கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இறைவன் அருளிய ஹிஜாப் சட்டம் – யாசிர் காழி

Loading

(முன்பகுதியின் தொடர்ச்சி)

மறைக்க வேண்டிய உடல் பாகங்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இஸ்லாம் தெளிவாக வரையறுத்திருக்கிறது. இருபாலருக்கும் வெவ்வேறு உடை ஒழுங்குகள் தனித்தனியே வரையறுக்கப்படும் அதேவேளை, ஆடையை இறுக்கமாக அன்றி தளர்வுடன் அணிதல், அங்கங்கள் வெளியே தெரியும் விதத்தில் ஆடை அணியாதிருத்தல் முதலானவை இருபாலருக்குமான பொது ஒழுங்குகளாய் வலியுறுத்தப்படுகின்றன.

ஆண்கள் தொப்புளிலிருந்து முழங்கால்வரை மறைப்பது கட்டாயம். தொழுகையின்போது அவர்கள் மேலாடை அணிந்திருக்க வேண்டும். பெண்களுக்கு சட்டங்கள் மாறுபடும். அதுகுறித்துதான் இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.

இரு வசனங்கள்

இரண்டே வசனங்களில் ஹிஜாப் சட்டத்தை குர்ஆன் தெளிவுப்படுத்திவிட்டது (24:31, 33:59). ஆரம்பத்தில் சுட்டிக்காட்டியதுபோல், ஹதீஸின் துணையின்றி குர்ஆனைக் கொண்டே ஹிஜாப் சார்ந்த விதிமுறைகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டு துல்காயிதா மாதம் ஹிஜாப் சட்டம் அருளப்பட்டது. இஸ்லாத்தில் கடைசியாக அருளப்பட்ட சட்டங்களில் ஒன்று இது. தொழுகை, நோன்பு போன்று ஹிஜாபும் கட்டாயக் கடமையே (ஃபர்ள்). ஒப்பீட்டளவில் இவற்றுக்கு மத்தியிலான படித்தரங்களில் வேறுபாடு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏

“(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான்” என்று ஸூறத்துந் நூர் 30ம் வசனம் ஆண்களை விளித்துப் பேசுகிறது.

அதைத் தொடர்ந்து வரும் 31ம் வசனம் பெண்களுக்கு உபதேசிக்கிறது:

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌

“மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது (عَلٰى جُيُوْبِهِنَّ‌) தங்கள் முந்தானையைப் (بِخُمُرِهِنَّ) போட்டுக்கொள்ளட்டும்.”

இவ்வசனத்தில் இடம்பெறும் ஃகுமுர், ஜுயூப் ஆகிய சொற்களை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஃகுமுர் என்பது ஃகிமார் என்ற சொல்லின் பன்மையைக் குறிக்கிறது. ஃகிமார் என்பது ஃகமர என்ற சொல்லிலிருந்து வருகிறது. அதன் பொருள் மறைத்தல், மூடுதல் என்பதாகும். போதைப் பொருள் புத்திக்குத் திரையிடுவதால் அது அறபியில் ஃகமர் என்றழைக்கப்படுகிறது. புகாரியில் உம்மு ஸலமா (றலி) அறிவிப்பதாக இடம்பெறும் ஒரு ஹதீஸில், ‘நீங்கள் உறங்கச் செல்லும் முன் உங்களது தண்ணீர் குடுவையை மூடிக்கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அறிவுறுத்துகிறார்கள். அங்கும் இதே சொல் கையாளப்பட்டிருக்கிறது.

பண்டைய அறபி மொழியில் ஃகிமார் என்பது ஆண்களும் பெண்களும் தலையை மறைக்க அணியும் துணியைக் குறிக்கும். வேறொரு ஹதீஸில் ஃகிமார் என்பது நபிகளாரின் தலைப்பாகையைச் சுட்டுகிறது. தலைத்துணியை இன்று நாம் ஹிஜாப் என்றழைக்கிறோம். அதில் தவறேதுமில்லை. குர்ஆன் அருளப்பட்ட சமயத்தில் ஃகிமார் என்ற சொல் வழக்கத்திலிருந்ததால் அதை குர்ஆன் கையாண்டுள்ளது. இதை விளங்கிக்கொண்டாலே குர்ஆனின் கருத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளலாம்.

ஜாஹிலிய்யா காலத்துப் பெண்கள் 17ம் நூற்றாண்டு ஐரோப்பியப் பெண்களைப் போன்று, 19ம் நூற்றாண்டு அமெரிக்கப் பெண்களைப் போன்று தலைத்துணி அணிந்து தலைமுடியை மறைத்திருந்தார்கள். நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் முதுகுப் பக்கம் அந்தத் துணியைப் போட்டுக்கொள்வார்கள். இந்தப் பின்னணியில்தான் “தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக்கொள்ளட்டும்” எனும் குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது.

குர்ஆன் முக்காடு அணிவதை மட்டுமின்றி, அது தளர்வுடனும், முன்பகுதியை மறைக்கும் வகையிலும் அமையுமாறு வலியுறுத்துகிறது. ஜாஹிலிய்யா காலத்திலும் பெண்கள் மேற்சட்டை அணிந்தார்கள் என்றாலும், தம் தலைத்துணியைக் கொண்டு மார்பகத்தை மறைக்கும் வழக்கம் அங்கு இல்லை. ஆக, கூடுதலாக அதை மறைக்கும் கட்டளை இறைவனிடமிருந்து வந்தது.

மேற்குறிப்பிட்ட 31ம் வசனத்தின் தொடர்ச்சி:

وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌

“தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள் மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம். தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம்.”

இவ்வசனத்தில் மஹ்றமானவர்களின் பட்டியலைத் தரும் இறைவன், இவர்களைத் தவிர வேறு எவரிடத்திலும் தங்களுடைய அழகை பெண்கள் வெளிக்காட்டக் கூடாது என்று அறிவுறுத்துகிறான். இதன் முந்தைய பகுதியையும், இதையும் சேர்த்து அணுகினால், பெண்கள் மஹ்றமில்லாத ஆடவர்கள் முன்பும், மஹ்றமானவர்கள் முன்பும் எப்படி ஹிஜாபைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை நாம் பெறலாம். திருமண உறவு வைத்துக்கொள்ளத் தடுக்கப்பட்டோரான மஹ்றமில்லாதோர் மத்தியில் தலையையும் நெஞ்சுப் பகுதியையும் மறைக்க வலியுறுத்தும் இறைவன், மஹ்றமானவர்களிடம் முக்காடு அணிய வலியுறுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

வசனத்தின் இறுதியில் குறிப்பிடப்படும் “கால்களை(ப் பூமியில்) அடித்துக்கொண்டு நடக்க வேண்டாம்” என்பது ஹிஜாப் குறித்த நுட்பமான புரிதலைத் தருவதாக அமைந்துள்ளது. கால் கொலுசு போன்ற ஆபரணங்கள் எழுப்பும் ஒலியின் மூலம் பிறரின் கவனத்தை ஈர்ப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இதனூடாக நாம் அறிய முடியும். ஆண்கள் முன்னால் பெண்கள் நடக்க வேண்டாம் என்றோ, பெண்கள் ஆபரணங்கள் அணிய வேண்டாம் என்றோ இறைவன் கூறவில்லை. மற்றவர்கள் கவனத்தைக் கூடுதலாகக் கவரும் விதமாக நடந்துகொள்ளக் கூடாது என்பதையே தெளிவுப்படுத்துகிறான். மற்றபடி ஆபரணங்களிலிருந்து மெலிதான ஓசை வருவதெல்லாம் பிரச்னைக்குரியதல்ல.

ஆபரணங்களின் ஓசை அவ்வளவு பெரிய விஷயமா என்றுகூட சிலருக்குத் தோன்றலாம். அது மிகச் சிறிய குழப்பம்தான் (ஃபித்னா) என்றாலும், இறைவன் அதையும் சுட்டிக்காட்டுவதன் மூலம் அப்படியான விஷயங்களிலிருந்து விலகியிருக்க வழிகாட்டுகிறான்.

ஹிஜாபின் சட்ட விதிகளை விளங்க உதவும் இரண்டாவது வசனம் ஸூறா அஹ்ஸாபில் 59வது வசனமாக இடம்பெறுகிறது.

يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏

“நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளர்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்துகொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமலிருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.”

ஹிஜாப் தொடர்பான இவ்வசனத்தை எல்லாப் பெண்களுக்கும் அறிவிக்கும்படி நபிகளாரை இறைவன் பணிப்பதை கவனியுங்கள். தன் குடும்பப் பெண்களுக்கும், நம்பிகை கொண்ட பெண்கள் அனைவருக்கும் நபி (ஸல்) இவ்விஷயத்தை எடுத்துரைத்தார்கள். அவர்கள் மேற்கொண்ட இந்தப் பொறுப்பு இன்று நம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குடும்பமும் சமூகத் தலைமையும் இதில் கவனம் செலுத்த வேண்டும். இத்துடன் இன்னொன்றையும் சொல்ல நினைக்கிறேன். ஹிஜாப் அணியாத அந்நியப் பெண்களிடமெல்லாம் ஒரு மூன்றாம் நபர் ஹிஜாப் அணியச் சொல்வது பிரச்னைக்குரியது. அது தேவையற்ற சங்கடத்தையும் சிக்கலையும் உருவாக்கும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட வசனத்தில் வரும் ஜலாபீப் என்ற வார்த்தை ஜில்பாப் என்பதன் பன்மையாகும். ஜலப என்ற சொல்லிலிருந்தே ஜில்பாப் வருகிறது. அது ஒரு பொருளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இழுப்பதைக் குறிக்கும் சொல். வாளின் உறையை ஜுலுப் என்பார்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது குறைஷிகள் விதித்த நிபந்தனைகளில் ஒன்று என்னவென்றால், மதீனாவாசிகள் மக்காவுக்கு வரும்போது அவர்களின் ஆயுதங்களை உறையிலிருந்து (ஜுலுப்) எடுக்கக்கூடாது என்பது.

ஜில்பாப் என்ற சொல் உடலை மறைக்கும் ஆடையைக் குறிக்கிறது. ஃகிமார் என்ற சொல்லைப் போன்ற மற்றொரு முக்கியமான சொல் ஜில்பாப். ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த அறிஞர் இப்னு மன்சூர் (இறப்பு 1311) தொகுத்த ‘லிசான் அல் அறபி’ எனும் பிரசித்திபெற்ற செவ்வியல் இலக்கண நூலில் ஜில்பாப் என்பதற்கான சில அர்த்தங்களை முன்வைக்கிறார். அதாவது, பெரிய சட்டை அல்லது ஃகிமாரைவிட சற்று பெரிதாகவும், கீழாடையைவிட சிறியதாகவும் உள்ள அந்த ஆடை பெண்கள் தம் தலைமுடியையும் நெஞ்சுப் பகுதியையும் மறைக்கப் பயன்படும் எனக் குறிப்பிடுகிறார். பெண்கள் தம் ஆடையை மேலிருந்து மறைக்கப் பயன்படும் விரிப்பு என்றும் மற்றொரு பொருளைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும், ஜில்பாப் என்பது ஃகிமாரைக் குறிப்பதாகவும் கூறுகிறார். (பார்க்க: லிசான் அல் அறபி, பாகம் 1, ப.272)

மேற்கண்ட திருமறை வசனமானது ஜில்பாப் என்று தெளிவாகக் குறிப்பிடுவதன் மூலம் பெண்கள் வழக்கமாக அணியும் ஆடையுடன் சேர்த்து கூடுதலாகத் தம்மை மறைத்துக்கொள்ள அறிவுறுத்துகிறது. ஆக, பெண்கள் தம் தலையையும், தளர்வான ஆடையைக் கொண்டு உடலையும் மறைப்பது கடமையாகும். இந்தப் பின்னணியில்தான் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் நெடுங்காலமாக தலைத்துணியையும், நெஞ்சுப் பகுதியை மறைக்கும் கூடுதலான ஓர் ஆடையையும் அணிகிறார்கள். குறைந்தபட்சம் தலைத்துணியைக் கொண்டு மேலுடலையும் மறைக்கும் வகையிலேனும் பெண்கள் ஆடை அணிவது அவசியம்.

குழப்பம் தவிர்!

அல்லாஹ் ஹிஜாப் அணியுமாறு குர்ஆனில் வலியுறுத்தவே இல்லை என்றும், நபிகளாரின் மனைவிகளுக்குத்தான் ஹிஜாப் சட்டம் பொருந்தும் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். அதற்கு ஸூறத்துல் அஹ்ஸாபின் 53ம் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். அதில் ஹிஜாப் என்ற வார்த்தை கையாளப்பட்டுள்ளது.

“நபியின் மனைவியரிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால், திரைக்கு (ஹிஜாப்) பின்னாலிருந்து கேளுங்கள்” என்பதாக அந்த வசனம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் திரை என்பது வீடுகளில் பயன்படுத்தப்படும் மறைப்பைச் சுட்டுகிறது. இது நபிகளாரின் மனைவிகளுக்கானது என்பது உண்மை, ஆனால் இதை வைத்துக்கொண்டு ஹிஜாப் சட்டமே எந்தப் பெண்களுக்கும் பொருந்தாது எனும் குதர்க்கமான வாதத்தை முன்வைக்கிறார்கள். ஃகிமார் அணியுமாறு மற்றொரு இடத்தில் குர்ஆன் அறிவுறுத்துவதையும் அவர்கள் இதுபோல் திரிக்கிறார்கள்.

ஹிஜாப் விஷயத்தில் பன்னெடுங்காலமாக முஸ்லிம் உம்மத்தில் ஓர் ஒருமித்த கருத்து நிலவி வருகிறது. ஸுன்னி, ஷீஆ, ஸைதி, முஃதஸிலா என எந்தப் பிரிவினரும் ஹிஜாப் சட்டத்தை மறுக்கவில்லை. இதுகுறித்து இவர்களுக்கு மத்தியில் எந்தப் பெரிய கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால், இன்றைக்கு இஸ்லாத்தில் ஹிஜாப் கட்டாயமில்லை என்று இந்திய நீதிமன்றம் கூறுகிறது. அடிப்படையற்ற, அபத்தமான வாதம் இது என்பதில் சந்தேகமில்லை. இந்திய முஸ்லிம்களுக்குத் தங்களால் இயன்ற கெடுபிடிகளை அங்கே கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

வல்ல இறைவன் நம் சகோதர சகோதரிகளை நல்வழிப்படுத்தட்டும், வெட்கத்தையும் கற்பையும் பேணிப் பாதுகாக்க அருள்புரியட்டும், ஷைத்தானின் தீங்குகளை விட்டும் நம்மைப் பாதுகாக்கட்டும், ஈருலகிலும் கண்ணியமான வாழ்வை நம் எல்லாருக்கும் வழங்கட்டும் எனப் பிரார்த்தித்து இந்த உரையை நிறைவு செய்கிறேன். வஸ்ஸலாம்.

(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

Leave a Comment