ஒரு முஸ்லிம் ஐயவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் – டேனியல் ஹகீகத்ஜூ
[Muslim Matters தளத்தில் டேனியல் ஹகீகத்ஜூ எழுதிய ‘Confessions of a Muslim Skeptic‘ என்ற கட்டுரையை இங்கு மொழிபெயர்த்துத் தருகிறேன்.]
நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துதல்
“தொழுகையின் குறிக்கோள் என்ன?” பதின்ம வயதைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவன் ஒரு நாள் என்னிடம் இவ்வாறு கேட்டான். “நாம் ஏன் இறைவனை நம்ப வேண்டும்?” “நன்மக்களுக்கு ஏன் தீவினைகள் நேருகின்றன?” இவை போன்று பெருவெள்ளமெனத் திரண்டுவரும் வினாக்கள் யாவும் அச்சுறுத்தும் பனிமலையொன்றின் உச்சி முனையை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்கின்றன.
நம்முடைய சமூகத்தில் இவை போன்ற பெருந்தொகைக் கேள்விகள் தோன்றி, புரையோடி, பல நம்பிக்கை நெருக்கடிகளின் தோற்றத்திற்குக் காரணமாகியுள்ளன என்றே சொல்ல வேண்டும். இக்கேள்விகளுக்கு விடைகள் அளிக்கப்படாத காரணத்தால், முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்* என்பது அவப்பேறான யதார்த்தமாகும்.
பொதுவாகவே சமூகத்தில் நிலைபெற்ற மதங்களின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகின்றமையும் இப்போக்கினை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
வினாக்கள் பல, விடைகள் சிலவே
இச்சவாலுக்கு நாம் எப்படி முகம் கொடுக்கலாம்? வெறும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் தொன்னூறுகளில் ஒரு அமெரிக்க பதின்ம வயது இளைஞனாக இருந்தபோது, என் மனதில் தொக்கிநின்ற கேள்விகள் எல்லாம் இன்று முஸ்லிம் இளைஞர்கள் எதிர்கொள்கின்ற, ஆன்மாவையே விழுங்கிவிடத் துடிக்கும் பகாசுரப் பிரச்சினைகளோடு ஒப்பிடுகையில் வெறும் சிறுபிள்ளைக் கேள்விகளாகவே காட்சி தருகின்றன.
இன்று நம் முன்னால் ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகள், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், இறைவனின் இருப்புக்கு அறிவியல் சான்று, கற்பொழுக்கத்தின் பெறுமானம், பாலியல் சுயகட்டுப்பாட்டின் நன்மைகள், மனிதப் பரிணாம வளர்ச்சி, குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் போன்ற எண்ணற்ற விவகாரங்கள் எழுந்து நிற்கின்றன.
இன்று சகலமும் விவாதிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியில் மறுதலிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. சாராம்சமாகக் கூறுவதாயின், மதம் என்பது அறிவுசார் நம்பகத் தன்மையற்ற சாதனமாக இன்று நோக்கப்படுகிறது. சந்தேகத்தில் ஆழ்த்தப்பட்டுள்ள வெகுமக்களின் மனங்களில் அது குறித்த நம்பகத் தன்மையை மீள்கொணர வேண்டுமென்றால் நமக்குள்ள ஒரே வழி, முகத்திலறையும் இக்கேள்விகளை எதிர்கொண்டு விடையளிப்பதுவே.
ஐயவாதம் என்பதன் வரைவிலக்கணம்
கல்வியியல் புலத்திலும் தொழிற்துறையிலும் தோன்றும் சிக்கல் நிறைந்த, சர்ச்சைக்குரிய கேள்விகளை கையாளுவதற்கு மிகச் சிறந்தவொரு வழிமுறை பிரயோகிக்கப்படுகிறது. அதாவது, ஒரு எட்டு பின்னால் சென்று, அக்கேள்விகளுக்கு அடித்தளமாக அமைந்திருக்கும் மறைமுகக் கற்பிதங்களை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும் (அல்லது அவற்றை நிலைகுலையச் செய்ய வேண்டும்).
இதன் மூலம், நமது சொந்த வரையறைகளில் நின்று அசல் கேள்விகளைக் கையாளுவதற்கு வழிபிறக்கிறது. இவ்வாறு பொது நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்துகிற அல்லது நிலைகுலையச் செய்கிற அணுகுமுறையானது பொதுவாகவே ஐயவாதத்துடன் (Skepticism) தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகிறது.
எனினும் நான் ‘ஐயவாதி’ (Skeptic) எனும் பதத்தை, ‘ஒரு கணம் நின்று, குறித்தவொரு சிந்தனை அமைப்பைக் கட்டுடைத்து, அதை விமர்சனத்திற்கு உட்படுத்தி, அதன் அறிவுசார் தகைமையை மதிப்பிட முனையும் ஒருவர்’ என்ற பொருளிலேயே பயன்படுத்துகிறேன். அறிதலின் சாத்தியத்தையே ஒட்டுமொத்தமாகக் கேள்விக்கு உட்படுத்தும் ‘மெய்யியல் ஐயவாதிகளுடன்’ (Philosophical Skeptics) இதனைப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மத நம்பிக்கைகள்தான் ஐயவாதக் கேள்விகளின் இலக்குகளாக ஆக்கப்படுகின்றன:
“இறைவன் இருக்கிறான் என்று நாம் ஏன் நம்ப வேண்டும்?”
“திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு என்று நாம் ஏன் நம்ப வேண்டும்?”
“முஹம்மது (ஸல்) அவர்களை நாம் ஏன் இறைத்தூதர் என்று நம்ப வேண்டும்?”
இவ்வியல்பில் அமைந்த ஐயவாதக் கேள்விகள் துவக்கத்தில் நாத்திகர்களிடம் இருந்தும், மதத்திற்கு எதிரானவர்களிடம் இருந்துமே முகிழ்த்தன. பிறகு காலவோட்டத்தில் உலகின் மூலை முடுக்கெங்கும் பரவிவிட்டன. இன்றைய நாட்களில், இறைநம்பிக்கையாளர்களும் கூட இக்கேள்விகளை கேட்கிறார்கள். அவர்களால் விடைகாண முடியாமல் போகும்போது, ஒன்று மதத்தை துறந்து விடுகிறார்கள்; அல்லது இக்கேள்விகளை முற்றாக அலட்சியம் செய்து விடுகிறார்கள்.
அறிவுசார் நயவஞ்சகமும் பில் மாஹிரும்
என்னுடைய அனுபவத்தில், மதத்தை கேள்விக்குட்படுத்தும் ஐயவாதிகள் மிகப் பெரும்பாலும் நயவஞ்சகர்களாகவே இருக்கின்றனர். எல்லாச் சிந்தனை அமைப்புகளையும் அவர்கள் சம அளவில் தாக்குவதில்லை. தமது வெறித்தனமான விமர்சன ஆர்வத்தை அவர்கள் மதத்திற்கென்றே, குறிப்பாக இஸ்லாத்திற்கென்றே, சேமித்து வைக்கிறார்கள். அதே சமயம், மதத்திற்கு அப்பாற்பட்ட மற்ற சில நம்பிக்கைகளைக் கண்டும் காணமல் விட்டு விடுகிறார்கள்.
உதாரணத்திற்கு, பில் மாஹிர் (Bill Maher) போன்ற ஒருவரை எடுத்துக் கொள்வோம். தானொரு தாராளவாதி (liberal) என்று அவர் மார்தட்டிக் கொள்கிறார். இஸ்லாத்தை விமர்சிப்பது என்று வருகையில், அவர் தனது பகையுணர்வில் குறைவு எதையும் விட்டுவைப்பதில்லை. எனினும், தாராளவாதம் (liberalism) என்று வரும்போதும் அவர் அதே விதமான விமர்சன, ஐயவாத மனநிலையோடு தான் அதை அணுகுகிறாரா? தாராளவாதத்தைக் குறித்த பல்வேறு விமர்சனங்களையும், அதைச் சூழ்ந்துள்ள கேள்விகளையும் ஆய்வு செய்வதற்கென்று எப்போதேனும் அவர் தனது தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நேரம் ஒதுக்கியுள்ளாரா?
நவீன தாராளவாதம் நிகழ்த்தியுள்ள வன்முறைகள் மற்றும் கொடுஞ்சாவுகளின் வீச்சு குறித்து சிந்திப்பதற்கென்று அவர் தனது தொலைகாட்சி நிகழ்ச்சி எதனையும் ஒதுக்கியுள்ளாரா? ‘பகுத்தறிவுச் சிந்தனையின் சக்தியைக் கொண்டு சத்தியத்தை கண்டுபிடிக்க முனையுமொரு தற்சார்பற்ற (objective), நடுநிலைவாத ஆய்வாளர்’ என்பதாக மாஹிர் தன்னைச் சித்தரித்துக் கொள்கிறார்.
ஆனால் உண்மையில் அவர் தற்சார்பின்மையை விட்டும், பகுத்தறிவுச் சிந்தனையை விட்டும் மிகத் தொலைவானதொரு பிரச்சாரகர் மட்டுமே; அவரால் பரிகசிக்கப்படும் “பைபிள்-வெறியர்களை” போன்ற ஒருவர்தான் அவரும். ஒரே வித்தியாசம், இவர் கிறிஸ்தவத்திற்குப் பதிலாக தாராளவாதத்தைப் பிரச்சாரம் செய்கிறார்.
இந்நயவஞ்சகர்களின் மருந்தினை அவர்களுக்கே சுவைக்கக் கொடுப்பவரைத் தான் நாம் ‘முஸ்லிம் ஐயவாதி’ என்று சொல்கிறோம்.
தாராளவாதம் (liberalism), தேசிய அரசுக் கட்டமைப்பு (nation-state paradigm), அறிவியல்வாதம் (scientism), மானுடவாதம் (humanism), முற்போக்குவாதம் (progressivism) மற்றும் இவை போன்று கேள்விக்கு உட்படுத்தப்படாதிருக்கும் நம் காலத்து நவீனத்துவ நம்பிக்கைக் கோட்பாடுகள் அனைத்தின் மீதும் ஐயங்களை வெளிப்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களாகிய நாம் விவாத மேசையை திருப்பிப் போட்டால் என்ன?
விவாத மேசையை திருப்பிப் போடுதல்
“சர்ச்சைக்குரிய” அல்லது “கடினமான” கேள்விகளுக்கான ஒரு சில உதாரணங்களை எடுத்துக் கொள்வோம்:
- அல்லாஹ், வானவர்கள், மறுமை வாழ்வு, ஆன்மா போன்றவற்றின் இருப்புக்கு என்ன அறிவியல் சான்று உள்ளது?
- இஸ்லாமிய ஷரீஆ ஆண்களை விடுத்து, பெண்களுக்கு மட்டும் ஹிஜாப் அணிவதை ஏன் விதியாக்கியுள்ளது?
- மகா கருணையாளனான இறைவன் ஏன் தீமைகளின் இருப்பினை அனுமதித்துள்ளான்?
- சுயாதீனமாகத் தீர்மானங்கள் எடுப்பதற்கு நமக்குச் சுதந்திரம் உண்டா?
- ஓரினச் சேர்க்கை செயல்பாடுகளை இஸ்லாமியச் சட்டம் தடை செய்திருப்பது ஏன்?
- மனிதனின் பரிணாமத் தோற்றத்தை முஸ்லிம்கள் பலரும் ஏற்காதது ஏன்?
இக்கேள்விகள் சூன்யத்திலிருந்து தோன்றுவதில்லை என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் புரிந்துகொள்ளத் தவறுகிறோம். இக்கேள்விகளுள் பெரும்பாலானவை முப்பது, நாற்பது அல்லது ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் முஸ்லிம்களின் மனங்களை தொந்தரவு செய்பவையாக ஒருபோதும் இருக்கவில்லை.
இவை நம் காலமான ஹிஜ்ரி பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் (கிரியோரியன் அடிப்படையில் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கும்), அதன் அறிவுசார் கலாச்சாரத்திற்குமே உரிய கேள்விகள். இவை ஒவ்வொன்றின் அடியிலும் சிக்கலான, ஆழப் பதிக்கப்பட்டுள்ள கற்பிதங்கள் மறைந்திருக்கின்றன.
இவை விடையளிக்கக் “கடினமானவையாக” தோன்றுவதற்குள்ள ஒரே காரணம், நாம் அவற்றின் அடியிலுள்ள கற்பிதங்கள் குறித்து அறியாதவர்களாக இருப்பதும், அவற்றை அசைக்க முடியாத உண்மைகள் போல் எடுத்துக் கொண்டிருப்பதும் தான். முஸ்லிம் ஐயவாதி இக்கற்பிதங்களை தோண்டியெடுத்து ஆய்வுக்கும் விசாரணைக்கும் உட்படுத்த வேண்டும். முஸ்லிம் ஐயவாதி இக்கேள்விகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக, இக்கேள்விகளையே இல்லாமல் ஆக்குவதை தனது குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.
இவை போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் சமுதாயத்தின் நம்பிக்கையையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இவ்விதமானவொரு ஐயவாத அணுகுமுறையின் அவசியம் ஓர் அவசரத் தேவையாக எழுந்துள்ளது.
நடைமுறையில் ஐயவாதம்
சுருக்கமான உதாரணமாக, இறைவனின் இருப்பு பற்றிய கேள்வியை எடுத்துக் கொள்வோம். நவீன முஸ்லிம் விரிவுரையாளர்கள் சிலர், இறைவனின் இருப்புக்கு எந்தவொரு தற்சார்பற்ற (objective) சான்றும் இல்லை; அது “நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவொரு” அம்சம் என்று சரணாகதி அடைகின்றனர்.
ஆனால் முஸ்லிம் ஐயவாதியின் அணுகுமுறையோ இதற்கு நேர்மாற்றமாக இருக்கும். முதலில் அவர் “தற்சார்பற்ற” (objective) என்ற வார்த்தையையே விசாரணைக்கு உட்படுத்துவார். (ஆம், ‘தற்சார்பின்மை’ – Objectivity எனும் கருத்தாக்கமே கூட திருகலான, சுவாரஸ்யமான ஓர் வரலாற்றைக் கொண்டதுதான்; அதை கேள்விக்கு அப்பாற்பட்டவோர் உண்மையாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது).
அடுத்ததாக, அந்த முஸ்லிம் ஐயவாதி எதுவொன்றையும் ‘சான்று’ என ஏற்பதற்குள்ள நியமங்களாக பரவலான ஏற்பினை பெற்ற கருதுகோள்களை குறித்து சிந்தனையை செலுத்துவான்; அவற்றின் நிலைத்தன்மையையும் (Consistency) மதிப்பீடு செய்ய முற்படுவான். ஏனெனில், ‘அறிவியல் சான்று’ போன்ற நியமங்களைக் கொண்டுதான் இன்று இறைவன் மீதான நம்பிக்கை நிலைகுலையச் செய்யப்படுகிறது.
உதாரணத்திற்கு, ‘அறிவியல் சான்று’ இல்லை என்பதற்காக நாம் இறைவனின் இருப்பை நிராகரிக்க வேண்டுமென்றால், அதே போல் ‘அறிவியல் சான்றோ’ புலன்களால் அறியக்கூடிய சான்றோ இல்லாத கருத்தாக்கங்களான காலவோட்டம் (passage of time), மானுட பிரக்ஞை (human consciousness), கணிதவியல் கருதுகோள்கள் (mathematical entities) போன்றவற்றையும் நிராகரித்து விடலாமா?
அறிவியல் சான்றுகள் இல்லையென்றாலும், பெரும்பாலான மக்கள் இவை போன்று தெளிவான யதார்த்தத்தைக் கொண்ட விடயங்களை மறுக்குமளவு தீவிரப்போக்கு கொண்டோராக இருப்பதில்லை என்பதே உண்மை. இன்னும் இது போன்று சொல்லிக் கொண்டே போக முடியும்.
முஸ்லிம் ஐயவாதி இவ்வழிமுறையைப் பயன்படுத்தி, ‘அறிவியலின் அதிகாரம்’ என்பது போன்ற பரவலான ஏற்புக்கும் நேசத்திற்கும் பாத்திரமான நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தி, அதனடியில் மறைந்திருக்கும் கற்பிதங்களை அம்பலப்படுத்துவதற்கு அஞ்சக் கூடாது
நிறைவாக…
ஐயவாதம் என்பது ஒரு எதிர்மறையான, கட்டுடைப்பு நடவடிக்கைதான் என்பதில் ஐயமில்லை. பகுத்தறிவின் அடிப்படையிலான வாதங்களைப் பயன்படுத்தி போலி விக்கிரகங்களை வீழ்த்துவதன் மூலம் சத்தியத்தின் ஒளி சுடர்விடுவதற்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதே அதன் நோக்கமாக இருக்க வேண்டும்.
இவ்வகையில் பார்த்தால், மாபெரும் முஸ்லிம் ஐயவாதிகளுள் ஒருவராக இறைத்தூதர் இப்ராஹீமை (அலை) குறிப்பிடலாம். அவர் எவ்வாறு மதிநுட்பமாகச் செயற்பட்டு தன்னுடைய மக்களின் விக்கிரக வழிபாட்டினை நிலைகுலையச் செய்தார் என்று திருக்குர்ஆனில் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளது (6: 75-80). இப்ராஹீம் (அலை) தன்னை எதிர்த்தோரின் நம்பிக்கைகளில் இருந்த அக முரண்பாட்டினை அம்பலப்படுத்துவதற்காக நட்சத்திரத்தை, சந்திரனை, சூரியனைப் பார்த்து “இதுவே எனது இறைவன்” என்று கூறி அவர்களுடைய வாதங்களைப் போலி செய்து அவர்களுக்கு உணர்வூட்ட முயன்றார்.
முஸ்லிம் அறிவுத்துறை வரலாறு நெடுகிலும் இத்தகைய முஸ்லிம் ஐயவாதிகள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றனர். அவர்கள் எந்தெந்த தத்துவங்களை எல்லாம் அபாயகரமானவையாகவும் நாசகரமானவையாகவும் கண்டார்களோ அவற்றை மதிப்பீடு செய்யவும், நிலைகுலையச் செய்யவும், விமர்சனத்திற்கு உட்படுத்தவும், வீழ்த்தவும் எல்லாவிதமான பகுத்தறிவு மூலோபாயங்களையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது. இன்றைய முஸ்லிம்கள் தொலைத்துவிட்டவொரு அரிய கலை இது.
நம்முடைய உலகப் பார்வையுடன் மாறாது பகைமை பாராட்டுமொரு அறிவுச் சூழலில் நாமிருக்கும் நிலையில், இக்கலையை புத்துயிர்ப்பிப்பதில் நாம் அதிக முனைப்புக் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
“நாம் சத்தியத்தின் மீது இருப்பவர்கள் இல்லையா?!” என்று சய்யிதினா உமர் (ரழி) ஒருமுறை சொல்லாட்சி அணியழகுடன் வினவினார்கள். அதற்கு அமைவாக நாம் செயற்படத் துவங்க வேண்டிய காலம் இது!
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
இஸ்லாத்தை விட்டான வெளியேற்றம் இங்கு இரண்டு வகைகளில் நிகழ்கிறது. ஒன்று நேரடியானது. அதாவது, இஸ்லாத்தின் அடிப்படைகளை சந்தேகிக்கத் துவங்கி, இறுதியில் இறை நிராகரிப்பில் சென்று வீழ்வது. மற்றது மறைமுகமானது; இறைநம்பிக்கையின் அடித்தளம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் கண்டு, அக நெருக்கடியுடன் கூடியவொரு மனநிலையுடன், பெயரளவில் மட்டும் முஸ்லிம்களாக நீடிப்பது.
நம்மிடையே சிலர் நாம் மேலை உலகு போல் ஆக வேண்டும் என்று அங்கலாய்ப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு மேற்குலகின் வரலாறோ, அது சந்தித்து வரும் நெருக்கடிகளோ தெரிவதில்லை. மேற்குலகில் வாழும் முஸ்லிம்கள் தான் இவ்வித கையறுநிலைக்கு அதிகமதிகம் ஆளாகி வருகின்றனர்.
மேற்குலகில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர் என்பது நாணயத்தின் ஒரு பக்கம் மட்டும் தான்; மறுபக்கம் இப்படியிருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாத்திகமும் அறிவியல்வாதமும் தமது பிடியை இறுக்க இறுக்க இங்கும் மெல்ல மெல்ல அதே போன்றதொரு நிலை தோன்ற ஆரம்பித்திருப்பது நுட்பமாக அவதானிப்பவர்களுக்கு மட்டும் புலப்படுகிறது.
துரிதமாகச் செயற்பட்டு நாம் இதனை முறியடிக்காவிடில், நிலைமை கைமீறிச் செல்வது நிச்சயம். அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் இதனைக் குறிப்பிட முயலவில்லை. வருமுன் காப்பதற்கான விழிப்புநிலையை ஏற்படுத்துவதே இங்கு நம் நோக்கம்.