நான் எழுத்தணிக் கலையை கலைக்கூடங்களிலிருந்து தெருக்களுக்குக் கொண்டுசெல்கிறேன்! — கரீம் ஜப்பாரி
![]()
கரீம் ஜப்பாரி — உலகப் புகழ்பெற்ற எழுத்தணி மற்றும் ஒளிக் கலைஞர். ஒளியின் மீதும் எழுத்துகளின் மீதும் அவருக்குள்ள ஆர்வம், பண்டைய கூறுகளை நவீன வடிவமைப்பில் இணைக்கும் அவரது ஆர்வத்தால் உத்வேகம் கொள்கிறது.
எழுத்தணி வழியாகக் கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் இணைக்கும் பாலங்களை அமைப்பதே அவரது கலையின் முக்கிய நோக்கம். அவர் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், பாரம்பரிய வடிவங்களையும் பாணிகளையும் தக்கவைத்துக்கொள்கிறார்.
கரீம் அவருடைய பரந்த திறமைகளுக்காகவும்; நேரடி கலை நிகழ்ச்சிகள், கலை நிறுவல்கள் (Art Installations), பெரிய அளவிலான சுவரோவியங்கள், செயலமர்வுகள் (Workshops), குழுக் கலந்துரையாடல்கள் (Panel Discussions), போன்றவற்றுக்காகவும் அறியப்பட்டவராக இருக்கிறார். நியூயார்க் பல்கலைக்கழகம் (NYU), யேல் (Yale) போன்ற முன்னணிப் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
துபாயில் நடைபெற்ற முதலாவது இஸ்லாமியப் படைப்பாற்றல் போட்டியில் அவர் இரண்டாம் பரிசைப் பெற்றார், சமீபத்தில் அவர் உலகின் முன்னணி 30 பொதுக் கலைஞர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தனித்துவமான கலை, எழுத்தணியின் எதிர்காலம் ஆகியவை குறித்து கரீம் ஜப்பாரியுடன் பைதுல் ஃபன் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம்.
தமிழில்: இன்ஸாப் ஸலாஹுதீன்

உங்கள் சிறுபருவம் பற்றியும், கலைஞராக உருவான உங்கள் பயணம் பற்றியும் சொல்ல முடியுமா?
என் குழந்தைப் பருவத்தில், குடும்பத்துடன் தெருவில் நடந்து செல்லும்போது அயலவர்கள் எங்களைப் பார்த்தவுடன் தங்கள் முகங்களைத் திருப்பிக்கொள்ளும் அந்த வேதனையை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். எங்களுடன் யாரும் பொது இடங்களில் பேசத் தயங்கினார்கள். என் தந்தை ஓர் அரசியல் கைதியாகவும் செயற்பாட்டாளராகவும், தூனீசியாவை ஆட்சி செய்த அடக்குமுறை அரசின் பொது எதிரியாகவும் இருந்தார். எங்கள் குடும்பம் கடுமையான காவல் கண்காணிப்பில் இருந்தது.
பத்து வயதில் தனிமையிலும் தந்தையை நினைத்தும் உழன்றுகொண்டிருந்த நான், நேரத்தைச் செலவழிக்க மாற்று வழிகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மார்க்க நூல்களின் புதையலொன்றைக் கண்டேன். அவை எங்கள் முன்னோர்களில் ஒருவராக இருந்த புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் ஒருவரிடமிருந்து வந்தவை. அந்தப் புத்தகங்கள் மக்ரிபி எழுத்து (Maghrebi script) எனப்படும் வட ஆப்பிரிக்காவின் பழைய எழுத்தணி வடிவில் எழுதப்பட்டிருந்தன.
அது ஒரு கலை வடிவம். அதன் அர்த்தத்தை நான் புரிந்துகொள்ளாவிட்டாலும் அது ஆன்மாவுடன் பேசுகிறது என்பதாக உணர்ந்தேன். அந்த எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையின் பல மணிநேரங்களை கையால் ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதுவதில் செலவிட்டதைப் பார்த்தேன். அவற்றில் நான் அவர்களின் நீண்ட இரவுகளையும், என் தந்தையின் புன்னகையையும் கண்டேன்.
விரைவில் நான் அதில் லயித்துவிட்டேன். அந்த எழுத்துகளை மீண்டும்மீண்டும் நகலெடுத்து, அதன் வளைவுகளும் கோடுகளும் என் கைகளுக்குப் பழகும்வரை பயிற்சி செய்தேன். நான் என் சொந்த ஊரான காசரைனை விட்டு தங்கிப் பயிலும் பாடசாலைக்குச் சென்றபோதுதான் அந்த வெறி அதிகரித்தது. அது மட்டுமின்றி, எனது புதிய திறமை நண்பர்களைக் கவர்ந்தது. இதற்கு முன்பு எனக்குக் கிடைக்காத ஒன்று அது.

இப்போது எனக்கு 44 வயதாகிறது. கனடாவையும் அமெரிக்காவையும் தளமாகக் கொண்டு முழுநேரக் கலைஞனாகப் பணியாற்றுகிறேன். பாரம்பரிய அறபு எழுத்தணியை (Arabic Calligraphy) சர்வதேச அரங்கிற்குக் கொண்டுசெல்ல, சுவரோவியம் (murals), கிராஃபிட்டி (graffiti), நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறேன்.
தியானம் போன்ற மனக்குவிப்பையும் நீண்டகாலப் பயிற்சியையும் முக்கியமாகக் கருதும் இந்தக் கைவினை, வேகத்தையும் தற்காலிகத் திறனையும் மட்டுமே மதிக்கும் இக்காலத்தில் மறைந்துவிடுமோ என்ற கவலை எனக்குண்டு.
எனது பணி, பாரம்பரிய எழுத்தணிக் கலையையும் நவீன மெய்நிகர் உலகையும் இணைக்கும் பாலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் எழுத்தணி, பாரம்பரிய அறபு எழுத்தணி பாணியிலிருந்து வேறுபட்டது என்று கூறியுள்ளீர்கள். அறபு எழுத்தணி பற்றிப் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு, அதன் முக்கிய அடையாளங்கள் குறித்தும், உங்கள் ஆக்கங்களில் நீங்கள் பயன்படுத்தும் பாணியிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்தும் சொல்லுங்களேன்.
பாரம்பரிய எழுத்தணி மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்தது. அதில் பல விதிமுறைகள் உள்ளன. அதனால் இளம் தலைமுறையினருக்கு அது அடைய முடியாத ஒன்றாகவே தெரிகிறது.
“நீங்கள் ஓர் அழகான, அற்புதமான, நன்கு அறியப்பட்ட, பாரம்பரிய எழுத்தணிக் கலைஞராக இருக்கலாம், ஆனால் உங்கள் கலை இளைய தலைமுறையினரிடம் பேசுவதில்லை” என்கிறேன்.
புதிய முயற்சிகளையும் தொழில்நுட்பத்தையும் ஏற்க மறுப்பது, இளைஞர்களை விலக்கிவைப்பதோடு, முழுப் பாரம்பரியத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்குகிறது. “உங்கள் கலை உங்களுடனேயே இறந்துகொண்டிருக்கிறது” என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். “உங்கள்மீது எனக்கு மரியாதை இருக்கிறது; ஆனால், நான் எழுத்தணியைக் கலைக்கூடங்களிலிருந்து தெருக்களுக்குக் கொண்டுசெல்கிறேன்.”
தெருக் கலாச்சாரத்தின் கலைச் சுதந்திரமும் தெருக் கலையை உருவாக்குவதும் உங்கள் கலையாக்கதை எவ்வாறு பாதித்தது?
அனைவரையும் சென்றடையவும், என் கலையை ஜனநாயகப்படுத்தவும் தெருக்கள் எனக்கு வாய்ப்பளித்தன. இதனால் அழகைக் காணும் கண்களுக்கும், செய்தியை உள்வாங்கும் இதயத்திற்கும் அது கிடைத்துவிடும் வாய்ப்பைப் பெறுகிறது.

நன்கு அடையாளம் காணக்கூடிய தனித்துவமானதோர் கலைப் பாணியை நீங்கள் எவ்வாறு உருவாக்கினீர்கள்?
பல வருடக் கடின உழைப்பும், போட்டி நிறைந்த உலகில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற நிலையான தேடலும்தான் அதற்குக் காரணம். சிறுவயதில் நான் தொடர்ந்து நகலெடுத்துவந்த பண்டைய புத்தகங்களிலிருந்து எனக்கு உத்வேகம் கிடைத்தது, எப்போதும் முன்னே நிற்க வேண்டும் என்ற இடைவிடாத உந்துதலும் இருந்தது. என் கையெழுத்தைப் பார்க்காமலேயே மக்கள் என் படைப்புகளை அடையாளம் காண வேண்டும் என்று நான் விரும்பினேன். உலகம் முழுவதும் உள்ள அனைவருடனும் பேசும் ஒரு பாணியை நான் உருவாக்க விரும்பினேன்.
உங்கள் படைப்பை உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறீர்கள்?
என் எழுத்துகள் மறைக்கப்பட்டவோர் அழகை வெளிப்படுத்துகின்றன. ஏனெனில், நாம் அனைவரும் எழுத்துகளைப் பார்க்கவும் எழுதப்பட்டவற்றைப் படிக்கவும் ஆர்வமாக உள்ளோம். நான் பல ஆண்டுகளாக மறுவடிவமைக்கப்பட்ட மிகவும் பழைய எழுத்தணிப் பாணியைப் பயன்படுத்துவதால், மக்கள் அதை வரலாற்றின் ஒரு பகுதியாகவோ, அல்லது பழைய கையெழுத்துப் பிரதியாகவோ பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

சமூக மாற்றத்தையும் உரையாடலையும் ஏற்படுத்தும் திறன் கலைக்கு உள்ளதா?
ஆரம்பம் முதலே, எனது கலை உரையாடலை உருவாக்குவதற்கும் பாலங்களைக் கட்டுவதற்கும்தான் என்று நான் சொல்லிவந்துள்ளேன். 2010ஆம் ஆண்டு நான் செய்த எனது முதல் சுவரோவியம், “எழுத்தணி நாகரிகங்களுக்கு இடையிலான ஒரு பாலம்” என்பதே.
உங்கள் படைப்பை ரசிக்க அறபு மொழி தெரிந்திருக்க வேண்டுமா?
இல்லை. என் படைப்புகள் உலகம் முழுவதும் பாராட்டப்படுகின்றன. உண்மையில், அறபு மொழி அறியாதவர்கள் என் சுவரோவியங்களின் அழகை ஆழமாக உணர்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் படைப்புகள் எந்த உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும், எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
“நீங்கள் உங்கள் வரலாற்றை அறியாவிட்டால், யாரும் உங்களை மதிக்கமாட்டார்கள்” என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீ யார், எங்கிருந்து வருகிறாய் என்பது உனக்குத் தெரியாவிட்டால், அதை எப்படி உன்னால் மற்றவருக்கு விளக்க முடியும்?
நம் முன்னோர்கள் ஒருவருக்கொருவர் பரப்பிய அனைத்து அறிவுகளின் சேகரம் நாம்தான் என்பதை எழுத்தணி கற்றுக்கொடுத்துள்ளது. எழுத்தணிக் கலை இப்படித்தான் கடத்தப்பட்டுள்ளது: குருவிடமிருந்து மாணவனுக்கு, பின்னர் மாணவர் அடுத்த குருவாக மாறுவார். அடுத்த தலைமுறையுடன் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய வரலாற்றையும் ஞானத்தையும் பதிவுசெய்யும் ஒன்றாகவே எழுத்தணிக் கலை இருந்துவந்துள்ளது.
உங்கள் படைப்பாக்கச் செயல்முறையை விவரிக்க முடியுமா? கருத்தாக்கத்திலிருந்து படைப்புவரை உங்கள் மனத்தின் வரைபடத்தைச் சொல்ல முடியுமா?
வரலாற்றுப் புத்தகங்களிலும் மறைந்திருக்கும் அறிவிலும் எனக்கு அகத்தூண்டுதல் கிடைக்கிறது. மக்களின் குருட்டுத்தனமான போதனைகளுக்கும் மூளைச் சலவைக்கும் அப்பால்தான் நான் எப்போதும் பார்க்கிறேன். என் படைப்புகள் மூலம் ஓர் ஆழமான செய்தியை நான் கடத்துகிறேன், அதைப் புரிந்துகொள்ளும் திறனுள்ளவர்கள் அதைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, அது எப்போதும் ஒரு கருத்துருவுடன் தொடங்குகிறது, அதை நானொரு கலைப்படைப்பில் பிரதிபலிக்கும் திறனைப் பெறும்வரை அது என் மனத்துள் வாழ்கிறது.

உங்களுக்குப் பிடித்த கலைஞர்கள் யார்?
Ai Weiwei, Ahmad Angawi, Rustam Qbic, Add Fuel
உங்களின் வேலைத்திட்டங்களுள் மிகவும் சவாலானது என்று எதைச் சொல்வீர்கள்?
2013ஆம் ஆண்டு தூனீசியாவின் மிக நீளமான சுவரோவியத்தை நான் என் தந்தை பல வருடங்கள் கழித்த சிறைச்சாலையின் சுவர்களில் வரைந்தேன். 240 மீட்டரிலான அந்தச் சுவரோவியத்தை நிறைவுசெய்ய எனக்கும் என் குழுவுக்கும் 45 நாள்கள் ஆயின.
உங்கள் படைப்பாற்றல் மிக்க பார்வையும் கலையும் அறபு அச்சுக்கலையை எவ்வாறு பரவலாகப் பாதித்துள்ளன?
அறபுலகில் ‘Calligraffiti’ என்றொரு முழுமையான கலை இயக்கத்தின் தொடக்கத்தை நான் கண்டிருக்கிறேன். மேலும், படைப்பாற்றல் நிறைந்த புதியதொரு தலைமுறையையும், அது உத்வேகத்தை எல்லா இடங்களிலும் தேடுவதையும் காண்கிறேன். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான செயலமர்வுகளை நடத்தியிருக்கிறேன். என் படைப்புகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைனில் கிடைக்கின்றன. எல்லாச் செய்தி ஊடகங்களிலும் என்னைப் பற்றி வந்துள்ளது. என்னுடைய ‘ஒளி எழுத்தணிக்கலை’ பற்றிய முனைவர் பட்ட ஆய்வுகளும்கூட எழுதப்பட்டுள்ளன. முதலில் என்னை மகிழ்விக்கவே நான் கலை செய்கிறேன். மற்றவர்களையும் என்னால் ஊக்குவிக்க இயல்கிறது என்றால் அது இறைவனின் ஆசீர்வாதம், தினமும் நான் அதை அனுபவிக்கிறேன்.
அறபு வசந்த காலத்தில், தூனீசியாவில் புதியதோர் இயக்கத்தின் பிறப்பைக் கண்டேன். புரட்சி Calligraffitiஇல் புதியதோர் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. இது பாரம்பரிய எழுத்தணியை மிகவும் நவீனமான, நேர்த்தியான தெரு கிராஃபிட்டி பாணியுடன் இணைத்தது. அவர்கள் தங்கள் மொழியைப் பற்றிய பெருமிதவுணர்வு கொண்டவர்கள். தங்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்ற வகையில் அவர்கள் அதன் அர்த்தத்தை அறியவும் பயன்படுத்தவும் செய்கிறார்கள்.

கலைக்கூடத்தில் உங்களுடைய வழமையான ஒரு நாள் எப்படி இருக்கும்? உங்கள் கலைப் பயிற்சி எவ்வாறு வளர்ந்துள்ளது அல்லது மாறியுள்ளது?
இது வெவ்வேறு துறைகளுடன் இணைத்துச் செய்யப்படும் தொடர்ச்சியான பரிசோதனை முயற்சியாகும், ஏனென்றால், கலை நிறுவல்களில் (Art Installations) வேலை செய்வது சமீப காலமாக எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே, எனக்குப் பிடித்ததை அடைவதற்கு நிறைய சோதனைகளும் பிழைகளும் செய்ய வேண்டியிருக்கின்றன. புதிய ஒளிக் கலை பற்றிய கருத்துருவாக்கங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், நிகழ்த்துகலைகள் எனப் பலவற்றிலும் நான் பணியாற்றுகிறேன்.
உங்களின் எழுத்தணிப் படைப்புகள் ஏதேனும் இஸ்லாமியக் கலை மரபால் குறிப்பாக ஈர்க்கப்பட்டவையா?
என் ஆக்கங்கள் அனைத்தும் இஸ்லாமியக் கலை மரபிலிருந்து உருவானதுதாமே.
அறபு எழுத்தணி குறித்தும், இஸ்லாமியக் கலையின் எதிர்காலம் குறித்தும் உங்கள் கருத்து என்ன? மையநீரோட்டத்தில் அவற்றுக்கு இடமுண்டு என்று நினைக்கிறீர்களா?
பாரம்பரியவாதிகள் புதிதாகச் சிலவற்றை முயன்று பார்க்கவும், நவீனத்துவவாதிகள் பாரம்பரியத்தின் மதிப்பை நினைத்துப் பார்க்கவும் என் படைப்புகள் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன். எழுத்து என்பது தப்பிப்பதன் ஒரு வடிவம். நினைவகத்தில் அது ஒரு சாகசம். மாற்றம் அழகானதுதான். ஆனால், உங்கள் வேர்களுடன் உள்ள இணைப்பை இழந்தால், நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.
வலைத்தளம்: www.Karimjabbari.com
இன்ஸ்டாகிராம்: Karim_jab
(மூலம்: Light Calligraphy, Karim Jabbari)

