Uncategorized நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தமிழின் முதல் நாவல் கீழக்கரையிலிருந்து…!

Loading

(அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாடு கருத்தரங்க கட்டுரை)

“என்ன புதினம் இன்டைக்கு” என்று கேட்பது இலங்கை வடபகுதிக்காரரிடம் சர்வசாதாரணம். செய்தியைத்தான் ‘புதினம்’ என்பார்கள். தென்னிலங்கைக்காரர்களுக்கோ ‘புதினம்’ என்றால் புதினாக்கீரை நினைவில் வந்துவிடும்!

1876களில் இரண்டையுமே இணைப்பதுபோல் ‘புதினாலங்காரி’ என்றொரு வார இதழ் கொழும்பில் வெளியானது. இதற்கு நேனா மானா மரைக்காயர் என்பார் ஆசிரியராக இருந்தார். இவர் தமிழக முஸ்லிம். இப்படி, புதினத்திற்கு ஒரு பின்னணி இருக்க, இன்றைக்கு தமிழகத்திலும் சரி, இலங்கையிலும் சரி புதினம் என்பதை பெருங்கதையாகிய நாவலுக்கும் சூட்டி அழைக்கிறார்கள். ஆகவே, நாமும் நாவல் என்பதைப் புதினம் என்றழைத்து, தமிழுக்கு முதல் புதினம் எதுவாக அமையும் என்ற ஆய்வுக்குச் சில நிமிடங்களை ஒதுக்குவோம்.

அதற்கு முன்னோடியாக, பத்தொன்பதாம் நூற்றாண்டில் — அதாவது சுமார் 131 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து 1900ஆம் ஆண்டு பிறக்கும் வரையில் — வெளியான முதல் 7 நாவல்களைப் பட்டியலிட அனுமதியுங்கள்.

முதல் 07 நாவல்கள்

  • பிரதாப முதலியார் சரித்திரம் – 1876, 1879, மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
  • அசன்பே சரித்திரம் – 1885, சித்திலெப்பை மரக்காயர்.
  • சுகுண சுந்தரி -1887, வேதநாயகம் பிள்ளையின் 2ஆவது நாவல்
  • பிரேமகலாவதியம் – 1893, ஸூ. வை. குருஸ்வாமி சர்மா
  • மோகனாங்கி – 1895. தி. த. சரவண முத்துப்பிள்ளை (17ஆம் நூற்றாண்டு நாயக்கமன்னர்களின் வரலாற்றுக் கதை)
  • கமலாம்பாள் சரித்திரம் – 1893, 1896, பி.ஆர். ராஜம் அய்யர் என்கிற சிவசுப்ரமண்யம்
  • பத்மாவதி சரித்திரம் – 1898, அ. மாதவையா

இந்த ஏழிலும் கூட, பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் மூன்றையும் பற்றியே அதிகமாக அலசப்படுமேயொழிய எஞ்சிய நான்கையுமல்ல. அதுமட்டுமல்ல, பிரதாப முதலியார் சரித்திரத்தை நாவல் இலக்கணப் பண்புக்குள் அடக்க முடியாது என்று வாதிட்டு கமலாம்பாள் சரித்திரத்தை முன்னிலைப்படுத்துவோரும் உண்டு.

“மேற்கூறப்பட்ட ஏழில் பலவும் வெறுமனே பொழுதுபோக்கு நாவல்களாக அமையாமற் சமுதாய உணர்வுகொண்டனவாக அமைந்திருந்தன. வேதநாயகம்பிள்ளை, ராஜம் அய்யர், அ. மாதவையா ஆகியோரது நாவல்களில் சமுதாயச் சீர்திருத்த நோக்கு மேலோங்கி நிற்கிறது” என இலங்கைப் பேராசிரியர் க. அருணாசலம், தமது தமிழ் வரலாற்று நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் நூலில் பக் 15இல் குறிப்பிட்டுள்ளார். (வெளியீடு, சென்னை — கொழும்பு குமரன் பதிப்பகம்.)

அதே பேராசிரியர், பக். 41-இல், “பிரதாப முதலியார் சரித்திரம் வெளியான ஆண்டு எது என்பது பற்றி ஒருமித்த கருத்து நிலவவில்லை. ஒரு சாரார் 1876ஆம் ஆண்டு என்பர். மறுசாரார் 1879ஆம் ஆண்டு என்பர். 1876ஆம் ஆண்டே சரியானதெனக் கொண்டு, 1977இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையினர் தமிழ் நாவல் நூற்றாண்டு விழா நடத்தியுள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல, கமலாம்பாள் சரித்திரம் வெளியான ஆண்டிலும் ஒரு கருத்து மயக்கம் உள்ளது. முதலில், அந்நாவல் 1893இல் தொடர்கதையாக 2ஆண்டுகள் விவேக சிந்தாமணி மாத இதழில் வெளியாயிற்று. பின் நூல் வடிவம் பெற்றது 1896இல். இதற்கு ஆதாரக் குறிப்பு டாக்டர் இரா. மோகன் என்பாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 1989இல் மணி வாசகர் பதிப்பகம் வெளியிட்ட நாவல் வளர்ச்சி நூல். அப்படியானால் 1893 என்பதா அல்லது 1896 என்பதா? பலரும் நூல் வடிவ ஆண்டையே குறிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தமிழ்நாட்டவர் இன்னும் சரியாகக் கலந்துரையாடி மகிழாத அசன்பே சரித்திரம் 2ஆவது நாவல் என்பதில் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் அரசோச்சுகிறது. இந்தியப் பூர்வீகமும், இலங்கையைச் சேர்ந்தவருமான சித்தி லெப்பை மரக்காயரின் கைவண்ணத்தில் 1885இல் இலங்கையில் முதல் பதிப்பு கண்டு, பின் சென்னையில் 1890இல் 2ஆம் பதிப்பும் கண்ட அந்நாவல், 1974இல் திருச்சி இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தினரால் 3ஆம் பதிப்பும் கண்டது.

இப்பொழுது புதியதொரு வெளிச்சம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக இஸ்லாமியத் தமிழ்த்துறை தலைவர் முனைவர் பீ.மு. அஜ்மல்கான், முனைவர் அப்சலுல் உலமா தைக்கா சுஐபு ஆகிய இருவரும் ஆய்ந்து இன்னொரு புதினம்தான் முதலாவதாகும் என வெளிச்சமிட்டுள்ளனர். என்றாலும், அத்தகவல்கள் மின்மினிகளாகத்தான் ஓர் எல்லைக்குள் நின்று ஒளிசிந்திக்கொண்டிருக்கின்றன. அதனை நன்றாகவே பளிச்சிடச் செய்வதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம்.

கீழக்கரையின் புகழ்பெற்ற மைந்தரொருவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் — 200 ஆண்டுகளுக்கு முன் — மகிமை மிகு மகனாக இலங்கையிலும் கருதப்பட்டார். (ஹி.1232/1816இல் பிறப்பு) அவரே அறிஞர் பெருமகனார், ஆன்மிகசீலர், இலக்கியச் செல்வர், கவிஞர் இமாமுல் அரூஸ் அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள். அறபு, பார்ஸி, உர்தூ, தமிழ் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த அவருக்கு அன்னை மொழி அமுதான தமிழே!

அதே நேரத்தில், தமிழகத்தில் தமிழ்ப் பேசத் தெரிந்து, எழுதப்படிக்கத் தெரியாதிருந்த பல நூறு முஸ்லிம் பாமரர்களும் அறிஞர்களும் ஆலிம்களும் அல்குர்ஆனின் மொழியான அறபுவில் அற்புதமான ஆற்றலைப் பெற்றிருந்தனர்.

அறபுத் தமிழ் (ARWI)

இவர்களுக்குத் தாய்மொழியாம் தமிழ் மொழி இன்பத்தை அள்ளி வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அறபுத் தமிழ் (ARWI) என்றொரு மொழியாக்கத்தை உருவகப்படுத்தினார். அதாவது, அறபு லிபியில் அன்னைத் தமிழ் அறிமுகமானது! தமிழை மேம்படுத்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் கண்ட அற்புதமான வழிமுறை! அதன் வாயிலாக, தமிழ் ஆன்மிக நூல்களும் கவிதை ஆக்கங்களும், இலக்கியங்களும் அவரால் உருவாக்கப்பட்டன. மாபெரும் ஆக்கங்களாக 82 நூல்களை உருவாக்கினார் என்பதும், சிறியவையாக 27ஆம், அச்சாகாமல் இருக்கும் கையெழுத்துப் பிரதிகள் நூற்றுக்கும் மேலே என்பதும் பதிவுகள். இத்தகையவர் புதினம் (நாவல்) ஒன்றிலும் கைவைத்துக் களம் கண்டார்கள்! ஒன்னரை நூற்றாண்டுக்கு ஓராண்டு குறைய — அதாவது 149 ஆண்டுகளுக்கு முன், 1858இல் அந்த அற்புதம் விளைந்தது.

இதோ… அந்நூலின் வாயிலாக மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் பேசுகிறார்கள்.

கடந்த காலங்களின் நிகழ்ச்சிகளாக அறிஞர்களால் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வரலாறுகள் மிகப்பல. அவற்றில் தாமிரப்பட்டணம் வரலாறு ஒன்றாகும். இந்த அதிசயப் பட்டணத்தைப் பற்றி பாரஸீக வாசியாகிய பாகீர் யஸீது இபுனு மாலிக் கித்தாய்யி என்பவர் தொகுத்திருந்ததை தமிழ்கூறும் மக்கள் அறிவான் வேண்டி தமிழாக்கினோம். இச்சரித்திரத்தைப் படிக்கும் மாந்தர் சிந்திப்பார்களானால் இறைவனின் எல்லையற்ற சக்திக்கு அத்தாட்சியைக் காணுவார்கள். காலங்கள்தோறும் நிலமெங்கும் வாழும் மனிதர்கள் அபூர்வ நாகரிகங்களைப் படைப்பது நிகழ்ந்து வருகிறது. நிலங்களை ஆட்சி புரியும் அரசர்களும் மக்களும் கால மாறுதல்களால் மாண்டு மடிகின்றனர். அவர்கள் நிர்மாணித்த கோட்டை கொத்தளங்களும் மாடமாளிகைகளும் இடிந்து பொடிந்து போகின்றன. ஆகவே, அடுத்த தலைமுறையினரும், பிற்காலத்தவரும் கடு தெளிவான் வேண்டி அவைகளைப் பற்றி பேசுவதில் பொருத்தம் இருக்கிறது. ஆகையால்தான், ‘மதீனத்துந் நுஹாஸ்-தாமிரப்பட்டணம்’ என்கின்ற வரலாற்றைச் செய்யுள்களாக இருந்ததை தமிழில் வசனமாக்கித் தரப்படுகிறது.

மேற்கண்ட உரையில் கடைசியாகக் காணப்படும் தமிழில் வசனமாக்கித் தரப்படுகிறது என்ற வார்த்தைகள் உண்மையில் அறபுத் தமிழையே (ARWI) சுட்டி நிற்கிறது. ஏற்கெனவே குறித்தபடி, அறபுப் பாண்டித்தியம் மட்டும் பெற்றிருந்த தமிழ்ப் பேசுவோருக்கு அறபுத் தமிழ் லிபியில் இஸ்லாமிய நாவலொன்றை அளித்திடும் கைவண்ணம் நடந்துள்ளது.

இதுபற்றிய ஒரு சிறு குறிப்பு முதன்முதலில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியத் தமிழியல் துறைத் தலைவரான முலைவர் பீ.மு. அஜ்மல்கான் அவர்களது, 1985ஆம் ஆண்டு வெளியீடான, ‘தமிழகத்தில் முல்லிம்கள்’ நூலின் 79ஆம் பக்கத்தில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது:

அசன்பே சரித்திரம் என்னும் தமிழ் நாவலை எழுதிய சித்திலெப்பை அவர்களே முதல் நாவலாசிரியர் என்று சில ஆண்டுகளுக்கு முன்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது, அதற்கு முன்பாகவே. ‘தாமிரப்பட்டணம்’ நாவல் எழுதப்பட்டுவிட்டது. ஆகையால், அதுவே முதல் நாவல் எனவும், தமிழ் மொழியின் முதல் நாவலாசிரியர் மாப்பிள்ளை ஆலிம் அவர்களே எனவும் உறுதியாகிறது. அறபி லிபியில் எழுதப்பட்டாலும் அந்நாவலின் மொழி தமிழே ஆகும்.

முனைவர் அஜ்மல்கான் மேற்படி நூலில் மேற்கொண்டிருந்த ஆய்வு வேறாக இருந்ததால் நாவல் பற்றியத் தகவல் நாலைந்து வரிகளில் முடிந்துபோனது. எனினும், அப்சலுல் உலமா முனைவர் தைக்கா சுஐபு ஆலிம் அவர்கள் விரிவான குறிப்புகளைப் பதித்துள்ளார். இப்பெயருக்குரியவர், கீர்த்த்திமிகு ‘கீழக்கரை மைந்தர். தமிழகத்திலே நூற்றாண்டு காலமாக ஒரு சிறப்புக் கோத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிற தைக்கா கோத்திரக் குடும்பத்தின் இன்றைய தலைமகனார், ஞான வழிகாட்டி, பொதுச் சேவையாளர், அத்துடன் சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் கொண்ட இலக்கியவாதி. அவரது 824 பக்க ‘சரந்தீபிலும், தமிழகத்திலும் அறபு, அறபுத் தமிழ், பாரசீக மொழிப் பங்களிப்பு (ARABIC, ARWI, AND PERSIAN IN SARANDIB AND TAMIL NADU)’ என்ற பெருஆய்வை அமெரிக்க, கொலம்பியாப் பல்கலைக்கழகம் அங்கீகரித்து முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது. அந்த ஆய்வு நூலில்தான் தமிழின் முதல் புதினம் பற்றிய தகவல் மூன்று இடங்களில் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
முதன்முதலாக 104ஆம் பக்கத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

அறபுத் தமிழில், ஹி. 1275/ கி.பி. 1858இல், சரித்திரப் பின்னணியுடன், இமாமுல் அரூஸ் தமிழ் பேசும் (நாவல்) மக்களுக்காக எழுதப்பட்ட முதலாவது புதினம் இதுவே. இதற்கு முன்னர் எந்தவொரு முஸ்லிமோ, முஸ்லிமல்லாதாரோ புதினம் (நாவல்) எழுதியவர்களல்லர்.

இவ்வாறு குறிப்பிடும் அவர், இரண்டாவது தடவையாக 620ஆம் பக்கத்தில் மற்றொரு தகவல் தருகிறார்.

அறபுத் தமிழிலும் சரி, அல்லது திராவிடத் தமிழிலும் (செம்மொழி) சரி, இந்தப் புதினத்திற்கு முன்னர் எதுவும் எழுதப்படவில்லை. ஹி.1275/கி.பி.1858இல் எழுதப்பட்ட இது, செந்தமிழில், சென்னையில், ஆய்வெழுத்தாளர் எம்.கே.ஈ. மவ்லானா அவர்களால் 1979களில் பதிப்பிக்கப் பெற்றது!

ஆஹா! இதுவும் அருமையானதொரு தகவலே!

இந்த எம்.கே.ஈ. மவ்லானா அவர்களைச் சற்று தாமதித்து அறிமுகப்படுத்திக்கொள்ளலாம் எனப் பணிவுடன் தெரிவித்து, மூன்றாவது தடவையாக தரப்பட்டுள்ளவற்றைத் தருகிறேன். 785-786ஆம் பக்கங்களில் இணைப்பு இல: 40 என்ற தலைப்பில் அவை விளக்கமாகப் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.

  • இமாமுல் அரூஸ் அவர்கள் பல நூல்களை எழுதினார்கள். அவற்றில் ஒரு சுவையான புதினமாக ‘மதீனத்துந் நுஹாஸ்’ திகழ்கிறது. இது, எழுத்தாளரது ஆரம்பகால இலக்கியப் பணிகளுள் ஒன்றேனக் கருதலாம். இப்புதினம் படிப்பினை மிகு கருவூலத்தைக் கொண்டிருந்தாலும் தொடர்ந்து அவர்கள் அத்துறையில் கால்பதிக்க முடியாதபடி ஆன்மிகத் தொண்டு அளப்பரியதாக அமைந்து போனது. இப்புதினத்தின் மூல கர்த்தா பாரசீக எழுத்தாளரான பாகீர் யஸீது இபுனு மாலிக் கித்தாய்யி என்பவராவார். உமைய்யாக்கள் ஆட்சி காலத்து சரித்திரப் பின்னணியைக் கொண்டது. புகழ் பெற்ற ஜெனரலாகத் திகழ்ந்த மூசா பின் நுஸைர் என்பாரைக் குறிக்கும் அமீர் மூஸா என்ற தளபதி, கலீஃபா அப்துல் மலீக் என்பாரின் கட்டளையேற்று காரிய சாதனை புரிய காடு மலை கடந்து செல்கையில் நிகழும் அற்புதங்களையும் அனுபவங்களையும் விவரிப்பது. மனிதன் எந்தளவுக்கு சக்தியும் கீர்த்தியும் உடையவனாக இருந்தாலும் அவன் கடைசியில் ஜடமே, நடைப் பிணமே, மண்ணுக்குள் நசிந்து போகும் ஒரு படைப்பே என்ற தத்துவத்தை உணர்த்தும் புதினம்.
  • 28.12.1991இல் பிரபல தினமணி நாளேட்டின் தமிழ்மணி பகுதியில் வெளிவந்துள்ள ஒரு குறிப்பு, ‘பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழின் முதலாவது நாவல்’ எனத் தெரிவிக்கிறது. இது தவறான தகவலெனக் கொள்ள வேண்டும்.
  • குறிப்பிடப்பட்ட அறபுத் தமிழ் நாவல், முதன் முதலில் சரந்தீபில் (இலங்கை) ஹி.1318/கி.பி.1900இல் வெளியானது. எழுதிய ஆசிரியர் (இமாமுல் அரூஸ்) மறைவுக்கு இரண்டாண்டுகளுக்குப் பின், இது நிகழ்ந்தது. கொழும்பு, 92, இரண்டாம் குறுக்குத் தெரு ‘மத்பஅத்துஸ் ஸுலைமானிய்யா பதிப்பகத்தில் டி. முஹம்மத் சுலைமான் என்பவரால் வெளியிடப்பட்டது. பின், 3 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மறுபதிப்பு, இமாமுல் அரூஸ் அவர்களது கலீஃபாக்களுள் ஒருவரான செய்யிது முஹம்மது ஆலிம் அவர்களால் வெளியானது. (ஹி.1321/கி.பி.1903).

இவ்வாறாக முனைவர் சுஐப் ஆலிம் அவர்கள் தமது ஆய்வில் தமிழின் முதல் புதினத்தை அடையாளப்படுத்தியுள்ளார்கள். அவர், மேற்படி புதினத்தின் எழுத்தாளரான இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்தம் வழிப் பேரனாகவும் கீழக்கரையில் உள்ள அரூஸிய்யா அறபுக்கலாசாலை தலைவர் தாளாளர் ஆகவும் திகழ்கிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

இந்த இடத்தில் ஒரு சிலருக்கு நெருடலொன்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதாவது — “முதல் தமிழ்ப் புதினம் என அடையாளமிடப்படுகிற புதினமோ எழுதப்பட்டது அறபுலிபி கொண்ட அறபுத் தமிழில்! ஆனால் தமிழிலேயே நேரிடையாக பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் என்றெல்லாம் 7 நாவல்கள் வந்திருக்கிற பொழுது, இதைச் சொல்வது எப்படி சரியாக இருக்கும்?” என்று அவர்கள் கேட்கலாம். இருவர் இந்நெருடலையும் தீர்த்துள்ளார்கள்!

ஒருவர், 50 ஆண்டுகளுக்கு முன் பிரபல இலக்கியவாதியாகவும், ஆய்வாளராகவும், பன்னூலாசிரியராகவும் திகழ்ந்த வழக்குரைஞர், ரவண சமுத்திரம் மர்ஹூம் ஆர்.பி.எம். கனி அவர்கள். மற்றவர், இலங்கை முனைவர், மர்ஹூம் ம.மு. உவைஸ் அவர்கள்.

மர்ஹூம் ஆர்.பி.எம். கனி அவர்கள் இரண்டே வரிகளில் அறபுத் தமிழ் எது என்பதைத் தெளிவாக்கியுள்ளார் இப்படி: “அறபுத் தமிழ் என்பது ஒரு புதிய மொழி அன்று. அது தமிழ்தான். அது கண்ட இலக்கியமும் முற்றும் முழுதாகத் தமிழையே சாரும்.” (இஸ்லாமிய இலக்கியக் கருவூலம், பக்கம் 210.)

இவருக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு 1984இல் மர்ஹூம் ம.மு. உவைஸ் அவர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆற்றிய ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்வில் பின்வருமாறு விளக்கமாகக் குறித்துள்ளார்.

அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழைப் பேசமட்டும் தெரிந்திருந்தபோதிலும் எழுதத் தெரியாதவர்களாக இருந்திருத்தல் வேண்டும். அதே நேரத்தில் அல்குர்ஆனை ஒத (படிக்க)க் கூடியவர்களாக இருந்திருத்தல் வேண்டும். அதன் பயனாக அறபு எழுத்துகளை வாசிக்கும் ஆற்றலை அவர்கள் பெற்றிருத்தல் வேண்டும். அந்த வகையில், தமிழ்ப் பேசத் தெரிந்து அறபு வாசிக்கத் தெரிந்திருந்தவர்களுக்காக இஸ்லாமியத் தமிழ் நூல்களை அறபு மொழிப் பாண்டித்தியம் பெற்ற தமிழ் அறிஞர்கள் எழுத முற்பட்டனர். அவையே அறபுத் தமிழ் இலக்கியங்கள் என வழங்கப்படலாயின. முஸ்லிம்களின் நாளாந்த வாழ்க்கையில் அத்தகைய நூல்களை அறபுத் தமிழில் எழுதப்பட்ட நூல்களாகக் கருதப்பட்டன. உரைநடை மாத்திரமின்றி, தலைசிறந்த கவிதை நூல்களும் இயற்றப்பட்டன.

இந்த வகையில், மேற்படி இரு பேரறிஞர்களும் அறபுத் தமிழ் என்பதைத் தமிழில் இருந்து வேறுபடுத்திப் பார்க்காதவர்களாகத் தென்படுகின்றனர். இன்றைய பல திறனாய்வாளர்களும் அவ்வாறே.

தாமிரப்பட்டணமே முதல் நாவல்

ஆக, தமிழுக்கு முதல் புதினமாக 1858இல் மதீனத்துந் நுஹாஸ் எழுதப்பட்டுவிட்டது என்பதையும், அதன் பின்னரே, பிரதாப முதலியார் சரித்திரம் சுகுண சுந்தரி, பிரேம கலாவதியார், மோகனாங்கி, அஸன்பே சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் முதலியவை எழுதப்பட்டன அல்லது வெளியாகின என்பதையும் மகிழ்வோடு ஏற்போம். இவ்வாய்வின் இறுதியாக, தாமிரப்பட்டணம் என்ற பெயரிட்டு செம்மொழி நூலாக வந்த விவரத்தையும் அறிந்து மகிழ்வோம்.

வாழ்நாளெல்லாம் தமது பிறந்த மண்ணாகிய கீழக்கரையைக் கீர்த்திமிக்கதாக உலகுக்குக் காட்டிய ஒப்பற்ற ஓர் எழுத்தாளர்தான் எம்.கே.ஈ. மவ்லானா அவர்கள். இவரது வாழ்நாளின் பெரும்பகுதி இலங்கை மன்னார், மரிச்சுக் கட்டியில் கழிந்திருக்கிறது. 20 நூல்களுக்கு மேல் வழங்கிய பன்னூலாசிரியர். அவரது ‘சேதுமுதல் சிந்துவரை’ என்ற மனித இயல் ஆய்வு நூல், முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆகியோரிடம் அவருக்கு விருதுகள் பெற்றுக் கொடுத்தது. தமிழ்நாடு முஸ்லிம் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த அவர், என் அறிவுக்கெட்டிய வரையில் அபூஉமர் என்ற புனைப் பெயரில் ஜொலித்தார். என்றாலும் பசுங்கதிர் மவ்லானா என்றே பலராலும் அழைக்கப்பட்டார். காரணம், அந்தப் பெயரில் 1972இல் ஓர் அற்புதமான இஸ்லாமிய இலக்கியப் பத்திரிகையை நடத்திப் புகழடைந்தார். ஏற்கனவே, 1970இல் பிறைக்கொடி ஆசிரியராக இருந்தும் பசுங்கதிர் என்பதே இன்றுவரை பசுமையாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்தப் பேரெழுத்தாளரை 1990இல் கீழக்கரையில் நிகழ்வுற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாட்டில் பொற்கிழி வழங்கிக் கவுரவப்படுத்தினர்.

இத்தகைய ஒரு மனிதரிடம் இந்த முதல் புதினத்தின் பிரதி கிடைத்தால் என்ன நடக்கும் என்பதற்கான நிகழ்வு கிட்டதட்ட 77-78களில் ஏற்பட்டது. கீழக்கரை லெ. செ. நூஹ் தம்பி மரக்காயர் தான் பாதுகாத்திருந்த அறபுத் தமிழிலான நூலை வழங்கினார். செம்மொழியில் அது பசுங்கதிர் இதழில் தாமிரப்பட்டணம் எனும் தலைப்பில் தொடராக வர ஆரம்பித்து, 23 அத்தியாயங்களில் பூர்த்தியானது. அதன் பின்னர், இமாமுல் அரூஸ் ஆலிம் அவர்களது பேரர்களில் ஒருவரும், வள்ளலுமான அல்ஹாஜ், அப்ஸலுல் உலமா, கே.டி.எம்.எஸ். அப்துல் காதிர் தைக்காப்பா (தொழில் வித்தகர் பி.எஸ்.ஏ. அவர்களது மூத்த சகோதரர்) அவர்களைத் தாளாளராகக் கொண்டு தமது பசுங்கதிர் அச்சகத்திலேயே (43-முத்துமாரிச் செட்டித் தெரு, மண்ணடி) மர்ஹூம் எம்.கே.ஈ. மவ்லானா நூலாகப் பதிப்பித்தார்கள். ஆண்டு 1979.

அன்னார், அதற்கு எழுதிய ‘என் உரை’ கடைசி பத்தி இப்படி அமைந்து மெய்சிலிர்க்கச் செய்கின்றது.

இந்நூல் மதிக்கத்தகுந்த பெருமைக்குரியதும் புதையுண்ட உலக மனிதகுல வரலாற்றை வெளிப்படுத்துவதுமான சிறப்பைச் சுமந்திருக்கிறது என்று வாசகர்கள் கருதுவார்களானால், அந்த மதிப்பு பெருமை, சிறப்பு அத்தனையும் மாதிஹுஸ்ஸிப்தைன் மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கே உரித்தாகும். அவர்களுக்கு மாபெரும் ஞானத்தையும் தீட்சண்யத்தையும் அருளிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகும்.

இதில் வருத்தத்திற்குரிய ஒரு நிகழ்வு என்னவெனில், தகவல்கள் வெளியாகி இன்று கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு (ஆண்டுகள் 22) ஆகப்போகும் சமயத்திலும்கூட இவ்விடயம் சரியாக வெளிச்சமிடப்படவில்லை, விவாதிக்கப்படவில்லை என்பதே!

இப்பொழுது இந்த 2007, அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாட்டு ஆய்வரங்கில், முனைவராகவோ, பேராசிரியனாகவோ இல்லாத மிகச் சாதாரண இலங்கைப் பன்னூலாசிரியனான நான், உங்கள் அனைவர் முன்னிலும் வெளிச்சம் ஏற்றி வைக்கிறேன். விவாதிப்பவர்கள் விவாதிக்கலாம், விளக்கம் கேட்பவர்கள் கேட்கலாம்.

ஆசிரியர்: மானா மக்கீன்

நன்றி: சமரசம் 1 -15 ஜுன் 2007

Related posts

Leave a Comment