hijab tamilகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப்: ஆதிக்க எதிர்ப்புக் குறியீடு – யாசிர் காழி

Loading

(ஹிஜாப் தடை குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய சொற்பொழிவாளர் யாசிர் காழி ஆற்றிய உரையின் சுருக்கம் இது.)

இந்தியாவில் ஹிஜாப் அணிவது பிரச்னையாக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். கர்நாடக மாநிலத்தில் மாணவிகளும் ஆசிரியர்களும் கல்விக்கூடங்களுக்கு ஹிஜாப் அணிந்துவரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்து தேசியவாதச் செயல்திட்டத்தின் ஒரு நிகழ்வுப்போக்காகவே இது உள்ளது. அந்நாட்டில் வாழும் எல்லா சிறுபான்மையினரையும் இந்து தேசியவாதிகள் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறார்கள். வல்ல இறைவன் உலகெங்கும் இருக்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்குப் பாதுகாப்பு நல்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

தற்போதைய சூழலில், ஹிஜாப் தடையின் அரசியலையும் வரலாற்றுப் பின்புலத்தையும் நாம் அறிய வேண்டியுள்ளது. 1995ம் ஆண்டு ஃபிரான்ஸில் ஹிஜாப் சர்ச்சையாக்கப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம். 9/11 சம்பவத்துக்குப் பிறகு அங்கே ஹிஜாப் விவகாரம் இன்னும் சூடுபிடித்தது. கடைசியாக, 2010ல் புர்காவுக்கும் நிகாபுக்கும் ஃபிரான்ஸ் தடை விதித்ததோடு, ஹிஜாபுக்கும் கட்டுப்பாடுகள் விதித்தது. ஐரோப்பாவிலேயே முதல் நாடாக ஃபிரான்ஸ் இந்நடவடிக்கையை மேற்கொண்டு மற்ற நாடுகளுக்கு மோசமான முன்னுதாரணத்தை வழங்கியது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரியா, டென்மார்க், பெல்ஜியம், பல்கேரியா, நெதர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, நார்வே முதலான நாடுகளின் சில பகுதிகளிலோ அல்லது முழுமையாகவோ புர்கா, நிகாப் தடைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அந்தச் சமயத்தில், நாட்டை நிர்வகிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளெல்லாம் நாடாளுமன்றத்தில் நிகாப் பற்றி மாதக் கணக்கில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஃபிரான்ஸில் இவ்விவாதம் நடந்தபோது, அங்கே அநேகமாக 1,900 முஸ்லிம் பெண்கள் மட்டுமே நிகாப் அணிவோராய் இருந்ததாக சில பத்திரிகையாளர்கள் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்கள். சுமார் 7 கோடி பேர் வசிக்கும் ஃபிரான்ஸில் வெறும் இரண்டாயிரத்துக்கும் குறைவான பெண்கள் அணியும் நிகாப் பற்றி பல மணிநேரங்கள் விவாதிக்கப்பட்டது. கல்வி, ஆரோக்கியம், வரி விதிப்பு என நாட்டுக்குத் தேவையான எல்லா விவாதங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, 0.002 சதவீதத்தினர் சம்பந்தப்பட்ட விஷயம் மையமான பேசுபொருளானது. பத்திரிகைகளெல்லாம் முதல் பக்கச் செய்தியாக நிகாப் விவகாரத்தை வெளியிட்டன. நிகாப் தடை விதிக்கப்படும்வரை இந்நிலை தொடர்ந்தது.

உண்மையில், ஹிஜாப் இப்படி பிரச்னையாக்கப்படுவதற்குக் காரணம் அது இஸ்லாத்தின், இஸ்லாமிய நாகரிகத்தின் சின்னமாக இருப்பதால்தான். புர்கா, நிகாப் என்பதைத் தாண்டி, இஸ்லாமியப் பண்பாட்டு வெளிப்பாடுகள் அனைத்தையும் அவர்கள் மேற்குலக கலாச்சாரத்துடனான மோதலாகக் காண்கிறார்கள். அதுதான் சிக்கல்.

காலனிய எதிர்ப்புக் குறியீடாக நிகாப்

ஃபிரான்ஸில் ஹிஜாப் பிரச்னை உருவான பின்னணியைப் புரிந்துகொள்ள நாம் 2010ல் இருந்து தொடங்க முடியாது; 1995ல் இருந்தும் தொடங்க முடியாது. இதுகுறித்து அறிய சுமார் நூறாண்டுகளுக்கு மேல் பின்னால் போய் அல்ஜீரியாவை ஃபிரான்ஸ் ஆக்கிரமித்த வரலாற்றைப் படிக்க வேண்டியிருக்கும். அல்ஜீரியா மீதான ஃபிரான்ஸின் காலனியத்தை நியாயப்படுத்த அங்குள்ள முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது ஒரு காரணமாக முன்வைக்கப்பட்டது. 1830களில் நடந்த இந்த ஆக்கிரமிப்பு குரூரமான வரலாற்றுப் பக்கங்களால் நிரம்பியது. தடுப்பு முகாம்கள் அமைப்பது, கூட்டுப் படுகொலை நிகழ்த்துவது போன்ற பல அக்கிரமங்கள் அங்கு நடந்தேறின. முஸ்லிம் பெண்களின் முகத்திரையை அவிழ்க்க பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஃபிரான்ஸ் தன் மாகாணங்களில் ஒன்றுபோல அல்ஜீரியாவை அணுகியதோடு, சற்றேறக்குறைய 130 ஆண்டுகள் அதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 1960களில்தான் அங்கிருந்து வெளியேறியது. ஆனாலும், அது ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகள் அங்கே தொடர்ந்தன.

அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின்போது, சரியாக 1958ல் நாடு முழுவதும் முகத்திரை அகற்றும் விழாக்களை நடத்திய ஃபிரான்ஸ். ஃபிரஞ்சு ராணுவ அதிகாரிகளின் மனைவிகள் அல்ஜீரியப் பெண்களின் முகத்திரையை அகற்றி தங்களின் பக்கம் அவர்கள் இருப்பதாகக் காட்டிக்கொண்டார்கள். மிகச் சிலர் முகத்திரையை நீக்கினாலும், பெரும்பாலான பெண்களுக்கு அவ்வாறு செய்ய நிர்பந்தம் தரப்பட்டது. இப்படிச் செய்வதன் மூலம் அல்ஜீரியப் பெண்களுக்கு விடுதலையளிப்பதாகவும், அவர்களை ஆற்றல்படுத்துவதாகவும் ஃபிரஞ்சுக்காரர்கள் சொல்லிக்கொண்டார்கள்.

ஆஃப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும் பெண் உரிமையின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டது இதேபோன்றதொரு சமீபத்திய நிகழ்வு. ஆனால், 1950களில் நடந்த அல்ஜீரியா மீதான ஃபிரஞ்சின் ஆக்கிரமிப்பு அமெரிக்காவுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்தது.

“உங்களை அடிமைப்படுத்திவரும் முகத்திரையை அகற்றுமாறு நாங்கள் கூறுவது உங்களின் நன்மைக்காகத்தான். உங்களுக்கு நாங்கள்தான் விடுதலை தருகிறோம்” என்றார்கள் காலனியவாதிகள். நீல் மெக்மாஸ்டர் எழுதிய Burning the Veil: The Algerian War and the ‘Emancipation’ of Muslim Women என்ற நூல் இதுகுறித்து விலாவாரியாகப் பேசுகிறது. முகத்திரை அகற்றும் விழாக்கள் பரவலாக நடத்தப்பட்டது பற்றியும், அவற்றில் ஏழ்மையான பகுதிகளிலிருந்து பெண்கள் வரவழைக்கப்பட்டது தொடங்கி, அவர்களுக்குப் பணம் கொடுத்தது, சமூகப் பாதுகாப்பு முதலானவை சார்ந்த பிற அழுத்தங்களைத் தந்ததுவரை அதில் பதிவு செய்துள்ளார்.

உதாரணத்துக்கு, மோனிக் அமீஸியான் என்ற இளம் பெண்ணின் சகோதரரை சிறையிலடைத்து சித்திரவதைச் செய்த ஃபிரஞ்சு அரசு, அவரை விடுவிக்க வேண்டுமென்றால் பொது அரங்கில் உன் முகத்திரையைக் கழற்ற வேண்டும் என்று மிரட்டியது. கொடுமை என்னவென்றால், அந்தப் பெண் மிகப் பிரபலமான காலனிய எதிர்ப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர். கடைசியில், வேறு வழியின்றி விழா ஒன்றில் மேடையிலிருந்து அவர் தன் முகத்திரையைக் கழற்றி வீசி விட்டு, பிரஞ்சுக்காரர்கள் எழுதிக்கொடுத்தவற்றைப் படித்தார். அதில் பெண் விடுதலை முகத்திரையை அகற்றுவதிலேயே இருக்கிறது என்கிற ரீதியில் எழுதப்பட்டிருந்தது.

ஹிஜாப் பிரச்னைக்கு இப்படியான இன்னொரு கோணம் இருக்கிறது. முகத்திரையில் ஒருவித குறியீட்டு ரீதியான அதிகாரம் இருக்கிறது. அதனால்தான் காலனியவாதிகளுக்கும், அதற்கு எதிராக போராடியோருக்கும் முகத்திரை ஒரு கருவியாக இருந்தது. பின்காலனிய கோட்பாட்டின் முன்னோடியும், கறுப்பின விடுதலைப் போராளியுமான ஃபிரான்ட்ஸ் ஃபனான் பல நூல்கள் எழுதியிருக்கிறார். அதில் Black Skin, White Masks என்ற நூல் புகழ்பெற்ற ஒன்று. அதுபோல், Algeria Unveiled என்ற அவரின் நூல் இந்த முகத்திரை விஷயம் பற்றி விவாதிக்கிறது.

ஃபிரான்ட்ஸ் ஃபனான் பார்வையில் நிகாப்

ஃபனான் முஸ்லிமல்லாதவர். அவர் இஸ்லாத்தை ஏற்று தன் பெயரை இப்றாஹீம் என்று மாற்றிக்கொண்டதாகவும் ஒரு குறிப்பு உண்டு. அவரின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. அவர் ஃபிரான்ஸிலுள்ள ஒரு தீவில் பிறந்து அந்நாட்டிலேயே படித்து மனநல மருத்துவராகிறார். பிரஞ்சு ராணுவத்துக்கும், பிரஞ்சு அரசாங்கத்தில் பணிபுரியும் அல்ஜீரியர்களுக்கும் உளவியல் ஆலோசனைகள் வழங்குவதற்காக அவரை அல்ஜீரியாவுக்கு அனுப்புகிறது ஃபிரான்ஸ். அவர் அங்குள்ள ராணுவத்திடமும், உள்ளூர் மக்களிடமும் தொடர்பாடுகிறார். அது அவரின் கண்ணோட்டங்களையும் பார்வைகளையும் புரட்டிப் போடுகிறது. அதைத் தொடர்ந்து, அவர் அல்ஜீரியர்களுடன் சேர்ந்துகொண்டு ஃபிரான்ஸுக்கு எதிராகவே கலகம் செய்தார்.

ஃபிரான்ட்ஸ் ஃபனான் காத்திரமான, கருத்தாழமிக்க காலனிய எதிர்ப்புப் புத்தகங்களை எழுதியிருக்கிறார். காலனியத்துக்கு ஆட்பட்டவர்களிடமிருந்து உண்மையான அடையாளம் பிடுங்கப்பட்டிருப்பதாக அவர் கூறுவார். அதாவது, அவர்கள் காலனியவாதியின் மொழியையே பேச வேண்டும், அதையும் அவனைவிட சிறப்பாகப் பேச வேண்டும், அவனைப் போலவே நடந்துகொள்ள வேண்டும், அவனையே பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட நிர்பந்தம் அவர்களுக்குத் தரப்பட்டது அல்லவா? அந்தப் பின்னணியில்தான் அவரின் புத்தகம் ஒன்றுக்கு Black Skin, White Masks என்று பெயரிடப்பட்டுள்ளது.

நிகாப் குறித்து அவர் சொல்லும்போது, பிரஞ்சு ஆக்கிரமிப்பாளர்களை அது பெரிதும் தொந்தரவுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக்காட்டுகிறார். ஒரு ராணுவ அதிகாரி, ‘அல்ஜீரியச் சமூகக் கட்டுமானத்தையும், அதன் எதிர்ப்பையும் முறியடிக்க வேண்டுமென்றால், நாம் முதலில் அங்குள்ள பெண்களை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். திரைக்குப் பின்னால் மறைந்திருக்கும் அவர்களை அதிலிருந்து வெளிக்கொணர வேண்டும். வீடுகளிலிலிருந்தும் அவர்களை வெளியே கொண்டு வர வேண்டும்’ என்கிறார். இப்படி அல்ஜீரிய சமூக அமைப்பைச் சிதைக்க, முஸ்லிம்களின் கலாச்சார அடையாளத்தை அழிக்க பெண்களைக் குறிவைத்தார்கள் பிரஞ்சுக் காலனியவாதிகள். இதுவே அவர்களின் தந்திரோபாயச் செயல்பாடாக இருந்தது.

ஃபிரான்ட்ஸ் ஃபனான் இப்படிச் சொல்வார், “தன்னால் பார்க்க முடியாத, ஆனால் தன்னைப் பார்க்க முடிகிற இந்த (முஸ்லிம்) பெண்ணைக் குறித்து காலனியவாதி கடும் எரிச்சலுறுகிறான்”. அல்ஜீரியப் பெண்களை காலனியவாதிகளால் பார்க்க முடியாததும், எந்த வகையிலும் தங்களால் அவர்களை நெருங்க முடியாததும் அவர்களுக்குக் கடும் எரிச்சலூட்டியது. அதனால் அப்பெண்களின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் ”அவிழ்க்க” நினைத்தார்கள். ஆக, நிகாப் என்பது அவர்களின் அடையாளம் சம்பந்தப்பட்ட பிரச்னை, அது காலனியவாதிகளைத் தொந்தரவுக்குள்ளாக்கும் குறியீடு, காலனிய எதிர்ப்புக் குறியீடு. ஒரு முஸ்லிம் பெண் பிரஞ்சுக் கலாச்சாரத்தைப் புறக்கணித்துவிட்டு தனது சொந்த அடையாளத்துடனும் கலாச்சாரத்துடனும் இருப்பதாகச் சொல்வதை காலனியவாதிகளால் ஜீரணிக்கவே முடியவில்லை. எனவேதான் அவர்கள் அதைக் குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருந்தார்கள், தடை செய்ய முனைந்தார்கள், முகத்திரை அகற்றும் விழாக்களை நடத்தினார்கள்.

முஸ்லிம் ஆண்கள்தாம் அங்குள்ள பெண்களை முகத்திரை அணிய கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும், அதிலிருந்து அந்தப் பெண்களை மீட்டு விடுதலை வழங்குகிறோம் என்றும் சொல்லிக்கொண்ட காலனியவாதிகள், பலவந்தமாக அந்தப் பெண்களின் முகத்திரையை அகற்ற முற்பட்டனர். அதாவது, முகத்திரை அணியக் கட்டாயப்படுத்தப்படுவதாக ஒருபக்கம் குற்றம் சாட்டிக்கொண்டே, மறுபக்கம் அதை நீக்குமாறு அல்ஜீரியப் பெண்களைக் கட்டாயப்படுத்தினர். இன்றைய நவீன யுகத்திலும் இதே விதமான போக்கை காண முடியும்.

இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், எகிப்து, மத்தியக் கிழக்கு நாடுகள் என எல்லா இடங்களிலும் பெண்ணியவாதத்தை முதலில் சுவீகரித்துக்கொண்டவர்கள் காலனிய சேவகர்கள்தாம். அவர்கள் பிரிட்டிஷ், ஃபிரஞ்சின் காலனிய ஆக்கிரமிப்புகளை சரிகண்டார்கள். அவற்றின் விழுமங்களை முழுவதுமாக ஆதரித்த இவர்கள் தலை முக்காடுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தார்கள். பெண்கள் ஆற்றல்பட வேண்டுமென்றால் அவர்கள் முக்காடைக் கழற்ற வேண்டும் என்ற அபிப்ராயம் அவர்களிடம் குடிகொண்டிருந்தது.

மதச்சார்பின்மைவாதமும் தாராளவாதமும்

ஹிஜாப் தடையை காலனியமயமாக்கலின், அது உருவாக்கிய மன அமைப்பின் வெளிப்பாடாக நாம் பார்ப்பதுடன், மதச்சார்பின்மைவாதத்தின் விளைபயனாகவும் பார்க்க வேண்டும். மதம் பொதுவெளிகளில் வெளிப்படக் கூடாது என்ற மதச்சார்பின்மைவாதம் சமயக் குறியீடுகளை ஒடுக்குகிறது. மதத்தையெல்லாம் வீட்டில் வைத்துவிட்டு வருமாறு முன்வைக்கப்படும் வாதமானது முஸ்லிம்களின் வாழ்வுடன் இணைந்த ஒன்றாக சமயத்தை அங்கீகரிக்க மறுக்கிறது. இதனால் குழப்பம் உண்டாகிறது.

மதச்சார்பின்மையில் பல போக்குகள் இருந்தாலும், பிரதானமானது அமெரிக்க மதச்சார்பின்மையும், ஃபிரஞ்சு மதச்சார்பின்மையும்தான். அமெரிக்காவினுடையது மதங்களையெல்லாம் ஓரளவு உள்ளடக்கும் தன்மை கொண்டதாகவும், ஃபிரஞ்சினுடையது மதங்களை முற்றாக விலக்கி நிறுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில், அமெரிக்காவை நிர்மாணித்த தலைவர்கள் ஆங்கிலிகன் திருச்சபையால் பாதிக்கப்பட்டு மதச் சுதந்திரத்துக்காக அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். ஒருகாலத்தில் அமெரிக்காவிலிருந்த 13 காலனிகளிலும் பலவித கிறிஸ்தவப் பிரிவுகள் கோலோச்சின. அதனால் அரசிடமிருந்து மதம் பிரிக்கப்பட்டு தனிமனித அளவில் அது வரையறுக்கப்படுவதை அவர்கள் ஊக்குவித்தார்கள். இந்தப் பின்னணியில்தான் மேற்கத்திய ஜனநாயக நாடுகளிலேயே அமெரிக்காவில் மதம் வலுவாக வேரூன்றியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் இதற்கு முற்றிலும் வேறான தன்மை கொண்டவை.

குறிப்பாக, ஃபிரான்ஸில் மதத்தை மிகவும் இழிவாக நோக்குகிறார்கள். காரணம், ஃபிரஞ்சு கத்தோலிக்கத் தலைமைபீடம் மன்னராட்சியை ஆதரித்தது. அந்த ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் மதத்தின் மீதும் இருந்ததால், மதம் பொதுவெளிகளிலிருந்து முற்றாக விலக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு அவர்கள் வந்தடைந்தார்கள். அதனால் மதச்சார்பின்மை குறித்த அவர்களின் கருதுகோள் மிகத் தீவிரமானது. மதச்சார்பின்மையை அவர்கள் ‘லைசிடே’ (Laïcité) என்றழைப்பார்கள்.

ஒருகாலத்தில் கத்தோலிக்கத்திடம் ஃபிரான்ஸ் மோதல் போக்கைக் கடைப்பிடித்தாலும் இப்போது அதன் மீது மென்மையான போக்கையே அது மேற்கொள்கிறது. முஸ்லிம்களிடம்தான் இன்றைக்கு அவர்கள் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். முஸ்லிம் பண்பாட்டை அந்நியமானது என்று கூறி, தங்களது பண்பாட்டை முஸ்லிம்கள் மீது திணிக்க முனைகிறார்கள். அதைக் கேள்வி எழுப்பினால் சினம் கொள்கிறார்கள். ஃபிரஞ்சுதானே வட ஆஃப்ரிக்க நாடான அல்ஜீரியாவை ஆக்கிரமித்தது? கிட்டத்தட்ட 140 ஆண்டுகள் அவர்கள் அந்த முஸ்லிம் நாட்டை ஆளவில்லையா? இப்போது ஃபிரான்ஸில் வெறும் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள முஸ்லிம்களை அவர்கள் குறைகூற என்ன தார்மிகம் இருக்கிறது? இதுவொரு நயவஞ்சக நடத்தையும் இரட்டை நிலைப்பாடுமாகும்.

ஏராளமான இந்தியர்கள் பிரிட்டனில் இருப்பதாகக் கூறி அங்குள்ளோர் எரிச்சலடைகிறார்களே. 300 ஆண்டுகள் அந்த நாட்டில் இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அவர்கள் தங்களின் கடந்த கால வரலாற்றை மறந்துவிட்டார்களா? பிற நாடுகளை ஆக்கிரமித்து சுரண்டிக் கொழுத்துவிட்டு, இப்போது ஆசியர்களும் ஆஃப்ரிக்கர்களும் தங்களின் நாடுகளில் வசிப்பதை அவர்கள் வெறுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஹிஜாப் விஷயத்தில் முஸ்லிம்களிடையே தாராளவாத மதிப்பீடுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் இங்கு சொல்லியாக வேண்டும். “என் உடல் என் விருப்பம்” என்று சில பெண் அமைப்பினர் ஆர்ப்பரிப்பதை நாம் பார்த்திருப்போம். முஸ்லிம் நாடுகளிலும் இதுபோன்ற கருத்தாக்கங்கள் பரவியுள்ளன. இது இஸ்லாமியக் கண்ணோட்டத்துக்கு முற்றிலும் முரணான தனிமனிதவாதம். “என் உடல்” என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. நீங்களா உங்களின் உடலைப் படைத்தீர்கள்? பிறகு எப்படி அது உங்களுக்குச் சொந்தமாகும்? உங்களையும் என்னையும் படைத்தது ஒரே இறைவன். அவனுக்கே நாம் அடிபணிய கடமைப்பட்டவர்கள். “என் விருப்பம்” என்று நீங்கள் சொல்வதில் நாம் தலையிட மாட்டோம். அதற்கு நாளை இறைவனிடம் நீங்களே பதில் சொல்லிக்கொள்ளுங்கள். இறைவனிடமிருந்தே வந்தோம் மீண்டும் அவனிடமே செல்லவுள்ளோம் என்பதில் முஸ்லிம்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.

கலாச்சார, மத, இன மேலாதிக்க சக்திகள் முகத்திரையை தங்களது ஒடுக்குமுறைக்கான கருவியாகப் பயன்படுத்துகின்றன. காலனியம் அல்லது ஐரோப்பிய நாடுகளின் அரசுகள்/ இந்து தேசியவாத பாஜக போன்ற ஆதிக்கவாதிகள் தனது புஜ பல பராக்கிரமத்தைக் காட்ட முஸ்லிம் சமூகத்துப் பெண்களை இலக்காக்குகின்றன. தங்களின் அடையாளத்தை முன்னிறுத்துவதோடு, அவ்வாறு இருக்க விரும்பாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கொக்கரிக்கின்றன. சொல்லப்போனால், சுதந்திரம், தாராளவாதம் எனப் பேசும் மேலை நாடுகளின் கருதுகோள்களுக்கே இதுவெல்லாம் முரணானது.

என்னைக் கேட்டால், நன்மையும் தீமையும் எது என்பதைத் தீர்மானிப்பது இறைவனே. மதச்சார்பற்ற நாடுகளில் வசிக்கும்போது அதற்குரிய மரியாதையை நாம் கொடுக்கிறோம். அந்தந்த நாடுகளின் சட்டத்தில் முழுமையாக உடன்படவில்லை என்றாலும் அதற்கு உட்பட்டே நாம் வசிக்கிறோம். மது விற்பனை, தன்பாலின திருமணம் முதலானவற்றில் எனக்கு உடன்பாடு இல்லைதான். அதற்காக என்னை யாரேனும் விமர்சித்தால், சுவிசேஷ கிறிஸ்தவர்கள் கருக்கலைப்பைக் கொலையாகக் கருதுகிறார்கள்; ஆனால் உச்சநீதிமன்றம் அதை அனுமதிக்கிறது. அதற்காக அவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேறச் சொல்வீர்களா? அல்லது, அதன் காரணமாக அவர்கள் மற்றவர்களின் அளவுக்கு அமெரிக்கர்கள் இல்லை என்று வாதிடுவீர்களா என்பேன். ஆக, ஒரு நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதில் நமக்கு ஆட்சேபனையில்லை. அதற்காக அவற்றின் விழுமியங்களையெல்லாம் முழுவதுமாக ஏற்றுதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமுமில்லை. கருத்து மாறுபடுவதாலேயே நாம் அமெரிக்கர்களில்லை என்று ஆகிவிடாது.

தாராளவாதக் கருத்தியலை முஸ்லிம்கள் தழுவ வேண்டியதில்லை. தாராளவாதச் சமூகத்தில் நாம் வசிக்கிறோம். அவ்வளவுதான். வாழ் வாழவிடு என்பதே நாம் பொதுச் சமூகத்திடம் சொல்ல விரும்புவது. மதச்சார்பற்ற அரசுகள் மதச் சுதந்திரத்தையும், தனிமனித உரிமையையும் உறுதியளிக்கிறதென்றால் நாம் நமது உரிமைகளைக் கடைப்பிடிப்பதில் யாருக்கு என்ன பிரச்னை? ஆனால், ஹிஜாப் என்று வரும்போது பிரச்னையாக்குகிறார்கள். கொதித்து எழுகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பா முழுவதும் பிரதமர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேலும் பலரும் நிகாபை கிண்டல் செய்தார்கள். அஞ்சல் பெட்டி என்று நக்கலடித்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். நிகாப் அணிந்தோர் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்புண்டு என்று அலறினார்கள் வெள்ளையினவாதிகள். அது மட்டுமா? முகத்தை மூடினால் எப்படி ஒரு சமூகம் வளரும், சமூகம் எப்படி இயங்கும், பொருளாதாரச் செயல்பாடுகளையெல்லாம் எப்படி அமைத்துக்கொள்ள முடியும், முகத்தை மூடிக்கொண்டு மற்றவர்களிடம் பரஸ்பர கருத்துப் பரிமாற்றம் எப்படி சாத்தியம் முதலான கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள். கொரோனா தொற்று பரவியதும் எல்லாரும் ஆண்டுக் கணக்கில் ‘நிகாப்’ (முகக்கவசம்) அணியும் சூழல் ஏற்பட்டது. நிகாபை ஏளனம் செய்தவர்கள் இன்று இறைவனின் நாட்டத்தால் இவை அனைத்தையும் நிகாப் அணிந்துகொண்டு செய்து வருகிறார்கள்.

இதுவரை, நிகாப் விவகாரம் எப்படி காலனியத்துடனும், அதன் எச்சங்களுடனும் தொடர்புடையது என்பதையும், மதச்சார்பின்மைவாதமும் தாராளவாதமும் இவ்விஷயத்தில் எப்படி தொழிற்படுகிறது என்பதையும் நாம் பார்த்தோம். நாம் புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பரிமாணம் உள்ளது.

முஸ்லிம் பெண்களின் மீட்பர்களா வெள்ளையர்கள்?

வெள்ளையினவாதிகள் தம் பண்பாட்டையும் விழுமியங்களையும் உயர்வானவை எனக் கருதுவதுடன், அவற்றை மற்றவர்கள் மீது திணிப்பதில் முனைப்புக் காட்டுகின்றனர். பகிரங்கமாகவோ மறைமுகமாகவோ அவர்களின் குறிக்கோளை அவர்கள் வெளிப்படுத்தியே வருகின்றனர். உயர்வான வாழ்க்கைமுறை தங்களிடமே உள்ளது என்று கருதும் இவர்கள், நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ எங்களின் மார்க்கத்தை உங்களின் மீது திணிப்போம், அதுதான் உங்களின் வாழ்க்கைமுறையைவிட மேலானது, உங்களுக்கும் நல்லது என்கிறார்கள்.

மேற்குலக காலனியவாதிகள் ஆஃப்ரிக்காவையும் இந்தியாவையும் ஆக்கிரமித்தபோதும், ஆஃப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் குண்டுமழைப் பொழிந்தபோதும் தூலமாக அவர்களின் இந்த மமதை வெளிப்பட்டது. ஜனநாயகத்தை நிலைநாட்டவும், அங்குள்ள மக்களை நாகரிகப்படுத்தவுமே அங்கே குண்டு வீசுகிறோம் என்றார்கள். உண்மையைச் சொன்னால், 80களில் முஸ்லிம் நாடுகளை ஆட்சி செய்த சர்வாதிகாரத்தைவிட இவர்களின் ஜனநாயகம் படுமோசமானதாகவும், ஒட்டுமொத்த நாட்டையும் சீரழிப்பதுடன், மக்களையும் நாட்டின் கட்டமைப்புகளையும் அழிப்பதாகவும் அமைந்தது. இன்று ஆஃப்கானிஸ்தான் மக்கள் திண்டாடுவதற்கு காரண கர்த்தாக்கள் இவர்கள்தானே?

இவர்களின் இந்த மீட்பர் மனநிலை (savior mentality) இப்போதைவிட 150 ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்தவம் கோலோச்சிய சமயம், இன்னும் துலக்கமாக வெளிப்பட்டது. அப்போது ஆஃப்ரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் மத்திய கிழக்குக்கும் ஏன் படையெடுக்கிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் கொள்ளையடிக்கவோ பாலியல் வன்முறையில் ஈடுபடவோ வேண்டியதில்லைதான். ஆனால், கிறிஸ்தவத்தைப் பரப்பவும், அந்த மக்களை நாகரிகப்படுத்தவும், அவர்களின் பிற்போக்குத்தனத்திலிருந்து அவர்களை மீட்கவுமே அங்கே செல்ல வேண்டியிருக்கிறது என்றார்கள். அது வெள்ளையர்களின் கடமை (white man’s burden) என்று சொல்லிக்கொண்டார்கள்.

முஸ்லிம்களின் கலாச்சாரமும் மதமும் அதனளவிலேயே மோசமானது, அடக்குமுறையானது என்று கருதும் இவர்கள், அவற்றிலிருந்து முஸ்லிம் பெண்களைப் பாதுகாக்கும் மீட்பராகத் தங்களை எண்ணிக்கொள்கிறார்கள். முஸ்லிம் பெண்களை ஹிஜாபிலிருந்து மீட்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணவோட்டமும் இந்தப் பின்னணியிலிருந்தே தோற்றம் பெறுகிறது. இந்த இடத்தில் ஒன்றைக் கவனியுங்கள். இஸ்லாம் அடக்குமுறையானது அல்லது ஹிஜாப் அடக்குமுறையானது என்று தீர்மானிப்பது யார்? முஸ்லிம்களா? முஸ்லிம் பெண்களா? இல்லை. அதையும் வெள்ளையர்களே தீர்மானிக்கிறார்கள். அதிலிருந்து காக்கும் பொறுப்பும் தங்களுக்கு இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். மொத்தத்தில், வாதியும் அவர்கள்தான், நீதிபதியும் அவர்கள்தான், தண்டனையை நிறைவேற்றுவதும் அவர்கள்தான்!

ஹிஜாப் ஒடுக்குமுறையானது எனும் பொதுக் கருத்து இவர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் ஒரு அமெரிக்க அல்லது மற்ற மேற்கத்திய பொதுப்புத்தி ஹிஜாப் அணிந்த பெண்ணை ஒடுக்கப்பட்டவள் என்றே நோக்குகிறது. அது மிகவும் வலுவாக அவர்களின் சிந்தனையில் வேரூன்றியிருக்கிறது. அதனால் அந்தப் பெண்களை தாங்களே பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணவோட்டமும் அவர்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. முஸ்லிம் பெண்கள் மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பதாகக்கூட சிலர் பகிரங்கமாகக் கருத்துரைக்கிறார்கள். முஸ்லிம் பெண்களுக்கு எது நல்லது என்பதை அவர்களைவிட நாங்களே அறிவோம் என்று அவர்கள் அபிப்ராயம் கொள்கிறார்கள். இதுவொரு அப்பட்டமான மமதையின் வெளிப்பாடு அல்லவா? முஸ்லிம் பெண்களை ஆற்றல்படுத்துவதாகச் (empowering) சொல்லிக்கொண்டே அவர்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காதது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

உலகப் போர்களுக்குப் பின், சைக்ஸ் – பிகோட் ஒப்பந்தத்துக்குப் பின், கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளின் நேரடி காலனித்துவம் ஆசியா, ஆஃப்ரிக்கா என எல்லா இடங்களிலும் முடிவுக்கு வந்ததை நாம் அறிவோம். வெள்ளையர்கள் வெளியேறினாலும் அந்தந்த நாடுகளில் இருந்த ஆளும் வர்க்கம் அவர்களை எல்லா விதத்திலும் பின்பற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. தோலின் நிறத்தைத் தவிர, மொழி, கலாச்சார அடையாளம் என அனைத்தும் காலனிய உருவாக்கமாக இருந்தன. ஹிஜாப் வழக்கம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

1960களில், 70களில் எகிப்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நடுத்தர மக்களிடமும் உயர் வர்க்கத்தினரிடமும் ஹிஜாப் வழக்கம் அரிதாகிப்போனது. அவர்களுக்கு முந்தைய தலைமுறையினர் அவ்வாறு இல்லை. 1930களில் இந்தியாவில் வசித்த என் பாட்டி சொல்வார், உயர்குடிப் பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறும்போது அவர்களுக்கென்று ஒருவித பிரத்யேக வாகனம் இருக்கும் என்று. 1960களில் என் தாய் தந்தையர் கராச்சி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருந்தார்கள். அந்தச் சமயத்தில் அங்கே ஹிஜாபிகளைக் காண்பது அரிது என்றே சொல்லப்படுகிறது. 1940களில், 50களில் வெளியான எகிப்து படங்களைப் பார்த்தீர்களென்றால் அது ஹாலிவுட் படமா என்று குழம்பிப் போவீர்கள். அந்த அளவுக்கு இஸ்லாமிய நடைமுறை பின்னுக்குத் தள்ளப்பட்டு காலனிய மதிப்பீடு உள்வாங்கப்பட்டிருக்கும்.

ஆனால், அந்த காலகட்டத்துக்குப் பிறகு ஓர் அசுர மாற்றம் நிகழ்ந்தது. அதை யாரும் ஊகித்திருக்கவில்லை. 1980களுக்குப் பிற்பகுதியில், 90களின் முற்பகுதியில் முஸ்லிம் உலகில் இஸ்லாமிய அடையாளம் எழுச்சி பெற்றது. இஸ்லாமிய விழிப்புணர்வு கூடியது. அந்தப் பின்னணியில் ஹிஜாப் முறையும் மீளெழுச்சி பெற்றது. 90களுக்குப் பிறகு எகிப்திலும் பாகிஸ்தானிலும் இன்ன பிற பகுதிகளிலும் கிடுகிடுவென மாற்றம் ஏற்பட்டது. தமது பாரம்பரியத்துக்கு மீண்டும் திரும்புவதன் மூலம் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகக் கலகம் மேற்கொண்டது புதிய தலைமுறை. சமய அடிப்படையையும் தாண்டி, தமது அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் ஆர்வமும், அதன் மீது பெருமிதமும் அவர்களுக்கு உண்டாகியிருந்தது. இது மேற்கத்தியர்களைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.

அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, அதை அங்குள்ள பெண்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் மீட்பதற்கான போர் என்று சூளுரைத்தார் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா. குறிப்பாக, தங்களின் ஆக்கிரமிப்புக்கான நியாயத்தை இவர்கள் புர்காவில் தேடினர். அங்கே பல்லாண்டுகளாக குண்டு வீசி ஏராளமான சிவிலியன்களைக் கொல்வது, குழந்தைகளையும் பெண்களையும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது என அட்டூழியம் செய்ததோடு, தம் பண்பாட்டு விழுமியங்களையும் ஆஃப்கானியர்களின் மீது திணித்தார்கள். இதுதான் இவர்கள் சொல்லும் “விடுதலை”. இப்படியெல்லாம் அராஜகம் செய்தும் இவர்களால் அம்மக்களை இவர்கள் நினைத்ததுபோல் ஆட்டுவிக்க முடியவில்லை. இப்போதும் அங்குள்ள முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

தற்போதைய பிரச்னையை ஹிஜாப் அணிவதற்கான உரிமை தொடர்பான விஷயமாக மட்டும் நாம் சுருக்கிப் புரிந்துகொள்ளக் கூடாது. ஆதிக்கவாதிகள் தங்களின் நாகரிகமே ஆதிக்கம் செலுத்த வல்லது என்றும், தாங்களே பலம்மிக்கவர்கள் என்றும் நிறுவ நினைக்கிறார்கள். முஸ்லிம்களை தங்களுக்குக் கீழானவர்கள், இரண்டாந்தரக் குடிகள் என நிறுவ முனைகிறார்கள். அதற்காக அவர்கள் இஸ்லாமிய அடையாளங்களைக் குறிவைத்து ஒடுக்குகிறார்கள். அந்த அடிப்படையில் இப்போது அவர்களின் தெரிவாக ஹிஜாப் உள்ளது. பல பண்பாடுகளில் தலையை மறைக்கும் வழக்கம் இருந்தாலும் தற்போது இஸ்லாமியப் பண்பாடு அளவுக்குப் பரவலாக அது இல்லை எனலாம். கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் முக்காடு அணிவார்கள். அவர்கள் மொத்தம் எத்தனை விழுக்காடு? மிகக் குறைவு.

ஹிஜாபை வலுக்கட்டாயமாகப் பிடுங்குவதற்கு அவர்கள் சொல்லும் நியாயம் “நாங்கள் முஸ்லிம் பெண்களைப் பாதுகாக்க” இவ்வாறு செய்கிறோம் என்பது. சுதந்திரமோ சுயசிந்தனையோ இல்லாத முஸ்லிம் பெண்களின் நலனுக்காகவே இதைச் செய்கிறோம் என்பதாக பாசாங்கு செய்கிறார்கள். இவர்களிடம் நாம் கேட்கிறோம், உங்களின் சகோதரிகளும் பெண் பிள்ளைகளும் உங்களுடைய கலாச்சார மதிப்பீட்டுக்குத் தக்க மூளைச் சலவை செய்யப்படவில்லையா? அடுத்தடுத்த தலைமுறைக்கு அது கடத்தப்படவில்லையா? நீங்கள் சரியாகவும் சமநிலையோடும் இருப்பதாக யார் உத்தரவாதமளித்தது? நீங்கள் எங்கள் பிள்ளைகளை நாங்கள் மூளைச் சலவை செய்திருப்பதாகப் புகார் தெரிவித்தால், அதே குற்றச்சாட்டு உங்களுக்கும் பொருந்தும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

தன்முரண்பாடு!

பண்டைய எகிப்து, பாரசீகம் உள்ளிட்ட எல்லா நாகரிகத்திலும் பெண்கள் தம் சமூக அந்தஸ்தை வெளிக்காட்ட தலை முக்காடு அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. யூத, கிறிஸ்தவ மதச் சட்டங்களிலும் இருந்திருக்கிறது. அது சுமார் ஒரு நூற்றாண்டு முன்புவரை கடைப்பிடிக்கப்பட்டும் வந்திருக்கிறது. யூதர்களின் ஹலாக்காவில் (சட்டம்) வயது வந்த பெண்கள் தம் தலை முடியை மறைக்க வேண்டும் என்ற வழிகாட்டல் இருந்ததன் விளைவாகவே இன்றுகூட தீவிர மதப்பற்று கொண்ட யூதர்களிடையே அந்த வழக்கம் காணப்படுகிறது. பைபிளின் புதிய ஏற்பாட்டில் பல வசனங்கள் பெண்கள் தலை முடியை மறைக்கும்படி வலியுறுத்துகிறது. உண்மை இவ்வாறிருக்க, இன்றைக்கு இவர்கள் முஸ்லிம்களை விமர்சிப்பது நகைமுரணாக இருக்கிறது.

ஆஃப்ரிக்கர்களும் செவ்விந்தியர்களும் அரைகுறையாக ஆடை அணிந்திருப்பதாக அவர்களை ஆக்கிரமித்த சமயத்தில் வெள்ளையர்கள் சொன்னார்கள். நாங்கள்தான் உடலை மூடி நாகரிகமாக ஆடை உடுத்தியிருக்கிறோம் என்றார்கள். அதே நபர்கள் தற்போது ஆடை குறித்து இதற்கு மாறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது தனிக்கதை.

ஹிஜாப் தடை விவகாரத்தை சரியாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதைத் தாண்டி, ஆதிக்கவாதிகளின் படுமோசமான ஆட்டம் அது. ஆதிக்கப் பண்பாட்டை முஸ்லிம்கள் மீது திணித்து, இஸ்லாமிய அடையாளங்களை அழிக்கும் நாசகர செயல்திட்டத்தின் ஒரு பகுதி.

நாம் நமது அடையாளங்களை உறுதியேற்போம். ஆதிக்க சக்திகளுக்குப் பணிய மறுப்போம்!

(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

2 Thoughts to “ஹிஜாப்: ஆதிக்க எதிர்ப்புக் குறியீடு – யாசிர் காழி”

  1. […] முந்தைய பகுதியில் ஹிஜாப் சர்ச்சையாக்கப்படுவதற்குப் பின்னுள்ள அரசியலையும், வரலாற்றுப் பின்புலத்தையும் விவாதித்தோம். இந்தப் பகுதியில் ஹிஜாப் குறித்து குர்ஆனிய ஒளியில் அணுகவுள்ளோம். ஓர் ஆண் ஹிஜாப் பற்றியெல்லாம் பேசலாமா, பெண்கள்தானே பேச வேண்டும் என்றெல்லாம் சமீப காலமாக ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். அதுவொருபுறம் இருக்கட்டும். என் பாலினத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் என் உரையின் உள்ளடக்கத்தைக் கேளுங்கள். அதில் நீங்கள் முரண்படும் புள்ளிகள் இருந்தால் தாராளமாக அதுகுறித்து என்னுடன் உரையாடலாம். […]

  2. […] முந்தைய பகுதியில் ஹிஜாப் சர்ச்சையாக்கப்படுவதற்குப் பின்னுள்ள அரசியலையும், வரலாற்றுப் பின்புலத்தையும் விவாதித்தோம். இந்தப் பகுதியில் ஹிஜாப் குறித்து குர்ஆனிய ஒளியில் அணுகவுள்ளோம். ஓர் ஆண் ஹிஜாப் பற்றியெல்லாம் பேசலாமா, பெண்கள்தானே பேச வேண்டும் என்றெல்லாம் சமீப காலமாக ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். அதுவொருபுறம் இருக்கட்டும். என் பாலினத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் என் உரையின் உள்ளடக்கத்தைக் கேளுங்கள். அதில் நீங்கள் முரண்படும் புள்ளிகள் இருந்தால் தாராளமாக அதுகுறித்து என்னுடன் உரையாடலாம். […]

Leave a Comment