கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (1)

Loading

இஸ்லாமிய அழைப்பாளரும், அலஸ்னா நிறுவனத்தின் நிறுவனருமான டேனியல் ஹகீகத்ஜூ, Tortured Minds: The Fire of Muslim Doubt எனும் கருப்பொருளில் வழங்கிய இணையவழிப் பாடநெறியின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவமே இந்தத் தொடர். முன்னதாக இந்தத் தளத்தில் பிரசுரமான இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் எனும் தொடரின் தொடர்ச்சியாக இது உள்ளது.

சிந்தனைச் சட்டகமும் அதன் கூறுகளும்

ஓர் ஒழுங்கமைந்த மொத்தத்துவச் சிந்தனைமுறையை சிந்தனைச் சட்டகம் (Paradigm) எனலாம். உலகக் கண்ணோட்டம் (World View) எனும் சொல்லாடலையும் இதற்கு நிகராகப் பயன்படுத்த முடியும் என்றாலும், அதை நான் தவிர்க்கிறேன். காரணம், இஸ்லாமிய உலகக் கண்ணோட்டம் என்று சொல்லும்போது நமது கண்ணோட்டம் பத்தோடு பதினொன்றாகிவிடும்.

‘உண்மை, விழுமியம் என்பன அவரவர் கண்ணோட்டத்துக்குத் தக்க மாறுபடும்; ஒரு தரப்பு கருத்து அடிப்படையான யதார்த்தமாய் ஆக முடியாது’ எனும் கண்ணோட்டவாதம் (Perspectivism) நம்மிடையே செல்வாக்கு செலுத்தி வருகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால், அல்லாஹ்தான் உலகைப் படைத்தான் என்பதோ, நபி (ஸல்) அவனது தூதர் என்பதோகூட ஒரு கண்ணோட்டமாக மட்டுமே சுருங்கிவிடும் அல்லவா? அதனால்தான் நான் சிந்தனைச் சட்டகம் என்ற சொல்லாடலைப் பரிந்துரைக்கிறேன்.

இஸ்லாம், நவீனத்துவம், சீனாவின் கன்ஃபூசியம், தென் அமெரிக்காவின் ஆஸ்டெக் போன்ற அனைத்தும் வெவ்வேறு சிந்தனைச் சட்டகங்களாகும். ஓர் இஸ்லாமியனாக நாம் மற்ற கருத்தியல்களின் நிலைப்பாடுகளுள் சிலவற்றில் உடன்படலாம் அல்லது முரண்படலாம். சில கருத்தியல்களை முற்றாக நிராகரிக்கவும் செய்யலாம். ஆனால், இஸ்லாமிய சிந்தனைச் சட்டகம்தான் உண்மையானது, சத்தியமானது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

சிந்தனைச் சட்டகத்தின் கூறுகள்:

  • இருப்பாய்வியல் (Ontology)
  • அறிவாய்வியல் (Epistemology)
  • நெறியியல் (Normativity)

இம்மூன்றும் சிந்தனைச் சட்டகத்தின் உள்ளடக்கங்களாகும். இவை குறித்து ரத்தினச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், உலகில் எவையெல்லாம் இருக்கின்றன, உலகம் எப்படி இயங்குகிறது போன்ற வினாக்களை ஆராய்வது இருப்பாய்வியல் எனப்படுகிறது. அறிவாய்வியல் என்பது, அறிவு என்றால் என்ன, அதன் மூலங்கள் எவை முதலானவற்றை ஆய்ந்தறியும் மெய்யியல் கிளை. எது சரி, எது தவறு, விழுமியம் அல்லது அறம் என்பது என்ன, எதைச் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது போன்ற வினாக்களுக்கு முகங்கொடுப்பது நெறியியல் எனப்படும்.

இவற்றை மனங்கொண்டு பின்வரும் விளக்கப் படத்தைப் பார்த்தால், நவீனத்துவத்தினுடைய, இஸ்லாத்தினுடைய சிந்தனைமுறையின் இயங்குதன்மை உங்களுக்குப் புரியலாம். இஸ்லாம், நவீனத்துவம் ஆகியவற்றின் சில பகுதிகள் பரஸ்பரம் ஒத்துப்போகக்கூடும். ஆனால், இரண்டு சிந்தனைச் சட்டகத்தையும் நாம் குழப்பிக்கொண்டால் சிக்கல் உருப்பெறும்.

நவீனத்துவ சிந்தனைச் சட்டகம்இஸ்லாமிய சிந்தனைச் சட்டகம்
இருப்பாய்வியல்எவையெல்லாம் இருக்கின்றன: பருப்பொருள், பிரபஞ்சம், பல்லண்டம், காலம், நாடுகள், எல்லைகள், பண மதிப்பு, இனம், பாலினம், குடியுரிமை, கணித எண்ணக்கருக்கள், தர்க்கம், மேலும் பல…எவையெல்லாம் இருக்கின்றன: அல்லாஹ், வானவர்கள், இறை வெளிப்பாடு, இறுதித் தீர்ப்பு நாள், விதி, சொர்க்கம், நரகம், ஜின், பரக்கத், காலம், மறைவான விஷயங்கள், நஃப்ஸ், ரூஹ், தர்க்க எண்ணக்கருக்கள், மேலும் பல…
அறிவாய்வியல்அறிவின் மூலம் என்பதாக நவீனத்துவம் முன்வைப்பவை: அறிவியல்முறை, அனுபவவாத அவதானம், ஐம்புலன்கள், கணிதவியல் பகுப்பாய்வு, தர்க்கவியல் சிந்தனை, உய்த்தறிதல், உளவியல், சமூகவியல், சுய அனுபவம்/உணர்வுகள், பரிணாமவாதக் கண்ணோட்டம், மேலும் பல…இஸ்லாம் முன்வைப்பவை: குர்ஆன், ஸுன்னா, இஜ்மா, கியாஸ், அறிவுசார் மரபு, அக்ல் (மனித அறிவு), புலன்கள், தர்க்கம் (மன்திக்), உள்ளுணர்வு, ஃபித்றா, மேலும் பல…
நெறியியல்சுதந்திரம், சமத்துவம், சகிப்புத்தன்மை, ஜனநாயகத் தேர்தல்கள் போன்ற தாராளவாத மதிப்பீடுகள் உள்ளிட்டவற்றை நவீனத்துவம் பூஜிக்கிறது.இறை வாக்குகள், ஷரீஆ, ஸுன்னா, இஜ்மா, சஹாபாவின் செயல்பாடுகள், உள்ளுணர்வு, இன்னும் பலவற்றை இஸ்லாமிய நெறியியல் ஆதாரமாகக் கொள்கிறது.
இஸ்லாம் vs. நவீனத்துவம்

ஒரு சிந்தனைச் சட்டகம் உங்கள் சிந்தனையை, உணர்வை, அறிவுக்கும் நெறிமுறைக்குமான உங்களது உரைகல்லை, உலகம் குறித்த உங்களது புரிதலை, சுயம்சார் புரிதலை எல்லாம் தீர்மானிப்பதாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம்மில் பலருக்கு இஸ்லாம் குறித்து குழப்பங்களும் சந்தேகங்களும் எழக் காரணமும் சிந்தனைச் சட்டகம் சார்ந்ததே. இதை சரியாக இனங்காணாததன் விளைவாகவே நவீனத்துவ முஸ்லிம்கள் தடம் புரள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இஸ்லாத்தின் விளிம்பில் நிற்பவர்கள். அதனால் சிலபோது நவீனத்துவக் கருத்துநிலையின் பக்கம் முழுமையாகச் சாய்ந்துவிடுவார்கள்.

மூஸா (அலை) கடலைப் பிளந்தது, ஈசா (அலை) உயிரோடு மேலுயர்த்தப்பட்டது, நபி (ஸல்) நிலவை இரு கூறாகப் பிளந்துக் காட்டியது முதலான அற்புதங்களை நவீனச் சட்டகத்தைக் கொண்டு ஒருவரால் புரிந்துகொள்ளவே முடியாது. அவையெல்லாம் அவருக்கு பிதற்றலாகத் தோன்றும். அறிவியல் ஆதாரம் கேட்பார்.

நெறியியலில் நவீனத்துவத்தை சார்ந்திருக்கும் ஒருவருக்கு ஹிஜாப் கட்டாயக் கடமை என்று சொன்னால் அது தவறென்று தோன்றும். திருமணத்துக்கு அப்பால் உடலுறவு வைத்துக்கொள்வதைத் தவறென்று சுட்டினால், அதுவெல்லாம் அவரவர் விருப்பம் சம்பந்தபட்டதுதானே என்று அவர் கேட்பார். இதற்கெல்லாம் காரணம், அவர் நவீனச் சட்டகத்தின் வழி சிந்திப்பதே. இஸ்லாமியச் சட்டகத்திலிருந்து சிந்தித்தால் அவருக்குக் குழப்பம் ஏதும் ஏற்படாது.

நவீனத்துவச் சட்டகத்திலிருந்து நாம் விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி முந்தைய பாடநெறியின் இறுதியில் பார்த்தோம். இஸ்லாமிய மரபில் நிலைக்கொண்டு, அதற்கு முரணானவற்றை விசாரணைக்குள்ளாக்குவதுடன், இஸ்லாத்தின் மேன்மையைக் கண்டடைந்து அதை மீள்நிறுவ முயல வேண்டும் என்று அதில் எடுத்துரைக்கப்பட்டது.

நவீன சீர்திருத்தவாதம்

முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் நவீன சீர்திருத்தவாதிகளை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒருசாரார், நவீனத்துவத்துக்கு ஏற்ப இஸ்லாத்தை முழுமையாக மாற்றியமைக்கக் கோருபவர்கள். மற்றொரு சாரார், நவீனக் கண்ணோட்டங்களை வரித்துக்கொண்டு அதற்குத் தோதுவாக இஸ்லாத்தை விளக்க முனைபவர்கள். பின்னவர்கள் இஸ்லாமிய மரபிலிருந்து சில கருவிகளைப் பெற்று நவீனத்துவ நிகழ்ச்சிநிரலுக்கு சேவையாற்றுபவர்கள். மகாஸித் அஷ்ஷரீஆ, இஸ்திஹ்சான், உர்ஃப் முதலானவற்றின் பெயரால் அதைச் செய்வார்கள்.

உதாரணத்துக்கு, சொத்துப் பங்கீட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம அளவு பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்று துனீசிய அரசு சமீபத்தில் சட்டம் இயற்றியது. இது நவீனத்துவ பாதிப்பின் விளைவுதான். சொத்தில் ஆண்களுக்கு இரு பங்கும், பெண்களுக்கு ஒரு பங்கும் வழங்கும்படி குர்ஆன் அறிவுறுத்துவது துனீசிய அரசுக்கு தவறாகவும், நியாயமற்றதாகவும் படுகிறது என்றால், சிக்கல் எங்கே உள்ளது என்று யோசியுங்கள்.

ஆக, இஸ்லாத்தை முழுமையாக நவீன மதிப்பீடுகளுக்குத் தக்க உருமாற்றுமாறு கோரும் முற்போக்கு முஸ்லிம்களும், இஸ்லாத்துக்கு நவீனத்துவ விளக்கமளிக்கும் இன்னொரு சாராரும் இஸ்லாமிய அறிவு மரபை உதாசீனப்படுத்துவோராகவே உள்ளார்கள். இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், நவீனத்துவ சிந்தனைச் சட்டகத்தை இவ்விருவருமே கேள்விக்குள்ளாக்க மாட்டார்கள். மாறாக, இஸ்லாத்தை நவீனப்படுத்த முனைவார்கள்.

நவீனச் சட்டகத்துக்கும் இஸ்லாமியச் சட்டகத்துக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த அம்சத்தை விளங்கவில்லை என்றால் நாமும் எளிதில் நவீனச் சிந்தனைகளுக்கு பலியாக நேரிடும். தற்காலத்தில் பலர் தன்னை அறியாமலேயே அதற்கு பலியாகியிருக்கிறார்கள். இஸ்லாம் என்று நினைத்து பல்வேறு நவீனக் கருத்துகளைத் தழுவியிருக்கிறார்கள். இதை அவர்களால் உணரக்கூட முடிவதில்லை.

இந்தப் பின்னணியில்தான் பெண்ணியவாதம் பலரின் சிந்தனையை ஆட்கொண்டுள்ளது. காலங்காலமாக ஆண்களெல்லாம் ஒன்றுசேர்ந்து பெண்களை ஒடுக்கி வந்திருக்கிறார்கள் எனும் கருதுகோள் பெண்ணியத்தின் ஆதாரமான கருத்து. இஸ்லாம் இதை ஏற்காது என்றாலும், முஸ்லிம் பெண்ணியவாதிகள் இஸ்லாமிய மூலாதாரங்களை பெண்ணியக் கண்ணோட்டத்தில் விளக்கப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆணாதிக்கத்தை இஸ்லாம் கண்டிப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆணாதிக்கம், பெண் வெறுப்பு போன்ற சொல்லாடல்களே சமீபத்திய உருவாக்கங்கள்தாம் என்பதோ, அவற்றின் வரலாற்றுப் பின்னணி மற்றும் குறிக்கோள்கள் பற்றியோ இவர்களுக்குப் போதிய தெளிவில்லை என்பதையே இது காட்டுகிறது.

தொடரும்..

(தொகுப்பும் மொழியாக்கமும்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

Leave a Comment