கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 1) – மரியம் ஜமீலா

Loading

[மரியம் ஜமீலா Islam in Theory and Practice என்ற தனது நூலில் அபுல் அஃலா மௌதூதி பற்றி எழுதியுள்ள அத்தியாயத்தை இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். நீண்ட ஆக்கம் என்பதால் பகுதி பகுதியாக வெளியிடுகிறோம். அதில் முதற் பகுதி கீழே.]

மௌலானா மௌதூதி, 1903 செப்டம்பர் 25 இல், டெக்கானின் ஹைதராபாதிலுள்ள ஔரங்கபாதில் பிறந்தார். அவரது குடும்பத்தினர், தங்களை காஜா மொயினுத்தீனின் நேரடி வழித்தோன்றல்கள் என்று உரிமை கோரினர். காஜா உஸ்மான் ஹார்வானி, ஹாஜி ஷெரிஃப் ஸந்தானி ஆகியோரின் சீடராக இருந்தவர் காஜா மொயினுத்தீன். அதே போல், காஜா குத்புத்தீன் மௌதூதி சிஷ்தியின் பின்பற்றாளராக இருந்தவர் ஹாஜி ஷெரீஃப் ஸந்தானி.

மௌலானா மௌதூதியின் தந்தை ஒரு வழக்கறிஞர். அவர் அலிகரில் கல்வி கற்றிருந்தார். அவரது தாயாரோடு உடன் பிறந்தவரின் பிள்ளைதான் சர் செய்யது அஹ்மது கான். அவ்வாறிருந்தும், ஆங்கிலேய ஆட்சியின் மீதும் அதன் ஆதரவாளர்கள் மீதும் தான் கொண்டிருந்த கவர்ச்சியை, தன் வாழ்வின் பின்னாட்களில் அவர் வெகுவாக இழந்தார். இவ்வாறு மேற்கத்திய நாகரிகத்தை விட்டு விரண்டோடி, தனது ஆண் மக்களை ஆங்கிலப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப விரும்பாமல் வீட்டிலேயே அரபி, ஃபார்சி, உருது ஆகிய பாடங்களை முழுமையாக அவர்கள் கற்க ஏற்பாடு செய்தார்.

மௌதூதி பதினாறு வயதை அடைந்த போதே தன் தந்தையை இழந்தார். பின்னர், ஒரு பத்திரிக்கையாளராகப் பணியாற்றி தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டார். 1919 இல் ஜபல்பூரில் தாஜ் என்னும் வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1920 இல் அது நாளிதழாக மாறிய பின்னரும் அப்பணியிலேயே நீடித்தார். 1922 இல் டெல்லியில் ஒரு சிறு முஸ்லிம் வாரமிரு இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1924 முதல் 1928 வரை, டெல்லியில் ஜமியத்துல் உலமாயே ஹிந்தின் இதழான ‘அல்-ஜாமியா’வின் ஆசிரியராக இருந்தார்.

பின்னர் டெக்கானின் ஹைதராபாதிலுள்ள தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்றார். எனினும் சில மாதங்கள் கழித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லி திரும்பினார். 1931 இல் மீண்டும் ஹைதராபாத் சென்றார். 1932 இல், என்றென்றும் அவரோடு தொடர்புபடுத்தப்படும் மாத இதழான தர்ஜுமானுல் குர்ஆனை பதிப்பிக்கத் துவங்கினார்.

மௌதூதி, 1938 மார்ச் மாதத்தில் அல்லாமா முஹம்மது இக்பாலின் அழைப்பை ஏற்று, இஸ்லாமிய சட்டத்தை புத்துயிர்ப்பிக்க பணியாற்றுவதற்காக பஞ்சாப் சென்றார். அங்கு குர்தாஸ்பூர் மாவட்டத்தில் எண்பது ஏக்கர் பரந்த வக்ஃப் இடம் ஒன்றில் தங்கினார். அங்கு ஒரு பள்ளிவாசலும் நான்கு அல்லது ஐந்து கட்டிடங்கள் மட்டுமே இருந்தன. அதுதான் பின்னாட்களில் தாருல் இஸ்லாம் அகடெமியாக உருவாக இருந்த இடம்.

இக்பால் ஏப்ரல் மாதத்தில் இறந்துவிட, மௌலானா மௌதூதி டிசம்பரில் லாஹுர் சென்று, அங்குள்ள இஸ்லாமிய கல்லூரியில் இறையியல் துறைத் தலைவராக ஊதியம் ஏதும் பெறாமலேயே பணியாற்றினார். ஒரு வருடம் கழித்து அதிகாரிகள் அவரை ஊதியம் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்திய போது, தன் கொள்கைகளைப் பரப்புவதில் தடங்கல்கள் ஏற்படுவதை விரும்பாமல் 1942 ஜுன் மாதத்தில் லாஹுரிலிருந்து வெளியேறி தாருல் இஸ்லாத்திற்கே திரும்பினார். அங்கு தனது எழுத்து மற்றும் பிரச்சாரப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார். அவர் 1941 இல் ஜமாத்தே இஸ்லாமியை நிறுவினார். அன்று முதல் அவரது வாழ்வு இவ்வியக்கத்தோடு பிரிக்க முடியாத அளவு பின்னிப் பிணைந்து விட்டது.

இவ்வாறாக, மௌலானா மௌதூதி சுயமுயற்சியாலேயே கல்வி கற்ற ஒருவர். பதினேழு வயது சிறுவனாக, கிலாஃபத் இயக்கத்திற்கு தற்காலிகமாக ஆதரவு அளித்த காலங்களிலேயே அவர் கூர்மையான விமர்சன அறிவைப் பெற்றிருந்தார். இது, அவ்வியக்கத்தை கண்மூடித்தனமாக பின்பற்றுவதிலிருந்து அவரைத் தடுத்தது.

“இப்போதெல்லாம் எந்தவொரு விஷயத்தையும் சாதாரணமாகக் கருதாமல் அதைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது எனது பண்பாகவே மாறிவிட்டது. என்னை எதிர்கொள்ளும் அல்லது என் கவனத்தை ஈர்க்கும் ஒரு பிரச்னையை முழுமையாகப் புரிந்து கொள்ளும்பொருட்டு, அதைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள இயன்றவரை முயற்சிக்கிறேன். இதன்படி, கிலாஃபத் பிரச்னை பற்றிய உண்மைகள், துருக்கியின் நிலவரம் ஆகியவை பற்றி தெரிந்துகொள்ளத் துவங்கினேன். அதன் விளைவாக, முதல் உலகப்போருக்குப் பின் துருக்கியில் தோன்றிய தலைமை, துருக்கிய தேசியவாத உணர்வுகளால் உந்தப்பட்டது என்றும் அதன் சிந்தனை, மேற்கில் கல்வி கற்ற ‘இளம் துருக்கியர்’களின் மதச்சார்பற்ற கொள்கைகளின் தாக்கம் பெற்றது என்பதையும் அறிந்தேன்.”

“அதேவேளை, முதல் உலகப் போரின்போது அரபியரும் துருக்கியரும் ஓரணியில் நிற்பதை தடுத்து அவர்களை எதிரிகளாக்கும் பொருட்டு இஸ்லாத்தின் எதிரிகள், அரேபியர்கள் மத்தியில் எவ்வாறு தேசியவாதத்தையும் தேசியவாத வேட்கைகளையும் தூண்டினர் என்பதையும் அறிந்தேன். துருக்கியின் நிலைமையில் ஓர் உள்ளார்ந்த முரண்பாடு இருந்தது எனக்கு தெளிவாகத் தெறிந்தது. ஆங்கிலேயர்களின் பாதுகாப்பில் கலீஃபா தப்பி ஓடிய நிலையில், அதிகாரப்பூர்வமாக யாரும் பதவியேற்காதிருந்தனர்.  அப்பொழுது அதிகாரத்தில் இருந்தவர்களோ, ஒருபுறம் கிலாஃபத்தின் வாரிசுதாரர்கள் ஆனார்கள்; மற்றொருபுறம் நம்மை மதச்சார்பற்ற பாதையில் வழிநடத்த விரும்பினார்கள். இது மட்டுமின்றி, தங்களது இருப்பின் அடிப்படையாக துருக்கிய தேசியவாதத்தை முன்னிறுத்தியதன் மூலம், அங்கு வாழ்ந்த அரபியர்கள், குர்துகள், மற்றும் பிற துருக்கியரல்லாதவர்களின் விசுவாசத்தை தூரமாக்கும் தவறை செய்தனர். எனினும், தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் அவர்கள் மட்டுமல்ல. கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் வஞ்சக எண்ணங்களை அறியாமல், அரபுத் தலைவர்களும் துருக்கிய தேசியவாதத்தை எதிர்கொள்ள அன்றும் –இன்றும்- அரபு தேசியவாதத்தைத் தூண்டினர். இவ்வாறாக, ஆங்கிலேயர்களின் பக்கம் சேர்ந்ததன் மூலம், இஸ்லாத்தின் புனிதத்தலங்களை உள்ளடக்கியிருக்கும் முஸ்லிம் நிலங்களை ஆக்கிரமிக்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினர். இச்சம்பவங்களை நான் அறியவந்தபோது, எந்த கிலாஃபத்திற்காக முஸ்லிம்கள் எதையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தனரோ அத்தகைய கிலாஃபத் உண்மையில் இருக்கவேயில்லை என்று உணரத் துவங்கினேன். இந்தியாவின் முழு அரசியல் சமூகமும் தன் கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் அப்பாலுள்ள ஒன்றை தன் கையில் எடுத்துக் கொண்டது. மதச்சார்பற்ற துருக்கியத் தலைவர்களால் கிலாஃபத் முடக்கப்பட்டுவிட்டால் நம் இயக்கத்தின் நிலை என்னவாகும்? என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.”

“1924 இல் நடந்த சம்பவங்கள் எனது சந்தேகங்கள் அனைத்தையும் உண்மைப்படுத்தின. நான் எதைப் பற்றி அஞ்சினேனோ அது நடந்துவிட்டது. மேலும் நம் தேசியத் தலைமையின் மீது எனக்கிருந்த நம்பிக்கையை அது ஆட்டங்காணச் செய்தது. அவ்வாண்டில் துருக்கியில் அதிகாரத்தில் இருந்தவர்கள், எந்த கிலாஃபத்திற்காக இந்திய முஸ்லிம்கள் ஒருமனதாக எழுந்து நின்றார்களோ, அந்தக் கிலாஃபத்தை ஒழிப்பதாக அறிவித்தார்கள். நம் நாட்டில் நாம் எதிர்கொண்ட பிரச்னைகள் அனைத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு கிலாஃபத்திற்காக எழுந்து நின்றோம். ஆனால் இன்று, கிலாஃபத்தின் ஒளிவிளக்கை அணிந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களே அதை புறந்தள்ளிவிட்டனர்.

“அதே ஆண்டு, காங்கிரசின் கிலாஃபத் இயக்க ஆதரவிற்கும் முஸ்லிம்களின் சுயாட்சி இயக்க ஆதரவிற்கும் இட்டுச் சென்ற ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை, ஒரு சோகமான முடிவிற்கு வந்தது. இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. அதில் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாகவே இருந்த போதிலும், காந்தி உட்பட முழு ஹிந்துத் தலைமையும் முஸ்லிம் சமூகத்தையே கண்டித்தது. அத்துமீறியவர்களாக ஹிந்துக்களே இருந்தபோதிலும் அவர்களை ஆதரித்து பரிவுடன் நடந்து கொண்டது. 1924 இன் இறுதியில் நடந்த சம்பவங்கள், இத்தகைய மனப்போக்குகளை எவ்விதச் சந்தேகமுமின்றி தெளிவுபடுத்தின. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை, உண்மையில் அர்த்தமற்றது என்பதும், நடைமுறையில் சாத்தியமற்றது என்பதும் தெளிவாகியது.” (1)

1926 இல் ‘இஸ்லாத்தில் ஜிஹாத்’ என்னும் நூலை பிரசுரித்ததன் மூலம், மௌலானா மௌதூதி முதன் முதலில் பொதுக் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இந்நூல், ஜிஹாத் பற்றிய இஸ்லாமியக் கருத்துருவை நவீன சர்வதேச போர்ச் சட்டங்களோடு விரிவாக ஒப்பிட்டு, போர் பற்றிய பழங்கால மற்றும் நவீன கருத்துருக்களிலிருந்து ஜிஹாதை கவனமாக வேறுபடுத்திக் காட்டியது. நவீன கல்வி கற்ற இளைஞர்களை மாசற்ற இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கும் பொருட்டு, மௌலானா மௌதூதி 1932 இல் ‘இஸ்லாம் ஓர் அறிமுகம்’ என்ற தனது மிகப் பிரபலமான நூலை எழுதினார். இந்நூல் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, மீண்டும் மீண்டும் பிரசுரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்கப்படுகிறது. சில முஸ்லிம் நாடுகளின் பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகமாகவும் இந்நூல் விளங்குகிறது. அதே ஆண்டு மௌலானா மௌதூதி தனது பெயரோடு இன்றும் தொடர்புபடுத்தப்படும் மாத இதழான தர்ஜுமானுல்-குர்ஆனை துவக்கினார். இவ்விதழ், நாற்பதாண்டுகளாக கல்வியறிவு பெற்ற உருது பேசும் பொதுமக்களுக்கு கலப்படமற்ற இஸ்லாத்தை விளக்கி வந்துள்ளது.

“1932 இல் ஹைதராபாதிலிருந்து தர்ஜுமானுல்-குர்ஆனை பதிப்பிக்கத் துவங்கிய போது என் சிந்தையில் நான் கொண்டிருந்த திட்டம் என்னவெனில், முஸ்லிம் அறிவுச்சமூகத்தின் மீது மேற்குக் கலாச்சாரம் கொண்டிருந்த பிடியை உடைக்க வேண்டும்; இஸ்லாம் பிரத்யேகமான ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது; பிரத்யேகமான ஒரு கலாச்சாரத்தை, அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களைக் கொண்டுள்ளது; தனக்கே உரிய கல்வி முறையையும் தத்துவத்தையும் கொண்டுள்ளது; இவையனைத்தும் மேற்குக் கலாச்சாரம் நமக்கு வழங்கவிருப்பதைவிட மிகவும் உயர்தரமானது என்ற உண்மைகளை அவர்களுக்குள் விதைக்க வேண்டும் என்பதே. கலை மற்றும் நாகரிகம் தொடர்பான விஷயங்களில் பிறரிடமிருந்து கடன் பெற வேண்டும் என அவர்கள் கொண்டிருந்த மனநிலையை அகற்ற நினைத்தேன். இஸ்லாமிய அமைப்பு உலகிலுள்ள மற்றெல்லாவற்றையும்விட மிகவும் உயர்தரமானது என்று அவர்களை நம்பச் செய்து அவர்களை பிரமிக்க வைத்த மேற்கத்திய அமைப்பை விமர்சித்து, பகுத்தாய்ந்து, அவற்றின் பலவீனங்களையும் குறைகளையும் வெளிப்படுத்த விரும்பினேன்” (2)

அக்காலங்களில் முஸ்லிம் லீக் தலைமையில் பாகிஸ்தான் இயக்கம் எழுச்சி பெற்றது. அப்போது, மௌலானா மௌதூதி இருதேசக் கருத்தமைவை முற்றிலும் ஏற்று இத்துணைக்கண்டத்தின் முஸ்லிம்கள் தங்களுக்கென ஒரு தனி நாட்டில் வாழ்ந்து செழிக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தார். எனினும் முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் மத்தியில் பகையை மட்டுமே தோற்றுவித்த இனவாதத்தை உறுதியாக எதிர்த்தார். முஸ்லிம்கள் ஒரு சாதாரணமான தேசிய இனம் அல்ல, மாறாக அவர்கள் இஸ்லாத்தின் செய்தியை உலகெங்கும் பரப்பும் பணியை இலக்காகக் கொண்டவர்கள் என்று வலியுறுத்தினார். வெறுமனே முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து முஸ்லிம் பெயர் சூட்டப்படுவதால் மட்டும் ஒருவன் முஸ்லிம் ஆவதில்லை. மாறாக, முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில், அவன் கலிமாவிற்கு கட்டுப்பட்டான் என்பதற்கு சாட்சி பகர்வது, அவனுடைய தினசரி நடைமுறை வாழ்வே ஆகும். முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வது மட்டும் போதாது. தன் பெயருக்குத் தகுதியானவனாக ஒரு முஸ்லிம் வாழ்வதற்கு, உண்மையாகவே குர்ஆன், சுன்னா ஆகியவற்றின் அடிப்படையில் இஸ்லாமிய வாழ்க்கை வாழ வேண்டும். தப்லீக்கை புத்துயிரூட்டி ஆக்ரோஷமாக பணியாற்றுவதன் மூலமே பிற ஹிந்து அக்கம்பக்கத்தவர்களின் மதிப்பை அவன் பெற முடியும்.

“நிச்சயமாக முஸ்லிம் லீக் வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால் அதில் இணைந்தவர்களின் பண்புகளைக் கொண்டு பார்த்தால் ஒரு தேசியவாத முஸ்லிம் நாட்டை மட்டுமே அவர்களால் நிறுவ முடியும் என நான் உணர்ந்தேன். மேலும் அத்தகையவர்கள், எந்தவிதத்திலும் உண்மையான இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் தகுதி படைத்தவர்கள் அல்ல என்றும் உறுதியாக உணர்ந்தேன். முஸ்லிம் லீகின் தலைமை, அதில் சேர்ந்தவர்கள் மற்றும் முன்னிலையில் இருந்தவர்கள் -தங்கள் நடத்தை மற்றும் பண்புகளாலும், தினசரி வாழ்க்கை முறையாலும், கல்வி சிந்தனை முறையாலும்- உண்மை இஸ்லாமிய நாட்டை நிறுவுவார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டவில்லை. அவர்களால், முஸ்லிம்களுக்காக ஒரு தேசியவாத நாட்டை மட்டுமே நிறுவ முடியும், அதனை இஸ்லாமிய அரசாக மாற்ற முடியாது” (3)

குறிப்புகள்

(1) ஜமாத்தே இஸ்லாமியின் 29 ஆண்டுகள், செய்யது அபுல் அஃலா மௌதூதி, தி கிரைடீரியன், கராச்சி, நவம்பர்-டிசம்பர் 1970, பக் 32-35, சுருக்கம்

(2) முன்னது, பக் 45

(3) முன்னது பக் 49

Related posts

Leave a Comment