குறும்பதிவுகள் கேள்வி-பதில்கள் மொழிபெயர்ப்பு 

ஹிஜாப் சட்டம் எந்த விதத்தில் ஒடுக்குமுறையானது?

Loading

[Daniel Haqiqatjou  எழுதிய What is Oppressive About Iranian/Saudi Hijab Requirements? என்ற பதிவின் தமிழாக்கத்தைக் கீழே தருகிறோம்]

மேற்கு ஊடகங்களில் தலைப்புச் செய்தி:

ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்ற வகையில் ஹிஜாப் விதிமுறைகளை மீற முன்வரும்படி மேற்குலகச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஈரானியப் பெண்கள் வேண்டுகோள்!

கேள்வி: ஹிஜாப் சட்டம் எந்த விதத்தில் ஒடுக்குமுறையானது?

பதில்: பெண்கள் தாங்கள் விரும்புவதை அணிய முடியாது என்ற வகையில் அதுவொரு ஒடுக்குமுறை. (தமக்கு விருப்பமானதை) தேர்வுசெய்ய அவர்களால் முடிவதில்லை.

கே: மக்கள் தாம் விரும்பியபடி எதையும் அணியலாம் (கட்டற்ற சுதந்திரம்) என அனுமதிக்கும் நாடு என்று உலகில் ஏதேனுமொரு நாடு உண்டா?

ப: நிச்சயம் உண்டு. மேற்கத்திய நாடுகளைச் சொல்லலாம்.

கே: நீங்கள் சொல்லும் மேற்கத்திய நாடுகளில், ஒரு நபரால் தனது பிறப்புறுப்புகளை வெளிக்காட்டிய வண்ணம் பொது இடங்களில் நடமாட முடியுமா?

ப: இல்லை, முடியாது.

கே: தன்னை மறைத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டுவது உங்கள் வரைவிலக்கணத்தின்படி ஒடுக்குமுறை ஆகிவிடுமே? அப்படியென்றால், இந்த மாதிரியான நாடுகளில் கூட ஒருவர் எல்லா நேரங்களிலும் தாம் விரும்பியதைத் தேர்வு செய்ய முடியாதுதானே?

ப: அப்படியல்ல. ஒருவரின் பிறப்புறுப்புகளை வெளிக்காட்டுவதென்பது பொது ஒழுக்கம் மற்றும் நாகரிக விதிகளை மீறுவதாகிறது. ஒருவரின் தலைமுடியை வெளிக்காட்டுவது இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

கே: உடலின் ஒரு பாகத்தை (பிறப்புறுப்பு) வெளிக்காட்டுவது ஒழுக்க மற்றும் நாகரிக விதிகளை மீறுவது என்பதாகவும், அதே சமயம் உடலின் மற்றொரு பாகத்தை (தலைமுடியை) வெளிக்காட்டுவது முழுவதும் ஏற்புடையது என்பதாகவும் யார் தீர்மானித்தது?

ப: ம்ம்.. அது இயல்பான ஒன்று.

கே: அதை யார் தீர்மானித்தது? என்ன அடிப்படையில்? இந்தக் கருத்து எங்கிருந்து வருகின்றது?

ப: அது வந்து…

கே: கடந்த காலங்களையும் தற்காலத்தையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான கலாச்சாரங்களும் சமூகங்களும் ‘நிர்வாணம்’ என்பது குறித்து
வெவ்வேறு வகையான கருதுகோள்களையும் பிரிகோடுகளையும் கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாதா?

ப: அது வந்து…

கே: மேற்கத்திய நியமங்களையே உலகம் முழுவதற்குமான (இரான், சவூதி அல்லது ஆஃப்கானிஸ்தான் போன்ற இடங்களிலும் கூட) பொதுவிதிகளாக எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கோருவதற்கோ, அல்லது குறைந்தபட்சம் அதனை நியாயப்படுத்துவதற்கோ உங்களிடம் கொள்கை அடிப்படை என்று ஏதும் உண்டா?

ப: அது வந்து…

பொது இடங்களுக்கான முஸ்லிம் உடை ஒழுங்குகள் என்பவை இறைவழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைந்தவை. உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டும், எதனை மறைக்கக் கூடாது என்பது குறித்த நம்முடைய நம்பிக்கையானது இறைவழிகாட்டுதல்களிலிருந்து வருவது. இறைவனை நம்புகிறவர்கள் என்ற அடிப்படையில் நாம் அந்த இறைவழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதோடு, அவற்றின் அகிலத்துவ முக்கியத்துவத்தையும் மெய்யறிவையும் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறோம்.

பிறருக்கு இவை எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் முஸ்லிம்களிடத்தில் இவ்வுயர் விதிகளிலிருந்து பிறக்கும் தர்க்க நியாயமேனும் இருக்கின்றது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

அதே சமயம், எல்லோர் மீதும் இன்று திணிக்கப்படும் மேற்கத்திய உடை ஒழுங்குகளோ வெறுமனே கலாச்சார நெறிமுறைகளின் அடிப்படையில் அமைந்தவை. கலாச்சார நெறிமுறைகளுக்கு எவ்விதக் கொள்கை அடித்தளமும் இல்லை. அவை அனைத்தின் சாராம்சமும் இவ்வளவுதான்: “இதைத்தான் நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம்”, அல்லது “எங்களின் முன்னோர்கள் இதைத்தான் கடைப்பிடித்து வந்தார்கள். எங்களுக்கும் அதுவே வசதியாக இருப்பதால், நாங்களும் அப்படியே பின்பற்றுகிறோம்.” வேறொன்றுமில்லை.

இருந்தபோதும், உடையொழுங்கு பற்றிய தம்முடைய கண்ணோட்டங்களின் விஷயத்தில் அவர்கள் நம்பிக்கை மிக்கவர்களாகவும் மூர்க்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். அதே சமயம் நமது கண்ணோட்டங்கள் மிக வலுவான அடிப்படைகளின் மீதமைந்தவையாக இருக்கும் நிலையிலும் கூட, நாம் எளிதில் வளைந்துகொடுத்து “தேர்வு உரிமை”, “சுதந்திரம்” போன்ற பொருளற்ற பசப்பு வார்த்தைகளுக்காக (எளிய குறுக்கு விசாரணையைக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் பல்லிளித்துவிடக் கூடியவை இவை) அவற்றைத் தூக்கி எறிந்துவிடுகிறோம்.

குறிப்பு:

முஸ்லிம் பெண்கள் எதற்காக ஹிஜாப் அணியவேண்டும் என்பதற்கான “காரணத்தை” நாம் மேலே விளக்க முயலவில்லை. மாறாக இது இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம் சமூகங்களின் மீதும் ‘ஒடுக்குமுறையாளர்கள், பகுத்தறிவற்றவர்கள், தேர்வுச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்காதவர்கள்’ என்பதாக வைக்கப்படும் குறிப்பானதும் பொதுவானதுமான விமர்சனத்துக்கான பதில் மட்டுமே.

(தமிழில்: நாகூர் ரிஸ்வான்)

Related posts

Leave a Comment