நூல் அறிமுகம் 

மதம் vs மதம்

Loading

மத ஒப்பாய்வுகள் துறையில் தேர்ந்தவொரு அறிஞர் என்ற வகையிலும், சமூகங்களின் வரலாற்றுப் பரிணாமத்தைப் பயின்று தேறியவொரு சமூகவியலாளர் என்றவகையிலும் அலீ ஷரீஅத்தி மதங்களின் வரலாறு பற்றி முன்வைத்த ஒரு மையமான கோட்பாடுதான் இந்நூலின் கருச்சாரம்.

மதம் Vs மதம்.

இதுதான் அக்கோட்பாடு. ஷரீஅத்தியின் பல்வேறு ஆக்கங்களிலும் இது மாறாமல் இடம்பெற்றிருப்பதைக் காண முடியும். இஸ்லாமியச் சமூகவியலுக்கு அவரளித்த காத்திரமானதொரு பங்களிப்பு இது.

வரலாற்றின் துவக்கத்திலிருந்தே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கு இடையில் ஓயாமல் நடந்துவரும் போராட்டத்தினை சமயவாதிகள் மதத்திற்கும் இறைமறுப்புக்கும் நடக்கும் ஒரு போராட்டமாக விளங்கி வைத்திருக்கின்றனர். மதத்தை நிராகரிக்கும் நாத்திகர்களோ, ‘மதம்’ என்பதே வெகுமக்களை மயக்கத்தில் ஆழ்த்திச் சுரண்டுவதற்காக மனிதகுல எதிரிகள் புனைந்துருவாக்கியவோர் ஒடுக்குமுறைக் கருவி என முற்றிலும் எதிர்மறையான தீர்மானத்தைக் கொண்டிருக்கின்றனர்.

14212696_1217480524960303_8561503265141831754_nஇவ்விருவகை புரிதல்களின் அடித்தளங்களையும் கலைத்துப் போடும் ஓர் பகுப்பாய்வினை அலீ ஷரீஅத்தி இந்நூலில் முன்வைக்கிறார். ‘குஃப்ர்’ எனும் சொல்லை இறைநிராகரிப்பு என்று புரிந்து கொள்ளும்போது பலரும் பொதுவாக ‘இறைவனின் இருப்பை நிராகரித்தல்’ என்ற அர்த்தத்தை மட்டுமே மனங்கொள்ளுவதால், அது ‘மதத்தை நிராகரித்தல்’ அல்லது ‘நாத்திகம்’ என்றாகிவிடுகிறது. இது துல்லியமற்றது என்பதை ஷரீஅத்தி மிகத் துலக்கமாக விளக்கப்படுத்துகிறார். சத்தியம்-அசத்தியம் என்று இரண்டு அணிகளில் நின்று மோதிக்கொண்டவர்களும் மதவாதிகளாகவே இருந்தனர் என்பதை அழுத்தமாக நினைவூட்டுவதன் மூலம், வரலாறு பற்றிய நமது புரிதலுக்குள் ஷரீஅத்தி ஒரு புது வெளிச்சம் பாய்ச்சுகிறார்.

ஆக இங்கு, மதமா அல்லது மதநிராகரிப்பா என்பதல்ல பிரச்சினை. மாறாக, எந்த மதம்? என்பதுவே பிரச்சினை என்று புரியவைக்கிறார். அதாவது, அசலில் இரண்டு வகை மதங்கள் இருந்து வந்திருக்கின்றன. ஒன்று இப்ராஹீமின் மதம். மற்றது நம்ரூதின் மதம்; ஒன்று மூஸாவின் மதம், மற்றது ஃபிர்அவ்னின் மதம். ஒன்று ஈஸாவின் மதம், மற்றது அவரைக் கொலை செய்யத் துடித்த யூத மதகுருமார்களின் மதம். ஒன்று முஹம்மதின் மதம், மற்றது அபூ லஹப், அபூ ஜஹ்ல், அபூ சுஃப்யான் ஆகியோரின் மதம். சுருக்கமாகக் கூறினால், ஒன்று புரட்சியின் மதம். மற்றது அநீதமான நடப்பு நிலையைச் சட்டப்பூர்வமாக்கும் மதம்.

எனில், இன்று இவ்விரண்டில் நாம் எதனைப் பின்பற்றுகிறோம்? மறுவகை மதத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்கள் யார்? இதற்கு விடை காண்பதுவே தீர்மானகரமானது. வரலாற்றின் வேறு சில கட்டங்களில், நாம் மேலே வருணித்தவாறு இருவகை மதங்கள் செயற்பட்டு வந்துள்ளமை அத்துணை வெளிப்படையாகத் தெரிவதில்லையே, அது ஏன்? அப்படியென்றால், ஷரீஅத்தியின் இக்கோட்பாடு அத்தகைய காலகட்டங்களுக்கு செல்லுபடியாக மாட்டாதா? இல்லை, வெளிப்படையில் மட்டும் அப்படித் தோன்றுகிறதா? எனில், அதற்குக் காரணம் என்ன?

இக்கேள்விகளுக்கு அலீ ஷரீஅத்தி அளிக்கும் பதில்கள் நம்முடைய வரலாற்று மனத்தைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்காமல் விடுவதில்லை. நம் மனதைச் சூழ்ந்து கவிழ்ந்திருக்கும் திரைகள் எல்லாம் அந்த உலுக்குதலில் உதிர்ந்து விழுவது நிச்சயம். ‘மதம் என்பது வெகுமக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் அபின்’ என்றால், இருவகை மதங்களுள் எதனைக் கருத்தில் கொண்டு இது மொழியப்படுகிறது? முதலில் இதை முழங்குபவர்கள் இருவகை மதங்கள் இருந்துவந்துள்ளன என்பதை உணர்ந்திருக்கிறார்களா? இல்லை என்கிறார் ஷரீஅத்தி.

இந்த அடிப்படை உண்மையை உணராத காரணத்தினால் தான், மேற்கூறிய கூற்றின் சொந்தக்காரர்கள் நம்ரூத், ஃபிர்அவன், அபூ ஜஹ்ல் ஆகியோரின் மதத்திற்குப் பொருந்தும் ஒரு கூற்றினை அதற்கு நேரெதிரான இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது ஆகியோரின் மதத்தையும் உள்ளடக்குவதாக பொதுமைப்படுத்தும் மடமையினுள் வீழுகின்றனர். இம்மடமையின் படுகுழியில் இருந்து மேலெழுந்து மீளுவதற்கான அறிவுநேர்மை கொண்டோரை நோக்கி வீசப்படும் உயிர்காக்கும் கயிறுதான் இந்நூல்.

யாரேனும் இருக்கிறீர்களா?!

Related posts

Leave a Comment