கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆபாசமும் குடும்ப அமைப்பின் சீர்குலைவும் – யாசிர் காழி

Loading

(அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் யாசிர் காழி ஆற்றிய உரையின் சுருக்கம் இது.)

முந்தைய பகுதியில் ஹிஜாப் சர்ச்சையாக்கப்படுவதற்குப் பின்னுள்ள அரசியலையும், வரலாற்றுப் பின்புலத்தையும் விவாதித்தோம். இந்தப் பகுதியில் ஹிஜாப் குறித்து குர்ஆனிய ஒளியில் அணுகவுள்ளோம். ஓர் ஆண் ஹிஜாப் பற்றியெல்லாம் பேசலாமா, பெண்கள்தானே பேச வேண்டும் என்றெல்லாம் சமீப காலமாக ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். அதுவொருபுறம் இருக்கட்டும். என் பாலினத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் என் உரையின் உள்ளடக்கத்தைக் கேளுங்கள். அதில் நீங்கள் முரண்படும் புள்ளிகள் இருந்தால் தாராளமாக அதுகுறித்து என்னுடன் உரையாடலாம்.

ஷரீஆவில் ஆடை ஒழுங்குகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஆண்களும் பெண்களும் தங்களின் உடலில் மறைக்க வேண்டிய பகுதிகள் (அவ்றா) பற்றி குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. பல அம்சங்களில் ஷரீஆவின் சட்டவிதிகளை (அஹ்காம்) விளங்கிக்கொள்ள ஹதீஸின் உதவி தேவைப்படும். ஆனால், இவ்விஷயத்தில் குர்ஆனை மட்டுமே கொண்டு நம்மால் வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு அதைத் தூலமாக குர்ஆன் முன்வைக்கிறது. ஹதீஸின் வழியாக கூடுதல் விவரங்களையே நாம் அறிகிறோம்.

எங்கும் ஆபாசம்!

ஹிஜாப் குறித்துப் பார்ப்பதற்கு முன், ஆடை ஒழுங்குகளே இல்லாத சமூகத்தில் எந்த மாதிரியான விளைவுகள் உண்டாகிறது என்பதை நாம் மனங்கொள்ள வேண்டியுள்ளது. எவ்வித வரைமுறையும் கட்டுப்பாடுகளும் இல்லாத சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம். இணையதளங்களும் சமூக ஊடகங்களும் பெருமளவில் பெருகியிருக்கின்றன. மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகமெங்கும் ஆபாசங்கள் நிரம்பி வழிகின்றன. புகைப்படங்கள், காணொளிகள் என பல வடிவங்களில் அவை பதின்ம வயதினரிடம்கூட சென்றுசேர்கின்றன. நமக்கு முன் வாழ்ந்த தலைமுறையினர் எதிர்கொள்ளாத ஒரு புதுவித சிக்கல் இது.

இவ்விஷயத்தை வெளிப்படையாக விவாதிப்பது எனக்குத் தயக்கத்தைத் தருகிறது. கேட்பவர்களுக்கும் சற்று சங்கடமளிக்கலாம். என்றாலும், தற்காலத்தில் இம்மாதிரியான பிரச்னையின் தாக்கம் மிகவும் பரவலாக இருப்பதால் நாம் இதை ஆய்ந்தறிய வேண்டியுள்ளது.

பாலியல் இச்சைகளைத் தூண்டும் வகையிலான படங்களால் சமூகத்தில் உண்டாகும் பாதகமான விளைவுகளையும் தீமைகளையும் உளவியலாளர்களும் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். நேரடியாகவும், வெளிப்படையாகவும் உள்ள அதன் பாதிப்புகளை உங்களால் அளவிடக்கூட முடியும். குடும்பத்தின் சீர்குலைவுக்கு அது பெரும் பங்காற்றி வருகிறது. பல ஆண்களுக்கு பாலியல் ரீதியான கோளாறுகள் உருவாகவும் அது காரணமாக விளங்குகிறது.

Society of Andrology and Sexual Medicine எனும் நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதில் 28,000 ஆண்களிடம் தரவுகள் பெறப்பட்டன. அதனடிப்படையில், ஆபாசப் படங்களுக்கு அடிமையாவது தாம்பத்திய வாழ்வைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குவதாகக் கண்டறியப்பட்டது. அவ்வாறு அடிமையானோர் கற்பனையுலகில் மிதப்பதுடன், நிஜ வாழ்வில் தன் மனைவியுடன் முறையாக தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். இதுவும் நவயுக மனிதன் எதிர்கொள்ளும் புதிய பிரச்னை.

இதன் எதிரொலியாக, திருமணம் முடிப்போர் எண்ணிக்கையும், கருத்தரிப்பு விகிதமும் சரிகிறது. மேற்குலகில் தற்போதைய நிலவரத்தைப் போல் என்றும் இருந்ததில்லை. முந்தைய தலைமுறைகளில் இளைஞர்களுக்கு ஒரு பலமான ஊக்கம் இருந்தது. வேலைக்குச் செல்ல வேண்டும், வருமானம் ஈட்ட வேண்டும், வாழ்வை கண்ணியமாக அமைத்துக்கொள்ள வேண்டும், திருமணம் புரிய வேண்டும் என்றெல்லாம் குறிக்கோள்கள் இருந்தன. தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்வது, தன் பாலுணர்வை மனைவியிடம் வெளிப்படுத்துவது என அவர்கள் வாழ்ந்தார்கள். ஆனால், இன்றோ ஒரு பெண் துணையே இன்றி புகைப்படங்கள், காணொளிகள் மூலம் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் நிலை. ஊக்கம் குன்றி இளைஞர்கள் காணப்படுகிறார்கள்.

உண்மையில், ஆபாசப் படங்கள் உள்ளம் சார்ந்த, உளவியல் சார்ந்த நோய்களையே உருவாக்கியிருக்கின்றன. போதைப் பொருள் பயன்படுத்துவோருக்கு மூளையில் என்ன நிகழுமோ அதுவே ஆபாசப் படங்கள் போன்ற அனாச்சாரங்களுக்கு (ஃபாஹிஷா) அடிமையானோருக்கும் நிகழ்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது, கொகைன் போன்ற போதை வஸ்துக்களை எடுத்துக்கொள்ளும் நபருக்கு மகிழ்வூட்டும் வகையில் மூளையில் சுரக்கும் ‘டோபமைன்’, தவறான படங்களைக் காணும்போதும் சுரக்கிறது. ஆக, இதுபோன்ற அனாச்சாரங்களுக்கு அடிமையாவதும், போதைப் பொருளுக்கு அடிமையாவதும் ஒன்றுதான்.

இன்னொன்று, இதனால் நேரமும் பணமும்கூட பெருமளவில் வீணடிக்கப்படுகின்றன. PEW நடத்திய ஓர் ஆய்வு, அமெரிக்காவுக்கு சுமார் 40 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தது. எதனால் தெரியுமா? பலர் இந்த ஆபாசங்களில் தம் காலத்தைப் போக்கியதால். அதேபோல், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கும் ஆபாசப் படங்களுக்கும் நேரடியான தொடர்பிருக்கிறது. நுகர் பொருளாகப் பெண்ணுடல் கருதப்படுவதற்கும், பாலியல் வன்புணர்வுக்கும், போர்னோகிராஃபிக்கும் தொடர்பிருக்கிறது.

மேலும், தற்கால இளைஞர்களின் மனம் மாசுபடுத்தப்பட்டு, பெண்கள் குறித்த யதார்த்தத்துக்கு முரணான கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் அவர்களிடம் திணிக்கப்பட்டிருக்கின்றன. பெண்களுடன் நடந்துகொள்ளும் முறை, மனைவியுடன் சல்லாபித்தல் என எதிலும் இவர்களால் உரிய விதத்தில் நடந்துகொள்ள முடியவில்லை. இந்த அவலமான சூழல் இச்சமூகத்துக்கு சமய நெறிமுறைகளின் தேவையை பலமாக உணர்த்துவதாக உள்ளது.

நம் சகோதரிகள் சிலர் இந்த அனாச்சாரம் குறித்துப் பேசுமாறு எனக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். ஒருவர் தன் கணவரிடம் இப்பழக்கம் இருப்பது அறிந்து உடைந்துபோயிருக்கிறார். அதனால் அவர்களுக்குள் பிரச்னைகள் தோன்றியிருக்கின்றன. பொதுவாக பெண்களைக் காட்டிலும் ஆண்களிடையே போர்னோகிராஃபிக்கு அடிமையாதல் அதிகம்.

எல்லா ஆண்களும் பெண்களும் ஆடை ஒழுங்குடன் இருக்கும் ஒரு சமூகத்தில் இளம் ஜோடிகள் தங்களை பரஸ்பரம் அழகானவர்களாகக் கருதுவார்கள். பிறருடன் தங்கள் துணையை ஒப்பிட்டு அதிருப்தி கொள்ள மாட்டார்கள். திருமண பந்தம் வலுவாக இருக்கும். ஆனால், இன்று சூப்பர் மாடல்களுடன் தன் துணையை ஒப்பிடும் நிலை உள்ளது. திரையில் தெரியும் பிம்பங்கள் போலித்தனமானவை என்றுகூட இவர்கள் உணர்வதில்லை.

போர்னோகிராஃபி தொழிற்சாலை!

முதலாளியமும் ஒழுக்கக்கேடும் ஒன்றிணைந்து நாசகரமான விளைவுகளை நம்மிடையே உண்டாக்கி வருகின்றன. ஆபாசங்களைக் கொண்டு பெரிய அளவில் பணம் ஈட்டும் ஒரு தொழில்துறையே உருவாகிவிட்ட காலம் இது. கண்ணியமான வேலையில் சேர்ந்து உழைத்துச் சம்பாதிப்பதற்குப் பதிலாக அந்தத் தொழிலில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான டாலர்களைச் சம்பாதிப்பது, வீட்டிலிருந்தபடியே தவறான இணையதளங்களை உருவாக்கிக் கொடுத்து வயிறு வளர்ப்பது என ஒரு சாரார் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

பில்லியன் கணக்கான பணம் இந்த அனாச்சாரத்தில் வீணடிக்கப்படுகிறது. இணையத்தில் தரவிறக்கம் செய்யப்படுவனவற்றில் மூன்றில் ஒரு பங்கு இந்த விதத்தில் இருப்பதாக அறிகிறோம். ஒரே ஒரு ஆபாச இணையதளத்துக்கு இருபது கோடி சப்ஸ்கிரைபர்கள் உள்ளார்கள் என்றால் அதன் தாக்கத்தை நீங்களே அளவிட்டுக்கொள்ளுங்கள்.

வேலையின்மை, வறுமை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் போர்னோகிராஃபியில் ஈடுபடுவோர் பிற்காலத்தில் தீவிரமான மன அழுத்தத்துக்கும் நோய்களுக்கும் ஆட்படுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் நியூயார்க் டைம்ஸ் முதலான பத்திரிகைகளில் வெளியான செய்தியை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ஒரு பத்தொன்பது வயது பெண் குடும்பப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, வேலையும் வருமானமும் இல்லாததால் இந்த ஆபாசத் துறையில் ஈடுபடும் முடிவுக்கு வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் அந்தத் துறையிலேயே குறிப்பிடத்தக்க ஒருவராகவும் மாறியிருக்கிறார். இவரைக் கொண்டு கோடிக்கணக்கான டாலர்கள் ஈட்டப்பட்டது. அவருக்குக் கிடைத்தது சுமார் 12,000 டாலர்கள்தாம் என்று அவர் கூறுகிறார்.

இப்போது அதிலிருந்து வெளியேறி அந்தத் தொழில்துறையின் சிக்கல்களைப் பேசி வருகிறார். தான் எதிர்கொள்ளும் மன நெருக்கடி, அதனால் அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், தனக்குத் தோன்றும் தற்கொலை எண்ணங்கள் என அவர் எழுதி, அந்தத் துறையில் ஈடுபட்டதால் தனக்கு நேர்ந்த அவலத்தைப் பதிவு செய்திருக்கிறார். உண்மையில், அற்ப காசுக்காக தன் வாழ்வையே அவர் தொலைத்துவிட்டார்.

போர்னோகிராஃபி துறை ஆண்களால் ஆண்களை மையப்படுத்தி இயங்குகிறது. பெண்கள் பாலியல் ரீதியான சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். Ted Talksல் போர்னோகிராஃபியின் அபாயம் குறித்து பல காணொளிகள் காணக் கிடைக்கின்றன. வாய்ப்பிருந்தால் அவற்றைத் தேடிப் பாருங்கள். ஆவணப் படங்கள் பலவும் இதுகுறித்து எடுக்கப்பட்டிருக்கின்றன.

இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், இந்தத் துறை மனிதர்களிடையே ஏற்படுத்தும் பாதிப்புகள் தற்காலிகமானவையல்ல. நீண்ட காலம் தாக்கம் செலுத்த வல்லவை. ஆக, கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் இல்லையென்றால் அதனால் சமூகத்துக்குத்தான் பாதிப்பு. அல்லாஹ் மனிதர்களுக்கு ஒன்றைக் கட்டளையிட்டால் அது நமது நன்மைக்காகவே இருக்கும். அதைப் புறக்கணித்தால் நாம்தான் பேரிழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு.

அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: “ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம்.” (7:27)

சொர்க்கத்திலிருந்து ஆதம், ஹவ்வா (அலை) வெளியேற்றப்பட்டது தொடர்பான இவ்வசனத்தில் தெளிவாக இறைவன் எச்சரிக்கிறான். உங்கள் ஆடையை களைவதன் மூலம் ஷைத்தான் உங்களை வழிகெடுக்க அனுமதிக்கக் கூடாது என்று. இதன் முந்தைய வசனத்தில் இவ்வாறு கூறுகிறான்: “ஆதத்தின் மக்களே! உங்களுடைய வெட்கத்தலங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம்.” (7:26)

இறைவன் மழையை இறக்கியருளியதாகவும், குர்ஆனை இறக்கியருளியதாகவும் சுட்டிக்காட்டுவதுபோலவே ஆடையை அருளாக நமக்கு வழங்கியதாக இவ்வசனத்தில் கூறியுள்ளான். ஆடையும் இறைவனின் ஓர் அருட்கொடையாக உள்ளது. ஆக, இருபாலாரும் அவ்றாவை மறைக்க வேண்டும் என்று இறைவன் வலியுறுத்துவதில் சமூக நலனும் உளவியல்சார் நலனும் அடங்கியிருக்கின்றன என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

(தொடரும்)

தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்

Related posts

One Thought to “ஆபாசமும் குடும்ப அமைப்பின் சீர்குலைவும் – யாசிர் காழி”

Leave a Comment