானி இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்: இது அஹ்மது இப்னு மன்சூர் அல்-ஜன்திசாபூரி வழியாகவும், அலீ இப்னு ஹர்ப் வழியாகவும், அஷ்அஸ் இப்னு அத்தாஃப் வழியாகவும் நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: நபித்தோழர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் கூறியதாக அஷ்-ஷஅபியிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு ஹபீப் இவ்வாறு கூறியுள்ளார்,

அல்லாஹ்வின் தூதரவர்கள் என்னிடமிருந்து ஒரு ஒட்டகையை விலைக்கு வாங்கிய பிறகு, நான் அதன் மீது சவாரி செய்தவனாக நகரத்திற்குத் திரும்பிச்செல்ல அனுமதித்தார்கள்.9

பிரபல இமாமி ஷீஆ அறிஞர் இப்னு பாபவைஹின் (இ. 381/991) அமாலியில் இடம்பெற்றுள்ள கீழ்வரும் ஹதீஸ் இஸ்லாமிய சட்டவியல் மற்றும் இறையியல் சொல்லாடலின் இரண்டு முக்கிய கருப்பொருள்களை வலியுறுத்துவதாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம்: முதலாவது, மார்க்கம் என்பது தனிமனித அபிப்பிராயத்தின் வரம்புக்குட்பட்டதல்ல. இரண்டாவது, படைப்பினங்களுடன் இறைவனை ஒப்பிடுதல் கூடாது.

இப்னு பாபவைஹ் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்: இது முஹம்மது இப்னு மூசா இப்னு அல்-முதவக்கில் வழியாகவும், அலீ இப்னு இப்றாஹீம் இப்னு ஹாஷிம் வழியாகவும் நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: அவருடைய தந்தை அர்-ரய்யான் இப்னு அல்-சல்திடமிருந்தும், அவர் இமாம் அலீ இப்னு மூசா அர்-ரிழாவிடமிருந்தும், அவர் தனது தந்தையிடமிருந்தும், அவர் தனது முன்சென்றவர்களிடமிருந்தும் செவியுற்று விசுவாசிகளின் தலைவர் அலீ இப்னு அபீ தாலிப் கூறியதாக இவ்வாறு கூறினார்,

அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!) இறைவன் கூறியதாகக் கூறினார்கள், எவரொருவர் (குர்ஆனில் வரும்) எனது பேச்சை தனது சொந்த அபிப்பிராயத்தைக் கொண்டு மட்டும் புரிந்து கொள்கிறாரோ, அவர் என்னில் நம்பிக்கை கொண்டவர் அல்லர். எவரொருவர் என்னை எனது படைப்புகளுடன் ஒப்பிடுகிறாரோ, அவர் என்னை அறிந்தவர் அல்லர். எவரொருவர் எனது மார்க்கத்தில் (சட்டத்தைப் பொறுத்தவரை) ஒப்புவமான தர்க்கத்தைப் பயன்படுத்துகிறாரோ, அவர் எனது மார்க்கத்தில் இருப்பவர் அல்லர்.”10

இறுதியாக, ஸைதி ஷீஆ அறிஞர் அஹ்மது இப்னு அல்-ஹுசைன் அல்-ஹாரூனியின் (இ. 421/1030) அமாலீ அல்-சுக்றாவில் இடம்பெற்றுள்ள கீழ்வரும் ஹதீஸ் பயபக்தியுள்ளவொரு முஸ்லிம் மரணத்தை எவ்வாறு நோக்க வேண்டுமென்பதை விவரிக்கிறது:

அல்-ஹாரூனி இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்: இது அபூ அல்-ஹுசைன் அல்-புருஜெர்தி வழியாகவும், அபூ அல்-காசிம் அல்-பகாவி வழியாகவும், ஹுத்பா வழியாகவும், ஹம்மாம் வழியாகவும் நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: நபித்தோழர் அனஸும் நபித்தோழர் உபாதா இப்னு அல்-சாமித்தும் கூறியதாக கதாதா இவ்வாறு அறிவிக்கிறார்,

அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!) கூறினார்கள், எவரொருவர் இறைவனைச் சந்திப்பதை விரும்புவாரோ அவரைச் சந்திப்பதை இறைவனும் விரும்புகிறான். மேலும், எவரொருவர் இறைவனைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை இறைவனும் வெறுக்கிறான். அப்போது ஆயிஷாவோ அல்லது நபிகளாரின் மனைவியருள் வேறொருவரோ இப்படிக் கேட்டார்கள், “ஆனால் அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் உண்மையாகவே மரணத்தை வெறுக்கின்றோமே.” அதற்கு நபியவர்கள் பதிலளித்தார்கள், அது அவ்வாறல்ல; ஒரு நம்பிக்கையாளருக்கு மரணம் வரும்போது அவருக்கு இறைவனின் திருப்தி மற்றும் ஈகையின் நற்செய்தி வழங்கப்படுகின்றது. எனவே, அவர் தனக்கு வரவிருப்பதைக் காட்டிலும் அதிக விருப்புக்குரிய வேறெதுவும் இருப்பதாகக் காணமாட்டார். எனவே, அவர் இறைவனைச் சந்திப்பதை விரும்புவார்; இறைவனும் அவரைச் சந்திப்பதை விரும்புவான். ஆனால், ஒரு நிராகரிப்பாளரிடம் மரணம் வரும்போது அவருக்கு இறைவனின் அதிருப்தி பற்றியும், வரவிருக்கும் தண்டனை பற்றியும் நற்செய்தி வழங்கப்படுகின்றது. எனவே, அவர் தனக்கு நேரவிருப்பதைக் காட்டிலும் அதிக வெறுப்புக்குரிய வேறெதுவும் இருப்பதாகக் காண மாட்டார். எனவே, அவர் இறைவனைச் சந்திப்பதை வெறுக்கிறார்; இறைவனும் அவரைச் சந்திப்பதை வெறுக்கிறான்.”11

குறிப்புகள்

5. ஜே. பிரௌன், களஆய்வுக் குறிப்புகள், ஜூலை 2007. இந்த ஹதீஸை முஹம்மது இப்னு ஈசா அத்-திர்மிதியின் ஜாமிஉத் திர்மிதி: கிதாப் அல்-பிர் வ அல்-சிலா, பாப் மா ஜாஅ ஃபீ றஹ்மத் அல்-முஸ்லிமீன் எனும் நூலில் பார்க்கலாம்.

6. முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்-புஃகாரி, சஹீஹ் அல்-புஃகாரி: கிதாப் அல்-இல்ம், பாப் மன் கதப அலா அந்-நபி.

7. சஹீஹ் அல்-புஃகாரி: கிதாப் அத்-தௌஹீத், பாப் கவ்ல் அல்லாஹ் வுஜூஹுஹும் யவ்ம இதின் நாதிறா.

8. அபூ தாவூது அல்-சிஜிஸ்தானி, சுனன் அபீ தாவூது: கிதாப் அஸ்-ஸகாத், பாப் அல்-உரூத் இதா கானத் லில் திஜாறா ஹல் ஃபீஹா மின் ஸகாத்.

9. அபூ அல்-காசிம் அத்-தபறானி, அல்-முஃஜம் அஸ்-சகீர், தொகுதி 1, பக். 76.

10. இப்னு பாபவைஹ், அமாலீ அஸ்-ஸாதிக், பக். 6.

11. அஹ்மது இப்னு அல்-ஹுசைன் அல்-ஹாரூனி, அல்-அமாலீ அஸ்-சுக்றா, பக். 8.

Related posts

Leave a Comment