குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்

Loading

என் தந்தை வீட்டுப் பராமரிப்பு வேலைகளில் விருப்பம் மிக்கவராகவும் கைதேர்ந்தவராகவும் இருந்தார். நான் சிறுவனாக இருந்தபோது, அவ்வேலைகளில் உதவும்படி என்னையும் அழைத்துக் கொள்வார். ஒருபோதும் நான் அவற்றில் பெரிய ஈடுபாடு காட்டியதில்லை என்றாலும், அவற்றிலிருந்து பல பாடங்களைக் கற்றிருக்கிறேன்.

ஆரம்பத்தில் அவர் எனக்குக் கற்றுத்தந்த விடயங்களில் ஒன்று, எந்தவொரு பராமரிப்பு வேலையைச் செய்யத் தொடங்குவதற்கும் முன்பாக பணியிடம் தூய்மையாகவும் திடமாகவும் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்பதாகும்.

உதாரணத்திற்கு, வீட்டுச் சுவருக்கு மறுபூச்சு பூச விரும்புகிறீர்கள் எனில், முதலில் பழைய பூச்சினைச் சுரண்டி எடுத்தல், உளுத்துப்போன மரங்களை அகற்றுதல் போன்ற ஆயத்த வேலைகளைச் செய்யவேண்டும். அதன் பிறகே அசல் வேலையைத் தொடங்க வேண்டும்.  ஆயத்த வேலையை அலட்சியம் செய்துவிட்டு, பழையதன் மீதே புதிய பூச்சினைப் பூச முடியும்தான். ஆனால், குறுகிய காலத்திலேயே அதில் விரிசல் ஏற்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக உரிந்து, முன்னிருந்ததை காட்டிலும் மோசமாகிவிடும்.

கான்கிரீட் மேடையை அமைப்பதற்கும் இந்த விதி பொருந்தும். பழைய கட்டுமானத்தைப் பிரித்தல், கலைத்தல், தேவை ஏற்படின் உடைத்தல், அதன் சிதிலங்களை அகற்றுதல் போன்ற ஆயத்த வேலைகள் அதில் முக்கியமானவை. பணியிடம் துப்புரவாக சமதளமான நிலைக்கு வந்த பிறகே, நீங்கள் அதில் திடமானதும், நீடித்து நிலைக்கக் கூடியதுமான ஒன்றை நிர்மாணிக்க முடியும். பழைய கட்டுமானத்தின் பலவீனமான அடித்தளத்தின் மீதே புதியதைக் கட்ட முனைவது முற்றிலும் பயனற்ற, முட்டாள்தனமான செயலாக அமைந்துவிடும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், எவ்வளவுதான் தரமாக கட்டப்பட்டாலும், அது பழையது போன்றே பலவீனமானதாகவும் சரிந்து விழுவதாகவுமே இருக்கும்.

அது மட்டுமின்றி, கேடாகிப் போன பழையதன் அடித்தளத்தின் மீதே புதியதைக் கட்ட முயல்வோம் என்றால், அதனோடு பொருந்த வேண்டும் என்பதற்காகச் சில விட்டுக் கொடுப்புகளையும் அனுசரணைகளையும் நாம் செய்யவேண்டி வரும். நம் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப கட்டுவதற்குப் பதிலாக, நாம் எதன்மீது கட்டுகிறோமோ அதனோடு பொருந்த வேண்டும் என்றவொரு அம்சத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டுதான் எதுவொன்றையும் கட்டியெழுப்ப முடியும்.

மேலே கூறியவை யாவும், நவீன விவகாரங்களின் ஒளியில், நம் சமகால அறிஞர்கள் தம்முடைய அறிவுசார் பணியின் போக்கில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழ்நிலைக்கான உருவகமே. இந்த உருவகத்தில் வரும் பழைய பூச்சும் பழுதடைந்த கட்டுமானமும் எவையென்றால், நவீனத்துவமும் அதன் விளைபொருட்களான தாராளவாதம், அறிவியல்வாதம், பெண்ணிலைவாதம், மதச்சார்பின்மைவாதம், இன்னபிற வாதங்கள் ஆகியவையே.

நாம் அவற்றைக் கட்டுடைத்து, நமது பணியிடத்தை நன்கு துப்புரவாக்க வேண்டியுள்ளது. ஒரு அறிஞர் இவற்றின் மீதே ஏதேனுமொன்றைக் கட்டியெழுப்ப முனைகிறார் என்றால், அவர் கட்டியெழுப்புவது எத்துணை உயர்தரமானதாகவும் வலுவான அறிவுசார் பெறுமானம் கொண்டதாகவும் இருந்தாலும்கூட, இறுதி விளைபொருள் என்னவோ சமநிலை குலைந்ததாகவும் பலவீனமானதாகவும் சரிந்துவிழக் கூடியதாகவுமே அமையும். 

அதற்கு மாற்றமாக, உளுத்துப் போனவற்றைக் களைந்து ஒதுக்கித் தள்ளிவிட்டு பணியிடத்தைத் துப்புரவாகவும் சமதளமாகவும் ஆக்கும்போதுதான், அந்த அறிஞரால் உண்மையாகவே நீடித்து நிலைக்கக்கூடிய எதுவொன்றையும் நிர்மாணிக்க முடியும் (இறைவனின் அனுமதியுடன்).

நமக்கு முன்சென்ற அறிஞர்களின் ஆக்கங்களில் மகத்தான ‘தவ்ஃபீக்கை’ காணமுடிவதற்கான காரணமும் இதுவே. ஒரு வலுவான அடித்தளத்தின் மீதே அவர்கள் தம்முடைய கட்டுமானத்தை எழுப்பினார்கள். அதாவது, தமக்கு முன்சென்றோர் விட்டுச்சென்ற வலுவான அறிவுசார் அடித்தளத்தின் மீதே அவர்கள் தமது புலமைத்துவத்தைக் கட்டியெழுப்பினார்கள். அவை யாவும் இறைவனின் வேதவெளிப்பாடு, நபியின் சுன்னாஹ் என்ற அசைக்க முடியாதவோர் அடித்தளத்தின் மீதே கட்டியெழுப்பப்பட்டன. ‘இஸ்லாமிய அறிவியல் கலைகள்’ என அறிவு ரீதியிலும் ஆன்மிக ரீதியிலும் ஒப்பில்லாதவோர் அருஞ்சாதனையை அவர்களால் உருவாக்க முடிந்தது இப்படித்தான்.

ஆனால் நவீன காலம் தோற்றம்பெற்றபோது, முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை இழந்த சூழ்நிலையில், ‘ஐரோப்பிய நவீனத்துவ மெய்யியல்’ உலகெங்கும் ஆதிக்கம் பெற்றவோர் சிந்தனைமுறையாக மாறியது. முஸ்லிம் சமூகங்களும் இதிலிருந்து தப்பவில்லை. இந்தச் சூழமைவிலேயே சில அறிஞர்களும் சொல்லாடல்களும் தமது சுயசெயற்திறனைக் கைவிட்டு, வெறுமனே எதிர்வினை ஆற்றுவோராக மாறினார். 

மேலே குறிப்பிட்ட இசங்கள் அனைத்துக்கும் அவர்கள் மறுமொழி அளிக்கவேண்டிய, அல்லது தமது அபிப்பிராயங்களை அவற்றின் ஒளியில் எழுதவேண்டிய ஒரு நிர்பந்தச் சூழல் திடீரென தோற்றம்பெற்றது. இதற்கு சமூக ரீதியிலான அழுத்தம், அல்லது அரசியல் ரீதியிலான அழுத்தம், அல்லது காலனியவாதிகளும் பிற மேற்கத்தேய மேலாதிக்க முகவர்களும் உருவாக்கிய வெளிப்படையான நிர்பந்தம் என்று பல்வேறு காரணங்களைச் சொல்ல முடியும். அவை, அறிந்தோ அறியாமலோ, அவர்களது அறிவுச் செயல்பாட்டின் உள்ளடக்கத்தையும் பாதித்தன. இதன் விளைவாக, உளுத்துப்போன அடித்தளத்தின் மீதே சில அறிவுசார் கட்டுமானங்கள் கட்டியெழுப்பப்பட்டன.

நாம் உளுத்துப்போன அவற்றை அகற்றித் துப்புரவாக்க வேண்டும். அவற்றைத் தகர்த்து, கலைத்துப்போட்டு, அதன் சிதிலங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகே, நாம் முழு நம்பிக்கையுடன் நம்முடைய சொந்த நியமங்களில் ஊன்றிநின்று, நம்முடைய சன்மார்க்கத்தின் மேன்மையையும் மதிப்பச்சம்தரும் மகோன்னதத்தையும் உலகின் முன்பாக மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் காட்டமுடியும், இன்ஷா அல்லாஹ்.

(தமிழில்: உவைஸ் அஹமது)

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: 

மற்ற சித்தாந்தங்கள் அனைத்தையும் நாம் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்றோ, கட்டுடைத்து நிர்மூலமாக்க வேண்டும் என்றோ இதை குறுக்கிப் புரிந்துகொள்ளக் கூடாது.

அதே சமயம், புதிய இசங்கள் தோன்றும் போதெல்லாம் அவற்றை இஸ்லாத்தின் உரைகல்லைக் கொண்டு மதிப்பிடுவதற்குப் பதிலாக, இஸ்லாத்தை அவற்றின் ஒளியில் மறுசீரமைப்புச் செய்ய முனைகிற; அல்லது, குறைந்தபட்சம் இஸ்லாத்தை அவற்றின் ஒளியில் விளக்க முனைகிற அணுகுமுறையில் உள்ள போதாமையையே இப்பதிவு நம் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றுள்ளது.

Related posts

Leave a Comment