புத்தக மனிதர் சுஐபு காக்கா
காயல்பட்டினத்தைச் சேர்ந்த மறைந்த எழுத்தாளர் சுஐபு காக்கா என்ற கே.எஸ்.முஹம்மது சுஐபின் (9.5.1959 – 12.10.2021) தனிப்பட்ட நூல் சேகரத்தில் உள்ள புனைவு, அபுனைவு, பழைய சஞ்சிகைகளின் கட்டடுக்குகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான நூல்கள் காயல்பட்டினம் அரசு நூலகத்தில் அவரது குடும்பத்தினரால் சேர்க்கப்பட்டன. இதில் அவரின் இறப்பிற்குப் பிறகான நாட்களில் வீடு வந்து சேர்ந்த புதிய நூல்களும் அடக்கம்.
புகுமுக வகுப்பு வரை படித்திருந்த சுஐபு காக்கா, வங்கம், ஆந்திரம், வளைகுடா என 2001ம் ஆண்டு வரை பணியாற்றியவர். நிரந்தரமாகி விட்ட இதய நோய், நீரிழிவினால் ஊரிலேயே தங்கிவிட்டார். நாளிதழ், பருவ இதழ்களுக்குக் காத்திரமான வாசகர் கடிதம் எழுதுவதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் சுஐபு காக்கா. அவரது இந்த வாசகக் கடிதங்களை ‘கடித இலக்கியம்‘ எனத் தனியே வகைப்படுத்தும் அளவிற்கு தகவலும் தர்க்கமும் விரவிய செறிவுமிக்கவை. உள்ளூர் இணையதளங்களின் வருகைக்குப் பிறகே அவரின் எழுத்தாற்றல் ஊராரால் அறியப்பட்டது.
தீவிர அதிமுககாரரான அவரின் திமுக எதிர்ப்புகூட கண்மூடித்தனமாகவெல்லாம் இல்லாமல் தரவுகள் அடிப்படையில்தான் இருக்கும். ஒளிப்பட நினைவு எனப்படும் நினைவாற்றலைக் கொண்ட அவர் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த சமூக அரசியல் நிகழ்வுகளை துல்லியம் பிறழாமல் மீட்டக் கூடியவர். அரசியல் நிகழ்வுகள் என்றில்லாமல், என்றோ வாசித்த புனைவுகளின் வரிகளையும் பாத்திரங்களையும் நினைவிலிருந்து எடுத்து எழுதுவதில் வல்லவர்.
எட்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இதயக்குழாய் அடைப்பினால் இறப்பின் வாசல் வரை சென்று மீண்டார். அச்சமயம் மதுரையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அபாய கட்டத்தில் இருக்கும்போதும் விடாப்படியாக புதிய புத்தகங்களை வாங்கி வர வைத்து வாசித்து அதனாலேயே விரைந்தும் குணமடைந்தார்.
மனைவியின் ஆட்சேபனைகளைத் தவிர்க்க தனது பிறந்த இல்ல முகவரி போட்டு அவர் புத்தகங்கள் வாங்கிக் கொண்டிருந்தது ரொம்ப நாள் வரைக்கும் அவரின் மனைவி வீட்டாரால் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் இறந்த சில தினங்களில் அப்படியான புத்தக சிப்பம் பெற்றோர் வீட்டு முகவரிக்கு வந்து சேர்ந்திருக்கின்றது.
இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் வரை இலங்கையிலிருந்து வெளியான நூலின் பெயரைப் பற்றிய பகடியொன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார். அதுதான் அவரது கடைசிப் பதிவும்கூட. அவர் இறுதி மூச்சை விட்ட சமயம் அவரின் தலைமாட்டில் இருபது புத்தகங்கள் வரை இருந்திருக்கின்றன.
அவரின் இறப்பிற்குப் பிறகு அந்த நூல் சேகரங்களை நிறைய நண்பர்களும் தனியார் நூலகங்களும் கேட்டு வற்புறுத்தி வந்தனர். அமெரிக்காவாழ் இந்தியரொருவர் சுஐபு காக்காவின் புத்தகங்களை அப்படியே விலைக்கு எடுத்துக் கொள்கிறேன் எனச் சொன்னார். மூத்த ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசனின் வழிகாட்டுதலின்படி சுஐபு காக்காவின் மொத்த நூல் சேகரம் அவர் மிகவும் நேசித்த காயல்பட்டினம் அரசு நூலகத்தில் சேர்க்கப்பட்டு அவரது பெயரிட்ட தனியடுக்கில் வைக்கப்படவுள்ளன.