தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 3)

Loading

இஸ்லாத்தில் முஹம்மது நபிக்கு இருக்கும் அதிகாரம்

ஒரு ஆசிரியர், ஒரு முன்மாதிரி, வஹீக்கு (வேதவேளிப்பாட்டுக்கு)  ஒரு வாழும் எடுத்துக்காட்டு என்ற வகைகளில் முஹம்மது நபியின் பல்வேறு பாத்திரங்கள் பற்றி திருக்குர்ஆனில் பேசப்பட்டுள்ளது. ‘இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்’ (திருக்குர்ஆன் 8:1) என்றும், முஸ்லிம்களுக்கு அவர்தான் ‘அழகிய முன்மாதிரி’ (திருக்குர்ஆன் 33:21) என்றும் திருமறை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளது. முஹம்மது நபி அல்லாஹ்வுடன் நேரடியாகத் தொடர்பாடுவதற்கு அருள்செய்யப்பட்ட, அதே சமயம் என்றாவது  ஒருநாள் மரணித்துவிடக் கூடிய ஒரு ‘மனிதர்’தான் என்பதை திருக்குர்ஆன் வலியுறுத்தியிருந்தாலும், முஸ்லிம்கள் அவரை குற்றங்குறைகளை விட்டுத் தூயவர் என்றே கருதுகிறார்கள்.

நபிமார்கள் எந்தளவுதூரம் பாவங்களை விட்டுத் தூய்மையானவர்கள் என்ற விசயத்தில் பொதுவாகவே ஷீஆ மற்றும் சுன்னி முஸ்லிம்களுக்கு இடையிலும், அவற்றின் உட்பிரிவுகளுக்கு இடையிலும்கூட கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஆனால், நபித்துவப் பணி துவங்கியதற்குப் பிறகு பாரதூரமான எந்தவொரு பாவத்தையும் செய்வதற்கோ ஒழுக்கரீதியில் சரிவதற்கோ முஹம்மது நபி சக்தி பெற்றிருக்கவில்லை என்ற விசயத்தில் முஸ்லிம்கள் எல்லோரும் கருத்துடன்படுகின்றனர். அவர் அரிதாக இழைத்த பிழைகள் பற்றியும், மறதியில் வீழ்ந்த சந்தர்ப்பங்கள் பற்றியும் வந்துள்ள அறிவிப்புகள் எல்லாம் நபித்துவ வழிகாட்டல்களில் சேர்ந்தவை என்றே பார்க்கப்படுகின்றன.

முஹம்மது நபி தன்னுடைய மக்கத்து எதிராளிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஒரு பார்வையற்ற முஸ்லிம் வந்து கவனத்தை திசைதிருப்பும் கேள்வியொன்றை கேட்ட காரணத்தால் அவரை விட்டுத் தனது முகத்தை திருப்பிக் கொண்டதற்காக திருக்குர்ஆன் அவரை வன்மையாகக் கண்டித்ததை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். சமயோசித அறிவற்ற முஸ்லிம்களைக் காட்டிலும் செல்வாக்கு நிறைந்த நிராகரிப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடாது (திருக்குர்ஆன் 80:1-7) என்பதை முஸ்லிம்களுக்கு நினைவூட்டுவதற்கான ஒரு நல்வாய்ப்பாக திருக்குர்ஆன் இதனைப் பயன்படுத்திக் கொண்டது. ஒரு சுன்னாஹ்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதற்காகவே நான் சிலபோது மறதியில் விழுகிறேன் அல்லது மறக்கடிக்கப்படுகிறேன்”12 என்று கூட ஒரு ஹதீஸ் இருக்கின்றது. தொழுகைகளின் போது முஹம்மது நபி விட்ட பிழைகள் பற்றி வரும் ஹதீஸ்கள் யாவற்றையும், முஸ்லிம்கள் அவ்வாறான பிழைகளை விடும்போது தாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டல்களாகவே எடுத்துக் கொள்கின்றனர்.

கோபம் அல்லது பலவீனத்தின் வெளிப்பாடாக முஹம்மது நபியவர்கள் ஏதேனுமொரு கூற்றை மொழிந்திருப்பதற்கோ, ஒரு செயலைச் செய்திருப்பதற்கோ சாத்தியமுண்டு என்பதாக எந்தவொரு மரபார்ந்த முஸ்லிம் அறிஞரும் எண்ணத் துணிய மாட்டார். நபிகளார் வாயிலிருந்து வரும் எல்லாக் கூற்றுக்களையும் பதிவு செய்ய முயன்றதற்காக நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ரை முஸ்லிம்களின் எதிரிகள் கேலி செய்தபோது, அவரை ஆறுதல்படுத்தும் விதமாக முஹம்மது நபிகள் இப்படிச் சொன்னார்கள், “எழுதுங்கள். என்னுடைய ஆன்மா எவன் கரங்களில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! சத்தியத்தை தவிர வேறெதுவும் என் வாயிலிருந்து வெளிவராது.”13 முஹம்மது நபியவர்கள், ‘தனது மனோ இச்சையின் படி பேசுபவரல்லர்; அவருக்கு வழங்கப்படும் வேதவெளிப்பாடுகளே அவை’ (திருக்குர்ஆன் 53:3-4) என்று திருக்குர்ஆனும் கூறியுள்ளது.

முஹம்மது நபியவர்கள் வாழ்ந்து மரணிக்கக் கூடியவொரு மனிதர்தான் என்ற வகையில், அவருக்குத் தன்னளவிலேயே தீர்க்கதரிசன சக்தி எதுவுமில்லை என்றே முஸ்லிம்கள் நம்புகின்றனர். இறைவனின் வேதவெளிப்பாட்டுக்கு அவர் ஒரு ஊடகமாக மட்டுமே இருந்தார். எனவேதான், ‘எனக்கோ உங்களுக்கோ என்ன நேருமென்று எனக்குத் தெரியாது. எனக்கு அருளப்பட்டவற்றையே நான் பின்பற்றுகிறேன்’ (திருக்குர்ஆன் 46:9) என்பதாகக் கூறும்படி அவர் திருக்குர்ஆனால் அறிவுறுத்தப்பட்டார். எனினும் திருக்குர்ஆனின் வேதவெளிப்பாடு வழியாகவும், தனிப்பட்ட முறையில் இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் உளத்தூண்டுதல் வழியாகவும் முஹம்மது நபிகளாருக்கு எதிர்காலம் பற்றிய நேரடி அறிவுடன் தொடர்பிருந்தது என்றே முஸ்லிம்கள் நம்புகிறார்கள். மக்கத்து எதிரிகளை முஸ்லிம்கள் மிகைத்து மேலோங்குவார்கள் என்பது பற்றி வந்துள்ள முன்னறிவிப்புகளை முதலாவது வகைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மனிதகுலம் ஒழுக்க ரீதியில் வீழ்ச்சியடையும் என்பது பற்றியும், நியாயத் தீர்ப்பு நாளுக்கு முன்பாக நடந்தேறும் நிகழ்வுகள் பற்றியும் விவரிப்பவையாக பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அப்படிப் பிரபலமானதொரு ஹதீஸில் நபியவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள், “தொடர்ந்துவரும் காலங்கள் யாவும் முந்தைய காலங்களைக் காட்டிலும் மோசமானவையாக இருக்கும்படியான ஒரு காலத்தை நீங்கள் அடைவீர்கள்.”

ஹதீஸ்கள் மூன்று வகைகளில் அதிகாரபூர்வ நபி மரபினை விவரிப்பவையாக அமையலாம்: ஒன்றில் அவை நபிகளாரின் வாக்குகளை எடுத்துரைப்பவையாகவோ, அல்லது அவர்களின் செயல்களை எடுத்துரைப்பவையாகவோ, அல்லது அவர்களுடைய பிரசன்னத்தில் சில செயல்கள் செய்யப்பட்டு அவற்றை அவர்கள் ஆட்சேபிக்காமல் இருந்தது பற்றி எடுத்துரைப்பவையாகவோ இருக்கலாம். மேலே கண்ட ஹதீஸ் எடுத்துக்காட்டுகள் யாவும் முஹம்மது நபியின் ஆணைகளையும் முன்மாதிரி நடத்தையையும் விவரிப்பவையாகவே அமைந்துள்ளன.

எனினும், நபியின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு செயலும், அதனை அவர்கள் தடைசெய்யாத பட்சத்தில், ஏற்புடைய செயல்களாகவே கொள்ளப்பட வேண்டுமென்று முஸ்லிம் அறிஞர்கள் புரிந்து கொள்கிறார்கள். இந்த வகையில் நபித்தோழர் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள், ‘நபியின் காலத்தில், திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது விந்து வெளியாவதற்கு முன்னரே ஆண் தனது குறியை வெளியில் எடுத்துவிடுவது) எனும் நடைமுறையைப் பயன்படுத்தி வந்தோம்.’ பிறப்புக் கட்டுப்பாடு என்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவொரு நடைமுறைதான் என்பதற்கான பெரியதொரு சான்றாக முஸ்லிம் அறிஞர்கள் இதனைப் புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு ஹதீஸானது நபிகளாருடைய வாழ்வின் எந்தவொரு அம்சத்தையும், அவர்கள் விட்டுச்சென்ற எந்தவொரு மரபையும் குறிக்க முடியும் என்றாலும், நபிகளார் செய்த அனைத்து விசயங்களும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவையாகி விடுவதில்லை. நபியவர்கள் முதலாவது வேதவெளிப்பாட்டை பெற்றபோது நாற்பது வயதை அடைந்தவராக இருந்தார்கள். தூதுத்துவ பணிக்கு முன்பே தனது உயர்வான குணநலனுக்காகவும் நாணயத்துக்காகவும் நபியவர்கள் மிகவும் மதித்துப் போற்றப்பட்டார்கள் என்றாலும், இறைவனின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முந்தைய அவருடைய போதனைகளை முஸ்லிம்கள் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவையாகப் பார்ப்பதில்லை. அது மட்டுமின்றி, வேதவெளிப்பாடானது முஹம்மது நபியை எல்லா விடயங்களிலும் ஆசானாக ஆக்கிவிடவில்லை.

சில விவசாயிகள் ஒட்டுமுறையைப் பயன்படுத்தி பேரீத்த மரக் கன்றுகளை வளர்ப்பதை நபியவர்கள் கண்டார்கள். அவர்கள் மாற்று ஆலோசனை ஒன்றைப் பரிந்துரை செய்ததும், அவ்வாலோசனை பிழையாகிப் போனதும் ஒரு பிரபல ஹதீஸில் வந்துள்ளது. அப்போது அவர்கள், ‘நானுமொரு மனிதன் தான். நான் மார்க்கம் பற்றி ஏதேனுமொரு கட்டளை இடுவேனென்றால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், நான் எனது சொந்த அபிப்பிராயத்தில் ஒரு கூற்றை மொழியும் பட்சத்தில், நானொரு மனிதனேயன்றி வேறில்லை… உலக விவகாரங்களைப் பொறுத்தவரை நீங்கள்தான் என்னைவிட அதிக அறிவு படைத்தவர்களாக இருக்கிறீர்கள்’16 என்று சொன்னார்கள்.

எனினும், இஸ்லாமிய மரபைப் பொறுத்தவரை ‘மார்க்கம்’ எனும் வரையறைக்குள் வரும் விசயங்கள், நவீன மேற்குலகில் உள்ளவற்றைக் காட்டிலும் மிகவும் பரந்து விரிந்தவையாகும். அரசு, ஆட்சி, யுத்த தந்திரம் ஆகிய விசயங்களில் நபியவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றே செயல்பட்டார்கள் என்ற போதும், ஒரு ஆட்சித் தலைவர் என்ற வகையிலும் இராணுவத் தளபதி என்ற வகையிலும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை என்பதாகவே முஸ்லிம் சட்டவியலாளர்கள் கருதுகின்றனர். அறுதியில், அவருடைய தீர்மானங்கள் இறைவனால் வழிநடத்தப்பட்டவை அல்லவா?!

நிச்சயமாக, நபிகளாருடைய நடத்தையின் எல்லா அம்சங்களும் அப்படியே பார்த்துப் பின்பற்றுவதையோ கீழ்ப்படிவதையோ கோருபவையல்ல. ஒரு அறபியைப்போல் நீளமான ஆடைகளை அணிவது ஒரு முஸ்லிமின் மீது கட்டாயம் என்று நபிகளார் கூறாத காரணத்தால், அது விருப்பத்தின் பாற்பட்டவொரு தெரிவு என்பதாகவே நோக்கப்படுகிறது. எனினும், முஸ்லிம் ஆண்கள் தாடியை வளரவிட வேண்டும் என்பதாக நபியவர்கள் ஆர்வமூட்டும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள காரணத்தால், முஸ்லிம் சட்டவியலாளர்கள் அதனை அவசியமான ஒன்று என்றோ அல்லது விரும்பத்தக்க ஒன்று என்றோ நோக்கத் தலைப்படுகின்றனர். நபிகளாரின் தனிப்பட்ட விருப்பங்களும் பழக்க வழக்கங்களும் எந்த அளவுதூரம் சட்ட ரீதியில் கட்டுப்படுத்தும் இயல்பு கொண்டவை என்பதை இவை போன்ற காரணிகள் ஒரு வரம்புக்குட்படுத்துகின்றன என்றாலும், அதீத பயபக்தியால் சுயவிருப்பத்தின் பேரில் நபிகளாரை அச்சொட்டாகப் பின்பற்றுவதற்கு எந்தவொரு உச்ச வரம்பும் இல்லை. எனவே நபியவர்கள் எந்த நிலையிலிருந்த வண்ணம் உறங்கினார்கள், என்ன உணவை உட்கொண்டார்கள் என்பன போன்ற எளிய அன்றாட வாழ்வின் அம்சங்களையும் கூட சில முஸ்லிம்கள் அப்படியே பின்பற்றுகின்றனர். பாக்தாதைச் சேர்ந்த பிரபல சட்டவியலாளரும் ஹதீஸ் அறிஞருமான இப்னு ஹன்பல் (இ. 241/855), இறைத்தூதரைப் பற்றி தாம் செவியுறும் எல்லா ஹதீஸ்களையும் ஒரேயொருமுறையேனும் செயல்படுத்தி விடுவதாகக் கூறினார்கள்.17

நூலின் வரையெல்லை: ‘ஹதீஸ் இலக்கியம்’ என்பதை வரைவிலக்கணம் செய்வது எது?

நபிகளாரைக் குறித்த கதைகளும் செய்திகளும்தான், இஸ்லாமிய நாகரிகத்தில் எல்லா வகையான புலமைத்துவ துறைகளும் வெளிப்பாடுகளும் தோன்றி வியாபிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன. சட்டவியல், இறையியல், குர்ஆன் விரிவுரை, மறைஞானவியல், அரசியல், அறபு இலக்கணம், வரலாறு, ஒழுக்கவியல் என்று சகலவிதப் புத்தகங்களிலும் ஹதீஸ்கள் இடம்பெறுகின்றன. ஹதீஸ் மரபு குறித்து நாம் அறிந்துகொள்ள முனைகிறோம் என்றால், அதன் வரையெல்லையை நாம் எப்படி வரைவிலக்கணம் செய்வது?

ஆரம்பகால இஸ்லாமிய எழுத்துக்களெல்லாம் இஸ்லாத்திற்கு முந்தைய அறபு கூருணர்வுகளையும், புதிய இஸ்லாமிய கரிசனங்களையும் ஒருங்கிணைப்பவையாக இருந்தன. எட்டாவது மற்றும் ஒன்பதாவது நூற்றாண்டைச் சேர்ந்த முஸ்லிம் அறிஞர்கள் அறபு மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் கோத்திரவாத இயல்பினை வெளிப்படுத்தும் விதமாக வம்சாவளி (அன்சாப்) பற்றிய நூல்களை எழுதினார்கள். இப்னு அல்-கல்பீ (இ. 204/819) எழுதிய கிதாப் அல்-அன்சாப் போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆரம்பகால முஸ்லிம்களில் சிலர் அறபு, யூத, பாரசீக, கிறிஸ்தவ மூலங்களிலிருந்து சமயம்சார் நாட்டுப்புறவியல் தொடர்பான தரவுகளை திரட்டிப் பதிவு செய்தார்கள். யமனைச் சேர்ந்த வஹ்பு அல்-முனப்பிஹ் (இ. 114/732) என்பவர் ‘நபிமார்கள் வரலாறு’ (கஸஸுல் அன்பியா) என்ற பெயரில் பிரசித்திபெற்ற எழுத்துவகையில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

வேறு சில முஸ்லிம் நூலாசிரியர்கள் ஆரம்பகால முஸ்லிம் சமுதாயத்தின் இராணுவப் படையெடுப்புகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அவற்றின் வரலாற்றுத் தடத்தை ஆய்வு செய்தார்கள். இந்த வகை எழுத்தாக்கங்கள் ‘போரிலக்கியம்’ (மகாஸி) என்றும், ‘வரலாற்று அறிவிப்புகள்’ (தாரீஃக் அல்லது அஃக்பார்) என்றும் அறியப்படுகின்றன. மூசா இப்னு உக்பா (இ. 141/758) எழுதிய மகாஸி போன்றவை இவ்வகையின எழுத்துக்களில் உள்ளடங்குபவையாகும். இவ்வனைத்து துறைகளையும் ஒருங்கிணைப்பவையாக உருவான மற்றொரு முக்கியமான எழுத்து வகையும் இருக்கிறது: நபியின் வாழ்க்கை வரலாறு அல்லது சீறா குறித்த ஆய்வுதான் அது. முஹம்மது நபியின் மிகப் பிரபலமான வாழ்க்கை வரலாற்று நூல், இப்னு இஸ்ஹாக் (இ. 150/767) எழுதிய சீறா என்பதாகும். ஆரம்பகால முஸ்லிம் அறிஞர்கள் சிலர் திருக்குர்ஆன் வசனங்களின் அர்த்தங்கள் மற்றும் சூழமைவுகள் பற்றிய செய்திகளைத் திரட்டுவதில் கவனத்தைக் குவித்து, ‘தஃப்சீர்’ எனும் வியாக்கியான நூல்களை எழுதித் தொகுத்தார்கள். இறுதியாக சில அறிஞர்கள் சட்டவியல், வழிபாடுகள், இறையியல் தொடர்பான நபிகளாரின் கூற்றுகளின் பக்கம் தமது கவனத்தைத் திருப்பினார்கள். இவை ‘சட்டத் தீர்ப்புகள்’ (அஹ்காம்) என்று அறியப்படுகின்றன. ஹதீஸ் மரபின் மையமான பகுதியை பிரதிநிதித்துவம் செய்பவை இவையே.

எட்டாம் நூற்றாண்டின் மத்தியகாலப் பகுதியில் தோற்றம்பெற்ற ஹதீஸ் இலக்கியத்தின் தீர்மானகரமான இயல்பாக நாம் இதனைக் கூறலாம்: அதாவது, அவை முஹம்மது நபியின் மீது சார்த்திக் கூறப்படும் செய்திகளையும், அவரிலிருந்து துவங்கும் முழுமையான இஸ்னாதுகளையும் உள்ளடக்கியவையாக இருந்தன. திருக்குர்ஆன் வியாக்கியானம், வரலாறு, வம்சாவளி, நாட்டுப்புறவியல் தொடர்பான நூல்களில் பெரும்பாலானவை முஹம்மது நபி தொடர்பான செய்திகளையோ அல்லது அவருடைய செயல்களைக் குறித்த வருணனைகளையோ தம்மில் கொண்டிருந்தன. திருக்குர்ஆன் வியாக்கியான ஆக்கங்கள் பெரும்பாலும் குர்ஆனிய வாசகங்கள் பற்றி நபித்தோழர்கள் அல்லது பிற்கால முஸ்லிம்கள் கொண்டிருந்த அபிப்பிராயங்களையே பெருமளவு சார்ந்திருந்தன.

வரலாற்று ஆக்கங்கள் பெரும்பாலும் முஹம்மது நபியின் மரணத்தையடுத்து பல தசாப்தங்களுக்குப் பிறகு நிகழ்ந்த சிரியா, ஈரான் போன்ற நாடுகள் மீதான வெற்றிகள் உள்ளிட்ட நிகழ்வுகளை விவரிப்பவையாக அமைந்திருந்தன. நபிமார்கள் வரலாறு என்பவை ஆதம்-ஹவ்வா தொடர்பான பேசுபொருள்கள் வரை நீளுவதாக இருந்தன. இவ்வகை எழுத்துக்கள் யாவும் அஹ்காமிலிருந்தும், புதிதாகத் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த ஹதீஸ் மரபிலிருந்தும் பெருமளவு வேறுபட்டவையாக இருந்தன. அவை முஹம்மது நபியின் ஆளுமை மீது கவனக் குவிப்பு கொண்டவையாக இருக்கவில்லை என்பதே அதற்குக் காரணம்.

சரி, நபிகளாரின் வாழ்க்கை வரலாறான சீறா குறித்து என்ன சொல்வது? வரைவிலக்கணத்தின் அடிப்படையில் இவை முஹம்மது நபியின் ஆளுமை மீது கவனக் குவிப்பு கொண்டவைதாம். ஹதீஸ் இலக்கியத்தின் இரண்டாவது தீர்மானகரமான இயல்பையே இங்கு அதிமுக்கியமாக கவனிக்க வேண்டியுள்ளது: இஸ்னாத். இப்னு இஸ்ஹாக்கின் சீறா நூல் நபிகளார் பற்றிய நிகழ்வுகளை எடுத்துரைக்கும் போதும், அவருடைய கூற்றுகளை மேற்கோள் காட்டும்போதும் வெகு அரிதாகவே முழுமையான இஸ்னாதுகளைக் குறிப்பிட்டுள்ளது. அதிலுள்ள இஸ்னாதுகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முழுமையானவையாக இருப்பதில்லை. அதாவது, அச்செய்திகளை வழிவழியாக எடுத்துரைத்த மூல அறிவிப்பாளர்களின் பெயர்கள் பெரும்பாலும் விடுபட்டிருக்கின்றன, அல்லது அநாமதேயமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

நபிகளார் வரை செல்லும் முழுமையான இஸ்னாதுகளைக் கொண்டிருப்பதும், அவர்கள் விட்டுச்சென்ற மரபினை வழிவழியாகப் பரப்புவதுமே ஹதீஸ் இலக்கியத்தின் மைய இயல்பினை வரைவிலக்கணம் செய்கின்றன. இதனையே ஆரம்பகால ஹதீஸ் அறிஞர்கள் ‘உறுதிப்படுத்தும் செய்திகள்’ (அல்-முசனதாத்) எனும் எழுத்துவகை என்றழைக்கிறார்கள். சஹீஹ் அல்-புஃகாரி போன்ற பிரபல ஹதீஸ் கிரந்தங்களை திறந்து பார்ப்போமெனில், அவற்றில் திருக்குர்ஆன் வியாக்கியானம் (தஃப்சீர்), நபிகளாரின் படையெழுச்சி (மகாஸி) போன்றவை தொடர்பான அத்தியாயங்களை நம்மால் காணமுடியும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.

ஆனாலும், இவ்வத்தியாயங்களையும் தஃப்சீர் அல்லது மகாஸி தொடர்பான தனிநூல்களையும் வேறுபடுத்துவது என்னவென்றால், ஹதீஸ் நூல்களில் இடம்பெறும் இவ்வத்தியாயங்கள் பிற்கால முஸ்லிம்களின் கூற்றுகளைப் பற்றி கவனம் செலுத்துவதை விடுத்து, நபிகளாரின் கூற்றுகளை எடுத்துரைக்கும் செய்திகளை அவற்றின் முழுமையான இஸ்னாதுடன் இடம்பெறச் செய்வதிலேயே தமது முழுக் கவனத்தையும் குவித்துள்ளன.

நபிகளார் வரை செல்லும் முழுமையான இஸ்னாதுகளுடன் ஹதீஸ்களை உள்ளடக்கியிருக்கும் எந்தவொரு நூலும், அதன் முதன்மையான பேசுபொருள் எதுவாக இருப்பினும், ஹதீஸ் இலக்கியம் எனும் வகையினத்திற்குள் வருவதாகவே கொள்ளப்படும். இஸ்னாதுகளின் தேவை இல்லாமலாகிவிட்ட பிறகு எழுதப்பட்ட பிற்கால நூல்களும்; முழுமையான இஸ்னாதுகளைத் தராத நிலையில், ஆனால் ஹதீஸ்களின் அம்சங்கள் பற்றி கலந்துரையாடுகின்ற-பகுப்பாய்வில் ஈடுபடுகின்ற நூல்களும், அவற்றின் பேசுபொருளைக் கருத்தில் கொண்டால் ஹதீஸ் இலக்கியம் எனும் வகையினத்திற்குள் வருபவையாகவே இருக்கின்றன என்று நம்மால் ஐயத்திற்கிடமின்றி தீர்மானிக்க முடிகிறது.

குறிப்புகள்

12. முவத்தா: கிதாப் அஸ்-சஹ்வு

13. அப்துல்லாஹ் இப்னு அப்துர் றஹ்மான் அத்-தாரிமி, சுனன் அத்-தாரிமி: அறிமுக அத்தியாயங்கள், பாப் மன் றஃக்கசா ஃபீ கிதாபத் அல்-இல்ம்.

14. சஹீஹ் அல்-புஃகாரி: கிதாப் அல்-ஃபிதன், பாப் லா யஃதீ ஸமான் இல்லா அல்லதீ பஅதஹூ ஷர்ரு மின்ஹு.

15. சஹீஹ் அல்-புஃகாரி: கிதாப் அந்-நிகாஹ், பாப் அல்-அஸ்ல்.

16. முஸ்லிம் இப்னு அல்-ஹஜ்ஜாஜ், சஹீஹ் முஸ்லிம்: கிதாப் அல்-ஃபழாயில், பாப் வுஜூப் இம்திதால் மா காலஹூ ஷர்அன்.

17. அல்-ஃகாதிப், அல்-ஜாமிஉ, தொகுதி 1, பக். 225.

Related posts

3 Thoughts to “ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 3)”

  1. Jamal Mohamed

    *நபிகள் நாயகத்தை அறிவோமா ?*

    அண்ணல் எம்பெருமானார் அருமை நாயகம் ﷺ அவர்கள் உலக மக்கள் யாவருக்கும் அழகிய முன்மாதிரியாக – அனைத்துமாக வாழ்ந்து காட்டினார்கள். மாநபி ﷺ அவர்கள் உலக மக்களை ரட்சிக்கவே மனித தோற்றத்தில் அவதரித்தார்கள்.

    வள்ளல் நபி நாயகம் அவர்கள் முழு உலகிற்கும் அருட்கொடையாகவும் இருளை அகற்றும் பேரொளியாகவும், பேரன்பு பெருங்கருணையாளராக அன்னவர்கள் இருக்கிறார்கள்.

    நாம் படிப்பினை பெறுவதற்காகவே பல்வேறு கஷ்டங்களை தாங்களாகவே ஏற்று அனைத்து துறையிலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.
    ஆனால் யதார்த்தத்தில் நபிகள் நாயகம் அவர்கள் பிறரிடத்தில் எந்த தேவையுமற்றவர்கள்.

    நபிகள் நாயகம் ﷺ
    அவர்கள் இரவெல்லாம் கால்வீங்க தொழுது, எந்நாளும் நோன்பு நோற்று வயிற்றில் கல்லை கட்டி இறைவனை அதிகம் சுஜுது செய்து ஒரு நாளைக்கு நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டார்கள். இதை வைத்து அருமை நாயகத்தை சாதாரண மனிதர் – அப்து என பலர் அறியாமல் கூறி மட்டுப்படுத்துகின்றனர்.

    அண்ணல் நபி நாயகத்திற்கு இன்னொரு பக்கம் உண்டு: அதை அறிவீர்களா?

    *அருமை நாயகம் ﷺ கூறினார்கள்:*
    நான் விரும்பினால் தங்க மலைகள் நிச்சயமாக என்னிடம் விரைந்து வந்துவிடும். பூமியிலுள்ள திறவுகோள்கள் அனைத்தும் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன.

    “அன மின்னூருல்லாஹ் வகுல்லி ஷையின் மின்னூரி”
    நான் அல்லாஹ்வின் ஒளியினின்றும் ஆனேன். மற்ற படைப்புகள் அனைத்தும் எனது ஒளியை கொண்டு ஆயின.
    (அல்ஹதீஸ் – மிஷ்காத், ஹாகிம்)

    ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் எந்நிலையிலும் எவரிடத்திலும் தேவையற்றவராகவே இருந்தார்கள். அவர்கள் ஹக்காகவே இருக்கிறார்கள். சம்பூரண இறையின் தோற்றமாவார்கள்.

    உம்மி எனும் உயர்சிறப்பை நம் கண்மணி நாயகம் ﷺ அவர்களை தவிர உலகில் எவரும் அடையவில்லை. ஏனெனில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் முக்காலத்தையும் அறியும் மறைவான ஞானம் வழங்கப்பட்ட உம்மி நபி ஆவார்கள். பிறரிடத்தில் எந்த தேவையுமற்ற இறைவனின் அருட்சுயம்பாவார்கள். இறைவனின் ஒளியாவார்கள்.

    அவர்கள் உடலை மட்டும் பார்க்கும்போது அவர்கள் இறைவனின் அடிமை (அப்து) ஆவார்கள். அவர்களின் நூரே முஹம்மதிய உள்ளமை தாற்பறியத்தை கவனிக்கும் போது அவர்களே ஹக்காவார்கள்.
    எனவே ரசூல் நாயகம் ﷺ அவர்கள் நூரும்- அப்தும் – பஷரும் – ஹக்கும் ஆவார்கள்.

    நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்:
    “மன்ர ஆனி ஃபகத் ர அல் ஹக்க”
    யார் என்னை கண்டாரோ அவர் ஹக்கை (சத்தியத்தை – இறைவனை) தான் கண்டார்.
    (ஸஹீஹ் புகாரி 6996,6997, முஸ்லிம்)

    மாநபி ﷺ அவர்கள் திருவுளமானார்கள்:

    எனக்கு பல பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன்.
    நான் அஹமத் – புகழுக்குரியவர் ஆவேன்.

    நான் மாஹீ – நான் பாவங்களை அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.

    நான் ஹாஷிர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மறுமையில் மக்கள் அனைவரும் எனக்கு கீழே ஒன்று திரட்டப்பட்டு எழுப்பப்படுவார்கள்.

    நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன். எனக்குப்பின் எந்த நபியும் இல்லாது இருப்பவன்.

    அறிவிப்பாளர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி),
    (ஸஹீஹுல் புகாரி: 4896, ஸஹீஹ் முஸ்லிம் 2354)

  2. Jamal Mohamed

    நபிகள் நாயகம் ﷺ அவர்களை நம்மை போன்ற சாதாரன மனிதர் என்று நினைப்பவன் முட்டாள் மடையன்.
    நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இறைவனின் பிரதிநிதி ஆவார்கள். பிரபஞ்சத்தின் ஒளி விளக்கு ஆவார்கள்.
    நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்:
    யார் என்னை கண்டாரோ அவர் சத்தியத்தை (ஹக் -இறைவனை) கண்டார்.
    (புகாரி 6996)

  3. Jamal Mohamed

    அரைகுறை தனமான பதிவு!
    அல்லாஹ்வின் தூதரை நீ அறியாமல் பேசாதே
    அல்லாஹ்வின் தூதரை குறைத்து பேசுபவன் நயவஞ்சகன். இழிபிறவி. சிந்தனையற்றவன்.

    குர்ஆன் முழுக்க நபி பெருமானாரின் புகழ் தான்.

    முஹம்மது நபி சக்தி பெற்றிருக்கவில்லை என்ற விசயத்தில் முஸ்லிம்கள் எல்லோரும் கருத்துடன்படுகின்றனர். அவர் அரிதாக இழைத்த பிழைகள் பற்றியும், மறதியில் வீழ்ந்த சந்தர்ப்பங்கள் பற்றியும் வந்துள்ள அறிவிப்புகள் எல்லாம் நபித்துவ வழிகாட்டல்களில் சேர்ந்தவை என்றே பார்க்கப்படுகின்றன.

    முஹம்மது நபி தன்னுடைய மக்கத்து எதிராளிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஒரு பார்வையற்ற முஸ்லிம் வந்து கவனத்தை திசைதிருப்பும் கேள்வியொன்றை கேட்ட காரணத்தால் அவரை விட்டுத் தனது முகத்தை திருப்பிக் கொண்டதற்காக திருக்குர்ஆன் அவரை வன்மையாகக் கண்டித்ததை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

Leave a Comment