கட்டுரைகள் 

‘சவூதி’ அறேபியா: மாயத்திரை விலகட்டும்!

Loading

ஒரு கொலைக் குற்றத்திற்காக சவூதி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை நாம் ஊடங்களின் வழியாக அறிந்துள்ளோம். தெளிந்த அரசியல் நோக்கற்ற பலரும் இதனை ‘பாரபட்சமின்றி செயல்படும் இஸ்லாமிய நீதி பரிபாலன முறைக்கான’ துலக்கமான எடுத்துக்காட்டாக புரிந்து கொண்டதுடன், அதனை பெருமிதத்தோடு விளம்பரமும் செய்தது சிறுபிள்ளைத்தனமானது. சவூதி அரசமைப்பு பற்றியும் அதன் இயல்பு பற்றியும் நம்மிடையே நிலவும் தீவிர மூடநம்பிக்கைகளே இதற்குக் காரணம்.

சவூதியை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ளும் இந்த பாமர உளவியலுக்குப் பின்னாலிருக்கும் காரணிகளை விளங்கிக் கொள்ளும்போதே நாம் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமாகும். அதே போல், அது தனது தோற்றம் முதல் இன்று வரை செய்து கொண்டிருப்பதென்ன என்பது பற்றியும் புரிந்து கொள்வது முக்கியம். சுருக்கமான இக்கட்டுரையின் வரம்புகளுக்குள் நின்று இவை பற்றி இயன்றவரை பார்க்கலாம்.

தோற்றமும் குற்றப் பின்னணியும்

சவூதி தலைநகர் ரியாத்துக்கு அருகிலுள்ள ‘திர்இய்யா’ எனும் ஊர்தான் சவூதுக் குடும்பத்தின் பூர்விகம். குடியிருப்புகளையும் பயணக் கூட்டங்களையும் கொள்ளையடிக்கும் அறபுக் கோத்திர மரபைச் சேர்ந்தவர்கள் இவர்கள். சவூதுக் குடும்பத்துக்கும் நஜ்து பிரதேசத்தைச் சேர்ந்த அதிதூய்மைவாதப் பிரச்சாரகர் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபுக்கும் இடையேயான தொடர்பு கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் (1744) தோன்றியதாகும். அன்றைய அறபு சமூகத்தில் ஊடுருவியிருந்த நூதனங்களை ஒழிக்கப் புறப்பட்ட முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் கடும்போக்கு கொண்டவராகவும், தம்முடைய புரிதலுடன் கருத்து மாறுபட்ட சகல முஸ்லிம்களையும் சகட்டு மேனிக்கு ‘நெறிபிறிழ்ந்தோர்’ என்று குற்றம்சாட்டுபவராகவும் இருந்தார். செழுமையான இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தின் பன்முகப் பரிமாணங்களை உள்வாங்கிக் கொள்ளாமல், தம்முடைய குறுக்கல்வாதப் புரிதலை அனைவர் மீதும் வலிந்து திணிப்பதில் ஆர்வவெறியை வெளிப்படுத்தினார். அதற்காக அவர் திர்இய்யாவைச் சேர்ந்த முஹம்மது இப்னு சவூதுடன் கைகோர்த்தார்.

இவ்வாறு தூய்மைவாத இலட்சியத்தால் உணர்வூட்டப்பட்ட கோத்திர இராணுவமொன்று உருப்பெற்றது. அது சென்றவிடமெல்லாம் இரத்தக் களறியையும் அழிவு நாசத்தையும் அரங்கேற்றியது. தாயிஃப் நகரத்தில் அது நடத்திய பச்சைப் படுகொலைகள் (1802) மயிர்கூச்செறியச் செய்பவை. புனித மக்கா-மதீனாவும் கூட அதன் கொடுங்கரங்களை விட்டுத் தப்பவில்லை. ‘இணைவைப்பின்’ அடையாளங்களை அழிக்கிறோம் என்ற பெயரில் அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலங்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்கினர். செல்வங்களை சூறையாடினர். இம்மாபாதகச் செயல்கள் பற்றிய செய்தி துருக்கியிலிருந்த உஸ்மானிய சுல்தானின் செவிகளை எட்டின. உடனே அவர் எகிப்தின் ஆளுநர் முஹம்மது அலீயை அனுப்பி (1813) புனித நகரங்களை இக்கொள்ளையரிடமிருந்து மீட்டார். சில காலத்திற்குப் பிறகு (1819) சவூதிகளின் கேந்திரமான திர்இய்யாவும் வெற்றி கொள்ளப்பட்டது.

உயிர் தப்பியோடிய சவூதிகள் குவைத்தில் தஞ்சமடைந்தனர். அங்கிருந்த வண்ணம் இன்றைய சவூதி மன்னராட்சியின் நிறுவனரான அப்துல் அஸீஸ் இப்னு சவூதின் தலைமையில் கொஞ்சம் கொஞ்சமாக பலத்தை திரட்டுவதில் ஈடுபட்டனர். கொள்ளையடிப்பது, சூறையாடல்களில் ஈடுபடுவது என்ற அவர்களின் கோத்திர மரபு அங்கும் தங்குதடையின்றி தொடர்ந்தது. துருக்கி சுல்தானுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டு (1905), இரகசியமாக கீழறுப்பு வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர். அன்றைய முஸ்லிம் உம்மத்தின் ஒருங்கிணைந்த அரசியல் தலைமையாக விளங்கிய துருக்கி உஸ்மானிய சாம்ராஜ்யத்தை வீழ்த்தும் நோக்கத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் செயல்படுத்திய மூலோபாயத் திட்டத்தில் சவூதிகள் முக்கிய பாத்திரமேற்றனர். ஆண்டொன்றுக்கு கேவலம் இருபதாயிரம் பவுண்டுகளை பெற்றுக் கொண்டு இம்மாபெரும் துரோகத்தைச் செய்தது இக்கும்பல். இறுதியில் அது பிரிட்டனின் துணையோடு அரேபியா முழுவதையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இன்று இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதாக விதந்தோதப்படும் ‘சவூதி அரேபியா’ உருவான லட்சணம் இதுதான். அன்று தொடங்கிய ஏகாதிபத்திய சேவையை சவூதிகள் இன்றுவரை நிறுத்தவில்லை. அன்று பிரிட்டன், இன்று அமெரிக்கா. அவ்வளவுதான் வித்தியாசம்.

அது என்ன ‘சவூதி’ அரேபியா? இஸ்லாத்தின் புண்ணிய பூமிக்கு பெயரிட்டு அழைக்க இக்கொள்ளைக் கும்பலின் குடும்பப் பெயர்தான் கிடைத்ததா? அப்படி ஒருவரின் பெயரைக் கொண்டுதான் அழைக்க வேண்டுமென்றால், கண்மணி நாயகத்தின் பெயரால் ‘முஹம்மதி’ அறேபியா என்றுதானே அழைக்க வேண்டும்?!

அனைத்தையும் மறுக்கும் அகங்காரக் கருத்தியல்

தம்முடைய சிந்தனை முகாமைச் சேராத முஸ்லிம்கள் அனைவரையும் இணைவைப்பைக் கொண்டும், நெறிபிறழ்வைக் கொண்டும் குற்றம்சாட்டி, இஸ்லாத்தை விட்டு வெளித்தள்ளும் வஹாபிசம்தான் சவூதியின் கருத்தியல் அடித்தளம். சவூதிகள் இன்று உலகமெங்கும் வஹாபிசத்தை பரப்பி வருகின்றனர். இவர்களின் பார்வையில் சூஃபியிசம் ஓர் வழிகேடு; மத்ஹபுகள் என்பவை ஒழித்துக் கட்டப்பட வேண்டிய சீர்கேடுகள்; இஃக்வானுல் முஸ்லிமூன், ஜமாஅத்தே இஸ்லாமி போன்றவையெல்லாம் தவறான அகீதாவில் திளைக்கும் நெறிபிறழ்ந்த கூட்டங்கள்; மௌலானா மௌதூதி, ஹசன் அல்-பன்னா, சையது குதுப் போன்ற மறுமலர்ச்சியாளர்கள் அனைவரும் நரகத்திற்கு கொண்டு சேர்க்கும் வழிகேடர்கள். சுப்ஹானல்லாஹ்!

‘குர்ஆனையும் ஹதீஸையும் மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என்ற இவர்களின் கவர்ச்சிகரமான கோஷத்தின் பின்னால் ஒளிந்திருப்பது, சுயமேன்மை கோரும் அகங்காரக் கருத்தியல் என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள் அப்பாவி மக்கள். இதை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டிய அறிஞர்களோ, நுரைத்துவரும் சவூதி செல்வாக்கின் முன்னால் மலைத்து நிற்கிறார்கள். அசலில் அதுவொரு உள்ளீடற்ற, மிகப் பலவீனமான விளிம்புநிலைக் கருத்தியல்தான். செழுமைநிறை இஸ்லாமிய அறிவுத்துறை மரபில் அதற்கு எந்தவொரு வலுவான அடித்தளமும் இல்லை.

எனினும், அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வளம் தரும் பெட்ரோ டாலரின் உபயத்தால் ‘அழைப்பாளர்களுக்கு’ சம்பளம், இலவச ‘இஸ்லாமிய’ நூல்கள் விநியோகம், பளபளப்பான தாள்களில் அச்சிடப்படும் பருவ இதழ்கள் ‘இறையில்லங்களின்’ கட்டுமானம், ‘கல்வி நிறுவனங்கள்’ உருவாக்கம், இஸ்லாமிய இயக்கங்களுக்கு நிதியுதவி என கடந்த சில பத்தாண்டுகளாகவே மூளைச் சலவையும் விசுவாசத்தை விலைக்கு வாங்கும் காரியங்களும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. ஏகத்துவம் என்ற பெயரில் தமது வரட்டுவாத பார்வையைக் கொண்டுவந்து திணித்து, மற்றனைத்து சிந்தனைப் பள்ளிகளையும் அறிவுநேர்மையற்ற விதத்தில் பிழையான ஒளியில் சித்தரித்து, நேர்வழி தமது தனியுடமை என்று கொக்கரிக்கும் கருத்து பயங்கரவாதத்தின் முதன்மைப் புரவலன் இந்தச் சவூதி தான்.

எனில் சகல முஸ்லிம்களுக்கும் சொந்தமான புனித மக்கா-மதீனாவை உள்ளடக்கிய அறேபியாவை, எல்லோரையும் மறுக்கும் இந்த தன்னகங்காரக் கும்பலின் பிடியில் விட்டுவைத்திருப்பது எப்படி நியாயமாகும்?

இஸ்லாமிய இயக்கங்களின் ஜென்ம விரோதி

உள்நாட்டிலும் சரி, உலக நாடுகளிலும் சரி – தம்முடைய நிதியுதவியை பெற்றுக்கொண்டு, தாம் போட்டுத் தரும் வட்டத்திற்குள் செயல்படும் அமைப்புகளை மட்டுமே சவூதிகள் சகித்துக் கொள்கின்றனர். உண்மையான சுயநிர்ணய உரிமைக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் உழைக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மீது இவர்கள் பாராட்டும் பகைமை வரைமுரையற்றது. தமது சட்டவிரோத ஆட்சியமைப்புக்கு முன்னாலிருக்கும் அச்சுறுத்தல்களாகவே அவற்றை பார்க்கின்றனர். அவ்வியக்கங்களை முறியடிப்பதற்காக சாத்தனுடன் கூட்டணியமைக்கவும் தயங்குவதில்லை.

அதற்கொரு சமீபத்திய எடுத்துக்காட்டுதான், எகிப்தில் அமைந்த இஃக்வானுல் முஸ்லிமூன் தலைமையிலான மக்களாட்சியை கவிழ்ப்பதில் சவூதிகள் ஆற்றிய பாத்திரம். எகிப்து இராணுவம் நடத்திய கலகத்தை தொடர்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசுக்கு முதலாவதாக வாழ்த்து தெரிவித்தது இந்தச் சவூதிகள்தான். அதற்குப் பிறகு மூன்றே நாட்களுக்குள் அமீரகம், குவைத் உள்ளிட்டவற்றுடன் இணைந்து பன்னிரண்டு பில்லியன் டாலர் உதவித்தொகையை அறிவித்து தாம் யார் பக்கம் என்பதை காட்டிக் கொண்டனர். இஃக்வான்களுக்கு ஆதரவாகப் பேசிய தாரிக் சுவைதான் போன்றவர்களை பணியிலிருந்து தூக்கினர். இது போதாதென்று இஃக்வானுல் முஸ்லிமூன் அமைப்பை தீவிரவாத அமைப்பென்றும் பிரகடனம் செய்தனர். சவூதி விசயத்தில் பொதுவாக மௌனம் காக்கும் ஜமாத்தே இஸ்லாமி, லக்னோவிலுள்ள தாருல் உலூம் நத்வத்துல் உலமா போன்றவை கூட இவ்வநியாயத்தை சகித்துக்கொள்ள முடியாமல் வன்மையாகக் கண்டித்தது நினைவிருக்கலாம்.

அரைநூற்றாண்டு காலமாக நீடிக்கும் ஃபலஸ்தீன் மீதான ஸியோனிச ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சவூதிகள் ஒரு துரும்பையேனும் அசைத்ததில்லை என்பது மட்டுமின்றி, திரைமறைவில் ஸியோனிஸ்டுகளுடன் அவர்கள் கூடிக் குலாவுவதும் இப்போது வெட்டவெளிச்சமாகி வருகின்றது. ஹமாஸ் இயக்கத்தை பணிய வைக்கும் நோக்கில் அவர்கள் இடையறாத நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். இரண்டாண்டுகளுக்கு முன் காஸா மீது ஸியோனிஸ்டுகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியபோது, காஸா மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட மக்கள் பேரணிகள் எல்லாம் ‘பயனற்றவை’ என்றும் ‘இஸ்லாத்திற்கு முரணானவை’ என்றும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் விதத்தில் அறிவித்தார் சவூதியின் தலைமை முஃப்தி, அப்துல் அஸீஸ் ஆல் ஷைக்.

சவூதிகளின் வரம்புமீறல்களையும் துஷ்பிரயோகங்களையும் விமர்சிக்கத் துணியும் உள்நாட்டு அறிஞர்களும் தலைவர்களும் பல்லாயிரக் கணக்கில் சட்டவிரோத சித்திரவதை கூடங்களில் வீசப்படுவதும், தயவுதாட்சண்யமின்றி ஒடுக்கப்படுவதும் இனியும் இரகசியமல்ல. இந்த அழகில் சவூதியை ஒரு இஸ்லாமிய நாடாகவும், இஸ்லாமிய இயக்கங்களின் புரவலனாகவும் புரிந்து வைத்திருப்போரின் மூடத்தனத்தை நாம் என்ன சொல்லி நொந்து கொள்வது?!

முஸ்லிம் உலகில் குழப்பங்களின் தாய்

உருவான காலம்தொட்டு சவூதிகள் ஸ்திரமாக செய்துவரும் தலையாய பணி, ஏகாதிபத்தியத்தின் ஏவலுக்கு அவர்கள் செய்யும் அடிமைச் சேவகம்தான் என்பதை யார் மறுக்க முடியும்? அமெரிக்க எஜமானர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் எண்ணை உற்பத்தியை அதிகரிப்பது அல்லது குறைப்பதில் தொடங்கி, வன்முறைக் குழுக்களை உருவாக்கி நிதி தந்து போஷிப்பது, அமெரிக்க வல்லாதிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக அவர்களை களமிறக்கி விடுவது, ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிகளை பலவீனப்படுத்துவது என அதன் இரண்டக வேலைகளை பட்டியலிட்டு மாளாது.

சுன்னி முஸ்லிம் உலகின் தலைமையாக தன்னை சித்தரித்துக் கொண்டு, உலக முஸ்லிம்கள் மத்தியில் வெறுப்புப் பிரச்சாரத்தை கொழுந்து விட்டெரியச் செய்து, ஒற்றுமையை சீர்குலைத்து, பொது எதிரிகளான ஸியோனிஸ்டுகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் விட்டு கவனத்தை திசைதிருப்பி, உட்பிரிவுவாத மோதல்களில் மூழ்கடித்து உம்மத்தை நலிவடையச் செய்துள்ளதில் முதன்மைக் குற்றவாளிகள் இந்தச் சவூதிகள்தான். முஸ்லிம் உலகில் கொழுந்துவிட்டெரியும் குழப்பங்கள் அனைத்தின் பின்னேயும் இவர்களின் இரத்தக்கறை படிந்த கரங்கள் சம்பந்தப்பட்டிருப்பதை அரசியல் அவதானிகள் அனைவரும் அறிவர். ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர் முதல் ஏமன் மீதான தற்போதைய கொலைவெறித் தாக்குதல் வரையான அட்டூழியங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளிகள் இவர்கள்.

கண்ணை மறைக்கும் குற்றவியல் தண்டனைகள்

இஸ்லாத்தின் புனிதத் தலங்கள் மீது இவர்களுக்கிருக்கும் கட்டுப்பாடும், நயவஞ்சகமான முறையில் இவர்கள் நிறைவேற்றும் குற்றவியல் தண்டனைகளும் தான் பல பாமர முஸ்லிம்களின் மனதில் இவர்களைப் பற்றிய ஒருவித மதிப்பச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதில் அவர்களின் பிரச்சார பித்தலாட்டங்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. சவூதியில் கடுமையான குற்றவியல் தண்டனைகள் நிறைவேற்றப்படுவதையிட்டு பெருமை கொள்ளும் பலருக்கு உண்மையில் இஸ்லாமிய அரசமைப்பு பற்றியோ, ஆட்சிக்கலையில் தண்டனைகளுக்குள்ள பாத்திரமென்ன என்பது பற்றியோ ஒரு அட்சரமேனும் தெரியாது என்பதுதான் யதார்த்தம்.

அது மட்டுமின்றி, சவூதியில் பாரபட்சம் எதுவுமின்றி இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்படுவது உண்மையென்றால், இன்றைய தினத்திற்கு சவூதி அரச குடும்பத்தில் பெரும்பாலானோரின் உடலில் தலையிருந்திருக்கக் கூடாது. ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் சொந்தமான எண்ணை வளம்தரும் செல்வத்தை சவூதுக் கும்பல் தனது அப்பன் வீட்டு சொத்து போல் சுரண்டிக் கொழிப்பதும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பிரசித்திபெற்ற விபச்சார விடுதிகளில் இவர்களின் ‘இளவரசர்கள்’ போடும் களியாட்டங்களும் ஒருவேளை இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளுக்கு அப்பாற்பட்ட புண்ணிய காரியங்களோ?!

இவர்கள் ஹஜ்ஜை நிர்வகிக்கும் விதம், இஸ்லாத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள் என இவர்களை விமர்சிப்பதற்கு இன்னும் ஏராளம் இருக்கின்றன. கொஞ்சம் மயக்கத்திலிருந்து கண்விழித்து, முகத்திலறையும் உண்மைகளை கவனியுங்கள். இவர்கள் இஸ்லாத்தின் பிரதிநிதிகள் அல்ல. எதிரிகளால் நம் மீது சுமத்துப்பட்டுள்ள அவமானச் சின்னங்கள்.

இஸ்லாத்தின் மத்திய நிலையத்தை தகுதியற்ற இக்குடும்ப ஆட்சியின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுவித்து, இறைவனுக்கும் மக்களுக்கும் பதிலளிக்க வேண்டிய கடமையுணர்வு கொண்ட, தக்வாவும் பற்றுறுதியும் கொண்ட இஸ்லாமியத் தலைமையின் கீழ் கொண்டு வராமல் முஸ்லிம் உலகுக்கு விடிவில்லை.

Related posts