seermai uvais ahamedநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

வஹ்ஹாபியம்: ஒரு விமர்சன ஆய்வு (நூல் அறிமுகம்)

‘வஹ்ஹாபியம்’ எனும் வார்த்தை இன்று பலராலும் மிகப் பரவலாக புழங்கப்பட்டு வந்தாலும், அது பற்றிய முறையான புரிதலுடன்தான் அது பிரயோகிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குரிய ஒன்று.

வஹ்ஹாபியம் என்றால் என்ன? அதன் நிறுவனரின் புலமைத்துவ தகுதி என்ன? வஹ்ஹாபியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? வஹ்ஹாபிய சித்தாந்தம் எனும் அஸ்திவாரத்தின் மேல் ‘சஊதி அறபிய ராஜ்ஜியம்’ நிறுவப்பட்ட பின்னணி என்ன? அதில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்ன? தன்னை ஏற்காத பிற முஸ்லிம்களை வஹ்ஹாபியம் எப்படி மதிப்பிடுகிறது? வஹ்ஹாபியமும் சலஃபிசமும் ஒன்றா? அவற்றுக்கு இடையிலான பொது மற்றும் வேறுபட்ட பண்புகள் யாவை? மரபு இஸ்லாமிய அறிஞர்கள் வஹ்ஹாபியத்தை எவ்வாறு பார்த்தார்கள்? வஹ்ஹாபியத்தை இன்று பிரதிநிதித்துவம் செய்பவர்களில் முதன்மையானவர்கள் யார்? ‘தொழில்முறை வஹ்ஹாபி எதிர்ப்பாளர்களின்’ தராதரம் என்ன? போன்ற முக்கிய விவகாரங்களை இரத்தினச் சுருக்கமாகவும் கூர்மையாகவும் இந்நூல் பேசுகிறது.

வஹ்ஹாபிய இயக்கத்தை சீர்திருத்தவாத இயக்கமாகவோ புத்தாக்க இயக்கமாகவோ பார்ப்பது எங்கனம் துல்லியமற்றது என்பதை ஆசிரியர் தனக்கேயுரிய பாணியில் அனாயசமாக நிறுவுகிறார். சஊதி பெட்ரோ டாலரின் போஷாக்கு கிடைத்த காரணத்தால், வஹ்ஹாபியம் இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் தனது செல்வாக்கை நிலைநாட்டி வருவது அனைவரும் அறிந்ததுதான். அதே போல், நடப்பிலிருக்கும் முஸ்லிம் மரபுத் தலைமை சீரழிந்து பலமிழந்து போயிருப்பதும் வஹ்ஹாபியத்தின் எழுச்சிக்குப் பங்களிப்பு செய்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. முஸ்லிம் சமூகத்தின் மரபுத் தலைமையின் தோல்விகளுக்கு வக்காலத்து வாங்கும் நோக்கம் எதுவும் ஆசிரியருக்குக் கொஞ்சமும் இல்லை என்பதை இவ்விடத்தில் கருத்தில் கொள்வது முக்கியம்.

தௌஹீத் விடயத்தில் தாம் மட்டுமே பரிசுத்தமானவர்கள் என்றும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இணைவைப்புக் குற்றத்துக்கு ஆளாகியுள்ளார்கள் என்றும் வஹ்ஹாபிகள் கொள்ளும் அகந்தைமிகு நிலைப்பாட்டை இந்நூல் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. தௌஹீத் மற்றும் ஷிர்க் தொடர்பாக வஹ்ஹாபிகள் கொண்டுள்ள வரட்டுத்தனமான புரிதல் எவ்வாறு அவர்களை ஈவிரக்கமற்ற நாசகரமானச் செயல்களுக்கு இட்டுச் செல்கிறது என்பதை, வஹ்ஹாபியத்தின் துவக்ககால மற்றும் நவீன வரலாற்றைக் கொண்டு நூலாசிரியர் விளக்கியுள்ளார். பித்ஆ தொடர்பான வஹ்ஹாபிகளின் மிகக் குறுகிய பார்வையையும் ஆசிரியர் இதில் கேள்விக்குட்படுத்துகிறார். ஸூஃபித்துவத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் வஹ்ஹாபிகளின் போக்கையும், அதில் அவர்களின் சுயமுரண்பாட்டையும் அம்பலப்படுத்துகிறார்.

வழமையான மறுப்புரை நூல்களிலிருந்து இது பலவிதங்களிலும் மாறுபடுகிறது. வஹ்ஹாபியத்தின் தொடக்ககால வரலாற்றை வஹ்ஹாபிய ஆதரவு ஆக்கங்களிலிருந்தே எடுத்தாண்டிருப்பதன் மூலம் ‘உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளன’ என்பது போன்ற அதிருப்தி குரல்கள் எழுவதற்கான வாசலை இந்நூல் துவக்கத்திலேயே இறுக அடைத்து விடுகிறது.

வஹ்ஹாபியத்தின் வாதங்களுக்கு எதிராகவுள்ள அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துவைத்து அதை நிர்மூலமாக்க முயலுகின்ற அணுகுமுறையை நீங்கள் இந்த நூலில் பார்க்க முடியாது. சிலருக்கு இது ஏமாற்றம் தருவதாகக் கூடத் தோன்றலாம். எனினும், சம்பந்தப்பட்ட முக்கிய விடயங்களை எந்த சட்டகத்துக்குள்ளாக வைத்துப் பார்க்க வேண்டும் என்பதை தொட்டுக் காட்டுவதே நூலாசிரியரின் நோக்கமாக இருந்திருக்கிறது. நமக்கு மிகவும் தேவையாக இருப்பதும் அதுதான்.

நூலாசிரியரின் ஒவ்வொரு வரிக்கும் மிக ஆழிய, பரந்த ஆதாரப் பின்னணி இருக்கிறது. எனினும், அவை அனைத்தையும் பட்டியலிட முனையும் வழமையான அணுகுமுறையை தொடக்கம் முதல் இறுதிவரை பொருளார்ந்த முறையில் தவிர்த்திருக்கிறார். இது பல்வேறு தரங்களில் அமைந்த வாசகர்களை மனதிற்கொண்டு தெரிவுசெய்யப்பட்ட மிக விவேகமான முடிவு என்றே படுகிறது. வாசகருக்கான வெளியைக் குறுக்கிவிடாமல் முடியுமான மட்டும் அதை விசாலமானதாக விட்டுவைத்திருக்கிறார் ஆசிரியர். இதை ஒருவிதத்தில் நூலின் தனித்துவ பலமாகவும் கொள்ளமுடியும்.

உலகில் பலரும் பல்வேறு காரணங்களுக்காக வஹ்ஹாபியத்தை ஆதரித்தும் எதிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில், வஹ்ஹாபியத்தை அதற்கு உரிய இடத்தில் வைத்துப் புரிந்துகொள்வதை இந்நூல் வெகுவாக சாத்தியமாக்குகிறது. நூலாசிரியரின் அவதானங்கள் வஹ்ஹாபியத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்க வல்லவை. வஹ்ஹாபியத்தை எதிர்ப்போரைக் காட்டிலும், அதை ஆதரிப்போரின் ஆழ்மனதுக்கு இது அதிக தெளிவாக விளங்கக்கூடும்.

வஹாபிசம்

Related posts

Leave a Comment