கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வெற்றியைத் தீர்மானிப்பது எது?

Loading

வெளிப்படையான காரணிகளைக் கொண்டு மாத்திரம் ஒருவரின் அல்லது ஓர் அமைப்பின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியாது. அவற்றுக்கு அப்பால் நாம் அறியாத வேறு  மறைமுகமான காரணிகளும் இருக்கின்றன.

அருகில் தென்படுகின்ற வெளிப்படையான காரணிகளைக்கண்டு ஒருவர் அல்லது ஓர் அமைப்பு எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று நாம் எண்ணலாம். ஆனால் முடிவு நாம் எண்ணியதற்கு மாறாக அமையலாம். தோல்வியைத் தழுவுவார்கள் என்று நாம் எண்ணுகின்ற பலர் எதிர்பாராவிதமாக பெரும் வெற்றியை அடைவதையும் நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.

இறைவன் குறிப்பிட்ட சில நியதிகளின் அடிப்படையில் இவ்வுலகின் இயக்கங்களை, மனிதர்களின் செயல்பாடுகளை அமைத்துள்ளான். அதே சமயத்தில் அவன், தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடையவன். அவனது நாட்டத்திற்குக் குறுக்காக எந்தவொன்றும் வந்துவிட முடியாது.

இவ்வுலகின் இயக்கங்கள் அவன் ஏற்படுத்திள்ள நியதிகளுக்கு உட்பட்டவை. அந்த நியதிகள் அவனது நாட்டத்திற்கு உட்பட்டவை. அவனது நாட்டம் அவன் அமைத்த நியதிகளைச் செயலிழக்கச் செய்யலாம்.

அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். அவனால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. அனைத்தும் அவனது கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நெருப்பிற்கு சுடும் தன்மையை, நீருக்கு குளிர்விக்கும் தன்மையை மற்றும் ஒவ்வொரு பொருளுக்கும் அவற்றுக்குரிய தன்மைகளை அளித்தவன் அவனே. அவன் நாடினால் அவற்றின் தன்மைகளைப் போக்கிவிடவும் செய்வான். அவன் நாட்டமின்றி யாரும் யாருக்கும் பலனளிக்கவோ தீங்களிக்கவோ முடியாது.

நீர் கூறும்: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரத்தின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்து விடுகிறாய். நீ நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. நீ எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன்.” (3:26)

அவன் அமைத்த நியதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மனிதனின் கடமை. ஆனால் அந்த வெளிப்படையான காரணிகள்தாம் தனக்கு வெற்றியைத் தருகின்றன என்று மனிதன்  எண்ணிவிடக்கூடாது. இறைவனின் உதவியினாலும் அவனது நாட்டத்தினாலுமே தான் வெற்றி பெற்றேன் என்றே அவன் எண்ண வேண்டும்.

வெளிப்படையான காரணிகளைத் தாண்டி இறைவன் இன்னும் சில மறைமுகமான காரணிகளையும் கடைப்பிடிக்கச் சொல்கிறான். அவை நாம் காணும் வெளிப்படையான காரணிகளுக்கு நேர்எதிரானவையாகவும் இருக்கலாம். ஆனாலும் அவை அவன் மனிதச் சமூகத்திற்கு அளித்த அறவிழுமியங்களுக்கு உட்பட்டவை.

தர்மம் செல்வத்தை வளர்க்கும், வட்டி அதனை அழிக்கும் என்று அவன் கூறுகிறான். வெளிப்படையான காரணிகளோ இதற்கு மாறாகக் கூறுகின்றன. ஆனாலும் தர்மத்தினால் செல்வம் வளர்வதையும் வட்டியினால் அது அழிவதையும் பலதரப்பட்ட மனிதர்கள் தங்களின் அனுபவங்களின்மூலம் உணர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ‘பெற வேண்டுமெனில் அள்ளிக் கொடு’ என்ற சொல் மனித அனுபவத்தின் விளைச்சல்தான்.

அசத்தியத்தின் கரங்கள் ஓங்கும்போது வெளிப்படையான காரணிகள் அதற்குச் சாதகமாகவே தென்படும். அவற்றைக் கண்டு நம்பிக்கையாளர்கள் நிராசையடைந்து விடக்கூடாது. சத்தியம் எல்லாவற்றையும் மிகைக்கும் அளவுக்கு வலிமை வாய்ந்தது என்பதையும், அது எல்லா தர்க்கங்களையும் தாண்டி மனித மனதிற்குள் நேரடியாக ஊடுருவிச் செல்லக்கூடியது என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் இறைவன் அமைத்த நியதிகளின்படி வெளிப்படையான காரணிகளை அப்படியே அச்சுப்பிசகாமல் பின்பற்றினாலும் அநியாயக்காரர்களால், உண்மையை ஏற்க மறுக்கும் கர்விகளால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது.

அவர்களால் தற்காலிக வெற்றிகளைத்தவிர நீடித்த வெற்றியைப் பெற முடியாது. அவர்கள் பெறக்கூடிய தற்காலிக வெற்றிகள் அவர்களை ஒருவித மயக்கத்தில், தாங்கள் செய்வது சரிதான் என்ற எண்ணத்தில் ஆழ்த்திவிடுகின்றன. தங்களுக்கு அளிக்கப்படும் அவகாசத்தை தம் திறமையின் விளைவாக, தம் செயலின் பலனாக எண்ணிக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் தங்களின் திட்டங்கள் அனைத்தும் செயலற்று ஒன்றுமில்லாமல் போகும்போதுதான் தம் இயலாமையை, இறைவனின் பிடியை அவர்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

வரலாறு இதற்குச் சான்று. எந்த அநியாயக்காரனும் —அவன் திறமையானவனாக வலிமையானவனாக இருந்தபோதிலும்— நீண்ட காலம் நீடித்ததில்லை. அநியாயக்காரர்களின் அநியாயமே அவர்களின் அழிவுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

“இந்தக் குர்ஆனை நிராகரிப்போரை என்னிடம் விட்டுவிடுவீராக. அவர்களே அறியாதவிதத்தில் அவர்களை நான் தண்டிப்பேன். நான் அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறேன். எனது திட்டம் யாராலும் முறியடிக்க முடியாத அளவுக்குப் பலமானது” என்கிறான் இறைவன். நபியவர்கள் நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்டிருந்தபோது, அவர்களின் பிரச்சாரத்தை முறியடிக்க எதிரிகள் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு அருளப்பட்ட வசனமிது. அவர்களைக் கண்டுகொள்ளாமல் நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள் என்பதுதான் நபியவர்களுக்கு இடப்பட்டிருந்த கட்டளை.

இவ்வுலகில் அகந்தையுடையவர்கள், அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பதையும் இறைவேதனை திடீரென அவர்களைச் சூழ்ந்துகொள்ளும் என்பதையும் ஓர் உதாரணத்தின்மூலம் இறைவன் திருக்குர்ஆனில் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்:

“நாம் தோட்டவாசிகளை சோதித்ததுபோன்றே இவர்களையும் சோதித்தோம். அந்தத் தோட்டவாசிகள், அதிகாலைப் பொழுதில் விரைந்து சென்று தோட்டத்தின் கனிகளைப் பறித்துவிட வேண்டும் என்றும் எந்த ஏழைக்கும் எதையும் விட்டுவைக்க மாட்டோம் என்றும் சத்தியம் செய்திருந்தார்கள். ஆகவே அவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது உமது இறைவனிடமிருந்து சுற்றி வளைக்கக்கூடிய ஆபத்து சூழ்ந்துகொண்டது. அது அறுவடை செய்யப்பட்ட வயலைப்போன்று ஆகிவிட்டது.

அதிகாலையில் அவர்கள் ஒருவரையொருவர் அழைத்து “நீங்கள் தோட்டத்தின் கனிகளைப் பறிப்பதாயிருந்தால் அதிகாலையிலேயே உங்கள் தோட்டத்திற்குப் புறப்படுங்கள்” என்றார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் இரகசியமாகப் பேசிக்கொண்டே தங்கள் தோட்டத்திற்கு விரைந்து சென்றார்கள். அவர்களில் சிலர் சிலரிடம், “இன்றைய தினம் எந்த ஏழையும் உங்களின் தோட்டத்திற்கு வந்துவிடக்கூடாது” என்றார்கள். அவர்கள் கனிகளைப் பறித்து அவற்றை ஏழைகளுக்குக் கொடுக்காமல் தடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று உறுதியாக எண்ணிக் கொண்டார்கள்.

அவர்கள் அத்தோட்டத்தைக் கண்டபோது, “நாம் வழிதவறிவிட்டோம். இல்லை. நாம் இழப்புக்குள்ளாகி விட்டோம்” என்றார்கள். அவர்களில் சிறந்தவர் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வைத் துதிக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?” அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் பரிசுத்தமானவன். எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம்.”

அவர்கள் ஒருவரையொருவர் பழிக்கலானார்கள். “எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே! நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம். எங்களின் இறைவன் இந்தத் தோட்டத்தைவிடச் சிறந்த ஒன்றை எங்களுக்கு வழங்கலாம். நாங்கள் அவன் பக்கமே திரும்புகிறோம்.”

இவ்வாறுதான் வேதனை வருகிறது. மறுமையின் வேதனையோ இதைவிடக் கடுமையானதாகும். அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!” (68:17-33)

இது எப்போது நடந்த சம்பவம் என்று குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மனித வாழ்வில் மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய நிரந்தரமான உதாரணமிது. நம் வாழ்விலும் இப்படிப்பட்ட மனிதர்களைக் கண்டிருப்போம்.

தன் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத அளவு பேராபத்துகளால் சூழப்பட்டிருந்த போதிலும் இஸ்லாம் எல்லாத் தடைகளையும் தாண்டி மேலோங்கியது. அது அப்படித்தான் மேலோங்கும்.

முஸ்லிம்கள் இஸ்லாத்தை முறையாகப் பின்பற்றும்வரை அவர்களுக்கு இறைவனின் உதவியும் பாதுகாப்பும் உண்டு. அவர்களை யாராலும் வெல்ல முடியாது. அவர்கள் சிறுபான்மையினராக, பலமற்றவர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் சத்தியம் பலமானது, அனைத்தையும் மிகைக்கக்கூடியது.

வரலாறுநெடுகிலும் அவர்கள் பெரும்பாலான இடங்களில் சிறுபான்மையினராகத்தான் இருந்திருக்கிறார்கள். இஸ்லாத்தைக் கைவிட்ட சமயங்களில்தான் அவர்கள் ஒடுக்கப்பட்டுள்ளார்கள்.

தனி மனிதராகத் தம் அழைப்புப் பணியைத் தொடங்கிய நபியவர்களுக்கு “உமக்கு அருளப்படுவதை எடுத்துரைப்பீராக. மனிதர்களின் தீங்குகளிலிருந்து அல்லாஹ் உம்மைப் பாதுகாப்பான்” என்றது திருக்குர்ஆன். நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்ட அந்தப் பகுதியில்தான் நபியவர்கள் பதிமூன்று வருடங்கள் தம் பணியைத் தொடர்ந்தார்கள். அவர்களின் பணியைத் தடுப்பதற்கு, அவர்களைக் கொலைசெய்வதற்கு எதிரிகள் தீட்டிய அத்தனை சதித்திட்டங்களையும் இறைவன் ஒன்றுமில்லாமல் ஆக்கினான். இறைவன் அளித்த பாதுகாப்பைத் தாண்டி அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆச்சரியமான வகையில் தூதருக்கு வழங்கப்பட்ட மார்க்கம் முழு உலகையும் சென்றடைந்தது.

நாம் பாதுகாக்கப்படுவது படை பலத்தினாலோ பெரும் எண்ணிக்கையினாலோ அல்ல, நம்மிடம் இருக்கும் சத்தியத்தினால். “உண்மையில் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்களே மேலோங்கி நிற்பீர்கள்” என்கிறது திருக்குர்ஆன்.

வெளிப்படையான காரணிகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் அவற்றைவிட அதிகமாக இஸ்லாம் கற்றுத்தந்த மறைமுகமான காரணிகள் கவனத்தில் கொள்ளப்படவும் பேணப்படவும் வேண்டும். நம்முடைய பார்வையும் இறைநம்பிக்கையற்றவர்களின் பார்வையும் வேறுவேறு. அவையிரண்டும் ஒருபோதும் ஒரு புள்ளியில் ஒன்றிணையாது. அவர்களின் குறுகிய பார்வையை நாம் பின்பற்ற ஆரம்பித்துவிட்டால் இவ்வுலகம் மறுவுலகம் என ஈருலகையும் நாம் இழந்துவிடுவோம்.

நாம் அழைக்க வேண்டியது இறைமார்க்கமான இஸ்லாத்தின் பக்கமே அன்றி இனவாதத்தின் பக்கமோ இன்னபிறவற்றின் பக்கமோ அல்ல. நாம் இறைவனின் உதவியை, அவன் அளிக்கும் மறைமுகமான பாதுகாப்பை விரும்பினால் இதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை.

Related posts

Leave a Comment