காலம் கடந்தும் கனலும் பெரு நெருப்பு
![]()
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்காவின் இனவெறி நிறைந்த தெருக்களில் ஒரு குரல் எழுந்தது. அது வெறும் எதிர்ப்பின் குரல் மட்டுமல்ல, விடுதலையின் தத்துவத்தை மறுவரையறை செய்த ஓர் அறிவுசார் புரட்சிக் குரல். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரின் பெயர், வரலாற்று இயங்கியலில் (Historical Dialectics) ஒரு முக்கியமான ஆளுமையாக இடம் பிடித்திருக்கிறது.
ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மட்டும் அவர் வழங்கவில்லை; மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், அடையாளத்தையும், உரிமைகளையும் புதிய பரிமாணங்களுக்கு உயர்த்திய சிந்தனையாளராக அவர் திகழ்ந்தார்.
இனப்பாகுபாட்டால் இளம் வயதில் சந்தித்த சோதனைகள், சிறைவாசம், ஆன்மிகத் தேடல் என தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு, ஒடுக்கப்பட்டவர்களின் ஓர் அடையாளமாகத் திகழும் அவர் மால்கம் லிட்டில் என்ற மால்கம் X.
குடியுரிமையிலிருந்து மனித உரிமைக்கு: ஒரு தத்துவார்த்த பாய்ச்சல்
மால்கமின் மிக முக்கியமான அறிவுசார் பங்களிப்புகளில் ஒன்று, கறுப்பர்களின் பிரச்சினையை ‘அணுகும் முறையில்’ அவர் ஏற்படுத்திய மாற்றமே. கறுப்பின மக்களின் போராட்டத்தை, குடியுரிமை பிரச்சினையிலிருந்து மனித உரிமை பிரச்சினையாக உருமாற்றினார். இது வெறும் சிந்தனை மாற்றமல்ல; அது போராட்டத்தின் தன்மை, எல்லை, சாத்தியக்கூறுகள் ஆகிய அனைத்தையும் புரட்டிப் போட்ட ஒரு மூலோபாய புரட்சியாகும்.
அதுவரை அமெரிக்க கறுப்பர்கள் தங்களின் உரிமைகளுக்காக அமெரிக்க அரசிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர். குடியுரிமை என்று கோரும்போது, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்களாக சுருங்கிவிடுகிறோம்; குடியுரிமை உள்நாட்டு விவகாரமாகி விடுவதால், அதில் கருத்து சொல்ல முடியாதென ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க நண்பர்கள் ஒதுங்கிவிடுவதை மால்கம் தெளிவாகக் கணித்தார். எனவே, இந்தப் போராட்டத்தை ‘மனித உரிமைப் போராட்டமாக’ மடைமாற்றினார்.
மனித உரிமை என்று முழங்கும் போதுதான், அமெரிக்காவில் கறுப்பர்கள் படும் துயரத்தை ஐக்கிய நாடுகள் அவை வரை கொண்டு சென்று, அமெரிக்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியுமென அவர் நம்பினார். இந்த அணுகுமுறை இன்றும் உலகம் முழுவதும் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக உள்ளது.
உலகளாவிய ஒடுக்கப்பட்டோரின் தோழன்: எல்லைகளைக் கடந்த அடையாளம்
“நான் அமெரிக்கன் அல்ல. அமெரிக்காவின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட 22 மில்லியன் கறுப்பர்களில் நானும் ஒருவன்” என்று பிரகடனப்படுத்திய மால்கம், அமெரிக்கராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை விட, உலகம் முழுவதுமுள்ள ஒடுக்கப்படும் மக்களின் ஒரு பகுதியாக அடையாளப்படுத்திக் கொள்வதையே விரும்பினார். அவரது பார்வை அமெரிக்க எல்லைகளைக் கடந்து விரிந்திருந்தது. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற காலனிய எதிர்ப்புப் போராட்டங்களை, அமெரிக்க கறுப்பினத்தவர்களின் போராட்டத்தோடு இணைத்துப் பார்த்தார்.
அமெரிக்கா உள்நாட்டில் கறுப்பர்களை ஒடுக்குவதைப் போல, சர்வதேச அளவில் காங்கோ போன்ற நாடுகளில் காலனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கிறது என்பதை அம்பலப்படுத்தினார். காங்கோ பிரதமர் பாட்ரிஸ் லுமும்பாவின் படுகொலைக்கும், அமெரிக்காவின் இனவெறி அரசியலுக்கும் உள்ள தொடர்பை துணிச்சலாகச் சுட்டிக்காட்டினார். தேசப்பற்றின் காரணமாகவோ, அமெரிக்க அரசை பகைத்துக் கொள்வதால் எழும் நெருக்கடிக்குப் பயந்தோ அமெரிக்காவை கண்டிக்க அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.
பாலஸ்தீன முஸ்லிம்களை அகதி முகாம்களில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிராக பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். இங்கிலாந்தில் இனப் பாகுபாட்டுக்கு ஆளாக்கப்பட்ட இந்தியர்களைச் சந்தித்து தனது நேசக் கரங்களை நீட்டினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அணுகுண்டுப் பசிக்கு இரையான ஜப்பான் மக்களுடன் நின்றார். இப்படி, தேசம் – மொழி – மதம் என எந்தப் பாகுபாடுமின்றி ஒடுக்கப்படும் ஓர் இனத்தோடு தன்னுடைய ஆன்மா இருப்பதையே மால்கம் விரும்பினார்.
வென்றவர்களோடு மால்கம்: ஆதிக்கத்தை அறுத்தெறிந்தவர்களின் தோழன்
ஒடுக்கப்பட்டவர்களோடு கைகுலுக்கியது போலவே, உலகம் முழுவதும் காலனிய ஆதிக்கத்தை வீழ்த்தி நிமிர்ந்து நின்ற தலைவர்களோடும், இயக்கங்களோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் மால்கம். அமெரிக்க கறுப்பர்கள் தங்களை ஒரு ‘சிறுபான்மை இனமாக’ கருதிச் சுருங்கிப்போகாமல், உலகளாவிய ‘பெரும்பான்மை’ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியாக உணர வேண்டும் என்பதற்காக மால்கம், இந்த யுக்தியைக் கையாண்டார்.
1960-ல் ஐ.நா. சபை கூட்டத்தொடரில் பங்கேற்க நியூயார்க் வந்த கியூப புரட்சித் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவை அமெரிக்க அரசு நடத்திய விதம் மால்கமை தீவிரமாகச் சிந்திக்க வைத்தது. அமெரிக்க அரசால் புறக்கணிக்கப்பட்டு, தங்குவதற்கு இடமின்றி தவித்த ஃபிடலையும் அவரது குழுவினரையும் ஹார்லெம் நகரின் தெரசா ஹோட்டலில் தங்க வைக்க மால்கம் முன்வந்ததால், ஹார்லெம் சேரியில் சிவப்பு உறவு பூத்தது. ஃபிடல் காஸ்ட்ரோ போன்ற ஒரு கம்யூனிசத் தலைவரை – அமெரிக்காவின் எதிரியாகச் சித்தரிக்கப்பட்டவரை, கறுப்பர்கள் வசிக்கும் சேரிக்கு வரவழைத்து உபசரித்ததன் மூலம், மால்கம் அமெரிக்க அதிகார வர்க்கத்திற்கு நேரடியாக சவால் விடுத்தார். அந்தச் சவால், இன்று ஸஹ்ரான் மம்தானி நியூயார்க் மேயராகும் வரை நீளுகிறது.
பிரான்ஸின் காலனிய ஆதிக்கத்தை ஆயுதப் போராட்டம் மூலம் வீழ்த்திய அல்ஜீரியப் புரட்சி, மால்கமுக்கு பாடப் புத்தகமாக தெரிந்தது. அல்ஜீரிய அதிபர் அஹமது பென் பெல்லாவைச் சந்தித்த மால்கம், அமெரிக்காவில் கறுப்பர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறையும், அல்ஜீரியாவில் பிரான்ஸ் நடத்திய ஒடுக்குமுறையும் ஒன்றுதான் என்பதை உணர்ந்தார். வன்முறை என்று முத்திரை குத்தினாலும், ஒடுக்குபவனை எதிர்க்க ஆயுதம் தூக்குவது ஓர் உரிமை என்பதை அல்ஜீரியப் புரட்சி அவருக்குக் கற்றுக்கொடுத்தது. “சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தீவிரவாதம் குற்றச் செயல் அல்ல” என்று மால்கம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முழங்கியதற்கு, பென் பெல்லா போன்ற தலைவர்களுடனான சந்திப்பே அடிப்படைக் காரணமாகும்.
கென்யாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற ‘மாவ் மாவ்’ (Mau Mau) புரட்சியை மால்கம் அடிக்கடி மேற்கோள் காட்டினார். மாவ் மாவ் புரட்சியாளர்கள் சுதந்திரம் பெறுவதற்குத் தடையாக இருந்தது ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, அவர்களுக்குத் துணைபோன உள்ளூர் ‘அங்கிள் டாம்’களும்தான் (Uncle Toms – வெள்ளையர்களுக்கு அடிபணியும் கறுப்பர்கள்) என்பதை மால்கம் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவிலும் கறுப்பினத் தலைவர்கள் என்ற போர்வையில், வெள்ளையர்களின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகும் மிதவாதிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என்ற பாடத்தை மாவ் மாவ் புரட்சியிலிருதே மால்கம் கண்டுகொண்டார்.
அறிவாயுதம்: அடிமைத் தளைகளை அறுக்கும் வாள்
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ள, வெளியிலிருந்து வரும் மீட்பர்களை எதிர்பார்ப்பதை விட, தங்களுக்குள்ளேயே அறிவாயுதத்தை ஏந்த வேண்டும் என்பதில் மால்கம் உறுதியாக இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய அறிவு மற்றும் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டால், அவர்கள் தாமாகவே எழுந்து போராடுவர் என்ற அவரது கருத்து, புரட்சிகர கல்விமுறையின் அடித்தளமாக அமைந்தது.
“கல்விதான் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கிக் கொள்ள உதவும் கடவுச்சீட்டு” என்று அவர் முழங்கினார். சிறையில் இருந்தபோது சக கைதியின் தூண்டுதலால் வாசிப்பின் மீது தீராத காதல் கொண்ட மால்கம், தனது வாழ்நாள் முழுவதும் மாணவனாகவே இருந்தார். “ஓர் ஆணுக்குக் கல்வியைக் கொடுத்தால், நீங்கள் ஒரு தனிநபருக்குக் கல்வியைக் கொடுக்கிறீர்கள்; ஒரு பெண்ணுக்குக் கல்வியைக் கொடுத்தால், நீங்கள் முழுக் குடும்பத்திற்கும் கல்வியைக் கொடுக்கிறீர்கள்” என்ற ஆப்பிரிக்கப் பழமொழியை அவர் அடிக்கடி மேற்கோள் காட்டினார்.
இங்கே மால்கம் குறிப்பிடும் கல்வி என்பது, வெறும் புத்தகப் படிப்பல்ல; மாறாக, ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றிய உண்மையான புரிதலை, தன் வரலாற்றின் பெருமையை, தன் உரிமைகளின் பரிமாணத்தை உணர்த்தும் விழிப்புணர்வாகும். ஒடுக்குமுறை அமைப்புகள், மக்களை அறியாமையில் வைத்திருப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துகின்றன. அந்த அறியாமையை உடைப்பதே விடுதலையின் முதல் படி என்று அவர் நம்பினார்.
தகவல் வெடிப்பின் காலத்தில், உண்மையான கல்வியும் வெறும் தகவல் திரட்டும் எவ்விதம் வேறுபடுகின்றன என்பதை உணர்ந்து, மக்களுக்கு விமர்சனச் சிந்தனை, சுய அடையாள உணர்வு, வரலாற்று நினைவு ஆகியவற்றை வழங்குவது எந்தளவிற்கு அவசியம் என்பதை மால்கமின் கல்வி தத்துவம் அறிவுறுத்துகிறது.
மாறும் காலமும் மாறாத இலக்கும்: ஒரு தலைவனின் பரிணாமம்
தலைவர் என்பவர் தேங்கிப் போன குட்டையாக இல்லாமல், ஓடும் நதியைப் போல காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மால்கம் X மிகச்சிறந்த முன்மாதிரி. “எனது முழு வாழ்க்கையுமே மாற்றங்களின் கால வரிசைதான் (My whole life has been a chronology of changes)” என்று அவர் குறிப்பிடுகிறார்.
நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் இருந்தபோது, வெள்ளையர்களை ‘பிசாசு’ என்று தீவிரமாக விமர்சித்த மால்கம், மக்காவுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட பிறகு தனது இனத்துவப் பார்வையை மாற்றிக் கொண்டார். ஹஜ்ஜில் எல்லா நிறத்தவரும் சகோதரத்துவத்துடன் பழகுவதைக் கண்ட அவர், இன இழிவு ஒழிய இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்தார். ஆனால், இந்த மாற்றம் இனத் துவேஷம் கொண்ட வெள்ளையர்களோடு சமரசம் செய்து கொள்ள அவரை நிர்ப்பந்திக்கவில்லை; மாறாக, அவரது போராட்டத்தை மேலும் கூர்மைப்படுத்தியது. “காலத்திற்கு ஏற்ப செயல்திட்டம் மாறலாம். நிகழ்ச்சி நிரல் மாறலாம். ஆனால், இலக்கு ஒருபோதும் மாறாது. எங்கள் இலக்கு முழுமையான சுதந்திரம், முழுமையான நீதி, முழுமையான சமத்துவம்” என்று உறுதியாக அறிவித்தார்.
தான் முன்பு கடுமையாக விமர்சித்த மார்ட்டின் லூதர் கிங் போன்ற மிதவாதத் தலைவர்களுடனும், உண்மையான தீர்வை நோக்கிப் பயணிக்கும் எவருடனும் கைகோர்த்துப் போராட அவர் தயங்கவில்லை. தனது கடந்தகால கருத்துகளைப் பற்றிக் கொண்டு தொங்காமல், விடுதலையை நோக்கிய பயணத்தில் தன்னைத் தொடர்ந்து ‘Update’ செய்து கொள்ளும் துணிச்சல் அவரிடம் இருந்தது.
மால்கம் X எனும் மானுட விடுதலையின் குறியீடு
மால்கம் தனது போராட்டத்தை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இனப் போராட்டமாக காணவில்லை. மாறாக, உலகெங்கிலும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களின் ஒரு பகுதியாக அதை அடையாளப்படுத்தினார். அவருடைய இந்தப் பரந்த பார்வை, ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களுக்கு இடையேயுள்ள ஆழமான தொடர்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. விடுதலைப் போராட்டங்களை வலுப்படுத்தும் உலகளாவிய ஒற்றுமையின் சாத்தியத்தை இந்த அணுகுமுறை உருவாக்கியது.
ஒரு நாட்டில் ஒடுக்குமுறைக்கு எதிரான வெற்றி, மற்ற நாடுகளிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஊக்கமளிக்கிறது; அதேபோல், ஒரு இடத்தில் நடக்கும் அநீதி, உலகெங்கிலும் உள்ள நியாயவான்களை அதிர்ச்சியடையச் செய்கிறது. இன்றைய உலகில், பல்வேறு நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலகளாவிய ஒற்றுமை இயக்கங்கள் எழும்போது, மால்கமின் இந்தப் பார்வையின் தூரநோக்கை விளங்கிக் கொள்ள முடியும்.
இன்று உலகம் முழுவதும் இனவெறி, மதவெறி, மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகள் புதிய வடிவங்களில் வலம் வரும் சூழலில், மால்கம் X-ன் சிந்தனைகள் முன்னெப்போதையும் விட அவசியமாகின்றன.
அதிகாரம் படைத்தவர்களிடம் யாசகம் கேட்டுப் பெறுவதல்ல சுதந்திரம்; அது போராடிப் பெற வேண்டிய உரிமை என்பதை தனது வாழ்வின் மூலம் உணர்த்தியவர் மால்கம் X.
ஒடுக்கப்பட்டவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் எந்த இனத்தின் மீது திணிக்கப்பட்டாலும், ‘அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது’ அந்த ஒடுக்குமுறையைத் துடைத்தெறிய கரம் நீட்ட வேண்டுமென்று வழிகாட்டியவர் மால்கம் X.
வெற்றியாளர்களோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம், வெற்றி சாத்தியம் என்ற நம்பிக்கையை தனது மக்களுக்கு ஊட்டியவர் மால்கம் X.
மாறிவரும் சூழலுக்கேற்ப போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டாலும், விடுதலையை நோக்கிய இலக்கில் சமரசம் செய்து கொள்ளாதவராக தலைவர் இருக்க வேண்டும் என்ற பாடத்தை விட்டுச் சென்றவர் மால்கம் X.
துப்பாக்கிக் குண்டுகள் துளைத்து அவருடைய உடல் வீழ்த்தப்பட்டிருக்கலாம்; ஆனால் அவர் ஏற்றி வைத்த புரட்சித் தீ, அநீதிக்கு எதிரான ஒவ்வொரு குரலிலும் இன்றும் கனன்று கொண்டுதானிருக்கிறது.
(பிப்ரவரி 21, 1965 அன்று மால்கம் X படுகொலை செய்யப்பட்டார்.)

