குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பாப்புலர் ஃப்ரண்ட் தடையை எப்படி புரிந்துகொள்வது?

Loading

பாப்புலர் ஃப்ரண்டையும் ஆர்.எஸ்.எஸ்.ஸையும் சமய அடிப்படையில் செயல்படும் அமைப்புகள் எனப் பார்ப்பதும், ஒன்றையொன்று ஒப்பிட்டு பி.எப்.ஐ.யைத் தடை செய்தால் ஆர்.எஸ்.எஸ்.ஸையும் ஏன் தடை செய்யவில்லை என்று கேட்பதும் பிரச்சனையின் சாரத்தைக் காண தவறுவதாகும்.

‘ஆர்.எஸ்.எஸ். ஒரு வன்முறை அமைப்பு, பி.எப்.ஐ. ஒரு வன்முறை அமைப்பு’ என்று அதனுடைய செயல்முறை சார்ந்து இரண்டையும் ஒப்பிடுவது இவற்றிற்கு இடையே உள்ள அரசியல் வேறுபாட்டைக் காண மறுப்பதாகும். ஆர்.எஸ்.எஸ். இஸ்லாமியர்களை விலக்கி வைக்கும் தேசியத்தின் அடிப்படையில் ஓர் இந்து தேச அரசு உருவாக்கத்திற்காகப் பாடுபடுவதாக சொல்லிக் கொள்கிறது. பி.எப்.ஐ. போன்ற இஸ்லாமிய அமைப்புகள், தாம் இம்மண்ணின் மக்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகப் போராடுகின்றனர், சம உரிமை கோரி போராடுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பி.எப்.ஐ. ஆகிய இரு அமைப்புகளின் அரசியல் நோக்கமும் நேர் எதிரானதாகும்.

சிஏஏ, என்.ஆர்.சி. போன்ற சட்டங்களுக்கு எதிராகவும், ஹிஜாப் தடைக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் பி.எப்.ஐ.க்குப் பங்கிருப்பதாக ஆர்.எஸ்.எஸ். சொல்கிறது. இந்துத்துவ அரசை எதிர்த்து இஸ்லாமியர்கள் போராடுவதை ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை. சிறுபான்மை மக்கள் எதிர்ப்புக் காட்டுவதை பெரும்பான்மையினர் பெரும்பாலான நேரங்களில் விரும்புவதில்லை. மொத்தத்தில், இந்துத்துவத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் அமைப்பாவதற்கும், போராடுவதற்கும், தற்காத்துகொள்ள முயல்வதற்கும் இருக்கும் அடிப்படை உரிமைகள் மீது நடத்தப்பட்ட பாசிசத் தாக்குதல் இது.

பி.எப்.ஐ. மத அடிப்படைவாத அமைப்பு, வன்முறை அமைப்பு என்றெல்லாம் விளக்கப்படுத்தி தடையை எதிர்க்காமல் விடுவோர், மோடி – அமித்ஷா – அஜித் தோவல் கூட்டணியால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்படுவதன் காரணம் என்ன என்பதை புரிந்துகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, பாசிச அரசின் தீவிரத்தையும்கூட உண்மையான பொருளில் புரிந்துகொள்ளவில்லை.

நடந்திருப்பது பாசிச அரசின் மிக முக்கியமான தாக்குதலாகும்.
பாஜக அரசின் சிறுபான்மை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானப் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருந்த, அமைப்புப் பலம் பொருந்திய சக்தி ஒன்று அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பாசிச எதிர்ப்பு முகாம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

– தோழர் செந்தில்,
இளந்தமிழகம்.

Related posts

Leave a Comment