தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

முஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் – அறிமுகவுரை

[Destiny Disrupted: A History of the World Through Islamic Eyes – Tamim Ansary என்ற நூலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் அறிமுகப் பகுதி உங்களுக்காக…]

நான் முஸ்லிம் ஆஃப்கானிஸ்தானில் வளர்ந்தவன் என்பதால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பள்ளிக்குழந்தைகள் வழக்கமாகக் கேட்கும் உலக வரலாற்றுக்கு மாறான கதையாடலைக் கொண்ட ஒரு உலக வரலாற்றுக்கு நான் ஆரம்ப காலத்திலேயே அறிமுகப்படுத்தப் பட்டேன். அந்நேரத்தில் அது என் சிந்தனையை அவ்வளவாக உருவமைக்கவில்லை. ஏனெனில், அப்பொழுது நான் வரலாற்றை வெறும் மனமகிழ்ச்சிக்காகத்தான் படித்தேன். மேலும் ஃபார்சியிலும் அயர்ச்சியூட்டும் பாடப்புத்தகங்களைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை. எனது வாசிப்பு மட்டத்துக்குத் தகுந்த நல்ல ஆக்கங்கள் ஆங்கிலத்தில்தான் கிடைத்தன.

வி. வி. ஹில்யர் என்பவர் எழுதிய Child’s History of the World என்ற மிகவும் சுவாரசியமான புத்தகமே எனது ஆரம்பகாலத்தின் விருப்பத்துக்குரிய புத்தகமாக இருந்தது. நிறைய ஆண்டுகள் கழித்து, வளர்ந்ததன் பின் அதைத் திரும்பப் படிக்கும் பொழுதுதான் அதன் ஐரோப்பியமையவாதத் தன்மையும், மிக யதார்த்தமான அதன் இனவெறியையும் கண்டு நான் அதிர்ச்சியுற்றேன். ஹில்யர் ஒரு நல்ல கதைசொல்லி என்பதால், ஒரு குழந்தையாக அதனது மேற்கண்ட குணாம்சங்களை நான் அடையாளம் காணத் தவறிவிட்டேன்.

நான் ஒன்பதோ அல்லது பத்தோ வயதில் இருந்தபொழுது வரலாற்றறிஞர் அர்னால்ட் டாயின்பீ அவரது பயணத்தின் இடையே எங்களது சிறு கிராமமான லஷ்கர்காவை வந்தடைந்தார். அப்போது வரலாற்றை நேசிக்கும் புத்தகப் புழுவான ஒரு சிறுவன் அங்கு வாழ்வதாக யாரோ அவரிடம் சொல்லியிருப்பார்கள் போல. டாயின்பீ இதனால் உற்சாகமடைந்து என்னைத் தேநீர் விருந்துக்கு அழைத்தார். அந்த வயது முதிர்ந்த, சிவந்த பிரிட்டிஷ் கணவானுடன் நாணத்தோடு அமர்ந்து அவர் கேட்கும் கனிவான கேள்விகளுக்கு பெரும்பாலும் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் கைக்குட்டையைத் தனது சட்டைக்கையில் மடித்து வைத்துக்கொள்ளும் விநோதமான பழக்கம் ஒன்றுதான் அவரிடம் நான் கவனித்த ஒரே விஷயமாகும்.

நான் அவரிடமிருந்து விடைபெற்றபோது டாயின்பீ எனக்கு ஒரு அன்பளிப்புக் கொடுத்தார். அது, ஹெந்த்ரிக் வில்லெம் வான் லூன் எழுதிய The Story of Mankind என்ற புத்தகமாகும். புத்தகத்தின் தலைப்பே – ‘மனித குலம்’ அனைத்துக்குமான ஒரே கதை என்ற அந்தக் கருத்து – என்னைச் சுவாரசியப்படுத்தி சிலிர்க்க வைத்தது. ஏனெனில், மனித குலத்தின் ஒரு பிரதிநிதி என்றவோர் அர்த்தத்தில் இது என்னுடைய கதையாகவும் இருக்கிறது. அல்லது, குறைந்தபட்சம் எல்லோரும் பகிர்ந்துகொள்ளும் ஓர் பெரிய கதைக்குள் என்னை நான் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதன் பின்னர் நான் படித்த வரலாறு மற்றும் வரலாற்றுப் புனைவுகள் எல்லாம் அதன் எலும்புகளுக்குத்தான் தசை போர்த்தியது. அப்போதும் பள்ளியில் பாடத்திட்டத்தில் வழங்கப்பட்டிருந்த அயர்ச்சியான ஃபார்சி வரலாற்றைப் படிக்கவே செய்தேன். ஆனால் அவற்றைத் தேர்வுகளை வெல்வதற்கு மட்டுமே படித்து, தேர்வு முடிந்தவுடன் மறந்துவிடுவேன்.

வேறு கதையாடல்களின் எதிரொலிப்புகள் ஈனஸ்வரத்தில் எனக்குள் தங்கியிருந்திருக்க வேண்டும். ஏனெனில் நாற்பது ஆண்டுகள் கடந்து 2000 ஆவது ஆண்டில் பாடநூல் ஆசிரியராக நான் அமெரிக்காவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அவை எனக்குள் மறுபடியும் ஊற்றெடுத்தன. டெக்சாஸைச் சேர்ந்த பள்ளிப் பாடப் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர் ஒருவர் உயர்நிலைப் பள்ளிக்கான உலக வரலாற்றுப் பாடப்புத்தகத்தை அடிப்படையிலிருந்து உருவாக்குவதன் பொருட்டு என்னைப் பணிக்கு அமர்த்தினார். எனது முதல் வேலை புத்தகத்தின் உள்ளடக்கப் பட்டியலைத் தயாரிப்பது. உள்ளடக்கப் பட்டியலைத் தயாரிப்பது என்பது ஒட்டுமொத்த மனித வரலாற்றின் மேலோட்டமான வடிவத்தைக் குறித்த ஒரு பார்வையை உருவாக்குவதை உள்ளீடாகக் கொண்டிருந்தது. எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் புத்தகத்தின் அமைப்பு மட்டும்தான். கல்வி ஆண்டின் ராகத்தோடு பொருந்துவது போன்று அப்புத்தகம் பத்து அலகுகள் கொண்டதாகவும், ஒவ்வொரு அலகுக்கும் மூன்று அத்தியாயங்கள் எனவும் பிரிக்கப்பட வேண்டும் என்று எனது பதிப்பாளர் என்னை அறிவுறுத்தினார்.

ஆனால் ஒட்டுமொத்தக் காலத்தையும் எவ்வாறு பத்து (அல்லது முப்பது) பகுதிகளாகத் தொகுப்பது? உலக வரலாறு என்பது எல்லாக் காலத்திலும் நடந்த எல்லாச் சம்பவங்களையும் காலக்கிரமப்படி தொகுத்த பட்டியல் அல்ல; அது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளின் சங்கிலித் தொடர். அது கதையின் ஒட்டுமொத்த கோணத்தைத் தெரிவிப்பதற்குத் தக்கவாறு தேர்ந்தெடுக்கப்பட்டும் அடுக்கப்பட்டும் இருக்கவேண்டும் – இங்கு கதையின் கோணம்தான் முக்கியமானது.

நான் இந்த உற்சாகம் தரும் அறிவுப் புதிர்விளையாட்டுக்குள் மூழ்கினேன். ஆனால், எனது முடிவுகள் ஆலோசகர்களின் படையணி ஒன்றைக் கடந்துவர வேண்டி இருந்தது. பாடத்திட்ட வல்லுநர்கள், வரலாற்று ஆசிரியர்கள், விற்பனை நிர்வாகிகள், அரசுக் கல்வி அதிகாரிகள், தொழில்முறை அறிஞர்கள், ஏனைய தகுதியாளர்கள் ஆகியோர் இந்த அணியில் அடங்குவர். தொடக்கநிலை மற்றும் உயர்நிலைப் பாடப்புத்தகங்களின் விஷயத்தில் இது வழக்கமானதுதான். மேலும், அதுதான் சரியானது என்றும் கருதுகிறேன். ஏனென்றால் இப்புத்தகங்களின் வேலை சமூகத்தில் மிகச் சமீபமாக எது உண்மை என்ற ஏற்பை பெற்றிருக்கிறதோ அதைத் தெரிவிப்பது தானே தவிர அதைக் கேள்விக்குட்படுத்துவது அல்ல. செம்மையாக்க ஆசிரியரின் (Development Editor) முடிவுகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் பொருட்டு ஆலோசகர்களின் குழு ஒன்று இயங்கிக் கொண்டிருக்கும். இது உருவாக்கப்பட்டுவிட்ட புத்தகம் நடைமுறையில் இருக்கும் பாடத்திட்டத்தோடு ஒத்திசைவுடன் இருக்கிறதா என்பதை உறுதி செய்யும். ஏனெனில், அவ்வாறான ஒத்திசைவு எட்டப்படாத நிலையில் அப்புத்தகம் விற்பனைக்கே தகுதியற்றதாகிவிடும்.

நாங்கள் இத்தகைய செயல்முறையைக் கைக்கொண்ட போது எனக்கும் எனது ஆலோசகர்களுக்கும் மத்தியில் ஒரு இழுபறி நீடிப்பதைக் கவனித்தேன். உலக வரலாற்றில் இஸ்லாத்துக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும் என்ற எனது தொடர்ச்சியான விருப்பம் என்ற ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, நாங்கள் மற்ற எல்லா விஷயங்களிலும் ஒன்றுபட்டிருந்தோம். ஆனால், அவர்கள் அதை வெட்டுவதிலும் குறைப்பதிலும் மற்ற விஷயங்களைப் பேசும் தலைப்புகளுக்கு கீழ் அதைப் பெட்டிச் செய்தியாகக் குறுக்குவதிலும் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் யாருமே ‘எங்களது சொந்த நாகரிகத்தின்’ மீதான வரட்டு விசுவாசத்திலிருந்து பேசவில்லை. இஸ்லாம் ‘மேற்கை’ விட உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ யாருமே வாதிடவில்லை. நாங்கள் எல்லோருமே மனித குலத்தின் கதையில் அதிகமாகத் தாக்கம் செலுத்திய நிகழ்வுகள் குறித்து எங்களிடம் உள்ள சிறந்ததை வெளிப்படுத்த மட்டுமே செய்தோம்.

என் கருத்து எந்தளவு சிறுபான்மைக் கருத்தாக இருந்தது என்பதைப் புரியவைக்க வேண்டுமென்றால் எனது கருத்து தவறு என்பதற்கு மேல் வேறு எதுவாகவும் மதிக்கப்படவில்லை என்று சொல்லலாம். ஆகையால் நாங்கள் உள்ளடக்கப் பட்டியலோடு முடித்துக்கொண்டோம். அந்த உள்ளடக்கப் பட்டியலின் முப்பது அத்தியாயத்தில் ஒரே ஒரு அத்தியாயமே இஸ்லாத்தைப் பற்றியது. அந்த அலகின் ஏனைய இரு அத்தியாயங்கள் ‘கொலம்பியாவுக்கு முந்தைய அமெரிக்க நாகரீகங்கள்’ மற்றும் ‘பண்டைய ஆஃப்ரிக்கப் பேரசுசுகள்’ ஆகியனவாகும்.

வழக்கத்துக்கு மாறாகவும், தற்செயலாகவும், அதிக கவனம் கொடுக்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றுதான் இதுவும். உலக வரலாற்றுப் பாடத்தில் இதற்கு முந்தைய பாடத்திட்டச் சுற்றைச் சேர்ந்த, அதிகம் விற்பனையான Perspectives on the Past என்ற 1997இல் பதிப்பிக்கப்பட்ட புத்தகத்தில் முப்பத்தேழு அத்தியாயங்களுக்கு ஒரு அத்தியாயமே இஸ்லாத்தைப் பற்றிப் பேசியது. அந்த ஒரு (‘மத்திய காலங்கள்’ என்ற தலைப்பிடப்பட்டிருந்த அலகின் ஒரு பகுதியான) அத்தியாயத்திலும் பாதியை பைஸாந்தியப் பேரரசு ஆக்கிரமித்திருந்தது.

சுருக்கமாகச் சொல்வதானால்,  2001 செப்டம்பர் 11 க்கு ஒரு வருடம் முன்புவரை அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் ஒருமித்த கருத்து எனக்குச் சொல்லியது இதுதான், இஸ்லாம் என்பது அதன் தாக்கம் மறுமலர்ச்சி யுகத்துக்கு நீண்ட நாட்கள் முன்பே முடிந்துபோன, ஒரு முக்கியத்துவமற்ற நிகழ்வுப்போக்கு என்பதே அது. எங்களது உள்ளடக்கப் பட்டியலை நீங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டிருப்பீர்களானால் இஸ்லாம் என்ற ஒன்று இருந்தது என்பதே உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கும்.

அந்த நேரம் எனது முடிவுகள் மாறலாம் என்பதை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக, எனது சொந்த அடையாளம் குறித்த கேள்வியை அணுகுவதில் இஸ்லாத்துடன் எனக்கு தனிப்பட்ட ரீதியிலான உறவும் இருந்தது. நான் ஒரு முஸ்லிம் நாட்டில் பிறந்தவன் என்பது மட்டும் அல்லாது, ஒரு காலத்தில் நான் பிறந்த குடும்பத்தின் உயர்ந்த சமூக அந்தஸ்து எனது குடும்பத்தின் இறைபக்தி மற்றும் மார்க்கக் கல்வியின் காரணமாகத்தான் இருந்தது. ‘அன்சார்’ என்ற எங்களது குடும்பப்பெயரானது மக்காவின் ஒடுக்குமுறைகளிலிருந்து இறைத்தூதர் முஹம்மது தப்பவும், அவரது தூது காக்கப்படவும் உதவி செய்த மதீனா நகரின் இஸ்லாத்தைத் தழுவிய முதல் தலைமுறையைக் குறிக்கிறது. ‘அன்சார்’ என்றால் உதவியாளர்கள் என்று பொருள்.

மிகச்சமீபத்தில் கூட, உள்ளூர் அளவில் மதிப்புவாய்ந்த மெய்ஞானியான எனது பாட்டனாரின் முப்பாட்டனாரது அடக்கத்தலம் தர்ஹாவாக இருக்கிறது. அங்கு, அவரது சீடர்கள் இன்றும் கூட ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிறார்கள். மேலும், அவருடைய மரபு எனது தந்தையின் காலம்வரை அதனது இருப்பை உறுதி செய்திருந்தததால், ஒரு சராசரி நபரைவிட இந்த விஷயங்களைத் தெரிந்திருப்பது எங்களது குடும்பத்தின் மீது கட்டாயமானது. ஒரு காலத்திற்குப் பின்னர் எனது கண்ணோட்டம் உறுதியான முறையில் மதச்சார்பற்றதாக ஆகிவிட்டாலும் வளரும் காலத்தில் எனது சூழலில் இஸ்லாம் குறித்து நான் கேட்ட இஸ்லாமிய ஆன்மீகச் சம்பவங்கள், விளக்கவுரைகள், சிந்தனைகள் எல்லாம் எனக்குள் ஆழப்பதிந்திருந்தன.

அமெரிக்காவுக்குச் சென்றதன் பின்னர் நான் மதச்சார்பற்றவனாகவே நிலைத்துவிட்டேன். ஆனாலும், முஸ்லிம் உலகத்தில் நான் இருந்த காலங்களையெல்லாம் விட இங்கிருக்கும்போதுதான் இஸ்லாத்தின் மீது எனது ஆர்வம் அதிகரிப்பதை உணர்ந்தேன். இஸ்லாம் மீதான ஆர்வம் 1979இல் எனது சகோதரன் ‘அடிப்படைவாத’ இஸ்லாத்தை ஏற்றபொழுது இன்னும் அதிகமானது. நான் ஃபஸ்லுர் ரஹ்மான், சையத் ஹுசைன் நஸ்ர் போன்ற எழுத்தாளர்களைக் கற்பதன் மூலமாக இஸ்லாமிய தத்துவத்துக்குள்ளும்; எர்னஸ்ட் க்ரன்பாம், அல்பர்ட் ஹுரானி போன்ற கலாநிதிகளைக் கற்பதன் மூலம் அதன் வரலாற்றுக்குள்ளும் ஆழச்சென்றேன். நானும் எனது சகோதரனும் எங்கிருந்து வந்தோம், அல்லது அவனது விஷயத்தில், எங்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்பதையும் அறிந்துகொள்ள முயற்சித்தேன்.

எனது தனிப்பட்ட தொடர்பின் காரணமாக, இஸ்லாத்தின் முக்கியத்துவத்தை நான் மிகை மதிப்பீடு செய்ய நேரலாம் என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனாலும், ஒரு சந்தேகம் தொக்கிக்கொண்டு இருந்தது. எனது அளவீடு முற்றுமுழுதாகவே புறமெய்மையின் அடிப்படை (Objective Basis) அற்றதா? ஆறு வெவ்வேறு காலங்களில் இருந்த இஸ்லாமிய உலகத்தைக் காட்டும் இந்த ஆறு உலக வரைபடங்களையும் பாருங்கள்:

நான் ‘இஸ்லாமிய உலகம்’ என்று சொல்லும்போது, முஸ்லிம் பெரும்பான்மை மற்றும்/அல்லது முஸ்லிம் ஆட்சியாளர்களைக் கொண்ட சமூகங்களையே குறிக்கிறேன். முஸ்லிம்கள் இங்கிலாந்து, ஃபிரான்ஸ், அமெரிக்கா மற்றும் உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்தான். ஆனால் அதை வைத்துக்கொண்டு லண்டனையோ பாரிஸையோ அல்லது நியூயார்க்கையோ இஸ்லாமிய உலகத்தின் பகுதியாக வரையறுப்பது அபத்தமானது. நான் ‘இஸ்லாமிய உலகம்’ என்று சொல்லும்போது, அது எளிய விவரணையாகவே இருந்தாலும், அது பல நூற்றாண்டு கால புவியியல் யதார்த்தமாக இருந்தது என்பதை மறுக்கமுடியுமா? ஆசிய – ஆஃப்ரிக்க நிலப்பரப்பில் பரந்து விரிந்தும், ஐரோப்பாவுக்கும் கிழக்காசியாவுக்கும் மத்தியில் அதிர்வு தாங்கியாக இன்றும் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? புவிப்பரப்பில் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் இணைத்தால் கிடைக்கும் நிலப்பரப்பை விட அதிகமான நிலப்பரப்பை அது கொண்டிருக்கிறது. கடந்த காலத்தில், அது ஏக ஐக்கிய அரசியல் அமைப்பைக் கொண்டிருந்தது. மேலும், இன்றும் கூட சில முஸ்லிம்களிடமிருந்து அதன் ஒருமை மற்றும் அரசியல் ஐக்கியம் குறித்த கருதுகோள்கள் எதிரொலிப்பதைக் காண்கிறோம். 9/11 நடந்த சமயத்தில் உலக வரலாற்றில் ஒரு முக்கியமான சக்தியாக இஸ்லாத்தை ஏன் யாரும் அன்று கருத்தில் எடுக்கவில்லை என இந்தப் புவியியல் படங்களைப் பார்க்கும்பொழுது நான் வியப்படைகிறேன்.

9/11 க்குப் பிறகு, பொதுக்கருத்து மாறியது. மேற்கைச் சேர்ந்த முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் என்றால் என்ன, அந்த மக்கள் யார், அந்தப் பகுதியில் என்ன நடந்துகொண்டிருக்கிறது எனக் கேட்க ஆரம்பித்தார்கள். இதே கேள்விகள் ஒரு புதிய அவசரத்தோடு என்னையும் துளைக்க ஆரம்பித்தன. முப்பத்தெட்டு வருடங்களில் முதல் முறையாக அவ்வருடம் நான் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டேன். எனது பயணத்தில் நான் லண்டனின் புத்தக நிலையம் ஒன்றில் கண்டடைந்த, மெக்கில் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மதவியல் பேராசிரியராக இருக்கும் வில்ஃப்ரெட் காண்ட்வெல் எழுதிய, Islam in Modern History என்ற புத்தகத்தை எடுத்துச் சென்றிருந்தேன். ஸ்மித் இப்புத்தகத்தை 1957ஆம் ஆண்டு பதிப்பித்திருந்தார். ஆக, அவர் “நவீன வரலாறு” குறித்துப் பேசுவது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருந்தது. ஆயினும் அவரது பகுப்பாய்வுகள் குறிப்பிடத்தக்க வகையில் என்னைத் திகைக்கவைத்தன –உண்மையைச் சொல்ல வேண்டுமானால் என்னை அசைத்துவிட்டன– 2002 இல் வரலாறு எப்படி தன்னை வெளிப்படுத்திக்கொண்டது என்ற பொருளுக்கு அது பொருத்தமாகவும் இருந்தது.

ஸ்மித் நான் குழந்தைப் பருவத்திலிருந்து கொண்டிருந்த தரவுகளின் மீதும், பிற்கால வாசிப்புகளின் மீதும் ஒரு புது ஒளி பாய்ச்சினார். உதாரணமாக, எனது காபூல் நகரின் பள்ளி நாட்களில், சையத் ஜமாலுத்தீன் ஆஃப்கானி என்பவர்  குறித்து நான் அறிந்து வைத்திருந்தேன். நவீன இஸ்லாமிய வரலாற்றைப் பொறுத்தவரை அவர் ஒரு மாபெரும் ஆளுமை என்பதையும் நான் அறிந்துவைத்திருந்தேன். ஆனால் அவர் சர்வதேசிய இஸ்லாமியம் (pan-Islamism) பேசினார் என்பது தவிர்த்து –அது என்னளவில் பச்சையான முஸ்லிம் ஆதிக்கவாதமாகவேத் தெரிந்தது– அவர் எவ்வாறு இவ்வளவு பெரிய புகழை அடைந்தார் என்பது குறித்து என்னிடம் ஆழமான புரிதல் இருந்ததில்லை. இப்பொழுது ஸ்மித்தைப் படிக்கும்பொழுதுதான் ஒரு விஷயத்தை உணர்ந்து கொண்டேன். அது 2001இல் நம்மிடையே இவ்வளவு சப்தத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் ‘இஸ்லாமியம்’ என்ற அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், நூற்றுச்சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ‘இஸ்லாமியத்தின்’ இந்த இண்டலெக்சுவல் கார்ல் மார்க்ஸால்தான் செதுக்கித் தரப்பட்டிருக்கின்றன. இவ்வாறிருக்கையில், பெரும்பாலும் முஸ்லிமல்லாதவர்களுக்கு இந்தப் பெயரே எவ்வாறு தெரியாமலிருக்கிறது?

நான் இஸ்லாமிய வரலாற்றுக்குள் ஆழச்சென்றேன், முன்புபோல எனது சொந்த அடையாளம் குறித்த தேடலில் அல்ல. மாறாக, ஆஃப்கானிஸ்தானின் பயங்கரமான கதைகள், ஈரானின் குழப்பங்கள், அல்ஜீரியாவின் கிளர்ச்சிகள், பிலிப்பைன்ஸ் மற்றும் ஏனைய நாடுகளின் பிரச்சினை, மத்திய கிழக்கில் கடத்தல்கள் மற்றும் தற்கொலைப் படைத்தாக்குதல்கள், நாளுக்கு நாள் தீவிரமடையும் அரசியல் இஸ்லாத்தின் கடினப்போக்கு மற்றும் இப்போது எழுச்சி பெற்றிருக்கும் தாலிபான்கள் என, எனது காலத்தின் முஸ்லிம் உலகில் தோன்றியிருக்கும் அச்சத்திற்குரிய மாற்றங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியாக. நிச்சயமாக வரலாற்றின் மீதான ஒரு அணுக்கமான பார்வை உலகம் எவ்வாறு இன்றுள்ள நிலையை வந்தடைந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்தும்.

உலகம் எவ்வாறு இன்றுள்ள நிலையை அடைந்ததிருக்கிறது என்பதைப் படிப்படியாக நான் உணர ஆரம்பித்தேன். ஃபிரான்ஸ் அல்லது மால்டா அல்லது தென் அமெரிக்கா ஆகியவற்றின் வரலாற்றைப் போலல்லாது, ‘அந்தப் பக்கம்’ இருக்கும் இஸ்லாமிய நிலங்களின் வரலாறு என்பது எல்லோரும் பகிர்ந்துகொள்ளும் ஒரு ஏக கதையின் துணைக்கதை கிடையாது என்று நான் கருத ஆரம்பித்தேன். இஸ்லாமிய வரலாறு என்பது நான் அந்த டெக்சாஸ் பதிப்பாளர் மூலமாக பதிப்பிக்க முயன்ற ஒன்றிலோ, அல்லது, நான் இஸ்லாம் குறித்த அத்தியாயங்களை எழுதிய McDougall-Littell பதிப்பித்த ஒன்றிலோ இருக்கும் வரலாற்றெழுத்துடன் போட்டியிடும் மற்றும் அதைப் பிரதிபலிக்கும் தன்னளவிலேயே முழுமையானதொரு மாற்று வரலாறாகவே அது பெரும்பாலும் காட்சி தந்தது.

இவ்விரு வரலாறுகளும் ஒரே பிரதேசத்தில்தான் பிறந்ததன, பண்டைய ஈராக்கின் டைக்ரிஸ் மற்றும் யூஃப்ரட்டீஸ் நதிக்களுக்கிடையில். மேலும் அவை திரும்பவும் அதே பிரதேசத்திற்கே வந்து சேர்ந்திருக்கின்றன, மேற்கும் இஸ்லாமிய உலகும் முக்கியமான ஆட்டக்காரர்களாக இருக்கும் இந்த உலகளவிய யுத்தத்தில். எவ்வாறிருப்பினும், இவை இதற்கிடையில் வெவ்வேறான –மற்றும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒரே மாதிரியான– நிலப்பரப்புகளைக் கடந்து வந்திருக்கின்றன.

ஆம், ஆச்சரியப்படத்தக்க வகையில், ஒரே மாதிரியான: திரும்பிப் பார்க்கையில், உதாரணத்திற்கு, மேற்கத்திய உலக வரலாற்றுச் சட்டகத்துக்குள் பண்டைய காலத்தில் ஒரு பெரிய பேரரசு ஏனையவற்றை மிகைத்து நின்றதை நாம் பார்க்கிறோம். அதுதான் ரோம். அங்குதான் உலகை ஓர் குடை கீழ் ஆளும் கனவு பிறந்தது.

இஸ்லாமிய உலகை ஒருவர் எங்கிருந்து திரும்பிப் பார்த்தாலும், சர்வதேச அரசு குறித்த கனவை தன்னகத்தே கொண்ட யாவற்றையும் சூழ்ந்து நிற்கும் ஒரு தீர்மானகரமான பேரரசு நிற்பதைக் காண முடியும். ஆனால் அது ரோம் அல்ல. அது ஆரம்பகால இஸ்லாத்தின் கிலாஃபத்தாகும்.

இவ்விரு வரலாறுகளிலுமே ஆரம்பகாலப் பேரரசுகள், அவை மிகப்பெரிதாக வளர்ந்துவிட்டன என்ற காரணத்தினாலேயே பல பாகங்களாக உடைகின்றன. பின்னர் காய்ந்து உதிரும் நிலையில் இருந்த இந்த பேரரசுகள் வடக்கிலிருந்து வரும் நாடோடி காட்டுவிலங்காண்டிகளால் தாக்கப்படுகின்றன –இங்கு இஸ்லாமிய உலகைப் பொறுத்தவரை ‘வடக்கு’ என்பது மத்திய ஆசியாவின் ஸ்டெப் புல்வெளியாகும்; மேலும், அந்த உலகில் நாடோடிக் காட்டுவிலங்காண்டிகள் என்பது ஜெர்மானியர்களை அல்லாது துருக்கியர்களையே குறிக்கும். இவ்விரண்டிலுமே, படையெடுப்பாளர்கள் ஒரே பெரிய அரசை உடைத்துத் தனித்தனி உறுப்பாக்கி, சிறு சிறு இராஜ்யங்களாக்குக்கிறார்கள். அச்சிறு இராஜ்யங்கள் ஒன்றிணைக்கும் ஒரே மத வைதீகத்தால் (Single, Unifying Religious Orthodoxy) தைக்கப்பட்டு ஒட்டுவேலையாக்கப்படுகின்றன: அது மேற்கில் கத்தோலிக்கம், கிழக்கில் சன்னி இஸ்லாம்.

உலக வரலாறு என்பது எப்பொழுதுமே “நாம்” எப்படி இங்கு, இப்பொழுது வந்து சேர்ந்தோம் என்பதன் கதைதான். ஆகையால் கதையாடலின் வடிவத்தை உள்ளார்ந்த அளவில் தீர்மானிப்பது “நாம்” என்று நாம் யாரைக் குறிக்கிறோம் என்பதும், “இங்கே மற்றும் இப்பொழுது” என்பதை நாம் எவ்வாறு பொருள் கொள்கிறோம் என்பதும்தான். மேற்கத்திய உலக வரலாறு, மரபு ரீதியாகவே ‘இங்கே மற்றும் இப்பொழுது’ என்பதை ஜனநாயக – தொழில்மய (மற்றும் பின் தொழில்மய) நாகரிகம் என்று முன்தீர்மானம் (Presume) செய்துகொண்டிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களிலே (United States) இவ்வகை முன்தீர்மானம் மேலும் வளர்ந்து, வரலாறு என்பது அந்நாட்டின் அடிப்படைக் கொள்கைகளான சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றைப் பிறப்பித்து, அதன் விளைவாக அது இப்புவியை அதன் எதிர்காலத்துக்கு அழைத்துச்செல்லும் வல்லரசு நாடாகும் என்ற முன்னணுமானத்தைக் கொண்டிருக்கிறது. இந்த அடிப்படை அனுமானம் வரலாற்றுக்கு ஒரு திசையை உருவாக்கி, அதன் இறுதியை நாம் இப்பொழுது பயணித்துக்கொண்டிருக்கும் சாலையின் முடிவில் வைக்கிறது. இது நம்மை எல்லா மக்களுமே இதே திசையில் தான் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள், அதில் சிலர் –தாமதாகமாகத் தொடங்கியதன் காரணமாகவோ அல்லது மெதுவாக நகர்வதாலோ– நம்மை விடப் பின் தங்கியிருக்கலாம் (அதன் காரணமாகத்தான் அவர்களை நாம் “வளரும் நாடுகள்” என்கிறோம்) என்ற முன்னனுமானத்துக்கு இரையாக்கிவிடும்.

பின் தொழில்மய, மேற்கத்திய ஜனநாயக சமூகத்தின் தொலைநோக்கான இலட்சிய எதிர்காலமே வரலாற்றின் இறுதிக்கட்டமாக எடுத்துக்கொள்ளப்படுகையில், ‘இங்கே மற்றும் இப்பொழுதுக்கு’ இட்டுச்செல்லும் கதையாடல் கீழ்க்கண்டதைப் போன்ற கட்டங்களைக் கொண்டிருக்கும்:

  • நாகரிகத்தின் பிறப்பு (எகிப்து மற்றும் மெசபத்தோமியா)
  • செவ்வியல் காலம் (கிரீஸ் மற்றும் ரோம்)
  • இருண்ட காலம் (கிறிஸ்தவத்தின் எழுச்சி)
  • மறுபிறப்பு: மறுமலர்ச்சி மற்றும் சீர்திருத்தம்
  • அறிவொளிக்காலம் (கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல்)
  • புரட்சிகள் (ஜனநாயக, தொழில் மற்றும் தொழில்நுட்பம்)
  • தேசிய அரசுகளின் எழுச்சி: பேரரசுக்கான போட்டி
  • முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள்
  • பனிப்போர்
  • ஜனநாயக முதலாளித்துவத்தின் வெற்றி

ஆனால் இஸ்லாமியக் கண்களின் வழியே உலக வரலாற்றைப் பார்த்தால் எவ்வாறு இருக்கும்?

அதே இறுதிக்கட்டத்தை நோக்கி மிக மெதுவாக நகரும், மேற்கின் பலவீனமான பிரதியாக நாம் நம்மைக்  கருதமுடியுமா? நான் அவ்வாறு கருதவில்லை. ஆனால் ஒரு விஷயம், ஒட்டுமொத்த காலத்தையும் “முன்னே” மற்றும் “பிறகு” என்று பிரிக்கும் ஒரு பெரிய திரையை நாம் காண்போம்: எமது சுழிய ஆண்டு (Year Zero) இறைத்தூதர் முஹம்மது மக்காவிலிருந்து மதீனாவிற்குப் புலம்பெயர்ந்த, முஸ்லிம் சமூகம் பிறப்பதற்கு காரணமாக இருந்த ஹிஜ்ராவாகவே இருக்கும். எமக்கு இந்தச் சமூகம்தான் “நாகரிகமான” என்பதன் பொருளும் உருவமும். மேலும், இந்த இலட்சியத்தை முழுமையாக்குவது என்ற உள்ளார்ந்த ஆர்வமும் ஆற்றலுமே வரலாற்றுக்கு அதன் வடிவத்தையும் திசையையும் வழங்குவதாக இருக்கும்.

ஆனால், சமீபத்திய நூற்றாண்டுகளில், வழக்கமான ஓட்டத்துக்கு மாறாக வழிதவறியிருப்பதை நாம் அவதானிப்போம். சமூகம் விரிவடைவது நின்று, குழப்பமடைந்து, நம்மோடு போட்டியிடும் மற்றொரு வரலாற்றுத் திசை என்னும் எதிர்நீரோட்டம் ஒன்றினால் அலைக்கழிந்து, பாதை மாறி அதிர்ந்து நிற்பதைக் காண்போம். முஸ்லிம் மரபின் வாரிசுகளாக நாம் வெற்றியில் அல்லாது தோல்வியிலேயே நமது வரலாற்றுக்கான பொருளைத் தேடுவதற்குக் கட்டாயப்படுத்தப்படுவோம். நாம் இரண்டு உந்துதல்களால் எதிரெதிர்த் திசையில் இழுக்கப்படுவதை உணர்வோம்: வரலாற்றின் ஓட்டத்துக்கு தகுந்தாற்போல் நாம் திசைவழிப்பட “நாகரிகமடைதல்” (Civilized) குறித்த நமது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, “நாகரிகமடைதல்” குறித்த நமது பார்வையுடன் திசைவழிப்படுவதற்கு, வரலாற்றின் ஓட்டத்துக்கு எதிராக நாம் சண்டையிட வேண்டும்.

இஸ்லாமியச் சமூகம் இன்று எதிர்கொள்ளும் தேங்கிய நிலையை அதன் உலக வரலாற்றுக் கதையாடலைக் கட்டுவதற்கான ‘இங்கு-மற்றும்-இப்பொழுதாக’ எடுத்துக்கொண்டால், பிறகு அக்கதையைப் பின்வரும் கட்டங்களைப் போன்று பிரித்துக்கொள்ளலாம்:

  • பண்டைய காலம்: மெசபத்தோமியா மற்றும் பாரசீகம்
  • இஸ்லாத்தின் பிறப்பு
  • கிலாஃபத்: சர்வதேச ஐக்கியத்துக்கான விழைவு
  • உடைதல்: சுல்தானத்களின் காலம்
  • பேரழிவு: சிலுவைப்போர் வீரர்கள் மற்றும் மங்கோலியர்கள்
  • மறுபிறப்பு: மூன்று பேரரசுகளின் காலம்
  • கிழக்கை மேற்கு முந்துதல்
  • சீர்திருத்த இயக்கங்கள்
  • மதச்சார்பற்ற நவீனத்துவவாதிகளின் வெற்றி
  • இஸ்லாமிஸ்ட் எதிர்வினை

இலக்கிய விமர்சகர் எட்வர்ட் சைத், சில நூற்றாண்டுகளாகவே மேற்கத்திய உலகு, தங்களது மோசமான “மற்றமை” பற்றிய பார்வையுடன், கேளிக்கைகளில் ஊறித்திளைக்கும் பகட்டு வாழ்க்கை எனும் பொறாமையுணர்ச்சி கொண்ட பிம்பத்தை ஒரு “கீழையியல்” மாயாவாதக் கட்டமைப்பாக இஸ்லாமிய உலகு பற்றி உருவாக்கியிருக்கிறது என்று வாதிடுகிறார். ஆம், மேற்கத்தியக் கற்பனையில் இஸ்லாம் நுழைந்த எல்லைவரை அது குறித்த விவரணை அப்படித்தான் இருந்தது.

ஆனால் என்னுள் அதிக ஆர்வம் ஏற்படுத்துவது என்னவென்றால், ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ஏன் இஸ்லாம் பற்றி பெரும்பாலும் எந்தவிதமான விவரணைகளுமே செய்யப்படவில்லை என்பதுதான். உதாரணத்திற்கு, ஷேக்ஸ்பியரின் காலத்தில் முக்கியமான உலக ஆற்றல்கள் மூன்று இஸ்லாமியப் பேரசுசுகளில் மையம் கொண்டிருந்தன. அவரது ஆக்கங்களில் அந்த முஸ்லிம்களெல்லாம் எங்கே சென்றார்கள்? காணவில்லை. மூர்கள் முஸ்லிம்கள் என்று உங்களுக்கு முன்பே தெரியாதென்றால், அதை உங்களால் ‘ஒத்தெல்லோ’விலிருந்து அறிந்துகொள்ள முடியாது.

இங்கு இருபெரும் உலகங்கள் அருகருகே இருக்கின்றன. வியப்புக்குரியது என்னவென்றால், எவ்வளவு குறைவாக இவை ஒன்றையொன்று கவனித்துக் கொண்டன என்பதுதான். மேற்கத்திய மற்றும் இஸ்லாமிய உலகங்கள் இரு தனிநபர்களாக இருப்பார்களானால், அவர்களுக்கிடையில் சுமுகமான உறவு இல்லாதிருப்பதன் அறிகுறிகளைக் காணலாம். நாம் கேட்கலாம், “இவ்விருவருக்கும் நடுவில் என்னவாயிற்று? இவர்கள் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தவர்களா? துஷ்பிரயோகத்தின் வரலாறு எதுவும் இவர்களின் விஷயத்தில் இருக்கிறதா?”

ஆனால், பரபரப்பை தோற்றுவிக்காத வேறொரு விளக்கம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். வரலாறு நெடுகிலும் மேற்கும், இன்று இஸ்லாமிய உலகமாக எது இருக்கிறதோ அதன் கருவும், இரு வெவ்வேறு பிரபஞ்சங்களாகவே இருந்திருக்கின்றன. இரண்டும் அதன் உள்ளகப் பிரச்சினைகளில் கவனங்கொண்டு இருந்திருக்கின்றன. இரண்டும் உலக வரலாற்றின் மையமாகத் தன்னையே கருதிக்கொண்டு வெவ்வேறான கதையாடல்களை வாழ்ந்து கழித்திருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் இரண்டு கதையாடல்களும் எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும்வரை இதுதான் நிலைமை. அந்தக் கட்டத்தில் இரண்டிலொரு கதையாடல் மற்றதற்கு வழிவிடவேண்டியதாயிற்று. ஏனெனில் இரண்டுமே மற்றதன் எதிர்நீரோட்டம்தான். ஆற்றல் மிக்கதாயிருந்த மேற்கத்திய நீரோட்டம் வெற்றிகொண்டு அதன் எதிர்நீரோட்டத்தை அதனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

தான் வகித்து வந்த இடத்தைப் பறிகொடுத்த வரலாறோ அதோடு நின்றுவிடவில்லை. அது மேல்தளத்தின் கீழே இன்னும் வேகமாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் தற்கால உலகின் வெப்பப் பகுதிகளை (Hot Spots) கவனித்தால் –காஷ்மீர், ஈராக், செச்சன்யா, பால்கன், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன்– அவை வரைபடங்களிலிருந்து மறைந்துவிட்ட ஏதோ ஒரு இருப்பின் எல்லைகளாக இருப்பதைக் காணலாம், அது தான் இறப்பதற்கு எதிராகக் கைகால்களை அசைத்துப் போராடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கதையைத்தான் நான் பின்வரும் பக்கங்களில் சொல்லப்போகிறேன். மேலும் இங்கு நான் “கதை” என்பதற்கு அழுத்தம் தருகிறேன். இது ஒரு பாடப்புத்தகமோ, கல்விப்புலப் புத்தகமோ கிடையாது. நாம் தேநீர்க் கடையில் சந்தித்து நீங்கள் “இந்த இணைகோட்டில் பயணித்த உலக வரலாறு பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று கேட்டால் நான் என்ன சொல்வேனோ அதுதான் இந்தப் புத்தகம். நான் முன்வைக்கும் வாதங்களை பல்கலைக்கழக நூலக அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற புத்தகங்களில் காணலாம். கல்வியியல் மொழியும், அடிக்குறிப்புகளும் உங்களுக்குப் பிரச்சினை இல்லையென்றால் நீங்கள் அங்கு படித்துக்கொள்ளுங்கள். கதையின் கோணம்தான் உங்களுக்கு வேண்டுமென்றால் இங்கு வாருங்கள்! நான் ஒரு புலமையாளர் இல்லையென்றாலும், வரலாற்றின் கச்சாப் பொருளிலிருந்து முடிவுகளைப் (Conclusions) பெறும் புலமையாளர்களின் ஆக்கங்களிலிருந்தும், புலமையாளர்களின் ஆய்வுகளிலிருந்து மீமுடிவுகளைப் (Meta-Conclusions) பெறும் கல்வியாளர்களின் ஆக்கங்களிலிருந்தும் நான் பயனடைந்துள்ளேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடைபெறும் இந்த வரலாற்றில், மிகத் தொலைவில் இருக்கும் ஒரு அரை நூற்றாண்டுக்கு நான் ‘தேவைக்கதிகமான’ என்று கருதும் அளவுக்கு அதிகப் பக்கங்களை ஒதுக்கி இருக்கிறேன். நான் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் அதிகம் அலைவுறுவது ஏனெனில் அக்காலகட்டம்தான் இஸ்லாத்தின் தோற்றக் கதையாடலான (Founding Narrative) இறைத்தூதர் முஹம்மது மற்றும் அவரது நான்கு பின்பற்றாளர்களின் பணிக்காலம். நான் இதைத் தனிப்பட்ட அகவாழ்வின் மீது தாக்கம் செலுத்தும் மானுட நாடகமாக விவரிக்கிறேன். ஏனென்றால், இதை முஸ்லிம்கள் அவ்வாறுதான் தெரிந்துவைத்திருக்கிறார்கள். கல்வியாளர்கள் இக்கதையைச் சந்தேகத்துடனேயே அணுகுகிறார்கள். அவர்கள் குறைவாகவே புறவயமாக இருக்கும் முஸ்லிம் விவரணைகளுக்கு மாற்றாக, முஸ்லிமல்லாத மூலங்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். ஏனெனில், அவர்களது கரிசனை “உண்மையாகவே நடந்ததை” வெளிக்கொணர்வதாக இருக்கிறது. எனது நோக்கமோ, முஸ்லிம்கள் என்ன நடந்ததாக கருதுகிறார்களோ அதை விவரிப்பதுதான். ஏனெனில், அதுதான் இவ்வளவு காலமும் முஸ்லிம்களின் உந்துசக்தியாக இருந்திருக்கிறது. மேலும், அதுதான் உலக வரலாற்றில் முஸ்லிம்களின் பங்கையும் எடுத்துரைக்கும்.

இங்கு இஸ்லாத்தின் தோற்றம் குறித்து ஒரு முக்கியத் தகவலைச் சொல்ல வேண்டும். பழைய மதங்களான யூதம், பௌத்தம், கிறிஸ்த்தவம் ஆகியவற்றைப் போலல்லாது முஸ்லிம்கள் அவர்களது வரலாற்றை அது நடந்த காலத்திலேயே சேகரித்து, மனனம் செய்து, ஓதிப் பாதுகாத்தார்கள். மேலும், அவர்கள் அதை வெறுமனே பாதுகாக்க மட்டும் செய்யவில்லை, மாறாக ஒவ்வொரு சம்பவத்தையும் அதற்கு சாட்சி வழங்குபவர்களின் பெயர்கள், அச்செய்தியை முதலில் எழுதியவரிலிருந்து அதை வழிவழியாகக் கடத்தியவர்களின் பட்டியல் என ஒரு நீதிமன்றத்தில் தடயம் ஒன்றை நிரூபனம் செய்யும் ஆதாரங்களின் சங்கிலித்தொடர் போன்று செயல்படும் உசாத்துணைகளோடு (References), அதன் மூலாதாரங்களின் கூட்டுக்குள் வைத்துப் பின்னினார்கள்.

இது முஸ்லிம் மூலாதாரக் கதைகள் வெறும் உவமைக்கதைகளாக (Parables) மட்டும் அணுகப்பட முடியாது என்பதையே வலியுறுத்துகி்றது. உவமைக்கதைகளிடம், அது புனையும் நிகழ்வு உண்மையிலேயே நடந்ததா என்பதற்கு நாம் ஆதாரம் கேட்பதில்லை, அதுவல்ல முக்கியம். அக்கதை உண்மையிலேயே நடந்ததா என்பது குறித்து நாம் கவலைப்படுதில்லை. அதன் பாடம்தான் உண்மையாக இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். முஸ்லிம் கதைகள் அத்தகைய பாடங்களைப் பொதியேற்றிக் கொண்டு வருவதில்லை. அக்கதைகள் இலட்சிய வெளியில் உறையும் இலட்சியப் புருஷர்கள் பற்றிய கதையுமல்ல. அவை உண்மையான மனிதர்கள் நடைமுறைப் பிரச்சினைகளோடு மல்லுக்கட்டியது குறித்த, யதார்த்த வரலாற்றின் புழுதிபறக்கும் பதிவுகளாகும். மேலும், அவற்றிலிருந்து நமக்கு என்ன பாடம் வேண்டியிருக்கிறதோ அதை நாம் எடுத்துக்கொள்கிறோம்.

இதன் பொருள் முஸ்லிம் கதைகள் உருவகத் தன்மை கொண்டவை என்பதையோ, அவற்றில் சில புனைந்துரைக்கப்பட்டவை என்பதையோ, அவற்றில் பலவும் அல்லது எல்லாமுமே அவற்றை அறிவித்தவர்களது தனிப்பட்ட அல்லது அந்நேரத்தைய செயல்திட்டங்களுக்குத் (Agendas) தகுந்தவாறு மாறுபாடுகளுக்கு உட்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது என்பதையோ மறுப்பது கிடையாது. இதன்பொருள் முஸ்லிம்கள் தங்களது அடித்தளக் கதையாடலை வரலாற்றுப் பதிவுகள் என்ற உணர்வோடுதான் கடத்தியிருக்கிறார்கள், மேலும் நாம் பண்டைய ரோமில் சுல்லாவுக்கும் மரியஸுக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை எப்படித் தெரிந்துகொள்கிறோமோ அதுபோன்றே இந்த மக்களையும் அவர்களது காலத்தைய நிகழ்வுகளையும் தெரிந்துகொள்கிறோம் என்பதுதான். இக்கதைகள் வரலாற்றுக்கும் புராணிகத்துக்கும் இடையில் எங்கோ உறைகின்றன. மேலும், அக்கதையை அதன் மானுட நாடகப் பரிமாணத்தை அழித்துவிட்டுச் சொன்னால், அது முஸ்லிம்களுக்கு எத்தகைய அர்த்தத்தை வழங்கியது என்பதையும், முஸ்லிம்கள் இத்தனை நூற்றாண்டுகளாக செய்த விஷயங்களை கவனிப்பதையும் தவறவிட்டுவிடுவோம். இதுதான் நான் என்ன முறையில் கதைசொல்ல வேண்டும் என்பதற்குப் போட்டிருக்கும் திட்டம். நீங்கள் என்னுடன் வண்டிக்குள் இருக்கிறீர்கள் என்றால் சீட்பெல்ட்டை போட்டுக்கொள்ளுங்கள், பயணத்திற்குத் தயாராவோம்.

தமிழில்: ஆஷிர் முஹம்மது

Related posts

One Thought to “முஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் – அறிமுகவுரை”

  1. Mohamed kutty

    ஒரு பாகத்தோடு நின்று விட்டதே

Leave a Comment