கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஈரானிய ஏவுகணைத் துறையின் தந்தை
முஸ்லிம் பலவீனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்

Loading

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்பு படையின் (IRGC) மூத்த தளபதியாக இருந்த ஜெனரல் ஹசன் தெஹ்ரானி முகத்தம் (1959-2011), ஈரானின் நீண்ட தொலைவு ஏவுகணைத் திட்டத்தின் சிற்பியாகக் கொண்டாடப்படுபவர். ஈரானிலும் சர்வதேச அளவிலும் அவர் ‘ஈரானின் உள்நாட்டு ஏவுகணைத் துறையின் நிறுவனத் தந்தை’யாகக் கருதப்படுகிறார்[1][2]. ஈரானின் முதல் உள்நாட்டு ஏவுகணைகளின் உருவாக்கத்திற்குத் தலைமை தாங்கி, ஆரம்பகால ஷஹாபு, ஸில்ஸால் தொடர்களிலிருந்து நவீன திட-எரிபொருள் ஏவுகணைகள் வரை அந்தத் திட்டத்தை வழிநடத்தியதன் மூலம் இஸ்லாமியக் குடியரசுக்கு ஒரு சக்திவாய்ந்த மூலோபாயத் தடுப்பாற்றலை வழங்கினார் தெஹ்ரானி முகத்தம். 2011இல் இறப்பதற்குள், ஷஹாபு, கத்ரு, சிஜ்ஜீல் போன்ற முக்கியமான ஏவுகணைக் குடும்பங்களை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றியிருந்தார். இவை ஒவ்வொன்றும் 1,000 கி.மீக்கு மேல் செல்லும் திறன் கொண்டவை[1][2].

வெளிநாட்டு ஏவுகணை விநியோகங்களைச் சார்ந்திருந்த ஒரு நாடு என்ற நிலையிலிருந்து ஈரானை ஒரு தன்னிறைவு பெற்ற ஏவுகணைச் சக்தியாக மாற்றியது அவரது அயராத உழைப்பு. இன்று ஈரானின் பாதுகாப்புக் கோட்பாட்டின் ஒரு முக்கியத் தூணாக அது விளங்குகிறது. ‘பொறியியல், உறுதிப்பாடு, புதுமை ஆகியவற்றின் மூலம் தேசியப் பாதுகாப்பிற்கான பாதையை வகுத்த’ ஒரு தேசிய வீரராகவும் உயிர்த் தியாகியாகவும் இன்று ஈரானில் அவர் போற்றப்படுகிறார்[2][3]. அவரது வாழ்க்கைப் பயணத்தின் அடிச்சுவடுகளைத் தடமறிவதன் மூலம், ஈரானின் இராணுவத் திறன்களிலும் பிராந்திய மூலோபாயத்திலும் அவர் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை இந்தப் பகுப்பாய்வு மதிப்பிட முயல்கிறது.

ஒரு தளபதியின் உருவாக்கம்: ஆரம்பகாலப் பணியும் ஈரான்-இராக் போரின் சோதனைக் களமும்

ஹசன் தெஹ்ரானி முகத்தமின் தொழில்நுட்ப, இராணுவப் பயணமானது ஒரு வலிமையான கல்விப்புல அடித்தளத்திலிருந்து தொடங்கியது. 1959ஆம் ஆண்டு தெஹ்ரானில் பிறந்த அவர், பொறியியலில் பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றார். மதிப்பு வாய்ந்த ஷரீஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 1979ஆம் ஆண்டு இளநிலைப் பட்டத்தையும், ஃகுவாஜா நஸீருத்தீன் தூஸி பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்தையும் பெற்றார்[4]. 1979 புரட்சிக்குப் பிந்தைய கொந்தளிப்பான சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்புப் படையில் (IRGC) 1980இல் சேர்ந்த அவர், வெகு விரைவிலேயே ஈரான்-இராக் போரின் முன்களங்களில் பணியாற்ற நேர்ந்தது. இளம் IRGC அதிகாரியாக இருந்த அவர், தொழில்நுட்பத் திறனையும் போர்க்கள முன்முயற்சியையும் இணைத்த தனித்துவமான திறனை வெளிப்படுத்தினார்.

ஈரான் – இராக் போரின் போது ஜெனரல் ஹசன் தெஹ்ரானி முகத்தம்

உதாரணமாக, 1981ஆம் ஆண்டு அபதான் நகரம் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதற்குப் பிறகு, ஒரு முக்கியமான திறன் குறைபாட்டை அவர் அடையாளம் கண்டு, IRGC தன்னுடைய சொந்தச் சிறப்புத் துப்பாக்கிப் படையை (artillery) உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது நேரடித் திட்டமிடலின் கீழ் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டு, போரின்போது ஏற்படும் துப்பாக்கிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய 155 மிமீ, 130 மிமீ போன்ற மாதிரிகளை உருவாக்கியது. மேலும் போர்ச்சுகீசிய 105 மிமீ ஹவிட்சர்கள் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட பலவகை நிலத் துப்பாக்கிகளைக் கொண்டும் IRGC பலப்படுத்தப்பட்டது[5][3].

விரைவில் அவரது நிபுணத்துவம், ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் பக்கம் திரும்பியது. 1980களின் முற்பகுதியில், அவர் IRGCயில் புதிதாக உருவாகிவந்த ஏவுகணைப் படையின் முதல் தளபதியானார். அத்திட்டத்துடன் அவரது பெயர் பெரிதும் பிணைந்திருந்ததால் ஈரானிய ஊடகங்கள் அவரை ‘ஈரானிய ஏவுகணைத் துறையின் தந்தை’ என்று வெளிப்படையாகக் குறிப்பிடுகின்றன. மேலும், “தெஹ்ரானி முகத்தமின் பெயர், ஈரானில் ஏவுகணைத் துறையுடன் பின்னிப் பிணைந்துள்ளது” என்றும் குறிப்பிடுகின்றன[3].

இந்தப் புதிய திறனின் வியத்தகு செயல்விளக்கமாக, சில நாள்களுக்குப் பிறகு பக்தாதில் உள்ள முக்கிய இலக்குகளை IRGC ஏவுகணைகள் தாக்கின. இதில் 18 மாடிக் கட்டிடம் ஒன்றும், இராக் இராணுவ அதிகாரிகளின் மன்றமும் தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் பல உயர்மட்ட பஅஸ் (Ba’athist) தளபதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது[9]. இந்த ஆரம்பகால வெற்றிகரமான ஏவுகணைச் சோதனைகள் வெறும் தந்திரோபாய வெற்றிகளாக மட்டுமல்லாமல், ஈரானிய ஏவுகணைப் படை என்ற மூலோபாயக் கருத்தை நிரூபித்ததோடு, ஈரானுக்குக் குறிப்பிடத்தக்க மன உறுதியையும் அளித்தன. அவரது செல்வாக்கு வெகுவிரைவில் விரிவடைந்தது.

ஏவுகணைச் சக்திக்கான அடித்தளம்

ஈரான்-இராக் போர் நிறுத்தத்தை (1980-88) தொடர்ந்து தெஹ்ரானி முகத்தமின் இலக்கு பரிணாம வளர்ச்சி அடைந்தது. வெளிநாட்டு மாதிரிகளைப் பயன்படுத்திய அவர், முழுமையான உள்நாட்டு ஏவுகணைத் துறையை உருவாக்குவதில் கவனத்தைத் திருப்பினார். அவரின் இலக்குகள் பேரார்வமுடையவையாகவும் வெளிப்படையாகப் புவிசார் அரசியல் சார்ந்தவையாகவும் இருந்தன. ஈரானுக்கு மிக அருகிலுள்ள எல்லைப் பகுதிகளையும் தாண்டி வெகுதூரம்வரை செல்லக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கி, நம்பகத்தன்மை வாய்ந்த தடுப்பு அரணை உருவாக்க அவர் முயற்சி செய்தார். இதனை அடைவதற்காக திரவ-எரிபொருளில் இயங்கும் ஸ்கட் வகை ஏவுகணைகளிலிருந்து மேம்பட்ட, நம்பகமான திட-எரிபொருள் ஏவுகணைகளுக்கு விரைந்து மாற வேண்டுமென அவர் வலியுறுத்தினார்[6][10].

அவரது தலைமையின் கீழ், ஈரான் படிப்படியாக நீண்ட தூரம் சென்றடையக் கூடிய, சுமார் 160 கிமீ தூரம் பயணிக்கக்கூடிய மேம்பட்ட ஏவுகணைகளை உருவாக்கியது. ஆரம்பகால ஸில்ஸால் போன்ற திட-எரிபொருள் துப்பாக்கி ஏவுகணைகளிலிருந்து, 2002ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நீண்ட தூர ஏவுகணையான ஃபத்தாஹ்–110 வரை இந்த வளர்ச்சிப் பாதை நீண்டது[10]. தெஹ்ரானி முகத்தமின் வழிகாட்டுதலின்கீழ் ஷீராஸ் வான்வெளித் துறையின் குழுவால் உருவாக்கப்பட்ட ஃபத்தாஹ் -110, முற்றிலும் ஈரானியத் திட எரிபொருளைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஈரானின் முதல் நீண்ட தூர ஏவுகணை என்ற வகையில் மகத்தானதொரு பாய்ச்சலைக் குறித்தது. ஃபத்தாஹ்–110இல் “உயிர்த்தியாகி தெஹ்ரானி முகத்தமின் மேலாண்மையிலும் முன்முயற்சியாலும் ஈரான் தனது முதல் துல்லியமான திட-எரிபொருள் ஏவுகணையைச் சாதித்தது” என்று தஸ்னீம் செய்திப் பகுப்பாய்வு ஒன்று குறிப்பிடுகின்றது[10].

தொலைவைக் காட்டிலும் துல்லியத்தன்மைக்காக தெஹ்ரானி முகத்தம் இடைவிடாது முயன்றுவந்தார். பொறியாளர்களைக் கொண்ட குழுக்களுடன் இணைந்தும், குத்ஸ் படையின் தளபதியான மறைந்த அவரின் நண்பர் காஸிம் சுலைமானியின் ஆதரவுடனும் மேம்பட்ட வழிகாட்டும் கருவிகளை உருவாக்க அவர் உத்தரவிட்டார். இந்த முயற்சிகள், 2000களின் நடுப்பகுதிக்குள், முழுமையான ‘நான்காம் தலைமுறை’ ஃபத்தாஹ்–110 ஏவுகணையை உருவாக்குவதில் உச்சத்தை அடைந்தன; இது துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் திறனை ஈரானுக்கு வழங்கியது[11].

ஃபத்தாஹ்-110ஐ ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தாக்கும் ஆயுதம் என்ற நிலையிலிருந்து துல்லியமாகத் தாக்கும் உபகரணமாக உருமாற்றும் லேசர்-வழிகாட்டுதல் மேம்படுத்துதலை அவர் வலியுறுத்தினார். இந்த அடித்தளம் இன்னும் பல மேம்பட்ட வடிவமைப்புகளுக்கு வித்திட்டது. 2021இலும் 2022இலும் ஃகைபர் ஷெகான்-1 (1450 கிமீ தொலைவு) ஹைப்பர்சோனிக் ஃபத்தாஹ் (1400 கிமீ தொலைவு) ஆகியவற்றை ஈரான் அறிமுகப்படுத்தியது. “ஏவுகணைத் துறையில் (அவர்) நட்டு வைத்த ஆசீர்வதிக்கப்பட்ட மரத்தின் மிகச்சிறந்த பழங்கள்” என்று இவற்றை சமகால ஈரானிய அறிக்கைகள் பாராட்டுகின்றன[12][13].

மேற்கு ஆசிய அதிகாரச் சமநிலையை மறுவடிவமைத்தல்

தெஹ்ரானி முகத்தம் உருவாக்கிய முன்னோடியான ஏவுகணைத் திறன்கள் மேற்கு ஆசியாவின் அதிகாரச் சமநிலையை வியத்தகு முறையில் மாற்றியமைத்தன. சிறிய தொலைவு துப்பாக்கி ஏவுகணைகள் முதல் நீண்ட தூர ஏவுகணைகள் வரை உள்ளடக்கியிருந்த பிராந்தியத்தின் மிகப் பெரிய, பன்முகத்தன்மை வாய்ந்த ஏவுகணை ஆயுதக்கிடங்கை 2010களில் ஈரான் உருவாக்கியிருந்தது. இந்த ஆயுதக்கிடங்கு, பிராந்தியம் முழுவதுமுள்ள இராணுவத் தளங்களையும் தந்திரோபாயத் தளங்களையும் இலக்காக்கும் ஆற்றலை ஈரானுக்கு வழங்கியதுடன், அதிகார வெளிப்படுத்தலிலும் தடுப்புத் தந்திரத்திலும் அதன் முக்கியமான அங்கமாகவும் திகழ்ந்தது. சட்டவிரோத ஸியோனிச அமைப்பு உட்பட எந்தவொரு எதிரியையும் முறியடிக்கும் திறன்கொண்ட பரந்த ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்துடன் ஈரான் பெரியதொரு ஏவுகணைச் சக்தியாக உருவெடுத்தது[15].

இத்தடுப்பாற்றல் திறன் ஈரானின் நட்புச் சக்திகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இஸ்ரேலுடனான மோதலில் தடுப்பாற்றலை வெளிப்படுத்துவதில் ஈரானிய ஏவுகணைகளின் பங்கை அங்கீகரிக்கும் வகையில் “லெபனானில் வடக்கிலிருந்து தெற்குவரை, தெற்கிலிருந்து வடக்குவரை பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் பாதுகாப்புக்காக ஹசன் தெஹ்ரானி முகத்தமுக்குக் கடமைப்பட்டுள்ளனர்” என்று ஹிஸ்புல்லாஹ் பொதுச் செயலாளர் சையிது ஹசன் நஸ்ருல்லாஹ் வெளிப்படையாகவே கூறினார்[16].

2024இல் நடைபெற்ற போரில் அவரது பணியின் உறுதியான தாக்கம் தெளிவாக வெளிப்பட்டது. சிரியாவில் ஈரானியத் தளபதிகளின் மீதான இஸ்ரேலியத் தாக்குதலைத் தொடர்ந்து குறுகிய ’12 நாள் போர்’ ஏற்பட்டபோது நூற்றுக்கணக்கான ஈரானிய ஏவுகணைகளும் ட்ரோன்களும் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. அயர்ன் டோம் உட்பட இஸ்ரேலின் பல்லடுக்கு வான் பாதுகாப்பை அவை முறியடித்ததாகக் கூறப்படுகின்றது. “தெஹ்ரானி முகத்தமின் நான்கு தசாப்த உழைப்பின் நேரடிப் பலன்கள்” என்று ஈரானிய ஊடகங்கள் இத்தாக்குதல்களைக் கொண்டாடின[17][18]. ஈரானின் சக்திவாய்ந்த ஏவுகணைத் திட்டம் இன்று “இந்த மாபெரும் தளபதியின் குறிப்பிடத்தக்கப் பாரம்பரியத்திற்கு ஒரு பெருமைமிக்க சான்றாகத் திகழ்கிறது” என்று பிரஸ் டிவி குறிப்பிட்டது. [19].

ஏவுகணைத் திட்டத்தின் உளவியல் தாக்கமும் ஆழமானது. தெஹ்ரானி முகத்தம், “ஸியோனிச ஆட்சிக்கு எப்போதும் ஒரு கொடுங்கனவாக” இருந்துவந்துள்ளதாக IRGC தளபதி ஒருவர் கூறுகிறார்[20]. உண்மையில், அவரின் இந்த முயற்சிகள், பிராந்திய எதிரிகளையும் உலகச் சக்திகளையும் ஈரானின் நலன்களுக்கு எதிராக எந்தவொரு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பும் மிகக் கவனமாகக் கணக்கிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

துயர மரணமும் நீடித்திருக்கும் பாரம்பரியமும்

ஜெனரல் தெஹ்ரானி முகத்தம், தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பணிக்காக இறுதியில் மிக உயர்ந்த விலையைக் கொடுத்தார். நவம்பர் 12, 2011 அன்று, தெஹ்ரானுக்கு அருகில் பித் கனேஹ்வில் உள்ள IRGC தளத்தில் ஓர் ஏவுகணைச் சோதனையை அவர் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அவரும் அவரின் 16 சகாக்களும் கொல்லப்பட்டனர் [1]. அவரது மரணம் ஓர் ஆழ்ந்த துயரமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அவருக்கு முழு இராணுவ மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. அவரது விருப்பப்படி, அவரின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, அவரது கல்லறைக் கல்லில் ‘இஸ்ரேலை அழிக்க விரும்பிய நபர் இங்கு உறங்குகிறார்’ என்று பொறிக்கப்பட்டது[21].

ஆயினும், அவரது மரபு அவருடனேயே இறந்துவிடவில்லை. தெஹ்ரானி முகத்தமின் சீடர்களும் ஆதரவாளர்களும் அவரது இலட்சியத்தை நம்பிக்கையுடன் முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர். மஜீது மூசவி, மறைந்த அமீரலி ஹாஜிஸாதே போன்ற ஆளுமைகள் உட்பட, அவருக்குப் பின் வந்த IRGC வான்படைத் தளபதிகள், ஏவுகணைப் படையைத் தொடர்ந்து விரிவுபடுத்தியும் செம்மைப்படுத்தியும் வருகின்றனர் [22][23]. இந்தத் திட்டம் அதன் மேல்நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தது. 2020களின் முற்பகுதியில், ஈரானின் நீண்ட தூர ஏவுகணை வரம்பு அதிகாரப்பூர்வமாக 2,000 கிமீ ஆக விரிவடைந்தது. இது இஸ்ரேலை ஈரானின் தாக்குதல் வரம்பிற்குள் கொண்டுவந்தது.

மேலும், ஹைப்பர்சோனிக் (ஒலியைவிட வேகமாகப் பயணிக்கும்) ஃபத்தாஹ் ஏவுகணை போன்ற முன்னேற்றங்களும் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டன. இந்தச் சமகாலச் சாதனைகள் யாவும் தெஹ்ரானி முகத்தம் நாட்டிய அடித்தள ‘மரத்திற்கு’க் கிடைத்த பலன்கள் என்றே எப்போதும் பாராட்டப்படுகின்றன[17]. இறுதியாக, அவரது வாழ்நாள் பணி ஈரானுக்கு ஒரு வலிமையான, தன்னிறைவு பெற்ற ஏவுகணைத் திறனை வழங்கியது; அவர் முன்னெடுத்த ஏவுகணைச் செயற்திட்டங்கள் மேற்கு ஆசியாவின் அதிகாரச் சமநிலையை மாற்றியமைத்துள்ளன; ஈரானுக்கும் அதன் நட்புச் சக்திகளுக்கும் முன்பு எப்போதும் இல்லாத அளவிலான மூலோபாயத் தடுப்புத் திறனை அவை வழங்கியுள்ளன[15][19].

துணை நின்றவை:

[1] Iran Press. “Iran marks martyrdom anniversary of Tehrani Moghaddam.” Iran Press.
[2] Wikipedia contributors. “Hassan Tehrani Moghaddam.” Wikipedia.
[3] Tasnim News Agency. “Sepah va Sukht-e Jamad-e Mushak-ha; ‘Tehrani Moghaddam’ Chegoneh Donya ra Heyratzadah Kard.” Tasnim News, 21 Azar 1396.
[4] [5] [8] [9] [15] [18] [19] [20] [21] [23] [24] PressTV. “Remembering the ‘father of Iran’s missile program’ who wanted to ‘destroy Israel’.” PressTV, 12 November 2025.
[6] Tasnim News Agency. “Sepah va Sukht-e Jamad-e Mushak-ha…”.
[7] Arabi21. “Man Hu ‘Abu al-Sawarikh al-Iraniya’ alladhi Tardada Ismuh ba’d Qasf al-Ihtilal al-Isra’ili?” Arabi21.
[10] [11] [12] [13] [14] [22] Tasnim News Agency. “Sukht-e Jamad; Chegoneh Mohemtarin Dastavard-e Shahid Tehrani Moghaddam Naji-ye Iran Shod?” Tasnim News, 20 Aban 1404.
[16] Tehran Times. “Tehrani Moghaddam; from the first missile launch to Iran’s self-sufficiency.” Tehran Times.
[17] Tabnak. “Tasavir-e Avvalin Shalik-e Mushk-e Iran ra Bibinid.” Tabnak.

மூலம்: https://aep1979.substack.com/p/ending-an-era-of-muslim-weakness

தமிழில்: ரா. அபுல் ஹசன்

Related posts

Leave a Comment